மருத்துவமனை வாசலில் உயிரிழந்த பிச்சைக்காரர் : கேள்விக்குறியான மனிதாபிமானம்!!

மும்பையில் மருத்துவமனை வாசலில் பிச்சைக்காரர் ஒருவர் பரிதாபமாய் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பை நகரில் டிட்வாலா ரயில்வே நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் சந்துமாமா. தினமும் இவருக்கு கணேஷ் என்பவர் பிச்சை போடுவது வழக்கமாம்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரயில்வே நிலையத்தில் சந்துமாமாவை காணாததால் தேடிப் பார்த்தார்.

அருகில் இருக்கும் ஒரு ரூபாய் கிளினிக் அருகே அமர்ந்திருந்த சந்துமாமாவிடம் வழக்கம் போல் உணவு மற்றும் காசை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். மாலையில் வந்து பார்த்தபோது அதே இடத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

மருத்துவமனை பூட்டியிருந்ததால், உடனடியாக ரயில்வே பொலிசாருக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் சந்துமாமாவை மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் உதவியுடன் தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல் உடல்நலம் சரியில்லாத நிலையில் இருந்ததாகவும், சிகிச்சைக்காகவே மருத்துவனை சென்றிருக்கலாம் எனவும் கணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக தான் வந்தார் என தங்களுக்கு தெரியாது என ஒரு ரூபாய் மருத்துவமனை மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி பிச்சைக்காரருக்கு மனிதநேயத்துடன் யாரும் உதவி அளிக்காதது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.

சுயமாக ஹெலிகொப்டர் தயாரித்து சாதனை படைத்த இலங்கை மாணவன்!!

இலங்கையில் மாணவன் ஒருவர் பறக்கும் ஹொலிகொப்டர் ஒன்றை சுயமாக தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

திம்புலாகல, அரலங்வில விலயாய மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் நான்கு பேர் பயணிக்க கூடிய விமானம் ஒன்றை தயாரித்துள்ளார்.

உயர்தரத்தில் கல்வி கற்கும் ஹிரத்த பிரசாத் என்ற மாணவரே இவ்வாறு ஹெலிகொப்டரை தயாரித்துள்ளார்.

பாடசாலையில் இடம்பெற்ற தொழில்நுட்ப கண்காட்சிக்காக அவர் அந்த ஹெலிகப்டரை தயாரித்து சமர்ப்பித்துள்ளார். ஹெலிகொப்டரை தயாரிப்பதற்கு சுமார் மூன்று மாதங்களை செலவிட்டுள்ளார்.

தயாரிப்புக்காக தகடு, இரும்பு, தையல் இயந்திரங்களின் பகுதிகள், கணினி பகுதிகள் ஆகியவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாணவர் இதற்கு முன்னர் பல புதிய நிர்மாணிகளை மேற்கொண்டு பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார்.

தான் தயாரித்த ஹெலிகொப்டரை வானில் செலுத்துவதற்காக அனுமதி வழங்குமாறு குறித்த மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிம் ஜாங் திடீர் மனமாற்றம் : அமெரிக்காவிற்கு நட்பு அழைப்பு : அதிர்ச்சியில் உலக நாடுகள்!!

வட கொரியா நாடு அணு ஆயுதங்களை கைவிட முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக அமெரிக்காவின் உதவியை கோரியுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் இன் செய்தி தொடர்பாளர்கள், வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் இருப்பதாக கூறப்படுகிறது.

தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாகவும், வட கொரியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் சந்திக்கும் போது இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவும், வட கொரியாவும் இரகசிய மற்றும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் கலந்து கொள்ள இருக்கும் இந்த பேச்சுவார்த்தை மே மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

அமெரிக்க மற்றும் கொரிய பிரச்சனை இதில் தீர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து தகவல்களை தெரிவிக்காமல் இரண்டு நாடுகளும் இரகசியமாக வைத்துள்ளன.

ஆனால் இனி அணு ஆயுத சோதனை நடந்த போவதில்லை என்று கிம் அறிவித்து இருந்தார். சோதனை செய்வது மட்டுமில்லாமல் அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட வடகொரியா முடிவு செய்துள்ளது.

அதன்படி இனி புதிதாக அணு ஆயுத சோதனை நடத்த கூடாது, ஆணு ஆயுத தயாரிப்பு செய்ய கூடாது என நிறைய கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ள இருக்கிறார்கள். அமெரிக்காவிடம் இது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

புத்தாண்டு தினத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் கூறிய ஒரு வசனத்தாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் தெரிவித்த கருத்துக்கள் பின்நாட்களில் பூதாகரமாக வெடித்திருந்தன.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறியும் வடகொரியா அணு ஆயுத பரிசோதனைகளை செய்து வந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையில் போர் வெடிக்கும் அபாய நிலை தோன்றியிருந்தது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டால், மூன்றாம் உலகப் போர் ஏற்படும் என்று பரவலாக செய்திகள் வெளியாகிய இருந்தன.

இந்த நிலையில் கிம் ஜாங் இற்கு ஏற்பட்ட திடீர் மனமாற்றமும், அமெரிக்காவிற்கு விடுத்த நட்பு அழைப்பு தொடர்பிலும் உலக நாடுகளும் மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெறவுள்ள களியாட்ட நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!

வவுனியா மாவட்ட செலயகம் இராணுவத்தினருடன் இணைந்து நடாத்தும் களியாட்ட நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகங்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (09.04) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களால் 410 ஆவது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வரும் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அண்மையில் நியூஸ்ட் பெஸ்ட் ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்தும் தமது பிள்ளைகளை தேடி தாம் 410 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட செயலகம், வர்த்தகர் சங்கம், பிரதேச செயலகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களை ஒன்றிணைத்து இராணுவத்தினருடன் இணைந்து புதுவருடத்தையொட்டி களியாட்ட நிகழ்வு நடத்துவதை கண்டித்தும் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பாவனையை கட்டுப்படுத்தக்கோரியும் இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தாம் தமது பிள்ளைகளைத் தேடி ஒரு வருடத்தைக் கடந்தும் போரடிக் கொண்டிருக்கையில் தமது போராட்டத்திற்கு அருகில் இராணுவத்தினரால் களியாட்ட நிகழ்வு நடத்தப்படுவது தமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் தம்மை மேலும் வேதனைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் களியாட்டத்திற்கு ஆதரவு வழங்குபவர்கள் தம்மையும் தமது தாயாக யோசிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.‌

பேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில்!!

பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பேஸ்புக்கில் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனுப்பிய குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.

குறைந்தகவல்களை திரும்ப பெறும் புதிய வசதி அனைவருக்கும் வழங்கப்படும் வரை மார்க் சூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள் எதையும் அழிக்கப்பட மாட்டாது என பேஸ்புக் தெரிவித்துள்ளது. குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்குவது குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டது.

மேலும் இந்த வசதியை மெசன்ஜர் செயலியின் என்க்ரிப்டெட் வெர்ஷனில் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயனர் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால் சரியான நேரத்தில் அனுப்பிய குறுந்தகவல் அழிக்கப்பட்டு விடும். குறுந்தகவல்களை அழிக்கும் வசதி அனைவருக்கும் வழங்குவோம். எனினும் இதற்கு சில காலம் தேவைப்படும் என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் மெசன்ஜரில் வழங்கப்படும் ரகிய அம்சம் கொண்டு அனுப்பிய குறுந்தகவல்கள் தானாக அழிக்கப்பட்டு விடும். இதற்கான கால அளவு குறைந்தபட்சம் 5 நொடிகளில் இருந்து அதிகபட்சம் 24 மணி நேரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய அம்சம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது எவ்வாறு வேலை செய்யும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

இதுவரை தனது சேவைகளில குறுந்தகவல்களை திரும்ப பெற இருவித அம்சங்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்கள் அனுப்பிய குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அவற்றை அழிக்க வேண்டும். எனினும் அழிக்கப்பட்ட குறுந்தகவல் உங்களின் குறுந்தகவல் அழிக்கப்பட்டு விட்டது (Your message has been deleted) என்ற வார்த்தையாக மாற்றப்படும். இன்ஸ்டாகிராமில் இந்த அம்சம் குறுந்தகவலை பயனர் பார்க்காத வரை அழிக்க முடியும்.

விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் தம்பதியினர் திருமணம்!!

அமெரிக்காவில் விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பேரன், பேத்திகள் முன்னிலையில் தம்பதியினர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவ 83 வயதான ஹரால்ட் ஹோலண்ட்க்கும் 78 வயதான லில்லியன் பார்ன்ஸ் என்பவருக்கும் கடந்த 1955ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ஐந்து குழந்தைகளைப் பெற்று சந்தோசமாக வாழ்ந்து வந்த தம்பதியினர் கடந்த 1967ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற இவர்கள் தனித்தனியே மறுமணமும் செய்து கொண்டனர்.

இருவருமே கடந்த 2015ஆம் ஆண்டு தங்கள் துணையை இழந்தனர். மகன், மகள்கள் திருமணமாகி சென்றதையடுத்து இருவரும் தனிமையில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. எனவே அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தங்கள் விருப்பத்தை இரு குடும்பத்தினரிடம் தெரிவித்து திருமணத்திற்கு அனுமதி பெற்றனர். இதையடுத்து எதிர் வரும் 14ஆம் திகதி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது குடும்பத்தார் திட்டமிட்டுள்ளனர்.

இத்திருமணம் குறித்து ஹோலன்ஸ் – பார்ன்ஸ் ஜோடி கூறுகையில், “கடைசி காலத்தை நாங்கள் இருவரும் ஒன்றாக கழிக்க விரும்புகிறோம்” என கூறினர்.

50 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருமணம் மூலம் கணவன் – மனைவியாகப் போகும் அந்த ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சிரியாவில் மீண்டும் இரசாயன ஆயுத தாக்குதல் : நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி?

சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் உள்ள கூட்டாவின் டுமாநகரின் மீது இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதலில் 100ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மீட்பு பணியாளர்களும் மருத்துவ பணியாளர்களும் இதனை உறுதி செய்துள்ளதுடன் இதனை உறுதிப்படுத்தும் படங்களை வெளியிட்டுள்ளனர்.

பல அமைப்புகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

கிளர்ச்சிக்காரர்களின் கூட்டா ஊடக நிலையம் 75 பேர் மூச்சுதிணறி இறந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

ஹெலிக்கொப்டரில் இருந்து இரசாயனவாயு அடங்கிய பரல் குண்டுகள் வீசப்பட்டன என கூட்டா ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவை சேர்ந்த தொண்டர் மருத்துவ அமைப்பொன்று 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பிபிசிக்கு தெரிவித்துள்ளது.

சுமார் 180 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பின் பேச்சாளர் எறிகணை வீச்சு தொடர்ந்து இடம்பெறுவதால் அந்த பகுதிக்கு சென்று உயிரிழப்பை உறுதி செய்ய முடியாமலுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இரசாயன ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகளை உடைய பலருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த தகவல்களை சிரியா நிராகரித்துள்ளது.

புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகள் கண்டுபிடிப்பு!!

இந்தியாவின் சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

ராய்ப்பூரிலுள்ள இந்திரா காந்தி க்ரிஷி விஷ்வவித்யாலயா மற்றும் மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோய் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

ஆய்வுகளின் முடிவில் சத்தீஸ்கரின் பாரம்பரியமிக்க மூன்று அரிசி வகைகளான கத்வான், மகாராஜி, லைச்சா முதலிய அரிசிகளில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அரிசி வகைகள் நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய்களையும் குணப்படுத்தும் பண்புகளைப் பெற்றுள்ளன.

அதிலும், லைச்சா வகை அரிசி புற்றுநோய் செல்கள் பரவுவதைத் தடுத்து, செல்களை அழித்து குணப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வரிசி பல நோய்களை நீக்கும் மருந்தாகவும், தோல் நோய்களுக்கு மருந்தாக குறிப்பாக பஸ்தார் பழங்குடி இனத்தினர் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அரிசிகளை நாள் ஒன்றுக்கு 200 கிராம் உட்கொள்வதன் மூலம் பலன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.

புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் பலி!!

வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

நீர் நிலைகளை அண்டியுள்ள மற்றும் அப்பகுதிகளுக்கு செல்லும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

அத்துடன் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நீர்நிலைகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் அங்கு நீராடும் நடவடிக்கையில் ஈடுபடும் போது பாதுகாப்பாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நீர்நிலைகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மாற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை முழுவதும் நுட்பமான முறையில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் தம்பதியர்!!

இலங்கையின் பல பகுதிகளில் நுட்பமான முறையில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை – சிசிர வத்தை பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து நுட்பமான முறையில் இந்த தம்பதி கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.

தம்புள்ளை, மாத்தளை, கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் கதவுகளை திறந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

உபகரணங்களை பயன்படுத்தி காரின் கதவை திறந்து பெறுமதியான உபகரணங்கள், கையடக்க தொலைபேசிகள், கடன் அட்டை, பணப்பை ஆகியவற்றை திருடிய தம்பதியை கடந்த 6ஆம் திகதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் 34 வயதுடைய ஆண் மற்றும் 30 வயதுடைய பெண்ணாகும். அவர்களுக்கு நான்கு மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் இடைக்கிடையே பிரதேசங்களை மாற்றி நாட்டின் பல பகுதிகளில் கொள்ளை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பல மோசடிகளில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இந்த தம்பதியினர் கிட்டத்தட்ட 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றை திருடி அதன் பொருட்களை பிரித்து விற்பனை செய்துள்ளனர்.

இந்த தம்பதியினர் தம்புள்ளை பிரதேசத்தில் 8000 ரூபாய்க்கு மாதாந்த வாடகை அடிப்படையில் வீடு ஒன்றை பெற்றுக் கொண்டு இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் சூரியன்!!

சூரியனின் வடக்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது.

இதனால் நாளை 12.11மணி அளவில் கல்குடா, வெலிக்கந்தை, பொலன்னறுவை, அம்பன்பொல மற்றும் மதுரங்குளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும். இதனால் அப்பகுதியில் அதிக வெப்பத்துடனான சூழல் காணப்படும்.

வெளியில் செல்லும் மக்கள் தமது பாதுகாப்பை கருத்திற்கொண்டு செல்லுமாறும், கடும் வெப்பம் நிலவும் இடங்களில் வெகுநேரம் இருப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நக்கீல்ஸ் வனத்திற்கு சென்ற 7 பேர் மாயம் : தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார்!!

நக்கீல்ஸ் வனப்பகுதியை பார்வையிடச் சென்ற 7 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் 6ஆம் திகதி வீட்டிலிருந்து நக்கீல்ஸ் வனப்பகுதியை பார்வையிட சென்றதாகவும், இதுவரை அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடைய தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று இரவு பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ரங்கல, உடுதும்பர, இறத்தோட்டை மற்றும் லக்கல பொலிஸார் இணைந்து காணாமல் போயுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளவத்தையை சேர்ந்த தமிழ் யுவதி உட்பட ஐவர் பரிதாபமாக பலி!!

கண்டியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

வெள்ளவத்தையை சேர்ந்த தமிழ் யுவதி உட்பட ஐவர் நீராட சென்றிருந்த போது நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கண்டிக்கு சுற்றுலா சென்றிருந்த போது ஹுலு கங்கையில் மூழ்கிய நிலையில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

ஐந்து பேரினதும் பிரேத பரிசோதனைகள் கண்டி பொது மருத்துவமனையில் இன்று இடம்பெற்றன. அதனை தொடர்ந்து உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த அனர்த்தம் காரணமாக 23 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களே உயிரிழந்துள்ளனர்.

ஹங்வெல்ல பிரதேசத்தின் ஆடை தொழிற்சாலையொன்றில் பணி புரியும் ஊழியர்கள் சிலர் சுற்றுலா பயணம் சென்றிருந்த போது இந்த அனர்தம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

கண்டியை சேர்ந்த 26 வயதான செறில் அன்ரியா பென்ஸ், கொழும்பு வெள்ளவத்தை சேர்ந்த 26 வயதான கஜனா சிவநாதன், ராவதாவத்தை சேர்ந்த 23 வயதான பாத்திமான நுஸ்ரா, கனேமுல்லயை சேர்ந்த 30 வயதான சுசில் மஞ்சுள, கிரிந்திவெலவை சேர்ந்த 28 பிரியங்கர பிரேம்குமார் என்பவர்களே இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

வவுனியா சிற்றி கிட்ஸ் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா -2018

வவுனியா சிற்றி கிட்ஸ் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா   கடந்த 07.04.2018  சனிக்கிழமை  முன்பள்ளி  மைதானத்தில்    முன்பள்ளி நிர்வாகி   திரு .S. நந்தசீலன்  தலைமையில்  இடம்பெற்றது .

மேற்படி  நிகழ்வில்  வவுனியா பொது வைத்திய சாலையின்  வைத்தியர்  திருமதி . ரேவதி  அற்புதராஜா  பிரதம விருந்தினராகவும்  திரு.பேர்னாட் ( முன்னாள் பீடாதிபதி  வவுனியாதேசிய கல்வியியல் கல்லூரி ) திரு. ரி. பூலோகசிங்கம் (அதிபர் – வவுனியா இந்து கல்லூரி ) திரு .ரி. செந்தில்ரூபன் (நகரசபை உறுப்பினர் -இறம்பைக்குளம் வட்டாரம்) ஆகியோர் கௌரவ  விருந்தினராகவும்   கலந்து கொண்டனர்.

மேற்படி  முன்பள்ளி மாணவர்களின்  பான்ட்  வாத்திய  அணி விருந்தினர்களை  அழைத்து வர  பிற்பகல் 3.00 மணியளவில்   விளையாட்டு போட்டி  ஆரம்பமாகியது.   நிகழ்வின் போது சிறுவர்களின்  விளையாட்டு    நிகழ்வுகள்  மற்றும் இடைவேளை உடற்பயிற்சி  நிகழ்வுகள்  மற்றும்  வினோத உடை  நிகழ்வு  என்பனவும் இடம்பெற்றது .

 

 

 

வவுனியாவில் வட மாகாண தொழில் முனைவோர் வர்த்தக கண்காட்சி!!

சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோர் அறிமுகப்படுத்தும் நன்மைக்காக “வன்னி முயற்சியாளர் 2018” என்ற பெயரில் வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று (08.04) நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் மற்றும் மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானப்பத்ரன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார் ஆகியோருடன் இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

60 விற்பனை நிலையங்கள் மற்றும் 100 தொழில் முனைவோர் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் இன்று நடைபெற்றது.

வவுனியா மாவட்டச் சிறு வணிகப் பிரிவு, ஜவுளி, மசாலா, அலங்கார மற்றும் மருத்துவ தாவரங்கள், அழகு கலாச்சாரம் மற்றும் வரவிருக்கும் புத்தாண்டுகளுக்கான பல சேவைகளை அடைய முடியும் எனவும் தர பொருட்களை குறைந்த விலையில் பெற முடியும் என்று தெரிவித்தார்கள்.

ஸ்வஸ்தி கடன் திட்டம் மூலம் நாட்டில் சிறு தொழில்களை ஆரம்பித்துள்ள தொழில் முனைவோர் தற்போது உயர் தரத்திற்கு மேம்படுத்துவதற்குத் தொடங்கியுள்ளதாக சிறு தொழில் மேம்பாட்டு அதிகாரசபையினர் தெரிவித்தனர்.