வட மாகாணத்தில் பெயரளவில் மாத்திரம் பெண்களின் பெயர்கள் : கபே அமைப்பு குற்றச்சாட்டு!!

 
வட மாகாணத்தில் பல இடங்களில் பெயரளவில் மாத்திரம் பெண்களின் பெயர்கள் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியாவில் உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் வாக்கெடுப்பு சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டம் இன்று இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் பல இடங்களில் பெயரளவில் மாத்திரம் பெண்களின் பெயர்கள் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வட்டார ரீதியில் வெற்றி பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி என்ற மனோபாவத்துடன் தேர்தல் பிரசார வேலைத்திட்டத்தினை ஆண்கள் முன்னெடுத்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

இந்த ரீதியில் வட்டார ரீதியில் பெண்கள் தெரிவு செய்யப்படாமல் எல்லா கட்சிகள் மற்றும் சுயேற்சைக்குழுகளில் ஆண்கள் மாத்திரம் வெற்றிபெற்றால் மேலதிக பெயர்ப்பட்டியலில் இருந்து பெண்களின் பெயர்களை மாத்திரமே தெரிவு செய்து அனுப்பக்கூடிய சந்தர்ப்பத்தில் கட்சி செயலாளருக்கு பாரிய பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே கட்சிகள் மற்றும் சுயேற்சைக்குழுக்கள் பெண்கள் போட்டியிடும் வட்டாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தி அவர்கள் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளையும் அவதானத்தினையும் வழங்க வேண்டும்.

இதேவேளை சில அபேட்சகர்களும் கட்சிகளும் இனரீதியிலான பிரசாரங்களை முன்னெடுப்பதனை அவதானிக்க முடிகின்றது. சில கட்சிகளின் பெயர்கள் இனத்தினை அடையாளப்படுத்தும் பெயர்களில் காணப்பட்டாலும் அவர்கள் குறிப்பாக அந்த இனத்திற்குத்தான் வாக்குகளை வழங்கவேண்டும் வேறு இனத்தவர்கள் பிரசாங்களில் ஈடுபட முடியாது என்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

ஆகவே இனரீதியாகவோ அல்லது பிரதேசவாத்தினை தூண்டும் வகையிலோ பிரசாரங்களில் ஈடுபடுவதை கபே அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. ஆகவே இவ்வாறான நிலைப்பாட்டை நாம் எமது கண்காணிப்பாளர்கள் அதிகளவானோரை வட மாகாணத்தில் நிறுவி கண்காணிப்போம் எனத் தெரிவித்தார்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக 8 பேரூந்து சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிப்பு!!

 
வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பேரூந்துகளை தரித்து பயணிகளை ஏற்றிய 8 சாரதிகளுக்கு வவுனியா போக்குவரத்து பொலிஸார் தண்டப்பணம் விதித்துள்ளனர்.

வெளிமாவட்டத்திலிருந்து வவுனியாவில் நிறைவடையும் பேரூந்து சேவைகள் மாத்திரமே வவுனியா புதிய பேரூந்து நிலையத்தினுள் செல்ல முடியுமெனவும், வெளிமாவட்டத்திலிருந்து வேறோரு மாவட்டத்திற்கு செல்லும் பேரூந்துகள் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக தரித்து பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டு புதிய பேரூந்து நிலையத்திலிருந்து தனியார், இ.போ.ச பேரூந்துகள் கடந்த வாரம் முதல் சேவையினை முன்னெடுத்து வருகின்றன.

இந் நிலையில் இன்று (11.01.2018) காலை தொடக்கம் மதியம் வரை புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பேரூந்துகளை தரித்து பயணிகளை ஏற்றிய 8 சாரதிகளுக்கு வவுனியா போக்குவரத்து பொலிஸார் தண்டப்பணம் விதித்துள்ளனர்.

புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பாதசாரிகள் கடவையில்லை, வாகனம் தரிப்பதற்கு தடையென எவ்வித பாதாதைகளும் காணப்படவில்லை மற்றும் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து அடுத்த பயணிகள் தரிப்பிடம் சுமார் 500மீற்றர் தூரத்தில் வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ளது. மற்றும் வீதியின் அருகே ( வெள்ளைக் கோட்டிற்கு கீழே) பேரூந்தினை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது தவறா? அவ்வாறாயின் புதிய பேரூந்து நிலையத்தினுள் தரித்து பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதியினை பெற்றுத்தருமாறு வெளிமாவட்டத்தினை சேர்ந்த பேரூந்து சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

புதிய பேரூந்து நிலையத்தினுள் வெளிமாவட்டத்தினை சேர்ந்த பேரூந்துகள் தரித்து பயணிகளை ஏற்றாமல் நேராக செல்வதினால் நாங்கள் புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நின்று பேரூந்துகளின் பயணம் மேற்கொள்ளுகின்றோம். ஆனால் அதனையும் போக்குவரத்து பொலிஸார் தடுத்து அவ்விடத்தில் தரிக்கும் பேரூந்து சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கின்றார்கள். எனவே நாங்கள் எங்கு நின்று எமது சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்த சமயத்தில் இவ் விடயம் தொடர்பாக தான் தீர்க்கமான முடிவினை தெரிவிப்பதாக தெரிவித்தார்.


பேஸ்புக் பதிவால் கைது செய்யப்பட்ட மாணவி!!

அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவர் தனது ஆசிரியையை கொலை செய்துவிடுவதாக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Desiree Zio(18) என்ற மாணவி River Ridge High School இல் பயின்று வருகிறார். இவரது பள்ளி ஆசிரியை அவதூறாக நடத்தியதால் கோபம் கொண்ட மாணவி, தனது பேஸ்புக் பக்கத்தில், ஆசிரியையின் பெயரை குறிப்பிட்டு அவரை கொலை செய்யாமல் விடமாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

இதனை அறிந்த பள்ளி நிர்வாகம், மாணவி மீது பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் பற்றி பாடசாலை நிர்வாகம் கூறியதாவது, மாணவர்களை போன்றே பள்ளி ஆசிரியர்கள் மீதும் நாங்கள் அதிக அக்கறையோடு உள்ளோம். மாணவியின் இந்த செயல் தவறானது ஆகும், இதனால் அவர் கண்டிக்கப்படவேண்டும் என்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

காதலனுடன் சேர்ந்து 4 வயதை மகளை கொடூரமாக கொன்ற தாய்!!

அமெரிக்காவில் காதலனுடன் சேர்ந்து 4 வயது மகளை சுடுநீரில் அமிழ்த்தி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

கயில் பேரட் மற்றும் காண்டீஸ் டயஸ் (24) தம்பதிக்கு கேப்ரில்லா பேரட் (4) என்ற மகள் உள்ளார். இதனிடையில் டயஸுக்கு பிராட் பீல்ட்ஸ் (28) என்ற ஆணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. தனது காதலருடன் சேர்ந்து பேரட்டை டயஸ் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று தனது வீட்டில் இருந்த குளியல் தொட்டியில் கொதிக்கும் சுடுநீரை நிரப்பி அதில் பேரட்டை மூழ்கடித்துள்ளனர்.

உடல் முழுவதும் பேரட்டுக்கு வெந்து போன நிலையில் சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பேரட்டை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் அங்கு உயிரிழந்தார். இதையடுத்து பிராட்டும், டயஸும் பொலிசுக்கு பயந்து தலைமறைவானார்கள். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பொலிசார் இருவரையும் ஜோர்ஜியாவில் வைத்து கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இருவருக்குமே மனநல கோளாறு இருப்பதும் அதற்கு அவர்கள் சிகிச்சை பெறாமல் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

டயஸ் வீட்டிலிருந்து கோக்யன் போதை பொருளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இதனிடையில் டயஸ் வீட்டில் நடந்த விடயம் குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை என சிறுமி பேரட்டின் தந்தை கயில் தெரிவித்துள்ளார்.

7 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : தன் குழந்தையுடன் நியாயம் கேட்ட செய்தி வாசிப்பாளர்!!

பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கசூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஷாயினப், இச்சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமராவில் நடுத்தர வயது நபர் ஒருவர், சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பின்னரே, படுகொலை செய்யப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டது.

இதனைத் தொடந்து சிறுமியின் மரணத்திற்கு காரணமான குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் பெண்ணொருவர், தனது குழந்தையுடன் தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார்.

ஒரு தாயாக அச்சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை தான் எவ்வாறு உணர்வதாக, தனது குழந்தையை அரவணைத்தபடியே பதிவு செய்துள்ளார்.

தனது வேதனையையும், வலியையும் அவர் பதிவு செய்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

பரீட்சைக்கு செல்வதாக கூறி காதலனை திருமணம் செய்த மாணவி : நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில் பரீட்சைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற மாணவி காதலனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களை கண்டுப்பிடித்த பெற்றோர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அஜய் சென் என்ற இளைஞருக்கும் அவர் வீட்டு அருகில் வசிக்கும் 22 வயதான பாலிடெக் மாணவிக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இதையறிந்த மாணவியின் பெற்றோர் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன் காதலரை தங்கள் பெண் சந்திக்க முடியாத படி பார்த்து கொண்டனர்.

இந்நிலையில், பாலிடெக்னிக் பரீட்சை எழுத செல்வதாக தனது வீட்டில் கூறி விட்டு சென்ற மாணவி அஜய்யை நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் தங்களது திருமண சான்றிதழை பெற அஜய் நீதிமன்றத்துக்கு வந்த போது அங்கு இருந்த மாணவியின் குடும்பத்தார் அஜய்யை கடத்தி ஒரு இடத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட அஜய்யை அவர்கள் மீட்டார்கள்.

மாணவியின் பெற்றோர், இரண்டு சகோதரர்கள், உறவினர்கள் என பலர் அஜய்யை அடித்த நிலையில் பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்!!

ராஜஸ்தானில் தனிமையில் இருந்த விதவை தாய்க்கு அவரது மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் (53) என்பவரது கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்துபோனார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீதாவின் இளைய மகள் சன்ஹிடா வேலை காரணமாக ஜார்கண்ட் சென்றுவிட்டார். இதனால் தனிமையில் வசிக்கும் தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கு கீதா மட்டுமின்றி சன்ஹிடாவின் அக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மனம் தளராத சன்ஹிடா தொடர்ந்து பேசி தனது தாயை ஒப்புக்கொள்ளச்செய்யும் முயற்சியை மேற்கொண்டார்.

இந்நிலையில் ராஜஸ்தான் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் கே.ஜி.குப்தா என்பவர், சன்ஹிடாவின் திருமண பதிவிற்கு விருப்பம் தெரிவித்தார். அவரை சன்ஹிடா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, கே.ஜி.குப்தாவின் மனைவி கடந்த 2010ஆம் ஆண்டு கேன்சர் நோயின் காரணமாக உயிரிழந்தார் என்பதும், அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த சன்ஹிடா, ஒருவழியாக தனது தாயை சமாதானம் செய்துவைத்து, அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து திருமணமும் நடைபெற்று தற்போது கீதா-குப்தா ஆகியோர் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். தனிமையில் வாடிய தனது தாயின் முகத்தின் இதன் மூலம் சந்தோஷத்தை பார்க்க முடிந்ததாக சன்ஹிடா தெரிவித்துள்ளார்.

மனிதநேயத்தால் சிகரம் தொட்ட ஆட்டோ ஓட்டுநர்: 15 லட்சம் வழங்கினார்!!

எவ்வித பலனையும் எதிர்பாராமல் செய்யும் உதவிக்கு நிகர் எதுவும் கிடையாது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாய் விளங்குபவர் தான் கேரளாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சத்யன்.

பல ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வாகனத்தில் சினிமா பிரபலங்களின் புகைப்படத்தை ஒட்டி வலம் வரும் நிலையில், இவர் மட்டும் குழந்தைகளின் போஸ்டர்களை ஒட்டுவது மட்டுமல்லாமல் அவர் ஈட்டும் வருமானத்தின் வாயிலாக, ஏழைக்குழந்தைகளுக்கு பல்வேறு உதவி நலன்களையும் செய்து வருகிறார்.

சத்யன் தனது தினசரி வருமானத்தில் ஒரு பகுதியை, குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக செலவழித்து வருகிறார். இதுவரை 15 லட்சம் வரை குழந்தைகளின் மருத்துவ நலன் கருதி உதவி புரிந்துள்ளார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சத்யன் மேலும் கூறியதாவது, எனது ஆட்டோவில் ஏறும் பயணிகளின் முகபாவங்களை வைத்தே அவர்கள் துயரத்தில் இருக்கிறார்களா? அவர்களுக்கு பணம் தேவையா? என்று என்னால் புரிந்து கொள்ள இயலும்.

ஆகையால் என்னை போன்றவர்களின் உதவி அவர்களுக்கு மிகவும் முக்கியமான பங்களிப்பாக இருக்கும் என்பதை உணர்கிறேன் என்று கூறுகிறார்.

தற்போது சத்யனின் இரு மகன்களும் நல்ல வேளைகளில் இருப்பதால், அவரால் Malappuram-ஐ சேர்ந்த 7 குழந்தைகளுக்கு 5.5 லட்ச ரூபாய் முதல் செலவழிக்க முடிகிறது என்றும் அன்பால் ஒரு சாம்ராஜ்ய கோட்டையை கட்டியுள்ளது போன்று இருக்கிறது என கூறுகிறார்.

வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த இரு இலங்கைப் பெண்கள் : காரணம் வெளியானது!!

மத்திய கிழக்கு நாடான குவைத் நாட்டிற்கு சென்ற நிலையில், இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்கள் இருவர் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதபரிசோதனைகளின் போது, குறித்த இருவரும் நச்சுப் புகையினை சுவாசித்தமையின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் பணியாற்றிய வீட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக வெளியாகிய நச்சுப்புகையினை சுவாசித்தமையின் காரணமாக இந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த 30 வயதான டீ.செல்வகுமாரி மற்றும் 40 வயதான ஜீ.ஜீ. நிலந்தி ஷிரோமினி குணவர்தன ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இருவரினதும் சடலங்கள் அண்மையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், பிரேதபரிசோதனைகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரதம சட்ட வைத்திய நிபுணர் ரூஹுல் ஹக்கினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், குறித்த இரு பெண்களும் நச்சுப் புகையினை சுவாசித்தமையின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலா பாலை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!!

 

கேரளாவை சேர்ந்த சினிமா பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து அவற்றை கேரளாவில் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
கேரளாவை விட புதுச்சேரியில் சொகுசு கார்களுக்கான பதிவு கட்டணம் மிகவும் குறைவு என்பதால் முக்கிய பிரபலங்கள் அவர்களின் சொகுசு கார்களை புதுச்சேரியில் பதிவு செய்து வருவதும் தெரியவந்தது.

இதுபற்றி கேரள போக்குவரத்து அதிகாரிகள் முதலில் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு இந்த வழக்கை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

புதுச்சேரியில் சொகுசு கார் பதிவிற்காக போலியான முகவரி சான்று கொடுத்து கேரள அரசுக்கு இதன்மூலம் பல லட்சம் வரி ஏய்ப்பு நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக நடிகை அமலாபால், நடிகர்கள் சுரேஷ்கோபி எம்.பி, பகத் பாசில் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளதால் அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அமலாபால் உள்பட 3 பேரையும் விசாரணைக்கு ஆஜராக கோரி குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் பிணை கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். நீதிமன்ற உத்தரவுபடி சுரேஷ்கோபியும், பகத்பாசிலும் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஏற்கனவே ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

ஆனால் அமலாபால் மட்டும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் அமலாபால் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 15ம் திகதி நடிகை அமலாபால் குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டனர். மேலும் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இலங்கை வந்த வெளிநாட்டவர் விபத்தில் மரணம்!!

காலி – மாத்தறை பிரதான வீதியின் கும்புருகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து காரணமாக ரஷ்ய நாட்டவர்கள் இருவர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டவில பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை இவர்கள் இருவரும் மாத்தறையில் இருந்து வெலிகம பிரதேசத்திற்கு சைக்கிளில் பயணிக்கும் போது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்து ஏற்பட்ட போது குறித்த ரஷ்ய நாட்டவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

310வது நாளை எட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!!

யுத்த காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, முல்லைத்தீவு மக்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டம் நாளையுடன் (12.01) 310வது நாளை எட்டுகிறது.

எதுஎவ்வாறு இருப்பினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை உரிய அவதானம் செலுத்தவில்லை என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக அலுவலகத்தின் முன்னாள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளிலும் மக்கள் தமது எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்கள் 300வது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அதிகாரிகள், சர்வதே தொண்டு அமைப்புக்களின் அதிகாரிகள், வௌிநாட்டு ஊடகவியாளர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, சென்று சந்தித்துள்ள போதும், இதுவரை உரிய தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தாயை கடுமையாக தாக்கும் மகள் : யாழில் நடந்த கொடூரம்!!(காணொளி)

இந்த உலகத்தில் ஈடு இணை இல்லாத உறவு என்றால் அது தாய் மட்டுமே. ஏனென்றால், தாயின் பாசத்திற்கு நிகராக வேறேதும் இல்லை. தாய்க்கு பிறகுதான் நாம் கையெடுத்து வணக்கும் கடவுளும் கூட.

“கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடிவதில்லை. அதனால் தான் தாயை படைத்துள்ளான்” என்றும் கூறுவதுண்டு. அந்தளவுக்கு தாய் மீதான செல்வாக்கும், சொல்வாக்கும் இந்த பாரினில் உயர்ந்து காணப்படுகின்றது.

இந்நிலையில், எங்களை ஈன்றெடுத்த தாயை நாங்கள் எவ்வாறெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், சமகாலத்தில் அந்த நிலை முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது.

இதற்கு எமது சமூகத்தில் இடம்பெறும் ஒரு சில சம்பவங்களே எடுத்துக்காட்டாக இருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தாய்யொருவரை உணவு கொடுக்காமல் வீட்டில் அடைத்து வைத்து மகள் ஒருவர் கொடுமைப்படுத்திய சம்பவம் கூட இடம்பெற்றிருந்தது.

அந்த வகையில், தற்போது யாழ்ப்பாணத்தில் மகள் ஒருவர் பெற்ற தாயை தாக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

வீதியால் சென்ற தனது தாயை இழுத்துச் சென்று தாக்கும் மகள் ஒருவர் தாக்கும் காட்சி பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.

மனதில் ஈரமில்லாமல் அவர் செயற்படும் விதம், தாய்மை உணர்வை இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால் தான் இது போன்று நடந்து கொள்ள முடியும் என்று அந்தக் காணொளியைப் பார்த்தவர்கள் கருத்துரைத்திருக்கிறார்கள்.

கொழும்பு பொலிஸ் நிலையத்தில் 17 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில், 17 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த இளைஞன் ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் வைத்து குறித்த இளைஞன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சிறைக்கூடத்தில் வைத்து இன்று அதிகாலை அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிளிநொச்சியில் பெகோ இயந்திரம் கவிழ்ந்ததில் சிறுவன் பலி!!

கிளிநொச்சி – முழங்காவில் – கிருஸ்னண் கோவிலுக்கு அருகில் சென்று கொண்டிருந்த பெகோ இயந்திரம் ஒன்று, பாடசாலை மாணவர் மீது கவிழ்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, வீதியால் சென்று கொண்டிருந்த குறித்த மாணவன் மீது, சாரதியின் கட்டுப்பாட்டை மீறிய பெகோ இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவத்தில் உயிரிழந்தவர், முழங்காவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதான ஒருவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன், 40 வயதான பெகோ இயந்திர சாரதி கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் மர்மமாக உயிரிழந்த பின்லாந்துப் பெண்!!

சென்னையில் பின்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஹொட்டலில், பின்லாந்தைச் சேர்ந்த ஹூலியா நே எமிலியா என்ற பெண், அவரது நண்பருடன் சேர்ந்து நேற்று இரவு தங்கியுள்ளார்.

இன்று காலையில், அவர் உயிரிழந்துகிடந்தார். அதைப் பார்த்த ஹொட்டல் நிர்வாகிகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பெண்ணுடன் வந்தவரைப் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.