நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகின்றது!!

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் தயாராகிறது. பெங்களூரைச் சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தைத் தயாரிக்கின்றனர்.

ஸ்ரீதேவியிடமும் அவரது கணவர் போனி கபூரிடமும் இதற்கு அனுமதி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐந்து பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் படம் தயாராகின்றமை விசேடமாகும்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உட்பட அனைத்து மொழி நடிகர்- நடிகைகளும் ஸ்ரீதேவி பற்றி பாராட்டிப் பேசும் கருத்துக்களும் படத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீதேவியின் படங்களில் பணியாற்றிய இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் ஆகியோரது பேட்டியும் படத்தில் இடம்பெறுகிறது.

ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கை, சாதனைகள், விருதுகள், குடும்பம் உள்ளிட்ட விடயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது.

ஸ்ரீதேவி தனது 4 வயதிலேயே எம்.ஏ. திருமுகம் இயக்கிய துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் கதாநாயகியானார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்துள்ளார்.

பின்னர் இந்திப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

27 பேரை காட்டிக்கொடுத்த மோப்ப நாய் : ஹட்டனில் சம்பவம்!!

சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் நேற்று இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிலியந்தலை, கெஸ்பேவ, களுத்துறை, ஹோமாகம மற்றும் கொழும்பு பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்களும், ஹெரோயின் பக்கட்களும் கைப்பற்றப்பட்டன.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று இரவு வாகனங்களை தீடிரென ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர்.

இதன்போது 8 மில்லிகிராம் ஹெரோயினும், 59,750 மில்லிகிராம் கஞ்சா பக்கட்களும் கண்டு பிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, குறித்த 27 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

உடலில் எண்ணெய் பூசி வந்தவர்கள் செய்த செயல்!!

 
மட்டக்களப்பு – தொப்பிகல அரசாங்க காட்டில் சட்ட விரோதமாக வெட்டப்பட்டு கடத்தப்படவிருந்த ஒரு தொகை தேக்கு மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

துவிச்சக்கரவண்டிகளில் கடத்தப்படவிருந்த குறித்த மரக்குற்றிகளை ஏறாவூர் பொலிஸார் நேற்று மாலை கைப்பற்றியுள்ளனர்.

உடலில் எண்ணெய் பூசிய நிலையில் துவிச்சக்கரவண்டிகளை தள்ளிக்கொண்டு வந்த ஆறுபேரும் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஆறு துவிச்சக்கரவண்டிகளில் சுமார் ஆறு அடி நீளமுடைய 26 மரக்குற்றிகள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை!!

கண்டி – முல்கம்பொல பிரதேசத்தில் தாய் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நேற்று (17.02) மாலை கிடைக்க பொலிஸாரிற்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தாய் மற்றும் மகன் கடந்த இரு தினங்களுக்கு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

69 வயதுடைய தாயாரும் 44 வயதுடைய மகனுமே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இரண்டு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி!!

 

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி, 78ஆம் கட்டை எனுமிடத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீயில் கருகி மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு குழந்தைகளின் தாயான கிருஷ்ணப்பிள்ளை இராஜினி (வயது 30) என்பவரே நேற்று இரவு தீயில் கருகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணித்துள்ளார்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது. சம்பவ தினம் தனது வீட்டில் இப்பெண் பகல் போசனம் சமைத்துக் கொண்டிருந்துள்ளார்.

அதன் பின்னர் மாலையாகியும் வீட்டில் எதுவித நடமாட்டங்களும் இல்லாததால் அயலிலுள்ளவர்கள் மாலை 5 மணியளவில் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இளம்பெண் தீயில் கருகிய நிலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்துள்ளார்.

உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் பெண் மரணித்து விட்டதாக பெண்ணின் உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெண்ணுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதால் வலிப்பு நோயைக் காரணம் காட்டி கணவன் பிரிந்து சென்று விட்டதாகவும் பெற்றோரின் தயவில் பெண்; வாழ்ந்து வருவதாகவும் அப்பெண்ணின் இரு பிள்ளைகளும் உறவினர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் பற்றி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளன

ஈரானில் விமானம் விபத்து : 66 பேர் பரிதாபமாகப் பலி!!

ஈரான் நாட்டின் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு 66 பயணிகளுடன் சென்ற விமானம் நொறுங்கி வீழ்ந்துள்ளது.
விமானத்தில் பயணித்த 66 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.

ATR-72 என்ற அந்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது, வானில் பறந்து கொண்டிருக்கும் போதே ரேடாரில் இருந்து விமானம் மாயமானது.

இதனை அடுத்து, டெஹ்ரானில் இருந்து 480 கி.மீ தொலைவில் தென்மேற்கு பகுதியில் உள்ள செமிரோம் மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி வீழ்ந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

 
வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கூமாங்குளம் சுப்பர் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று (17.02.2018) மதியம் 1.30 மணியளவில் பாடசாலை முதல்வர் ச.பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சிறப்பு விருந்தினராக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான
சு.அமிர்தலிங்கம், திருமதி தர்சினி தமிழழகன், திரு ரதீபானந், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.வாசன்,

கௌரவ விருந்தினர்களாக கூமாங்குளம் அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் நா.ஸ்ரீதரன், கிராம சேவையாளர் ஆர்.அமிர்தலிங்கம், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கபிலன், சமூக ஆர்வலர் மா.கிரோஜன், அஸ்திரம் மக்கள் நற்பனி மன்ற செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், பெற்றோர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதமர் பதவி விலகாவிட்டால் அமைச்சரவை கலைக்கப்படும்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகாவிட்டால் அமைச்சரவை கலைக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்யத் தவறினால், உடனடியாக அமைச்சரவையை கலைப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றார்.

அரசியல் அமைப்பின் 46(2)(அ) சரத்தின் அடிப்படையில் தற்போதைய அமைச்சரவை நீடிக்கும் வரையிலேயே பிரதமர் பதவியில் நீடிக்க முடியும். இதன்படி, அமைச்சரவை கலைக்கப்பட்டதன் பின்னர் பிரதமரின் பதவியும் ரத்தாகிவிடும்.

தேசிய அரசாங்கம் குறித்த உடன்படிக்கை கலாவதியாகியுள்ளது, இன்னமும் அந்த உடன்படிக்கை மீளவும் கைச்சாத்திடப்படவில்லை.

19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே தற்போதைய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை பற்றிய வரையறைகள் செய்யப்பட்டுள்ளன.

19ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரைவ சட்டவிரோதமானது என சிரேஸ்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா யங்ஸ்ரார் கழக உறுப்பினர்கள் மீது தாக்குதல் : இருவர் வைத்தியசாலையில்!!

 

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள யங்ஸ்ரார் விளையாட்டு கழக உறுப்பினர்கள் மீது நேற்று (17.02.2018) இரவு 10 மணியளவில் கண்மூடித்தனமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத் தாக்குதலில் காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

யங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தால் வருடம்தோரும் நடாத்தப்பட்டு வரும் கழகங்களுக்கிடையிலான மின்னொளியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்றையதினம் புதுக்குளம் ஈஸ்வரன் மற்றும் 786 கழகங்களுக்கிடையிலான ஆட்டம் வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது 786 கழக உறுப்பினர்கள் வெற்றியடைந்துள்ளனர். இதன்போது 786 கழக உறுப்பினர்களும் ஆதரவளர்களும் யங்ஸ்ரார் கழகத்தினை முற்றுகையிட்டு அங்கிருந்த கழக உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தாக்குதலில் காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையின் பொருளாதாரம் பேராபத்தில் : மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!!

 
 

நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலையானது பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஸ்திரமான அரசியல் நிலைமை உண்டு என்பது நிரூபிக்க தவறும் பட்சத்தில் பொருளாதாரத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், தொடர்ந்தும் இந்த நிலைமை நீடித்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் சக்தியேனும் நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா நகரசபை தவிசாளர் தெரிவில் திடீர் மாற்றம்!!

வவுனியா நகரசபையின் நான்கு வருடங்களுக்குமான தவிசாளராக நா.சேனாதிராசா ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17.02.2018) காலை 9 மணியளவில் ஒன்றுகூடிய வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் குழுவினர் குறித்த முடிவை எடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் எடுத்த முடிவின் பிரகாரம் நகரசபைத் தவிசாளர் பதவி முதல் இரண்டு வருடங்களுக்கு நா.சேனாதிராசாவுக்கும் அடுத்த இரண்டு வருடங்கள் த.பரதலிங்கத்துக்கும் ஒதுக்குவது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் சேனாதிராசாவுக்கே 4 வருடங்களும் ஒதுக்கபட வேண்டும் என்று பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தமையால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முடிவு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2018

 

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் ஆண்டு  மகோற்சவ பெருவிழா

நிகழும் ஏவிளம்பி    வருடம் மாசி மாதம் 08ஆம்நாள்  (20.02.2018) செவ்வாய்க்கிழமை  பஞ்சமி  திதியும்  ரேவதி   நட்சத்திரமும் சித்தாமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது .

மேற்படி மகோற்சவம்  ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில் இடம்பெறுகின்றது.

மேற்படி மகோற்சவத்தில்

23.02.2018    வெள்ளிகிழமையன்று  கற்பூர சட்டி திருவிழா

27.02.2018  செவ்வாய்கிழமையன்று  சப்பர திருவிழா

28.02.2018  புதன்கிழமையன்று  தேர்த்திருவிழா

01.03.2018 வியாழக்கிழமையன்று  தீர்த்த திருவிழா

02.03.2018  வெள்ளிகிழமையன்று பூங்காவன திருவிழாவும்  இடம்பெறுகின்றது .

 

வவுனியா நகரசபை, பிரதேச சபைகளுக்கு ஒருவரையே தவிசாளராக நியமிக்க வேண்டும் : ஜி.ரி.லிங்கநாதன்!!

தமிழ்த் தேசியக்.கூட்டமைப்பு மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் ஒவ்வொரு தவிசாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரியுள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களாக இருந்தாலும் சரி, அடுத்த கட்ட தலைவர்களாக இருந்தாலும் சரி உள்ளூராட்சி மன்றங்களினுடைய தாற்பரியத்தை விளங்கிக் கொள்ளாமலும், மக்களது நலன்களை கருத்தில் கொள்ளாமலும் கட்சிகளின் நலனை முன்னிலைப்படுத்தி ஒவ்வொரு சபைகளிலும் தலா 2 வருடங்களை ஒவ்வொருவருக்கும் கொடுப்பதன் மூலம் அந்த சபையின் நடவடிக்கைகள் மிக பலவீனமாக போகும்.

ஒரு உள்ளூராட்சி சபையில் தலைவராக வருபவர் அந்த சபை தொடர்பில் முழுமையாக அறிய ஒரு வருடம் தேவை. அதன் பின் தான் அவர் சேவை செய்ய வேண்டும்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை, கட்சி நலனை கருத்தில் கொள்ளாது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு சபைகளுக்கும் ஒவ்வொரு தவிசாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை” நூல் அறிமுக விழா!!

தோழர் சி.கா.செந்திவேல் எழுதிய “வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை” நூல் அறிமுக விழா நாளை (18.02.2018) பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்க கேட்போர் கூடத்தில் (பிரதேச செயலகம் அருகாமையில்) நி.பிரதீபன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் வரவேற்புரையை யோ.கஜானன் வழங்கவுள்ளதுடன் ஆய்வுரையை மருத்துவர் செல்வராஜா மதுரகன் வழங்கவுள்ளார்.

மேலும் கருத்துரைகளை வவுனியா தேசியக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன், இயன் மருத்துவர் வேலும் மயிலும் துவாரகன், பிரஷாந்தினி பிரதீபன் (புதிய சிந்தனை பெண்கள் அமைப்பு) ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

விழாவின் ஏற்புரையை நூல் ஆசிரியர் சி.கா.செந்திவேல் நிகழ்த்தவுள்ளதுடன் நன்றியுரையை சு.செல்வகுமாரன் வழங்கவுள்ளார்.

இவ்விழாவிற்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் பொதுக்கூட்டமும் பழைய மாணவர் சங்க இணையதள ஆரம்பிப்பும்!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் பழைய மாணவர் சங்க இணையதளம் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வும் எதிர்வரும் 25.02.2018 அன்று பாடசாலையின் ஐயாத்துரை மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ்.சுஜன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலையின் அதிபர் ரி.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபைத் தெரிவும் இடம்பெறவுள்ளது.

எனவே அனைத்து பழைய மாணவர்களையும் கலந்துகொண்டு பாடசாலையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளுமாறும் தவறாது பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களையும் கலந்துகொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பெப்ரவரி 14இல் வெளியிடப்பட்ட என் காதலே குறும்படம்!!

வவுனியாவில் பெப்ரவரி 14ம் திகதி உள்ளூர் கலைஞர்களால் என் காதலே எனும் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.