அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை : கல்வி அமைச்சு தகவல்!!

அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படவுள்ள பாடசாலைகள் மற்றும் விஞ்ஞான பீடங்கள் என்பன மீண்டும் திங்கட்கிழமை திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இதனுடன் வாக்குச் சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 விஞ்ஞான பீடங்களும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகளும், விஞ்ஞான பீடங்களினதும் முழு விபரம்…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சர்வதேசத்திற்கு விடுக்கப்படும் கோரிக்கை!!

 
சர்வதேசம் எமது பிரச்சினைகளில் தலையிடவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விட்டுள்ளதுடன், காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இல்லை. அவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கு தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் எமது பிள்ளைகளை, கணவனை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ள நிலையில் எங்களுடைய பிள்ளைகள் எங்கும் இல்லை. நட்ட ஈடு பெற்றுத்தருவதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்திற்கு இன்று வவுனியாவில் கடந்த 348 ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்ட ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதில் அவ் அமைப்பின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்ததாவது,

இறுதி யுத்தத்தின்போது நாங்கள் ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். நாங்கள் காணாமற்போன எமது பிள்ளைகளுக்காக போராட்டம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போகச் செய்யப்பட்ட எமது பிள்ளைகளுக்காகவே போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.

தேர்தல் காலங்களிலேயே எமது ஜனாதிபதியையோ, பிரதமரையோ எமது மக்கள் பிரதிநிதிகளையோ காணக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று (05.02) ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு பதிலினை வழங்கவுள்ளோம்.

காணாமலாக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்காகவே போராட்டத்ததை மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் ஆதாரங்களுடனே இந்த மேடையிலிருந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த ஒருவருடமாக விடுதலை செய்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி ஒருவருடம் கடந்த நிலையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவருக்கு நாங்கள் எமது எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்.

இரண்டு கிழமைக்குள்ளே எமது பிள்ளைகளை விடுதலை செய்வதாகவே ஜனாதிபதியின் செயலாளர் எமது வீட்டிற்கு வந்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவருக்கு அருகிலுள்ள எனது பிள்ளையை விடுதலை செய்ய முடியாத ஜனாதிபதி இன்று காணாமற்போன எல்லோரும் இல்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டார்.

நாங்கள் நட்டஈடு கேட்டா கடந்த 348 நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்?. எங்களுடைய பிள்ளைகள் எங்களிடம் வரவேண்டும். நாங்கள் உயிருடன் ஒப்படைத்த எமது பிள்ளைகள் இன்று எமது இடங்களுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் இப்போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

ஓமந்தை சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரிடம் நாங்கள் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளட்டும். எங்கே போனார்கள். எவ்வாறு ஜனாதிபதி இல்லை என்று சொல்லமுடியும்? ஜனாதிபதியுடன் நிற்கின்ற பிள்ளைக்கு என்ன பதிலைச் சொல்லப்போகின்றார்? இல்லை என்று எவ்வாறு சொல்ல முடியும்? எங்களுடைய பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நட்ட ஈடு தரமுடியுமா? அவருக்கும் பிள்ளைகள் இருக்கின்றன. மனைவியும் இருக்கின்றார். ஜனாதிபதியின் மனைவி கேட்கட்டும் எமது பிள்ளை இல்லை நட்டஈடு தருகின்றார்கள் பெற்றுக்கொள்ளுவோமா என்று கேட்டுப்பார்க்கட்டும். மனைவியின் பதிலைக்கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.

ஒரு பிள்ளையைப் பெற்ற தாய் நட்டஈடா கேட்பாள்?. அவருடைய பிள்ளைகளுக்கு ஒரு பெறுமதி சொல்வாரா? தயவு செய்து எங்களுடைய பிள்ளைகளை விடுதலை செய்யவேண்டும். நீங்கள் யாழப்பாணம் சென்றது தேர்தல் பிரச்சாரத்திற்கு. ஏன் எங்களுடைய பிரச்சினைகளில் தலையிடுகின்றீர்கள்? எங்களுடைய பிரச்சினை நாங்கள் அரசியலாக்கவில்லை அதனூடாக கேட்கவுமில்லை. உங்கள் மீது நம்பிக்கை அற்றநிலையிலேயே நாங்கள் வெளிநாடுகளிடம் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். இங்குள்ள தாய்மார்களின் கண்ணீரைப்பார்த்து வெளிநாடுகள் உடனடியாக வந்து இறங்கவேண்டும்.

யுத்தகாலத்தில் கடமையிலிருந்த இராணுவத்தினரை விசாரிக்கவேண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவை விசாரணை மேற்கொள்ளவேண்டும். மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய நீங்களும் பதிலளிக்கவேண்டும். நீங்களும் அழிவுகளை சந்திக்கும்போது தான் உங்களுக்கும் தெரியவரும். இவ்விடயத்தில் வெளிநாடுகள் அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம் உட்பட உடனடியாக தலையிட வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளம் கோட்டக்கல்வி அதிகாரி ச.ஜேசுதாசனுக்கு மணிவிழா!!

 
அகன்று விரிந்த வன்னி நிலபரப்பின் வாயிலாக விளங்கும் வவுனியா மாவட்டத்தில் வந்தாரை வாழ வைக்கும் செட்டிக்குள பிரதேசத்தின் நாட்குறிப்பில் இன்றைய நாள்(06.02.2018) பொன் எழுத்துகளால் பொறிக்க பட வேண்டிய ஒரு நன்னாள்.

ஆம் கல்வி தான் உன்னை வாழவைக்கும் என்று கூறி அங்குள்ள மாணவர்களின் கல்வியில் அயராது உழைத்து இன்று தனது 60 அகைவையில் மணிவிழா மகுடம் சூட்டி கெளரவிக்கப்படுகிறார் செட்டிக்குள பிரதேச கல்வித் தந்தை என்று போற்ற படுகின்ற ச.ஜேசுதாசன் அவர்கள்.

கல்வி கலங்கரை விளக்காக ஆயிரம் ஆயிரம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிப் பாதையில் தனது வியர்வையை சிந்தி இன்று அவர்கள் வைத்தியராக, பொறியியலாளராக, கணக்கியல் நிபுணராக , சட்டத்தரணியாக, அதிபராக, ஆசிரியராக தன் சேவைகளை தொடர அடித்தளம் போட்டவர் இந்த ஜேசுதாசன் ஆசான் என்பது செட்டிக்குள வரலாறு சொல்கின்ற உண்மை.

1991 யுத்த காலம் தொடக்கம் பாடசாலையைப் பொறுப்பேற்று நடத்திய இவர் 2009 வன்னி இறுதி யுத்தத்தின் போது அரசு செட்டிகுளம் மகாவித்தியாலயத்தை மக்களின் வாழ்விடமாக மாற்ற தன் சொந்த காணி நிலத்தில் தற்காலிக குடி அமைத்து அல்லும் பகலும் அயராது உழைத்து இன்று ஒரு சூரியன் போன்று உயர்ந்தது நிற்கின்றார்.

செட்டிகுளம் பிரதேசத்தில் பிறந்து அங்கே கல்வி கற்று பல்கலை சென்று ஆசிரியராக பணியாற்றி அதிபராக பதவியேற்று பதினைத்து வருடங்களுக்கு மேல் என் சக மாணவர்க்கு பணி ஆற்றி இன்று செட்டிக்குளம் கோட்டக் கல்வி அதிகாரியாக பதவி வகிக்கும் இவர் செட்டிகுளம் பிரதேசத்தின் கல்வித் தந்தை என்று அழைக்க சாலப் பொருத்தமானவரும் கூட.

மாணவர்களுக்கு மட்டுமில்லாது தன்னுடன் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரின் மீதும் தனிபட்ட அக்கறை கொண்ட இவர் இன்று தன்னுடன் பணி செய்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடசாலையில் இருந்து வந்து இவரை வாழ்த்தும் போது பேருவகைகொள்கின்றார்.

காலம் மாணவர்களைப் பிரித்து தனித் தனி தேசம் கொண்டு சென்றாலும் ஜேசுதாசன் என்ற பெயரிற்கு கூடிய வெள்ளம் போன்ற பழைய மாணவர்களும் அவர்களுடடைய சரீர, நிதி உதவிகளும் இதற்குச் சான்று.

இவர் பணி சிறக்கவும் மென்மேலும் தொடரவும் எங்கள் கல்வித் தந்தையை வாழ்த்தி நிற்கின்றோம் .

பழைய மாணவர்கள்
செட்டிகுளம் மகாவித்தியாலயம்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

 
முன்னால் சென்ற வாகனத்துடன் மோட்டார் சைக்கில் ஒன்று பின்னால் சென்று மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தாண்டிக்குளம் சாந்தசோலை சந்திக்கு அருகில் நேற்று (05.02) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.‌
நெடுங்கேணியில் இருந்து பப்பாசிப் பழங்களை ஏற்றிக்கொண்டு எப்பாவல நோக்கி பயணித்த டாட்டா வாகனத்தின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த செல்வகுமார் (34 வயது) காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரியை மகிழ்வித்த சிறுமி!!

நாட்டின் சிறுவர்கள் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளவு கடந்த அன்பினை வெளிப்படுத்திய பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் வவுனியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிறுமி ஒருவரை அரவணைத்த காணொளி வெளியாகி உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது மேடைக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்த சிறுமி, மனு ஒன்றை கையளித்ததுடன் அவரின் ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனினால் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பால்வெளிக்கு வெளியே புதிய கிரகங்கள் : ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!

முதல் முறையாக பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரத்துடன் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், முதன் முதலாக விண்வெளி மண்டலத்திற்கு வெளியே அதாவது பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒகலாமா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஜின்யூ டாய், எடுவர்டு கெர்ராஸ் ஆகியோர் பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் இருப்பதை ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளனர்.

மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 3.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன. இது குறித்து ஜின்யூ டாய் கூறுகையில், “ இந்த கண்டுபிடிப்பால் நாங்கள் மிகுந்த உற்சாகமாக உள்ளோம். பால்வெளி வீதிக்கு அப்பால் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாகும்” என்றார்.

இதேபோல் எர்வர்டு கெர்ராஸ் கூறுகையில், “ இந்த சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, மைக்ரோலென்சிங் நுண் தொழில்நுட்பம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான சிறந்த உதாரணமாகும்.

இந்த கிரகங்களை நேரடியாக பார்க்க முடியாது. மிக சிறந்த தொலைநோக்கியால் இவற்றை பார்க்கலாம் என்பதை கூட நினைத்து பார்க்க முடியாது. நாம் அவற்றை ஆராய்ச்சி மட்டுமே செய்ய முடியும்’’ என்றார்.

வடமாகாண சபை உறுப்பினராக எஸ்.எம்.எம்.நியாஸ் நியமனம்!!

 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வடமாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட எஸ்.எம்.எம். நியாஸ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் இன்று வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினராக இருந்த எச்.எம்.றயீஸ் கடந்த மாதம் தனது பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று மணித்தியாலம் மின்சாரத் தடையை ஏற்படுத்திய விபத்து!!

 
பாடசாலை மாணவர்கள் இருவரை ஏற்றிச் சென்ற வாகனமொன்று இன்று காலை விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நுவரெலியா நகர மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில் நுவரெலியா நகரத்திற்கு மூன்று மணித்தியாலம் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

நுவரெலியா பூங்கா வீதியில் வைத்து சாரதிக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வாகனத்தை அவரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனம் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு எதிரே இருந்த அதிக வலு கொண்ட மின்சார கம்பத்தில் மோதியுள்ளது. குறித்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.

மேலும், நுவரெலியா நகரத்திற்கான மின்சார தடையை சீர்செய்வதற்கான நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் நிதி திணைக்களத்தின் உயர் அதிகாரி தீபா செனவிரத்ன இதனை தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

நாணயத்தாள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதனை பயன்படுத்துவது நாட்டின் நற்பெயருக்கு மிகவும் முக்கியமானது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாணயத்தாள்கள் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்து தமது நாட்டு நாணயத்தாள்களுக்கு பதிலாக இலங்கை நாணயத்தாள்களை பெற்றுக்கொள்ளும் போது அதன் சுத்தத்தன்மை தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்துகின்றனர்.

நாணயத்தாள்களை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் அறிவு மிகவும் குறைந்தமட்டத்திலேயே காணப்படுகின்றது.

நாணயத்தாள்கள் இவ்வாறு பாதிப்பிற்குள்ளாவதினால் குறித்த காலப்பகுதிக்கு முன்னதாக நாணயத்தாள்களை மத்திய வங்கி அச்சிடவேண்டியுள்ளது.

இதேவேளை, விகாரைகள், ஆலயங்கள், வீடுகளில் உண்டியல்களில் சேகரிக்கப்படும் நாணயக்குற்றிகளை மத்தியவங்கியினால் மீண்டும் தயாரிக்கவேண்டியுள்ளது.

நாணயக்குற்றியில் காணப்படும் பெறுமதியிலும் பார்க்க கூடுதலான தொகையை அவற்றை தயாரிப்பதற்காக செலவிட வேண்டியுள்ளது.

இருப்பினும் நாணயக்குற்றிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை. போதுமான நாணயக்குற்றிகள் வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பரீஸ் நகரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை!!

பிரான்ஸ் – பரிஸ் நகரில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உடலின் பல பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரிஸ் – 14 Montparnasse பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த இளைஞர், உணகவத்தின் நிலகீழ் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை பணிக்காக உணவகத்திற்கு வந்த சக ஊழியல் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த உணவகத்தில் மோதல் ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த இளைஞரை கொலை செய்தது அதே உணவகத்தில் பணிப்புரியும் 34 வயதுடைய நபர் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை மற்றும் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைக்குழந்தையுடன் யாசகம் பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

கொழும்பில் கைக்குழந்தையுடன் யாசகம் பெற்ற பெண்ணொருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதவழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகில் பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் யாசகம் பெறுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே அவர் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூரப்பிரதேசமொன்றைச் சேர்ந்த தான் கொழும்புக்கு தொழில் தேடி வந்திருந்த நேரத்தில் காதல் தொடர்பொன்றை ஏற்படுத்திக் கொண்ட நபர் தன்னை ஏமாற்றிவிட்டு, கைவிட்டதன் காரணமாக யாசகம் பெற நேர்ந்துள்ளதாக குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து அவர் வைத்திருந்த குழந்தை உண்மையில் அவரது குழந்தை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் சோதனை ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
அவ்வாறு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் தாய்க்கும் குழந்தையும் மறுவாழ்வொன்றை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைக்குழந்தைகளுடன் யாசகம் பெறும் தாய்மார் தொடர்பில் 1929 இலக்கத்துக்கு தகவல்களை வழங்குமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!!

தம்புள்ளை கல்வெடியாவ பகுதியில் வீடொன்றின் பின்னால் இருந்த பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

52 வயதுடைய எம். விஜயரத்ன பண்டா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது மூத்த மகளுடைய வீட்டிற்கு தனது மனைவியை தேடி வந்த குறித்த நபர் மீண்டும் தனது வீட்டிற்கு திரும்புவதாக தெரிவித்து சென்றவர் அவருடைய வீட்டிற்கும் செல்லாத நிலையில், தகவல்கள் எதுவும் இன்றி தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் வீடொன்றின் பின்னால் இருந்த பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சேர்த்துள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பஹாவில் ஒருவர் சுட்டுக் கொலை!!

கம்பஹா, ​கெஹெல்பந்தர பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (06.02) காலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.​

70 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள் : நடக்கும் அற்புதத்தைப் பாருங்கள்!!

நெல்லிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் விட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளன.

மலை நெல்லிக்காயை நமது அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேணி காக்க முடியும். மலை நெல்லிக்காயை அப்படியே அல்லது ஊறுகாய், ஜூஸ் போன்ற வடிவங்களிலும் உட்கொள்ளலாம்.

தினமும் ஒரு மலை நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இதயம் பலமாகும்

மலை நெல்லிக்காயில் உள்ள இயற்கை உட்பொருட்கள் இதய தசைகளை வலிமைப்படுத்துகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டிவிட்டு தங்கு தடையின்றி இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.

கொழுப்பு

நெல்லிக்காயில் உள்ள பெக்டின் என்னும் உட்பொருள், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை ஊக்குவிக்கிறது. இயற்கையாகவே விட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் நெல்லிக்காயில் உள்ளதால் அது கொழுப்பின் அளவை பராமரிக்கும்.

இளமையாக இருக்க

முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் மற்றும் முதுமைப் புள்ளிகளைக் குறைக்கும் சக்தி நெல்லிக்காய்க்கு உள்ளது. எனவே எளிய வழியில் இளமையைத் தக்க வைக்க தினம் காலை ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு

மலை நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். எனவே அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிட்டு வர நோய் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்.

கண் பார்வை

மலை நெல்லிக்காய் கண்களில் உள்ள செல்களின் இயக்கத்தை மேம்படுத்தும் சக்தி கொண்டது. இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் கண்களில் இருந்து நீர் வடிதல், கண் அரிப்பு போன்றவற்றை தடுத்து பார்வையை கூர்மையாக்கும்.

சர்க்கரை நோய்

மலை நெல்லிக்காயில் உள்ள குரோமியம், உடலில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி இன்சுலினை செயல்படச் செய்யும். இதன் விளைவாக சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணியான இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

பித்தக்கற்கள்

அதிகப்படியான கொழுப்புகள் பித்தப்பையில் சேர்ந்தால் அது கற்களாக உருவாகிறது. மலை நெல்லிக்காய் உடலின் கொழுப்பின் அளவைக் குறைத்து அதை பித்த அமிலமாக மாற்றி பித்தக்கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.

தலைமுடி வளர்ச்சி

ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால் அவருக்கு தலைமுடியில் பிரச்சனைகள் ஏற்படும். இத்தகைய விட்டமின் சி மலை நெல்லிக்காயில் ஏராளமான அளவில் உள்ளதால் தினம் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் தலைமுடி பிரச்சனை தீர்வதோடு, முடி வளர்ச்சியும் நன்றாக இருக்கும்

சரும ஆரோக்கியம்

நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி மற்றும் இதர சத்துக்கள், சருமத்திற்கு நல்ல நிறத்தை தருகிறது. இதோடு மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு வகையான சரும பிரச்சனைகள் குணமாகி சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

சிறுநீரக பிரச்சனை

மலை நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள நச்சு பொருட்களை சிறுநீரின் வழியே வெளியேற்றும். மேலும் கிருமிகளை அழித்து சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களையும் குணப்படுத்தும்.

புகையிரத மிதிப்பலகையில் பயணித்த நால்வர் பரிதாபமாகப் பலி!!

காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் மிதிப்பலகையில் பயணித்தவர்களுள் நால்வர் பலியாகியுள்ளனர்.
குறித்த விபத்து அங்குலான – துனாவ பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைக்காட்சித் தொகுப்பாளரான உலகின் முதல் ரோபோ!!

ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ரோபோ ஒன்று, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளது.

ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ரோபாடிக் ஆய்வகத்தில், வரவேற்பாளர் வேலைக்காக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. இதனை, ஆய்வக இயக்குனர் ஹிரோஷி இசிகுரோ உருவாக்கினார்.

அதன் பின்னர் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களுடன் உரையாடும் திறன், மனப்பாடம் செய்யும் திறன் கொண்டாதாக இந்த ரோபோ மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த ரோபோவை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பயன்படுத்த விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த ரோபோ பார்ப்பதற்கு, 23 வயது பெண் தோற்றத்தில் உள்ளது. இது, மனிதர்களைப் போல கண் இமைக்கும் திறன் கொண்டது. மேலும் இதன் முகம், கழுத்து, தோள்பட்டை மற்றும் இடுப்பு ஆகியவற்றை, விருப்பத்திற்கு ஏற்ப அசைக்கும் தன்மை கொண்டது. எனினும், இதன் கைகளை மட்டும் அசைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.