தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ள தமிழ் மாணவன்!!

 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலய தமிழ் மாணவன் பு.ரிசாந்தன் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய ரீதியில் 3ஆம் இடத்தினை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தரம் 7 வகுப்பு பிரிவில் கலந்து கொண்டு அவர் இந்த சாதனையை பதிவு செய்துள்ளார். அத்துடன் பிரத்தியேக வகுப்புக்கள் இல்லாத சந்தர்ப்பத்திலும், பாடசாலை கற்றலை மாத்திரம் முழுமையாக பயன்படுத்தி அவர் இந்த சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அதிகஸ்ட பாடசாலையான குறித்த பாடசாலையிலிருந்து கடந்த காலங்களிலும் சமூக விஞ்ஞான போட்டியில் கலந்து கொண்ட மாணவரொருவர் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக சாதனை படைத்த மாணவர்கள்!!

 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய மாணவர்கள் சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும், அமிர்தலிங்கம் அஜந்தா என்ற மாணவி தரம் 7இல் தேசிய ரீதியில் முதலிடத்தினையும், அதே வகுப்பில் ஜடேஸ்வரன் உதேசினி தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

பாடசாலை வரலாற்றில் தேசிய ரீதியாக இப்பாடசாலை இவ்வாறான தேசிய சாதனையை இதுவரை புரியாத நிலையிலும் முதன்முறையாக சமூக விஞ்ஞானப் போட்டியில் புரிந்துள்ளமை எடுத்துக்காட்டத்தக்கதாகும்.

வடக்கு தெற்கை இணைக்க அதிவேக நெடுஞ்சாலைகள்!!

கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஏற்பாடுகளையும் முயற்சிகளையும் செய்யவுள்ளது என்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இன்று பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், அமைச்சின் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!

 

வவுனியா பூந்தோட்டம் பாடசாலைக்கு அருகாமையில் இன்று (04.05.2018) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்ததுடன் ஆசிரியை ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்..

பூந்தோட்டம் சந்தியிலிருந்து இளைஞர்கள் இருவர் பயணித்த ஹொண்டா ரக மோட்டார் சைக்கிளும் பூந்தோட்டம் சந்தி நோக்கி பயணித்த ஆசிரியையின் ப்ளஸுர் ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் இருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இரு மோட்டார் சைக்கிள்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

இளைஞர்கள் இருவரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திவந்தகாகவும் இதனாலேயே இவ் விபத்து இடம்பெற்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப் பகுதி இளைஞர்கள் சிலர் மாலை மற்றும் இரவு வேளைகளில் மதுபோதையில் வாகனங்களை வேகமாகச் ஒட்டிச் செல்வதாகவும் இதனால் விபத்துக்களை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதாகவும்,

வீதியின் முக்கியமான இடங்களில் வேகத் தடைகளை அமைக்கவேண்டும் எனவும் போக்குவரத்துப் பொலிசாரும் மாலை வேளையில் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா சிறைச்சாலைக்குள் நடக்கும் கொடுமைகள் : நீதிமன்றத்தில் அம்பலப்படுத்திய கைதி!!

வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்காக வருகைத்தந்திருந்த கைதி ஒருவர், வவுனியா சிறைச்சாலையில் சிறைக்காவலர்களும், நீண்ட காலமாக தடுப்பில் உள்ள சிறைக்கைதிகளும் இணைந்து செய்யும் அநீதிகள் தொடர்பாக நீதிவானிடம் சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக இன்று சென்ற போதே கைதி ஒருவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட விளக்கமறியலில் உள்ள கைதி ஒருவர் தனது கைகளை உயர்த்தி திறந்த நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சில விடயங்களை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதன் போது கடமையில் இருந்த பதில் நீதிவான் கைதிக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார்.

இதன் போது கைதி, வவுனியா சிறைச்சாலையில் கைதிகளிற்கு பல்வேறான அநீதிகள் இடம்பெறுவதாகவும், கைதிகள் நல்ல இடத்தில் உறங்குவதற்கு சுமார் 3000 ரூபாய் வரை பெறப்படுவதாகவும் அப்பணம் வழங்கப்படாவிட்டால் மலசல கூட பகுதியிலேயே தங்கவிடப்படுவதாகவும் கூறியுள்ளார்.

சிறைச்சாலைக்குள் புகையிலை, போதைப்பொருள் பாவனையும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். சிறைக்காவலர்களும், நீண்ட நாள் கைதிகளாக இருப்பவர்களும் இணைந்தே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன் போது அனைத்து சட்டத்தரணிகளும் எழுந்து குறித்த கைதி சுட்டிக்காட்டும் பிரச்சினை சிறைச்சாலையில் இடம்பெறுவதாக தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, இந்நிலையில் பதில் நீதிவான் அன்ரன் புனிதநாயகம், வவுனியா சிறைச்சாலை பொறுப்பதிகாரியை நீதிமன்றத்திற்கு அழைத்து குறித்த கைதி தெரிவித்த கருத்தினை சுட்டிக்காட்டி இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்திருந்தார்.

-தமிழ்வின்-

மட்டக்களப்பில் கடன்தொல்லையால் யுவதி தூக்கிட்டு தற்கொலை!!

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் யுவதி ஒருவர் கடன் தொல்லை காரணமாக தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் வேளை சிவன் கோயில் வீதி பேத்தாழையில் இடம்பெற்றுள்ளது.

பஞ்சாட்சரவடிவேல் நோஜிதா வயது 23 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தமது பெற்றோர்கள் அரேபிய நாட்டிற்கு தொழில் வாய்ப்பு தேடிச் சென்றுள்ளதினால் சகோதரர்களுடன் குறித்த யுவதி வாழ்ந்து வந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினமன்று நுன்கடன் வழங்கும் நிறுவனமொன்றிக்கு நிலுவைப் பணம் செலுத்த வேண்டிய தேவை இருந்துள்ளது. வழக்கம் போல் மதிய உணவினை அன்றைய தினம் தயாரித்த பின்னர் வெளியில் சென்ற சகோதரர் வீடு திரும்ப நேரமாகியதினால் உணவு உண்ண வருமாறு கைத்தொலைபேசி மூலம் குறுந்தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சகோதரர் வீடு வந்து பார்த்த போது தமது இளைய சகோதரர்கள் வீட்டின் ஜன்னல் ஊடாக பார்வையிட்டு அழுது கூச்சலிட்டதைக் கண்டு பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தமது சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசாரின் முறைப்பாட்டில் தமது வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளார்.

அவரை காப்பாற்றும் முகமாக அயலவர்களின் உதவியுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற போதும் இடைவழியில் உயிரிழந்துள்ளதாக சகோதரர்கள் தெரிவித்தனர்.

தமது சகோதரர் ஒருவருக்கு உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்வதற்கும் வேறு தேவைகளுக்காகவும் அதிகளவு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் தமது தாயார் பல நுன் கடன் நிறுவனங்கள் மற்றும் வெளி நபர்களிடம் தனது பெயரிலும் உயிரிழந்த குறித்த யுவதியின் பெயரிலும் பணத்தினை கடனாகப் பெற்று மருத்துவ சிகிச்சைக்கு அதனை பயன்படுத்தியுள்ளார்.

மேற்படி கடன் விடயங்களுக்கு தமது மகளை பொறுப்பாளியாக்கி விட்டு கடன் சுமையினை நிவர்த்தி செய்ய அவர் அரேபிய நாட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து தமது தந்தையும் சென்றுள்ளார். இவ்வாறான நிலையில் கடன் வழங்கிய நிறுவன உத்தியோகஸ்த்தர்கள் சிலர் வீட்டிற்கு அடிக்கடி வந்து பண நிலுவையினை செலுத்துமாறு தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலைமை காரணமாக குறித்த சில மாதங்களாக அவர் மனமுடைந்து அச்சமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தமது தந்தை எதிர்வரும் 5 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாகவும் நாடு திரும்பியதும் தாங்கள் வசித்து வரும் வீட்டினை விற்று விட்டு கடன் நிலுவையினை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தந்தை மகளுக்கு தொலைபேசியூடாக சில நாட்களுக்கு முன்பு அறிவுரை வழங்கியதாக சம்பவத்தினை கேள்வியுற்ற அவரது நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பிரதேசத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் புதிய நடைமுறை!!

இலங்கையில் புதிய போக்குவரத்து நடைமுறையை அறிமுகம் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வீதி கட்டமைப்பில் காணப்படும் பல்வேறு போக்குவரத்து தவறுகளை அறிந்து கொண்டு, புதிய சட்டத்தை செயற்படுத்த RFID தொழில்நுட்பம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதன்மூலம் வீதி போக்குவரத்து நெரிசல் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கும், அதனை முகாமைத்துவம் செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கு வாகனங்களுக்கு முன்னாலும், பின்னாலும் ஒட்டப்படும் இரண்டு ஸ்டிக்கர்களில் RFID டெக் உள்ளடக்கப்படுகின்ற நிலையில், பின்னர் அதனை வாசிக்கும் உபகரணம் ஒன்று வீதியில் பொருத்தப்படவுள்ளது.

அதற்கமைய அதனை வாசிக்கும் உபகரணம் இதுவரையிலும் வீதியில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரேடியோ டெக் எனப்படும் RFID சிப்பிற்குள் 2000 பையிட்ஸ் அல்லது அதற்கு குறைவான தரப்பு அளவு சேமிப்பு திறன் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை தடுத்து வைக்கும் சிப் வாகனத்தின் முன் மற்றும் பின் பக்க ஜன்னல்களில் பொருத்தப்பட்டுள்ளது.

scanning antenna மூலம் வெளியாகும் ரேடியோ அலைகள் மோதும் போது இது இயங்க ஆரம்பித்து சிப்பில் உள்ள தகவல்களை பெற்றுக் கொள்ள முடிகின்றது.

ஹட்டனில் ரயிலில் மோதுண்டு பாரிய மலைப்பாம்பு பலி!!

ஹட்டனில் பாரிய மலைப்பாம்பு ஒன்று ரயில் மோதுண்டு உயிரிழந்துள்ளது. ஏழு அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று உணவு தேடி சென்ற போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார். இந்த சம்பவம் ஹட்டன் ஸ்டெதன் பகுதியில் இன்று காலை ஏற்பட்டுள்ளது.

ஹட்டனில் இருந்து கண்டி பகுதியை நோக்கி பயணித்த புகையிரத தண்டவாளத்தில் மலைபாம்பின் உடலம் இனங்கானபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை புகையிரத வீதியின் திருத்த பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களினால் இந்த மலைமாம்பின் உடலம் இனங்கானபட்டு ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டது.

இது தொடர்பாக நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்டுள்ளதாக ஹட்டன் தெரிவித்துள்ளனர்.

மலையகத்தில் இதுவே பாரிய மலைபாம்பு எனவும் வட்டவலை வனபகுதியில் இது போன்ற மலைபாம்புகள் காணபடுவதாகவும் வனவிலங்கு காரியால அதிகாரிகள் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இலங்கையில் ஒன்பது நிமிடங்களுக்கு ஒருமுறை பரவும் ஆபத்து!!

இலங்கை உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் ஒன்பது நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு பரவும் ரேபிஸ் எனும் ஆபத்தான வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுடன், இந்த வைரஸ் தொற்றை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலேயே இந்த வைரஸ் தொற்று அதிகமாக காணப்படுவதாகவும், இதன் தாக்கத்தினால் உலகளாவிய ரீதியில் 59 ஆயிரம் பேர் வரையில் வருடாந்தம் மரணிப்பதாவும் கூறப்படுகிறது.

உலகில் ரேபிஸ் எனும் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்களில் 45 சதவீதமானவர்கள் இலங்கை உள்ளிட்ட தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நாய்களிடம் இருந்தே இந்த தொற்று அதிகளவில் பரவுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ்ப் பெண்!!

களுத்துறை – மத்துகமை ஹோர்கன் தோட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜா ஜெயகலா என்ற தமிழ் பெண்ணின் மர்ம மரணம் தொடர்பில் ஆர்.ஏ.சிறிபால என்ற முச்சக்கரவண்டி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட குறித்த நபரை இன்று களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய மத்துகமை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளை தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் பணிப்புரையின்படி, மேல்மாகாண தெற்கு வலய பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் கண்காணிப்பில் மத்துகமை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஜி.ஏ.எஸ்.என்.சேனாரத்ன முன்னெடுகின்றார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஹோர்கன் தோட்டத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாய் கோவிந்தராஜா ஜெயகலா பணி முடிந்து முச்சக்கரவண்டியில் வீடு திரும்பும் போது முச்சக்கர வண்டியில் இருந்த வெளியில் பாய்ந்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த ஜெயகலாவை, முச்சக்கர வண்டி ஓட்டுனரான ஆர்.ஏ. சிறிபால தானே வைத்தியசாலையில் சேர்ப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

எனினும் வைத்தியசாலையில் சேர்க்காமல் இடை நடுவில் அவரை தூக்கி எறிந்துவிட்டு போயுள்ளார்.

பின்னர் ஊரவர்களின் உதவியால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஜெயகலா அதிக குருதி வெளியேற்றத்தால் மரணமடைந்துள்ளார்.

வைத்தியசாலையில் சேர்ப்பதாக கூறி எடுத்து சென்ற, முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஆர்.ஏ. சிறிபால அவரை வைத்தியசாலையில் சேர்க்காமல் இடை நடுவில் கைவிட்டு சென்றமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தின இரவு இது பற்றிய தகவலை ஜனநாயக மக்கள் முன்னணியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கியசாமி அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

அமைச்சரின் பணிப்புரையை அடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார், வெசாக் விடுமுறை காரணமாக சிறிது தாமதமானாலும் கூட, தற்சமயம் தொடர் விசாரணையின் பின் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

ஆர்.ஏ. சிறிபால என்ற இந்த நபர், கொழும்பில் பெருந்தெருக்கள் அதிகார சபையில் பணியாற்றுபவர். விடுமுறை காலங்களில் சொந்த ஊரில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர்.

இவரது வண்டி தொடர்பான விபரங்கள் அப்பகுதியில் அமைந்திருந்த வீதி கமராவில் முழுமையாக பதிவாகி இல்லாவிட்டாலும் கூட, பொலிஸ் விசாரனையில் விபரங்கள் வெளி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

பால் மா விலை அதிகரிப்பு : மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!!

பால் மாவின் விலை அதிகரிப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் வாழ்க்கைச் செலவு குழு, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பால் மா விலையை அதிகரிக்குமாறு பரிந்துரைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், 400 கிராம் பால் மாவின் விலை 20 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 50 ரூபாவினாலும் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

உலக சந்தையில் தற்பொழுது ஒரு மெட்றிக்தொன் பால் மாவின் விலை 3,250 முதல் 3,350 அமெரிக்க டொலர்களாக உள்ள போதும், எதிர்காலத்தில் 3,400 முதல் 3,500 டொலர்கள் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

உலகளாவிய ரீதியில் பிரபலமான யாழ்ப்பாண பாடகி : அமெரிக்காவில் மோசமாக நடந்து கொண்டாரா?

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானியாவின் பாடகி MIA மாயா என்று அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் அமெரிக்க- கனேடிய எல்லையில் சில மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கனடாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவின் ஊடாக கனடாவுக்கு செல்லும்போதே அவர் அமெரிக்க- கனேடிய எல்லையில் தடுக்கப்பட்டார்.

1990 ஆம் ஆண்டில் லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பிலான குற்றச்சாட்டுக்காகவே அவர் தடுத்து வைக்கப்பட்டார்

குறித்த காலப்பகுதியில் மாயா லொஸ் ஏஞ்சல்ஸூக்கு சென்ற வேளையில் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன்போது அவர் ஆடையகம் ஒன்றுக்குள் சென்று புது ஆடை ஒன்றை உடுத்திக்கொண்டு வெளியே வரும்போது பிடிக்கப்பட்டார்.

இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்தே கனேடிய எல்லையில் அவர் தடுத்து வைக்கப்பட்டார். எனினும் அன்று 40 டொலர் பெறுமதியான ஆடையை தாம், எடுத்தபோதும் இன்று பல மில்லியன் டொலர்களை அமெரிக்காவுக்கு வரியாக செலுத்தி வருகிறேன் என்று அவர் அமெரிக்க அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தன்னை மன்னிக்க முடியும் என்று மாயா வாதிட்டதன் பின்னர், அமெரிக்க அதிகாரிகள் அவரை கனடாவுக்குள் செல்ல அனுமதித்தனர்.

யாழில் மோசமான செயலில் ஈடுபட்ட சிங்களப் பெண்ணுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடை ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கள பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த மாதம் 8ஆம் திகதி குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார். இவரை நேற்று முன்தினம் யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்லைப்படுத்திய போது அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சிங்களப் பெண் ஒருவர் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடை ஒன்றுக்கு சென்று வளையல் வாங்குவதாக கூறி, சில வளையல்களை பார்வையிட்டுள்ளார். பின்னர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வருவதாக கூறிச் சென்ற குறித்த பெண் மீண்டும் கடைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் வளையல்களை சோதனையிட்ட கடை உரிமையாளர் அதில் 2 வளையல்கள் காணாமல் போனதை அறிந்து கொண்டு, கடையிலிருந்த சி.சி.டி.வி கெமராவை சோதனையிட்டுள்ளார்.

இதில் குறித்த பெண் வளையல்களை மிகவும் சூட்சுமமான முறையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளதை அவதானித்து, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் திருடிய வளையல்களின் பெறுமதி 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் நாடு கடத்தலை பிற்போட்ட நீதிமன்றம் : முடிவின்றி தவிக்கும் தமிழ் குடும்பம்!!

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் நாடுகடத்தல் பிற்போட்டுள்ளமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம் நாடு கடத்தப்படுவோமா இல்லையா என்பது தொடர்பில், குறித்த குடும்பம் குழப்ப நிலையில் உள்ளதாக அவுஸ்திரேலிய புகலிட செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் மற்றும் பிரியா உள்ளிட்ட அவர்களின் இரு பிள்ளைகள் நாடு கடத்தப்படவுள்ளனர்.

நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலிய சென்ற, 2013ம் ஆண்டுக்குப் பின்னர் மத்திய குயின்ஸ்லாந்தின் பிலோயிலா பகுதியில் குடியேறினர்.

அவர்களது வீசா காலம் நிறைவடைந்தப் பின்னர் அதிகாரிகள் அவர்களை நாடுகடத்துவதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டனர்.

எனினும் அவர்கள் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கான சட்டரீதியான ஏதுநிலைகள் இருப்பதாக தெரிவித்து, மெல்போர்ன் பிராந்திய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர்களை நாடுகடத்த முடியுமா முடியாதா? என்பது தொடர்பான உத்தரவு நேற்று முன்தினம் அறிவிக்கப்படவிருந்த போதும், அன்றையதினம் தீர்ப்பு வெளியாக்கப்படாமல், திகதி பிற்போடப்பட்டது.

இதனை அடுத்து குறித்த குடும்பம் செய்வதறியா நிலையில் இருப்பதாக புகலிட செயற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் இன்றும் வெப்பமான காலநிலையை எதிர்பார்க்க முடியும். இதன் காரணமாக குறித்த பகுதியிலுள்ள மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்பமான கால நிலையின் போது கூடுதலான அளவு நீரை பருகுவது முக்கியமானதாகும் என்றும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய ஆரம்பிக்கும். அதனை தொடர்ந்து வெப்ப நிலை சற்று தணியக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணமாகி 5 மாதத்தில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த இலங்கையர்!!

 

இலங்கையில் திருமணமாகி ஐந்து மாதங்களில் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேயங்கொடை, கட்டுவஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சுதார ரஞ்சித் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல சித்திர கலைஞரான சுதார ரஞ்சித் கடந்த ஜனவரி மாதம் 27 வயதான சத்ராபேடி சுமுது ஜயரத்ன என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணம் நடந்த நாளில் இருந்து இந்து குறித்த இருவருக்கும் இடையில் மோதல் நிலை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது கோபமடைந்த கணவர் உடற்பயிற்சி செய்யும் உபகரணத்தில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

படுகாயமடைந்த மனைவி உயிரிழந்துள்ள நிலையில், சந்தேக நபர் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். எனினும் கிராம மக்கள் இணைந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

சித்திர வரையும் திறமையின் ஊடாக சமூக வலைத்தளங்களில் சுதார ரஞ்சித் அதிகம் பிரபலமடைந்த ஒருவராக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.