இலங்கையில் உயிரைப் பறிக்கும் வெயில் : வெளிநாட்டுப் பெண்களின் செயற்பாடு!!

 

இலங்கையின் பல பகுதிகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என்பதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் கடும் வெப்பமான காலநிலைக்கு மத்தியிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு சென்று அழகை ரசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பலர் சுட்டெரிக்கும் வெயில் காயும் காட்சிகள் கமராவில் பதிவாகியுள்ளது.

இலங்கையை சுற்றியுள்ள அழகிய காட்சிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடும் வெயிலிலும் அதனை ரசிப்பதே இதன் ஊடாக பார்க்க முடிந்துள்ளது.

சமகாலத்தில் இலங்கையில் நிலவும் கடும் வெப்பமாக காலநிலை காரணமாக உயிராபத்து ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே மேடையில் 1000 மாணவர்கள் : மட்டக்களப்பில் சாதனை!!

 

மட்டக்களப்பில் 1000 மாணவர்கள் ஒரே மேடையில் தோன்றி நடன நிகழ்வொன்றை நடத்தி சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நடன தினத்தினை முன்னிட்டு இந்த நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

சுவாமி விபுலானந்தரின் 126ஆவது ஜனனதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் 1000 மாணவர்கள் பங்குகொண்ட நாட்டியாஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் நடன ஆசிரிய ஆலோசகர் கலாவித்தகர் திருமதி மலர்விழி சிவஞான சோதி குருவின் ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சுவாமி விபுலானந்தருக்கு வழிபாடுகள் நடைபெற்றதுடன் மைதானத்தில் தோன்றிய 1000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி சாதனையினை படைத்தனர்.

இந்த நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக பெற்றோர், பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது குறித்த நிகழ்வினை நடாத்தி சாதனை படைத்த ஏற்பாட்டாளர்கள், வலய கல்வி பணிப்பாளர் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.

50 மில்லியன் டொலர்களைக் கொடுத்து 25 வயது பெண்ணை திருமணம் செய்த சவுதி இளவரசர்!!

 

சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 68 வயதான சுல்தான் 25 வயதான பெண்ணை மணந்துள்ளார்.

இதற்காக 50 மில்லியன் டொலர்களை வரதட்சணையாக பெண்ணுக்கு அவர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

வெள்ளை நிற சொகுசு பேருந்தில் 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டு அவை மணப்பெண் வீட்டாருக்கு வழங்கப்பட்டுள்ளது. வைரங்களும் பெண்ணுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளன. மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் அழகாக ஜொலிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நிறம் மாறும் தாஜ் மஹால் : காரணம் என்ன?

ஷாஜஹானால் அவரது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்ட கல்லறை மாளிகையான தாஜ் மஹால் ஏழு அதிசயங்களின் ஒன்றாக கருதப்படுகிறது. 1632 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டுமானம் சிறு தவறு கூட நேராத வகையில், கட்டிடப் பணிகளில் மிக நேர்த்தியாக கட்டி முடிப்பதற்கு 21 ஆண்டுகள் ஆனதாக வரலாறு சான்று பகர்கின்றன.

300 ஆண்டுகளுக்கு முன்பே தாஜ் மஹாலின் மதிப்பு 32 பில்லியன் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இது 65 பில்லியனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தாஜ் மஹாலின் மெறுகேற்றும் அழகு அதன் வெள்ளை நிறம்தான். ஆனால் தாஜ் மஹாலின் வெள்ளை நிறம் நாளுக்குநாள் மங்கிக்கொண்டே வருகிறது. இதன் நிறம் பழுப்பாகவும் பச்சையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாஜ் மஹாலின் வெள்ளை நிறம் மாறாமல் இருக்க அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு விசாரணையின் போது, “தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் தாஜ் மஹால் இழந்த வெண்மை நிறத்தை மீட்க அரசு முயற்சி எடுக்க வேண்டும்” என கூறப்பட்டது.

தாஜ் மஹால் நிறம் மாறுவதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது அதனை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதால் மாசு அதிக அளவில் தாக்குவதாலும், புற ஊதா கதிர்களின் தாக்கமும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதை கவனிக்காமல் விட்டால் வெள்ளை நிறத்தில் இருந்து பழுப்பாகி தற்போது பச்சை நிறமாக மாறி வருவது விரைவில் சிவப்பு நிறத்தில் மாறக்கூடும் என கூறப்படுகிறது

இராணுவ விமான விபத்தில் 09 பேர் பலி!!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் ஏற்பட்ட இராணுவ விமான விபத்தில் 09 பேர் பலியாகியுள்ளனர். த பூர்டோ ரிகோ எயார் நெசனல் கார்ட் எனும் நிறுவனத்திற்கு சொந்தமான டப்லியு.சி.130 ரக சரக்கு விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜோர்ஜியாவில் இருந்து அரிசோனா மாநிலத்தின் டக்சன் எனும் இடத்திற்கு செல்லுகையில் சவன்னா எனும் இடத்தில் விபத்துக்குள்ளானதில் குறித்த விமானத்தில் பயணித்த 09 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 30 வருடங்களாக குறித்த நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலைகீழாக நின்று சிரசாசனம் செய்த நடிகை!!

 

தமிழ், மலையாளம் உள்பட ஏராளமான தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால். இயக்குனர் விஜய்யை திருமணம் செய்த அமலாபால் சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு மீண்டும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார்.

அதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தார். உடலை சிலிம்மாக வைக்க யோகாசனமும் கற்று வந்தார். தனியாக யோகாசன ஆசிரியர் வைத்து படப்பிடிப்பு இல்லாத நாட்களில் யோகா பயின்று வந்தார்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் ஒரு பூங்காவில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். மேலும் அமலாபால் சிரசாசனம் செய்யும் புகைப்படம் வேகமாக வலைத்தளங்களில் பரவியது. இது தொடர்பாக அமலாபால் பதிவு செய்துள்ள கருத்தில் கூறி இருப்பதாவது..

யோகாசனம் செய்வதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. சிரசாசனம் செய்வது பற்றி எனது யோகா குரு சொல்லிக் கொடுத்தார். ஆனால் அந்த ஆசனத்தை எனது குரு அல்லது மற்றவர் உதவியுடன்தான் என்னால் செய்ய முடிந்தது.

வீட்டில் தனியாக செய்தபோது அடிக்கடி கீழே விழுந்தேன். எனவே சிரசாசனத்தை இயற்கை சூழலில் தனியாக செய்து பார்க்க முடிவு செய்தேன். இதற்காக அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றேன். அங்குள்ள மரங்களின் அருகே நான், சிரசாசனம் செய்ய முயன்றபோது யாருடைய உதவியும் இல்லாமல் அதனை செய்ய முடிந்தது.

இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. நான், குழந்தையைபோல பூங்காவை சுற்றி வந்தேன். எனது சந்தோ‌ஷத்தை அங்கும்மிங்கும் ஓடி வெளிப்படுத்தினேன் என்று கூறி உள்ளார்.
அமலாபாலின் சிரசாசனத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான வரி 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது,

பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் அதிபர் மீது தாக்குதல்!!

கிளிநொச்சி – பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தின் அதிபர் கடமை நேரத்தில் பாடசாலை அலுவலகத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், அதேபாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவரின் கணவரே இவ்வாறு அதிபரைத் தாக்கியுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலயக் கல்வித் திணைக்களம், கோட்டக்கல்வி பணிமனை ஆகியவற்றில் முறையிடப்பட்டுள்ளது.

பாடசாலையில் நீண்டகாலமாக சேவையாற்றி வரும் ஆசிரியை ஒருவர் பாடசாலையில் பொருள் கொள்வனவில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் வலயக்கல்வி பணிமனையால் விசாரணை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இதற்கு அதிபர் காரணமாக இருப்பதாகத் தெரிவித்து குறித்த ஆசிரியையின் கணவர் இன்று பகல் பாடசாலை நேரத்தில் பாடசாலைக்குச்சென்று அதிபரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் வலயக்கல்விப் பணிமனையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதவேளை, குறித்த ஆசிரியை நீண்டகாலமாக இந்த பாடசாலையில் கடமையாற்றி வருவதனால் மூன்று தடவைகள் இடமாற்றம் செய்யப்பட்டபோதும், அரசியல் பின்னணியில் அவரது இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டதாகவும், ஆசிரியை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் இன்று பிற்பகல் கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு அதிபர் அல்லது ஆசிரியர் மீது தாக்குபவர்கள் கல்வியை பின்நோக்கித்தள்ளுகின்ற அல்லது கல்வியை அழிக்கின்ற ஒரு செயலாக அமையும் என இணைத்தலைவர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம் : காணொளி!!

 

இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் சாரதியாக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு குழுவினருடன் வான் ஒன்றில் காட்டு பகுதி வழியாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு கரடியை அந்த குழுவினர் பார்த்துள்ளனர். அந்த கரடி காயமடைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி கரடியை அருகில் சென்று பார்க்க முயற்சி செய்துள்ளனர். அப்போது டிரைவர் பிரபு பட்டாரா அந்த கரடியுடன் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.

உடனிருந்தவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். செல்பி எடுக்க முயற்சி செய்த போது கால் தவறி அவர் கரடி அருகே விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கரடி பிரபுவை தாக்க முயற்சி செய்தது.

கரடியிடம் சிக்கிக்கொண்ட அவர், அதனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்.அருகில் இருந்தவர்களும் அந்த கரடியை தாக்கி, அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

இருப்பினும் அந்த கரடி அவரை இறுதிவரை தப்பிக்க விடவில்லை. இறுதியில் பிரபு பட்டாரா கரடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

டுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள்!!

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிலரது கடவுச்சொற்கள் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது. இந்த கோளாறை டுவிட்டர் நிறுவனம் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டது.

இருப்பினும் பாதுகாப்புக்காக கடவுச்சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு அனைத்து பயனாளர்களையும் டுவிட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அந்த கோளாறு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் இனிமேல் இது போல் நடக்கமால் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டுவிட்டர் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம் : தந்தை, சிறிய தந்தை உள்ளிட்ட நால்வர் கைது!!

நுவரெலியா – கந்தப்பளை பார்க் தோட்டத்தில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த அனைவரையும் நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமிகளின் தந்தை, சிறிய தந்தை உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்துடன், சிறுமிகளின் தாயார் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

14, 15 மற்றும் 16 வயது சிறுமிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மூவரும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமிகள் கொழும்புக்கு தப்பிச்சென்ற நிலையில், நிர்க்கதிக்குள்ளான சிறுமிகளை பொலிஸார் பொறுப்பேற்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சிறுமிகள் வழங்கிய தகவலுக்கு அமைய, கந்தப்பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சிறுமிகளின் தந்தை உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று முதல் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை அறிவிப்பு!!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று (04.05) முதல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக நாட்டின் மேல், வடமேல், தென்பகுதி கடலோர பகுதிகளில் காலை வேலையிலும் மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் (10cm) வரையிலான மழை பெய்யக் கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமாக காணப்படும் என்பதுடன், மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

வவுனியா குடியிருப்பு கலாசார மண்டப காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவதை நிறுத்த கோரிக்கை!!

 

வவுனியா குடியிருப்பு கலாசார மண்டப காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவதை உடன் நிறுத்துமாறு வவுனியா அரசாங்க அதிபருக்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தின் முழுவிபரம் வருமாறு:

வவுனியா, குடியிருப்பு கிராமம் நகரத்தின் மிகப்பழமையான கிராமாகும். தற்போது கலாசார மண்டபம் காணப்படுகின்ற காணியானது 1920ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்தே பிள்ளையார் கோவிலின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு பொதுத் தேவைக்கான கட்டடம் மற்றும் 1945ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கோவிலின் திருவிழாக்கள் மேற்படி காணியில் நடாத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் 1990களில் அப்போதைய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் காணியில் கலாசார மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டது.

இதன்போது கட்டடம் அமைக்கப்பட்டதும் கோவில் நிர்வாகத்திடம் கையளிப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.

துரதிஸ்ரவசமாக மக்கள் பயன்பாட்டிற்கு முன்னமே இராணுவத்தினரால் கையப்படுத்தப்பட்ட மேற்படி கட்டிடமும் காணியும் 2016ம் அண்டு வரை 26 வருடங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் கவனத்திற்கு மேற்படி விடயம் கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து காணியும் கட்டடமும் அரசாங்க அதிபரிடம் 2016ல் கையளிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து 23.08.2016ம் திகதி கடித மூலம் குடியிருப்பு கோவில் நிர்வாகம் மேற்படி மண்டபத்தையும், காணியையும் கோவில் நிர்வாகத்திடம் கையளிக்குமாறு கோரியிருந்தது.

எனினும் முன்னைய மாவட்ட செயலாளரினால் காணியின் ஒருபகுதி கைப்பணி பொருட்கள் விற்பனைக்கான கட்டடமொன்று அமைக்கப்படுவதற்கு ஒதுக்கப்பட்டது.

எதிர்கால அபிவிருத்திக்காக காணி தேவைப்படாக இருந்தமையினால் காணியை வேறுதேவைக்கு வழங்க வேண்டாமென அரசாங்க அதிபரை நான் கோரியிருந்தேன்.

எனினும் குறிப்பிட்ட தேவைக்கு சிறிய அளவிலான காணியை வழங்க தீர்மானிக்கப்பட்டு கட்டட நிர்மாணப்பணிகள், ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மிகுதியாகவுள்ள காணியை வேறு எந்த பொது தேவைக்கும் வழங்கப்படமாட்டாதென முன்னாள் அரசாங்க அதிபரால் உறுதிமொழி வழங்கப்பட்டது.

எனினும் தற்போது காணியின் ஒருபகுதி ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக காணியில் பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கலாசார மண்டபத்தில் சமையல் அறைத்தொகுதி, வாகனத்தரிப்பிடம், கழிவறைத்தொகுதி என்பன அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ள நிலையில் தொடர்ந்தும் இவ்வாறாக காணியை அரச திணைக்களங்களுக்கு வழங்குவது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே இடப்பற்றாக்குறையை கருத்தில்கொண்டு காணியை வேறுதேவைகளுக்கு வழங்குவதை இடைநிறுத்துமாறு தங்களை தயவாக கேட்டுக்கொள்கின்றேன் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

வவுனியாவில் 10 பேருக்கு சமாதான நீதவான்களுக்கான நியமனம் வழங்கிவைப்பு!!

 

வன்னி மாவட்டத்திலுள்ள 10 பேருக்கு இன்று மாலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனினால் அவரது அலுவலகத்தில் வைத்து இந்நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சாமதான நீதவான்களாகவும் அகில இலங்கை சமாதான நீதவான்களாகவும் ஒரு பெண் உட்பட 10பேருக்கு இன்று இந்நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடும் காற்றுடன் மழை : பாறிவிழுந்த பாடசாலைக் கட்டடம்!!

 

வவுனியாவில் கடந்த இரு தினங்களாக மாலை வேளையில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. கடும் வெப்பம் நிலவிவரும் நிலையில் இம் மழை மக்களின் மனங்களையும் குளிரவைத்துள்ளது.

இந் நிலையில் நேற்று பெய்த கடும் காற்றுடன்கூடிய மழையினால் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பன்றிக்கெய்தகுளம் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த 80 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட கொட்டகை பாறி விழுந்துள்ளது. மேலும் சமையல் கூடத்தின் கூரை ஓடுகளும் சேதமடைந்துள்ளதுடன் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

250 இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விபயிலும் இப் பாடசாலையின் இக் கொட்டகை உடைந்து வீழந்தமையால் மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வவுனியா வடக்கில் மேலும் சில பாடசாலைகளும் இம் மழையினால் சேதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 737 மோட்டார் குண்டுகள் மீட்பு!!

முல்லைத்தீவு இளங்கோபுரம் காட்டுப்பகுதியில் ஒரு தொகுதி யுத்த வெடிபொருட்கள இன்று மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கையில் இன்று பிற்பகல் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது 737 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் கனரக துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆர்.பி.ஜிஇ துப்பாக்கி செலுத்திகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.