வேலைவாய்ப்பு நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட இரண்டு இலங்கையர்களை மலேசிய பொலிஸார் மீட்டுள்ளனர்.
மலேசியாவில் கப்பல் பொறியியலாளர் வேலையை பெற்று தருவதாக கூறி இலங்கை வெளிநாட்டு முகவரால் குறித்த இருவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
மதுஷங்க பெரேரா எதிரிசிங்க மற்றும் துஷான் கவிந்த டி சில்வா என்ற 21 வயதான இளைஞர்களே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த தொழிலுக்காக இருவரும் தலா 325,000 ரூபாய் பணம் செலுத்தி முகவர்களின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி இரவு 11 மணியளவில் குறித்த இருவரும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இலங்கை முகவர்களால் அனுப்பப்பட்ட 2 இந்தியர்கள் குறித்த இருவரையும் வரவேற்றுள்ளனர். அத்துடன் Sibu என்ற பகுதிக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் தங்களின் கடவுச்சீட்டுகளை சமர்ப்பிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடவுச்சீட்டுகளை சமர்ப்பித்த பின்னர் Sibu பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு 25 வயதான மற்றுமொரு இந்தியர் அவர்களை காரில் கப்பலுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் கட்டாய வேலையாட்களாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, பணியிடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.
கடந்த 17ஆம் திகதி அங்கிருந்து தப்பிய இருவரும் மாலை 4.40 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
Sibu மாவட்ட தலைமை பொலிஸ் அதிகாரி Stanley Jonathan Ringgit இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார். அதற்கமைய விசாரணைகளை ஆரம்பித்தவர் குறித்த இருவரையும் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
25 வயதான இந்திய முகவர் நேற்று 5.30 மணிக்கு கைது செய்யப்பட்டார். தனிநபர் கடத்தல் மற்றும் 2007 ஆம் ஆண்டின் சட்டவிரோத ஆட்கடத்தல் சட்டத்தின் கீழ் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.











































