நாசாவுக்கே கடிதம் எழுதி பிரபலமான சிறுமி : சுவாரஸ்ய சம்பவம்!!

அயர்லாந்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, புளூட்டோவை மீண்டும் கோளாக அறிவிக்க வேண்டும் என நாசாவிற்கு கடிதம் எழுதியதன் மூலம் பிரபலமாகியுள்ளார்.

நமது சூரியக் குடும்பத்தில் 9வது கோளாக, கடந்த 1930ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது புளூட்டோ. ஆனால், கடந்த 2006ஆம் ஆண்டு புளூட்டோ ஒரு கோள் அல்ல, அது குறுங்கோள் என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

ஏனெனில் 8வது கோளாக உலா வரும் நெப்டியூனின் சுற்றுவட்டப் பாதையில், புளூட்டோ குறுக்கிடுவதால் பூமியின் நிலவான சந்திரனை விட அளவில் சிறிய புளூட்டோ, கோள் அந்தஸ்தை இழந்தது.

அதனைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் புளுட்டோவிற்கு கோள் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமியான காரா லூசி ஓ கான்னர், இதே கோரிக்கையை முன் வைத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாசாவிற்கு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், ‘நான் கேட்ட ஒரு பாடலின் முடிவில், புளூட்டோவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று இருந்தது, அது நிறைவேற ஆசைப்படுகிறேன். மற்ற கோள்களைப் போல புளூட்டோவும் முக்கிய கோளாக இருக்க வேண்டும். ஏனென்றால், நான் பார்த்த ஒரு வீடியோவில், கடைசி கோளாக இருக்கும் புளூட்டோவை நாம் சென்று பார்ப்போம் என்று சொல்லப்பட்டது.

மற்றொரு வீடியோவில், பூமியால் புளூட்டோ குப்பையில் போடப்பட்டது என இருந்தது, எந்தவொரு கோளையும் குப்பையில் போடக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை சிறுமி தனது ஆசிரியையின் உதவியுடன் எழுதியிருந்தார். சிறுமியின் கடிதத்தை கண்டு வியந்த, நாசாவின் கோள்கள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கிரீன், தற்போது சிறுமிக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில் ‘நான் உனது கருத்துடன் ஒத்துப்போகிறேன், உண்மையில் புளூட்டோ ஒரு குளிர்ச்சியான கோள் தான். புளூட்டோவுக்கு இதயம் இருக்கக்கூடும் என்பது சிலரின் நம்பிக்கை, இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கும்.

என்னை பொருத்தவரை, புளூட்டோ ஒரு சிறிய கோளா இல்லையா என்பது முக்கியமல்ல, புளூட்டோ ஒரு வசீகரமான இடம், அது பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

நீ பெரியவளாகி, ஒரு புதிய கோளை கண்டுபிடிப்பாய் என நம்புகிறேன். நீ நன்றாக படித்து, பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், நாசாவில் உன்னை சந்திப்பதற்காக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

நாசாவில் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியாளராகி, புளூட்டோ உள்ளிட்ட அனைத்து முக்கிய கோள்களுக்கும் சென்று வர வேண்டும் என்பது தான் காராவின் ஆசையாம்.

ஆந்திர ஏரியில் சடலமாக மிதந்த 7 தமிழர்கள் : நடந்தது என்ன?

 
ஆந்திர மாநில ஏரியில் 7 தமிழர்களின் உடல் சடலமாக மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ஒண்டமிட்டா ஏரியில், 7 நபர்களின் உடல் சடலமாக மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆந்திர பொலிசார், உடல்களை மீட்டு விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், சடலமாக மிதந்த 7 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திரா சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ஆந்திர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தையே அதிரவைத்த கொலை வழக்கு : தஷ்வந்த் குற்றவாளி என அறிவிப்பு!!

தமிழகத்தை அதிர வைத்த ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆள்கடத்தல், பலாத்காரம், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி வேல்முருகன் தண்டனை விபரத்தை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக குற்றவாளி தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டு பொலிஸ் தரப்பு மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நேரடி சாட்சிகள் ஏதும் இல்லாததால் குற்றச்சாட்டுகளை அறிவியல் பூர்வமாக நிரூபித்ததாகவும், அதிகபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கும் எனவும் ஹாசினி தரப்பு வழக்கறிஞரான கண்ணதாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன?

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த மென்பொறியாளர் தஷ்வந்த், மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தனது பக்கத்து வீட்டை சேர்ந்த ஹாசினி எனும் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

அதன் பின்னர் பிணையில் வெளியே வந்த தஷ்வந்த், கடந்த டிசம்பர் 2ஆம் திகதி தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு, அவரின் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார்.

மும்பையில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்ற போது, விமான நிலையத்தில் இருந்து தப்பித்துள்ளார்.

பின்னர், மும்பை பொலிசாரின் உதவியுடன் தஷ்வந்தை கைது செய்த பொலிசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதியிடம் தனக்கு தண்டனை அளிக்குமாறு கோரிய தஷ்வந்த், பின்னர் தான் கொலை செய்யவில்லை என்று கூறினார்.

நித்தியானந்தாவை பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது : நீதிமன்றம் அதிரடி!!

நித்தியானந்தாவை எந்த வழக்கில் இருந்தும் விடுவிக்க முடியாது என கர்நாடக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆரத்திராவ் என்ற பெண்ணை நித்தியானந்தா பலாத்காரம் செய்ததாக நித்தியானந்தாவின் உதவியாளராக இருந்த லெனின் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது, இவ்வழக்கில் லெனின் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பலாத்காரம் நடந்ததாக தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நித்தியானந்தா, 5 வயது தன்மையுடன் இருப்பதாகவும், எனவே தன்னை பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் மருத்துவ சான்றுடன் மனுத்தாக்கல் செய்தார்.<

இந்நிலையில் பலாத்கார வழக்கு மட்டுமல்ல எந்த வழக்கில் இருந்தும் நித்தியானந்தாவை விடுவிக்க முடியாது என, நித்தியானந்தா உட்பட 5 பேரின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் பிப்ரவரி 28ஆம் திகதி முதல் நித்தியானந்தா மீதான வழக்குகளில் விசாரணை நடத்தப்படும் என்றும் ராம்நகர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா சென்ற கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா : கொந்தளிக்கும் விமர்சகர்கள்!!

குடும்பத்துடன் இந்தியா வந்த கனடா பிரதமர் இந்தியப் பிரதமரால் வரவேற்கப்படாமல் விவசாயத்துறை அமைச்சர் ஒருவரால் வரவேற்கப்பட்டதற்கு பலத்த விமர்சனம் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் UAE இளவரசர் ஆகியோர் இந்தியா வந்தபோது மட்டும் மணிக்கணக்கில் அவர்களுக்காக காத்திருந்த பிரதமர் கனடா பிரதமரை வரவேற்க மட்டும் ஏன் வரவில்லை என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக கனடா பிரதமர் வந்துள்ள நிலையில் இந்தியப் பிரதமர் அவரை வரவேற்கச் செல்லாததற்கு வேறு சில முரண்பட்டக் கருத்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன.

இந்தியாவில் தனி நாடு கோரும் சீக்கிய பிரிவினைவாதிகள் பலருக்கு கனடா பிரதம் தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளார் என்பதும் அவர்கள் அனைவரும் தற்போது அவருடன் இந்தியா வந்துள்ளார்கள் என்பதும் இதுவே இந்தியப் பிரதமர் கனடா பிரதமரை வரவேற்கச் செல்லாததன் பின்னணியாக இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகமும் பெரிய அளவில் இல்லை. அதுமட்டுமின்றி 1.4 மில்லியன் இந்தியர்கள் கனடாவில் வசிக்கும் நிலையில் பொறுப்பேற்ற பிறகு இதுவரை கனடா பிரதமர் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் பெரிதும் அலட்டிக்கொள்ளாத கனடா பிரதமர், இந்தியாவில் கால் பதித்ததும் இந்திய முறைப்படி அவரும் அவரது மொத்தக்குடும்பமும் வணக்கம் என கை குவித்து வணங்கியது அற்புதமான காட்சியாக இருந்தது.

அதுமட்டுமின்றி அவரது இளைய மகனான 3 வயது Hadrien, இந்தியப் பயணத்தை வெகுவாக ரசிக்கிறான். அவனுக்கு கொடுக்கப்பட்ட பெரிய பூங்கொத்து ஒன்றை அம்மாவிடம் கொடுக்காமல் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அவன் நடக்க அவன் பெற்றோர் மெதுவாக அவன் பின்னே நடப்பது காண்போர் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

இரு நாட்டுப் பிரதமர்களும் சிவில் அணு ஆயுத ஒத்துழைப்பு, விண்வெளி, பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் கல்வி தொடர்பான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி!!

 
அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் மர்சி ஷிமாப் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செர்ஜியோ பரோனி என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் திருமணத்தை புதுப்பித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் மர்சி ஷிமாப், Chicken Soup, Happy for No Reason போன்ற பல்வேறு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். மர்சி இதுவரை ஐந்து முறை இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், தற்போது ஆறாவது முறையாக தனது கணவர் செர்ஜியோவுடன் இந்தியா வந்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது திருமணத்தை புதுப்பிக்கும் வகையில் மதுரை அருகிலுள்ள புறநகர் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அத்துடன் தனது 60 பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாட மர்சி இந்தியா வந்துள்ளார். மர்சி கூறுகையில், நான் இந்தியாவுக்கு வருவதை நேசிக்கிறேன், இங்கு எனக்கு ஆழமான பரிச்சயம் இருக்கிறது. மகரிஷி யோகா ஆசிரமத்தில் நான் தியானம் செய்ய கற்றுள்ளேன், தியானமானது மன அழுத்தத்திலிருந்து விடுபட எனக்கு உதவுகிறது, எனக்கு மீனாட்சி என்றும், என் கணவருக்கு சிவா என்ற பெயரும் கூட உள்ளது.

நிறைய இந்தியர்கள் இந்த காலத்தில் மகிழ்ச்சியில்லாமல் உள்ளார்கள், பொருட்கள் மீது அதிக நாட்டம் செலுத்துவதால் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

அதே நேரத்தில் இந்திய பெண்கள் அதிக அதிகாரம் பெற்று வருவதையும் காணமுடிகிறது என கூறியுள்ளார். மர்சி Your Year of Miracles என்ற பெயரில் பெண்களுக்கான ஓன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறார்.

72 நாடுகளை சேர்ந்த 1000 பெண்கள் இதில் பங்கேற்று வரும் நிலையில், இந்திய பெண்களும் கணிசமான அளவில் பங்கேற்று வருகிறார்கள்.

கணவரை கொன்ற மனைவி : 11 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய பெண் 11 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குமரி மாவட்டம் பள்ளியாடி பேராணிவிளையை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 40), கட்டிட தொழிலாளியான இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ராஜசேகர், கடந்த 2007ம் ஆண்டு தாய்நாட்டுக்கு திரும்பினார், சில நாட்களிலேயே திடீரென மாயமானார். அக்கம்பக்கத்தினர், சொந்தபந்தங்கள் சுதாவிடம் விசாரித்த போது, ராஜசேகர் மறுபடியும் வெளிநாடு சென்று விட்டதாக கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக ராஜசேகர் ஊர்பக்கம் வரவில்லை, இதனால் சந்தேகமடைந்த ராஜசேகரின் அண்ணன் ரவி பொலிசில் புகார் அளித்தார். இதன்பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர், ஏற்கனவே தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு சுதா மகனுடன் வாகவிளை பகுதியில் இருந்தது தெரியவந்தது.

மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜசேகர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. அதாவது, சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆன்றின் ஷிபு என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாம், இதுபற்றி தெரியவர ராஜசேகர் மனைவியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று இருவரும் ஒன்றாக இருப்பதை ராஜசேகர் பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதில் இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்து கழிவறை தொட்டியிலும் உடலை வீசியுள்ளனர்.

இதனைதொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்ததில் குற்றம் நிரூபணமானது. சம்பவம் நடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

அப்பாவின் கட்சியில் சேரமாட்டேன் : நடிகை ஸ்ருதிஹாசன்!!

தனது தந்தை கமல்ஹாசன் தொடங்க உள்ள கட்சியில் சேர மாட்டேன் என நடிகை ஸ்ருதிஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், கடந்த ஜனவரி மாதம் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 21ஆம் திகதி தனது கட்சியின் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் அவரின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், தனது தந்தையின் அரசியல் வரவு குறித்து கூறுகையில்,

அப்பா கமல் தொடங்கும் கட்சியில் சேர மாட்டேன், அரசியல் தெரியாது என்பதால், தந்தை கட்சியில் சேரப் போவதில்லை, கட்சி தொடங்கும் அப்பாவுக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

இளம்பெண் மீது அசிட் ஊற்றி தீவைத்த இளைஞர் : பதறவைக்கும் சம்பவம்!!

சென்னையில் இளம்பெண் மீது அசிட் ஊற்றி தீவைத்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார். தனது ரத்த பரிசோதனை நிலையத்தில் பணி செய்து வந்த ஊழியர் யமுனாவிற்கு ராஜா பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ராஜாவின் செயல்பாடுகளை யமுனா எதிர்த்து வந்த நிலையில், இன்று அவர் மீது அசிட் ஊற்றி தீ வைத்த ராஜா பின்னர் தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து வலியால் துடித்த யமுனா மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் தப்பியோடிய ராஜாவை பொலிசார் கைது செய்து, அசிட் வீச்சுக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய வேண்டுகோள்!!

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இவ்வாராம் நிறைவடையவுள்ளன.

பாடசாலையின் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைகின்றது.

தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

எனவே பரீட்சார்த்திகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த அறிவித்தல் விடுத்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு வந்த நபர் இரண்டு இதயத்துடன் வீடு திரும்பிய அதிசயம்!!

இந்தியாவில் இருதயம் மாற்று அறுவை சிகிச்சைக்கு வந்த நபர், தானமாக கிடைத்த இருதயம் அளவில் சின்னதாக இருந்ததால் இரண்டு இதயத்துடன் வீடு திரும்பியுள்ளார்.

7 மணி நேரம் நீண்ட குறித்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த 56 வயது நபர் உலகில் இருதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் 150வது நபர் என பதிவானார்.

இருதய நோயால் மிகவும் ஆபத்தான கட்டத்தில் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையில் இறுதிகட்டத்தில் மருத்துவர்களுக்கு அந்த உண்மை தெரிய வந்தது, குறித்த நபருக்கு தானமாக கிட்டிய இருதயமானது அளவில் சிறியது என்று.

நோயாளி மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் வேறு இருதயம் கிடைக்கும் வரை காத்திருக்கவும் முடியாத நிலை. இதனையடுத்து மருத்துவர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

தானமாக கிடைத்த இருதயத்தையும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட இருதயத்தையும் ஒன்றாக இணைத்துள்ளனர்.

மிகவும் ஆபத்தானதும் அரியதுமான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதனால் குறித்த நபர் உலகின் 150 பேருக்கு மட்டும் நடத்தப்பட்ட அரிய சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளார்.

இருப்பினும் மருத்துவர்கள் குறித்த நபரை எச்சரித்தே அனுப்பியுள்ளனர்.

மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு : நிரூபித்த ஜெர்மன் ஆய்வுக்குழு!!

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டா என்ற கேள்வியைப்போல் சிக்கலான கேள்வி வேறொன்றுமில்லை.
காலங்காலமாக நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள்.

மரணம் தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம் – நரகம் என்பதோ கிடையாது. மூளை உயிருடன் இருக்கும் வரை தான் எல்லாமே. மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையான கட்டுக்கதைகள். மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இணைந்த குழு, மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்தவரின் அருகில் இருந்து மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

2012 – 2016-க்கு இடையில் 4 ஆண்டுகளாக இறக்கும் தறுவாயில் இருந்த 944 பேரிடம் முக்கிய மருந்துக் கலவைகைளக் கொண்டு இந்த சர்சைக்குரிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில் டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ‘ரீ அனிமேசன்’ முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது.

அதனைத் தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிகமாக நினைவிழந்த நிலையில் வைக்கப்படுகிறது. இதற்குள், அந்த உடலின் இரத்தத்தில் இருந்து மருந்துக் கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது.

ஆய்வுக் குழுவினர் அதன்பிறகான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கத் தொடங்குகின்றனர். அதன்போது பெறப்பட்ட வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர்.

இந்த பரிசோதனையின் நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன.

பல்வேறு வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் சார்ந்த விடயங்கள் எவையும் இல்லை. எதிர்காலத்தில் தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சியடையச் செய்யும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மனிதர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற மத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.

மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றுக்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். மரணத்திற்குப் பின் வாழ்க்கை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம்
என இந்த ஆய்வுக்குழுவில் ஒருவரான மருத்துவர் பெர்தோல்ட் ஆக்கர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

6 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்தவருக்கு 4 மரணதண்டனை!!

பாகிஸ்தானில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த இம்ரான் அலி (24) என்பவருக்கு நான்கு மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி லாகூரின் தெற்கே உள்ள கசூர் நகரில் ஷைனப் அன்சாரி எனும் சிறுமியின் சடலம் குப்பையிலிருந்து மீட்கப்பட்டது.

அச்சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டு பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த கொலை வழக்கில் ஜனவரி 23 ஆம் திகதி இம்ரான் அலி என்பவர் கைது செய்யப்பட்டார். ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை மற்றும் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

இந்த குற்றங்கள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றம் அவருக்கு நான்கு மரண தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஷைனப் படுகொலை வழக்கில் DNA பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசாரணைகளின் போது இம்ரான் அலி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஷைனப் கொலை வழக்கில் அவர் கடத்தப்பட்டபோது பதிவான கண்காணிப்பு கெமரா காட்சி முக்கிய சாட்சியமாக அமைந்துள்ளது.

ஷைனப்பின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் குற்றவாளியைக் கைது செய்யுமாறு கோரியும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் இருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி 2 நாட்களில் முன்னாள் காதலனால் கணவன் படுகொலை!!

இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் திருமணமான இரண்டு நாளில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் லகன் சிங் என்ற வாலிபருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்துக்கு பின்னர் உறவினர்கள் வீட்டுக்கு சென்று விருந்துகளில் கலந்து கொண்டு வந்த லகன் சிங் திருமணமான இரண்டு நாள் கழித்து திடீரென மாயமாகியுள்ளார்.

இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில் யமுனை நதி அருகில் லகன் சிங்கின் மோட்டார் சைக்கிளை கண்ட மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்த பொலிஸார் அப் பகுதியை சுற்றி தேடிய நிலையில் லகன் அங்கு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் பிரியங்காவின் முன்னாள் காதலன் அஜய் கோயல் லகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

பிரியங்கா அஜய்யுடன் பழகிய நிலையில் பின்னர் தொடர்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து லகனின் தொலைப்பேசி இலக்கத்தை எப்படியோ கண்டுப்பிடித்த அஜய் அவரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

ஆனால் இது குறித்து லகன் வெளியில் சொல்லாமல் இருந்துள்ள நிலையிலேயே அஜய்யால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

லகனை கொலை செய்யும் அளவுக்கு அஜய் செல்வார் என தான் நினைக்கவில்லை என பிரியங்கா பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளபொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

யாழில் தனிமையில் வாழ்ந்த பெண் சடலமாக மீட்பு!!

யாழ். மானிப்பாய், கட்டுடைப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த பெண்ணொருவருடைய சடலமொன்று இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே இடத்தைச் சேர்ந்த த.இரத்தினதேவி எனும் 74 வயதுடையே மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்ட வீட்டின் ஓடுகள் கழற்றப்பட்ட நிலையில் இருந்ததால், கொள்ளையர்களே மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், மீட்கப்படும் போது சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மூதாட்டியை மூன்று நாட்களாக காணாத நிலையில் அயலவர்கள் இன்று முற்பகல் அவரை தேடிச் சென்றுள்ளனர். அதன்போதே மூதாட்டி சடலமாகக் காணப்பட்டுள்ளதை அவதானித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்றாவது திருமணம் செய்த இம்ரான் கான்!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது.

இவர் கடந்த 1995-ம் ஆண்டு மே 16 ஆம் திகதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் ஆன 9 ஆண்டுகளில் 2004 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டில் ஜனவரி 8 ஆம் திகதி டி.வி.தொகுப்பாளினி ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார்.

அதன்பின்னர் இம்ரான் கான் புஷ்ரா பிபி மேனகா என்ற ஆன்மீக ஆலோசகரை கடந்த ஜனவரி மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்போது இம்ரான் கான் அந்த செய்தியை மறுத்தார்.

இந்நிலையில், மேனகாவை எளிமையான முறையில் லாகூரில் நேற்று திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழா மேனகாவின் சகோதரர் வீட்டில் நடந்ததாக கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான முப்தி முகமது சயீத் இந்த திருமணம் குறித்து கூறுகையில், ‘இரண்டு இதயங்கள் மற்றும் ஆன்மாக்கள் இணைந்திருப்பதாக கூறினார். இம்ரான் கானின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.