வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் குறித்த மாவட்ட மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றரிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் 7 ஆம் திகதி காலை வரை மழையுடனான காலநிலை சில பகுதிகளில் நீடிக்கும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் காயமுற்ற மனைவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பாலையூற்று முருகன் கோயிலடியைச் சேர்ந்த நல்லிதன் தமயந்தி (26 வயது) எனும் இளம் குடும்பப் பெண் என தெரியவருகின்றது.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவியை கணவன் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கணவரான ராசய்யா ரேஹனை (34 வயது) கைது செய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா, உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகர சாலையின் நடுவே உள்ள கால்வாயில் விழுந்து தவித்த நாய்க் குட்டியை, ஆளில்லா விமானத்தின் உதவியுடன் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இம்மாநிலத்தின் லக்னோ நகரில் உள்ள ஒரு சாலையின் நடுவே, இருபக்க கொங்கிரீட் சுவருடன், 20 அடி ஆழமுள்ள கால்வாய் உள்ளது. அதில் கழிவு நீரும், குப்பை, கூளங்களும் அதிகமாக உள்ளன.
இந்நிலையில், அந்த கால்வாயில் குட்டி நாய் ஒன்று தவறி விழுந்து, வெளியேற முடியாமல் தவித்தது. இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர், மிலிந்த் ராஜ், 27, நாய்க்குட்டியை காப்பாற்ற நினைத்தார்.
அதற்கு, தன் பரிசோதனை கூடத்தில் உருவாக்கிய, ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்த எண்ணினார்.உடனே செயலில் இறங்கிய மிலிந்த், ஆளில்லா விமானத்துடன், செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் இயந்திர கையை பொருத்தினார்.
பின், ரிமோட் கட்டுப்பாடு உதவியுடன் ஆளில்லா விமானத்தை இயக்கிய மிலிந்த், அதனுடன் பொருத்தப்பட்ட இயந்திர கையால், நாயை பாதுகாப்புடன் மேலே துாக்கச் செய்தார். சிறிது நேரத்தில் அந்த குட்டி நாய் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது.
கால்வாய் நீரில் தத்தளித்த போது விழுங்கியிருந்த சில பிளாஸ்டிக் கழிவுகளையும், சாக்கடை நீரையும் வாந்தி எடுத்த பின், அந்த நாய் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவியது. அதை பார்த்த ஏராளமானோர், மிலிந்துக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
இந்தியாவில், ஆளில்லா விமானம் மூலம், விலங்கு ஒன்று காப்பாற்றப்பட்டிருப்பது, இதுவே முதல் முறை.
இலங்கையில் நிலவும் கடுமையான வெப்பநிலை குறித்து நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகமான வெப்பநிலை நிலவுவதால் நாளொன்றுக்கு 2 லீற்றர் நீர் அருந்த வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊட்டச்சத்து நிபுணர் ரேனுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நீர் அதிகமாக அருந்துவது கட்டாயமாகும். அத்துடன் நீர் அருந்தும் போது தேசிக்காய் அல்லது வெள்ளரிக்காய்களை நீரில் கலந்து பருகினாலும் நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெப்பமான காலநிலையின் போது அதிகமாக நீர் பருகவில்லை என்றால் தலைவி, தலைசுற்று, உடல் வலி, நீர்ப்போக்கு போன்ற நோய்கள் தாக்க கூடும். எனவே இது தொடர்பில் அவதானமாக இருந்து அதிகமாக நீர் பருக வேண்டும். அத்துடன் இளநீர் போன்றவைகளை அதிக பருகலாம்.
அதேபோன்று சிறு பிள்ளைகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லீற்றர் நீர் வழங்குங்கள். இந்த நாட்களில் அடிக்கடி குளிப்பதும் நல்லது.
அத்துடன் அதிக வெப்பமான காலநிலையின் போது பயணங்களில் ஈடுபட வேண்டாம். கூடியளவு குடைகளை பயன்படுத்த வேண்டும். தொப்பி மற்றும் வெள்ளை நிறத்திலான ஆடைகளை பயன்படுத்துங்கள். இந்த வெப்பம் உடலுக்கு ஏற்றதல்ல என்பதனால் சிந்தித்து செயற்படுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலாநந்தாக் கல்லூரியில் பல மாதங்களாக ஆபத்தான முறையில் காணப்பட்ட குளவிக்கூடுகளை பாடசாலை நிர்வாகத்தினர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பண்டாரிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு, பண்டாரிக்குளம் கிராம சேவகர் ஒத்துழைப்புடன் நேற்று (04.05.2018) இரவு 7 மணி தொடக்கம் 11 மணிவரை சுமார் 4 மணி நேர பலத்த போராட்டத்தின் மத்தியில் பாடசாலை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டது
சுமார் 2000 மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் அண்மைக் காலமாக ஆபத்தான குளவிகள் கூடுகட்டி வருவதாகவும், அதனை தம்மால் அழிக்க முடியாதுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்து திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் பாடசாலை அதிபர் உத்தியோகபூர்வமாக தகவல் வழங்கியிருந்தார்.
ஆனால் அவர்கள் இது வரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமையினால் இவர்கள் அனைவரும் இணைந்து அகற்றியுள்ளனர்.
பாடசாலை மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாத இத் திணைக்களங்கள் எமது மாவட்டத்திற்கு தேவையா? குறித்த அதிகாரிகளின் இல்லத்தில் இவ்வாறு குளவிக்கூடு கட்டிருந்தால் இவ்வாறு அசமந்த போக்காக செயற்பாடுவர்களா? குறித்த திணைக்களங்களில் பணிபுரிபவர்கள் பெருபான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் என்பதாலையே இவ்வாறு செயற்படுகின்றார்களா? என பாடசாலையின் பழைய மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தாங்கி, அரச ஊழியர் விடுதி போன்ற வவுனியாவில் பல இடங்களில் ஆபத்தான முறையில் குளவிக்கூடுகள் காணப்படுகின்றன. ஆபத்து வரும் அவற்றை தடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?
மேஷ ராசியில் இப்போது உச்சத்தில் மே மாதத்தின் நடுவில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.
சூரியன் 15ஆம் திகதி முதல் ரிஷப ராசிக்கு மாறுகிறார். தனுசு ராசியில் உள்ள செவ்வாய் பகவான் இன்று முதல் மகர ராசிக்கு மாறுகிறார். புதன் வரும் 9ஆம் திகதி மேஷ ராசிக்கு மாறுகிறார். சுக்கிரன் ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு 15ஆம் திகதி முதல் இடப்பெயர்ச்சி அடைகிறார். துலாமில் குருபகவான், தனுசில் சனி பகவான், கடகத்தில் ராகு, மகரத்தில் கேது என கிரகங்கள் அமைந்துள்ளன.
மேஷ ராசியில் இப்போது உச்சத்தில் மே மாதத்தின் நடுவில் சூரியன் ரிஷபம் ராசிக்கு மாறுகிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.
மேஷம் : சூரியன் ஜென்ம ராசியில் இருக்கிறார். அரசு வேலைக்கு முயற்சி செய்தால் கிடைக்கும். 15ஆம் திகதி முதல் இரண்டாமிடத்திற்கு சூரியன் மாறுவதால் பணவரவு அதிகரிக்கும். செவ்வாய் பகவான் இன்று முதல் ராசிக்கு 10வது இடத்திற்கு மாறி கேது உடன் அமர்கிறார். இதுநாள் வரை இருந்த மனப்போராட்டம் குறையும். ஆன்மீக விசயத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். வரும் 15ஆம் திகதி முதல் 3வது இடத்திற்கு மாறுவதால் வாழ்க்கைத் துணை மீது அன்பு அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மராமத்து பணியை செய்வீர்கள்.
ரிஷபம் : சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும். வரும் 15ஆம் திகதி முதல் ஜென்ம ராசிக்கு சூரியன் மாறுகிறார். இன்று முதல் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் பகவான் கேது உடன் குடியேறுகிறார். பிதுரார்ஜித சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சுக்கிரன் ஜென்ம ராசியில் இருக்கிறார் முகவசீகரம் அதிகரிக்கும். வரும் 15ஆம் திகதி முதல் 2வது இடத்திற்கு மாறுகிறார். பணவரவு அதிகரிக்கும். சனி ராசிக்கு 8வது இடத்தில் அஷ்டம சனியாக சஞ்சாரம் செய்கிறார். ராகு மூன்றாமிடத்தில் இருப்பது மனதில் குழப்பத்தைக் கொடுக்கும். கேது ஒன்பதாமிடத்திலிருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.
மிதுனம் : சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை உங்கள் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும் 9ஆம் திகதிக்குப் பின்னர் 11வது இடத்திற்கு மாறுவதால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சனி 7வது வீட்டில் கண்டக சனியாக சஞ்சாரம் செய்கிறார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நல்லுறவு ஏற்படும். ராகு இரண்டாமிடத்தில் இருப்பது வங்கியில் டெபாசிட் சேமிப்பு அதிகரிக்கும். கேது எட்டாமிடத்திலிருப்பது எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவை அதிகரிக்கச் செய்யும்.
கடகம் : சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும், 15ஆம் திகதிக்கு மேல் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். முயற்சிகள் வெற்றியடையும்பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். 9ஆம் திகதிக்குப் பின்னர் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அசையாத சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் 11வது இடத்தில் இருக்கிறார். 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆடம்பர பொருட்கள் சேர்க்கை ஏற்படும். சனி ஆறாமிடத்தில் இருப்பது உடல் உழைப்பை அதிகரிக்கச் செய்யும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது புத்தியில் குழப்பத்தை கொடுக்கும் கேது ஏழாமிடத்திலிருப்பது உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிம்மம் : உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். 15ஆம் திகதிக்குப் பின்னர் 10வது வீட்டிற்கு மாறுகிறார். செவ்வாய் 6வது வீட்டில் அமர்ந்துள்ளார். சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனின் செயல்கள் மனக் கஷ்டத்தைக் கொடுக்கும்.
9ஆம் திகதிக்குப் பின்னர் மாணவர்களுக்கு தாங்கள் விரும்பிய பாடப் பிரிவில் இடம் கிடைக்கும். சுக்கிரன் 10வது வீட்டில் இருக்கிறார் தொழிலில் மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை, மன சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது செலவுகள் அதிகரிக்கும். ஆறாமிடத்திலிருப்பதால் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கன்னி : சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் கவனம் அதிகரிக்க வேண்டும், அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். 15ஆம் திகதிக்குப் பின்னர் ஒன்பதாமிடத்தில் இடத்திற்கு மாறுவதால் அப்பாவின் சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5வது வீட்டிற்கு மாறுகிறார் உயில் மூலம் பரம்பரை சொத்து கிடைக்கும். பிள்ளைகளிடம் கவனம் தேவை.
உங்கள் ராசிநாதன் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் சில்லறை வியாபாரம் சிறப்படையும் 9ஆம் திகதிக்குப் பின்னர் தாய் மாமனால் தொல்லை உண்டாகும். சனி நான்காம் இருப்பது வெளியூர் பிரயாணத்தை அதிகரிக்கச் செய்யும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருப்பது ஆண்டு முழுவதும் பண வரவு தாராளமாக இருக்கும். கேது ஆறாமிடத்திலிருப்பது உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
துலாம் : சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வேலை விசயமாக பயணம் செய்வீர்கள். 15ஆம் திகதிக்குப் பின்னர் எட்டாவது வீட்டிற்கு இடம்மாறுவதால் தொழிலில் கவனம் தேவை. செவ்வாய் 4வது வீட்டில் அமர்ந்துள்ளதால் புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் தொல்லை உண்டாகும் 9ஆம் திகதிக்குப் பின்னர் பங்குச் சந்தைகளில் முதலீடுகள் சிறப்படையும்.
குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், மனதில் அமைதி அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6வது வீட்டில் அமர்ந்துள்ளதால் விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் தர வேண்டாம். 15ஆம் திகதிக்குப் பின்னர் பிள்ளைகளால் நன்மை ஏற்படும். சனி மூன்றாமிடத்தில் இருப்பது இடமாற்றத்தைக் கொடுக்கும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருப்பது ஆண்டு முழுவதும் எடுத்த காரியமெல்லாம் வெற்றி பெறச் செய்யும் கேது நான்காமிடத்திலிருப்பதால் வீடு கட்டும் யோகம் ஏற்படும்.
விருச்சிகம் : சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவு உண்டாகும், அதிகாரிகளிடம் விதண்டாவாதம் செய்ய வேண்டாம். 15ஆம் திகதிக்குப் பின்னர் 7வது வீட்டில் அமர்வதால் அடிக்கடி பயணம் செய்வீர்கள். ராசிநாதன் செவ்வாய் மூன்றாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும். சுக்கிரன் தற்போது ஏழாவது வீட்டில் அமர்ந்துள்ளதால் கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும்.
குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில் இருப்பது பொருளாதார சிக்கலைக் கொடுக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருப்பது பரம்பரை சொத்துக்களிலில் வில்லங்கத்தைக் கொடுக்கும் கேது மூன்றாமிடத்திலிருப்பது மன சஞ்சலத்தைக் கொடுக்கும். புற்று கோவில்களுக்கு சென்று வணங்கவும்.
தனுசு : சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். 15ஆம் திகதிக்குப் பின்னர் 6வது வீட்டிற்கு சூரியன் மாறுவதால் அப்பாவுடன் சச்சரவு ஏற்படும். செவ்வாய் இரண்டாவது வீட்டில் இருப்பதால் வீடு மனை, நிலம், மூலம் வருமானம் அதிகரிக்கும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் 9ஆம் திகதிக்குப் பின்னர் பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும்.
குரு பதினொன்றாமிடத்தில் இருப்பதால் பண புழக்கம் சரளமாக இருக்கும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருப்பதால் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருப்பதால் தேவையற்ற மனக் குழப்பம் உண்டாகும் கேது இரண்டாமிடத்திலிருப்பதால் சின்னச் சின்ன சச்சரவு ஏற்படும். அதை தவிர்க்க விநாயகரை வணங்கவும்.
மகரம் : சூரியன் நான்காம் வீட்டில் இருப்பதால் புதிதாக வீடுகட்டுவீர்கள். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். செவ்வாய் ஜென்ம ராசியில் கேது உடன் அமர்கிறார். மனதில் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நல்ல தகவல் கிடைக்கும் 9ஆம் திகதிக்குப் பின்னர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரன் 5வது வீட்டில் இருப்பதால் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.
சனி பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது தொழில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்யும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருப்பது அனைவரிடமும் நல்லுறவை நிலவச் செய்யும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.
கும்பம் : சூரியன் முயற்சி ஸ்தானமான மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைக்காக வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். 15ஆம் திகதிக்குப் பின்னர் 4வது வீட்டிற்கு இடம் மாறுகிறார் தலைமை அலுவகத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். செவ்வாய் 12வது வீட்டில் இருக்கிறார். புதிதாக வீடு மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
9ஆம் திகதிக்குப் பின்னர் புதன் மூன்றாம் வீட்டிற்கு இடம் மாறுவதால் பின்னர் வியாபாரம் விருத்தியடையும். சனி பதினொன்றாமிடத்தில் இருப்பது தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருப்பது இதுவரை பட்ட கடன்களை எல்லாம் திருப்பி கொடுத்துவிடுவீர்கள் கேது பன்னிரெண்டாமிடத்தில் இருப்பது ஆன்மீகத்திற்காக செலவுகளைஅதிகரிக்கச் செய்யும்.
மீனம் : சூரியன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் இருக்கிறார் வருமானம் அதிகரிக்கும், பேச்சில் அனல் பறக்கும். 15ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைக்காக வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை ஏற்படும். செவ்வாய் 11வது வீட்டில் அமர்ந்துள்ளதால் தொழில் வியாபாரத்திர் லாபம் அதிகரிக்கும். புதன் ஜென்ம ராசியில் அமர்ந்துள்ளார். நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும் 9ஆம் தேதி வாக்கு வன்மை அதிகரிக்கும்.
குரு எட்டாமிடத்தில் இருப்பதால் பண வரவு தாமதமாகும். சனி பத்தாமிடத்தில் இருப்பதால் வேலை அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருப்பது பொழுதுபோக்கு விடயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் கேது பதினொன்றாமிடத்தில் இருப்பதால் பல நாட்களாக நினைத்திருந்த எண்ணங்கள் நிறைவேறும். மாரியம்மனை வணங்க மனதில் நினைத்தது நிறைவேறும்.
கடந்த நாட்களில் வெசாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு கொழும்பு நகரம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. புறநகர் பகுதிகளில் இருந்தும் பெருந்தொகையான மக்கள் கொழும்பு நகரை பார்வையிட இரவு வேளையில் வருகை தந்திருந்தனர்.
கொழும்பு காலி முகத்திடலில் இரவு வேளையில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வுகளிலும் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். இவர்களினால் கொழும்பு நகரம் அசிங்கமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
வெசாக் காலப்பகுதியில் இரவு 12 மணி வரை காலி கடற்கரையில் நிறைந்து காணப்படுகிறது. அந்தப் பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்து பலர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் இந்த பகுதியில் சேறும் குப்பைகளை கொட்டுவதற்கு உரிய இடம் ஒன்று இல்லை என கூறப்படுகின்றது. இதனால் கண்ட இடங்களில் பொது மக்கள் குப்பை போடுகின்றமையினால் கொழும்பின் அழகு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் கொழும்பு நகர சபைக்கு புதிதாக தெரிவாகியுள்ள ரோஷி சேனாநாயக்க ஆராய்ந்து பார்ப்பதில்லையா என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தெற்காசிய இளநிலைப் பரிவினருக்கான தடகளத் தொடர் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று சனிக் கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை என்று இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்து தமிழ் வீரர்கள் இருவர் இடம்பிடித்தனர்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் சி.பிரகாஸ்ராஜ் தட்டு எறிதல் போட்டியிலும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியலாயத்தைச் சேர்ந்த கிந்துசன் 5 ஆயிரம், 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளார்.
இந்நிலையில், 3ஆவது தடவையாக நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இம்முறை இலங்கையிலிருந்து 84 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் 44 வீரர்களும், 40 வீராங்கனைகளும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன், நீண்ட இடைவெளியின் பிறகு இம்முறை 4 தமிழ் பேசுகின்ற வீரர்களும் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
5,000 மீற்றரில் வவுனியாவின் கிந்துஷன்
இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஏனைய வீரர்களுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5,000 மீற்றர் மற்றும் 10,000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரட்டை தங்கப் பதக்கங்களை வென்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சிவநாதன் கிந்துஷன் 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற கிந்துஷன், அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் போட்டியை 33 நிமிடங்களும் 56.87 செக்கன்களிலும்,
5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்களும் 56.10 செக்கன்களிலும் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, கனிஸ்ர மெய்வல்லுனர் போட்டித் தொடர் வரலாற்றில் முதற்தடவையாக நெடுந்தூர ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்துக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்த முதல் வீரராக வரலாற்றில் இடம்பிடித்த கிந்துஷன்,
இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியனஷிpப் போட்டித் தொடரின் இறுதி நாளான மே மாதம் 6ஆம் திகதி மாலை நடைபெறவுள்ள ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார்.
தட்டெறிதலில் ஹார்ட்லியின் பிரகாஷ்ராஜ்
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் தட்டெறிதல் மற்றும் சம்மட்டி எறிதல் உள்ளிட்ட எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சிவகுமார் பிகாஷ்ராஜ், 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் (39.73 மீற்றர்) புதிய போட்டி சாதனை படைத்த அவர்,
ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்டு, 42.50 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன்,
தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடருக்கான அடைவுமட்டத்தையும் பூர்த்தி செய்திருந்தார்.
அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வரலாற்றில் யாழ். ஹார்ட்லி கல்லூரிக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவரும், 2013 முதல் அக்கல்லூரியின் எறிதல் நிகழ்ச்சிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்ற ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவரான ஹரிஹரனின் பயிற்றுவிப்பின் கீழ் அண்மைக்காலமாக பல வெற்றிகளைப் பெற்று வருகின்ற பிரகாஷ்ராஜ், எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தட்டெறிதல் போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிடவுள்ளார்.
ஈட்டி எறிதலில் கிழக்கின் உதயவாணி
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலய மாணவி நாகேந்திரம் உதயவானி, 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தமிழ் பேசுகின்ற ஒரேயொரு வீராங்கனையாக இடம்பெற்றுள்ளார்.
அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட உதயவானி, 34.92 மீற்றர் தூரத்தை எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈட்டி எறிதல் போட்டிகளில் 4ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்ட உதயவானி,
முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தின் அனுபவமிக்க பயிற்சியாளரும், திருகோணமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான எஸ். விஜயனீதன் மற்றும் 2007இல் கொழும்பில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான கே.எம் ஹாரிஸின் வழிகாட்டலுடன் கடந்த 6 மாதங்களாக தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்த உதயவானி,
சர்வதேச அரங்கில் தனது முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில், எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கை அணி சார்பாக போட்டியிடவுள்ளார்.
800 மீற்றரில் பதுளையின் அரவிந்தன்
இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் சந்திரகுமார் அரவிந்தன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அவர் குறித்த போட்டியை ஒரு நிமிடமும் 53.46 செக்கன்களில் நிறைவுசெய்து தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான ஆண்களுக்கான 800 மீற்றர் இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
மலையக விளையாட்டுத்துறையில் முன்னிலை பாடசாலையாக வலம்வந்து கொண்டிருக்கின்ற பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி சார்பாக இவ்வாறு சர்வதேச மட்டப் போட்டியொன்றுக்குத் தெரிவாகிய முதல் வீரர் என்ற பெருமையையும் அரவிந்தன் பெற்றுக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டத்தில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அரவிந்தன்,
அன்று முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர், ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் தேசிய இளையோர் விளையாட்டு விழாக்களில் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளார்.
தேசிய மட்டத்தில் 800 மற்றும் 1,500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பெரும்பாலும் தென் பகுதி மற்றும் மத்திய மலைநாட்டு வீரர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
எனினும், கடந்த 3 வருடங்களாக டி.எஸ் விதானரகேவிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற அரவிந்தன், தன்னுடைய அயராத முயற்சி, பெற்றோரின் அர்ப்பணிப்பு மற்றும் பாடசாலையின் ஒத்துழைப்புடன் தன்னுடைய திறமைகளை தேசிய மட்டப் போட்டிகளில் வெளிக்காட்டி முதற்தடவையாக மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பேசுகின்ற ஒரேயொரு வீரராக இம்முறை நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷpப் போட்டித் தொடரில் கலந்துகொள்ளவுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் இன்று இரவு தீ மூட்டப்பட்டதன் காரணமாக அந்தப் பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு 8.00 மணியளவில் முள்ளிவாய்கால் மேற்கு பகுதி பனங்கூடல் ஒன்றிற்குள் திடீரென தீ எரிந்ததாகவும் அதே சமயம் யுத்த வெடிபொருட்கள் சில வெடித்துச் சிதறியதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்ததின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இன்னமும் அகற்றப்படாமல் அங்கங்கே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளில் பலா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியாலயத்தில் வன்னி பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இன்று (04.05) நடைபெற்றது.
வன்னி பிராந்திய சமூதாய பொலிஸ் பிரிவின் திட்டத்திற்கமைய வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களிலுள்ள 22 பொலிஸ் பிரிவுகளில், ஒரு பொலிஸ் பிரிவிற்கு 500 பலா மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 11 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
வன்னி பிரதிபொலிஸ் மா அதிபர் மரக்கன்றினை நாட்டி 15வது பொலிஸ் பிரிவின் நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 50 மரக்கன்றுகளை பாடசாலை மைதானத்தை சூழவும் நாட்டினர்.
இந்நிகழ்வின் மூலம் பாடசாலை மாணவர்களிடம் மரங்களை வளர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பொலிசாரினால் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து 250 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து புவியலாளர்கள் எந்த நேரத்திலும் எரிமலை வெடிக்கலாம் என்று இரண்டு நாட்களுக்குமுன் எச்சரித்திருந்தபடியே Kilauea என்னும் எரிமலை வெடித்தது.
நகரங்களுக்குள்ளேயும் எரிமலைக் குழம்பு பீறிடத்தொடங்கியது. சாலைகளில் விரிசல்கள் விழத்தொடங்கியதையடுத்து எந்நேரமும் எரிமலைக் குழம்பு வெளியேறலாம் என்பதால் 10,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தீவு முழுவதும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சைரன் ஒலிக்கச் செய்யப்பட்டது. தீவுவாசி ஒருவர் 150 அடி உயரத்திற்கு விண்ணில் எரிமலைக் குழம்பை எரிமலை கக்கியதைக் கண்டதாகக் கூறினார்.
பல இடங்களைக் கரும்புகை சூழ்ந்துள்ளது. தற்போது நிலப்பரப்பை உடைத்துக் கொண்டு எரிமலைக் குழம்பு வெளி வரும் காட்சிகளைக் கொண்ட அச்சத்தை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
மற்றொரு வீடியோவில் கார்கள் பயணிக்கும் சாலை ஒன்றில் சாலையின் நடுவே இருந்து எரிமலைக் குழம்பு பீய்ச்சியடித்துக் கொண்டு வெளிவரும் காட்சி பதிவாகியுள்ளது.
வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் தங்குவதற்காக அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் ஒரு அவசர கால முகாம் ஒன்றை அமைத்துள்ளது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நில நடுக்கம் ஒன்றையடுத்து Kilauea எரிமலை வெடித்தது.
தொடர்ந்து சில நாட்களாகவே நில நடுக்கங்கள் ஏற்பட்டு வந்ததைத் தொடர்ந்து நிலவியலாளர்கள் எரிமலை வெடிப்பு ஏற்படும் என்பதை மிகச் சரியாகக் கணித்தனர்.
மேலும் எரிமலை வெடிப்புகள் தொடரலாம் என்பதால் நாளொன்றிற்கு 500 முதல் 2000 பேர் வரை சுற்றுலா வரும் இடமான ஹவாய் தீவுகளுக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தங்கை கணவருடன் சேர்ந்து பேருந்தில் கைவரிசை காட்டிய அக்காவை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை, பூந்தமல்லி, நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயா (38), வடபழனியில் பூ வியாபாரம் செய்து வரும் இவர், நேற்று வழக்கம் போல் பூந்தமல்லியிலிருந்து வடபழனிக்கு மாநகரப் பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது அவரது அருகில் இருந்த பெண் ஒருவர், கைக் குழந்தையுடன் பேருந்தில் உட்கார்ந்து இருந்துள்ளார். குழந்தையை பார்த்தவுடன் விஜயா கெஞ்சிய போது, உடனடியாக அந்த பெண் குழந்தையை அவரிடம் கொடுத்துள்ளார்.
அந்த நேரத்தில் அப்பெண் விஜயா கைப்பையில் வைத்திருந்த 1 சவரன் தங்க நகை மற்றும் 700 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடுவிட்டு அவசர அவசரமாக பேருந்து நின்றவுடன் கீழே இறங்கியுள்ளார்.
இதை அறிந்த அப்பெண் உடனடியாக கூச்சலிட்டதால், அங்கிருந்த பொலிசார் அவரை மடக்கி பிடித்துள்ளனர். அவர் இறங்கிய போது கூடவே மற்றொரு ஆணும் வேகமாக இறங்கியதால், பொலிசார் அவரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களிடம் சோதனை செய்த போது, நகை மற்றும் பணம் போன்றவைகள் இருந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரதி (32) என்பதும் உடன் வந்தவர் அவரது தங்கை கணவர் பிரபாகர் (30) என்பதும் தெரியவந்தது.
ரதி இவ்வாறு குழந்தையுடன் பேருந்தில் பயணம் செய்து, பெண்களின் பர்ஸ் மற்றும் கைப்பையைத் திறந்து, நகைகள் மற்றும் பணத்தைத் திருடி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் பேய் சிறுவர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்ட சகோதரர்கள் இருவரை தற்போது அந்த கிராமத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விசித்திர நோயால் தாக்குண்டு பற்கள் சிதைந்து முகம் அகோரமாக காட்சியளித்த Ashfaq(11) மற்றும் Mushtaq Khan(8) ஆகிய சகோதரர்களை பேய் சிறுவர்கள் என ஒதுக்கி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று இந்த விவகாரத்தில் தலையிட்டு, அந்த கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரமும் மேற்கொண்டது.
இதனையடுத்து குறித்த சிறுவர்களுக்கு ஏற்பட்டது விசித்திர நோய் தான் எனவும் அவர்கள் பேய் சிறுவர்கள் அல்ல எனவும் கிராமத்தினர் புரிந்துகொண்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்களை இதுநாள் வரை ஒதுக்கி வைத்திருந்த கிராம நிர்வாகம் தங்கள் கிராமத்திற்குள் குடியிருக்கவும் அனுமதி அளித்துள்ளது.
தற்போது எஞ்சிய கிராம சிறார்களுடன் அவர்கள் கிராமத்தில் விளையாடுகின்றனர். இதுவரை பயந்து ஒதுங்கிய கிராம மக்கள் தற்போது சிரித்த முகத்துடன் அவர்களை எதிர்கொள்கின்றனர்.
முன்பு பாடசாலையிலும் கிராமத்திலும் கடுமையாக கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளான சகோதரர்கள் தற்போது எஞ்சிய சிறார்களுடம் கல்வி கற்றுக் கொள்ளவும் துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் மகள் நீட் தேர்வு எழுதவேண்டும் என்பதற்காக கேரளா செல்ல வேண்டும் என்பதால், தனது கம்மலை அவரின் தாய் அட்கு வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவதற்கு போதுமான தேர்வு மையம் இல்லாத காரணத்தினால், தமிழக மாணவர்கள் கேரளா மற்றும் கர்நாடகாவில் தேர்வு எழுதுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.
திடீரென்று இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளதால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் எப்படி செல்வது? அதற்கு அதிக பணம் தேவைப்படுமே என்ற கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தாழுத்தாய்குளத்தைச் சேர்ந்தவர் ஹேமா. இவர் தமிழகத்திற்குள்ளே நீட் தேர்வு எழுத இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் தற்போது இவருக்கு கேரளாவில் தேர்வு மையம் கிடைத்துள்ளது. கூலி வேலை செய்யும் இவரது குடும்பத்தினரால் உடனடியாக பணத்தை தயார் செய்ய முடியவில்லை.
இதனால் அவரின் தாயார் கவிதா தனது மகளின் கனவு எப்படியாவது நிறைவேற வேண்டும் என்ற ஆசையில் தனது ஒரே சொத்தான தங்க கம்மலை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்துள்ளார்
பணத்தை ஏற்பாடு செய்தாலும், மொழி தெரியாத மாநிலத்தில் எவ்வாறு தன் மகள் சென்று தேர்வெழுதி திரும்புவார் என்ற அச்சமும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த பெண் மருத்துவர் தனது குருத்தணுவை (stem cell) விசித்தர நோயால் பாதிக்கப்பட்ட இலங்கை சிறுமிக்கு தானமாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்தவர் ஸ்ரீமாலி பாலசூர்யா (6). இவர் இரண்டு மாத குழந்தையாக இருக்கும் போதே thalassemia என்னும் இரத்த அழிவு சோகை நோய் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாலசூர்யாவுக்கு அவர் பெற்றோர் இலங்கை மற்றும் பெங்களூரில் சிகிச்சையளித்து வந்தனர். சிறுமி உடலுக்கு குருத்தணுவை செலுத்தினால் தான் அவரால் ஆரோக்கியமாக வாழ முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த பெண் மருத்துவரான கண்மணி கண்ணன் தனது குருத்தணுவை பாலசூர்யாவுக்கு தானமாக வழங்கிய நிலையில் சிகிச்சைக்கு பின்னர் தற்போது பாலசூர்யா ஆரோக்கியமாக உள்ளார்.
இது சம்மந்தமாக கொச்சியில் உள்ள அமிர்தா இன்ஸ்டிடியூட் ஒப் மெடிக்கல் சயின்ஸ் என்ற மருத்துவ நிறுவனத்தில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. இதில் பாலசூர்யா, அவர் பெற்றோர், கண்மணி மற்றும் இதர மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
எல்லோருமே அங்கு நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அப்போது கண்மணிக்கும், பாலசூர்யாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
கண்மணி கூறுகையில், கடந்த 2013லேயே குருத்தணுவை தானம் செய்வதற்காக பதிவு செய்திருந்தேன்.
கடவுள் சரியான நேரத்தில் இதற்கான நபரை காட்டுவார் என நினைத்திருந்த நேரத்தில் தற்போது அது நிறைவேறியுள்ளது என கூறியுள்ளார்.
களுத்துறை – மத்துகமை வோகன் தோட்டதிற்கு அருகில் இளம் தாயாரான கோவிந்தராஜா ஜெயகலா முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இன்று கலுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
களுத்துறை – மத்துகமை வோகன் தோட்டதிற்கு அருகில் முச்சக்கரவண்டியில் கடத்திச் செல்லப்பட்டு கொலைச்செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இளம் தாயொருவரான கோவிந்தராஜா ஜெயகலா தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்துகமை காவற்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மத்துகமை நகரத்தில் தினசரி வேதனத்திற்கு கடமையாற்றும் 28 வயதுடைய தாயொருவர் வேலையை நிறைவு செய்துக்கொண்டு முச்சக்கரவண்டியொன்றில் வீடு திரும்பியுள்ளார். குறித்த தாய் வழமையாக செல்லும் முச்சக்கரவண்டியிலேயே அன்றும் பயணித்துள்ளார்.
அவர் பயணித்த முச்சக்கரவண்டி மத்துகமை நகரத்தின் காணப்படும் அங்கீகரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி தரிப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும்.
இந்நிலையில் 28 வயதுடைய குறித்த தாயை இறக்கவேண்டிய இடத்தினை தவிர்த்து அவரது வசிப்பிடத்தையும் கடந்து முச்சக்கரவண்டி வேகமாக பயணித்துள்ளது.
தனது பிள்ளைகளை கவனத்திற்கொண்டு தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள குறித்த தாய் முச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் இருந்து பாய்ந்த தாய்க்கு கடுமையாக உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மக்கள் கூச்சலிட்டதினை தொடர்ந்து குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி பிறிதொரு முச்சக்கரவண்டியின் சாரதியின் உதவியுடன் குறித்த இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சுமார் , மூன்று கிலோ மீற்றர் வரையிலான தூரமே மருத்துவமனைக்கு காணப்படுகின்ற போதிலும் படுகாயத்திற்கு உள்ளான தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
உறவினர்களின் கோரிக்கைக்கு இணங்க அயலவர்களின் உதவியுடன் தாயை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் , தாய் மரணமடைந்த நிலையில் வீதியின் கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகாலில் வீசப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் காவற்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் காவற்துறையினர் மெத்தனப்போக்குடன் செயற்பட்டு வருகின்றனர்.
நகரில் அமைந்துள்ள பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் அங்கத்துவர் ஒருவரை இனங்காண்பது கடினமாக உள்ளதா என காவற்துறையினரிடம் உறவினர்கள் கோரியதற்கு காவற்துறையினர் பொருட்படுத்தாது அவர்களை நிந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை மாவட்டத்தின் இந்த இளம் தாயின் மரணத்துடன் ஏற்கனவே இடம்பெற்ற சம்பவங்களை நோக்கினால் இது மூன்றாவது சம்பவமாகும் .
இதுதொடர்பில் , தமிழ் மக்கள் பிரதிநிதிகள் காவற்துறையினரிடம் தொலைப்பேசி வாயிலாக உரையாடியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் , சம்பவ இடத்திற்கு சென்று சம்பவத்தின் பின்னணியில் காணப்படும் அரசியல் காய்நகர்த்தல்களை உடைத்தெறிய இதுவரைக்கும் எவருக்கும் திராணியிருப்பதாக தெரியவில்லை.
ஊடகங்களுக்கு செய்தியறிக்கை வௌியிடும் அரசியல்வாதிகளுக்கு இந்த சம்பவம் தொடர்பில் ஏன் இதுவரை எந்தவொரு கரிசனையும் ஏற்படவில்லை.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 3 மற்றும் 6 வயதுடைய பிள்ளைகளின் 28 வயதான இளம் தாயாவார். இவரின் இறுதிச் சடங்கும் இன்றைய தினம் நடைப்பெறவிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் , குறித்த பெண்ணின் சடலத்தை மத்துகமை நகரின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன் வைத்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது , குறித்த முச்சக்கரவண்டி சாரதிகளை உடனடியாக கைது செய்யுமாறு பிரதேசவாசிகள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் , குறித்த தாய் முச்சக்கரவண்டியில் இருந்து பாயும் காட்சி அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.