என்னை கருணைக் கொலை செய்யுங்கள் : கதறி அழும் பெண்!!

தமிழகத்தில் தவறான அறுவை சிகிச்சையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண், கருணை கொலை செய்யக்கோரி, அரசு மருத்துவமனை டீனிடம் கதறி அழுத சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியின் மணிகண்டம் பகுதியின் கண்தீனதயாள் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு அகிலா(36) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் பெருமாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், அகிலா கூலி வேலை செய்து மகனுடன் வசித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அகிலா கர்ப்பபையை அகற்றும் அறுவை சிகிச்சை செய்தார்.

அப்போது அவருக்கு கவனக்குறைவாக கர்ப்பபையுடன் சிறுநீர் குழாயையும் மருத்துவர்கள் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிறுநீர் பிரச்சனை ஏற்பட்டது

இதன் காரணமாக அவரை அறியாமல் சிறுநீர் போனதால் அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி கடந்த 7-ஆம் திகதி பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் ஒரு மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், இந்த உடல் உபாதையுடன் உயிர் வாழ விரும்பவில்லை. எனவே என்னை கருணை கொலை செய்யுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

மனுவை பெற்ற கலெக்டர் விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டார். இதற்கிடையில் அகிலா, நேற்று திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு மகன் மற்றும் தன் உறவினருடன் வந்து, நடந்த சம்பவங்களை விளக்கி மருத்துவமனை டீனான அனிதாவிடம் கருணை செய்யும் கருணை மனு கொடுத்து கதறி அழுதுள்ளார்.

மனுவை படித்த டீன், கருணை கொலை செய்ய முடியாது. தவறான அறுவை சிகிச்சை செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், எனவே அறுவை சிகிச்சை செய்வதற்கு முன், பின் மருத்துவர்கள் அளித்த மருத்துவ குறிப்புகளை நாளைக்கு எடுத்து வந்தால் அதனை பார்த்தபின், மதுரைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பதாக கூறினார்.

அன்பாகப் பேசி கணவனை கொலைசெய்த மனைவி!!

இந்தியாவில் மனைவியின் கள்ளக்காதலை கணவர் கண்டுப்பிடித்த நிலையில் அவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் கிஷன் (25), இவர் மனைவி லட்சுமி (24). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கிஷனும், லட்சுமியும் வெவ்வேறு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நிலையில் தன்னுடன் பணிபுரியும் ஜெய்பிரகாஷ் (19) என்ற இளைஞருடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கிஷனுக்கு தெரியாமல் பிரகாஷை லட்சுமி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியின் கள்ளக்காதலை கிஷன் கண்டுப்பிடித்த நிலையில் இதுகுறித்து லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக தினமும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்ட நிலையில் கிஷனை கொலை செய்ய லட்சுமி முடிவெடுத்தார்.

அதன்படி குடிப்பழக்கம் கொண்ட கிஷன் இரு தினங்களுக்கு முன்னர் மதுகுடிக்க கடைக்கு சென்ற போது, அங்கிருந்த பிரகாஷ் கிஷனுடன் நட்பாகி அவருக்கு அதிகளவு மதுவை ஊற்றி கொடுத்துள்ளார்.

பின்னர் கிஷனுக்கு போதை தலைக்கேறிய நிலையில் அவரை பிரகாஷ், வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் லட்சுமியும், பிரகாஷும் சேர்ந்து கிஷனை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளனர். இதையடுத்து அடுத்தநாள் அருகிலிருந்து கட்டிடத்தில் சடலத்தை தூக்கி போட்டுள்ளனர்.

சடலத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் சடலத்தை கைப்பற்றிவிட்டு பொலிசார் லட்சுமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

லட்சுமி முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் கணவரை கொன்றதை ஒப்பு கொண்டார். இதையடுத்து அவரையும் ஜெய் பிரகாஷையும் பொலிசார் கைது செய்துள்ளன

13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை மணந்த விவகாரம் : இணைந்து வாழ்வது குறித்து முடிவு!!

இந்தியாவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது பெண்ணுக்கும் திருமணமான நிலையில் சிறுவனுக்கு 21 வயது ஆனவுடன் அவர் மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திராவின் கர்னூலில் உள்ள உப்ரஹால் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், 23 வயதான இளம் பெண்ணுக்கும் கடந்த 27-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.

இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலான நிலையில் அந்த ஊரின் இணை ஆட்சியர் ராமசாமி, சிறுவர் மற்றும் மகளிர் நலத் துறையின் உதவியாளர் விஜயா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று இந்த திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என கூறினார்கள்.

இந்நிலையில் ஆட்சியர் சத்யநாராயணா முன்னிலையில் புதுமண தம்பதிகள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களின் குடும்பத்தாரும் உடன் இருந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய ஆட்சியர், இந்த திருமணம் தற்போது செல்லாது, சிறுவனுக்கு 21 வயது ஆன பின்னர் மனைவியுடன் அவர் சேர்ந்து வாழலாம்.

அதுவரை சிறுவன் அவன் வீட்டிலும், அவன் மனைவி அவரது பெற்றோருடனும் தான் தங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக குடும்பத்தாருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக பலி!!

கந்தளாய் – சூரியபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், சூரியபுர – சமநல பாலத்தடியைச் சேர்ந்த 51 வயதுடைய ரத்னாயக்க முதியன்சலாகே அபேகோன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் வயலுக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

நேற்று இலங்கையில் இடம்பெற்ற விபத்துக்களில் 5 பேர் பலி!!

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பொரலஸ்கமுவ, அஹூங்கல, கல்கிஸ்சை, கல்கமுவை, தம்புத்தேகம ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதில் 79 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

அஹூங்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று புரண்டு எதிரில் வந்த காரில் மோதியதில் முச்சக்கர வண்டியை ஒட்டிச் சென்ற 44 வயதான நபர் பலியாகியுள்ளார்.

கல்கிஸ்சையில் வீதியில் நடந்து சென்ற 73 வயதான நபர் வான் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

அதேவேளை கல்கமுவையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் 33 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இரு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

இவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

வவுனியாவில் வடமாகாண பொலிஸ் விளையாட்டு விழா!!

 

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையில் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கோடு நடத்தப்படும் வடமாகாண பொலிஸ் விளையாட்டு விழாவானது இன்று (17.05.2018) காலை 8 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் பொலிஸ்மா அதிபரின் வழிநடத்தலில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இவ் விளையாட்டுப் போட்டியில் வடமாகாணத்தில் உள்ள 6 பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இன்று 17 ஆம் திகதி மற்றும் 19 ஆம் திகதியில் இடம்பெறவுள்ள இவ் விளையாட்டு விழா வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் ஏற்பாட்டில் பொலிஸ்மா அதிபர் பூஜிந்த ஜெயசுந்தரவின் அறுவுறுத்தலின் பேரில் இந் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றுவருகின்றது.

இந் நிகழ்வில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ மற்றும் வட மாகாணத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இந் நிலையில் 19 ஆம் திகதி 6 பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த பொலிஸாரின் அணிவகுப்பும் நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.‌

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு : மக்கள் அவதி!!

 

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (17.05.2018) ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கம் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக நடவடிக்கைக்கு கையொப்பமிட்டதற்கு எதிராகவே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பானது வவுனியாவிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் நோயாளர்கள் பலரும் விரக்தியுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விடுதிச் சேவை மட்டுமே இன்று தொழிற்படுகின்றதுடன், ஏனைய மருத்துவ சேவைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயத்திற்கு சதுரங்கபலகைகள் வழங்கி வைப்பு!!

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயத்திற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தால் சதுரங்கப்பலகைகள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள மா.ச.உறுப்பினரின் அலுவலகத்தில் மா.ச.உறுப்பினரின் இணைப்பாளர் பா.சிந்துஜனால் மேற்படி சதுரங்கபலகைகள் பாடசாலை ஆசிரியர் திரு.பிரசாந்தனிடம் நேற்று முன்தினம் (15.05) வழங்கிவைக்கப்பட்டது.

தரணிக்குளம் கணேஸ் வித்தியாலய மாணவர்கள் வலயமட்ட சதுரங்கப் போட்டிகளில் போட்டியிட்டு முதலிடத்தைப்பெற்றுள்ள நிலையில் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பயிற்சி பெறுவதற்கு போதுமான சதுரங்க பலகைகள் இல்லாமை தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மா.ச.உறுப்பினரிடம் கோரிக்கைவிடுத்தமைக்கு அமைவாக பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் எரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு கோரி சுவரொட்டிகள்!!

 

சமீபத்தில் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட எரிபொருள்களுக்கான விலையை உடனடியாகக் குறைக்குமாறும் கோரும் சுவரொட்டிகள் வவுனியா நகர பிரதேசங்கள் கிராமப்புறங்கள் தோறும் இன்றைய தினம் (17.05) வியாழக்கிழமை அதிகாலை முதல் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது

மக்கள் விடுதலை முன்னணி என்று உரிமை கோரப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் எரிபொருள்களுக்காக அநீதியான முறையில் உயர்த்தப்பட்ட விலையை உடனடியாகக் குறைத்து விடு’ என்று அரசைக் கோரும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

எரிபொருளுக்கான அதிகரித்த திடீர் விலையேற்றம் அனைத்துப் பொருட்களுக்குமான மறைமுக விலையேற்றத்திற்குக் காரணமாக அமைந்து விடும் என்பதால் இந்த விலையேற்றம் மக்களிடம் அதிருப்தியைத் தோற்றுவித்திருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.

பாடசாலையில் கடுமையாக மோதி கொண்ட மாணவிகளால் சர்ச்சை!!

தம்புள்ளை நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரதான பாடசாலையின் மாணவிகள் இருவர் கடுமையாக மோதி கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோதலில் காயமடைந்த மாணவி ஒருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிகள் இருவருக்கு இடையிலேயே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு மாணவி தான் அணிந்திருந்த பாதணியை கொண்டு மற்ற மாணவியை மிதித்தமையினால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலையில் உள்ள ஏனைய மாணவிகள் மிகவும் போராடி இருவரது சண்டையையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனினும் மோதலில் காயமடைந்த ஒரு மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இளம் தாயும், மகளும் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு!!

தெஹியத்தகண்டி – பிஹிரிசோரோவ்வ ஆற்றிற்கு அருகில் இருந்து இளம் தாய் மற்றும் குழந்தை ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 30 வயதான தாயும், 4 வயதான பெண் குழந்தையுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தெஹியத்தகண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

திடீரென காட்சி கொடுத்த நீர்வீழ்ச்சி : வியப்பில் மக்கள்!!

 

நமுனுகுல மலை பகுதியில் ஆரம்பிக்கும் நில்மினி நீர்வீழ்ச்சி மீண்டும் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக நீர்வீழ்ச்சி மீண்டும் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு வருடத்தின் பின்னர் இந்த நீர்வீழ்ச்சியில் நீர் வழிந்தோடும் காட்சியை பார்க்க முடிந்துள்ளமையினால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பதுளை, ரில்பொல, மெதகம பிரதேசத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நமுனுகுல மலையை சுற்றி நீர் வழிந்து குடாஓய சென்றடைந்து பதுளு ஓயவில் இணைகிறது.

இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்வது கடினமான ஒரு விடயமாகும். நீர்வீழ்ச்சியை பார்வையிட பதுளை வேவெல்ஹின்ன வீதிக்கு சென்று மெதகம வீதியின் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு செல்ல வேண்டும்.

மோசமான காலநிலையால் கொழும்பில் நடந்த விபரீதம்!!

 

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு 7 – Maitland பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் கார் ஒன்று பலத்த சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், காரின் சாரதி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா சிறைச்சாலைக்கு சிவசக்தி ஆனந்தன் விஜயம் : குறைபாடுகள் தொடர்பாக ஆராய்வு!!

 

வவுனியா சிறைச்சாலைக்கு இன்று(16.05) காலை 10.30 மணியளவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வியஜம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள கைதிகளின் நிலைமைகள் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் சிறைச்சாலைக்குச் சென்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது, கடந்த சில தினங்களாக சிறைக்கைதிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சிறையிலுள்ள நடைமுறைப்பிரச்சினைகள் தொடர்பாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து இங்குள்ள கைதிகளை அனுராதபுரத்திற்கு மாற்றப்படுவதாகவும் அதனைக்கண்டித்து இங்குள்ள கைதிகள் நேற்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

ஆகவே சிறைச்சாலையிலுள்ள பிரச்சினைகளை நேரடியாக கண்டறிவதற்கு வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசாவுடன் வருகைதந்து இங்குள்ள பொலிசார் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட அடிப்படையில் இங்குள்ள சிறைச்சாலையில் 55 கைதிகளுக்குரிய அடிப்படை வசதிகளே காணப்படுகின்றது.

ஆனால் 285 கைதிகள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இடநெருக்கடி ஏற்பட்டள்ளது அத்துடன் தண்ணீர் வசதிகள் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆகவே இங்குள்ள 100 பேரையாவது அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றவேணடிய தேவை ஏற்பட்டுள்ளதாக இங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

வவுனியா சிறைச்சாலை நீண்டகாலமாக வவுனியா நகரத்திற்கு மத்தியில் பொருத்தமற்ற இடத்தில் இட நெருக்கடிப்பிரச்சினை காணப்படுகின்றது கடந்த காலத்தில் நாங்கள் தொடர்புபட்ட அமைச்சுக்களுடன் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றோம்.

மன்னார் வீதியில் செக்கட்டிப்பிலவு பிரதேசத்தில் சிறைச்சாலைக்காக ஏழு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்காணியில் சிறைச்சாலை அமைப்பதற்கு பிரதேச செயலாளரூடாக மாகாண காணி ஆணையாளரூடாக அக்காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையின் ஆரம்பப்பணியை மேற்கொள்வதற்கு தடை ஒன்றும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். ஆகவே முக்கிய பிரச்சினையாக இடநெருக்கடி நிலையே காணப்படுகின்றது.

பலதரப்பட்ட குற்றசாட்டுக்களுடன் தொடர்புபட்ட கைதிகள் இங்கு இருக்கின்றார்கள். சிறு குற்றங்களுக்கும் பிணை தருவதற்கு மறுக்கின்ற காரணத்தினால் தங்களுடைய மனைவி பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் கல்வி நிலை உட்பட மிகுந்த நெருக்கடியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டால் தங்களை தமது உறவினர்கள் சென்று பார்வையிடுவதில் பல பிரச்சினைகள் எற்பட்டுள்ளதாகவும் பொருளாதார ரீதியலான நெருக்கடி மொழிப்பிரச்சினை போக்குவரத்துப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கைதிகள் தற்போதுள்ள சிறைச்சாலையில் தாங்கள் இருக்கக்கூடிய நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இதையடுத்து தற்போது அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்படும் விடயம் இங்குள்ள சிறை அதிகாரிகளினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

தமிழகத்தில் இருந்து கள்ளத்தனமாக இலங்கை சென்ற அகதி குடுமத்தினருக்கு ஏற்பட்ட நிலை!!

தமிழகத்தில் இருந்து எந்த வித ஆவணமுமின்றி கள்ளத்தனமாக இலங்கைக்கு திரும்பிய நான்கு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலிலிருந்து அகதிகளாகத் தப்பிவந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் அகதிகளாக தங்கி வருகின்றனர்.

இந்த முகாம்கள் அகதிகளுக்கு ஓரளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியக் குடியுரிமை கிடையாது. அதுமட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த முகாம்களில் வாழ்ந்து வரும் இவர்கள், தற்போது இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி நிலவுவதால் தற்போது இங்கிருப்பவர்கள் தங்க்ள் தாயகத்திற்கு திரும்பி வருகின்றனர்.

அப்படி திரும்பும் சிலர் இந்திய, இலங்கை அரசுகளின் முறையான அனுமதியுடனும், சிலர் எந்த வித அனுமதியுமின்றியும் இலங்கைக்கு திரும்புகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு இலங்கை திருகோணமலை பகுதியிலிருந்து அகதிகளாக வந்து தமிழக முகாமில் தங்கியிருந்த சஜன், சந்திரலேகா, சாதனா மற்றும் 11 மாத கைக்குழந்தை ஆகியோர் இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்றின் மூலம் இலங்கை கடல் பகுதியில் பயணித்துள்ளனர்.

அப்போது இவர்களை பார்த்த இலங்கை கடற்படையினர் படகை வழிமறித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்களிடம் எந்த வித ஆவணமின்றி கள்ளத்தனமாக வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அகதிகள் 4 பேர் மற்றும் இலங்கை படகோட்டிகள் 2 பேர் உள்ளிட்ட 6 பேரையும் காங்கேசன்துறை பொலிசாரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். பொலிசார் விசாரனைக்குப் பின் இவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

8 மாத கர்ப்பிணி மகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை : அதிரவைக்கும் தகவல்கள்!!

திருச்சி மாவட்டத்தில் தனக்கு தெரியாமல் மகள் திருமணம் செய்துகொண்டதோடு மட்மல்லாமல் கர்ப்பமானதால் கோபம் கொண்ட தந்தை பெட்ரோல் ஊற்றி மகள் மற்றும் மனைவியை எரித்துள்ளார்.

பேக்கரி நடத்திவரும் சேகர்- மல்லிகா தம்பதியினருக்கு சுவாதி என்ற மகள் உள்ளார். திருச்சியில் சிறப்பு காவல் படை பொலிசில் பணியாற்றும் தங்கவேல் என்பவர் பேக்கரிக்கு அடிக்கடி வந்துபோனதன் மூலம் சுவாதிக்கும், தங்கவேலுக்கும் காதல் மலர்ந்துள்ளது,

செப்டம்பர் மாதம் 22 ம் தேதி வீட்டிற்கு தெரியாமல் முறைப்படி பதிவு திருமணம் செய்திருக்கிறார்கள்.

திருமணம் ஆனாலும் தன் தாயின் வீட்டிலே இருந்தாலும் அடிக்கடி காதல் திருமணம் செய்த கணவரை பார்க்க அடிக்கடி வெளியே செல்வாராம் இதன் விளைவு சுவாதி 8 மாத நிறைமாத கர்ப்பிணியானார்.

நடந்தவை அனைத்தையும் தனது தாயிடம் சொல்லி, எப்படியாவது தந்தையிடம் சம்மதம் வாங்கி தருமாறு சுவாதி கேட்டுள்ளார்

ஆனால், தனது கணவனிடம் சொல்வதற்கு மல்லியாக அஞ்சியுள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரம் தந்தைக்கு தெரிந்ததால், வீட்டில் பெரிய பிரச்சனையே வெடித்தது. இதனையடுத்து கொஞ்சநாள் பொறுமையாக இருங்கள் என கூறியுள்ளார் தந்தை.

இதற்கிடையில், வீட்டில் பிரச்சனையை பேசி விட்டேன். விரைவில் என்னுடைய பெண்ணை உங்க வீட்டிற்கு அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி சுவாதியின் தாய் தன் மருமகன் வீட்டிற்கு சென்று சொல்லிவிட்டு வீடு திரும்பியிருக்கிறார்.

இவ்வளவு பிரச்சனைகள் நடந்திருக்க, தனக்கு தெரியாமல் மருமகனை பார்க்க சென்ற மனைவி மீது அதிக கோபம் கொண்ட சேகர், இருவரையும் தீ வைத்து கொளுத்திவிட தீர்மானித்துள்ளார்.

ஏற்கனவே பெட்ரோல் வாங்கி பேக்கரி முழுவதும் ஊற்றி லைட்டரை ரெடியாக கையில் வைத்துக்கொண்டார். வழக்கம் போல் தாய், மகள் இருவரும் கடைக்கு வந்திருக்கிறார்கள்.

அப்போது, லைட்டரை பற்ற வைத்ததில் இவர்கள் இருவர் மீதும் தீப்பிடித்து எரிந்துள்ளது, இவர்களை காப்பாற்றுவது போல சேகர் நாடகமாடியுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் படுகாயமடைந்த ஸ்வாதி, மல்லிகா இருவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

தீயணைப்புத்துறையினர் கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். சேகருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி மல்லிகா இறந்துபோனார், 8 மாத கர்ப்பிணியான மகள் ஸ்வாதி உயிருக்கு போராடி வருகிறார்.

கைதான சேகர், நேற்று மாலை திருச்சி 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வீட்டில் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது