வவுனியா கனகராயன்குளம் பொதுக்காணியில் இருந்து பொலிசார் வெளியேற வேண்டும்!!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணியை பொலிசார் விடுவிக்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது. இதன் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

வவுனியா, கனராயன்குளம் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணி பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை விடுவிக்குமாறு வவுனியா வடக்கு பிதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும், மாவட்ட அரச அதிபர் அந்தக் காணியை பொலிசாருக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார் என வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து இணைத்தலைவர் முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம் ஆகியோர் குறித்த காணிக்கு பதிலாக கனகராயன்குளம் பொலிசாருக்கு வேறு காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தற்போது விளையாட்டு பயிற்சிக்காக அதை பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிவித்ததுடன், அக் காணியை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபரிடம் இது தொடர்பில் விளக்கம் கோரப்பட்ட போது, கனகராயன்குளம் முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் இருப்பதால் தாம் முடிவு எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த காணி தொடர்பில் நடவடிக்கை எடுத்து கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சமகால மொழிபெயர்ப்பு வசதி!!

 
வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முதன் முதலாக சமகால மொழிபெயர்ப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள் இன்மையால் அபிவிருத்தி குழு கூட்டத்தில் அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெரும் சிரமமான நிலை காணப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இறுதியான நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சமகால மொழி பெயர்ப்பு வசதிகள் வேண்டும் என அரசியலவாதியொருவரால் கோரிக்கை முன்வைக்கப்ட்டிருந்தது.

இதன் நிமிர்த்தம் கூட்டத்திற்கு மொழிபெயர்ப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும் சமகாலத்தில் மொழிபெயர்ப்பை செவிமடுப்பதற்கான கருவிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்ட ஓருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மக்கள் பிரதிநிதிகள்!!

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டடப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப்படவுள்ளதுடன் முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளது.

இருப்பினும் குறித்த கூட்டத்தில் இணைத்தலைவரான வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்ளத இவர்கள் மாவட்டத்திற்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏறாவூர் இரட்டைப் படுகொலை : பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர் மீது கத்திக்குத்து!!

ஏறாவூர் முகாந்திரம் வீதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை சந்தேகநபர்களில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஒருவர் மீது நேற்று மாலை கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த உஸனார் முஹம்மது தில்ஷாத் (வயது 29) என்பவரே கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூரில் வைத்தே கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இதனை மேற்கொண்டு விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதியிலுள்ள வீட்டில் வசித்து வந்த தாயான நூர்முஹம்மது உஸைரா மற்றும் அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் 2016 செப்டெம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஒரு வருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்தனர்.

இதனையடுத்து அவர்களில் இருவர் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்திலும், மற்றைய இருவரும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலும், மேலும் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் 06ஆம் திகதியும் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா காமினி மகாவித்தியாலயம் மும்மொழி பாடசாலையாக மாற்றம் : அரசாங்க அதிபர்!!

வவுனியா நகரில் அமைந்துள்ள வவுனியா காமினி மகாவித்தியாலயத்தினை மும்மொழி பாடசாலையாக மாற்றுவதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின் போது வவுனியா அரசாங்க அதிபர் விதான பத்திரன தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது மாவட்ட செயலகத்திற்கு அருகேயிருக்கும் காமினி மகா வித்தியாலத்தினை தமிழ், சிங்கள, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளும் கற்கக்கூடிய பாடசாலையாக இதனை அபிவிருத்தி செய்வதற்கும் அதே போன்று இவ் விடயம் தொடர்பாக பரிட்சை ஆணையாளர், கல்வி அமைச்சர் செயலாளர்களுடன் கலந்துரையாடி வடமாகாணத்தின் பரீட்சைகள் நடைபெறும் நிலையமாகவும் மாற்றியமைக்க தீர்மானித்துள்ளேன் என தெரிவித்தார்.

வவுனியா தரணிக்குளம் ஸ்கைபேட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!

 
வவுனியா ஆசிகுளம் தரணிக்குளம் ஸ்கைபேட்ஸ் விளையாட்டுகழகத்தின் 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் (24.03.2018) கழக மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் உதயதாரகை மற்றும் செவ்வானம் அனியினர் மோதினர் இதன் வெற்றி சம்பியனாக செவ்வானம் அணியினர் தெரிவாகினர்.

இதன்போது வெற்றி அணிக்கு 14000 காசோலையும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டதுடன்,
இரண்டாவது அணிக்கு 6000 ரூபா காசோலையும் வெற்றி கிண்ணமும் வழங்கப்பட்டது. அத்துடன் சிறுவர் விளையாட்டுக்களும் நடைபெற்றதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இவ் விளையாட்டு நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், ஆசிகுள வட்டார பிரதேச சபை உறுப்பினர்கள், சமளங்குளம் வட்டார பிரதேச சபை உறுப்பினர், சிதப்பரபுரம் பொலிஸ் பொருப்பதிகாரி, அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் நா.ஸ்ரீதரன், தரணிகுள கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு!!

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தின் கெம்ரோவோ நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் நேற்று திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும், மேலும், 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் முதல் கட்டமாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், சுமார் 12 மணி நேரம் வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அருகிலுள்ள் கட்டிடங்களிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட்டில் ஆஸியின் மோசமான செயல் : ஐ.சி.சி.யின் அதிரடித் தீர்ப்பு ; பதவி விலகினர் ஸ்மித், வோர்னர்!!

கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலிய அணி தனது மோசமான செயலை வெளிக்காட்டியுள்ளதால் அவ்வணியின் தலைவர் ஸ்மித், உபதலைவர் வோர்னர் ஆகியோர் பதவியிலிருந்து விலகியுள்ளதுடன் அணித் தலைவருக்கு அபராதமும் போட்டித் தடையும் மற்றைய வீரரான போன்கிராப்ட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்கே இவ்வாறு அபராதமும் தடையும் மேற்கண்ட வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய 3 ஆவது நாள் ஆட்டத்தின்போது தென்னாபிரிக்க அணி துடுப்படுத்தாடிக் கொண்டிருந்தது.

அப்போது களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் போன்கிராப்ட், அவரது நீளக்காற்சட்டை பையில் இருந்து ஒரு பொருளை எடுத்து பந்தின் மீது தேய்த்தார்.

இது கேமராவில் தெளிவாக தெரிந்தது. இதுகுறித்து நடுவர் அழைத்து போன்கிராப்ட் இடம் விசாரித்தார். நடுவர் அழைத்ததும் அந்த பொருளை அவர் தனது நீளக் காற்சட்டையை கழற்றி பிறப்புறுப்பு இருக்கும் பகுதிக்குள் வைத்தார்.

போன்கிராப்ட் பந்தை சேதப்படுத்துவதற்கான அந்த பொருளை பயன்படுத்தினார் என்று சராமரியாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் ஊடகவியலாளர்களை சந்த்தித்தார்.

அப்போது பந்தை சேதப்படுத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். அத்துடன் தனக்கு இது தெரியும் என்றார். இதனால் அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அதிர்ச்சியடைந்தது. அவுஸ்திரேலியா பிரதமரும் அது தொடர்பில் கவலை தெரிவித்தார். அத்துடன் அணித் தலைவர் பதவியில் இருந்து ஸ்மித்தை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் அணித் தலைவர் ஸ்மித் மற்றும் உப தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டனர். இதனால் இருவரும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். டிம் பெய்ன் எஞ்சிய போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து ஐசிசி விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின் முடிவில் அணித் தலைவர் ஸ்மித்திற்கு இந்த டெஸ்டின் சம்பளம் அனைத்தையும் அபராதமாக (100 சதவீதம்) விதித்ததுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்துள்ளது. இதனால் ஜோகன்னஸ் பேர்க்கில் நடைபெறவுள்ள இறுதி டெஸ்டில் ஸ்மித் பங்கேற்க வாய்ப்பில்லை.

இந்த விவகாரத்திற்கு காரணமான போன்கிராப்ட்டிற்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமும், ஐ.சி.சி. விதிமுறையின் சரத்து 2-ஐ மீறியதற்காக மூன்று மறைப்புள்ளிகளையும் ஐ.சி.சி. வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணொளியைக்காண

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு!!

2017ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைப் பெறுபேறுகள் 28ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மறுநாள் கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு பரீட்சைப் பெறுபேறுகள் விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா – யாழ் வீதியில் இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம்!!

 
வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா – யாழ் வீதியில் அழகு சேர்த்த ஆங்கிலேயர் காலத்து வாகை மரங்கள் வீதி அபிவிருத்தியின் காரணமாகவும், போடப்பட்ட காப்பெட் காரணமாகவும் முதிர்வு காரணமாகவும் உயிர்ப்பிழந்து காணப்பட்டது.

இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு பல தரப்பினரும் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டிருந்தது.

இந் நிலையில் வீதியோரத்தில் நின்ற காய்ந்த மரத்தின் பாரிய பகுதிக்கு விசமிகள் சிலர் நேற்று தீயிட்டுள்ளனர்.

இதன் காரணமாக மரத்தின் பல பகுதிகளுக்கும் தீ பரவியிருந்த போதிலும் அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் பௌசர் மூலம் நீர் கொண்டு வந்து தீயை அணைத்துள்ளனர்.

தீ அணைக்கப்பட்டிருக்காவிட்டால் தீயினால் எரிந்த மரம் வீதியில் வீழ்ந்து பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : கடும் அச்சத்தில் பொதுமக்கள்!!

இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிக்டர் அளவில் 6.4 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் எவையும் வெளியாகவில்லை.

இந்தோனேசியாவின் டனிம்பார் தீவில் உள்ள சாம்லகி பகுதியில் கடலை அண்மித்த வடமேற்கே சுமார் 222 கிலோமீற்றர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கம் காரணமாக பொது மக்கள் கடும் அச்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே – சந்திரிக்கா குமாரதுங்க மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் 46 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் விளையாட்டு மைதானத்திற்கான நிதியம் ஆரம்பம்!!

 
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான ஊடக சந்திப்பு ஒன்று இன்று (25.03) கல்லூரியின் அதிபர் பொன்னையா சிவநாதன் தலைமையில் நடைபெற்றது.

1962 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியானது பண்டாரிக்குளம், உக்குளாங்குளம், வேப்பங்குளம், தவசிக்குளம், கூமாங்குளம் மற்றும் தோணிக்கல் கிராமங்களைச் சேர்ந்த 1200 குடும்பங்களைச் சேர்ந்த 2100 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்கள்.

இப்பாடசாலைக்கு நிரந்தரமான விளையாட்டு மைதானம் இல்லாமை ஒரு பெரும் குறையாகவே இருந்து வருகிறது.
இவ் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பாடசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளர் எஸ்.சிவதர்சன் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆர்.சுரேந்தர்..

பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரிக்கு, விளையாட்டு மைதானம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு நிதியம் ஒன்றை ஆரம்பித்து நிதிகளை பெற்று வருகிறோம். அந்தவகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கும் மைதானம் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பாக மகஜர் ஒன்றை அனுப்பியிருந்தோம்.

இருந்தபோதும் பாடசாலைக்க ஒரு மைதானம் இல்லாமையானது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறோம். பாடசாலையின் மைதானத்திற்கு காணிகளை இனங்கண்டு அதை பெற்றுக்கொள்ள முயற்சி மேற்கொண்ட தருணங்களில் இப்பாடசாலையின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்களால் அக்காணிகள் கூறுபோட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் வேறு விளையாட்டு மைதானங்களில் பயிற்சிகளையும் விளையாட்டுக்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். பெற்றோர்கள் பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகள் தங்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது உண்மைதான் : ஷமி பரபரப்பு வாக்குமூலம்!!

மனைவி அல்லாமல் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்தது உண்மைதான் என பிசிசிஐ விசாரணை குழுவிடம் ஷமி ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக வலம் வந்த முகமது ஷமி மீது அவரது மனைவி சில பாலியல் குற்றச்சாட்டுகளை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மட்டுமின்றி, ஷமி சூதாட்டத்திலும் ஈடுபட்டதாகவும் அதற்கு தம்மிடம் ஆதாரம் இருப்பதாகவும் ஷமி மனைவி கூறியதால் இந்த விவகாரம் பிசிசிஐ கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில், நீரஜ் குமார் என்ற அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு ஷமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

அதில், மனைவி ஹசின் ஜஹான் அல்லாது வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததை ஷமி ஒப்புக்கொண்டுள்ளார்.

குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த அலீஷ்பா என்ற பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் அவரை பார்க்கத்தான் துபாய் சென்றதாகவும் ஷமி தெரிவித்துள்ளார்.எனினும் அவரிடம் ஒரு ரூபாய் கூட பணம் வாங்கியதில்லை என ஷமி கூறியுள்ளதால் இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையீடு இருக்காது என்றே கூறப்படுகிறது.
மேலும், இது ஷமியின் குடும்ப விவகாரம் என்பதால் கிரிக்கெட்டில் தொடர்ந்து பயணிக்க அவருக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி மாணவர் சாதனை!!

இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதியை 11மணி 55 நிமிடத்தில் நீந்தி, சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் நேற்று சனிக்கிழமை சாதனை படைத்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை முடிச்சூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் மகன் ராஜேஷ்வரபிரபு (20). தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் இவர், சிறு வயதில் இருந்தே நீச்சல் பயிற்சியில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்த நிலையில், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி சாதனை படைக்க எண்ணினார்.

இதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை இராமேஸ்வரம் வந்து 20 கடல் மைல் தொலைவை நீந்தி கடக்க மத்திய, மாநில அரசுகளிடமும், இலங்கை அரசிடமும் அனுமதி பெற்று படகு மூலம் தலைமன்னாருக்கு சென்றார்.

அவருடன் பாதுகாப்புக்காக மீனவர்கள், படகு இயந்திர பழுது நீக்குபவர் மற்றும் பயிற்சியாளர் விஜயகுமார் ஆகியோர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் தேவையான உணவு மற்றும் உபகரணங்களுடன் ஒரு குழுவாக சென்றனர்.

இதைத்தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தலைமன்னாரில் இருந்து கடலில் இராஜேஷ்வர பிரபு நீந்தத் தொடங்கினார். அவருக்கு சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு அளித்தனர்.

பின்னர் தொடர்ந்து 11 மணி 55 நிமிடங்கள் கடலில் நீந்தி பிற்பகல் 2.55 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனையை வந்தடைந்தார்.

அவருக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து நீச்சல் வீரர் ராஜேஷ்வர பிரபு கூறும் போது, “தலைமன்னாரில் இருந்து அதிகாலை 3 மணிக்கு நீந்தத் தொடங்கிய சில மணி நேரத்திலேயே கடல் வேகத்துடன் காணப்பட்டது. இதனால் எனக்கு சிரமமாக இருந்தது.

இருந்தாலும் கடலில் தொடர்ந்து நீந்தினேன். பின்னர் கரைக்கு வரும் போது நீரோட்டம் அதிகமாக இருந்ததால் இங்கும் எனக்கு சிரமம் ஏற்பட்டது.  நீந்தும் போது ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்பட்டன. அவற்றை கடந்து நீந்தி வந்தேன் என்றார் அவர்.

பால்மாவை தொடர்ந்து அதிகரிக்கப்படும் சமையல் எரிவாயுவின் விலை?

சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ், சிங்கள புத்தாண்டின் பின் விலை உயர்த்தப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உள்ளக தகவல்களை ஆதாரம் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஷெல் மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி வழங்குமாறு ஒரு மாதத்திற்கு முன்னதாக கோரியுள்ளன.

இதன்படி, சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.