புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் இன்று (01.05.2018) காலை 9.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியூடாக ஏ9 வீதியினை வந்தடைந்து நகரசபை வீதியூடாக வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தினை வந்தடைந்தது.
இவ் ஊர்வலத்தின் போது கல்வியை விற்பனைப் பண்டம் ஆக்காதே, சைட்டம் வேண்டாம், மக்களின் நிலங்களிருந்து இராணுவமே வெளியேறு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறை என பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் பேரணியாக சென்றனர். அதன் பின்னர் கலாச்சார மண்டபத்தில் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சோ.தேவராஜா, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் பூ.சந்திரபத்மன், வீதி பராமரிப்பு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் க.மகேந்திரன்,
இலங்கை தேசிய பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா இணைப்பாளர் ஆர்.சித்திரன், அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உபதலைவர் செ.மதுரகன், மூத்த தொழிச்சங்கவாதி ஹென்றி மகேந்திரன், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக செ.நந்தமோகன், தேசிய கலை இலக்கிய பேரவை சார்பாக எஸ்.டொன்போஸ்கோ ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் காணப்படும் வீதிகள் புனரமைப்பதற்கு அக்கிராம மக்களாலும் கிராம வெளிச்சம் சனசமூக நிலைய நிர்வாகிகளாலும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம்(ரவி) அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தவிசாளர் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் இணைந்து குறித்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் உள்ள குறிப்பிட்ட தூர வீதியை தார் இட்டு செப்பனிடுவதற்கு மாத்திரமே நிதி போதுமாக இருப்பதனால் அனைத்து வீதிகளையும் புனரமைப்பதற்கு மக்கள் கோரிக்கை விடுத்திருப்பதனால் அனைத்து வீதிகளையும் குறித்த பணத்தை வைத்து கிரவல் இட்டு செப்பனிட்டு தருவதாக தவிசாளரால் உறுதியளிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தகேணிக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு கடந்த 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் ஏராளமான அம்பாளின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே நேற்றைய தினம் பேரூந்திலிருந்து கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பேரூந்தில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில் 1கிலோ 820 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும் சந்தேகநபர் எவரையும் பொலிஸார் இது வரை கைது செய்யவில்லை
கேரள கஞ்சாவினை பேரூந்தில் வைத்த நபர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகபொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரிக்கு அருகே காணப்படும் தபால் பெட்டியில் உள்ள தபால்கள் கடந்த சில நாட்களாக வீதியில் சிதறி காணப்படுவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த தபால் பெட்டில் 20க்கு மேற்பட்ட கடிதங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவைகள் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக தபால் ஊழியர்களினால் எடுத்துச் செல்லாமையினால் அவைகள் வீதியில் சிதறி காணப்படுகின்றன.
இவ்வாறான தபால் ஊழியர்களின் அசமந்தப் போக்கினால் பல பாடசாலை மாணவர்கள், வேலை தேடுபவர்களின் விண்ணப்ப படிவங்கள் உரிய திகதிக்கு உரிய இடங்களுக்கு செல்வதில்லை. இதனால் கடிதங்களை அத் தபால் பெட்டியில் போட்டவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மேலும் அத் தபால் பெட்டி உக்கிய நிலையில் பூட்டுகள் எவையும் அற்று பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 26 வருடங்களின் பின்னர் உயிரிழந்த தாயின் சடலத்தை பெற்றுக்கொள்ள மகன் ஒருவர் வந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறு வயதில் விட்டு சென்ற மகன் ஒருவர் 26 வருடங்களின் பின்னர் தாயின் சடலத்தை பெற்றுக் கொள்ள நிக்கவரெட்டிய வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.
நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த 55 வயதான எஸ்.எம்.பண்டார மெனிகா என்ற தாயின் மரண விசாரணையின் பின்னர் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த மகன் உயிரிழந்துள்ள தாய் தொடர்பில் தனக்கு நினைவில்லை எனவும், தன்னை வளர்த்த தாய் அவுலேகம பிரதேசத்தில் வாழ்வதாக மகன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சகோதரி சாட்சி வழங்கும் போதே உண்மை தகவல் வெளியாகியுள்ளது. அவரது சாட்சிக்கமைய, உயிரிழந்திருப்பது எனது சகோதரி ஆகும், அவர் 30 வருடங்களுக்கு முன்னர் நிக்கவரரெட்டிய பிரதேசத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமண வாழ்க்கையில் அவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்தது. எனினும் அவரது கணவர் மற்றும் மகன் தாயை கைவிட்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் தனது மகளுடன் இன்னும் ஒருவரை சகோதரி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தங்தையின் முதல் கணவர் தனது 3 வயது மகனை நீர் வற்றிய கிணற்றில் விட்டு சென்றுள்ளார். அவரை வேறு ஒரு பெண் எடுத்து வளர்த்தார். அந்த குடும்பத்திற்கு என்ன நடந்ததென தெரியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் மகன் யார் என்பது தொடர்பில் உறுதியாகியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிகரட் ஒரு தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க பிரிவு அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 33,000 சிகரட்டுக்களை சுங்க பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன் சந்தை பெறுமதி 16 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய ஊருமீய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ்க் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அங்கு அமைதிப் பேரணி நடத்தப்படுகிறது. இரண்டு குழந்தைகள் சகிதம் உள்ள இலங்கையின் தமிழ் குடும்பமே நாடு கடத்தலை எதிர்நோக்கி உள்ளது.
இதனை எதிர்த்து அவுஸ்திரேலியா பென்டிகோவில் உள்ள ஹர்கிரேவெஸ் என்ற இடத்தில் இந்த அமைதிப்பேரணி இன்று நடத்தப்படுவதாக பென்டிகோ எட்வைசர் ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த பேரணியின் மூலம் நாடு கடத்தலை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையின் தமிழ் குடும்பத்துக்கு தமது ஆதரவு வெளிப்படுத்தப்படும் என்று பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போர் காரணமாக, இலங்கை குடும்பத்தினர் புலம்பெயர்ந்து குயின்ஸ்லேன்ட் பிலோலவில் குடியேறினர். எனினும் வீசா முடிவடைந்த நிலையில் அவர்கள் நாடு கடத்தலுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
இதனையடுத்து அவர்களை நாடு கடத்த வேண்டாம் என்றுக்கோரி 96 ஆயிரத்து 700 உள்ளுர் மக்கள் தமது கையொப்பங்களுடன் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நூற்றுக்கு 10 வீத உடனடி பேருந்து கட்டண அதிகரிப்பு ஒன்று அத்தியாவசியமாக உள்ளதென சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ரூபாயின் வீழ்ச்சி காரணமாக பேருந்து துறையை முன்னெடுப்பதில் பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேருந்து இறக்குமதி மற்றும் மேலதிக பகுதி கொள்வனவு விலைகள் அதிகரிக்கும் என்பதனால் பேருந்து தொழில் துறைக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ரூபாய் வீழ்ச்சிக்கு மத்தியில் பேருந்து இறக்குமதியின் போது செலவிடப்படும் பணம் 2 லட்சம் ரூபாயை விடவும் அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய ஜுலை மாதம் முதலாம் தினம் மேற்கொள்ளப்படவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் போது நூற்றுக்கு 10 வீத அதிகரிப்பு ஒன்று அத்தியாவசியம் என கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பேருந்து கட்டணத்தின் பெறுமதியும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் தந்தையின் விபரீத முடிவினால் மகன், மகள் உட்பட அவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளார். இந்த அனர்த்தம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
35 வயதான தந்தை தனது 10 வயதுடைய மகன் மற்றும் 7 வயதுடைய மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விஷம் அருந்தியமையினால் ஆபத்தான நிலையில் உள்ள குறித்த மூவரும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனை பிரித்து தாய் வாழ்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் விஷமருந்தியமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வவுனியாவில் பெண்குரலில் பல ஆண்களுடன் தொலைபேசி, சமூகவலைத்தளங்களில் உரையாடி பண மோசடியில் ஈடுபட்ட நபரிடம் வவுனியா பொலிஸார் நேற்று(30.04.2018) விசாரணைகளை மேற்கொண்டனர்.
ஈழத்து நடிகையான திவ்யாவின் புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி தான் திவ்யா என தெரிவித்து பல ஆண்களுடன் பெண் குரலில் உரையாடி பல லட்சம் ரூபா பண மோசடி மேற்கொண்ட நபரிடம் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திவ்யாவின் குடும்பத்தாரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு இணங்க விசாரணைகளை மேற்கொண்ட சமயத்திலியே இவரை பொலிஸார் விசாரணைக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இதன் போது நான் தான் திவ்யாவின் புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி பல ஆண்களுடன் கதைத்தாக குற்றத்தினை ஒத்துக்கொண்டுள்ளார்.
இவர் மூன்று வருடங்களாக இம் முகநூலை பாவித்துள்ளமையும் பல ஆண்களுடன் வீடியோ மூலம் கதைத்த ஆதாரங்களை முகநூலில் வெளியிடுவேன் என கதைத்துள்ள ஆதாரங்கள் அவரின் தொலைபேசியில் இருந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனின் நலனை கருத்தில் கொண்டும் குற்றத்தினை ஒப்பு கொண்டுதாலும் இவரை மன்னித்து இரு தரப்பினரின் சம்மதத்துடன் பொலிஸார் விடுதலை செய்துள்ளனர்.
வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலமும் கூட்டமும் நாளை 1ம் திகதி நடைபெறும் என அக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் நி.பிரதீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கட்சியின் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது..
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மே 01 ஆம் திகதியே புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி மேதினத்தை நடாத்தும். இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் அன்றாட பாவனைப் பொருட்களினதும் தொடர் விலை அதிகரிப்புகளினாலும், உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவின் பாதிப்புகளாலும் நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் கடன் தொல்லைகளாலும், அரசாங்கத்தின் வரி விதிப்புகளாலும் மக்களின் மீதான சுமை எல்லையற்று அதிகரித்துச் செல்கின்றது. இவற்றுக்கு மூன்று வருடங்களைக் கடந்தும் மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமானது எவ்வித தீர்வையோ, பரிகாரத்தையோ இதுவரை முன்வைக்கவில்லை.
அதற்கான அடிப்படைக் காரணம் தாராள இறக்குமதியும், தனியார்மயமாக்கலும், நுகர்வுச் சந்தைக்காக நாட்டின் கதவுகள் அகலத் திறந்து விடப்பட்டமையுமே ஆகும். இது நவகாலணிய, நவதாராள, உலகமயமாதல் பொருளாதார முறையின் பிரதிபலிப்பாகும்.
இவற்றால் பயனடைவோர் இந்நாட்டின் சாதாரண உழைக்கும் மக்கள் அல்லர். மாறாக அந்நிய இராட்சதப் பல்தேசியக் கம்பனிகளும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளுமேயாவார். இத்தகைய முதலாளித்துவக் கட்டமைப்பைப் பேணிப் பாதுகாப்பதில் கடந்த நாற்பது வருடங்களில் இரண்டு பிரதான ஆளும் வர்க்கக் கட்சிகளும், அவற்றின் தலைமைகளும் சிங்கள பௌத்தப் பேரினவாதப் போர்வையுடன் போட்டி போட்டு ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாத்து முன்னெடுத்துவந்துள்ளன.
அன்று ஜே.ஆர். ஆரம்பித்து வைத்த மோசமான இத் தாரளமய பொருளாதார முறையின் நாசகாரப் பயணத்தை இன்றைய மைத்திரி – ரணில் தலைமையிலான ஆளும் வர்க்கத்தினர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர்.
தவறானதும், நாட்டுக்கும் மக்களுக்கும் அழிவுகளைத் தந்துகொண்டிருப்பதுமான இன்றைய நவதாராளப் பொருளாதாரக் கொள்கையும் நடைமுறைகளும் தடுத்து நிறுத்தப்படாதுவிட்டால், மக்கள் எவ்வகையிலும் விமோசனம் அடையமுடியாத நிலை ஏற்படும். இதனை அனைவரும் அரசியல் பொருனாதார அடிப்படையில் உணர்ந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
அதனாலேயே எமது கட்சி எதிர்வரும் உலகத் தொழிலாளர்களின் சர்வதேச போராட்ட தினமான மேதினத்தில் உழைக்கும் மக்களின் அதிகாரத்தை வென்றெடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுத்துநிற்கின்றது.
அதேவேளை பௌத்த தினமான வெசாக் தினத்தையும், அதற்கான கொண்டாட்டங்களையும் சாட்டாக வைத்துச் சர்வதேச தொழிலாளர் தினத்தை ஏழாம் திகதிக்கு அரசாங்கம் மாற்றியிருப்பதை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, மே முதலாம் திகதி உலக அளவில் நிகழ்த்தப்படுகின்ற சர்வதேச தொழிலாளர் தினம் அதே நாளிலேயே இலங்கையிலும் இடம்பெற வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகின்றது.
இவ்வாறு கட்சிகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்களுடன் இடம்பெற்ற மேதின தயாரிப்புக்கான சந்திப்பில் உரையாற்றிய புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்திவேல் அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில்,
இன்றைய ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும், எதிர்த்தரப்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும் கடுமையான அரசியல் மோதலில் களமிறங்கி நிற்கிறார்கள். இவர்களுடைய மோதல் நாட்டையும் மக்களையும் சூழ்ந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இடம்பெறவில்லை.
மாறாக, தரகு முதலாளிய உயர் வர்க்க ஆட்சி அதிகாரத்தைத் தமது பிடிக்குள் வைத்து, அந்நிய மூலதனங்களுக்கும், உள்நாட்டில் தமது கூட்டாளிகளுக்கும் சேவை செய்வதற்கேயாகும்.
இதனாலேயே நாட்டின் மகா திருடர்களும், கள்வர்களும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் பெயரால் பதவிகளில் தொடர்ந்து வருகிறார்கள். மக்கள் எதிர்பார்ப்பதுபோன்று இவர்களில் எவரும் கடந்த காலங்களில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் குற்றங்களுக்காக முறையாக விசாரிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ மாட்டார்கள் என்பதையே இதுவரையான நிகழ்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன.
ஏனெனில், உயர்வர்க்க மேட்டுக்குடி அரசியலில் இவர்கள் அனைவரும் அண்ணன் தம்பிகளாகவே இருந்துவருகின்றனர். இவ்வாறே, சிறுபான்மைத் தேசிய இனங்களான, வடக்குக் கிழக்குத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லீம்கள் மத்தியிலான அரசியலிலும் பதவிகள் மூலமான ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் தமதாக்கிக்கொள்வதிலேயே அங்குள்ள முதலாளித்துவ அரசியல் சக்திகள் முனைப்புக் காட்டி நிற்கின்றன.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களிலும், சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றும் செயற்பாடுகளிலும் இது வெளிப்பட்டுநின்றமையைக் காணமுடிந்தது.
வடக்குக் கிழக்கு, மலையக, முஸ்லீம் அரசியல் தலைமைகளின் உயர் வர்க்க, மேட்டுக்குடி, பிற்போக்கு, ஆதிக்க அரசியல் போக்கிற்கு அது சிறந்த சாட்சியாக அமைந்தது.
எனவே, உழைக்கும் மக்கள் இவ் அரசியல் பிளைப்புவாதச் சக்திகளை நிராகரித்து, உழைக்கும் மக்களின் அதிகாரத்தை வென்றெடுக்க, எதிர்வரும் மே 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் புத்தூரிலும், வன்னியில் வவுனியா நகரத்திலும், மலையகத்தில் இராகலையிலும் இடம்பெறவுள்ள மேதின பேரணிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் அனைவரையும் அணிதிரளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி அறைகூவல் விடுக்கின்றது. எனவும் குறிப்பிட்டார்.
வவுனியாவில் தேசிய கட்சிகளுக்கு எதிராக தமிழ் கட்சிகளாக சேர்ந்து ஆட்சியமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவை பேசினோம். அவர் ஒத்துப்போக மறுத்து விட்டார். இதுவே சில சபைகளை கூட்டமைப்பு இழக்க காரணம் என வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வன்னியின் சில பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளில் வேறு கட்சிகள் ஆட்சி அமைந்திருக்கின்றன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் நடைபெற்ற தேர்தல் முறை வித்தியாசமான பல பாதிப்புக்களை ஏற்படுத்திய முறையாக இருந்தாலும் கூட, நாம் அரசியல் கட்சியாக இருந்தவர்கள் பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்றதால் வவுனியா உட்பட வட மாகாணத்திலே தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலை வந்திருக்கின்றது.
வவுனியாவில் தேர்தல் முறையால் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த வரையில் வவுனியாவில் 4 சபைகளிலும் மிகக்கூடிய ஆசனங்களை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.
உதாரணமாக வவுனியா நகரசபையில் 10 இல் 7வட்டாரங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று 8 ஆசனங்களை தனதாக்கி கொண்டது. வவுனியா தெற்கு பிரதேச சபையும் அதே போன்றுதான் 13 வட்டாரத்தில் 11 வட்டாரங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது.
யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின் காலப்பகுதியிலேயே பெருந்தொகையான சிங்கள மக்களை கொண்டு வந்து வவுனியா வடக்கில் குடியேற்றினார்கள். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு மக்களில்லாத பகுதிகளுக்கு யானை வேலிகள் அமைத்து குடியேற்றவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றது.
வந்து குடியேறியவர்களின் கையில் வவுனியா வடக்கின் ஆட்சி போகவேண்டிய நிலை இருந்தது. தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 வட்டாரங்களிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி 1 வட்டாரத்திலும் வெற்றி பெற்றது.
எமக்குள்ளே என்னதான் பிரிவு இருந்தாலும் தமிழ்பேசுகின்றவர்கள் என்ற வகையிலும் தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்கள் என்ற வகையிலும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கலாம் என்ற வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம்.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழர் விடுதலைக் கூட்டனி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய 3ம் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை காணப்பட்டது.
சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவைகள் பேசியிருந்தோம். கடைசிவரை ஒத்துப்போக முடியாதென்று கூறிவிட்டார். அவர் ஆம் என்றிருந்தால் 4 சபைகளும் எம்மிடம் இருந்திருக்கும். ஆனால் நகரசபையில் 10 வட்டாரங்களில் 07 வட்டாரங்களில் வெற்றிபெற்ற நாம் எதிர்க்கட்சியாக இருக்கின்றோம்.
இதற்கு ஒத்துழைப்பு வழங்காததன் விளைவே தேசிய கட்சிகள் ஆட்சியமைப்பதற்கும், அவர்களது ஆதரவுடன் ஆட்சி போனமைக்கும் காரணம் என்றார்.
கனடாவின் தொடர் கொலையாளியால் கொல்லப்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நேற்றைய தினம் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தனது நண்பன் கிருஷ்ணகுமார் கனகரட்ணத்தின் மரணம் தொடர்பில் அவரது நண்பர் கோபி பத்மநாதன் கருத்து வெளியிட்டிருந்தார்.
இறுதியாக காணாமல் போன நேரத்தில் கிருஷ்ணகுமார் Kennedy, Ellesmere பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறும் போது கோபி அவரை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். கடந்த 15 வருடங்களாக கோபி மற்றும் கிருஷ்ணகுமார் நண்பர்களாக இருந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் இருந்தே அவர்களின் நட்பு தொடர்ந்துள்ளது. அதே போல் இருவரும் 2010ஆம் ஆண்டு MV Sun கப்பல் மூலம் தாய்லாந்து வழியாக கனடாவை சென்றடைந்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு நாடு கடத்தலை எதிர்கொள்ளவிருந்த கிருஷ்ணகுமார் அதிலிருந்து தப்புவதற்கு முயற்சித்துள்ளார். அவரது பணி அனுமதி காலாவதியானது, அவரது அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டது மற்றும் மேல்முறையீடு மறுக்கப்பட்டு விட்டது. இதனால் அவர் தலைமறைவாக இருக்க முயற்சித்தார்.
இதனால் அறையை விட்டு செல்ல முயற்சித்தவரை கோபி தடுக்கவில்லை. தனது நண்பர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கோபி கடவுளை வேண்டி கொண்டுள்ளார்.
அதன் பின்னர் இரண்டு மாதங்களில் கிருஷ்ணகுமாருடான தொடர்புடைய நண்பரை டொரொன்டோவில் கோபி சந்தித்துள்ளார். கிருஷ்ணகுமார், தாடி மற்றும் முடியை நீளமாக வளர்த்துள்ளார் என நண்பர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னரே அவர் Buce McArthur என்பவரினால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், கொல்லப்பட்டவரின் சடலம் தோட்டம் ஒன்றில் புகைப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். Buce McArthur 8 கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளார்.
இதேவேளை MV Sun கப்பல் மூலம் கனடா சென்ற மற்றுமொரு பயணியான சுகந்தன் மகாதேவன் கருத்து வெளியடுகையில், தனது நண்பர் கிருஷ்ணகுமார் எங்காவது மறைந்திருப்பார் என்றே எண்ணினேன் என குறிப்பிட்டுள்ளார்.
“அவர் உயிரிழந்திருப்பார் என நாம் எதிர்பார்க்கவில்லை என சுகந்தன் மகாதேவன் மைத்துன் சுதர்ஷன் தணியாசலம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகுமார் மிகவும் மகிழ்ச்சியான ஒருவராகும். நன்கு பேச கூடிய ஒருவராகும். அவரது அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதன் பின்னர் தொலைபேசி பாவனையை நிறுத்தி விட்டார் என தனிகாசலம் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் தொடர் கொலையாளியான Buce McArthur என்பவரினால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முச்சக்கர வண்டிகளின் பயண கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
150 க்கு அதிகமாக ஒரு லீற்றர் பெற்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டால் முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய தான் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். சாதாரண மாற்றம் தொடர்பில் தாம் கட்டணங்களை அதிகரிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 150 ரூபாவை விடவும் அதிகரித்தால் இது தொடர்பில் அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாக கூறி நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தினை மூடும் அபாயாக்கள் அணிவதை முற்றாக தடை செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் அபாயா ஆடை அணிந்து வருவதற்கு பாடசாலை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அப்பிரதேசத்தில் இரண்டு சமூக மக்கள் மத்தியிலும் விரோதங்கள் ஏற்பட்டுள்ளன.
முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவ, மாணவிகளுக்கு முஸ்லிம் முறைப்படி சீருடைகளை அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இவைகள் ஒரு இனத்தின் தேசிய கலாச்சாரத்திற்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது.
நீதிமன்றங்களில் தொப்பி, மற்றும் முகத்தினை மூடும் ஆடைகளை அணியக் கூடாது என்ற பொதுவான சட்டம் தேசிய பொது பாதுகாப்பு நலன் கருதி காணப்படுகின்றது.
ஆனால் இவர்கள் தமது சமய கோட்பாடுகளை மதிப்பதாக கூறி தேசிய சட்டங்களை அவமதிக்கின்றனர். இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
வட கிழக்கு பாடசாலைகளில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் மாணவர்கள் முஸ்லிம் மாணவர்களை போன்று ஆடை அணிய வேண்டும் என்ற முறைமை காணப்படுகின்றது.
இதற்கு எதிராக தமிழ் மக்கள் இதுவரை காலமும் எவ்வித பிரச்சினைகளையும் தோற்றுவிக்கவில்லை. தேசிய அரசாங்கம் இந்த சமூக பிரச்சினைக்கு விரையில் சிறந்த தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.