உ்த்திரபிரதேச மாநிலத்தில் திருமண மேடையில் வைத்து மணமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லகிம்பூர்கேரி மாவட்டத்தில் ராம்பூர் கிராமத்தில் மண மேடையில் மணமகன் சுனில்வர்மா மணக்கோலத்தில் இருந்தார். அவரது அருகே சுனில் வர்மா-வின் நண்பர் ராம் சந்திரா நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருமண வைபவங்கள் நடந்துகொண்டிருக்கும் போது மணமகனை நோக்கி இரண்டு தடவை சுட்டுள்ளார் ராம் சந்திரா.
முதல் குண்டுக்கு தப்பிய மணமகன் சுனில் வர்மா, இரண்டாவது குண்டுக்கு மேடையிலேயே பலியாகி சாய்ந்து விழுந்தார். இதனையடுத்து ராம் சந்திரா தப்பி ஓடியுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ”பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை செய்யப்பட்டதா ? என ராம்சந்திராவிடம் விசாரணை நடத்திய பின்னர் தான தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் காதலன் தற்கொலை செய்து கொண்ட ஐந்து நாள் கழித்து காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்தவர் ஆகாஷ் (26). இவரும் ஆல்கா (18) என்ற பள்ளி மாணவியும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஆனால் காதலர்களின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் மனவேதனையடைந்த ஆகாஷ் ஐந்து நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆல்கா மிகுந்த கவலையில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் ஆல்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஆல்காவின் சடலத்தை கைப்பற்றியதோடு, அருகிலிருந்த கடிதத்தையும் கைப்பற்றியுள்ளார்கள். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முச்சக்கரவண்டி திருத்தும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்ற 4 இளைஞர்கள் அதனை விபத்தில் சிக்க வைத்து விட்டு தலைமறைவான சம்பவம் நேற்று மட்டக்களப்பு முகத்துவாரத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடியைச் சேர்ந்த முச்சக்கர வண்டிக் காரர் ஒருவர், தனது முச்சக்கர வண்டியை பழுதுபார்ப்பதற்காக முகத்துவாரத்தில் உள்ள முச்சக்கர வண்டி திருத்தும் நிலையத்துக்கு எடுத்து வந்துள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த நான்கு இளைஞர்கள், தங்களிடமுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தைக் காண்பித்து உங்களது முச்சக்கரவண்டியை ஒரு அவசரமான வேலை முடித்துக் கொள்வதற்காக தந்துதவுங்கள் 5 நிமிடத்தில் திரும்பி வந்து விடுகிறோம் என்றுள்ளனர்.
இவர்களது நச்சரிப்புத் தாங்கமுடியாமல் இருந்த உரிமையாளர், வாகனம் திருத்தும் நிலையத்தில் இருந்தவர்களும், அந்த இளைஞர்கள் எங்களுக்குப் பரிச்சயமானவர்கள்தான் என்று கூறியதும், அந்த இளைஞர்களிடம் தனது முச்சக்கர வண்டியை ஒப்படைத்துள்ளார்.
5 நிமிடத்தில் திரும்பி வருவதாகக் கூறிய இளைஞர்கள் ஒரு மணித்தியாலம் கடந்தும் திரும்பி வரவில்லை.
இந்நிலையில், அந்த இளைஞர்கள் எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டி முகத்துவாரம் களப்புப் பகுதியில் குடைசாய்ந்து கிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸாருக்கு அறிவித்து விட்டு அவ்விடத்திற்கு விரைந்த போது, இளைஞர்கள் தப்பித் தலைமறைவாகியிருப்பதும், முச்சக்கர வண்டி களப்பு நீருக்குள் மூழ்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
களப்புக் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடித் தோணிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. தெருவோரங்களில் உள்ள சிசிரீவி கமெராவின் உதவியுடன் இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் மது போதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றிருப்பதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ்க் குடும்பம் தொடர்பில், மெல்போர்ன் நீதிமன்றம் இன்று தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளன. நடேசலிங்கம், பிரியா என்ற குறித்த இலங்கை தம்பதியினரே இவ்வாறு நாடு கடத்தல் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில், அவர்களின் நாடு கடத்தலை எதிர்த்து, ஏதிலிகள் சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில், நடேசலிங்கம், பிரியா தம்பதியினருக்கு ஆதரவாக மஷ்ட்டி நீதிமன்றத்திற்கு வெளியே மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம் நடாத்துவதற்கு தமிழ் ஏதிலிகள் கழகம் முழுமையான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.
இன்று காலை 8 மணியளவில் lagstaff Gardens (Flagstaff station Melbourne) என்ற இடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைத்து தமிழ்மக்களும் கலந்துகொண்டு குறித்த இந்தக்குடும்பத்தினருக்கு ஆதரவாக குரலெழுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் 26 மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தம் காரணமாக முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. பிரேசில், சாப் பாலொவ் நகரில் உள்ள 26 மாடி கட்டடம் ஒன்றிலியே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
26 மாடி கட்டடம் தீப்பற்றிய பின்னர் உடைந்து விழும் திகில் காட்சிகள் சர்வதேச ஊடகங்களினால் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு அதிகாரிகள் 150க்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டு 90 நிமிடங்களுக்குள் இந்த கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாக பிரேசில் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, பம்பலப்பிட்டிய தூய பீட்டர் கல்லூரியில் நடன பயிற்சியல் ஈடுபட்ட யுவதி ஒருவர் மேடையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். வெப்புவ, சிலாபம் வீதியில் வசிக்கும் 26 வயதான திலினி நிராஷா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நடன பயிற்சியின் பின்னர் அந்த குழுவினருடன் இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். நடன பயிற்சிக்கு முன்னர் அந்த குழுவினரின் உணர்வுகளை அதிகரிப்பதற்காக பயிற்சியாளர் வழங்கிய செயற்பாடு பிழைத்தமையே அவர் உயிரிழக்க காரணமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாய்ந்து ஆடும் நடனத்தின் போது மேடையின் உயரமான இடத்தில் பாய்ந்தவர் எதிர்பாராமல் கீழே விழுந்துள்ளார். விழும் போது அவரை யாராலும் பிடிக்க முடியாமல் போயுள்ளது.
சமிக்ஞை வழங்குவதற்கு முன்னரே குறித்த யுவதி அவ்வாறு பாய்ந்தமையினால் அவரை பிடிக்க முடியாமல் போய்விட்டதாக பயிற்றுவிப்பாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். விழுந்தவர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வைல்டு டிராப்டோர் வகை சிலந்தி உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சியாக அறியப்பட்டது. கடந்த 1974 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள வீட் பெல்ட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர் பார்பரபி இதை கொண்டுவந்து ஆய்வகத்தில் வைத்து பராமரித்து வந்தார்.
இந்தநிலையில் அந்த சிலந்திப் பூச்சி தனது 43 வது வயதில் மரணம் அடைந்தது. இத்தகவலை அவுஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக பூச்சியியல் துறை பேராசிரியர் லிண்டா மாசன் தெரிவித்தார். இதற்கு முன்பு மெக்சிகோவில் டிரான்டுலா என்ற சிலந்திப் பூச்சி 22 ஆண்டுகள் உயிருடன் இருந்து சாதனை படைத்தது. அதை இந்த பூச்சி முறியடித்தது.
திம்புலாகல – போகஸ்வெவ வீதியின் அரலகன்வல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (30) மாலை மோட்டர் சைக்கிள் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் மற்றும் பாட்டி பலத்த காயங்களுக்குட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
தந்தையும் பாட்டியும் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் நிலமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மிகவும் பிரபலமாகி இருப்பவர் ஓவியா. இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருக்கிறது. நிகழ்ச்சியில் ஓவியாவுக்கும் அவருடன் கலந்து கொண்ட ஆரவ்-க்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. தன் காதலை ஆரவ் ஏற்காததால், மன அழுத்தம் ஏற்பட்டு நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறினார். இதனால், ஓவியாவின் ரசிகர்கள் ஆரவை திட்டித் தீர்த்தனர்.
சில நாட்கள் மனம் உடைந்த நிலையில் இருந்த ஓவியா பின்னர் சகஜ நிலைக்கு திரும்பினார். அதன் பிறகு ஓவியாவும் ஆரவும் சாதாரணமாக பேசிக் கொண்டனர். அவரைப்பற்றி கருத்து தெரிவித்த ஆரவ், “இந்த உலகில் ஏதாவது ஒரு வகையில் நாம் நடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஓவியா அவராகவே இருக்கிறார். அதனால்தான் அவரை எனக்கும் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது” என்றார்.
இந்த நிலையில் ஓவியா 29 ஆம் திகதி தனது 27வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஆரவ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பிறந்த நாள் வாழ்த்து’ தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த ஓவியா, ‘நன்றி டியர் ஆரவ்’ என்று கூறியுள்ளார்.
இதைப் பார்த்த ஒரு ரசிகர், ‘அப்போ நாங்கதான் முட்டாளா? எப்படியோ நல்லா இருந்தா சந்தோஷம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஓவியா, ‘ரொம்ப சந்தோஷம்’ என்று பதில் அளித்திருக்கிறார். ‘இதன் மூலம் ஓவியாவும் ஆரவும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள் மீண்டும் நெருங்கிவிட்டார்கள். பிரியவில்லை என்பதை உறுதி செய்து விட்டார்கள்’ என்று ஓவியாவின் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புரூஸ் லீயின் தோற்றத்தில் இருக்கும் புரூஸ் சான் என்பவர் தமிழில் ‘புதிய புரூஸ் லீ ’யாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் ஏ.சோனை என்பவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் புதிய புரூஸ் லீ. இந்த படத்தில் புரூஸ் சான், ரஸியா நாயகன் நாயகியாக அறிமுகமாகிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது,‘ நான் புரூஸ் லீயின் தீவிர ரசிகன். இந்த படத்தின் நாயகன் புரூஸ் சான் பார்ப்பதற்கு புரூஸ் லீயைப் போலவே இருந்ததால் அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தினேன். அவரும் கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட்டுகளை வாங்கியிருக்கிறேன் என்று சொன்னதும் சந்தோஷத்துடன் இப்படத்தின் கதையை எழுதினேன்.
நான் புரூஸ் லீயை நேசிப்பதால், படத்தில் அவரைப் போலவே அறிமுக நாயகனை பயன்படுத்தியிருக்கிறேன். சண்டைக்காட்சிகளில் புரூஸ் லீ எப்படி எதிராளியை தாக்குவாரோ அதே போன்ற காட்சிகளை சண்டை பயிற்சி இயக்குநர் திரில் சேகர் செய்து கொடுத்திருக்கிறார்.’ என்றார். இப்படத்தின் முன்னோட்டம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவு தாமரைக்கேணி தக்வாப் பள்ளிக்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் யுவதியொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், சடலமாக மீட்கப்பட்ட யுவதி தாமரைக்கேணி கிராமத்தில் வசிக்கும் 17 வயதானவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, சடலம் ஏறாவூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுவதி தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவருகின்றனர்.
திருகோணமலை – மூதூர் ஜின்னா நகரில் உள்ள அரபிக் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மீது அதிபரும், அக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொடுக்கும் மௌலவி ஒருவரும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவர் கிண்ணியா தள வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் தொடர்பாக மூதூர் பொலிஸார் நேற்று (30) திங்கட்கிழமை மாலை கிண்ணியா வைத்திய சாலைக்கு நேரில் வருகை தந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். கிண்ணியா பெரியாற்று முனை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய அமீன் – முகம்மது பாசீத் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாணவனின் கன்னத்தில் அதிபர் அரைந்ததாகவும், மௌலவி ஒருவர் பனை மட்டையால் தாக்கியதாகவும், இச் சந்தர்ப்பத்தில் மாணவர் கீழே விழவும் அம் மாணவன் மீது ஏறி மிதித்து தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
குறித்த மாணவனில் உடம்பில் 29 இடங்களில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குருநாகல், வந்துராகல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானதில் 25 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே குருநாகல் பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புத்தளத்தில் எரிந்த நிலையில் தமிழ் வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – உடப்புவ – கிரியன்கள்ளி பிரதேசத்தின் பாழடைந்த இடத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. 34 வயதான பெரியவெள்ளையன் ஆறுமுகம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து அந்தப் பகுதியில் மோட்டார் வாகனத்திற்கான மேலதிக பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்த நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எப்படியிருப்பினும் நேற்று கிடைத்த தகவல்களுக்கமைய இந்த நபரின் சடலம் கிரியன்கள்ளி பிரதேசத்தில் உள்ள பாழடைந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திற்கு அருகில் பணப்பை ஒன்றும் கிடைத்துள்ள நிலையில் அதில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடன் செலுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக தான் மன வருத்தத்தில் இருப்பதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அவரது வீட்டில் அதேபோன்று இன்னுமொரு கடிதம் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக கிளையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் யாழ். மேல் நீதிமன்றின் நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நியமிக்கப்பட்ட பின்னரே யாழ். மாவட்டம் ஓரளவு அமைதியான சூழலில் காணப்படுகின்றது.
பல்வேறு அதிரடி தீர்ப்புக்கள், உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான ஆக்கபூர்வமான சந்திப்புக்கள், தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றுவதென்பது எந்தவொரு நீதிபதியும் இதுவரை ஆற்றியிராத செயற்பாடுகள்.
இவையனைத்தையும், உயிர் அச்சுறுத்தல்களின் மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் ஆற்றிவருகின்ற நிலையில் மூன்று வருட நிறைவின் காரணத்தை மாத்திரம் கணித்து இடமாற்றம் வழங்குவதென்பது ஒட்டுமொத்த யாழ். மக்களின் தலையில் நெருப்பு வைப்பது போன்றது.
அனைத்து சமூக, பொது அமைப்புக்களும் மேற்படி இடமாற்றத்தினை இரத்துச் செய்து மீண்டும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியனே செயற்படவேண்டுமென்று கோரிக்கைகைளை முன்வைப்பது காலத்தின் கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.