வவுனியா மாவட்டத்தில் குற்றப்பணமாக சுமார் 16 இலட்சம் ரூபா அறவீடு!!

வவுனியா மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு தண்டப்பணமாக 16 இலட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபா பெறப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எ.அசோக திலகரத்தின தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோத கள் மற்றும் சாராய விற்பனை, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள் உட்பட கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த வருடத்தில் மாத்திரம் 507 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றிவளைப்பு சோதனைகளின் போது 2017ஆம் ஆண்டு மாத்திரம் 21 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் ஆழ்கடல் நோக்கி பறந்து சென்ற இராட்சத பறவை!!

 
முல்லைத்தீவு ஆழ்கடல் நோக்கி இராட்சத பறவை ஒன்று நேற்று மாலை நேரத்தில் பறந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடற்கரையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் தென்பட்ட இந்த இராட்சத பறவை வட-கிழக்கு கடல் நேராக ஆழ்கடல் நோக்கி பறந்து சென்று மறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு பெருங்கடலில் ஏற்பட்ட பல்வேறு பாதகமான காலநிலை மாற்றங்களினால் மீனவர்களின் தொழில் பாதிப்படைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று பறந்து சென்ற இந்த இராட்சத பறவை தொடர்பில் மீனவர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு பெருங்கடலில் ஏற்படும் பாதகமான மாற்றங்கள் நீங்கி கடல் நிலை சீராக வேண்டும் என்றும் மீனவர்களின் தொழில் மேம்படவேண்டும் என்றும் அண்மையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் ஒன்று கூடி இறைவழிபாடு ஒன்றினையும் செய்திருந்தனர்.

இந்த நிலையில் முல்லைத்தீவு பெருங்கடல் மீனவர்களின் தொழிலில் தற்பொழுது பாதிப்புக்கள் குறைவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவராக தமிழ்மணி அகளங்கன் தெரிவு!!

 
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவருக்கான தெரிவு நேற்று(24.03) காலை சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின்போதே கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பல வருடங்களாக நா.சேனாதிராசா வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது நகரசபைக்கு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று இடம்பெற்ற பொதுச்சபைக் கூட்டத்தின்போது புதிய தலைவராக முன்னர் உப தலைவராக செயற்பட்ட தமிழ் மணி அகளங்கன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செயலாளராக தே.அமலன், பொருளாலராக த.யசோதரன் ஆகியோர் நேற்று இடம்பெற்ற பொதுச்சபைக்கூட்டத்தின்போது தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா குளக்கட்டுப்பகுதியில் வீசப்பட்ட குப்பையிலிருந்து கிடைத்தது என்ன?

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை வீசப்பட்ட கழிவுக் குப்பையிலிருந்து வவுனியா பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவரின் முகவரியுடன் வெளிநாடு ஒன்றிலிருந்து அனுப்பிய பொதியின் கவர் ஒன்றுடன் சில கிழித்து வீசப்பட்டுள்ள பல்கலைக்கழக கடிதங்கள் குப்பைகளாக வீசப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக குறித்த வைரவப்புளியங்குளம் குளக்கட்டு பகுதியில் இனந்தெரியாதவர்களினால் வீசப்பட்டு வரும் குப்பைகளை கண்காணித்து வரும் இளைஞர்கள் விழிப்புணர்வுக் குழுவினரே இவ்வாறு வீசப்பட்டுள்ள குப்பைகளை மீட்டுள்ளபோது வவுனியா பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரியான ஒருவரின் முகவரியிடப்பட்டுள்ள வெளிநாடு ஒன்றிலிருந்து அவருக்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட பொதிகளும் பல்கலைக்கழகத்திற்குரிய சில ஆவணங்களுமே இவ்வாறு வைரவப்பளியங்குளம் குளக்கட்டுப்பகுதியில் இனந்தெரியாதவர்களினால் வீசப்பட்டுள்ளது.

குறித்த குளக்கட்டுப்பகுதியில் குப்பைகளுடன் பலரை கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இப்பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக்கட்டுப்படுத்த பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதிலும் இப்பகுதியில் குப்பைகள் வீசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாலியல் இலஞ்ச குற்றச்சாட்டுக்கு இலக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் பொலிசில் முறைப்பாடு!!

வவுனியா பாவற்குளம் படிவம் 1 சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது அக்கிராம மக்களால் பாலியல் இலஞ்ச குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரால் நேற்று (24.03) முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த குறிப்பிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்,

குறிப்பிட்ட கிராமத்தை சேர்ந்த ஒரு சிலர் தன்மீது கொண்டுள்ள காழ்ப்புணர்வு காரணமாக இவ்வாறான குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளேன். அத்துடன் பாவற்குளம் படிவம் 1 கிராமத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற முறையில் நடுநிலையாக சேவையாற்றி வருகிறேன். என் மீதான பாலியல் இலஞ்ச குற்றச்சாட்டை முற்றுமுழுதாக நான் மறுக்கிறேன் என தெரிவித்தார்.

வவுனியா பாவற்குளம் படிவம் ஒன்றை சேர்ந்த கிராம மக்கள் நேற்றுமுன்தினம் (23.03) வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வீட்டை முற்றுகையிட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பாவற்குளம் படிவம் 1 சேர்ந்த கிரம உத்தியோகத்தர் மீதும் புகார் தெரிவித்திருந்ததுடன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பேரூந்துக்காக காத்திருந்த பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோகம்!!

வவுனியா புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேரூந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று (24.03.2018) 33 வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தரம் 9 இல் கல்வி கற்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் நேற்றையதினம் (24.03.2018) மேலதிக வகுப்பிற்காக பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு சென்றுள்ளார். மதியம் 12 மணியளவில் பாடசாலை நிறைவடைந்து வீடு செல்வதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்துள்ளார்.

பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகேயுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் 33வயதுடைய இளைஞர் ஒருவர் அந்த பாடசாலை மாணவியை வர்த்தக நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த மாணவி வர்த்த நிலையத்திற்கு சென்ற சமயத்தில் அந்த இளைஞன் மாணவியுடன் பாலியல் ரீதியான சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடமிருந்து தப்பித்துச் சென்ற மாணவி வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தயார் மாணவியை அழைத்துக்கொண்டு ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட ஈச்சங்குளம் பொலிஸார் துரிதமாக செயற்பாட்டு குறித்த 33 வயதுடைய இளைஞனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த இளைஞனை இன்றையதினம் (25.03.2018) வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னினையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் கடந்த சில வாரங்களில் மாத்திரம் மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

பொலிஸார் கடமைகளை சரிவர மேற்கொண்டாலும் சமூதாயமும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகள் மீது மிகுந்த அக்கறை காட்டவேண்டும்.

வவுனியா கூமாங்குளம் முன்பள்ளியின் விளையாட்டு விழா!!

 
வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் முன்பள்ளியின் 2018க்கான வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் முன்பள்ளி ஆசிரியர் செல்வி செ.டினோஷா தலைமையில் நேற்று (24.03.2018) சனிக்கிழமை காலை 10 மணியளவில் வவுனியா கூமாங்குளம் சூப்பர் ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண உறுப்பினர் திரு. இந்திரராசா, சிறப்பு அதிதியாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச உறுப்பினர் திரு.அதிஸ்டசெல்வம், கௌரவ விருந்தினராக முன்பள்ளி கட்டமைப்புத் தலைவர் திருமதி. ந.கலைவாணி, சித்தி விநாயகர் முன்னாள் முன்பள்ளி ஆசிரியர் திருமதி. செ.சேது, ஜனாதிபதி சாரண சங்க உறுப்பினர் வ.பிரதீபன், சூப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் என்.தியாகச் செல்வம், மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

வீட்டு மேற்கூரை மீது ஏறிய இளம் மொடலுக்கு நேர்ந்த சோகம்!!

லண்டனில் வீட்டின் மேற்கூரை மீது ஏறி புகைப்படம் எடுத்த இளம் மொடல் அழகி உயிரிழந்த நிலையில் அதிகளவில் போதை மருந்தை அவர் உட்கொண்டது தெரியவந்துள்ளது.

டொனி கெல்லி (20) என் மொடல் நவம்பர் மாதம் தனது வீட்டின் மேற்கூரையின் மீது உள்ளாடையுடன் கமெராவை எடுத்து கொண்டு ஏறியுள்ளார்.

வானத்தை புகைப்படம் எடுக்க போவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு ஏறிய நிலையில் நிலைதடுமாறி பின்பக்கமாக மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து மூளையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெல்லி விபத்து நடந்து இரண்டு நாள் கழித்து நவம்பர் 14ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில் நச்சுயியல் அறிக்கையில் கெல்லி அதிகளவில் கொக்கெயின் எனப்படும் போதை மருந்தை உட்கொண்டது தெரியவந்தது.

கெல்லி மேற்கூரையிலிருந்து கீழே விழுந்த அன்று அவருடன் இருந்த பாலிய நண்பர் பேட்ரிக் ராபின்சன் கூறுகையில், சம்பவதன்று ஒரு பார்டிக்கு தனது தோழிகளுடன் சென்று விட்டு கெல்லி வீட்டுக்கு வந்தார்.

பார்டிக்கு செல்லும் போதே அவர்கள் இரண்டு பைகளில் கொக்கெயின் போதை மருந்தை எடுத்து சென்றனர்.

பின்னர் வீட்டுக்கு வந்து தோழிகளுடன் பேசிவிட்டு மேற்கூரையின் மீது ஏறி வானத்தை புகைப்படம் எடுக்க போவதாக கூறினார்.

நான் வேண்டாம் என கூறியும் அவர் கேட்காமல் மேலே ஏறினார். அப்போது கெல்லி தீடீரென கீழே விழுந்த போது அவரை பிடிக்க முயற்சி செய்தேன், ஆனால் என்னால் முடியவில்லை என கூறியுள்ளார்.

மலைப்பாம்புக்கு ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள் : வைரல் புகைப்படம்!!

 
அமெரிக்காவின் கொலம்பஸ் விலங்குகள் பூங்காவில் வசித்த ஹன்னா என்ற மலைப்பாம்புக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் CAT ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதியால் ஸ்கேன் என முடிவு செய்தனர்.

19 அடி நீளமும் 63.5 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை 6 பேர் தூக்கி, ஒரு பெட்டியில் வைத்து, ஸ்கேன் மையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கே மலைப்பாம்புக்கு சுவாசம் அளிக்கப்பட்டு, ஸ்கேன் கருவியில் வைக்கப்பட்டது.

மிக நீளமான மலைப்பாம்பு என்பதால் இரண்டாக மடித்து படுக்க வைத்ததுடன், முன்பக்கம் ஒன்றும் பின்பக்கம் ஒன்றுமாக இரண்டு முறை ஸ்கேன் எடுத்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஸ்கேன் எடுத்த பின்னர் பிரச்சனை என்ன என்பது தெளிவாக கண்டறியப்பட்டு விட்டதாகவும், இன்னும் ஓரிரு வாரங்களில் சரிசெய்யப்படும் எனவும் பூங்கா நிர்வாகி தெரிவித்துள்ளார்.

காட்டுக்குள் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த கொடுமை!!

 
சேலம் மாவட்டத்தில் காட்டுக்குள் வைத்து தனது கண்முன்னே காதலிக்கு நேர்ந்த கொடுமையை பார்த்த காதலன் ரவுடியை குத்தி கொலை செய்துள்ளான்.

வடசென்னிமலை காட்டுக்குள் ரவுடி கார்த்திக் என்பவன் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை பொலிசார் கைப்பற்றினர். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தமிழரன்- உஷா ஆகிய இருவரும் ஒருவரையாருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், உஷாவை அவரது உறவினர் வீட்டில் கொண்டுபோய் பெற்றோர் விட்டுள்ளனர்.

இருப்பினும், தனது காதலியை தேடிச்சென்ற தமிழரசன், அவரை தனிமையில் பேசுவதற்காக அவ்வப்போது அழைத்து சென்றுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று, வடசென்னிமலை முருகன் கோயில் காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். மலைமேலுள்ள கோயிலுக்குச் செல்லும் வழியில் இருந்த பாதையோரத்தில் இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், ஆத்தூரைச் சேர்ந்த வழிப்பறி திருடர்களான கார்த்தி (23), மாரிமுத்து (25) ஆகியோர், காதல் ஜோடிகள் உரையாடிக்கொண்டிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதனை காட்டி, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பின்னர், தமிழரசனின் செல்போன் மற்றும் அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு, தமிழரசனின் ஆடையை கழற்றியுள்ளனர்.

அதன் பின்னர், உஷாவின் துப்பட்டாவை பிடுங்கிய கார்த்தி, உடையைக் கழற்றும்படி மிரட்டியுள்ளார். கழற்ற முடியாது என்று உஷா சொன்னதால், அவரது உடையைக் கழற்ற மாரிமுத்து சென்றுள்ளார்.

அண்ணா வேண்டாம் வேண்டாம் என்று உஷா கதறியுள்ளார். அப்போது, தனது பக்கத்தில் வந்த கார்த்திக் கையில் வைத்திருந்த கத்தியைப் பிடுங்கிய தமிழரசன், கார்த்தியின் தொடையில் சரமாரியாக குத்தியதில், நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார் கார்த்திக். உடலிலிருந்து ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மாரிமுத்து, கார்த்தியின் தொடையைத் துப்பட்டாவால் கட்டுப்போட்டுள்ளார்.

இதனை பயன்படுத்தி, அங்கிருந்து காதல் ஜோடி தப்பியுள்ளது. இதற்கிடையில் தான், கத்தியால் குத்தப்பட்ட ரவுடி கார்த்திக் இறந்துபோன செய்தி அடுத்தநாள் பத்திரிக்கையில் வெளியானதையடுத்து, காவல் நிலையத்திற்கு சென்ற தமிழரசன் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பொலிசில் தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து தப்பியோடி மற்றொரு குற்றவாளியான மாரிமுத்துவை பொலிசார் கைது செய்து வழிப்பறி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் காதலன் தமிழரசும் கைது செய்யப்பட்டுள்ளான்.

எனக்கு பின்னால் யாரோ சதி செய்கிறார்கள் : முகமது ஷமி வேதனை!!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனக்கு பின்னால் இருந்து யாரோ சதி செய்வதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும், அவர் நாட்டுக்கும் உண்மையாக இல்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பி.சி.சி.ஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. மேலும், இது தற்காலிக முடிவுதான் என்று கூறிய பிசிசிஐ விசாரணை மேற்கொண்டது.

அதன் பின்னர், ஷமி மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறிய பி.சி.சி.ஐ, அவரை ‘B’ Grade-யில் விளையாட ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம், ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஷமி விளையாட உள்ளார்.

இந்நிலையில், இது குறித்து முகமது ஷமி கூறுகையில், என் குடும்ப பிரச்சனை காரணமாக, கடந்த 10, 15 நாட்களாக மனரீதியான Torture-யை அனுபவித்து வந்தேன், என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.

அவை கனவில் கூட நினைத்திராத கேவலமான குற்றச்சாட்டு, எனக்கு பின்னால் ஏதோ சதி இருக்கிறது. யாரோ, என் குடும்பத்தைப் பிரிக்க பார்க்கிறார்கள், இதில் இருந்து விரைவில் வெளிவருவேன் என தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் உயிருக்கு போராடும் சிறுவன் : பொலிசாக மாறிய நெகிழ்ச்சி தருணம்!!

இந்தியாவில் புற்றுநோயால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் 7 வயது சிறுவன் தன் ஆசைப்படி ஒருநாள் பொலிஸ் இன்ஸ்பெக்டராக வாழ்ந்து பார்த்துள்ளான்.

மும்பை நகரை சேர்ந்த அர்பித் மண்டல் (7) என்ற சிறுவனுக்கு கடுமையான புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸ் இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டும் என்ற அர்பித்தின் ஆசை மும்பை முலுந்த் பகுதி காவல் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒருநாள் பொலிஸ் இன்ஸ்பெக்டராக அர்பித் வாழ்ந்து பார்த்துள்ளான்.

அதன்படி காக்கி உடையணிந்து, இன்ஸ்பெக்டர் நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்து கோப்புகளை அர்பித் பார்வையிட்டான். இது சம்மந்தமான புகைப்படங்களை மும்பை பொலிசார் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து அர்பித் விரைவில் நோயிலிருந்து குணமடைய டுவிட்டரில் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

குதிரையில் வருபவர்களுக்கு உணவில்லை : மறுத்த மெக்டொனால்ட் உணவகம்!!

பிரித்தானியாவின் Norfolk பகுதியில் மெக் டொனால்ட் உணவகத்திற்கு குதிரையில் வந்து உணவு ஆர்டர் செய்தவரை ஊழியர்கள் வெளியேறும்படி கேட்டுக்கொண்ட வேடிக்கையான சம்பவம் நடைபெற்றுள்ளது.

Norfolk பகுதிலுள்ள Beccles நகரின் மெக் டொனால்ட் உணவகம் ஒன்றிற்கு குதிரையில் வந்து உணவு ஆர்டர் செய்தவரைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வாகனங்களில் மட்டுமே வந்து உணவு ஆர்டர் செய்யும் பகுதியில் திடீரென்று ஒருவர் குதிரையுடன் வந்தது கண்டு என்ன செய்வதென்று விழித்த ஊழியர்கள் பின்னர் தங்கள் மூத்த அதிகாரியை அழைத்தனர். அவர் வந்து குதிரையில் வந்தவரை வெளியே அனுப்பினார்.

வெளியே சென்ற அந்த மனிதர் குதிரையை ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு பின்னர் உணவகத்தினுள் சென்று ஒரு காபியை வாங்கிக் கொண்டு வந்து தன் குதிரையில் ஏறிச்சென்றார்.

இதேபோல் 2013 ஆம் ஆண்டு Emily Edon மற்றும் Kayleigh Jeremy என்னும் இருவர் 7 மணி நேர குதிரைப் பயணத்திற்குப்பின் மெக் டொனால்ட் உணவகத்திற்கு குதிரையில்வந்து உணவு ஆர்டர் செய்தபோது அவர்களையும் உணவகம் திருப்பி அனுப்பி விட்டது குறிப்பிடத்தக்கது.

20 பந்துகளில் சதம் அடித்து வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்!!

இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சாஹா, உள்ளூர் டி20 போட்டி ஒன்றில் 20 பந்துகளில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக கொல்கத்தாவில் ஜெ.சி.முகர்ஜி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், மோஹூன் பாகன் மற்றும் பி.என்.ஆர் ரீக்ரியேஷன் கிளப் அணிகள் நேற்று மோதின.

முதலில் களமிறங்கிய பி.என்.ஆர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர், ஆடிய மோஹூன் பாகன் அணி 7 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 152 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய விருத்திமான் சாஹா, 20 பந்துகளிலேயே சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தார்.

12 பந்துகளில் அரைசதம் கண்ட சாஹா, அடுத்த 8 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாசினார். இதில் 14 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.

இந்தப் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த சாஹாவின் Strike rate 510.00 ஆகும். மேலும், 4 கேட்ச் மற்றும் ஒரு ரன்-அவுட்டையும் சாஹா நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனை குறித்து 33 வயதான சாஹா கூறுகையில்,

‘இது சாதனையா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், நான் இங்கு வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். முதல் பந்தை சந்தித்தவுடனேயே அதிரடியாக ஆட முடிவு செய்துவிட்டேன்.

வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். மற்றவை அணித் தேர்வாளர்களிடம் தான் உள்ளது. டி20 போட்டியைப் பொறுத்தவரையில், துவக்க வீரராக களமிறங்கவே விரும்புகிறேன்.

ஆனால், சன்ரைஸர்ஸ் அணியில் தவான் மற்றும் வார்னர் உள்ளனர். எனவே, எந்த இடத்திலும் களமிறங்க தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

உயிரை விட்ட 17 வயது மாணவி : உறவினர்கள் வெளியிட்ட தகவல்!!

இந்தியாவில் நபர் ஒருவர் பள்ளி மாணவியை பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லியின் பக்தாவ்யூர் பகுதியை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, மாணவியை அவர் வீட்டின் அருகில் வசிக்கும் நபர் ஒருவர் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார்.

இதோடு மாணவியின் பெற்றோரை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார், இதன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் குற்றவாளியின் பெயர் மயங்க் (20) என தெரியவந்துள்ளது. அவரை கைது செய்யும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

ஏலத்தில் பெண்ணை வாங்கி திருமணம் செய்த இளைஞர் : நான்கே நாளில் தூக்கில் தொங்கிய சோகம்!!

இந்தியாவில் ஏலத்தில் பெண்ணை வாங்கி திருமணம் செய்து கொண்ட இளைஞர் திருமணமான நான்கு நாட்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுரோர் பூர் கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ். அந்த கிராமத்தில் பெண்களை ஏலம் எடுத்து திருமணம் செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. அதன்படி முகேஷ், மோனு என்ற பெண்ணை ரூ.22,000-க்கு ஏலம் எடுத்து திருமணம் செய்தார்.

முதலில் ரூ.17,000 செலுத்திய முகேஷ் பாக்கி பணத்தை திருமணத்துக்குப் பின் தருவதாக வாக்களித்து இருந்தார். ஆனால் திருமணம் முடிந்து 4 நாட்கள் ஆன பிறகும் அவர் ரூ.5 ஆயிரம் பாக்கி பணத்தை திருப்பி தரவில்லை.

இதையடுத்து மோனுவின் பெற்றோர் முகேஷிடமிருந்து அவளை பிரித்து அழைத்துச் சென்ற நிலையில் பாக்கி பணத்தை கொடுத்து விட்டு மனைவியை அழைத்துச் செல் என்று தெரிவித்தனர். ஆனால் முகேஷால் மீதி பணத்தை தயார் செய்ய முடியவில்லை.

இதையடுத்து மனைவி பிரித்துச் சென்றதால் மனம் உடைந்த முகேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.