ஆர்த்தியால் அழகான வாழ்க்கை : காதல் மனைவி பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!!

தமிழ்த்திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தனது தாய் மாமன் மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்கள் இத்தம்பதியினர். மனைவி குறித்து சிவகார்த்திகேயேன் கூறுகிறார்

ஒருமனமான இருமனம்

என் தாய்மாமா மகள் தான் என்றாலும் ஆர்த்தியுடன் நான் அவ்வளவாக பேசியதில்லை. நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்துவிட்டு, மாமா பெண்ணைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன் என்று என் அம்மா சொன்னார்.

ஆர்த்தி வசதியான வீட்டு பெண், ஆனால் திருமணமாகும் போது எனக்கு பெரிய வசதியில்லை. ஆனால் வசதியை அவர் எப்போதும் வெளிகாட்ட மாட்டார்.

நெகிழ்ந்த தருணம்

என் மகள் ஆராதனா பிறந்தநாள் எங்களால் மறக்க முடியாது. பெண் குழந்தையாக இருந்தால் கூடுதல் சந்தோஷம் என நான் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், நான் நினைத்தபடியே ஆராதனா கிடைத்தாள்.

எங்களது திருமண வாழ்க்கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பிரிந்துக்கொள்ளலாம். முன்பு நான் மட்டுமே இருந்தேன். இப்போது ஆர்த்தி குழந்தை வளர்ப்பில் பயங்கர பிஸி.

சமையல் திறமை

சமையல் செய்வதில் திறமைசாலியான ஆர்த்தி திருமணமான புதிதில் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ஒரே நேரத்தில் 12 பேருக்குச் சமைத்துக் கொடுத்து அசத்தினார். மட்டன், சிக்கன் என ஆர்த்தி எதைச் சமைத்தாலும் அது பிரமாதமாக இருக்கும்.

சர்ப்பரைஸ் செய்வதை நிறுத்தினேன்

திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தியின் முதல் பிறந்த நாளுக்கு என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எல்லாம் சினிமா பாணியில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தத்தான்.

இதையடுத்து வீட்டின் சுவர் ஏறி குதித்து, பல்கனி கதவு வழியாக வீட்டுக்குள் கேக் எடுத்துச் சென்றேன். என்னைப் பார்த்ததும் பயந்து அழுதுவிட்டார். அவர் அழ ஆரம்பித்தவுடன் எனக்குப் பயமாகிவிட்டது. அதிலிருந்து அவரை சர்ப்ரைஸ் செய்வதை நிறுத்திவிட்டேன்.

வியத்தகு வேலை

எனது வருமானவரி தொடர்பான வேலைகளை ஆர்த்தி தான் கவனித்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு நான் அனைத்து வரியையும் சரியாகக் கட்டியுள்ளேன் என்று வருமான வரித் துறையில் ‘தங்கச் சான்றிதழ்’கொடுத்தார்கள். நான் மட்டுமே பார்த்திருந்தால் கூட, சரியாகப் பார்த்துக் கட்டியிருப்பேனா என்று தெரியவில்லை.

வீட்டில் குழந்தை வளர்ப்புக்கு இடையே வருமான வரிகளை அவர் சரிபார்ப்பது எளிதான விடயமல்ல

மனைவியே மந்திரி

எங்கள் வீட்டு விடயங்கள் எல்லாவற்றையும் கவனித்து கொள்வது ஆர்த்தி தான், வீட்டில் என்ன நடக்கிறது என்ற டென்ஷன், பிரஷர் எதுவுமே இல்லாமல் படப்பிடிப்புக்கு நான் போய்வர ஆர்த்திதான் காரணம்.

முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவர் என்னிடம் கேட்டுக்கொள்வார். என்னை இந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போ, இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இதுவரை ஆர்த்தி சொன்னதில்லை. என் நிலை அறிந்து அதற்கேற்றார் போல செயல்படுவார் ஆர்த்தி.

எருமை மாட்டின் மீது நிர்வாணமாக சவாரி : பேஸ்புக்கால் வந்த வினை!!

 
பிலிப்பைன்சிற்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்த எருமை மாட்டின் மீது நிர்வாணமாக சவாரி செய்ததால், பொலிசார் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Liam Cox. இவர் கடந்த சில ஆண்டுகளாக பிலிப்பைன்சின் Siargao பகுதியில் இருக்கும் தீவிற்கு செல்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அங்கு சுற்றுலா சென்ற போது, சுற்றுலா பயணிகள் மற்றும் இவர் அங்கிருக்கும் எருமை மாட்டின் மீது நிர்வாணமாக ஏறி சவாரி செய்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படத்தை Liam Cox பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதைக் கண்ட பிலிப்பைன்ஸ் பொலிசார், இது பிலிப்பைன்சின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அவமானப்படுத்தியதற்கு சமம், என்று கூறி அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது Liam Cox அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியதுடன், இதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், சமீபத்தில் நாங்கள் சுற்றுலா சென்ற போது அங்கு சில புகைப்படங்களை எடுத்தோம், அதை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தது தவறு தான், அதுமட்டுமின்றி மாட்டின் மீது இது போன்று செய்திருக்க கூடாது. அதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை அவர் நீக்கியிருந்தாலும், பிலிப்பைன்ஸ் பொலிசார் அது அதை நீக்குவதற்கு முன்பே அது தொடர்பான புகைப்படத்தை எடுத்து வைத்துள்ளனர். அதை ஆதரமாக வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிலிப்பைன்சின் தேசிய விலங்கு எருமை மாடு என்பதால் அங்கிருக்கும் அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல் சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

கனடாவில், பல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 4 வயது சிறுமி ஒருவருக்கு, மருத்துவரின் தவறான சிகிச்சை முறையால் மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் கடந்த 2016ஆம் ஆண்டு Amber Athwal எனும் 4 வயது சிறுமி, பல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு முன்னர் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை முடிந்த பின்னர் சிறுமிக்கு இதயத் துடிப்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக, குறித்த சிறுமி பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மருத்துவ நிர்வாகத்தில் 6 நாட்கள் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது தான், சிறுமி சிகிச்சை அளித்த மருத்துவர் வில்லியம் மேதர், உரிய சிகிச்சை முறைகளை சரியாக கையாளவில்லை என்று தெரிய வந்தது. மேலும், ஏற்கனவே அவர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது.

சிறுமிக்கு இதயத் துடிப்பு பிரச்சனை ஏற்பட்டபோது, மேதர் மற்றும் அவரது ஊழியர்கள் சிறுமிக்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ள தயாராக இல்லை. அதனுடன், சிறுமி மயக்க நிலையில் இருந்த போது, மேதர் மற்ற நோயாளிகளை பார்ப்பதற்காக சென்றுவிட்டார்.

இதன் காரணமாக மருத்துவர் வில்லியம் மேதர் மீது, மருத்துவ நெறிமுறைகளை கடைபிடிக்க தவறி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பான விசாரணையின் அடுத்த கட்டம் தொடங்கியுள்ளது. அதில் மருத்துவர் தனது தவறுகளுக்கான ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும். அவருக்கு தண்டனை வழங்குவது குறித்த முடிவுகளை, நீதிமன்றம் அதன்பிறகு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

காதலிக்க மறுத்த மாணவியை கொடூரமாக பழிவாங்கிய இளைஞர்!!

 
தமிழகத்தில் காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மீது இளைஞர் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நடுவக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதி மணிப்பாண்டி-பேச்சியம்மாள். இவர்களுக்கு சித்திராதேவி(14) என்ற மகள் உள்ளார். அவர் அங்கிருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன்(23), இந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

தொடர்ந்து அந்த மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி தொந்தரவு செய்துள்ளார். பள்ளிக்கு செல்லும் போதும், வீட்டிற்கு வரும் போது தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் பொறுமை இழந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக அங்கிருக்கும் மகளிர் காவல்நிலையத்தில் பாலமுருகன் மீது புகார் கொடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து பாலமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். தன்னை காவல்நிலையம் வரை அழைத்துச் சென்றுவிட்டதால் பாலமுருகன் அவர்கள் குடும்பத்தின் மீது, அந்த மாணவி மீதும் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

நேற்று முன் தினம் காதலர் தினம் என்பதால், பாலமுருகன் மீண்டும் மாணவியிடம் சென்று காதலை தெரிவித்துள்ளார். அப்போதும் மாணவி மறுத்துவிட்டதால் திரும்பிச் சென்றுள்ளார்.

இன்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை அந்த மாணவி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

உடலில் தீ பற்றி எரிய, வேதனை தாங்கமுடியாமல் சிறுமி அலறி துடித்துள்ளார். பாதி உடல் எரிந்த போது, அவ்வழியாக வந்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக தீயை அணைத்து, சிறுமியை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து பாலமுருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கார் பூமியின் மீது மோதலாம் : விஞ்ஞானிகள் தகவல்!!

சில நாட்களுக்குமுன் Space X என்னும் தனியார் விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவரான Elon Musk விண்வெளிக்கு அனுப்பிய உலகின் முதல் காராகிய Tesla roadster தன்னுடன் ‘Starman’ என்று பெயரிடப்பட்ட ஒரு டம்மி மனிதனைச் சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்வெளியைச் சென்றடைந்தது.

அந்தக் கார் விண்வெளியில் வலம் வருவதும் அதன் பின்னணியில் பூமி அழகாகத் தெரிவதும் காரினுள் பொருத்தப்பட்ட கமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக வலம் வந்தது.

Marsக்கு அனுப்பப்பட்ட அந்தக் கார் அதையும் தாண்டி Marsக்கும் Jupiterக்கும் நடுவே சென்று விட்டது.

தற்போது அந்தக் காரின் பாதையை கவனித்த விஞ்ஞானிகள் அந்தக் கார் பூமியின்மீது அல்லது Venusஇன் மீது மோதும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் மோதுவதற்கான 6 சதவிகித வாய்ப்பும் Venusஇல் மோதுவதற்கான 2.5 சதவிகித வாய்ப்பும் மட்டுமே உள்ளனவாம். அது மட்டுமில்லை, கார் மோதுவதற்கு மில்லியன் ஆண்டுகள் கூட ஆகலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு முக்கிய விடயம், பூமியை நோக்கி வரும் கார் பூமியைத் தொடுவதற்குள் எரிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளனவாம்.

அடுத்தமுறை கார் பூமிக்கு அருகில் வரப்போவது 2091 ஆம் ஆண்டில் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் கழுத்தை அறுத்து உடலை ஆற்றில் வீசிய தம்பதி!!

இந்தியாவில் சந்திர கிரகணத்தன்று குழந்தையின் தலையை வெட்டிப் பலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் உப்பிலில் உள்ள வீட்டின் மேல்தளத்தில் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலை கிடந்துள்ளது.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், அவர்கள் உடனடியாக சம்பவம் இடத்தில் விரைந்து வீட்டின் உரிமையாளரான ராஜசேகர் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவரும், அவரது மனைவியும் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, சாலையோர நடைபாதையில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த பெண்குழந்தையைக் கடத்தி வந்து, மூசி ஆற்றங்கரையில் குழந்தையின் கழுத்தை அறுத்து உடலை ஆற்றில் வீசிவிட்டுத் தலையை மட்டும் வீட்டுக்குக் கொண்டுவந்து பூஜை நடத்தியதாக கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தங்கையை கூலிப் படை வைத்து கடத்திய அக்கா : சினிமா பாணியில் துரத்தி பிடித்த பொலிசார்!!

தமிழகத்தில் தங்கையை அக்கா கூலிப்படை வைத்து கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காஜாபேட்டையைச் சேர்ந்தவர் புவனேஷ்வரி. கணவனை இழந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவர் அங்கிருக்கும் நகராட்சியில் பில் கலெக்டராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் புவனேஷ்வரி நின்று கொண்டிருந்த போது, திடீரென்று காரில் வந்த மர்ம கும்பல் அவரை கடத்திக் கொண்டு சென்றது.

இந்த தகவலை அறிந்த பொலிசார், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் காரில் தப்பிச் சென்றதால், சுமார் 3 கி.மீற்றர் துரத்தி பெல்ட் செண்டர் அருகே மடக்கி பிடித்தனர். அதன்பின் பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பணத்திற்காக எதையும் செய்யும் கூலிப்படை என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், புவனேஷ்வரியின் அக்காவான சரஸ்வதி கூறியதன் காரணமாகவே, அவரை கடத்தியதாகவும் மற்றபடி எங்களுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளனர்.

தனது கணவருடன் புவனேஷ்வரி நெருங்கி பழகியதால், ஆத்திரமடைந்த சரஸ்வதி அவரை கடத்தி மிரட்டுவதற்காக கூலிப்படையை அனுப்பி வைத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கண் இமைக்கும் நேரத்தில் உயிரை காப்பாற்றிய டிக்கெட் சோதனையாளர்!!

இந்தியாவில் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியாகவிருந்த நபரை டிக்கெட் சோதனையாளர் காப்பாற்றியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

மும்பை ரயில் நிலையத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தில் நேற்று பயணிகளிடம் டிக்கெட் சோதனையாளர் டிக்கெட் சோதனையில் ஈடுபட்டிருந்த போது புறப்பட்ட ரயில் ஒன்றில் ஏற முயன்ற நபர் கீழே தவறி விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதை கவனித்த டிக்கெட் சோதனையளர் ஒருவர், சட்டென தன் சாமர்த்தியத்தால் அந்த நபரை இழுத்து காப்பாற்றியுள்ளார்.

அந்த நபரின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில் அந்த நிக்ழ்வு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கணவனை தீர்த்து கட்டிய மனைவி சிக்கியது எப்படி?

திருவண்ணாமலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மருத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் அங்குள்ள காட்டுப் பகுதியில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் சுரேஷின் மனைவி தீபா மீது சந்தேகப்பட்டு விசாரித்ததில், தனது கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.

மேப்பத்துறையைச் சேர்ந்த பிரபுவுக்கும் தீபாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் இதையறிந்த சுரேஷ், தீபாவை கண்டித்துள்ளார்.

இதையடுத்து பிரபுவுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்த தீபா சுரேஷை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி சுரேஷை காட்டுபகுதிக்கு அழைத்து சென்று பிரபு உடன் சேர்ந்து அவர் தலையில் கல்லை போட்டு தீபா கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரபு மற்றும் தீபாவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு விபரம்!!

கடந்த 10ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கடமையில் ஈடுபட்ட அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பான சுற்றுநிரூபத்தை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க வெளியிட்டுள்ளார்.

அதன்படி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் நியமனத்தைப் பெற்று தேர்தல் கடமையில் ஈடுபட்ட அலுவலர்களுக்கான கொடுப்பனவு விபரம் வருமாறு:

வலய மற்றும் வட்டார உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 4000ரூபா, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3750ரூபா, மேலதிக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3250ரூபா, விசேட கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 2250ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் அல்லது எழுதுனருக்கு 2000ரூபா, அலுவலக கனிஸ்ட ஊழியருக்கு 1750ரூபாவும் வழங்கப்படும்.

வாக்கெண்ணும் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கான கொடுப்பனவு விபரம் வருமாறு:

தலைமை வாக்கெண்ணும் அலுவலர், உதவி தெரிவத்தாட்சி மற்றும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 4500ரூபா, வாக்கெண்ணும் அலுவலர் அல்லது சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 4350ரூபா, வாக்கெண்ணும் மேற்பார்வை வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலருக்கு 4350ரூபா, மேலதிக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3000ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 2500ரூபா, கனிஸ்ட ஊழியருக்கு 1500ரூபாவும் வழங்கப்படும்.

பிரதேச செயலக மட்டத்தில் தாபிக்கப்பட்ட பிரதேச இணைப்பு அலுவலக கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவு விபரம்:

பிரதேச இணைப்பு அலுவலர், உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 4000ரூபா, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 3250ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு 2500ரூபா, கனிஸ்ட ஊழியருக்கு 1500ரூபாவும் வழங்கப்படும்.

மேலதிக படியாக முறையே 2250ரூபா, 2000ரூபா, 1250ரூபா மற்றும் 750ரூபா வழங்கப்படும். இதேவேளை வாக்குப்பெட்டிகளை, ஆவணங்களை கையளித்தலும் ஏற்றலும் கடமைக்கான கொடுப்பனவு விபரம்:

கையளித்தலுக்கு : உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 1500ரூபா, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 1250ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு 900ரூபா, அலுவலக ஊழியருக்கு 800ரூபாவும் வழங்கப்படும்.

ஏற்றலுக்கு : உதவி தெரிவித்தாட்சி அலுவலருக்கு 2500ரூபா, சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு 2000ரூபா, கனிஸ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் இலிகிதருக்கு 1500ரூபா, அலுவலக ஊழியருக்கு 1200ரூபாவும் வழங்கப்படும்.

அனைத்துக் கொடுப்பனவுகளும் எதிர்வரும் 30.04.2018 இற்கு முன் செலுத்தப்படல் வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ரத்னாயக்க சம்பந்தப்பட்ட சகலருக்கும் சுற்றுநிரூபம் மூலம் அறிவித்துள்ளார்.

வவுனியாவில் மோட்டார் சைக்கிலில் சென்றவரிடம் ரி 56ரக துப்பாக்கியும் ரவைகளும் மீட்பு!!

வவுனியா நெடுங்கேணியில் நேற்று இரவு 7 மணியளவில் போக்குவரத்துப் பொலிசார் வீதியால் மோட்டார் சைக்கிலில் சென்ற ஒருவரிடம் அவரது பையினை சோதனை மேற்கொண்டபோது ரி 56ரக துப்பாக்கியும் 611 ரவைகளையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தொவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று இரவு 7 மணியளவில் நெடுங்கேணி மாறாயிலுப்பை நாகதம்பிரான் கோவிலடியின் போக்குவரத்துப் பொலிசார் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிலினை சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது ஒரு பையினுள் ரி 56ரக துப்பாக்கியும் 611 ரவைகளுடனும் குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் இதையடுத்து அவரது வீட்டினையும் பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் நெடுங்கேணிப் பொலிசாரினால் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணித் தலைவர் விராத் கோலியின் வரலாற்றுச் சாதனை!!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 558 ரன்கள் அடித்து இந்திய அணியின் கப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி போட்டிகள் கொண்ட 6 ஒருநாள் தொடரில் விளையாடியது. போட்டிகள் முடிவில் இந்திய அணி 5-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தலைவர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 129 ஓட்டங்கள் எடுத்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவரது 35வது சதமாகும். மேலும் இந்த தொடரில் அவரது மூன்றாவது சதமாகும்.

நேற்றைய போட்டியில் அவர் 62 ரன்களை கடந்த பொழுது இருநாடுகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

முன்னதாக கடந்த 2013-14ல் இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மா 491 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது. இந்த சாதனையை கோலி தற்போது முறியடித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் அடித்த 129 ஓட்டங்கள் மூலம் இந்த தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடிய அவர் 558 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக இந்திய அணி பந்துவீசிக் கொண்டிருந்த போது கோலி இரண்டு பிடிகளை பிடித்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் பிடிக்கும் 100வது பிடியாகும்.

ஒருநாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டும் 30வது வீரர் கோலி ஆவார். இதன்மூலம் விவியன் ரிச்சர்ட்ஸ், சவுரவ் கங்குலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.

இந்த பட்டியலில் இலங்கை அணியின் மஹேல ஜெயவர்தன 218 பிடிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (160) இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மொகமது அசாருதீன் (156) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கள் 140 பிடிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

ரயில் பெட்டியில் சித்திரம் வரைந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு அபராதம்!!

ரயில் பெட்டியில் சித்திரம் வரைந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்றின் பெட்டியில் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் சித்திரம் வரைந்துள்ளனர்.

இவ்வாறு சித்திரம் வரைந்த வெளிநாட்டுப் பிரஜைகளை மாத்தறை புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் இந்த இருவரும் மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததன் அடிப்படையில் இருவரையும் நட்ட ஈடாக 74060 ரூபாவினை செலுத்துமாறும், அபராதமாக தலா ஆயிரம் ரூபா செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை!!

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துரையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் மீது பாய்ந்தே குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுமார் 60 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும் குறித்த நபர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

அவரது சடலம் அதே ரயிலில் ஏற்றப்பட்டு பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நான்கு கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் கருங்கல்லாக மாறிய விபரீதம்!!

கொழும்பில் பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் சூட்சுமமான முறையில் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விற்பனை செய்யப்படவிருந்த இரத்தினக் கல்லை பெற்றுக் கொண்ட நபர் பணத்திற்கு பதிலாக கருங்கல்லை கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கல்கிஸை பிரதேசத்தில் தரகர் போன்று செயற்பட்ட நபரினால் சூட்சுமமான முறையில் இரத்தினக் கல்லின் உரிமையாளரான வர்த்தகர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இரத்தினக் கல்லின் உரிமையாளர் இரண்டரை வருடங்களாக அதனை விற்பனை செய்யாமல் பாதுகாத்து வந்துள்ளார்.

4 கோடி ரூபாய் பெறுமதியான அந்த கல்லை ஒன்றரை கோடி ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டவர் தயாராக இருப்பதாக மோசடியாளர் தெரிவித்துள்ளார்.

இரத்தினக் கல்லை கல்கிச்சைக்கு கொண்டுவருமாறு கோரியதுடன் அதற்கு முற்பணமாக ஒருவர் லட்சம் ரூபாய் பணத்தை உரிமையாளருக்கு வழங்கியுள்ளார்.

கல்கிஸ்சையில் உரிமையாளரை சந்தித்த தரகர் இதனை இப்படியே வெளிநாட்டவருக்கு வழங்க கூடாது என கூறி பெட்டிக்குள் வைத்து அடைத்துள்ளார்.

சற்று நேரத்தில் பெட்டியை மீண்டும் உரிமையாளரிடம் வழங்கிய தரகர் வெளிநாட்டவரை அழைத்து வருகின்றேன் என கூறி சென்றுள்ளார். சென்றவர் மீண்டும் வராத நிலையில் பெட்டியை திறந்து பார்த்த உரிமையாளர் அதில் கருங்கல் ஒன்று இருந்ததனையே அவதானித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் கல்கிஸ்சை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு!!

சாதாரணப் பெண்களை விட புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு 19 வருடங்களுக்கு முன்னதாகவே மாரடைப்பு வர அதிக வாய்ப்புள்ளது.

ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் பெண்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கிறது. ஆனால், புகைப்பிடித்தல், நீரிழிவு, அசாதாரண இரத்தக் கொழுப்பு அமிலங்கள் ஆகியன இந்த பாதுகாப்பைத் தடுத்து இருதய நோய்களை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில் சாதாரணப் பெண்களை விட புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு 19 வருடங்களுக்கு முன்னதாகவே மாரடைப்பு வர அதிகம் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆண்களைவிட, பெண்களுக்கு மாரடைப்பு வரும்போது அதை தவறாக உணர்ந்துகொள்கிறார்கள். காரணம் பொதுவாகக் கூறப்படும் நெஞ்சு வலிக்கான அறிகுறிகள் பெண்களுக்கு வருவதில்லை.

பெண்களுக்கு காய்ச்சல் வந்ததைப் போல உடல் சோர்வோ, மூச்சுத்திணறலோ, குமட்டல்/வாந்தியோ அல்லது முதுகு, கை, தாடை ஆகிய ஒன்றில் வலியோ ஏற்படக்கூடும்.

38% பெண்கள் முதல் மாரடைப்பிலேயே உயிரிழக்கின்றார்கள் ஆண்களில் 25% பேர் மாத்திரம் முதல் மாரடைப்பில் உயிரிழக்கிறார்கள்.