அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் நேற்று முன்தினம் (19.04) இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, பிறந்து 11 நாட்களேயான கைக்குழந்தை நுழைந்தமை வரலாற்றின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் புதிய தலைவராக ப்ரிடென்ஸ்டைன் என்பவரை அதிபர் ட்ரம்ப் நியமித்தார்.
ஆனால், இதற்கு பாராளுமன்ற செனட் சபையின் ஆதரவு முக்கியம். இதற்காக நேற்று முன்தினம் செனட் சபையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. இல்லினாய்ஸ் மாகாண ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக டாம்மி டக்வர்த், பிறந்து 11 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் வாக்கெடுப்பிற்கு வருகை தந்தார். வாக்கெடுப்பின் போது உறுப்பினர்கள் தங்களது குழந்தைகளை சபைக்கு அழைத்து வருவது தொடர்பான விதிமுறை கடந்த புதன்கிழமை (18.04) தான் திருத்தப்பட்டது.
இதன் மூலம், வாக்கெடுப்பின் போது செனட் சபைக்குள் நுழைந்த முதல் குழந்தை என்ற சாதனையை அக்குழந்தை பெற்றுள்ளது. முன்னாள் இராணுவ வீராங்கனையான டாம்மி டக்வர்த் ஈராக் போரின் போது தனது இரு கால்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
வாக்கெடுப்பின் முடிவில் 50 உறுப்பினர்கள் ஆதரவு, 49 உறுப்பினர்கள் எதிர்ப்பு என்ற நூலிலை வித்தியாசத்தில் ப்ரிடென்ஸ்டைன் நாசா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேறியது.
மெக்சிகோவை சேர்ந்த 96 வயது மூதாட்டி ஒருவர் காதல் கடிதங்கள் எழுத பள்ளியில் சேர்ந்த சம்பவம் அங்குள்ள அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் 96 வயது மூதாட்டி குயாடலூப் பலேசியஸ்.
இவர் வசதியில்லாத குடும்பத்தில் பிறந்ததால் அவரால் படிக்க முடியவில்லை, பிறகு திருமணமான பின் கோழி விற்பனை செய்து வந்தார். பின்னர் வயது முதிர்ந்த நிலையில் அவர் பள்ளியில் படிக்க ஆசைப்பட்டார். அதன்படி கடந்த 2015ஆம் ஆண்டில் முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் படிக்க தொடங்கினார்.
தற்போது அவர் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி பாடங்களை படித்து முடித்து விட்டார். இந்த படிப்பு ஆர்வம் குறித்து அவரிடம் கேட்ட போது, மூதாட்டி காதலர்களுக்கு காதல் கடிதம் எழுதுவதற்காக தான் படிக்க தொடங்கினேன் என கூறியுள்ளார். மேலும் தனது 100 வயதிற்குள் உயர் கல்வியை முடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு – உடையார் கட்டு, மாணிக்கபுரம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஜேசப் அந்தோனி என்பவர் நேற்று பிற்பகல் 1.30 பாரதிபுரத்தில் உள்ள அவரது தென்னந்தோப்பிற்கு சென்று தேங்காய் பறித்துள்ளார்.
இதன்போது, தென்னை மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நீண்ட நேரமாகியும் இவரை காணவில்லை என அயலவர்கள் தேடிப்பார்த்தபோது, உயிரிழந்த நிலையில் தென்னைமரத்தின் கீழ் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்கள் .
உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் சடலத்தை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் வெளியிட்டுள்ள நாணயமாற்று அறிக்கைக்கு அமைய புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளன. அதற்கமைய நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 158.12 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 154.34 ரூபாவாக பதிவாகியுள்ளதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ரூபாவின் பெறுமதி 2 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதே காலப்பகுதியில் யூரோவின் பெறுமதி 4.8 வீதத்திலும், ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி 4.8 வீதத்திலும், ஜப்பான் யென் ஒன்றின் பெறுமதி 7.1 வீதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிஃபாவின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், மற்றுமொரு சிறுமியின் படுகொலை இந்தியாவில் சிறுமிகளின் பாதுகாப்பை கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் – கபீர்தாம் என்ற இடத்தில் தனது சகோதரரின் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற சிறுமியை அடையாளம் தெரியாத நபர்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்து, அருகிலிருந்த கால்வாய்க்குள் வீசியுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். இதேவேளை, திருவள்ளூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில இளைஞரை மடக்கிப்பிடித்த மக்கள் கடுமையாகத் தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை கடத்திய நபர் பாலியல் கொடுமைக்குள்ளாக்கியுள்ளார்.
இது தொடர்பில் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்ததைத் தொடர்ந்து, சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பிரதேச மக்கள் குறித்த நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். அங்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை மக்களிடம் இருந்து மீட்டு கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இராமநாதபுரம் பகுதியில் 9 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்ற நிலையில் தேடப்பட்டு வந்த காவல் நிலைய தலைமை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சிறப்பு ஆய்வாளரின் மகளை வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்ற, அதே குடியிருப்பில் வசித்து வந்த மற்றுமொரு காவலரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் நடத்த முயன்ற பேராசிரியையான நிர்மலா தேவியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க CBCID-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் நிர்மலா தேவியை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றிடம் CBCID அனுமதி கோரியிருந்தது.
7 குழுக்களினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நிர்மலா தேவியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளின் புகைப்படங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.
உலக வாழ் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்து விட்ட ஒன்றுதான் தங்கம். மனித வாழ்வியலோடு ஒன்றித்துபோன இந்த தங்கம் அழகு ஆபரணம் மட்டும் அல்ல, அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப மதிப்பு மிக்க ஒரு மங்கலப் பொருளாகவும் தங்கம் பார்க்கப்படுகின்றது.
விலை மதிப்புக்கூடிய பொருளாக பார்க்கப்படும் இந்த தங்கம், அவசர பணத்தேவைக்கு கைகொடுத்து உதவும் நண்பனாகவும் உள்ளது. அண்மைக்காலங்களாக மக்களை தங்கத்தின்பால் ஈர்க்க வைக்கும் ஒரு தினம்தான் அட்சய திருதியை தினம்.
இந்த தினத்தில், தங்கம் வாங்கினால் நல்லது என்றும் ஐஸ்வரியம் பொங்கும் என்றும் எம் முன்னோர்கள் கூறிவைத்துச் சென்றுள்ளனர். காலப்போக்கில், அது ஒரு மறுக்கப்படமுடியாத கடமையாகவே எம் மக்கள் மத்தியில் மாற்றம் அடைந்து விட்டது, ஒரு குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கி வைப்போமே என்று சிந்திக்கும் அளவுக்கு ஒரு சடங்காகவே அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவது மாறிப்போனது.
பற்றாக்குறைக்கு, தங்கம் குறித்த ஊடக விளம்பரங்களும், கவர்ச்சியும் வெகுவாக மக்களை ஈர்க்கச் செய்துவிட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினம் உலக வாழ் அனைத்து மக்களாலும் சம்பிரதாய பூர்வமாக அட்சய திருதியை தினம் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நகைக்கடைகள் அனைத்தும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்பட்டதோடு, மக்கள் கூட்டம் நகை கடைகளில் திரண்டிருந்தமையை காணக்கூடியதாகவிருந்தது.
துள்ளியமாக கூறப்போனால் அட்சய திருதியை என்பது தங்கத் திருவிழா என்றே கூற வேண்டும், அந்நாளில் பெரும்பாலான தங்க நகைக்கடைகளில் நகை வாங்குபவர்களுக்கு பல வெகுமதிகள் வழங்கப்பட்டன.
எனினும், தங்கத் திருவிழா முடிந்து அதாவது அட்சய திருதியை தினம் முடிந்து அடுத்த தினமான நேற்று இலங்கை வாழ் மக்களுக்கு அரசாங்கம் திடீர் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது இலங்கை அரசாங்கம் 15 வீத வரியை விதித்துள்ளதை அடுத்து, தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து இலங்கையில் தலைநகரின் தங்கம் கொட்டிக்கிடக்கும் இடமான செட்டியார்தெருவில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றத்தின்படி, 24 கரட் தங்கத்தின் வலை 7,000 ரூபாவாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6,000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 8 கிராம் எடை கொண்ட 24 கரட் தங்கத்தின் விலை, 62,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
புத்தாண்டுக்கு முன்னர், 8 கிராம் தங்கத்தின் விலை, 53,000 தொடக்கம் 54,000 ரூபாவாக இருந்தது. 8 கிராம் எடையுள்ள 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது, 59,000 தொடக்கம் 60,000 ரூபாவாக விற்கப்படுகிறது. இது முன்னர், 50,000 தொடக்கம் 51.000 ரூபாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக தங்கதை கொள்வனவு செய்வோர் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மஸ்கெலியா – மொட்டிங்ஹேம் தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறிய ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மாலையில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் கூறியுள்ளனர். 51 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான எம்.கந்தசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது வீட்டிற்கு விறகுகளை வெட்டுவதற்கு பாரிய மரத்தின் உச்சியில் ஏறியுள்ளார்.
இதையடுத்து மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து தலை அடிப்பட்டதினால் இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வங்கி ஊழியராக நடித்து பொதுமக்களை ஏமாற்றி பணம் மோசடி செய்தமை சம்பந்தமாக பெண்ணொருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். சந்தேக நபரான பெண், பிலியந்தல பிரதேச வசிப்பிடமாக கொண்ட நிஷாடி தனுஷ்கா எனவும் அவருக்கு எதிராக , கோட்டை, புதுக்கடை, மாளிகாகந்தை மற்றும் மொரட்டுவை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுத்தமதந்திரிகே தோன நிஷாதி தனுஷ்கா, அடையாள அட்டை இலக்கம் – 827253464, விலாசம் – இலக்கம் 66, அளுபோகாவத்த, மடபாத்த, பிலியந்தல. சந்தேக நபரான பெண் குறித்து தகவல் அறிந்தால், கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் – 011-2673593, கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி – 011-2673571, கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு -011-2673590.
அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் உள்ள மேரிவில்லேவை சேர்ந்த 72 வயதுடைய அல்மேடா என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞரை சந்தித்துள்ளார்.
அந்த நபருடன் அல்மேடாவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பானது பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் உயிராக நேசிக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அல்மேடாவும் கேரியும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இவ்களுடைய இந்த முடிவிற்கு முதலில் இருவர் குடும்பத்திலும் எதிர்ப்பு எழுந்தது. அதற்கு காரணம் அவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசமாகும். இதனிடையே குடும்பத்தினரை ஒருவழியாக அவர்கள் சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
கேரிக்கும் அல்மேடாவுக்கும் இடையில் 58 வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அல்மேடாவுக்கு 6 பேரன் மற்றும் பேத்திகள் உள்ள நிலையில் இந்த உறவை ஏற்க முடியாமல் அவரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் தவித்துள்ளனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதை ஏற்று கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா என்பது ஓர் பொறுக்கி என விமர்சித்துள்ளார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. நீட் தேர்விலிருந்து நிரந்த விலக்கை வலியுறுத்தி தமிழ்நாடு – புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழர் உரிமைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
மாநாட்டில் திருமுருகுகன் காந்தி, சீமான், நடிகர் சத்யராஜ், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “நாடு முழுக்க ஒற்றைக்கல்வி முறை இல்லாதபோது எதற்காக வேண்டி இங்கு நீட் தேர்வு திணிக்கப்படுகிறது.
கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆக்டோபஸ் கரங்களை எளியோர்களுக்கான கல்வி – மருத்துவத்திலும் நுழைத்திட துணிந்துள்ளது. அதற்கு மத்திய பாஜக அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.” என பேசினார். மேலும், பல தேசிய இனங்களின் உரிமைகளை சிதைத்துப்போட்டுக்கொண்டிருக்கிற இந்தியா ஓர் பொறுக்கி தேசம் என மிக காத்திரமான விமர்சனத்தை முன்வைத்தார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் ஒலுமடு கிராமத்தில் இருந்து சுமார் 03 கிலோ மீற்றர் தூரத்தில் வெடுக்குனாரி மலைப்பிரதேசத்தில் தமிழர்களுடையதாக நம்பப்படும் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பல சான்றுப் பொருட்கள் அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுவதோடு அங்குள்ள ஆதி சிவன் ஆலயமும் அடிப்படை வசதியின்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வன வளம் சூழ்ந்த வன்னிப்பிரதேசத்தில் பல்வேறு தொல்லியல் பொருட்கள் காணப்படுகின்ற நிலையில் பெரும் காடுகளின் நடுவே காணப்படுகின்ற இவ் வெடுக்குனாரி மலையானது குகைகளையும் கேணிகளையும் கொண்டு அமைந்துள்ள ஒரு புராதன இடமாக காணப்படுகின்றது.
நீண்ட காலங்களிற்கு முன்னர் இப்பகுதியில் நாகர்கள் வாழ்ந்ததாக நம்பும் இப்பகுதி மக்கள் யுத்த நிறைவிற்கு பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது பல இந்து தெய்வங்களை வைத்து வழிபடுகின்றார்கள்.
நிலத்தில் இருந்து சுமார் 300 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் ஆதி சிவன் பிரதிஸ்டை செய்யப்பட்டதோடு பாம்பின் தலைப்பகுதி போன்ற தோற்றம் உள்ள மலைப்பகுதி ஒன்றின் கீழ் நாக சிலையையும் பிள்ளையார், முருகன், வைரவர், ஐயனார் போன்ற தெய்வங்களை பிரதிஸ்டை செய்து விசேட தருனங்களில் வழிபட்டு வருகின்றனர்.
எனினும் இப்புராதன இடத்திற்கு செல்வதற்கு சீரான வீதியின்மையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ளும் மக்கள் நீர் வசதியின்மை மற்றும் மலைகளில் ஏறுவதற்கான படிக்கட்டுக்கள் இன்மையாலும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை மலைப்பகுதியில் காணப்படுகின்ற தமிழ் பிராமி எழுத்துக்களும் குகை பகுதியும் பாதுகாக்கப்படாமையால் அழிவடைந்து செல்லும் நிலைக்கு செல்வதாக இவ்விடத்தை தற்போது பரிபாலித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே வடமாகாணசபையும், வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர் தொல்லியலை எடுத்தியம்பும் இப்பிரதேசத்தை பாதுகாப்பதற்கும் வேறு பிரதேசங்களில் இருந்து மக்கள் பார்வையிட்டும், இவ்வாலயத்தை தரிசித்து செல்வதற்கும் ஏற்ற ஒழுங்குகளை செய்து தரவேண்டும் என இப்பிரதேசத்தை பரிபாலித்து வருபவர்கள் தெரிவிக்கின்றனர்.
தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி இந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது அரை நிர்வாணப் போராட்டம் காரணமாக தெலுங்கு திரைப்பட உலகம் அதிர்ச்சி அடைந்தது. தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீதும் அடுக்கடுக்கான புகார்களை அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், ”நடிகை ஸ்ரீரெட்டி தனது பிரச்சினை உண்மை என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும், தொலைக்காட்சிகளில் இதுபோன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்துவது சரியல்ல, தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர, நீதி வழங்க முடியாது” என கூறியிருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஸ்ரீரெட்டி இதற்கு கண்டனம் தெரிவித்து திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு வருத்தப்படுகிறேன், அவரை சகோதரராக கருதியதற்கு என்னையே நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினார்.
அப்படிக் கூறியதுடன் நில்லாமல் காலில் இருந்த செருப்பைக் கழற்றி பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு செருப்பால் அடித்துக்கொள்கிறேன் என்று கன்னத்தில் செருப்பால் அடித்துக்கொண்டார், பின்னர் தவறான செய்கையையும் காண்பித்தார். செய்தியாளர்கள் முன்னிலையில் செருப்பால் அடித்துக்கொண்டதன் மூலம் மீண்டும் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பவன் கல்யாணை விமர்சித்ததால் அவரது ரசிகர்கள் டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஸ்ரீ ரெட்டியை வறுத்தெடுத்து வருகின்றனர். ஸ்ரீ ரெட்டிக்கு ஏராளமான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் நடிகை மாதவி லதா தலைமையில் பவன் கல்யாண் ரசிகர்கள் ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன் ஸ்ரீரெட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
ஸ்ரீரெட்டிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். போலீசார் விரைந்து வந்து அவர்களை கலைந்து செல்ல சொன்னார்கள். அவர்கள் மறுத்ததால் மாதவி லதா மற்றும் பவன் கல்யாண் ரசிகர்களை கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியா – காஷ்மீரில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் கொழும்பில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்னால் இன்று காலை நடத்தப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொண்ட மக்கள் சிறுமி ஆசிபாவுக்கு நீதிகோரியும், சிறுவர்களை பாதுகாக்குமாறும் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர். இந்த போராட்டத்தில் சிறுவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆசிபாவுக்கு நீதிகோரியும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு வெளியிட்டும், மோடியின் உருவப்படத்தை வீதியில் போட்டு அதை மிதித்து தமது எதிர்ப்பை மக்கள் வெளியிட்டிருந்தார்கள். இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
“சிறுமி ஆசிபா கொலை செய்யப்பட்டதைப் போன்றே இலங்கையிலும் வித்தியா மற்றும் சேயா போன்ற சிறுமிகளும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர்.
வித்தியா, சேயாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீதி அமைச்சுக்கு முன்பாக நாம் போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அதேற்கமைய அந்த கொலைகாரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
அதேபோல் இந்தியாவிலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
கடந்த 13ஆம் திகதி ஜம்மு காஷ்மீரில் பொலிஸார் உட்பட எட்டு பேரால், 8 வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை வழிபாட்டுத்தலம் ஒன்றில் மறைத்து வைத்து பா நாட்களாக பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துள்ளனர்.
சிஞமியின் சடலம் ரஸானா வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், சிறுமி ஆசிபாவுக்கு ஆதரவாக உலகளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில் டஸ்ட்லா குயிடியரஷ் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தை சேர்ந்த 96 வயது மூதாட்டி குயாடலூப் பலேசியஸ் மிகவும் ஏழையான இவர் குழந்தைப் பருவத்தில் பள்ளிக்கு சென்று கல்வி கற்கவில்லை. விவசாய கூலி வேலை செய்து வளர்ந்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு 6 குழந்தைகளை பெற்ற அவர் கோழிகளை விற்பனை செய்து வாழ்ந்து வந்தார். வயது முதிர்ந்த நிலையில் ஓய்வாக இருக்கும் அவர் தற்போது கல்வி கற்க விருப்பம் கொண்டுள்ளார்.
அதற்காக பள்ளிக்கு சென்று எழுத படிக்க கற்று வருகிறார். முதியோர் கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டில் தொடக்க கல்வி பயில தொடங்கினார். 4 ஆண்டுகளில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி பாடங்களை படித்து முடித்துள்ளார்.
தற்போது நன்றாக எழுத படிக்க கற்றுக் கொண்டுள்ள பலேசியசி இதுகுறித்து தெரிவிக்கையில் :- எனது காதலர்களுக்கு ‘காதல் கடிதம்’ எழுத வேண்டும் என்ற ஆசையில் எழுத படிக்க தொடங்கினேன். தற்போது என்னால் காதல் கடிதங்கள் எழுத முடியும்’ என நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
உயர்நிலை பள்ளி கல்வியை முதியோர் கல்வி திட்டத்தில் படிக்க முடியாது. எனவே டஸ்ட்லா குடியரஷ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து விட்டார். முதல் நாள் பள்ளிக்கு சென்ற அவர் தன்னை விட 80 வயது குறைந்த மாணவ மாணவிகளுடன் சகஜமாக பழகினார். பள்ளிக்கு சென்ற அவரை அனைவரும் கைதட்டி வாழ்த்தினர். தனது 100 ஆவது வயதுக்குள் உயர் கல்வியை முடிப்பேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா மற்றுமொரு மலையாளப் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் மலையாளப் பட உலகம் தான் மூத்த நடிகைகளுக்கு சொர்க்கம்.
திருமணத்திற்கு பின் 40 வயதுகளில் கூட கதாநாயகிகள் வேடங்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கான கதைகளையும் வலுவாக உருவாக்குகிறார்கள். மற்ற மொழிகளில் திருமணமான நடிகைகளை அக்கா, அண்ணி வேடங்களுக்கு முத்திரை குத்திவிடுவார்கள்.
தமிழ், தெலுங்கு அளவிற்கு மலையாளத்தில் சம்பளம் கிடைக்காது. ஆனாலும், கதாநாயகிகள் தனித்து திறமையை வெளிப்படுத்த முடியும்.
தமிழில் 6 படங்கள் கைவசம் வைத்து நம்பர்-1 நடிகையாகத் திகழும் நயன்தாரா, அடுத்தடுத்து மலையாளத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்ஷன் டிராமா என்ற படத்தில் நடிக்கிறார்.
அடுத்து ‘கோட்டயம் குர்பானா’ என்ற மலையாளப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து மலையாள மார்க்கெட்டைப் பிடிக்க அவர் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருப்பதால், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகியாகவே நீடிக்க மலையாள படங்கள் பக்கம் கவனம் நயன்தாரா கவனம் செலுத்துவதாகக் கூறுகிறார்கள்.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இரண்டு ஆண்டுகளாகக் காதலிப்பதும் இருவருமே அதை உறுதிப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது
தமிழில் ஆடுகளம், ஆரம்பம் படங்கள் மூலம் பிரபலமான டாப்சி தெலுங்கு, இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அண்மையில் அவருடைய புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த படத்தை பார்த்த ரசிகர் ஒருவர்,
நீ சராசரியான பொண்ணுதான். உன்னையெல்லாம் கதாநாயகியாக்கியது யார்? என்று கேள்வி எழுப்பி கருத்து வெளியிட்டிருந்தார். இது டாப்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
கொஞ்சமாவது நடிப்பதால் தான் என்னை கதாநாயகி ஆக்கிவிட்டார்கள். நான் சராசரியான பெண்ணாக இருப்பதில் பிரச்சினை இல்லையே. இந்த உலகத்தில் நீங்கள் சொன்ன மாதிரியான சராசரி பெண்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்தார். இதனால் விமர்சனக்கருத்தை அந்த ரசிகர் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டார்.