வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!


 
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோ 10 கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, விவேகானந்தா நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 33 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை : 2 வருடங்கள் கடந்தும் நீதியில்லை!!

ஹரிஸ்ணவி பாலியல்படுகொலை இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் நீதியைப் பெற்றுத்தர ஊடகங்களினாலேயே முடியும் என தாயார் கவலையுடன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

கடந்த 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி எனது மகள் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி (14 வயதில்) வீட்டில் தனியாக இருந்தபோது ஈன இரக்கமற்ற பாவி ஒருவனால் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று கடந்த 16ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது.

இரண்டு வருடங்கள் கடந்தவிட்ட நிலையிலும் இன்றுவரையில் எனது மகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு நீதியைப் பெற்றுத்தர ஊடகங்கள் முன்வரவேண்டும்.

இவ்விடயத்தில் இன்று வரை நீதியைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை இதற்கு ஒரு நீதியைப் பெற்றுத்தர ஊடகங்களாலேயே முடியும் எனவே வித்தியாவின் பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு ஊடகங்களின் உதவியுடன் தண்டனை வழங்கப்பட்டுவிட்ட நிலையில் எனது மகளின் பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்ட நபருக்கு இன்னும் தண்டனை பெற்றுக்கொடுப்படவில்லை, நீதியும் நிலைநாட்டப்படவில்லை. இச்சம்பவமானது மக்களின் மனதிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து சென்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறான ஒரு சம்பவம் இனிமேல் எந்ததாய்க்கும் எமது நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது. வழங்கப்படும் தண்டனை ஒரு பாடமாக அமையவேண்டும் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இப்பாலியல் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது வவுனியா நீதவான் நீதின்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இவ்வழக்கு சார்பாக பெண்கள் அமைப்பினரின் சட்டத்தரணி ஒருவரினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் இலங்கைப் பெண் தூக்கிட்டு தற்கொலை!!


 

இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குவைத் Rabya பகுதியில் பணி செய்த குறித்த பெண் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு உள்துறை அமைச்சிற்கு தகவல் கிடைத்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிடன் சடலத்தை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

தடயவியல் திணைக்களத்தில் அதிகாரிகள் சடலம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணத்தை தீர்மானிக்க ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கையின் இளம் கண்டு பிடிப்பாளர்!!

 
மட்டக்களப்பு – ஏறாவூர் நகரைச் சேர்ந்த மிருக வைத்தியரான சர்ஜுன் ஹாபிஸ் என்பவருக்கு அமெரிக்காவில் ‘இளம் ஆராய்ச்சியாளர்’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர், ஓடாவியார் வீதியை வசிப்பிடமாக கொண்ட மிருக வைத்தியர் சர்ஜுன், தனது மேற்படிப்பை கனடாவிலிருக்கும் University of Calgary என்ற பல்கலைக்கழகத்தில் Phd in Virology) தொடர்கிறார்.

இப் பல்லைக்கழகத்தில் உயர் கற்கை நெறியை மேற்கொள்ளும் இவர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

அதேவேளை கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான தொழில்நுட்ப மாநாட்டில் இவரால் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானபூர்வ துறைசார்ந்த நிபுணத்துவ ஆராய்ச்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 394 புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில், இவரது ‘இன்புழுவென்சா “H1N1 வைரஸ்” எனும் பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் சம்பந்தமான ஆய்வு இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அக்கண்டுபிடிப்புத்தான் அம் மாநாட்டில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

அமெரிக்கா, லண்டன், இத்தாலி, கனடா, ஜப்பான், ஜேர்மனி, கொரியா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஸ்பெயின், நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொண்ட புதிய கண்டு பிடிப்பாளர் வரிசையில் இவர் இளம் கண்டு பிடிப்பாளர் என்ற கௌரவப்பட்டத்தோடு பணப்பரிசில்களும் வழங்கி பாராட்டப்பட்டார்.

200 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் : கோர விபத்தில் சிக்கி இளைஞனும் யுவதியும் பலி!!

 
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் பாய்ந்தே குறித்த கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் உயிரிழந்தவர்கள் கம்பஹா பகுதியை சேர்ந்த பியூமிசாந்த் பிரசாதி பெரேரா (வயது 24) எனும் யுவதி எனவும், உயிரிழந்த இளைஞன் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து கம்பஹா நோக்கி சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த காரில் இளைஞரும், யுவதியும் மட்டுமே பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, உயிரிழந்த இருவரின் சடலங்களும் லிந்துலை வைத்தியசாலையின் பிரேதை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாதிக்க வேண்டிய மாணவன் கடலில் மூழ்கி சடலமான சோகம்!!

 
மட்டக்களப்பு – களுவங்கேணி கடலில் மூழ்கி நேற்றைய தினம் 16 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். கடலில் குளிக்கச் சென்ற வேளை மாணவன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர் 16 வயதுடைய ராஜா டென்வர் கிருபா எனவும், நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த மாணவன் க.பொ.த உயர்தரத்தில், தொழில்நுட்ப துறையில் கல்வி கற்பதற்காக, வந்தாறுமூலையிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

குறித்த மாணவனின் சடலம், செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனைகளை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து யாழ். வந்தவர் திடீர் மரணம்!!

தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து வந்தவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாயின் இறுதிச் சடங்கின் போதே இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். மல்லாகம் கட்டுவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட 2 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய இராசையா பத்மவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் உயிரிழந்த தனது தாயின் இறுதிக்கிரியைக்காக தனது மனைவியுடன் கனடாவில் இருந்து யாழ். வந்துள்ளார். இதையடுத்து தனது தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதிக்கிரியை நேற்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த காதல் கதை நிச்சயம் உங்கள் மனதை பாதிக்கும்!!

 
உத்தர பிரதேசத்தில் அசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது நீண்ட கால நண்பருக்கும் காதலர் தினத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜகத்பூரை சேர்ந்தவர் பிரமோதினி. கடந்த 2009ஆம் ஆண்டு, கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அவர் மீது அசிட்டை வீசி விட்டு தப்பியுள்ளார்.

இதனால் பிரமோதினிக்கு 80 சதவீத அளவில் காயங்கள் ஏற்பட்டன, மேலும், கண் பார்வையும் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் பிரமோதினி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், 2014ஆம் ஆண்டு சரோஜ் சாஹூ என்னும் இளைஞர், அசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வேதனையை அறிய முற்பட்டுள்ளார். அவரை அம்மருத்துவமனையைச் சேர்ந்த தாதி ஒருவர், பிரமோதினிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதன் பின்னர் பிரமோதினிக்கு உதவிகள் செய்ய துவங்கிய சரோஜ், நாளடைவில் தனது வேலையை விட்டுவிட்டு முழுநேரமும், பிரமோதினியை கவனிக்கத் தொடங்கினார்.

சரோஜின் உதவியால் பிரமோதினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ‘அசிட் வீச்சை நிறுத்துங்கள்’ என்ற பிரச்சாரக் குழுவினரின் ஆலோசனைப்படி, டில்லிக்கு சென்ற பிரமோதினி அங்கேயே சிகிச்சை பெற்றார்.

ஆனால் பிரமோதினியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத சரோஜ், அவரை தொலைபேசியில் அழைத்து அவரை மணந்துகொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தனது நிலையால் சரோஜை ஏற்க முதலில் தயக்கம் காட்டிய பிரமோதினி, சரோஜின் உறுதியான நிலைபாட்டினால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீண்ட சிகிச்சைக்கு பிறகு பிரமோதினிக்கு 20 சதவித கண்பார்வை கிடைத்துள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், அசிட் வீச்சுக்கு எதிரான பிரச்சார இயக்கத்தால் நடத்தப்படும், ‘ஷிரோஸ் ஹேங் அவுட் கபே’ எனும் காபி விற்பனை நிறுவன வளாகத்தில், சரோஜ் மற்றும் பிரமோதினிக்கு திருமண நிச்சயதார்த்த விழா, காதலர் தினத்தன்று நடந்தது.

அவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்க உள்ளதாக, அவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை நூல் அறிமுக விழா!!

 
சி.கா.செந்திவேல் எழுதிய வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை நூல் அறிமுக விழா வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க கேட்போர் கூடத்தில் இன்று (18.02.2018) பிற்பகல் 4 மணியளவில் நி.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வரவேற்புரையை யோ.கஜானன் வழங்கியதுடன் ஆய்வுரையை மருத்துவர் செல்வராஜா மதுரையின் மேலும் கருத்துரைகளை வவுனியா தேசியக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன், இயன் மருத்துவர் வேலும் மயிலும் துவாரகன், பிரஷாந்தினி பிரதீபன் (புதிய சிந்தனை பெண்கள் அமைப்பு) ஆகியோர் நிகழ்த்தினார்கள்

இந் நிகழ்வில் சழூக ஆர்வளர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

வவுனியாவில் பல்வேறு திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் பொலிஸாரினால் கைது!!

பல்வேறு திருட்டு, நகை கொள்ளை போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் ஒருவரை இன்று (18.02.2018) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மடு, கனகராயன்குளம் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவித்து வவுனியா பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயது நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும்

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்த வியாபார நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றது ஏன் : இளைஞனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரையின் திருமங்கலம் அருகே நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி, இவரது மகள் சித்ராதேவி, 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல காத்திருந்த சித்ராதேவி மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றுள்ளார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் சித்ராதேவியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொலிசார் நடத்திய விசாரணையில், ஒருதலைக்காதலால் இச்சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

சித்ராதேவியின் ஊரை சேர்ந்த இளைஞன் பாலமுருகன்(வயது 26), தனது காதலை சித்ராதேவி ஏற்காததால் இவ்வாறு செய்தது தெரியவந்தது.

கொலை மிரட்டல், தற்கொலை மிரட்டல் என பலவழிகளில் முயன்றும் சித்ராதேவி பாலமுருகனின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. தன் பெற்றோரிடம் கூறியதுடன், அனைத்து மகளிர் பொலிசிலும் புகார் செய்திருந்தார். குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவும் செய்தனர். எனவே சித்ராதேவியை பழிவாங்கும் நோக்கில் கொல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தப்பியோடிய பாலமுருகனை பொலிசார் வலைவீசி தேடி வந்த நிலையில், காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்தவரை கைது செய்தனர்.

பொலிசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், சித்ராதேவி எனது உறவினர், அவரை காதலித்தேன். என்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை, எப்படியாவது திருமணம் செய்து கொள்ள நினைத்து கடந்த செப்டம்பரில் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றேன்.

பொலிசில் புகார் அளித்ததால் பயந்து போய், அதிலிருந்து தப்பிக்க சித்ராதேவியை செல்போனில் படமெடுத்தேன். அதைபார்த்த அவர் என்னை அறைந்துவிட்டார், அப்போதே கொலை செய்ய வேண்டும் என எண்ணினேன். சரியான நேரத்திற்காக காத்திருந்த போது தான், அன்றைய தினம் தோழிகளுடன் வந்த சித்ராதேவியை மடக்கினேன்.

கத்தியை காட்டி மிரட்டியதால் மற்றவர்கள் பயந்து ஓடிவிட்டனர், கத்தியை கழுத்தில் வைத்து அழுத்திக்கொண்டே பெட்ரோல் ஊற்றி தீ மூட்டினேன், இதனால் என் கையிலும் தீக்காயம் ஏற்பட்டது.

பேருந்தில் ஏறி புதுப்பட்டி வந்த என்னை பொலிசார் கைது செய்தனர் என தெரிவித்துள்ளார்.

வேலைக்காரருக்கு 600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கொடுத்த முதலாளி!!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், தனது வேலைக்காரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கஜ்ராஜ் சிங் ஜடேஜா, திருமணமாகாத இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.

இதனையடுத்து அவரிடம் 40 ஆண்டுகளாக வேலை பார்த்த வினு பாய், தனது குடும்பத்தினருடன் பங்களாவை விட்டு வெளியேறினார்.

அடுத்து என்ன செய்வது என குழப்பத்தில் இருந்த வினு பாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது, சில நாட்களுக்கு முன் கஜ்ராஜ் சிங் ஜடேஜாவின் உறவினர்கள் 8 பேர் காரில் வந்து, வீட்டில் இருந்த வினு பாயை கடத்திச் சென்றுள்ளனர்.

வினுபாய்க்கு, சுமார் 600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கஜ்ராஜ் சிங் ஜடேஜா உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அதனை தங்கள் பெயருக்கு எழுதித் தருமாறும் கூறி சரமாரியாக அடித்துள்ளது.

இதற்கிடையே வினுபாயின் மகன் பொலிசில் புகார் அளிக்க, விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அவரை மீட்டனர்.

இவ்வளவு பெரிய சொத்தை தனக்கு கஜ்ராஜ் எழுதிய வைத்ததை அறிந்து, வினு பாய் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்.

தனது எஜமானர் குறித்து கூறுகையில், ‘அவரிடம் நான் வேலைக்கு சேர்ந்த பிறகு, எனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார், என் பிள்ளைகளை தனது பிள்ளைகளாகவே கருதிய அவர், உயர் கல்விக்காக பிரித்தானியாவுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.

அந்த நன்றிக்கடனை எப்போது அடைப்பது என்பது தெரியாமல் இருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக அவர் எங்களை விட்டு பிரிந்து விட்டார். 600 கோடி சொத்துக்களை எங்களுக்கு எழுதி வைத்து விட்டு, ஏழேழு தலைமுறையினரும் எப்போதுமே தீர்க்க முடியாத நன்றிக் கடனை எங்களுக்கு அவர் விட்டுச் சென்றுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

பாடசாலைக் கழிப்பறையை வெறும் கைகளால் சுத்தம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!!

இந்தியாவில் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பள்ளிக் கழிப்பறையை வெறும் கைகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுத்தம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் ஜனார்த்தன் மிஸ்ரா.
அவர் எம்.பி-யாக உள்ள தொகுதியில் உள்ள பள்ளிகளில் கடந்த 15ஆம் திகதி ஆய்வு மேற்கொண்டபோது, கஜூவா கிராமத்தின் பள்ளி கழிப்பறை பராமரிப்பின்றி கிடந்துள்ளது.

அதை கண்டு அதிர்ச்சியடைந்த எம்.பி, அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதை தவிர்த்து உடனடியாக தானே களத்தில் இறங்கி அதை சுத்தம் செய்துள்ளார்.

பாஜக கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தன், மோடியின் தூய்மை திட்டத்தின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. மேலும், ஜனார்த்தனின் அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள் : நடிகர் சத்யராஜ் பரபரப்புப் பேச்சு!!

நடிகர்களை நம்பி ஒரு போதும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்று நடிகர் சத்யராஜ் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா நடந்தது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், நடிகர் சத்யராஜ் உட்பட, அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது சத்யராஜ் பேசுகையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகியுள்ளது. நடிகர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாகவே சொத்து உள்ளது. பிரபல நடிகர்கள் என்பதால் அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று, அவர்களை ஒரு போதும் நம்பி விடாதீர்கள், அவ்வாறு நினைப்பது தவறு.

நடிகர்கள் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வி அல்ல, வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசியுங்கள். எனவே, நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் மோட்டார் சைக்கில் விபத்து : சாரதி தப்பியோட்டம்!!

 
வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு அருகே இன்று (18.02.2018) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கில் விபத்தில் மோட்டார் சைக்கிலில் சாரதி தப்பியோடியுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திலிருந்து குருமன்காடு நோக்கி பயணித்த துவிச்சக்கரவண்டி மீது எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியை செலுத்திய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளின் சாரதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிலின் (கிரோ கங் வகை) இலக்கம் (NP BBW 5307) எனினும் சம்பவ இடத்திற்கு இது வரையில் பொலிஸார் சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தொழிநுட்பத்தில் புரட்சியினை ஏற்படுத்திய டெக் டோக் நிகழ்வு!!

 
வவுனியா தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கத்தினால் (VICTA) ஏற்பாடு செய்யப்பட்ட டெக் டோக் (Tech Talk) தகவல் தொழில்நுட்பத்துறையிலுள்ளவர்களுக்கான நிகழ்வு விக்டா அமைப்பின் தலைவர் திரு.ஷரண்யன் தலைமையில் வவுனியா பிரின்சஸ் ரோஸ் மண்டபத்தில் நேற்று (17.02.2018) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

விக்டா (VICTA) அமைப்பின் உப செயலாளர் விஜிதரனின் ஆக்கபூர்வமான ஆரம்ப உரையுடன் ஆரம்பான இந் நிகழ்வில் தொழில்நுட்பத்தில் ஆர்வலர்கள், வடிவமைப்பாளர்கள், புதிய வர்த்தகத்துறை விருத்திக்கான சேவைகளை வழங்குபவர்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் தொடர்பான திறமைகளுடையவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தகவ‌ல் தொழில்நுட்பத்தின் தற்போதைய போக்கு மற்றும் தற்காலத்திற்கேற்ப தகவல் தொடர்பாடல் பற்றி இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.

வவுனியாவின் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது டெக் டோக் (Tech Talk) நிகழ்வு முழுமையாக தமிழில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.