முள்ளிவாய்க்காலில் தாயையும் 3 சகோதரர்களையும் இழந்தபோதும் 9A சித்திபெற்று சாதித்த மாணவன்!!

முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்ற இராசேந்திரம் பிரதீபன் என்னும் மாணவன் கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் 9ஏ பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளார். இது தொடர்பில் குறித்த மாணவன் இன்று கருத்து தெரிவிக்கையில்..

இறுதி யுத்தத்தின் போது(2009) எனது தாயும் மூன்று சகோதரர்களும் படையினரின் எறிகணைத் தாக்குதலினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் என் மனதை பெரிதும் பாதித்திருந்த நிலையில் என் தந்தையின் அரவணைப்பினாலும் அதிக ஊக்கத்தினாலும் இன்று 9A பெறுபேறுகளை பெற்றுள்ளேன்.

தொடர்ந்து கணிதத்துறையில் கல்வியை கற்று ஒரு விமானியாக வருவதே என் எதிர்கால இலட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தோற்றிய 12 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

அத்துடன் 8 மாணவர்கள் சித்தியடைந்து தொடர்ந்து உயர்தரத்தில் கற்பதற்கு தகுதி பெற்று, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக குறித்த பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நாகபூசணி அம்மனின் ஆராதனையின் போது நிகழ்ந்த அதிசயம்!!

வவுனியா செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று (30.03.2018) இடம்பெற்று வருகின்றது.

இன்று குறித்த ஆலயத்தில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மனின் திருவுருவ சிலைக்கு ஆராதனை செய்யும் பொழுது திடீரென அங்கு தோன்றிய நாக சர்ப்பம் அம்மனின் சொருபத்தில் ஏறி ஆராதனை முடியும் மட்டும் காட்சியளித்துள்ளது.

மேலும் ஆராதனை முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டது. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட மக்கள் குறித்த அதிசயத்தை காண்பதற்கு கோவிலுக்கு படையெடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் விலங்குகள் : அதிர்ச்சி புகைப்படம்!!

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக, அந்த விண்கலத்தில், ‘மாஸ்ட்கேம்’ என்ற கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்த படங்களை ஆராயும் நிபுணர்கள் அடிக்கடி பல்வேறு விதமான யூகங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு படத்தில், விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது. படத்தைப் பார்த்த நிபுணர்கள் டைனோசர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து மறைந்து விட்டன. டைனோசருக்கும் முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம் என்று வேற்றுகிரகவாசிகள் பற்றி ஆராயும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

‘செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கு இதுவே சாட்சி’ என்று ஆன்லைன் பத்திரிகை ஒன்றில் ஒருவர் கட்டுரை எழுதி உள்ளார்.

சமீபத்தில் அனுப்பிய புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே எகிப்தில் இருப்பதை போன்ற பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்து உள்ளது.

இது குறித்து வேற்றுகிரக உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் கூறும் போது பண்டைய நாகரிகத்தினர் கட்டிட பிரமிடைப்போல அது மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு உள்ளது. அது ஒளியின் தந்திரமாக தெரியவில்லை ஒரு அறிவார்ந்த கட்டிடமாக உள்ளது. இந்த பிரமிடு கார் அளவில் உள்ளது. ஆனால் பெரிய அமைப்பு முறை செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் இருக்கலாம். இதனால் பண்டைய எகிப்து நாகரிகத்தினர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து இருக்க கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். என்ற தகவலை வெளியிட்டனர்.

தற்போது சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தை ஆராய்ந்த நிபுணர்கள் செவ்வாய்கிரக பாறைகளில் மனித எலும்பு வடிவங்கள் படிந்து இருக்கிறது. அது சிறிய வடிவிலான தலை மற்றும் சிறிய அளவிலான உடல் பகுதி மற்றும் இரண்டு குழந்தைகளின் கைகள் போல் எலும்புகள் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். அதே போன்ற அமைப்புடன் மற்றொரு வடிவமும் காண்படுகிறது. இது பல மீட்டர் நீளம் உள்ளதாக உள்ளது. என கூறி இருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது.

இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறும் போது, இது செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதராமாகும். இது செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க்கும் ஒரு நம்பிக்கையாகும் என்று நான் நம்புகிறேன். என கூறினார்.

இந்த படத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆராய்ந்தேன், பூமியில் இடங்களில் பறவைகள் பார்வைக் காட்சிகளை அதை ஒப்பிடும்போது, அது வட துருவத்திற்கு அடுத்ததாக இருக்கிறது.

இந்த படங்கள் அனைத்தும் குறைந்த ரிசுலேசன் கொண்டதாகும். இருந்தாலும் இதில் நீங்கள் தெளிவான நீர் கோடுகள் பார்க்க முடியும், ஏரிகள், தாவரங்கள் அல்லது சில வகையான வாழ்க்கை வடிவங்கள் நீர் ஆதாரத்தின் மீது வெளிப்படும் விதமாக இருக்கும்.

நீல் அவரது YouTube சேனலில் டிஸ்க்லோக் ஸ்கிரீன் என்ற பெயரில் அசல் காட்சிகள் வெளியிட்டார்.

பிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல்!!

விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள்.

மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

இப்படம் வெளியாகும் முன்பே, டீசர், டிரைலர், பாடல்கள், என பல சாதனைகளை படைத்தது. தற்போது இப்படத்திற்கு பிரிட்டன் நாட்டில் பெரிய கவுரவம் ஒன்று கிடைத்துள்ளது.

பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018க்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த வெளிநாட்டுப் படம் பிரிவில், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதை தட்டிச்சென்றுள்ளது.

சினேகனுக்கு ஜோடியாகும் ஓவியா!!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா, ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா3’ படத்தில் நடித்து வருகிறார். அனிதா உதீப் இயக்கத்தில் ‘90எம்.எல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார்.

மேலும் ‘களவாணி-2’ படத்தில் விமல் ஜோடியாகவும் நடிக்கிறார். இந்த நிலையில், பாடல் ஆசிரியரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவருமான சினேகன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ஓவியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சினேகன் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ‘பனங்காட்டு நரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சினேகன் ஜோடியாக ஓவியாவை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

எனினும் சினேகன் ஜோடியாகவோ அல்லது முக்கிய கதாபாத்திரத்திலோ ஓவியா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிதைந்த நாணயத்தாள்களுக்கான தடை நீக்கம் : மத்திய வங்கியின் முடிவில் மாற்றம்!!

வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணய நோட்டுக்களை மாற்றும் சேவையை நாளைய தினத்திற்கு (2018.03.31) பின்னரும் தொடர்ந்து முன்னெடுப்பதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை 2018.03.31ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றிக்கொள்வது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள பாரியளவான கோரிக்கைகளையும் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும் கருத்திற்கொண்டு இலங்கை மத்திய வங்கியானது வேண்டுமென்று சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட மற்றும் உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றும் சேவையினை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அத்தகைய நாணயத்தாள்களை இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் அல்லது அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, நுவரெலியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் அமையப் பெற்றுள்ள பிரதேச அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு அல்லது முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் சேர்த்து பின்வரும் விலாசத்திற்கு அத்தகைய நாணயத்தாள்களை பதிவுத் தபால் மூலம் அனுப்புமாறு இத்தால் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய விண்ணப்பப் படிவத்தினை இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திலிருந்து (www.cbsl.gov.lk), பிரதேச அலுவலகங்களிலிருந்து அல்லது ஏதேனும் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிக் கிளையிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், சிறிய புள்ளியொன்றின் அல்லது கோடொன்றின் வடிவில் அடையாளமிடப்பட்டுள்ள நாணயத் தாள்கள் வேண்டுமென்று உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களாக கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்பதுடன் அத்தகைய நாணயத் தாள்களை கொடுக்கல்வாங்கல்களுக்காக தொடர்ந்தும் பயன்படுத்த முடியும்.

சாதாரணமாகத் தேய்வடைதல், சாதாரணமாக கிழிதல் அல்லது இயற்கை அனர்த்தங்களின் காரணமாக சேதமடைந்த நாணயத்தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் பெற்றுக்கொள்ளும் சேவை எவ்விதமாற்றங்களுமின்றி தொடர்ந்தும் இடம்பெறும்.

மேலும், வேண்டுமென்று சேதமாக்கப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட மற்றும்/அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை கண்டுபிடிப்பதற்காக நாணயத்தாள் செயன்முறைப்படுத்தல் இயந்திரங்களை அளவுத்திருத்தம் செய்வதற்கு அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தன்னியக்கக் கூற்றுப் பொறி (ATM) அல்லது வேறு நாணயத்தாள் கையாளுகின்ற இயந்திரங்களிலிருந்து பொதுமக்கள் உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாளொன்றினைப் பெற்றுக்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் அத்தகைய நாணயத்தாளை அருகிலுள்ள வங்கிக் கிளையில் மாற்றிக்கொள்ளலாம் என்று இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நயன்தாராவுக்கு நவம்பரில் திருமணம்?

நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் இதையே பதிவிட்டவண்ணம் இருக்கிறார்கள்.

நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவரும் காதல் வயப்பட்டதும், பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொண்டதும் பழைய கதை. இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்றும் கிசுகிசுத்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று சொன்ன வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது.

கேரளாவில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க ரகசியமாக நிச்சயதார்த்தம் நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே இருவரும் அமெரிக்காவுக்கு பறந்து ஜாலியாக சுற்றிவிட்டு கேரளா திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டனர்.

இந்த படங்கள் குறித்த கேள்விக்கு, “நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன்” என்று விக்னேஷ் சிவன் பதில் அளித்தார்.

நயன்தாராவுக்கு இப்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, தெலுங்கில் ‘சை நரசிம்ம ரெட்டி’ என்று கைநிறைய படங்கள் இருக்கிறது. அஜித்குமாரின் விசுவாசம் படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.

மறைந்த ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்திலும் அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க பேசி வருகின்றனர். அடுத்த சில மாதங்கள் சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருப்பார் என்றும், இந்த வருடம் இறுதியில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கும் என்றும் இருவருக்கும் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கும் முடிவில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மணல் புயல் காரணமாக சீனாவில் கடும் பாதிப்பு!!

மங்கோலியா நாட்டில் இருந்து சீனாவை தாக்கும் மணற் புயலினால் உருவான காற்று மாசு காரணமாக தலைநகர் பீஜிங் மற்றும் சில மாகாணங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

மங்கோலியாவின் எல்லையோர பகுதியில் உள்ள கோபி பாலைவனப் பகுதியில் இருந்து சீனாவை மணற் புயல் தாக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், நேற்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து வீசிய மணற் புயலினால் தலைநகர் பீஜிங் உட்பட சுமார் 15 இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு மணல் மற்றும் தூசினால் ஏற்பட்ட மாசு நிறைந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

வெனிசுலா சிறையில் தீ விபத்து : 68 கைதிகள் உயிரிழப்பு!!

வெனிசுலா நாட்டில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 68 கைதிகள் உயிரிழந்துள்ளனர். சிறையிலிருந்து தப்பிக்க சிலர் தீ வைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

வெனிசுலா நாட்டின் வாலன்சியா நகரில் உள்ள சிறையில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறை முழுவதும் தீ பரவியதில் 68 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.

சிறையில் தீப்பிடித்த தகவல் பரவியதையடுத்து, கைதிகளின் உறவினர்கள் சிறை முன்பு திரண்டனர். அவர்களை கலவர தடுப்புப் பொலிஸார் தடுக்க முற்பட்டபோது, மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை பொலிஸார் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரிய ஸ்டீவன் ஸ்மித்!!

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மன்னிப்புக் கோரியுள்ளதுடன் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுடனான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, பந்தை சேதப்படுத்திய முறைப்பாடு தொடர்பாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் ஓராண்டிற்கு விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பந்தை சேதப்படுத்திய பான்கிராப்டுக்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் IPL 2018 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என IPL தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்து சிட்னியில் ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் மல்க பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்ததாவது,

அவுஸ்திரேலிய அணியின் தலைவராக பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு தலைவனாக தோற்று விட்டேன். நான் செய்த தவறால் ஏற்பட்ட பாதிப்பை கண்டிப்பாக சரி செய்வேன்.

செய்த தவறுக்கான தண்டனையை வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பேன். இந்த விவகாரத்தினால் நான் இழந்த மரியாதையை திரும்பப் பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. உலகிலேயே கிரிக்கெட் மிகச்சிறந்த விளையாட்டு. கிரிக்கெட் எனது வாழ்க்கை. என் வாழ்க்கையை நான் திரும்பப் பெறுவேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் அனைத்தையும் வீணாக்கிவிட்டேன்.

இந்த விவகாரத்தில் யார் மீதும் பழி போட விரும்பவில்லை. ஒரு தலைவனாக அனைத்து தவறும் என் மேல் தான் உள்ளது. கிரிக்கெட் மீது நான் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறேன். நான் விளையாட்டின் மூலம் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறேன். அவுஸ்திரேலியாவிற்கு ஏற்பட்ட வலிக்காக ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என கூறினார். பேசமுடியாமல் கதறி அழுத ஸ்மித்தை அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்தினர்.

https://www.youtube.com/watch?v=YW4Kmzsj1t8

பேரூந்தில் தீ விபத்து : உடல் கருகி 20 பேர் பலி!!

தாய்லாந்தில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலையாட்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் தீ விபத்து ஏற்பட்டு 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ் ஒன்று
அந் நிறுவனத்தின் 50 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத விதமாக பஸ்ஸின் நடுப்பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியுள்ளது.

பஸ்ஸிலிருந்த தொழிலாளர்கள் பலர் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். மீத முள்ளவர்கள் தப்பிக்க முயற்சித்த போது பஸ் முழுவதும் தீ பரவியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இருந்த போதிலும் இந்த விபத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த தீ விபத்து தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடாத்தி வருகின்றனர்.

விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ!!

பெங்களூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் கெம்பா என்ற ரோபோ பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் எல்லா தகவலையும் தனது நினைவில் வைத்துக் கொண்டு அதை தேவையான நேரத்தில் பயன்படித்தும் நினைவாற்றல் கொண்ட வகையில் ரோபோ ஒன்று வடிவமைக்க பட்டிருக்கும்.

அதே போல பெங்களூரு விமான நிலையத்தில், பயணாளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் கெம்பா என்ற ரோபோ வடிவமைக்க பட்டுள்ளது. இந்த ரோபோவால் உள்ளூர் தகவல்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிவிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் மூன்று மாணவர்கள் விசேட சித்தி!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் மூன்று மாணவர்கள் விசேட சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

விக்கினேஸ்வரன் ரஜீபன் 6A, 2B, 1C சித்திகளையும், நிர்மலன் சரண்ணியா 6A, 1B, 2C சித்திகளையும், சிவாஜி சோபிகா 6A, 2B, 1S ஆகிய பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை செய்துள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல் திருட்டு சர்ச்சை : பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை!!

பேஸ்புக் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தால், பேஸ்புக் நிறுவனம் உலகளவில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.

அதன் செயல்பாடு பற்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளன. இதனால், அதன் ‘கிரைம் ரேட்’ கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் ‘பேஸ்புக்’ உலகம் முழுவதும் 200 கோடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

இதில், தங்களுடைய பொழுதுபோக்கு, பிடித்த விஷயங்கள், பெயர், படித்த பள்ளி, கல்லூரிகள், வேலை, பணியாற்றும் நிறுவனம், ஊர், குடும்ப உறவினர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை மக்கள் சேமிக்கின்றனர்.

இத்தகவல்கள், அவர்களுக்கே தெரியாமல் பல்வேறு முறைகேடான செயல்களுக்கு பயன்படுத்தப்படும் திடுக்கிடும் தகவல் சமீபத்தில் வெளியானது.

தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை மாற்றுவது, வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த தகவல்களை கொடுத்து வியாபாரத்தை பெருக்குவது, இந்த தகவல்களின் அடிப்படையில் வர்த்தக வியூகத்தை மாற்றுவது, விளம்பரங்கள் செய்வது என பல்வேறு செயல்களுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 2016ல் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் செல்வாக்கை உயர்த்துவதற்காக பேஸ்புக்கை பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்களை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனம் திருடியதாக சமீபத்தில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து, அடுத்த பூகம்பம் இந்தியாவில் வெடித்தது. 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் செல்வாக்கை உயர்த்துவதற்காக, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனத்துடன் அக்கட்சி ஒப்பந்தம் செய்து இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பகிரங்க குற்றச்சாட்டை கூறினார்.

இந்திய அரசின் இந்த கடும் நடவடிக்கையை தொடர்ந்து, பல்வேறு உலக நாடுகளும் விழித்துக் கொண்டுள்ளன. பேஸ்புக் நிறுவனமும், கேம்பிரிட்ஜ் அனலிடிகாவும் தங்கள் நாடுகளிலும் தகவல் திருட்டில் ஈடுபட்டுள்ளதா என தீவிர விசாரணை நடத்துகின்றன.

இதனால், ‘கிரைண்டரில் சிக்கிய இட்லி மாவு போல்’ பேஸ்புக் நிர்வாகம் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

தகவல் திருட்டு சம்பவத்துக்காக ஜுகர்பெர்க் பகிரங்க மன்னிப்பு கேட்ட போதிலும், தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் அதன் செயலை எந்த நாடும் மன்னிப்பதாக இல்லை.

இதற்கிடையே, ‘கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ நிறுவனம் இதுவரை திருடி சேர்த்த பேஸ்புக் தகவல்கள் அனைத்தையும் இங்கிலாந்து அரசு அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.

பேஸ்புக் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கலால், உலகளவில் அதன் பங்குகளின் மதிப்பு 15 சதவீதம் சரிந்துள்ளது. இதனால், பல நூறு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் திருட்டு குற்றச்சாட்டால் ஆட்டம் கண்டுள்ள பேஸ்புக் நிர்வாகம், எதிர்காலத்தில் இதுபோன்ற திருட்டுகள் நடப்பதை தடுப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்தது. அடுத்த சில வாரங்களில் இவை செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறியுள்ளது.

பேஸ்புக் எடுத்துள்ள சில பாதுகாப்பு நடவடிக்கைகள்,

தற்போது, ‘பிரைவசி செட்டிங்’ மற்றும் முக்கியமான ‘டூல்’களை மக்கள் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இனிமேல், பேஸ்புக் பயன்படுத்துவோர் ‘யூசர் செட்டிங்’கில் எளிதாக நுழைந்து, தகவல்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தலாம்.

தங்களின் பேஸ்புக் முகவரியை யார் பார்க்கிறார்கள், அவர்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தேவையில்லாத அல்லது விரும்பாத தகவல்களை உடனடியாக ‘டெலிட்’ செய்யலாம். அதற்கான ‘டூல்’சும் ‘செட்டிங்’கும் ‘ஷார்ட் கட்’ முறையில் இனிமேல் எளிதாக கையாளும் வகையில் அமைக்கப்படும்.

பேஸ்புக்கின் சேவை மற்றும் புள்ளி விவர கொள்கை, பேஸ்புக் எப்படி தகவல்களை சேகரிக்கிறது, அவற்றை எப்படி பயன்படுத்துகிறது என்பது பற்றிய விவரங்களை மக்கள் இனிமேல் வெளிப்படையாக தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் கிடைக்கும் தகவல்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களுக்கு பயன்படுத்த ‘பங்குதாரர் பிரிவு’ (பார்ட்னர் கேட்டகரிஸ்) என்ற வசதி பயன்படுத்தப்படுகிறது. இது இனிமேல் ரத்து செய்யப்படும்.

வெளிநாட்டில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் இளைஞன் அகால மரணம்!!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் லோகேஸ்வரன் துரைசாமி அகால மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 15ம் திகதி இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சிட்னியில் ஓபன் என்ற புறநகரில் வசித்த லோகேஸ்வரன் துரைசாமியின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதிகாலை வேலை முடித்து வீடு திரும்பும் போது அவசரகால உதவி பெற அழைக்கும் தொலைபேசி எண்ணை அழைத்து பொலிஸாருடன் பேசியிருக்கிறார். அதன் பின்னர் குறுகிய நேரத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

பொலிஸாரின் தகவல்களின்படி அவர் மேற்கு சிட்னியின் ரயில் நிலையம் ஒன்றில் தமது உயிரை மாய்த்துக்கொண்டார் என்று தெரியவருகிறது. இப்போது லோகேஸ்வரனின் உடலம் திடீர் மரண விசாரணை அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு தேடி அவுஸ்திரேலியா வந்த லோகேஸ்வரனின் வயதான பெற்றோரும் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் இலங்கையில் உள்ளனர். அவருக்கு அவுஸ்திரேலியாவில் உறவினர்களோ நெருங்கிய நண்பர்களோ இல்லை. லோகேஸ்வரனின் இறுதிச் சடங்கை சைவ முறைப்படி எளிமையாக நடத்துமாறு குடும்பம் கோரியிருக்கிறது.

ஒரு புதுவரவான லோகேஸ்வரன் வசம் சேமிப்போ எதுவிதமான காப்பீடுகளோ இருக்கவில்லை. அவரது இறுதிச்சடங்குக்காக லோகேஸ்வரனின் நலன்விரும்பிகள் பணம் சேகரித்து வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்!!

இலங்கையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பேஸ்புக்கின் செல்வாக்கு மற்றும் இலங்கையின் பேஸ்புக் பயன்பாடு என்பன தொடர்பாக லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஏற்கனவே அவர்களுக்கு எதிராக காட்டப்பட்டு வந்த வெறுப்பூட்டும் செயற்பாடுகள் காரணமாக இருந்ததாக அது தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் அந்த வெறுப்பூட்டல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அதில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதியில் இணையங்கள் தொடர்பில் இலங்கையின் அரசாங்கம் தேசியக் கொள்கை ஒன்றை வகுத்து இனங்களுக்கு எதிரான வெறுப்பூட்டலை தவிர்க்க முடியும் என்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

-தமிழ்வின்-