யாழ். சிறைச்சாலை வாகனத்தின் மீது சற்றுமுன் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் யாழ். நகரில் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த உத்தியோகத்தர் தற்போது சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் அடையாளம் தெரியாத இளைஞர் அணியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட இளம்பெண் விமானியின் பிடிவாதத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் 25 வயதான பிரிட்டானி ஆஸ்வெல் தமது கணவர் கோரியுடன் இணைந்து தென் கரோலினா பகுதிக்கு தனியார் விமான சேவை நிறுவந்த்தின் விமானம் ஒன்றில் சென்றுள்ளனர். விமானம் பறந்து கொண்டிருந்தபோது பிரிட்டானி ஆஸ்வெலுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. கூடவே சுய நினைவை இழந்தது போன்று பேச்சில் தடுமாற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானத்தில் இருந்த மருத்துவர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார் ஆஸ்வெலின் கணவர் கோரி. மருத்துவர் அளித்த முதலுதவிக்கு பின்னர் கழிவறை சென்ற ஆஸ்வெல், கழிவறையிலேயே வாந்தி எடுத்துவிட்டு அங்கேயே சுயநினைவை இழந்து விழுந்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர் உடனடியாக மருத்துவமனையில் அவரை சேர்ப்பிக்க வேண்டும் என விமானியிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் விமானி, வேறொரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றதுடன், விமானத்தை திருப்பி விட மறுப்பு தெரிவித்துள்ளார்.
நீண்ட 3 மணி நேர விமான பயணத்திற்கு பின்னர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட ஆஸ்வெல், தொடர்ந்து 3 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார்.
பின்னர் நினைவு திரும்பாமலே மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளார். விமான மருத்துவரின் அறிவுரைப்படி குறித்த விமானத்தை உடனையே தரை இறக்கி இருந்தால் தங்களது உறவினரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
2016 ஏப்ரல் மாதம் நடந்த இச்சம்பவத்தை அடுத்து பிரிட்டானி ஆஸ்வெல் உயிரிழந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது பெற்றோர் தனியார் விமான நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளதுடன் இழப்பீடும் கோரியுள்ளனர்.
தென் கொரியாவில் இன்று நடைபெறும் வட மற்றும் தென் கொரிய ஜனாதிபதிகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டுக்கு வட கொரிய ஜனாதிபதி உயர் பாதுகாப்புகளுடன் கூடிய பிரத்யேக கழிப்பறையையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் நடைபெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட கொரியா, தென் கொரியா தலைவர்கள் இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், 65 ஆண்டு கால பகையை மறந்து முதல் முறையாக தென்கொரியாவுக்குச் சென்றுள்ளார்.
இரு நாடுகளின் எல்லையையொட்டி தென்கொரிய பகுதியில் உள்ள பன்முஞ்சோமில் நடைபெற்ற இந்த மாநாட்டின் துவக்கத்தில் இரு நாட்டு தலைவர்களும் ஒருவரையொருவர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் புதிய தொடக்கமாக அமைந்தது, கொரிய போர் முடிந்த பின்னர் வடகொரிய தலைவர் ஒருவர் தென்கொரியாவுக்கு சென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடததக்கது.
வட கொரியாவின் ராணுவ கட்டளைப் பிரிவில் பணியாற்றிய Lee Yun-keol இது குறித்து ஊடகங்களிடம் பேசிய போது, வட கொரிய ஜனாதிபதி பொதுவாகவே சாதாரண கழிப்பறையை உபயோகிக்கமாட்டார், காரணாம் அவரது ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கம் ஆகும்.
சாதாரண கழிப்பறையை கிம் ஜாங் பயன்படுத்தினால் அவரது கழிவின் மூலம் தற்போதைய உடல்நிலை மற்றும் அவரது மருத்துவ ரகசியங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகிவிடும் வாய்ப்புள்ளது.
எனவே கிம் ஜாங் உடல்நிலை குறித்த ரகசியங்களை பாதுகாக்க இந்த பிரத்யேக கழிப்பறையை கிம் ஜாங் பயன்படுத்துவதாக Lee Yun-keol கூறுகிறார். மேலும் கிம் பயன்படுத்தும் அந்த கழிப்பறை எப்போதும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்புடன் தான் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வட கொரியாவில் கிம் பயணம் செய்யும் போதும் இராணுவ தளங்கள், அரசு நடத்தும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களிலும் கிம் ஜாங் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பறை அமைக்கப்பட்டு ராணுவ வீரர்களால் பாதுகாக்கப்படும்.
நீண்ட பயணங்களுக்கு கிம் பயன்படுத்தும் தனிப்பட்ட ரயிலில் மட்டுமல்லாமல் அவரது சிறிய அல்லது நடுத்தர கார்களிலும் கூட நவீன கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கென உயர் பாதுகாப்புகளுடன் கூடிய நவீன கழிப்பறையை கிம் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருப்பதால் கிம் ஜாங் இன்று தென் கொரியா செல்லும் போதும் அவருடைய பிரத்யேக கழிப்பறையை நிச்சயம் உடன் எடுத்து சென்றிருப்பார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
லண்டனில் டியூப் சேவை ரயிலில் அடிபட்டு விபத்தில் சிக்கியவரின் உடலை மீட்கஅதிகாரிகள் 14 மணி நேரம் தாமதித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகளின் அசண்டையீனத்தால் குறித்த நபரின் உடல் மீது சுமார் 300 ரயில்கள் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று காலை சுமார் 11.30 மணியளவில் ரயில் ஒன்று தானாகவே நின்றுபோயுள்ளது. இதனையடுத்து அந்த பகுதி மேலாளர் ஒருவர் விசாரணைக்காக சென்றுள்ளார்.
அப்போது ரயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் நரி ஒன்றின் மிச்சம் மீதிகள் கிடப்பதாக அவர் கருதியுள்ளார். இதனையடுத்து ரயில் சேவையை நள்ளிரவு 1.42 மணி வரை மேற்கொள்ளவும் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து பல மணி நேரத்திற்கு பின்னர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் ஷூ உடன் சிதைந்த கால் ஒன்றை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் சிதைந்து உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது நரிஅல்ல என்பதும் அது மனித உடலில் மிச்சம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராக்களை சோதனையிட்ட பொலிசார், Holborn பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் நபர் ஒருவர் நுழைவதை கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பிட்ட ரயில் தடத்தில் மணிக்கு 26 ரயில்கள் கடந்து செல்வதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான நபரின் உடல் சுமார் 14 மணி நேரம் மீட்கப்படாமலே கிடந்துள்ளது. இதனால் சுமார் 300 ரயில்கள் அந்த நபரின் உடல் மீது ஏறி இறங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டு காலகட்டத்தில் லண்டன் சுரங்க ரயிலில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 15 என கூறப்படுகிறது.
கடந்த 2010 ஆம் அண்டு முதல் கணக்கிடுகையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 92 என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் தற்கொலை செய்து கொண்டவர் Maidstone பகுதியில் குடியிருக்கும் 47 வயது நபர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் பாடசாலை ஒன்றில் புகுந்த மர்ம நபர் அங்குள்ள சிறார்கள் மீது வாளால் தாக்கியதில் 7 சிறார்கள் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தில் 12 சிறார்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் மிழி நகரில் அமைந்துள்ள நடுநிலைப் பள்ளியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 6.10 மணியளவில் பாடசாலைக்கு வெளியே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாடசாலையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பும் சிறார்கள் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த சிறார்களை மீட்டு முதலுதவிக்கு பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பாடசாலை அருகே நின்றிருந்த குறித்த நபர் திடீரென்று மறைத்து வைத்திருந்த வாளை உருவி பாடசாலை சிறார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 23 வயது நபர் பார்ப்பதற்கு ஒரு வயது குழந்தை போல் இருப்பதால், உள்ளூர் மக்கள் அவரை கடவுளின் அவதாரம் என்று கூறி வருகின்றனர். ஹரியான் மாநிலத்தின் Hisar பகுதியைச் சேர்ந்த Manpreet Singh என்பவரே இது போன்று காணப்படுகிறார்.
கடந்த 1995-ஆம் ஆண்டு பிறந்த இவர், ஓராண்டுக்கு பின் வளர்ச்சி இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு வயது குழந்தை போன்று உள்ளார். 5 கிலோ எடை மட்டுமே கொண்ட இவருக்கு Jaspreet மற்றும் Mangaldeep என இரண்டு பேர் உடன் பிறந்தவர்கள் உள்ளனர். அவர்களும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
பார்ப்பதற்கு பெரிய முகம், வீங்கியிருக்கும் கண்கள் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசும் Manpreet Singh தன் பெற்றோர் இருக்கும் Mansa.வில் இருப்பதை விரும்பவில்லை, இதன் காரணமாக இவர் தன்னுடைய மாமா-அத்தை வீட்டில் Hisar-ல் தங்கி வருகிறார்.
ஏனெனில் பெற்றோருடன் இருக்கும் போது இது குறித்த கவலைகள் மற்றும் தனிமைகள் அழுகை என தொடர்ந்து துயரங்களை சந்ததித்தால், தன்னுடைய மாமா-அத்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இங்கு இருக்கும் போது, அவர்களின் குழந்தைகளுடன் விளையாடும் போது அவருக்கு இருக்கும் இந்த பிரச்சனையை மறந்துவிடுவதால், அவர் இங்கு தங்கி வருவதாக கூறப்படுகிறது.
இவரின் இந்த நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது ஒரு மரபணு பிரச்சனை காரணமாக ஏற்படும் அரிய வகை நோய் எனவும், உடல் முழுவதும் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொண்டு வந்தால் அவர் வளர்ச்சியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் உள்ளூர் மருத்துவர்கள் இது ஒரு அரிய வகை நோய் எனவும் எதனால் இந்த பிரச்சனை என்பது தெரியவில்லை என்று அவர்களிடம் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இதை சரி செய்ய வேண்டும் என்றால் 5,400 பவுண்ட் ஆகும் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு 500,000 என்பதால் Manpreet Singh-ன் அத்தை-மாமாம் மற்றவர்களின் உதவியை நாடியுள்ளனர்.
யாரிடமும் அதிகம் பேச விரும்பாத இவர் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசுவார். ஆனால் தினந்தோறும் சில நேரங்களில் யாரிடமும் சொல்லாமல் அழுது கொண்டே இருப்பாராம்.
இது குறித்து மாமா Karanvir Singh கூறுகையில், பார்ப்பதற்கு அவன் சின்ன குழந்தை போன்று இருப்பான். இவனை நாய்கள் போன்றவை பார்த்தால் கத்தும், இதனால் அவன் மிகவும் கவலைப்பட்ட்டு அழுவான், குழந்தைகளிடம் விளையாடும் போதும் மட்டுமே தன்னை மறந்து காணப்படுவான் என்று கூறியுள்ளார்.
அத்தையான Lakhwinder Kaur கூறுகையில், எங்களை அவன் அம்மா, அப்பா என்று தான் கூப்பிடுவான். பால் மற்றும் ரொட்டிகளையே அதிகம் விரும்பி உண்ணுவான்.
எங்களிடம் மட்டுமே அதிகம் பேசுவான், அதைத் தவிர மிமிக்கிரி போன்றவைகள் செய்வான், எங்களுடைய மகன் ஒருவன் தான் வேலைக்கு சென்று அனைவரையும் காப்பாற்றி வருவதால், பெரிய மருத்துவமனைக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை, உள்ளூர் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டால் குணமாகுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளதால், மற்றவர்களின் உதவியை நாடியிருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் சில மருத்துவர்கள் இதை Laron Syndrome, என்ற அரிய வகை நோயின் தாக்கமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இந்தியாவில் முகநூல் பதிவு ஒன்றின் மூலம் வீடின்றி தெருவில் படுத்து வாழ்ந்த முதியவர் ஒருவருக்கு வீடு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வின் முழு பதிவு இதோ,
தெருவோரம் வாழ்ந்த இந்த முதியவர் சாதாரமாணவர் அல்ல. இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலையில் படித்து பட்டம் பெற்றவர். இவரது பெயர் ராஜா சிங் (76) தனது 60 வயது வரை வெளிநாட்டில் வாழ்ந்து வந்தவர், தனது சகோதரருக்காக இந்தியா திரும்பி உள்ளார்.
சகோதரரும் இவரும் இணைந்து பல்வேறு தொழில்கள் செய்த நிலையில், இவரது சகோதரரின் குடிப்பழக்கத்தால் தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இருந்தாலும் தனது கடுமையான உழைப்பால் தன் மகன்கள் இருவரையும் படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கிறார்.
வெளிநாடு சென்ற மகன்கள் அங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒருவர் இங்கிலாந்திலும் இன்னொருவரும் அமெரிக்காவிலும் நிரந்தரமாக தங்கி விட்டனர். தன் நல்வாழ்விற்கு உதவிய தகப்பனை மறந்தும் விட்டனர்.
தனது மனைவியும் இறந்த பின் டெல்லியில் உள்ள தெருக்களில் வாழத் தொடங்கியிருக்கிறார் இந்த ஆக்ஸ்போர்ட பட்டதாரியான ராஜா சிங்.
கடும் வறுமையிலும் பிச்சை எடுத்து வாழ்வதை விரும்பாத இவர், விசா கோரி வருபவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்.
தினமும் பொதுக் கழிப்பிடத்தில் குளித்து விட்டு டெல்லியில் உள்ள அனுமந்த் மந்திர அருகே உள்ள தூதரக அலுவலகத்தில் விண்ணப்ப வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு பின்னர், இரவில் ரயில் நிலையங்களிலோ பிளாட்பாரங்களிலோ உறங்குகிறார்.
உணவுக்கு வழியில்லாத பல பொழுதுகளில் கூட யாரிடமும் யாசகம் கேட்காத இந்த தாத்தாவைப் பற்றி அவினாஷ் சிங் எனும் ஒருவர் இவரது படங்களுடன் முகநூலில் பதிவேற்றினார்.
இதனையடுத்து இவருக்கு பலரும் உதவி செய்ய தயாராக உள்ள நிலையில், தற்போது குருநானக் சுக்லா எனும் இடத்தில் இவருக்கு தங்க இடம் கிடைத்திருக்கிறது.
அங்குள்ள ஆட்டோக்காரர் ஒருவர் ராஜா சிங்கை தனது ஆட்டோவில் தூதரக அலுவலகத்தில் கொண்டு விடுகிறார், திரும்பவும் கூட்டி செல்கிறார்.
தினமும் மதியம் வீடு திரும்பும் ராஜ் சிங் யாரிடமும் யாசகம் பெற மறுத்து, இந்த வயதிலும் உழைத்து உண்ண வேண்டும் என்கிற கோட்பாட்டில் உறுதியாக இருப்பது அங்குள்ளோரை வியப்பில் ஆழ்த்துகிறது.
இந்தியாவில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போதே ஏழு ஏழை பெண்களுக்கும் சேர்த்து திருமணம் செய்து வைத்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அஜிமா கிராமத்தை சேர்ந்தவர் அம்ருத் தேசாய். இவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த நிலையில் நேற்று அதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
தனது மகள் திருமணத்தின் போது அம்ருத் செய்த செயல் அங்கிருப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம், ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த படி கிராமத்தில் உள்ள ஏழு ஏழை பெண்களுக்கு தனது சொந்த செலவிலேயே தனது மகளின் திருமணத்தின் போதே அம்ருத் திருமணம் செய்து வைத்தார்.
திருமணம் செய்து வைத்ததோடு மணமக்களுக்கு வீட்டு உபயோகத்துக்கு தேவையான பொருட்களையும் அம்ருத் பரிசாக வழங்கினார். இந்த திருமணத்தில் கிட்டத்தட்ட 3000 பேர் கலந்து கொண்டார்கள்.
இது குறித்து அம்ருத் கூறுகையில், பழமைவாய்ந்த சாதி பிரிவினைகளை வேரறுக்கவே இதை செய்தோம். இந்த திருமணங்களை நடத்துவது குறித்து ஊர் மக்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தினேன்.
அவர்கள் அதை ஏற்றதோடு மட்டுமில்லாமல் திருமண விழாவில் தீவிரமாக பங்கேற்கவும் ஒப்புக்கொண்டனர் என கூறியுள்ளார்.
இந்தியாவில் கணவரின் சொத்துக்காக அவரை ஆட்களை வைத்து கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்தவர் ஷைலீஸ் நிம்சே. இவர் மனைவி சாக்ஷி. தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நிம்சேவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது, இது தொடர்பாக அவருக்கும், சாக்ஷிக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து நிம்சே தன்னை விவாகரத்து செய்துவிட்டால் அவரின் சொத்துக்கள் தனக்கு கிடைக்காது என நினைத்து சாக்ஷி பயந்துள்ளார். இதனால் கணவரை தனது உறவினரான லூட் என்பவரின் உதவியுடன் கொல்ல முடிவெடுத்த சாக்ஷி இதற்காக அவருக்கு 3 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
பின்னர் கடந்த வாரம் தனது இரண்டு நண்பர்களுடன் லூட், நிம்சே வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு சாக்ஷியும் இருந்த நிலையில், தூங்கி கொண்டிருந்த நிம்சேவின் கழுத்தை நெரித்து எல்லோரும் கொலை செய்துள்ளனர்.
பிறகு அவரின் சடலத்தை பாதி எரித்துவிட்டு காட்டு பகுதியில் தூக்கி போட்டுள்ளனர். அடுத்த நாள நிம்சேவை காணவில்லை என அவர் உறவினர்கள் பொலிசில் புகார் அளித்த நிலையில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் அவரின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.
நிம்சே வீட்டு பகுதியில் இருந்த சிசிடிவி கமெரா காட்சிகளை பொலிசார் ஆராய்ந்த போது லூட் தனது நண்பர்களுடன் அங்கு வந்தது தெரிந்தது.
இதையடுத்து அவரை பிடித்து பொலிசார் விசாரித்ததில் அனைத்து உண்மைகளையும் ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து சாக்ஷி மற்றும் லூட்டை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகிறார்கள்.
இந்தியாவில் தான் கூறிய பொய்யை மறைப்பதற்காக பிறந்த குழந்தையின் மர்ம உறுப்பை சிதைத்து கொலை செய்த மருத்துவர் தலைமறைவாகியுள்ளார். ராஞ்சியின் ஜார்கண்டில் ஜெயப்ரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் குடியாதேவி, நிறை மாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
குடியா தேவியை சோதனை செய்து அவர் வயிற்றில் வளர்ந்தது பெண் குழந்தை என்று கூறியிருக்கிறார் அங்குள்ள மருத்துவர் அனுஜ் குமார். பிரசவ வலி ஏற்பட்டபின் அனுஜ் குமாரிடம் பிரசவம் பார்த்துள்ள நிலையில், குடியா தேவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தான் கூறிய பொய்யை மறைக்க பிறந்த குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்துள்ளார். குறைபாடுள்ள குழந்தை இறந்தே பிறந்தது என்று பொய் கூறி, குழந்தையின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் அரசு மருத்துவர்கள் குழந்தையின் பிரப்புறுப்பு துண்டிக்கப்பட்டதால் இறந்ததாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அனுஜ் குமார் தலைமறைவான நிலையில், பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தையின் பாலினத்தை அறிய விரும்பும் பெற்றோர், அனுஜ் குமாரை அணுகுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் ஜம்மு மாநிலத்தில் உள்ள கதுவா பகுதி சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
கதுவா வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி இது பற்றி கூறுகையில், முஸ்லிம் பக்கர்வால் சமுதாய மக்களை மிரட்டவே, கதுவா சிறுமியை கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளார் சஞ்சி ராம்.
ஆனால், அச்சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதும், அந்த குற்றத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதை அறிந்த பிறகே, மகனைக் காப்பாற்ற சிறுமியைக் கொலை செய்ய முடிவெடுத்ததாக விசாரணையின் போது கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
கதுவா சிறுமி வழக்கில், சஞ்சி ராம், அவரது மகன் விஷால், மற்ற 5 பேர் மற்றும் ஒரு சிறார் ஆகிய 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிறுமி கடந்த ஜனவரி 10ம் திகதி கடத்தப்பட்டுள்ளார். அன்றைய தினமே ராமின் உறவுக்கார பையனான சிறார் குற்றவாளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
சிறுமி 10ம் திகதி கடத்தி வரப்பட்ட நிலையில், 13ம் திகதி தான் அவர் பலாத்காரத்துக்கு உள்ளான விடயம் தனக்கு தெரிய வந்ததாகவும், உறவுக்கார பையன்தான் அதனை ஒப்புக் கொண்டதாகவும் சஞ்சி ராம் கூறியுள்ளார்.
இந்த பலாத்காரத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதால், அவனைக் காப்பாற்றவே கதுவா சிறுமியை கொலை செய்ய முடிவெடுத்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், முஸ்லிம் பக்கர்வால் மக்களை மிரட்ட நினைத்த தனது திட்டமும் இதன் மூலம் நிறைவேறும் என்று கருதியுள்ளார் அவர்.
ஜனவரி 14ம் திகதி கதுவா சிறுமியைக் கொலை செய்து, அங்கு தனது மகன் மாட்டிக் கொள்ளாத வகையில் எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் சஞ்சி ராம் நினைத்துள்ளார்.
ஆனால், அவர் நினைத்தபடி திட்டம் நிறைவேறவில்லை. பிறகுதான், ஒரு வாகனத்தில் ஏற்றி கதுவா சிறுமியின் உடல் ஹிராநகர் கால்வாய்க்கு அருகே வீசப்பட்டுள்ளது.
இந்த கடத்தலுக்கான திட்டம் ஜனவரி 7ம் திகதியே தீட்டப்பட்டு, அதற்கான போதைப் பொருட்களும் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.
கதுவா சிறுமியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த போது, தனது மகன் பிடிபட்டு விடக் கூடாது என்பதற்காக, சிறார் குற்றவாளியை, குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படியும், விரைவில் அவரை விடுதலை செய்ய வைப்பதாகவும் சஞ்ஜி ராம் கூறியுள்ளார். இதையடுத்தே அந்த சிறார் தனது குற்றத்தை காவல்நிலையத்தில் சென்று ஒப்புக் கொண்டுள்ளார்.
முன்னதாக, ஜனவரி 15ம் திகதி தான் செய்த கொலை குறித்து அந்த சிறார் குற்றவாளி தனது நண்பன் அமித் ஷர்மாவிடம் கூறியுள்ளான். அமித் ஷர்மாவின் சாட்சியம் நீதிமன்றத்தில் நேரடியாக பதிவு செய்யப்பட்டு முக்கிய சாட்சியாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மகள் மீனாவுக்கும்(20), குரிசிலாப்பட்டையைச் சேர்ந்த சின்னசாமி மகன் கோவிந்தராஜுக்கும்(25) நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன், மணமகள் வீட்டிற்கு புதுமண தம்பதி அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், கோவிந்தராஜ் நேற்று மாலை குரிசிலாப்பட்டைக்கு சென்றுள்ளார்.
அச்சமயம் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற மீனா, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தேடி வந்த குடும்பத்தினர், மீனா தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த வாணியம்பாடி பொலிசார், மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், மீனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெண்ணொருவர் தொடர்பில் சுவிட்சர்லாந்து ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. புனிதா சுபாஸ்கரன் என்ற இலங்கைப் பெண் சுவிஸ் வந்துள்ள நிலையில், அவர் வாழ்க்கையில் எவ்வாறு போராடி வருகிறார் என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட புனிதா,
“இலங்கையில் உள்நாட்டுப் போர் காரணமாக நான் இன்று சுவிட்சர்லாந்தில் வாழ்கிறேன். எனது சகோதரர்கள் இருவரும் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவிலும் கனடாவிலும் வாழ்கின்றார்கள்.
என் இரட்டை சகோதரி புஷ்பா 2002 ல் காணாமல் போனார். அவர் விடுதலை புலிகள் அமைப்பின் போராளியை திருமணம் செய்து கொண்டார். ஒரு நாள் மாலை, அவர் கோவிலுக்கு செல்ல விரும்பினார், ஆனால் நான் அவரிடம் போகக் கூடாது, அது மிகவும் ஆபத்தானது என கூறினேன்.
எனினும் அவர் குழந்தை இல்லாத விடயம் குறித்ததான வேண்டுதலுக்காகவே அவர் கோவிலுக்கு சென்றார். அவ்வாறு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை.
அவருக்கும் அவரது கணவருக்கும் என்ன நடந்ததென இன்னமும் எனக்கு தெரியாது. இதன் காரணமாக அச்சம் அடைந்த எனது பெற்றோர் என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்தனர்.
2006ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர் ஒருவரை இலங்கையில் வைத்து திருமணம் செய்து கொண்டேன். 2012ம் ஆண்டு நானும் மகனும் கணவரின் நாடான சுவிஸ் சென்றேன்.
இலங்கையில் ஆபத்தான நிலையில் வாழ்ந்த எனக்கு சுவிட்சர்லாந்தில் வாழக் கிடைத்தமை ஒரு அதிஷ்டமாகவே கருதுகிறேன்.
எனினும் எங்கள் ஊனமுற்ற மகனின் பாதுகாப்பு காரணமாக நாங்கள் ஒரே குடும்பமாக ஒன்றாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கு Langnau பாடசாலையில் மகனுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது. அங்கு அவர் நன்கு ஆதரிக்கப்பட்டு வருகிறார்.
எனது மகன் Langnau பாடசாலைக்கு சென்ற பின்னரே பேசத் தொடங்கினார். அவர் முன்னர் எதுவும் கூறியதில்லை. அவர் தமிழ் மொழியில் கூட ஒரு வார்த்தை கூறியதில்லை.
மூன்றரை வயதுடைய எங்கள் இரண்டாவது மகன் பாலர் பாடசாலைக்கு செல்கிறார். இவ்வாறான நிலையில் ஒரு ஜேர்மன் மொழி பாடநெறியில் இணைய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
இதனால் நான் கடந்த ஆண்டு ஒரு விற்பனையாளராகினேன். Langnauவில் உள்ள விற்பனை நிலையத்திற்கு வெளியே உள்ள இடங்களிலுள்ள மக்கள் மிகவும் நட்புடனே உள்ளனர்.
சில நேரங்களில் நாம் அவர்களுடன் சிறிய உரையாடலை அல்லது ஒரு நீண்ட உரையாடலில் கூட ஈடுபடுவேன். என்னை பார்ப்பவர்கள் என்னிடம் ஹாய் புனிதா! என்பார்கள்.
ரயில்களில் நான் பத்திரிகைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். இதனால் நிறைய பேருக்கு என்னை தெரியும்.
சுவிட்சர்லாந்தில் என் வாழ்க்கையை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன். ஆனால் எனது பெற்றோர் குறித்த வருத்தம் எனக்கு உள்ளது.
என் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து, வீட்டுப் பொருளாதாரம் குறித்து Swiss Workers’ Relief Agency Bern என்ற நிறுவனத்தில் ஆறு மாத கால படிப்பில் இணைந்துள்ளேன்.
இலங்கையில், உள்நாட்டு சேவையில் முதன்மையாளராக பணியாற்றினேன். 1990 ஆம் ஆண்டுகளின் இறுதியில், ஆசிரியராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது, நான்காம் மற்றும் ஐந்தாவது வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் இலக்கணத்தை நான் கற்பித்தேன். எனினும், ஆறு மாதங்களுக்குப் பிறகு அது முடிவடைந்தது.
உள்நாட்டு போர் காரணமாக நான் அங்கிருந்து செல்ல வேண்டியிருந்தது. இந்த Swiss Workers’ Relief Agency Bern படிப்பில், என் அறிவை விரிவுபடுத்தவும் ஜேர்மன் மொழியை மேம்படுத்தவும் முடியும்.
முதல் இரண்டு மாதங்களில், ஒவ்வொரு காலையிலும் பாடசாலைக்கு சென்று, ஜேர்மனில் பேசுவதும், கேட்பதும் உட்பட, இந்தத் துறையின் மிக முக்கியமான சொற்களையே கற்றுக்கொள்வேன். அதன்பின், ஒரு Spitex அமைப்பு அல்லது ஒரு வீட்டில் நான்கு மாத வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தற்போது என் நாட்கள் மிகவும் பரபரப்பாக உள்ளன. என் மகனை பாடசாலைக்கு அனுப்பிய பின்னர் நான் பத்திரிகைகளை விற்கிறேன், பிறகு பணி செய்யும் வீட்டுக்குப் போகிறேன்.
மகனுக்கு பாடசாலை முடிந்தவுடன் எனது கணவர் மகனை பார்த்து கொள்வார். இதனால் ஏனைய சில வேலைகளையும் முன்னெடுத்து வருகின்றேன் என புனிதா தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் இராவணன் வெட்டுக்கு அருகே கடலின் அடியில் இருந்து பழைய, அழகிய சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 80 அடிக்கு கீழே குறித்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
திருகோணமலை பிரதேசமானது புராதன காலத்திலிருந்து தமிழர்களின் தலைநகரமாகவும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை அதிகளவில் உள்ளடக்கிய நகராகவும் பார்க்கப்படுகின்றது.
இது, தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழர் தாயகத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டு, சிறப்புடன் திகழ்ந்தது. இந்நிலையில், திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகே தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவை குறித்த ஆலயத்தினுடைய சிலைகளா அல்லது, ஆலய கட்டுமானத்தின்போது நீரினுள் புதையுண்டு போனவையா என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், திருகோணமலை நகரமான பல்லின சமூகத்தை கொண்ட நகரமாக மாற்றம் அடைந்துள்ள நிலையில், இந்த சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையை தொல்லியலாளர்களைத் தாண்டி தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு பார்க்கின்றனர், அல்லது இது தொடர்பில் அவர்களது நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது அனைவராலும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
எனினும், தமிழர் தாயகமான திருகோணமலையில் மீட்கப்பட்ட இந்த அழகிய சிலைகள் தமிழர்களின் சிறப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பதில் ஐயமில்லை.
தெற்காசிய விளையாட்டு தெரிவுக்காக தேசிய ரீதியில் நடைபெற்ற கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் கலந்துகொண்டு வவுனியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மூன்று பேர் நான்கு பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.
கடந்த 2018 ஏப்ரல் 23 தொடக்கம் 26 வரை கொழும்பு சுகதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில், பயிற்றுவிப்பாளர் குமார் நவநீதன் தலைமையில் பங்குபற்றிய சிவநாதன் கிந்துசன் (19) பத்தாயிரம் மற்றும் ஐயாயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டு தங்கப்பதக்கங்களையும், ஆனந்தராஜா தனுசன் (19) பத்தாயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் ஒரு வெள்ளி பதக்கத்தையும், சம்மட்டி எறிதல் போட்டியில் எஸ்.ஜனோஜன் (22) ஒரு வெண்கலப்பதக்கத்தையும் தமதாக்கியிருந்தனர்.
கொழும்பில் எதிர்வரும் 06.05.2018 தொடக்கம் சுகதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டிக்கு தேசிய ரீதியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற சிவநாதன் கிந்துசன் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள் ஒன்று இலங்கையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிலெக் மென்டி எனப்படும் இந்த போதை பொருளுடன் வெளிநாட்டவர் உள்ளிட்ட மூன்று பேர், சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலெக் மென்டி போதைப்பொருள் இலங்கையில் கண்டுபிடித்த முதல் சந்தர்ப்பம் இதுவாக கருதப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் அவுதிரேலியாவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 82 கிராம் பிலெக் மென்டி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 12 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நாட்டவர் இந்த போதைப்பொருளை தனது உள்ளாடையில் மறைத்து கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் இருந்து 240 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கண்டுபிடித்துள்ளதாக சுங்க திணைக்களம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.