யாழிலிருந்து பூநகரி நோக்கிச்சென்ற வாகனம் ஒன்று இன்று (16.05) பரந்தன்- பூநகரி வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகத்துடன் பயணித்த வாகனம் சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து சாரதியின் அவதானமின்மை காரணமாக நிகழ்ந்துள்ளதுடன் வடக்கில் இதுபோன்ற விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த 13ஆம் திகதி கொழும்பில் தங்கியிருந்த வீரர்களுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
lems Pirates RFC அணியை சேர்ந்த இரண்டு வீரர்களும் கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளனர்.
அதன் பின்னர் ஏற்பட்ட உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் Howard என்ற 25 வயதுடைய வீரர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் 26 வயதான Baty என்பவரும் உயிரிழந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு வீரர்களும் தங்கள் அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடு வீரர்கள் என ரக்பி அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த மரணத்தை தாங்கி கொள்ள முடியவில்லை என பிரித்தானிய ரக்பி அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இலங்கை பொலிஸ் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட சர்வதேச ஊடகங்கள் மரணம் தொடர்பில் கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இரு வீரர்களின் மரணம் தொடர்பில் இதுவரை சரியான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டவில்லை. மரணத்தில் பல மர்மங்கள் உள்ளதாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு – பட்.களுதாவளை மகா வித்தியாலய மாணவன் சர்வதேச கணிதப் போட்டியில் கலந்து கொள்வதற்கு சிங்கப்பூர் செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஆங்கில மொழிமூலமான கணித போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்று தில்லையம்பலம் ஜனுஸ்கன் என்ற மாணவன் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆங்கில மொழிமூலமான கணிதப் போட்டியில் பங்குபெற தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மட்.பட்.களுதாவளை மகா வித்தியாலய நிருவாகம் இன்று தெரிவித்துள்ளது.
தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த 10.05.2018 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் தில்லையம்பலம் ஜனுஸ்கன் என்ற மாணவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாணவனின் திறமையினால் பாடசாலைக்கும், களுதாவளை மண்ணுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும், இம்மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.
மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்காக அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த வளாகத்தில் இன்று காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் பல இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதன்போது மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு கொடுக்கப்பட்ட மண்ணில் எலும்புகள் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவை மனித எலும்புகளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டு குறித்த வீட்டின் உரிமையாளரால் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று கொட்டப்பட்ட மண்ணினை பார்வையிட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் இந்த விடயத்தினை கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து மார்ச் மாதம் 27ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தினுள் பரவப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த புதிய கட்டட நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் மண் அகழ்வு செய்யப்பட்டு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட “லங்கா சதொச” கட்டட பகுதிக்கு நேற்று மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன், நேற்று முதல் கட்ட அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையில் இன்று காலையும் மன்னார் நீதவான் முன்னிலையில் அகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் இன்று காலை 9.20 மணியளவில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு அந்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், மீண்டும் அகழ்வுப்பணி நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ். மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.
குறித்த வழக்கு விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது, சந்தேகநபர்களுக்கு பிணை கோரி அவர்களின் தாயார், சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.
பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிபதி இளஞ்செழியன், சந்தேகநபர்கள் இருவருக்கும் நிபந்தனையுடனான பிணை வழங்கி கட்டளை பிறப்பித்தார்.
இதில், “சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வைப்புச் செய்ய வேண்டும். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் 5 இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள் பிணைகளை நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும்.
மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் காலை 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும். வெளிநாடு செல்லத் தடை” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளை வழங்கினார்.
ஊர்காவற்துறை பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான 27 வயதுடைய ஹம்சிகா என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சகோதரர்களான இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய ரீதியில் நடைபெற்ற கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் வவுனியாவை சேர்ந்த இளைஞன் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். சிவநாதன் கிந்துசன் (19) என்ற இளைஞனே ஆசிய ரீதியில் கொழும்பு சுகாதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 5000 மீற்றர் ஒட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பதக்கத்தை வெற்றி பெற்ற இளைஞனை கௌரவிக்கும் முகமாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் அதிகாரிகளால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன்,
அதனைத்தொடர்ந்து வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நண்பர்கள் மற்றும் வர்த்தகர்களால் சாதனை படைத்த எஸ்.கிந்துஜன் மற்றும் பயிற்றுவிப்பாளர் கெ.நவநீதன் ஆகியோர் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டு மீண்டும் வாகன பவனியாக கண்டி வீதியூடாக வவுனியா பிரதேச செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டு பிரதேச செயலாளர் க.உதயராசா அவர்களினால் சாதனை படைத்த சிவநாதன் கிந்துசன் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சிவநாதன் கிந்துசனின் சாதனையை பாராட்டியும் அவரை மென்மேலும் ஊக்கப்படுத்தியும் உதவி பிரதேச செயலாளர் திருமதி. க.சாரதா அவர்களால் பரிசுத்தொகை ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சிவநாதன் கிந்துசனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த 21 வயதான சீலன் அஸ்வினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நெருப்புத் தணல் உள்ளது என்று தெரியாது அடுப்பில் விறகு வைத்து மண்ணெண்ணை ஊற்றிய போது தீப்பற்றி எரிந்ததில் குறித்த யுவதி காயமடைந்துள்ளார். இந்த அனர்த்தம் கடந்த ஆறாம் திகதி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்று நேற்று முன்தினம் உயிரிழந்ததாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணையை திடீர் விசாரணை விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வெளிநாட்டில் வாழும் 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் இலங்கையர்களுக்கு இன்று இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளது. பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுகின்றது.
அமைச்சர் எஸ்.பி.நாவின்னவின் தலைமையில் இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 3 வருடங்களுக்குள் வெளிநாட்டில் உள்ள 32000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழஙகப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரல் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் இலங்கை உள்ளிட்ட 17 நாடுகளில் இரட்டை குடியுரிமை வழங்கும் நடைமுறை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று (16.05.2018) காலை 10 மணியவில் கறுப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
35 வயதிற்கு மேற்பட்டவர்களை நியமனங்களில் உள்ளீர்க்க வேண்டும், 2017 வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும், பட்ட சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படுதல் வேண்டும் போன்ற கோரிக்கைகளை போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இவ் போராட்டம் முன்னேடுக்கப்பட்டதோடு கொழும்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக வேலையற்ற பட்டதாரிகள் மீது நீர்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்தும் மேற்கொள்ளப்பட்டது.
அரசே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே? , பேச்சுவார்தை போதும் நியமனம் வழங்கு, அரச நியமனம் பட்டதாரிகளுக்கு எட்டாக்கனியா?, பட்டதாரிகளை தெருவில் விட்ட நல்லாட்சி.., நல்லாட்சி அரசில் நாடகம் தான் ஆட்சியா…? , வெற்றிடங்கள் ஏராளம் பட்டதாரிகள் வீதியோரம் என பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் ஆண், பெண் பட்டதாரிகள் என 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மற்றும் கம்பளை பகுதியில் ஓடிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் : மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் இன்று காலை செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியில் திடீர் என தீப்பற்றியுள்ளது. இதன்போது குறித்த இளைஞர் முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்குள் சென்று தீயை கட்டுப்படுத்த தீ அணைப்பு உதவியை நாடிய போதும் அங்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.
சிறிது நேரத்தின் பின் மன்னார் நகர சபையூடாக பௌசர் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு நீண்ட நேரத்தின் பின் தீ அணைக்கப்பட்டது. எனினும் முச்சக்கரவண்டி முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது.
கம்பளை : கம்பளை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்று காலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணம் செய்த வேளையில் முச்சக்கரவண்டி திடீரென தீப்பிடித்துள்ளது.
இதன்போது ஓட்டுனரும், அதில் பயணித்த சிறு குழந்தையோடு, மொத்தமாக 5 பேர் முச்சக்கரவண்டியை விட்டு பாய்ந்துள்ளமையால் அவர்கள் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற லம்போகினி காரை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் இலங்கைக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் திறனை அபிவிருத்தி செய்யும் இடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் மருதானையில் ஆரம்பித்த வேகா இனோவேஷன்ஸ் நிறுவனம் உள்ளுர் தயாரிப்பில் கார் ஒன்றை தாயாரிக்கும் நடவடிக்கைகைள ஆரம்பித்தது.
2014ஆம் ஆண்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது மோட்டார் கார் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
முழுமையாக இலங்கையர்களின் திறமை மற்றும் அறிவினை கொண்டு தயாரிக்கப்படும் கார், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியலார்கள் உட்பட உள்ளூர் பொறியியலாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த கார் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் மருதானை ட்ரிபோலி மாக்கட் பகுதியில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (16.05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
வவுனியா சந்தையில் தனது விவசாய உற்பத்தி பொருட்களை கொடுத்துவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்றபோதே யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனமொன்று பின்புறமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற ஓமந்தை சின்னக்குளத்தை சேர்ந்த 50 வயதுடைய ராசன் என்பவரே ஸ்தலத்தில் பலியாகியதுடன் அவரது சடலம் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந் நிலையில் வாகனத்தின் சாரதியை கைது செய்ய வவுனியா பொலிஸார் வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.
வவுனியா சூடுவெந்தபுலவு குளத்திலிருந்து நேற்று (15.05.2018) இரவு 10 மணியளவில் தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியா உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு நேற்றையதினம் மீன் பிடிக்க சென்ற சமயத்தில் அங்கு பன்றிக்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அதே பகுதியினை சேர்ந்த சாகில் முகமட் முஸ்தப்பா (வயது 48) , அவரது மகனான முஸ்தப்பா முகமட் ரயாஸ் (வயது 15) என அவது உறவினர்கள் சடலத்தினை அடையாளம் காட்டியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்ற தடவியல் பொலிஸாருடன் இணைந்து உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குளத்திற்கு அருகே காணப்பட்ட மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பெறப்பட்டமைக்கான தடயங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்று மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், ஒன்லைனில் எளிதில் யாருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் பாதுகாப்பற்ற நிலையில் நான்காண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ‘myPersonality’ app ஆனது பயனர்களுக்கு மனவியல் பரிசோதனைகளை நடத்தி உடனடியாக முடிவுகளை அறிவிக்கும் ஒரு app ஆகும்.
மனிதர்களின் பயம், மனசாட்சி, வெளிப்படைத்தன்மை, அனுபவங்களை எதிர் கொள்ளும் தன்மை மற்றும் ஒப்புக்கொள்ளும் தன்மை ஆகிய ஐந்து அந்தரங்க குணங்களை வெளிப்படுத்தும் கேள்விகள் இச்சோதனையில் கேட்கப்படும்.
தற்போது ஏற்பட்டுள்ள தகவல் கசிவினால் 3.1 மில்லியன் பயனர்களின் மிக அந்தரங்க தகவல்களான மன நலம் குறித்த இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இத்தேர்வில் பங்குபெற்றபின் ஒவ்வொரு பயனருக்கும் ஒரு பிரத்தியேக ஐ.டி கொடுக்கப்படும். இந்த ஐ.டி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் Psychometrics மையத்தில் இத்தகவல்களைக் காக்கும் பொறுப்பிலுள்ள David Stillwell மற்றும் Michal Kosinski ஆகியோரின் கட்டுப்பாட்டிலிருக்கும்.
ஆனால் இந்த தகவல்களை அணுகும் பாஸ்வேர்ட் முதலானவை GitHub என்னும் இணையதளத்திலேயே கிடைக்கின்றன.
இவற்றைப் பயபடுத்தி ஒரே நிமிடத்தில் தகவல்களை சென்றடைய முடியும். இவ்வளவு பெரிய இந்த பிரச்சினை வெளியானதும் சுதாரித்துக் கொண்ட பேஸ்புக் ஏப்ரலிலேயே ‘myPersonality’ appஐ இடைநிறுத்தம் செய்து விட்டதாகக் கூறியுள்ளது.
தொடர்ந்து விசாரித்து வருவதாக கூறியுள்ள பேஸ்புக், விசாரணை முடிவுகளைப் பொருத்து ‘myPersonality’ appஐ நிரந்தரமாக அகற்றக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
Cambridge Analytica பிரச்சினையைத் தொடர்ந்து சுமார் 200 appகளை இடைநிறுத்தம் செய்து விட்டதாக அறிவித்த சில மணி நேரத்தில் இந்த தகவல் கசிந்த விடயம் வெளியாகியுள்ளது.
ஆனால், பிரச்சினை வெளியாகுமுன் தகவல்களை யாரெல்லாம் பதிவிறக்கம் செய்தார்கள், யாரிடமெல்லாம் தகவல்கள் உள்ளன அவர்கள் தகவல்களை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்வார்கள் என்பது குறித்த விவரங்கள் யாருக்கும் தெரியாது என்பதே அச்சத்தை ஏற்படுத்தும் விடயமாக உள்ளது.
ஆரம்ப காலத்தில் ஆபாசம் என ஒதுக்கித் தள்ளப்பட்ட புகழ்பெற்ற நிர்வாண ஓவியம் ஒன்று 157 மில்லியன் டொலர் தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள Sotheby நிறுவனம் Nu Couche (Sur Le Cote Gauche) என்ற குறித்த ஓவியத்தை விற்பனைக்கு வைத்தது.
குறித்த ஓவியமானது புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான அமேதியோ மோதிக்லியானியால் உருவாக்கப்பட்ட 22 நிர்வாண ஓவியத் தொகுப்பில் ஒன்றாகும். 1917 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஒவியமானது அப்போதைய மக்களால் ஆபாசம் என ஒதுக்கப்பட்டது.
ஏலத்திற்கு வைத்த Sotheby நிறுவனமானது ஆரம்ப விலையாக 150 மில்லியன் டொலர் என குறிப்பிட்டது.
இதுவரை ஏலத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்களில் ஆரம்ப விலையாக அதிக தொகை நிச்சயிக்கப்பட்ட ஓவியமும் இதுவே.
பின்னர் நடந்த ஆவேசமான விவாதத்தில் குறித்த ஓவியத்தை பெயர் வெளிப்படுத்த விரும்பாத நபர் ஒருவர் 157 மில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளார்.
ஆனால் இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக டாவின்சி ஓவியமான Salvator Mundi உள்ளது. கடந்த ஆண்டு ஏலத்தில் விற்கப்பட்ட இந்த ஓவியத்தின் மொத்த தொகை 450 மில்லியன் டொலர் ஆகும்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் Nu Couche (Sur Le Cote Gauche) என்ற நிர்வாண ஓவியத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவே பலத்த எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிரிட்ஜை தொட்ட இரண்டு வயது குழந்தை மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேடவாக்கத்தை அடுத்த சித்தாலபாக்கம் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கால் டாக்ஸி டிரைவரான இவருக்கு செல்வி என்ற மனைவியும், தஷிகா மற்றும் பிரதீஷ் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று பிரதீஷ் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த பிரிட்ஜின் அருகே சென்றுள்ளார்.
இதை யாரும் கவனிக்காத காரணத்தினால், பிரதீஷ் திடீரென்று தூக்கி வீசப்பட்டார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த வீட்டில் இருந்தவர்கள், உடனடியாக குழந்தையை கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பிரதீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், விளையாடிக்கொண்டிருந்த பிரதீஷ், பிரிட்ஜின் பின் பகுதியில் உள்ள கம்பியைத் தொட்டுள்ளார், அதில் மின் கசிவு இருந்துள்ளதால், மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது