குழந்தையின் பிறப்பில் சந்தேகம் : தரையில் ஓங்கி அடித்து கொலை செய்த கணவன்!!

தமிழகத்தில் சந்தேகத்தில் குழந்தையை தீர்த்து கட்டிய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள திருவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்மணிராஜா(32). இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜமுனாராணிக்கும்(26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஹகின்(5) என்ற மகனும், சஞ்சனா(2) என்ற மகளும் பிறந்தனர். அதன் பின் கடந்த மீண்டும் கர்ப்பமான ஜமுனாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்தது.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்த அந்த குழந்தையால், ஜமுனாராணியின் நடத்தையில் கண்மணிராஜா சந்தேகப்பட்டுள்ளார். இதன் காரணமாக தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய கண்மணி ராஜா, இப்போது பிறந்த 3-வது குழந்தை யாருக்கு பிறந்தது என்று கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அத்தோடு ஜமுனாவின் கையில் இருந்த அந்த ஒன்றரை மாத குழந்தையை திடீரென பறித்து தரையில் ஓங்கி அடித்ததால், அக்குழந்தை சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்துள்ளது.

இதைக் கண்ட ஜமுனா தன் கண்முன்னே குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டதால், கதறி அழுதுள்ளார். அதன் பின் குழந்தையை ஒரு சேலையில் சுற்றி வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் குழிதோண்டி புதைத்தார்.

அதைத் தொடர்ந்து மறுநாள் காலை ஜமுனாராணி அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கண்மணிராஜாவை பொலிசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதோடு குழந்தையை கொன்று புதைத்த இடத்தை காண்பித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில், திருமணமானதில் இருந்து ஜமுனாராணி அவரது தாய் வீட்டிற்கு சென்றால் வெகுநாட்களுக்கு பிறகுதான் திரும்பி வருவார். இதனால் எனக்கு அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை சிகப்பாக இருந்ததாலும், என்னை போன்றோ, எனது மனைவியை போன்றோ இல்லாததாலும் ஆத்திரம் ஏற்பட்டது.

இதனால் அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்றும், அந்த குழந்தையை உன் பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு வருமாறும் அவளிடம் கூறினேன்.

ஆனால் அவள் அதையும் மீறி அந்த குழந்தையை எனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் அதிகளவில் ஆத்திரம் வரும், இதனால் குழந்தையை தரையில் ஓங்கி அடித்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

100 கோடிக்கு அதிபதி : துறவியாக மாறிய கோடீஸ்வரர்!!

இந்தியாவில் கோடீஸ்வர வாழ்க்கையை விட்டு 24 வயது இளைஞன் ஒருவர் சமண துறவியாக மாறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் மோக்சேஷ், சார்ட்டட் அக்கவுண்ட் படித்துள்ள அவர் பிரபல ஆடிட்டராக இருந்து வந்தார்.

தொழிலதிபர்களான இவரது பெற்றோர் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அளவில் வியாபாரம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். ஜேகே கார்ப்பரேஷன் என்ற பெயரில் இயங்கும் அந்த நிறுவனங்களில் பேக்கிங் செய்ய உதவும் காகிதங்கள், தெர்மாக்கோல் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் விநியோகம் செய்து வருகின்றனர்.

இதைத் தவிர்த்து இவர்கள் வைர வியாபாரமும் செய்து வருகின்றனர். இந்நிலையில் மோக்சேஷ் சமீபகாலமாக சமண மதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து சமண மதத் துறவியாக மாற முடிவு செய்துள்ளார்.

இது குறித்து பெற்றோர்களிடம் கூறிய போது அவர்கள் முதலில் அனுமதி தரவில்லை. அதன் பின் ஒரு ஆண்டுகளுக்கு பின் மகனின் ஆசை நிறைவேற்றுவதே சிறந்தது என்று கூறி அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறியுள்ளனர்.

இதனால் நேற்று முன்தினம் இவரை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதன் பிறகு சமண மதத் துறவிகள் இவருக்கு தீட்சை அளித்தனர்.

இது குறித்து மோக்சேஷ் கூறுகையில், பணத்தால் எதையும் வாங்க முடியும் என்றால், பணக்காரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம்.

ஆனால் நிஜத்தில் அப்படி இருப்பதில்லை. ஆனால் எப்போதும் மகிழ்ச்சியைப் பெறுவது என்பது ஒன்றைப் பெறுவது அல்ல, நம்மிடம் இருப்பதை விட்டுவிடுவதைத்தான் நித்திய மகிழ்ச்சி என்று சொல்கிறோம்.

நான் சிஏ படித்து முடித்த பிறகு 2 ஆண்டுகள் எனது தந்தையின் வணிகத்தைக் கவனித்தேன், அதில் எனக்கு எந்த ஒரு மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை, இதன் காரணமாகவே சமண மதத் துறவியாகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

பாடசாலை மாணவனை கொலை செய்து மணலில் புதைத்த நண்பர்கள் : பதறவைக்கும் சம்பவம்!!

 

இந்தியாவில் பள்ளி மாணவனை பணத்துக்காக கடத்தி கொலை செய்த நண்பர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் கசியாபாத்தை சேர்ந்தவர் ஆயுஷ் சர்மா (16). ஒன்பதாம் வகுப்பு மாணவரான இவருக்கு 17 வயதான இன்னொரு மாணவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

அந்த மாணவர் மூலம் விராட் சர்மா (19) மற்றும் விஷால் (19) ஆகிய இரண்டு இளைஞர்கள் ஆயுஷுக்கு நண்பர்களாகியுள்ளனர். இந்நிலையில் விராட்டுக்கு 2.3 லட்சம் கடன் இருந்துள்ளது. ஆயுஷின் தந்தை கோடீஸ்வரர் என்பதை அறிந்த அவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஆயுஷை கடத்தி அவர் பெற்றோரிடம் பணம் பறிக்க திட்டம் போட்டார்.

அதன்படி கடந்த 16-ஆம் திகதி ஆயுஷை பைக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு மூவரும் அழைத்து சென்று ஜூசில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளனர். இதையடுத்து ஆயுஷ் மயக்கமடைய தொடங்கிய நிலையில் அவரை வீட்டில் பணம் கேட்க சொல்லி மூவரும் மிரட்டியுள்ளனர்.

இதற்கு ஆயுஷ் மறுத்த நிலையில், பைக்கிலிருந்து திடீரென கீழே விழுந்த அவருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது, இதனால் பயந்து போன மூவரும் இனி இவனை உயிரோடு விட்டால் நமக்கு ஆபத்து என கருதி ஆயுஷை கொலை செய்து அங்குள்ள மணலில் புதைத்துள்ளனர்.

வீட்டை விட்டு வெளியில் சென்ற ஆயுஷ் வீடு திரும்பாததால் பயந்து போன அவர் பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளார். பொலிசார் நடத்திய விசாரணையில் ஆயுஷை கொன்ற மூவரில் ஒருவரான 17 வயது மாணவருடன் செல்போனில் கடைசியாக பேசியது தெரியவந்தது.

இதையடுத்து மாணவரை பிடித்து விசாரித்ததில் அனைத்து உண்மைகளையும் அவன் பொலிசாரிடம் கூறியுள்ளான். பின்னர் அவரையும் விஷாலையும் பொலிசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விராட்டை தேடி வருகிறார்கள்.

8 மாத குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை : தொடரும் வன்கொடுமைகள்!!

இந்தியாவில் பிறந்து எட்டு மாதங்களே ஆன குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பலூன்களை விற்று பிழைப்பு நடத்தி வரும் நபர் ஒருவர் நேற்று காலை 4.45 மணியளவில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்று, சற்று தொலைவில் உள்ள வணிக வளாகத்தின் தரைதளத்தின் கீழ் இருக்கும் தளத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்துள்ளான்.

இது தொடர்பான காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் அந்த நபர் குழந்தையை தோளில் சுமந்து கொண்டு செல்வது போன்று உள்ளதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அவனிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னரே முழு தகவல் தெரியவரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சமீபகாலமாக இந்தியாவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படு இறந்து வரும் சம்பவம் பெருகி வருவதால், தற்போது இருக்கும் தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்றே தெரியவில்லை என்று புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதி!!

 

உலகிலேயே முதல்முறையாக மாலத்தீவில் கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள 2 மாடி நட்சத்திர விடுதியை வரும் நவம்பர் மாதம் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளது.

அங்குள்ள ரங்காலி (Rangali) என்ற தீவில், கடல்மட்டத்திலிருந்து 16 புள்ளி 4 அடி ஆழத்தில் இந்த விடுதி அமைக்கப் பட்டுள்ளது. இந்த 2 மாடி சொகுசு விடுதியை நியூசிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது. இந்த விடுதியின் சிறப்பாக மேல்தளம் மட்டும் கடல்நீருக்கு மேலே தெரியும் வகையில் நேர்த்தியாக நிர்மானிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கடியில் படுக்கையறை கடல் மட்டத்திற்கு 5 மீட்டர் கீழே படுக்கை அறை உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய அறைகளும் இந்த நட்சத்திர விடுதியில் அமைந்துள்ளது.

கண்ணாடித் தொட்டி போலவே உள்ள இந்த அறைகளுக்குள்ளே இருந்து கொண்டு, கடல்நீரில் உலவும் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

இந்த சொகுசு விடுதியில் ஒரு நாள் தங்கியிருக்க இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலக போர் நடக்குமா? ரஷ்யா அதிரடி பதில்!!

ரஷ்ய ஜனாதிபதி புடின் சமாதானத்தை தான் விரும்புவார் எனவும், டிரம்புக்கு எதிராக மூன்றாம் உலக போரை நடத்த விரும்ப மாட்டார் எனவும் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லர்வர் கூறியுள்ளார்.

சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அசாத் தலைமையில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க கூட்டுப்படையினர் சிரியாவில் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு ரஷ்யா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இதனால் மூன்றாம் உலக போர் எப்போதும் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யா மூன்றாம் உலக போரை எப்படி பார்க்கிறது என்பது குறித்து அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எங்கள் ஜனாதிபதி புடினும், ராணுவமும் இதற்கு அனுமதி தரமாட்டார்கள் என நம்புகிறேன்.

புடின் மனதளவில் சமாதானத்தை தான் விரும்புகிறாரே தவிர, போரை அல்ல, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இப்படி தான் நினைப்பார் என நம்புகிறேன்.

இருவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் ஆவார்கள், அதனால் எந்த விடயத்திலும் சமாதானம் மேற்கொள்வதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

டிரம்பை நேரில் சந்தித்து பேச புடின் தயாராக உள்ளார், இது தொடர்பாக இருவரும் சமீபத்தில் போனில் பேசினார்கள் என கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் மனைவி, பிள்ளைகளை கொன்ற கொடூரன் : அதிர்ச்சி சம்பவம்!!

 

பிரித்தானியாவில் மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளை Bath tub தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த பின்னர் சாவகாசமாக வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துகொண்டே சாப்பிட்ட கணவனுக்கு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சமி சலீம்(30) எனும் நபர் தனது மனைவி அரினா சயீத்(30) மகள் ஷாதியா(7) மற்றும் 4 வயது மகன் ரமி ஆகியோரை கொலை செய்த பின்னர் வீடுமுழுதும் பெட்ரோல் உற்றி தீ வைத்து கொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கடந்த வருடம் மே 30ம் திகதி ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு வாடை அதிகமாக வெளியேறியது, இதானல் அக்கம் பக்கத்தில் இருந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

அந்த வீடு உள்பக்கமாக தாழிட்டு இருந்ததால், சிலர் கதவை உடைத்து சென்று பார்த்த போது வீட்டின் ஒரு அறையில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் எரிந்த நிலையிலும் மற்றொறு அறையில் ஒரு நபர் மயக்க நிலையிலும் இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அங்கு வந்த பொலிஸ் சடலங்களை கைப்பற்றி, மயக்க நிலையில் இருந்த சமி சலீம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் விசாரனை நடத்தினர்.

விசாரணையின் போது சமீ சலீம் கொடுத்த வாக்குமூலம் அனைத்தும் அதிர்ச்சியளித்தது, இயல்பாகவே சமி சலீம் அவரது மனைவி மீது சந்தேகம் மற்றும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் மன போக்கிலேயே இருந்து வந்துள்ளார்.

இதனால் அவரது மனைவி செல்போன் பயன்படுத்தவும் வெளியே எங்கும் செல்லக்கூடாது எனவும் தடைவிதித்துள்ளார், ஆனால் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அவரது மனைவி செல்போன் பயன்டுத்தியது சலீமுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது.

அதன் பின்னர் 25 லிட்டர் பெட்ரோல் வாங்கிவந்து வீடு முழுவதும் ஊற்றிவிட்டு பின்னர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் வாயை பொத்தி இழுத்துச்சென்று Bath tub தண்ணீரில் மூழ்கடித்து துடிக்கதுடிக்க கொலை செய்த பின்னர் சடலங்களை ஒரு அறையில் அடுக்கியுள்ளார்.

அதன் பின்னர் சாப்பிட்டு கொண்டே டிவி பார்த்த சலீம் இறுதியாக எரிவாயு இணைப்பையும் பிடுங்கி விட்டுவிட்டு வீட்டிற்கு தீ வைத்து தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். ஆனால் அதிக புகை ஏற்பட்ட காரணத்தினால் சலீம் இருந்த அறைக்கு தீ பரவவில்லை.

இந்த கொடூர சம்பவத்தை செய்த சலீம் schizophrenia எனும் ஒரு வித மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கைது செய்து விசாரிக்கும் போது தெரியவந்தது. ஆனாலும், ஒரு வருடமாக நடைபெற்ற இந்த விசாரனையில் Liverpool Crown நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அதில் 3 கொலைகளை செய்துள்ள குற்றத்துக்காக சலீமுக்கு 31 ஆண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சலீம் மனைவி அரினா சயீத் மிகவும் அமைதியானவர் மற்றும் இரக்க குணமுடையவர் என்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் ஆனால் திடீர் என இந்த கொடூர செயலில் சலீம் ஈடுபட்டது எதற்காக என தெரியவில்லை எனவும் இந்த சம்பவத்திற்கு பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

காதலனின் மனைவியை கொல்ல கூலிப்படை : இளம்பெண் சிக்கியது எப்படி?

காதலரின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்த கேரள செவிலியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் டினா ஜோன்ஸ் (31), இவர் அமெரிக்காவில் உள்ள லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் செவிலியராக பணிபுரிகிறார்.

அதே மருத்துவமனையில் பணிபுரியும் திருமணமான மருத்துவர் ஒருவருடன் டினாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் மனைவியும் அதே மருத்துவமனையில் பணிபுரியும் நிலையில், தான் அவருடன் பழகுவது அவர் மனைவிக்கு தெரிந்துவிட்டதோ என டினாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவரின் மனைவியை கொலை செய்ய முடிவெடுத்த டினா அதற்காக இணையதளம் மூலம் கூலிப்படையை தேடியுள்ளார். அதில் 10 ஆயிரம் டொலர் பிட் காயின் கட்டி மருத்துவர் மனைவியை கொல்ல வேண்டும் என டினா கூறிய நிலையில், அந்த ஓன்லைன் பக்கம் போலி என தெரியவந்தது.

இந்த விடயம் பொலிசாருக்கு தெரிந்த நிலையில் டினாவை கைது செய்தனர். தற்போது பிணையில் வெளிவந்திருக்கும் டினா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் 18 வயதான இந்தியர் நடுரோட்டில் சுட்டுக்கொலை!!

அமெரிக்காவில் இந்திய இளைஞரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். கலிபோர்னியாவை சேர்ந்தவர் நதானியல் பிரசாத் (18). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் பிரீமாண்ட் பகுதியில் பிரசாத் ஒரு காரில் சென்று கொண்டிருந்த நிலையில் காரை ஒரு பெண் ஓட்டி சென்றார். அவரை பார்த்த பொலிசார் அது குறித்து போக்குவரத்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதை தொடர்ந்து ரோந்து பணியில் இருந்த பொலிசார் பிரசாத்தை பிடிக்க முயன்ற நிலையில் அவர் காரிலிருந்து இறங்கி தப்பியோடினார். அவரை பொலிசார் துரத்தி சென்ற போது அவர்களை நோக்கி பிரசாத் துப்பாக்கியால் 3 தடவை சுட்டார்.

இதையடுத்து பொலிசார் பிரசாத்தை நோக்கி திருப்பி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதற்கிடையே காரை ஓட்டி வந்த பெண் பிரசாத்தின் தாய் என தெரியவந்துள்ள நிலையில் அவர் பொலிசில் சரணடைந்துள்ளார்.

கோர முகம் கொண்ட வயதானவரை மணந்த அழகிய இளம்பெண் : வெளியான காரணம்!!

 

கோரமான முகம் கொண்டவரை அழகான இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. புன்மீ (21) என்ற இளம் பெண் வயதான நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.

இளம் பெண் அழகாக இருந்த நிலையில் அந்த நபரின் முகம் கோரமாகவும், பெண்ணை விட வயதானவராகவும் காட்சியளித்தார். இது உண்மையா என கேள்வியெழுந்த நிலையில் அது உண்மை தான் என புன்மீ பேஸ்புக்கில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த பதிவில் எளிமையான முறையில் குறித்த நபரை திருமணம் செய்து கொண்டதாக புன்மீ தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதாகவும், தனது முதல் கணவர் சூதாட்டத்தில் ஈடுபடுபவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முகம் கோரமாக இருப்பதோடு, பணம் எதுவும் இல்லாத ஏழையாக இருந்தாலும் இருவருக்கும் இடையில் உள்ள அதீத காதலால் அவரை புன்மீ திருமணம் செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நடந்த நாடு குறித்து தகவல் கிடைக்கவில்லை.

பொதுக் கழிவறைகளில் வைபை, ஏ.டி.எம், தொலைக்காட்சி வசதி : பிரமிக்க வைக்கும் சீனா!!

 

சீனாவில் நவீன வசதிகளுடன் வைபை, ஏ.டி.எம், தொலைக்காட்சி வசதியுடன் கூடிய பொதுக் கழிவறைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நவீன கழிவறைகள் குறித்த திட்டமிட்டுள்ள நிலையில் தற்போதுதான் அவை நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த கழிவறைகளில் பல்வேறு வசதிகள் இருப்பதால் அதிக நேரம் கழிவறைகளிலேயே இருந்துவிடவும் முடியாது. ஏனெனில் ஒருவர் கழிவறையினுள் நுழைந்து 10 நிமிடங்களில் வெளியே வருமாறு அலாரம் அடித்து விடுமாம்

தொலைக்காட்சி, வைபை, உட்பட பல்வேறு வசதிகள் உண்டு. சீனாவுக்கு சுற்றுப்பயணம் வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இந்த நவீன கழிவறை வசதியை சீன அரசு செய்துள்ளது.

இந்த கழிவறைகள் தற்போது இரண்டு நகரங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் கிராமங்கள் உட்பட பல இடங்களில் இந்த வசதி செய்து தரப்படும் என்றும் சீன அதிபர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதாம் : தீயாய் பரவும் தகவல்!!

 

வரும் ஏப்ரல் 23ல் அதாவது நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறது தெரியுமா? “அட போங்கப்பா உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” ”அரச்ச மாவையே இன்னும் எத்தன நாளைக்கு தான் அரைப்பீங்க?” “இன்னும் எத்தனை பேரு இப்படி கிளம்பிருக்கீங்க?” இது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இந்த சதிகோட்பாளர்கள் சும்மா இருந்தால் தானே (Conspiracy theorists)

வானில் இருக்கும் நட்சத்திர கூட்டங்கள் அனைத்தும் ஒவ்வொறு வடிவத்தை பிரதிபலிப்பது போன்று இருக்கும். தராசு வடிவம், சிங்க வடிவம், கன்னி வடிவம், ஹெர்கியூலிஸ் வடிவம், இப்படி பல வடிவங்கள் உண்டு, நாம் பிறக்கும் போது நம் பூமிக்கு அருகில் எந்த நட்சத்திரக்கூட்டம் உள்ளதோ அது தான் நமது ராசியாக ஜாதகத்தில் கூறப்படுகிறது.

இதில் விர்கோ எனப்படும் கன்னி வடிவ நட்சத்திரக்கூட்டம் ஒன்று உள்ளது. அவைகள் ஒரு பெண் நிற்பதைப் போன்ற தோற்றதைத் தரும். சில நட்சத்திரங்கள் கன்னியின் தலையில் கிரீடம் போன்றும் இருக்கும்.

நாம் பூமியில் இருந்து பார்க்கும் வேலையில் கிரகங்கள் நகரும்போது அந்த வடிவத்தில் சூரியன் கன்னியின் தலைக்குப் பக்கமும் வியாழன் கன்னியின் கால்களுக்கு நடுவிலும் நிலவு கன்னியின் காலுக்கடியிலும்
என்று கிட்டத்தட்ட இந்த மூன்று கிரகங்களும் நேர்க்கோட்டில் என்று வருகிறதோ அந்த நாளே பைபில் கூறும் தீர்ப்பு நாள் ஆகும். அதாவது Judgement Day.

இந்நிலையில் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று கிரகங்களும் நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு நாளை மறுநாளான ஏப்ரல் 23ம் திகதி நடக்கப்போகின்றது.

இதை முன்னிட்டு தான் உலகில் தற்போது அதிகளவில் அசம்பாவிதங்கள் நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இவைகள் Judgement Day-ன் அறிகுறிகள் என டேவிட் மீடே எனும் சதிக்கோட்பாட்டாளர் (Conspiracy theorists) கூறியுள்ளார்.

அதிரவைக்கும் ஆதாரம் : இதற்கு உதாரணமாக பைபிலில் உள்ள அதிகாரம் 12:1-2-யை இங்கு குறிப்பிடுகிறார். “சூரியனை ஆடையாக உடுத்திய ஒரு பெண், காலடியில் நிலவை வைத்துக்கொண்டு பன்னிரண்டு நட்சத்திரங்களை மகுடமாக சூடிக்கொண்டு நிற்பாள்”

பைபில் அதிகரத்தில் குறிப்பிட்டது போலவே அந்த வடிவத்தில் நடசத்திர கூட்டங்கள் ஒரு நேர்கோட்டில் இணைந்தால் கிரகம் x(planet X) எனும் கிரகம் பூமியில் மோதி இந்த உலகம் அழியும் என்று கூறுகிறார். அப்படி எனில் வரும் 23ம் தேதி இந்த உலகம் அழியப்போகிறது என அர்த்தம்.

சரி இதைப்பற்றி நாசா என்ன கூறுகிறது : நாசாவின் கூற்றுப்படி இந்த கிரகம் x என்பதே கட்டுக்கதை சதிக்கோட்பாட்டாளர் டேவிட் மீடே கூறுவது போன்ற கன்னி வடிவ நட்சத்திர கூட்டங்கள் சரியாக ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை இவ்வாறு ஒரே நேர்கோட்டில் இணையும். அதன்படி பார்த்தால் ஒவ்வொரு 1000 வருடங்களுக்கும் ஒருமுறை இந்த உலகம் அழிந்து இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

உண்மையில் இந்த வடிவங்கள் தோன்றுவதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் ஒரு தொகுப்பாக தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும்.

அதுவே நமது அண்டம் சுருள் வடிவம் (Spiral)) என்று கூறுவதற்கு ஒரு ஆதாரமாகக் கூறப்படுகிறது. அப்படி நகரும் நட்சத்திரங்கள் தமக்குள்ளாகவே சிற்சில குழுக்களாக பிரிந்திருக்கும்.

அது ஏனென்றால் அவை அனைத்தும் நமது சூரிய குடும்பத்தைப் போன்றதுதான். நமக்கு நீள்வட்ட அமைப்பு (eclipse) இருப்பதுபோல் அவற்றுக்கும் ஒவ்வோர் வடிவம் உண்டு. அவை நகர்ந்துகொண்டே இருக்கின்றன. நமது அண்டமும் (Galaxy) தான்.

இப்படிக் கூட்டமாக இருக்கும் மற்ற குடும்பங்கள் நாம் பூமியில் இருந்து பார்க்கும்போது நட்சத்திரக் கூட்டங்களாகத் தெரியும். நமக்கு அருகிலிருக்கும் சில அண்டங்கள் (Galaxies) கூட இவ்வாறான நட்சத்திரக் கூட்டங்களாகத் தெரியும்.

உதாரணத்துக்கு ஆண்ட்ரோமீடா (Andromeda Galaxy) என்பது வானில் ஒரு பெண் தனது இரு கைகளையும் தூக்கிக்கொண்டும், ஒரு காலை மடக்கியவாறும் நிற்பது போல் இருக்கும். அது நமக்கு அருகாமையில் இருக்கும் ஒரு அண்டம்.

இன்னொரு உண்மை என்னவென்றால் இரவு நேரங்களில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் எதுவும் அந்தச் சமயத்தில் அங்கு இருப்பவையே அல்ல. அவை ஒரு வருடத்துக்கு முன் அங்கு இருந்தவை.

நமது பால்வெளி அண்டம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் அகலம் கொண்டது. அதில் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் சில ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கின்றன.

அதன் ஒளி பூமியை வந்தடைய சில வருடங்கள் ஆகும். அதற்குள் அது நகர்ந்து வேறு இடத்துக்குச் சென்றுவிடும். ஆகையால் நமது கண்களை அந்த நட்சத்திரங்களின் ஒளி வந்தடையும் நேரத்தில் அங்கே எதுவும் இருப்பதில்லை. ஆம், நீங்கள் பார்ப்பது கடந்த காலத்தை.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நீங்கள் பார்க்கும் சில நட்சத்திரங்களின் ஒளி நம் கண்களை வந்தடைவதற்குள் அழிந்தே போயிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. இது விஞ்ஞானம் கூறும் நிரூபிக்கப்பட்ட கூற்று.

கதை இப்படியிருக்க, இல்லாத நட்சத்திரத்தை வைத்து இருக்கும் பூமிக்கு எப்படி ஜோதிடம் பார்க்க முடியும்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவியல் வளர்ந்துகொண்டே இருக்க, சில மக்கள் எதையும் ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவ்வாறு இயற்கைக்கு மாறான கருத்துகளைக் கூறுவதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்ள முடியுமே தவிர வேறு எந்த பயனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பெண் சுசானா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

பிரபல தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஆர்யாவுக்காக பெண் தேடும் வேலையாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 16 பெண்களில் இறுதியாக 3 பெண்கள் தான் இருந்தனர். அவர்களில் இருந்து ஆர்யா ஒருவரை தேர்வு செய்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் பலரும் எதிர்ப்பார்த்தது போல் ஆர்யா அவர்களில் இருந்து யாரையும் தேர்வு செய்யவில்லை.
இதனால் ரசிகர்கள் பலரும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் நிகழ்ச்சி குறித்து முதன்முதலாக பேசியுள்ளார் இலங்கை பெண் சுசானா.

முதலில் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்தேன் இப்போது உங்களுடைய அன்பை பெற்றிருக்கிறேன். 3 மாதம் நான் கொடுத்த உழைப்பு, நேரம் எல்லாம் வீண். ஆனால் இதிலிருந்து வெளிவந்த அடுத்த வேலையை பார்ப்பது நல்லது, உங்களுடைய அன்புக்கு நன்றி என இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.

வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி புறப்பட்டது விண்மீன்களின் விழிப்புணர்வு பேரணி!!

 

விண்மீன்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ‘உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் விண்மீன்களின் விழிப்புணர்வு நகர்வலத்துடன் கையெழுத்திடும் நிகழ்வு இன்று (21.04.2018) சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகியது.

வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் கலந்து கையெழுத்திட்டு இந் நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

இப் பேரணியானது 21,22,23 ஆகிய தினங்களில் ஏ9 வீதியூடாக ஓமந்தை, புளியங்குளம், கனகராயன்குளம், மாங்குளம், முருகண்டி, இரணைமடு ஊடாக இன்றைய தினம் மாலை கிளிநொச்சி நகரத்தினை சென்றடையவுள்ளது.

அடுத்த தினம் ஞாயிற்றுக்கிழமை (22.04.2018) அன்று காலை 8.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து ஏ9 வீதியூடாக பரந்தன், இயக்கச்சி, பளை, கொடிகாமம், சாவக்கச்சேரி, கைதடி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலத்தினை சென்றடையவுள்ளது.

இதன் மறுதினம் (23.04.2018) திங்கட்கிழமை அன்று காலை 8 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பாகி யாழ் மத்திய பேரூந்து நிலையம், நாச்சிமார் கோவிலடி, நல்லூரடி, திருநெல்வெலி, மருதானர்மடம், கோப்பாய், புத்தூர், நெல்லியடி, மந்திகை ஊடாக பருத்தித்துறை நகரை சென்றடைந்து பேரணி நிகழ்வுகள் நிறைவடையவுள்ளது.

மரண அறிவித்தல் -அமரர்.இராசையா இராசரெத்தினம்!!

 

 

இராசையா இராசரெத்தினம்

(உரிமையாளர் இராசையா மருந்துக்கடை)

 

யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியை பிறப்பிடமாகவும் வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட  இராசையா இராசரெத்தினம் நேற்று (20.04.2018)  வெள்ளிக்கிழமை  காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா தங்கம்மா தம்பதியினரின் அன்புமகனும்  காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தங்கம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் சோதிமலரின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற இரத்தினசபாபதி மற்றும் இரத்தினபூபதி,

இந்திராணி, இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ரஜிதா, விஜிதா, இராஜசெழியன், ரஜனி, இராஜசேகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் சித்தார்த்தர், பாஸ்கரன், மாலதி தயானந்தன், ரீடா காலஞ்சென்ற ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீவதனி, மகிந்தன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இளங்கோ, இளஞ்சே, அனுஷியா ஆகியோரின் சிறிய தந்தையும் குமரன், ரதிலக்சுமி ஆகியோரின் பெரிய தந்தையும், தியாகராசா, இராசரெத்தினம் காலஞ்சென்ற சத்தியபாமா மற்றும் வசந்தி தனபாலசிங்கம், இராஜரத்னம் காலஞ்சென்ற வைத்தியநாதன் மற்றும் நாகேஸ்வரி, இராஜசிங்கம், குலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், இந்துருஜன், பிரவீணன், பிரணவன், அஸ்விஜா, தர்மிகன், தனுராம், அனிக்கா, ஆரணி, ஆரபிகா, Master சேரன்  ஆகியோரின் அன்புப் பேரனும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23.04.2018 திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் முத்திரை சந்தியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைகாக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்  அனைவரும் ஏற்றுகொள்ளவும்.

இல 633  பருத்தித்துறை வீதி

நல்லூர்

யாழ்ப்பாணம்

தகவல்

குடும்பத்தினர்

0777111831

தாயும் மகளும் வெட்டிப் படுகொலை!!

மஹியங்கனை – மாபாகடவெவ பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் தாயும் மகளுமே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இகிரியகொட – மாபாகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணும் அவரது 40 வயதுடைய மகளுமே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.

குறித்த பெண்ணின் மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.