தயாரிப்பாளர் சங்க நோட்டீஸ் : சிம்பு, வடிவேலு, திரிஷா விளக்கம்!!

நடிகர்கள் சிம்பு, வடிவேலு, நடிகை திரிஷா ஆகியோர் மீது பட அதிபர்கள் சங்கத்தில் 3 தயாரிப்பாளர்கள் புகார்கள் அளித்து இருந்தனர். இது, பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவால் தனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியிருந்தார்.

வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்ததாகவும், அதில் திடீரென்று நடிக்க மறுத்து வடிவேலு விலகி விட்டதாகவும், இதனால் தனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் குற்றம் சாட்டி இருந்தார்.

நடிகை திரிஷாவை ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்துக்கு ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று அவர் விலகி விட்டார். இதனால் திரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சிம்பு மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தாமதம் செய்வதாக சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டு பிரச்சனை கிளப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால் புகாருக்கு இன்னும் சிம்பு பதில் அளிக்கவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் சிம்பு, வடிவேலு, திரிஷா ஆகிய மூவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து நடிகர் சங்கத்துக்கு பதில் அனுப்பி உள்ளனர்.

திரிஷா அனுப்பி உள்ள விளக்க கடிதத்தில் “சாமி-2 படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். இதற்காக போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து திருப்பி அனுப்புகிறேன்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் திரிஷாவை சமரசம் செய்து எப்படியாவது படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிம்பு அளித்துள்ள பதிலில் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். படம் வெளியாகும்போது என் மீது குற்றம் சொல்லாமல் இப்போது கூறுவது உள்நோக்கம் கொண்டது” என்று கூறியுள்ளார்.

வடிவேலுவும் இம்சை அரசன் இரண்டாம் பாகம் படத்தில் தொடர்ந்து நடிக்க சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார். இவர்கள் அளித்த விளக்கங்களை நடிகர் சங்கம் பெற்று தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி இருக்கிறது.
இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா? வேண்டாமா? என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கும்.

பாரிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!!

வெலிகம பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

டிபர் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வெலிகம, வலான வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெலிகம, கொஹுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக டிபர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் OIC க்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டு சிக்கிக் கொண்ட நபர்!!

பேருவளை பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த வேனை விடுவிப்பதற்கு 25,000 ரூபா பணத்தை, பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரிக்கு சந்தேகநபர் இலஞ்சமாக கொடுக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் என்பதுடன், அவர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

வவுனியாவிற்கு வருகைதரும் ஜனாதிபதி : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 05.02.2018 அன்று இடம்பெறவிருக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வருகை தரவுள்ள நிலையில் வவுனியா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களினதும் , மைதானத்தினை சூழவுள்ள பகுதிகளிலும் உள்ளர்களினதும் பெயர், முகவரி, தொலைபேசியிலக்கம், அடையாள அட்டையிலக்கம் என்பவற்றை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரின் ஆலோசனையிலேயே இப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் நீர் வழங்கல் சபையினர் சம்பள அதிகரிப்புக் கோரி ஆர்ப்பாட்டம்!!

 
சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் வவுனியாவில் இன்று(02.02.2018) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சம்பள உயர்வு, நியமனத்தில் அரசியல் தலையீடு, தனியார் மயப்படுத்த முயற்சி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

அதற்கு ஆதரவாக வவுனியா நீர்வழங்கல் வடிகாலமைப்பு உத்தியோகத்தர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களது அலுவலகத்திற்கு முன்னால் ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மக்களுக்கு அவசியமான தேவையினை நாம் நேரம் பாராது வழங்கி வருகின்றோம். எமக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு இன்று வரை இந்த அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு 10 வீத நியமனம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அது நிறுத்தப்பட்டு தற்போது அரசியல் ரீதியாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையை தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைநாம் வன்மையாக கண்டித்து எமக்கு நீதியை வழங்குமாறு இன்று இந்த போராட்டத்தை மேற்கொள்கின்றோம். எமக்கு தீர்வு கிடைக்காதுவிடின் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.

மூன்று மாதக் குழந்தையை கொன்ற கொடூர தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

 
பீஹாரில் பெண்ணொருவர் தன் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் தனது மூன்று மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள Bakunthpur மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஜல், இவருக்கு மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில் ஒருநாள் காஜலின் மாமனார் கைலாஷ் பட்டேல், வெளியே சென்று விட்டு ஒரு மணிநேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அதன் பின்னர், கிணற்றுக்கு அருகில் இருந்த ‘motor pump’-ஐ ‘Switch off’ செய்ய காஜலை அழைத்துள்ளார். ஆனால் அதற்கு காஜல் பதில் ஏதும் கூறாமல் இருந்ததால், அவரே கிணற்றுக்கு சென்று ‘Switch off’ செய்துள்ளார்.

அப்போது, தனது கால் இடறியதால் கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதைப் பார்த்துள்ளார் கைலாஷ். உடனே அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று காஜலைப் பார்த்துள்ளார்.

அப்போது காஜல் மயக்கமடைந்த நிலையில் வீட்டினுள் கிடந்துள்ளார், அவரின் வாயில் துணி ஒன்று திணிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கைலாஷ் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அதன் பின்னர், குழந்தையின் உடல் மீட்கப்பட்டு, காஜல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனைக்கு விரைந்த பொலிசார் காஜலிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் காஜல் கூறுகையில், ’என் வீட்டின் பின்பக்கம் முகமூடி அணிந்த மர்ம நபர் நுழைந்தான். சத்தம் கேட்டபோது, முதலில் அது என் கணவர் என்று நான் நினைத்தேன். அந்த மர்ம நபர் என் கை, கால்களை கட்டியதோடு, என் வாயில் துணியை வைத்து அடைத்து விட்டான். அதனால் என்னால் சத்தம் போட முடியவில்லை. அதன் பின்னர், எனது குழந்தையை கொண்டு சென்று கிணற்றில் வீசி விட்டு ஓடிவிட்டான்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பொலிசார் குழந்தை குறித்து தீவிரமாக காஜலிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் பதில் கூற திணறியுள்ளார். மேலும், அவர் பொய் சொன்னதை பொலிசார் கண்டுபிடித்துவிட்டனர். அதன் பின்னர், தன் குழந்தையை கொன்றது தாம் தான் என்று, காஜல் உண்மையை ஒப்புக் கொண்டார். தன்னால் குழந்தையை சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை என்றும், தனது மகிழ்ச்சியான வாழ்விற்கு குழந்தை தடையாக இருந்ததால் அதனை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காஜலின் உறவினர்களும் அதனை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, பொலிசார் காஜலை கைது செய்தனர்.

ஓலைக்குடிசைக்குள் கற்கும் உயர்தர மாணவியின் இலட்சியம் நிறைவேறுமா?

 
இறுதி யுத்தத்தின் பின்னர் புதுக்குடியிருப்பு, வேணாவில் பகுதியில் மீள்குடியேறிய சிறுமி ஒருவர் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தற்பொழுது உயர்தரக் கல்வியினை தொடர்ந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்று வரும் குறித்த சிறுமி வேணாவில் கிராமத்தில் தற்காலிக ஓலைக்குடிசை ஒன்றில் கடந்த 6 வருடங்களாக வாழ்ந்து வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சிறுமியின் குடும்பத்தை சார்ந்தவர்கள் 2012ம் ஆண்டு குறித்த கிராமத்தில் மீள்குடியேறியுள்ள போதும் இதுவரை அவர்களுக்கு நிரந்தர வீடு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் குறித்த சிறுமி ஒரு சிறந்த வைத்தியராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடன் கல்வியை தொடர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பூமிக்கு அருகில் வரும் விண்கல்!!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் 4 ஆம் திகதி பூமிக்கு அருகில் விண்கல் பயணிக்க உள்ளது. 2002 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லே பூமிக்கு அருகில் பயணிக்கும் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. விண்கல்லை நாசா நிறுவனம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. பூமிக்கு அருகில் 18 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் இந்த விண்கல் பயணிக்கும் எனவும் நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் குபேர வாசல் கோபுரதிற்கான  அடிக்கல் நாட்டல்!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில்குளம்  அருள்மிகு  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  குபேர வாசல் (வடக்கு வாசல் ) கோபுரதிற்கான  அடிக்கல்  நாட்டும் வைபவம்  தைப்பூச  தினமான  நேற்று (31.01.2018)புதன்கிழமை  நண்பகல் வேளையில்  இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில்  ஏராளமான  பக்தர்கள்  கலந்து கொண்டு அடிக்கல்  நாட்டியமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் தீர்த்தோற்சவம்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின்  வருடாந்த  மகோற்சவத்தில் தீர்தோற்சவம்  நேற்று 31.01.2018  புதன்கிழமை  காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது .

தொடர்ந்து  மதியம் 1.00 மணியளவில்  கொடியிறக்க  வைபவமும்  சண்டேஸ்வர  அபிசேகமும்  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது .

 

 

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியானது : முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?

உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Westyle) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்க பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 64,584 பில்லியன் டொலர் ஆகும்.

அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது.அந்நாட்டின் பணக்காரர்கள் 24,803 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து வைத்திருப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து 19,522 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பிரிட்டன் 9,919 பில்லியன் டொலர்களுடன் 4வது இடத்திலும், ஜெர்மனி 9,660 பில்லியன் டொலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் தனி நபர்களிடம் உள்ள மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

2017ம் ஆண்டு, இந்தியாவின் சொத்து மதிப்பு 25 சதவிகிதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. 2016ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 6,584 கோடி அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் 8,230 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்த இடத்தை பிரான்ஸ் பிடித்துள்ளது. அந்நாட்டின் சொத்து மதிப்பு 6,649 பில்லியன் டொலர்கள். அடுத்தடுத்த இடங்களை கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

இந்தியாவின் 67 சதவிகித சொத்துக்கள் ஒரு சதவிகித இந்தியர்கள் வசமே உள்ளது என முன்னர் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. அதையே இந்த ஆய்வும் கூறியிருக்கின்றது.

2007ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 3,165 பில்லியன் டொலர்களாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் சொத்து 160 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜக்குலின் பெர்னாண்டஸூடன் இனி சேர்ந்து நடிக்க மாட்டேன் : டாப்சி!!

தமிழ், தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து பொலிவுட் பக்கம் சென்றிருக்கும் நடிகை டாப்சி ‘ஜூட்வா-2’ படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ஜாக்குலின் பெர்னாண்டஸூடன் இனி நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

இந்தி நடிகர் வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘ஜூட்வா-2’. இதில் டாப்சியும், ஜாக்குலின் பெர்னாண்டஸூம் சேர்ந்து நடித்தார்கள். இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

அப்போது, ‘தயாரிப்பாளருடன் டாப்சி நெருக்கமாக இருக்கிறார். இதனால் அவருக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது’ என்று ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாப்சியிடம், ”இனி எந்த நடிகையுடன் மீண்டும் சேர்ந்து நடிக்க மாட்டீர்கள்?” என்று கேட்கப்பட்டது. இதற்கு டாப்சி, “ஜாக்குலின் பெர்னாண்டஸ்” என்று பதிலளித்தார்.

உடனே ‘ஜாக்குலினா?’ என்று அடுத்த கேள்வி கேட்க, சுதாரித்துக்கொண்ட டாப்சி, “ஏற்கனவே நாங்கள் சேர்ந்து நடித்து விட்டோம். அவர் உடலை ‘சிக்’ என்று வைத்திருப்பதை பார்த்து பொறாமையாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்.

‘தன்னைப்பற்றி குறை கூறிய ஜாக்குலின் பெர்னாண்டஸூக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் டாப்சி இப்படி கூறியுள்ளார்’ என்று இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத உலகின் முதல் நகரமாகிறது தென்னாபிரிக்காவின் கேப் டவுன்!!

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத உலகின் முதல் நகரமாகப் போகின்றது.

அந்நகர மக்களுக்கு மிகப் பயங்கரமான எச்சரிக்கையாக அமைந்துள்ள இந்த நிகழ்விற்கான திகதியும் குறிக்கப்பட்டுவிட்டது.

இந்த எச்சரிக்கைச் செய்தி உலக நாடுகளையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக மழை இல்லாததாலும் மோசமான பருவநிலை மாற்றம் காரணமாகவும் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு போயுள்ளன.

தென்னாபிரிக்காவின் முக்கிய நகரங்களில் கூட வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் பணி பல நாட்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது.

மருத்துவமனைகள், பாடசாலைகள் போன்றவற்றிற்கு மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அதுவும் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு அபாயகரமான கேப் டவுன் நகரம் ஏப்ரல் 22 ஆம் திகதியுடன் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நகரமாக மாறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 12 ஆம் திகதியே அந்த நிலை ஏற்படும் என்ற மறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தண்ணீரின் மகத்துவத்தை அனைவரும் அறியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இலங்கையில் ஒரே நேரத்தில் தென்பட்ட சுப்பர் மூன் மற்றும் பூரண சந்திர கிரகணம்!!

 
சுப்பர் மூன் (Super Moon) மற்றும் பூரண சந்திர கிரகணத்தை ஒரே நேரத்தில் காணும் அரிதான சந்தர்ப்பம் இன்று இலங்கையர் அனைவருக்கும் கிடைத்தது.

152 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளிப் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சந்திர கிரகணம் நேற்று (31.01) பிற்பகல் 4.21 முதல் தென்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

36 ஆண்டுகளுக்கு பின்னரே சுப்பர் மூன் தென்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட 22 வயதான பெண்!!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் நேற்று (31.01) காலை மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் அன்ரன் உதயராஜ் டிலக்சி என்ற 22 வயதான பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று காலை குறித்த பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர் ஆகியோர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போதே குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மாத்திரம் பேஸ்புக் தொடர்பாக 250 முறைப்பாடு கிடைத்துள்ளதாக கணனி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திர குப்தா தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் பயனர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கள் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிடும் போது ‘நண்பர்கள் மட்டும்’ பிரிவின் கீழ் வெளியிடுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.

பேஸ்புக் பயனர்கள், தனிப்பட்ட முறையில் அறியப்பட்டவர்களிடமும், அறியப்படாதவர்களிடமும் இருந்து வரும் நட்பு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் போலி பேஸ்புக் கணக்கு தொடர்பில் 3400 முறைப்பாடுகள் இலங்கை கணனி அவசர பிரிவிற்கு கிடைத்துள்ளது. தங்கள் சொந்த படங்களை வேறு நபர்கள் தவறாக பயன்படுத்தி போலி கணக்குகள் திறந்துள்ளதாகவே அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடத்தில் 80 சதவீதமான போலிக் கணக்குகளை பேஸ்புக் தலைமையம் முடக்கியுள்ளதாக கணனி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திர குப்தா மேலும் தெரிவித்துள்ளார்.