வவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு!!

வவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு இன்று (08.04) பாடசாலையின் தலைவர் என்.எம்.இக்பால் தலைமையில் மதியா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரத விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றியதுடன், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் வரவேற்புரை உடற்பயிற்சி நிகழ்வு, விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.எம்.பாரி, சமாதனா நீதவான் ஏ.ஆர்.எம்.பைசர், அல்மதினா விளையாட்டு கழகத் தலைவர் யு.அயூப்கான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா கூமாங்குளம் பொதுநோக்கு மண்டப கட்டிடத் திறப்புவிழா!!

கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினதும் மக்களினதும் வேண்டுகோளிற்கு அமைவாக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா 2017ம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 17,00 000 பெறுமதியான இப்பொது நோக்கு மண்டப கட்டிடமானது கட்டப்பட்டு நேற்று (07.04.2018) கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மா.புஸ்பராசா தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இத்திறப்பு விழா வைபவத்தில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சுகந்தி கிஷோர் (செலாளர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை) எஸ்.ஸ்ரீநிவாசன் (மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் வவுனியா) திருமதி ஆர்.சுகனிக்கா கிராம அலுவலர் கூமாங்குளம் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்த தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

யாழ் மாணவனின் விபரீத முடிவால் பறிபோன உயிர் : அதிர்ச்சியில் பெற்றோர்!!

யாழ்ப்பாணத்தில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாணவன் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

16 வயதான தியாகேஸ்வரன் நிலாபவன் நேற்று அதிகாலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் கற்ற தியாகேஸ்வரன் நிலாபவன், கடந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு 11.30 அளவில் குறித்த மாணவன் வாந்தி எடுத்துள்ளார். அவரை கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. எனினும் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவர் உயிரிழந்து விட்டார் என்பதை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

அவர் ஒரு வகை நச்சுத் திரவத்தை அருந்தி உயிரிந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவருகிறது. ஆனால் அது என்ன திரவம் என்பது உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவரவில்லை.

மாணவன் அருந்தியது திரவம் என்பது பற்றி ஆராய அவரது உடற்பாகம் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. மரண பரிசோதனையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார்.

உயர் கல்வியை எங்கு தொடர்வது என்பது தொடர்பில் பெற்றோருக்கும் மாணவருக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உயர் கல்வியை தொடர வேண்டும் என பெற்றோர் கோரிய போதும், வட்டக்கச்சியில் உயர் கல்வி கற்றப்போவதாகக் மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வாதங்கள் இடம்பெற்ற நிலையில், மாணவனின் மரணம் சம்பவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவொரு தற்கொலையாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானிய பரிசு பொதியை நம்பி 20 லட்சம் ரூபாவை இழந்த யுவதி!!

பேஷ்புக் சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமாகி, பிரி்த்தானியாவில் இருந்து பரிசு ஒன்றை அனுப்பி வைப்பதாக கூறி, மாத்தறை ஹித்தெட்டிய பகுதியில் வசித்து 34 வயதான யுவதியிடம் 20 லட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபாவை தமது வங்கிக்கணக்கில் வைப்புச் செய்து கொண்டு, மோசடி செய்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் சிலரை கைது செய்ய மாத்தறை மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாத்தறை நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரியும் யுவதியை, பிரித்தானியாவில் இருப்பதாக கூறப்படும் சந்தேக நபர் பேஷ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதன் பின்னர் வட்ஸ்அப் மூலம் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு யுவதியுடன் ஆங்கிலத்தில் உரையாடியுள்ளார்.

யுவதிக்கு பரிசாக அனுப்ப விரும்பும், ஆடை அணிகள், தங்கச் சங்கிலிகள்,ஆபரணங்களின் படங்களை அவர் யுவதிக்கு அனுப்பியுள்ளார். செலவுக்காக 32 ஆயிரம் யூரோக்களை பரிசு பொதியுடன் அனுப்புவதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் யுவதியை வட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மற்றுமொரு நபர், நண்பன் வழங்கிய பரிசு பொதியை எடுத்து வந்துள்ளதாகவும் அதனை சுங்க திணைக்களத்தில் இருந்து விடுவிக்க பணத்தை அனுப்புமாறும் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்புக்கு அமைய, கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி முதல் 21ம் திகதி வரையான 5 நாட்கள், யுவதி, 20 லட்சத்து 52 ஆயிரத்து 500 ரூபாவை, சந்தேக நபர் வழங்கிய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.

பரிசு பொதியை அனுப்பி வைக்க வேண்டுமாயின் மேலும் மூன்று லட்சம் ரூபா தேவையெனக் கூறப்பட்டதாலும் பரிசு பொதி உறுதியளித்தப்படி கிடைக்காத காரணத்தினாலும் சந்தேகமடைந்த யுவதி இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இதனடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் : ரஜினிகாந்த்!!

இலங்கையிலிருந்து வந்து இங்கேயே தங்கியிருக்கும் இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், பல்வேறு பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவரிடம் உங்கள் ஆன்மிக அரசியலை எதிர்ப்பதாக கமல் ஹாஸன் கூறியுள்ளாரே என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ரஜினி, கமல் எனக்கு எதிரியே இல்லை என்று கூறியதோடு, தனது எதிரிகள் யார் என்பதையும் பட்டியலிட்டார்.

ஏழ்மை, லஞ்சம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் கண்ணீர், மீனவர்களின் கண்ணீர் போன்றவைதான் எனது எதிரிகள் என்றார்.

அப்போது இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து தங்கியுள்ள தமிழர்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

“இலங்கையிலிருந்து எப்போதோ வந்து இங்கேயே தங்கிவிட்ட தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ் தமிழர்னு சொல்றாங்க… என்ன இவங்க…,” என்றார்.

சாதனை படைத்த தமிழ் மாணவியை தேடிச் சென்ற நாமல் ராஜபக்ஷ!!

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8ஏ, 1பி சித்தி பெற்ற தமிழ் மாணவியான அபிஷாயினியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேரில் சென்று சந்தித்துள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரியில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளியான இவர் நடைபெற்று முடிந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 8ஏ, 1பி பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்திருந்தார்.

“க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 8ஏ, 1பி பெறுபேறுகளை பெற்ற அபிஷாயினியை சந்தித்து அவருடன் நேரத்தை செலவிட்டதால் மகிழ்ச்சியடைகின்றேன்.

இலங்கையிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இவள் ஒரு முன்மாதிரியாக இருக்கின்றாள். இவளுடைய எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்கு எனது வாழ்த்துக்கள்” என நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் அபிஷாயினியின் கல்வி நடவடிக்கைகளுக்காக கற்றல் உபகரணங்களையும் நாமல் வழங்கியுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் இலங்கையில்!!

இலங்கையில் பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள மொழியில் வெளியிடப்படும் சில தகவல்கள் ஊடாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

4ஆம் திகதி பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகளுடன் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் தடைப்பட்ட நிலையில், அவ்வாறான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் போது இலங்கையில் பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகத்தை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கபடும் என்று ஜனாதிபதியின் செயலாளரும், தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளருமான ஒஸ்டின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்!!

பிரித்தானியாவில் வாழும் இலங்கை தமிழ் இளைஞன், தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு 5 நாட்களுக்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இளைஞனின் மரணம் தொடர்பான வழங்கு இரு நாட்களுக்கு முன்னர் பிரித்தானிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது DOVER என்ற பகுதிக்கு சென்ற தமிழ் இளைஞன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த 20 வயதான ஹரீஷ் செல்வசந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி இந்த இளைஞனின் சடலம் லொறி ஒன்றின் சாரதியினால் மீட்கப்பட்டுள்ளது.

அவரது அடையாளத்தை உறுதி செய்ய தற்காலிக ஓட்டுநர் உரிமம் கொண்ட பணப்பை ஒன்று இளைஞனின் சடலத்திற்கு அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹரீஷ் தனது சொந்த வர்த்தகத்தை ஆரம்பிப்பது தொடர்பிலும், மன ரீதியான பிரச்சினைகள் குறித்து பேசினாரா என நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவரது தந்தை, தாய், சகோதரர் சகோதரி மற்றும் மூன்று உறவினர்கள் ஆகியோர், ஹரீஷ் என்ன செய்தார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிவு செய்த போதிலும், இன்னமும் அவர்கள் பதில் தேடி கொண்டுள்ளனர்.

Queen Elizabeth the Queen Mother வைத்தியசாலையில் நடந்த பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ஆபத்தான எரி காயங்கள் காணப்பட்டதக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது முக வடிவம் மட்டுமே அவரை அடையாளம் காண உதவியுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 24ஆம் திகதி Dover என்ற இடத்திற்கு சுற்றலா பயணம் மேற்கொள்வதற்காக அதிவேக ரயிலில் அவர் பயணம் செய்ய ஆயத்தமாகியுள்ளார். அத்துடன் 5 லீற்றர் பெற்ரோலும் அவர் கொள்வனவு செய்துள்ளார்.

அன்னைய தினம் 7.30 மணியளவில் இரவு உணவை எடுத்து கொண்டவர் வீட்டின் மேல் மாடிக்கு சென்று ஆடைகளை அணிந்து கொண்டுள்ளார். அவரது தனது தோற்பட்டை பையில் பெற்ரோலையும் மறைத்து கொண்டுள்ளார்.

“நான் வேலைக்கு செல்கின்றேன்” என அவரது தாயிடம் கூறியுள்ளார். அதுவே அவர் தன்னிடம் பேசிய இறுதி வார்த்தைகள் எனவும் இறுதியாக சந்தித்த தருணம் எனவும் நீதிமன்றத்தில் தாயார் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் இறுதியாக ஹரீஷை கண்ட தந்தை “மகன் மகனாக இல்லை” எனவும், ஏதோ சரியாக இல்லை என்பதனையும் உணர்ந்தார். எனினும் மகன் தற்கொலை செய்து கொள்வான் என தான் நினைக்கவில்லை என தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தனது கற்கையை நிறைவு செய்வதற்கு முன்னரே பல்கலைக்கழகத்தை விட்டு விலகினார். முதல் ஆண்டில் பரீட்சையில் சித்தியடைந்தவர் இரண்டாவது ஆண்டு தவறிவிட்டார் என ஹரீஷின் தந்தை செல்வசந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பல்கலைகழகத்தில் இருந்து விலகியவர் இரண்டு தொழில் செய்ய ஆரம்பித்தார். பீட்சா விற்பனை நிலையம் ஒன்றில் உயிரிழப்பதற்கு 3 வாரங்களுக்கு முன்னர் வேலையில் இணைந்தார். அங்கு தான் ஏதாவது பிரச்சினை இருக்கும் என நான் நினைக்கவில்லை.

Dover பகுதிக்கு நாங்கள் இதற்கு முன்னர் சென்றத்தில்லை. Doverக்கும் ஹரீஷிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என என்னால் நினைக்க முடியவில்லை.

Southampton பல்கலைக்கழகத்தில் கற்றவர் கணிதம் மற்றும் வர்த்தக பிரிவில் சிறப்பாக கற்ற ஒரு மாணவராகும். எனினும் இரண்டாவது தவணையில் அதனை அவர் தவறவிட்டார் என தந்தை குறிப்பிட்டார்.

அவர் தனது முதல் ஆண்டில் பல்கலைகழகத்தில் சிறப்பாக கற்று மகிழ்ச்சியாக தான் இருந்தார் என அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

அவர் சமூகத்துடன் நாட்களை கழித்தார். வித்தியாசமாக ஆடைகளை அணிய ஆரம்பித்தார். எனினும் அதிக களியாட்டங்களில் கலந்து கொண்டமையினால் பரீட்சையில் சித்தியடையவில்லை.

2016ஆம் ஆண்டு இறுதியில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் பல்கலைகழகத்தை விட்டு வெளியேறினார் என நண்பர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த இந்து குடும்பத்தில் பிறந்த ஹரீஷ் உயிரிழப்பதற்கு முன்னர் தெற்காசிய நாடு ஒன்றிற்கு ஒரு மாதம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

தனது முதல் வருட பல்கலைகழக காலத்தில் தான் ஒரு நாத்திகர் என அவர் குறிப்பிட்டார் என அவரது நண்பர் கூறியுள்ளார்.

ஒரு மாத பயணத்தின் பின்னர் அவர் நன்கு மாற்றமடைந்தார். தனது வாழும் வீட்டை விட்டு வெளியேற விரும்பினார். அவரது குறுந்தகவல் பதில்கள் எல்லாம் வித்தியாசமாக காணப்பட்டது. இவ்வாறான நிலையில் “விடயங்கள் நன்றாக போய்க்கொண்டுள்ளது” என குறுந்தகவல் அனுப்பினார்.

பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார். அது அதிர்ச்சியாக இருந்தது என நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவே எண்ணப்படுகின்றது. அவரது மரணத்தில் மூன்றாவது தரப்பினர் தொடர்புப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை இன்னமும் பெற்றோர் உட்பட யாரும் அறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!!

வவுனியாவில் பல கொள்ளைச்சம்பவங்களுடனும் தனிமையில் இருக்கும் பெண்களிடம் கொள்ளையடித்து வந்த நபரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் பொருப்பதிகாரி மற்றும் சார்ஜன்ட் ஜேசுதாசன் தலைமையிலான குழுவினர் திட்டமிட்டு கைது செய்துள்ளனர்.

அம்பலாங்கொடையை சேர்ந்த 30வயதுடைய அப்துல் ரஸாக் முஹமட் ரமீஸ் என்கின்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்ட நபராகும்.

இதேவேளை கடந்த வருடம் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் சங்கிலியை அபகரித்தார் என்ற குற்றச்சாட்டில் வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த இம்பராசா தயாபரன் என்கின்ற நபரையும் கைது செய்துள்ளதுடன் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

அரிசி உணவை தவிர்த்தால் பறிபோகும் உயிர் : வினோத நோயால் அவதிப்படும் இளம்பெண்!!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் குடியிருக்கும் இளம்பெண் ஒருவர் வினோதமான உணவு ஒவ்வாமை நோயால் உயிருக்கு போராடி வருகிறார்.

உலகில் 150,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் இந்த வினோதமான நோயால் லண்டனில் உள்ள 25 வயது சோபி வில்லிஸ் அவதிப்பட்டு வருகிறார். mast cell activation syndrome என மருத்துவர்களால் குறிப்பிடப்படும் இந்த நோயால் அவதிப்பட்டு வரும் சோபி வில்லிஸ் அரிசி உணவு மற்றும் காய்கறிகளை மட்டுமே உணவாக உட்கொண்டு வருகிறார்.

அரிசி உணவுகளை தவிர்த்தால் அது அவரது உடலில் கொப்புளங்கள், சிராய்ப்புகள் மற்றும் உதடு தடித்த கோரமாகுதல் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்காக பயன்படுத்தப்படும் முகத்திரை வடிவமைப்பாளராக செயல்பட்டுவரும் சோபி வில்லிஸ் ஈஸ்ட், இறைச்சி வகைகள், மீன், பால் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் எதுவும் சாப்பிடுவதில்லை. மட்டுமின்றி வெயில் மற்றும் இடி காரணமாகவும் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

குறித்த வினோத நோய் காரணமாக நாள் ஒன்றுக்கு 60 மாத்திரைகள் அவர் எடுத்துக் கொள்கிறார். இந்த விசித்திர நோய் தொடர்பில் அறிந்திராதபோது சாதாரணமாக உணவுகளை எடுத்துக் கொண்டு நாள் தோறும் ஒவ்வாமையால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதன் முறையாக மருத்துவர்கள் தீவிர சோதனைக்கு பின்னர் சோபிக்கு ஏற்பட்டிருக்கும் நோய் குறித்து கண்டுபிடித்துள்ளனர்.

2014ல் நோய் தீவிரமடைந்த நிலையில் தொடர்ந்து 2 ஆண்டு காலம் நாட்டில் உள்ள சுமார் 30 மருத்துவமனைகளுக்கு சோபி சென்று வந்துள்ளார்.

2016 ஆகஸ்டு மாதம் மருத்துவர்கள் இவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் என்னது என கண்டுபிடித்த பின்னரே சோபி உணவு கட்டுப்பாடு மற்றும் பகலில் வெளியே செல்லாதவாறு கவனித்துக் கொள்கிறார்.

மனைவி கண் முன்னே போன உயிர் : நண்பர் இறப்பைத் தாங்க முடியாமல் கதறி அழுத பெண் அமைச்சர்!!

தமிழகத்தில் உயிரிழந்த நண்பரின் உடலைப் பார்த்து அமைச்சர் நிலோபர் கபில் கதறி அழுதக்காட்சி அங்கிருந்தவர்களை உருக வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னரசு. ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த லாரி லாரி சாலை ஓரத்திலிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது.

இதில் மின்கம்பம் சரிந்து கம்பி அறுந்து பொன்னரசு மீது விழுந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தன் கண் முன்னே கணவர் உயிரிழந்ததைக் கண்ட சாந்தி அந்த இடத்தில் கதறி அழுதார். சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் உயிரிழந்த பொன்னரசு மற்றும் சாந்தியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னரசுவின் உடல் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

பொன்னரசு, அமைச்சர் நிலோபர் கபிலின் குடும்ப நண்பராவார். அவர் இறந்த தகவல் கிடைத்ததும் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறைக்கே நிலோபர் கபில் சென்றார். அங்கு பொன்னரசுவின் உடலைப் பார்த்து அமைச்சர் கதறி அழுதார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்தவர்களும், கண் கலங்கியுள்ளனர்.

மனிதனை கொன்று சாப்பிட்ட மனித மிருகம் : பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

வெனிசுலாவைச் சேர்ந்த Luis Alfredo என்னும் மனிதன் பண்ணை உரிமையாளர் ஒருவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டபோது அவரது வேண்டுகோளின்படிதான் அவரைத் தான் கொன்றதாகக் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பண்ணை உரிமையாளர் கேட்டுக்கொண்டதன்பேரில்தான் அவரைக் கொன்றதாகவும், சடங்கின் ஒரு பகுதியாகத்தான் அதைச் செய்ததாகவும் கூறியுள்ளான்.

அந்த மனிதனின் உடலின் பெரும்பகுதியைத் தின்று விட்ட Luis, அந்த மனிதனின் இரத்தம் மற்றும் சாம்பலைப் பயன்படுத்தி அவர் கேட்டுக்கொண்டது போலவே படங்கள் வரைந்ததாகவும் தெரிவித்துள்ளான்.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள படங்கள் இரத்தம் மற்றும் சாம்பலால் வரையப்பட்டனவா என்று தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். Luisஐ பொலிசார் “நர மாமிசம் தின்னும் ஓவியர்” என்று அழைக்கின்றனர்.

Douglas Rico என்னும் விசாரணை அதிகாரி Luis தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

வவுனியா அரச அதிபரின் புதுவருட கொண்டாட்டமும் காணாமல் போனோர் போராட்டமும்!!

வவுனியா அரசாங்க அதிபரின் வழிநடத்தலில் மாவட்ட செயலகம் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வவுனியா நகரசபை மைதானத்தில் நடாத்தவுள்ள புதுவருட கொண்டாட்டம் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் வன்னி இராணுவ கட்டளை தலைமைப்பீடம் இணைந்து வவுனியா நகரசபை மைதானத்தில் புதுவருட கொண்டாட்டத்தினை இலங்கை தொலைக்காட்சி ஒன்றின் அனுசரணையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந் நிலையில் நகரசபை மைதானத்திற்கு அருகாமையில் காணாமல் போனோரின் உறவுகள் 408 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புதுவருட கொண்டாட்டங்கள் 10 ஆம் திகதி நடத்தப்படவேண்டிய தேவையுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

காணாமல் போனோரின் உறவுகள் போராட்டம் நடத்தியதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்பட்டாத நிலையில் இராணுவத்தினரை வைத்து அவர்களது போராட்ட தளத்திற்கு அருகாமையிலேயே கொண்டாட்டம் நடத்துவது அவர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக அமையும் என தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இந் நிகழ்வுக்கு வர்த்தகர் சங்கம் உடந்தையாக செயற்படுவது தொடர்பிலும் பெரும் அதிருப்தி கொண்டுள்ளனர்.

அண்மையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் இவ்வாறான இராணுவ அனுசரணையில் இடம்பெறும் கொண்டாட்ட நிகழ்வுகள் காணாமல் போனோரின் உறவுகளுடைய போராட்டத்தை மலினப்படுத்துவதாக அமையும் என தெரிவித்திருந்த நிலையிலும் வவுனியா அரசாங்க அதிபர் இவ்விடயம் தொடர்பாக கரிசனை கொள்ளாது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை கொண்டு இந் நிகழ்வுக்கான ஒழுங்கமைப்புகளை செய்து வருகின்றமை தொடர்பாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இராணுவ பிரசன்னம் இல்லாது சிறிய அளவில் இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கலாம் எனினும் மற்றவர்களது உணர்வுகளை புரிந்துகொள்ளாது அதிகாரிகள் நடந்துகொள்வதும் அதற்கு சில அதிகாரிகள் தூபமிடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் இல்லை : சுமந்திரன் அதிரடி!!

அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

2 வருடங்கள் மட்டுமே வடமாகாண முதலமைச்சராக இருப்பேன் எனவும், பின்னர் மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்கவேண்டும் என்றும் கூறிய ஒருவரை 5 வருடங்கள் முதலமைச்சராக இருக்க வைத்திருக்கிறோம். இனியும் அவரை கஸ்டப்படுத்த கூடாது.

ஆகவே அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர் என கூறியுள்ளார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை 2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக அழைத்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு முதலமைச்சர் ஒரு நிபந்தனையை விதித்திருந்தார்.

2 வருடங்கள் மட்டுமே முதலமைச்சராக இருப்பேன் என்றும் அதன் பின்னர் தம்பி மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை என்றும் அவர் கூறியுள்ளார்.

பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசிய போது 2 வருடங்கள் என கூறுவது பொருத்தமற்றது என கூறியிருந்தார்.

இதற்கு நான் மட்டுமல்ல பலர் சாட்சியாக இருக்கிறார்கள். இவ்வாறு 2 வருடங்கள் மட்டுமே முதலமைச்சராக இருப்பேன் என கூறிய ஒருவரை 5 வருடங்கள் முதலமைச்சராக இருக்க வைத்து விட்டோம்.

அவரை இனியும் கஸ்டப்படுத்த கூடாது. ஆகவேதான் அடுத்த மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி.விக்னேஷ்வரன் நிறுத்தப்படமாட்டார் என நான் கூறியது உண்மையே என சுமந்திரன் கூறியுள்ளார்.

வவுனியா பொலிஸாரின் பரிசோதனைச் சிறப்பு அணிவகுப்பு நிகழ்வு!!

2017ஆம் ஆண்டிற்கான வவுனியா பொலிஸாரின் பரிசோதனைச் சிறப்பு அணிவகுப்பு நிகழ்வு நேற்று (07.04.2018) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியாவில் நேற்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வானது பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆரம்பமாகி வவுனியா நகரின் ஊடாக சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தினைச் சென்றடைந்தது.

அத்துடன் குறித்த அணிவகுப்பில் சகல பொலிஸ் பிரிவுகளையும் சேர்ந்த பொலிஸ் அணிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வன்னிப்பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொலிஸ் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் நடந்த கோரச் சம்பவம் : பெண்கள் உட்பட ஐவர் பலி!!

கண்டி பன்வில பிரதேசத்தில் தலுக் ஓயா ஆற்றில் குளிக்க சென்ற 5 பேர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இன்று நடந்த இந்த சம்பவத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்ததுடன் மற்றுமொரு ஆண் காணாமல் போயுள்ளார்.

கண்டி வூலு கங்கையின் கிளை ஆறான தலுக் ஓயா ஆற்றில் குளித்த போது ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் கொல்லப்பட்டவர்கள் கொழும்பு கொத்தொட்டுவ பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன நபரை தேடும் பணிகளை பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.