கனடாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறுமிகளான இரண்டு சகோதரிகள் வீட்டில் சடலமாக கிடந்த நிலையில் பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
கனடாவின் பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஓக் பே பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் Chloe (6) மற்றும் Aubrey Berry (4) என்ற இரண்டு சகோதரிகள் சடலமாக பொலிசாரால் கண்டுப்பிடிக்கப்பட்டனர்.
அங்கு ஆண் ஒருவர் காயத்துடன் கிடந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிறுமிகள் இருவரும் தங்களது தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்காக இதை பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கணவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மனைவியை ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் சேர்த்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில், இவர் தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமிக்கும், அவர் வேலை பார்க்கும் கடையின் உரிமையாளர் மகன் மாரிராமர் என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விடயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததால், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெள்ளமரத்துப்பட்டிக்கு, முத்துலட்சுமி தனது 3 குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, செந்தில் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துள்ளார். ஆனால், முத்துலட்சுமி அவருடன் வர மறுத்துவிட்டார். எனினும், செந்தில் தன்னுடன் வரவேண்டும் என்று முத்துலட்சுமியை வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தனது கணவரை கொலை செய்ய நினைத்த முத்துலட்சுமி, தோட்டம் ஒன்றிற்கு அவரை வரவழைத்து தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர், தனது குழந்தைகளுடன் கடலூருக்கு தப்பிச் சென்ற முத்துலட்சுமியை, 8 மாதங்கள் கழித்து ஒட்டன்சத்திரம் பொலிசார் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் பிணையில் வெளிவந்த இருவரும் தலைமறைவாகினர்.
இந்நிலையில் மூலசத்திரம் பகுதியில் இருவரும் இருப்பதை அறிந்த பொலிசார், ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
உலகைச் சுற்றி வலம் வருவது பலருக்கும் நிறைவேறாத கனவு. ஆனால் ஜேர்மனியின் பஸ்டி குட்மன் என்ற இளைஞர், சுயமாக வடிவமைத்த மூங்கில் மிதிவண்டியில் இதுவரை இருபத்தி நான்கு நாடுகளில் வலம் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், எனக்கு இயற்கை மிகவும் ஈர்ப்புள்ளதால் மூங்கில் கொண்டு மிதிவண்டியை உருவாக்க ஆரம்பித்தேன். முதலில் மிதிவண்டியின் சிறுபாகங்களை செய்ய செய்ய 2 நாட்கள் எடுத்தது. இந்த மூங்கில் மிதிவண்டியினை செய்து முழுமையாக முடிப்பதற்கு 2 அரை முதல் 3 மாதங்கள் ஆகின.
உலகம் முழுவதும் 40,000 மரங்களை நாடுவதே எனது நோக்கம், 24 நாடுகளுக்கு பயணம் செய்தேன். முதலில் முதலாவது மரக்கன்றை டெல்லியில் பாடசாலை ஒன்றில் நட்டுள்ளேன்.
இதுகுறித்து என் பெற்றோர்களிடம் கூறியபோது அவர்கள் இதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். உலகில் ஏதாவது ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும், உலக நன்மைக்காக இதை செய்ததாகவும் கூறியுள்ளார்.
பிரான்ஸில் நிலவி வரும் கடும் குளிரை தாங்க முடியாமல் சிறுவர்கள் சிலர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிரான்ஸில் கடந்த சில தினங்களாக தட்பவெப்பநிலை குறைந்துள்ளதால் கடும் குளிர் நிலவி வருகிறது. வீடுகளில் வசிக்கும் மக்களே இதனால் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலையில், அகதிகளுக்கு சரியான உறைவிடம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பெண் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், மொரோக்கோ நாட்டின் அகதிகளான மூன்று சிறுவர்கள், குளிரை தாங்கிக்கொள்ள முடியாமல் பாரிஸில் உள்ள துணிகளை உலர்த்தும் இயந்திரத்திற்குள் சுருண்டு இருப்பது போல் உள்ளது.
இந்த புகைப்படத்தை எடுத்த கிறிஸ்டின் என்னும் பெண், டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதால் சர்ச்சைக்குள்ளானது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அகதிகளுக்கான தகுந்த உறைவிடம் வழங்குவது தொடர்பாக அரசு தரப்பில் பல முயற்சிகள் எடுத்தும் அதனை அவர்கள் ஏற்க மறுப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தலைநகரில் எடுக்கப்பட்டுள்ள குறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாய்ந்தமருதில் கழிவகற்றும் வாகனமொன்றிட்கு அடையாளம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் இது வரையில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ்.மாணவனை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே சந்தித்துள்ளார்.
யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் குறித்த மாணவனின் வீட்டிற்கு இன்று காலை சென்ற வடக்கு மாகாண ஆளுநர் தனது வாழ்த்துக்கைளை தெரிவித்தார். அத்துடன் மாணவனின் பெற்றோரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையையும் மாணவனுக்கு அன்பளிப்புச் செய்தார்.
புலோலி புற்றளை, உபயகதிர்காமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் 3A பெறுபேற்றை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதான தஷ்வந்த் பொலிசார் உண்மையை கூற விடாமல் தடுக்கின்றனர் என தெரிவித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.
மாங்காடு சிறுமி ஹாசினியின் கொலை வழக்கு செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இன்று நீதிமன்றம் வந்த தஷ்வந்த், சிறுமி ஹாசினியையும், தாயையும் தான் கொலை செய்யவில்லை என தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தால் உண்மையை கூறத்தயார் எனவும் தெரிவித்துள்ளான்.
இதற்கிடையே பொலிஸ் வாகனத்தில் ஏற வந்த தஷ்வந்தை செய்தியாளர்கள் படம் பிடித்துள்ளனர். அப்போது தஷ்வந்த், என்ன நடந்தது என்று தெரியாமல் பொலிஸ் சொல்வதையே செய்தியாக வெளியிடுகிறீர்கள். நான் பேட்டியளிக்கிறேன், என்னுடைய பேட்டியை ஒளிபரப்புங்கள் என தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்ற போது, பொலிசார் அவர்களை தடுத்துள்ளனர். அப்போது, தன்னை உண்மையை கூற விடாமல் பொலிசார் தடுப்பதாக தஷ்வந்த் கோஷமிட்டுள்ளார்.
பொலிசாருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தஷ்வந்த் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தனது வீட்டையும், அலுவலகத்தையும் மர்மநபர்கள் தாக்கியதாக ஜெ.தீபா பொய் புகார் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக ஜெ.தீபா மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கு காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட தீபா பேரவை நிர்வாகி ராமச்சந்திரன் காரணம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதன்படி பொலிசார் விசாரணை நடத்தியதில், ராமச்சந்திரன் தன் மேல் குற்றமில்லை என தொடர்ந்து கூறிவந்தார். மேலும் தீபாவுக்கு பணம் அளித்துள்ளதாகவும், அதை திருப்பி கேட்டதற்காக சதி செய்து பொலிசிடம் மாட்டிவிட்டதாகவும் தெரிவித்தார்.
சில ஆதாரங்களையும் சமர்பித்ததால் பொலிசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முடிவு செய்தனர். சம்பவ தினத்தன்று தீபா வீடு, அலுவலகத்தில் இரவு முதல் காலை வரை சிசிடிவி அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, தீபா வெளியில் நின்று கொண்டு கைகாட்ட ஆதரவாளர்கள் நாற்காலிகளை உடைப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆதரவாளர்களை கைது செய்த பொலிசார், தீபாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் ஆஷஸ் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 244 ஓட்டங்கள் எடுத்துள்ளார், இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி 491 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. அவ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெஸ்டர் குக், 244 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுபெற்றபோது, தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் ஆட்டமிழக்காமல் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன்பு நியூசிலாந்தின் கிளென் டர்னர் இந்த சாதனையை(223 ஓட்டங்கள்) படைத்திருந்தார்.
மேலும் அலெஸ்டர் குக் டெஸ்ட் அரங்கில் 11,956 ஓட்டங்கள் எடுத்ததன் மூலமாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாராவை (11,953) பின்னுக்குத் தள்ளி, டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த 6வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதுதவிர மெல்போர்ன் மைதானத்தில் அந்நிய நாட்டு வீரர் அடித்த அதிகபட்ச ஓட்டங்கள், டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 150 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாதனைகளையும் குக் படைத்துள்ளார்.
இலங்கையில் பண்டிகை மற்றும் விடுமுறைக்காலத்தினை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்பவர்களை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஏழாம் திகதி வரையில் விசேட புகையிரத சேவைகள் நடத்தப்படவுள்ளன.
பாடசாலை விடுமுறைக்காலம் எதிர்வரும் இரண்டாம் திகதியுடன் நிறைவடையும் போதும், ஜனவரி ஏழாம் திகதி வரையில் விசேட புகையிரத சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த தகவலை புகையிரத கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளதுடன், புதுவருடத்தினை முன்னிட்டு பயணங்களை மேற்கொள்பவர்களை மகிழ்விக்கும் வகையிலும், போக்குவரத்தின்போதான சிரமங்களை குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை மற்றும் பண்டாரவளை பகுதிகளுக்கு செல்வோருக்கான விசேட புகையிரத சேவையும் கொழும்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க, அணியில் மீண்டும் இடம்பிடிக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் மீதான மலிங்கவின் அர்பணிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என பயிற்சியாளர் சந்திக ஹத்துருசின்ஹ தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, கடைசியாக இந்தியாவுக்கு எதிரான T20 தொடரில் விளையாடினார். அதன் பின்னர் அவருக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அவர் தற்போது விளையாடி வருகிறார். அணியில் மீண்டும் இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் மலிங்க, அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து ஹத்துருசின்ஹ கூறுகையில், NCC அணியில் விளையாடும் மலிங்க, இன்று போட்டி இல்லை என்று தெரிந்தும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அவரின் உற்சாகமான இந்த பயிற்சியைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.
மேலும் அவர் மற்ற வீரர்களுக்கு ஒரு உந்துகோலாகவும், நல்லதொரு செய்தியையும் இந்த பயிற்சியின் வாயிலாக கூறுகிறார் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற தமிழர்களை கைது செய்வதற்கு Interpol இன் உதவியை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழகம் – மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழர்களை கைது செய்வதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2014ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில், இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு தயாபர ராஜா அவரது மனைவி உதயகலா மற்றும் அவர்களது 3 குழந்தைகள் அகதிகளாகச் சென்றுள்ளனர்.
குறித்த அனைவரும் கடவுச்சீட்டு தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகின்றர்.
அகதிகளாக வந்த கதிர்வேல் தயாபர ராஜாவிற்கு எதிராக பல்வேறு பண மோசடிகள் குறித்த வழக்கில் இலங்கை நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், Interpol இன் உதவியுடன் குறித்த நபரை கைது செய்து நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, யாழ். சாவகச்சேரி நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவு ஒன்று இந்திய தூதுரகத்தின் ஊடாக மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் சுயேச்சை எம்எல்ஏ தினகரன் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்ததாகவும், தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் தரப்படும் என அறிவித்து ஓட்டு வேட்டையாடியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
முதலிலேயே பணம் கொடுத்தால் அதை வாங்கிக்கொண்டு வேறு வேட்பாளருக்கு பமம் கொடுக்க வாய்ப்புள்ளதாக கருதிய தினகரன் தரப்பு இப்படி ஒரு மாஸ்டர் பிளானோடு களமிறங்கியதாக கூறப்படுகிறது.
தினகரன் தரப்பு திட்டத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது. பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பலரும் வாக்குகளை குக்கர் சின்னம் தேயத் தேய குத்தி தள்ளியதால் அவர் 50 சதவீதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார் என பிற கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இப்போது டோக்கனுக்கு பதிலாக பணம் தருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் நன்றி தெரிவிக்க கூட ஆர்.கே.நகர் போகாமல் தினகரன் இழுத்தடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் 20 ரூபாய் டோக்கன் தொடர்பாக ஆர்.கே.நகர் மக்கள் பொறுமை இழக்க தொடங்கிவிட்டனர். புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் வசிக்கும் தினகரன் ஆதரவாளரான ஜான்பீட்டரிடம் (35) இதே விவகாரத்திற்காக தகராறு செய்துள்ளார். ஜான் பீட்டரிடம், சென்ற கார்த்திகேயன் தங்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து, ஜான் பீட்டர் மற்றும் சரண்ராஜ் (20), செல்வம் (39), ரவி (40) ஆகியோர் சேர்ந்து கார்த்திகேயனை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த கார்த்திகேயன்ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
10,000 தருவதாக கூறி இவர்கள் டோக்கன் சப்ளை செய்து வந்தது, போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளதால், தினகரனுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
தினகரன் தேர்தல் செலவு கணக்கில் இந்த பணத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தல் செலவீனங்களை தினகரன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்போது வாக்காளர்களுக்கு கொடுத்த பண மதிப்பையும் தினகரன் தேர்தல் செலவு கணக்கில் சேர்த்தால், தினகரன் எம்எல்ஏ பதவி பறிபோகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தாண்டு முதல் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ளும் நடைமுறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
சாரதி அனுமதி பத்திரம் கோரும் நபர்கள் ஒருநாள் வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளவதை கட்டாயமாக்குவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.
நாளுக்கு நாள் இடம்பெறுகின்ற விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் விபத்துக்களால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் பாதசாரிகள் என தெரியவந்துள்ளது. அவர்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்ய எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ம் ஆண்டில் அதிகமான மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் ஏற்பட்டுள்ளன. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1145 ஆகும். அதனை கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது 22 வீத அதிகரிப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல படங்களில் பிசியாக நடித்து வரும் ராஜேந்திரன், ஆறாம் திணை படத்திற்காக பேயை காதலித்து வருகிறார்.
எம்.ஆர்.கே.வி.எஸ். சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார்.
முக்கியமான கதாபாத்திரங்களில் மொடடை ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் தனியார் தொலைக்காட்சி புகழ் குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குனர் அருண்.சி கூறும்போது, ‘மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய்சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது.
பொதுவாக பேய்ப்படங்களில் முக்கியமான அம்சமே பேய்களுக்கென இடம்பெறும் பிளாஸ்பேக் தான். ஆனால் அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
எப்போதும் பாசிடிவான எண்ணங்கள் தான் நல்ல விளைவுகளை கொடுக்கும் என்கிற கருத்தை முன்னிறுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பேயை தாறுமாறாக விரட்டி விரட்டி காதலிக்கும் மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும் இருக்கும். அதுமட்டுமல்ல நடிகர் ரவி மரியாவுக்கும் இது பேர் சொல்லும் படமாக இருக்கும் என்கிறார்’.
மொட்டை ராஜேந்திரனுடன் தனியார் தொலைக்காட்சி புகழ் குரேஷியும் காமெடியில் கலக்கியுள்ளார். இந்த படத்திற்கு ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதியில் கடும் மழையில் கூட இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.
மனதில் மிக அதிகமான பொறுமை குடிகொண்டிருக்கும் உடற்பருமன் கூடியவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிக உடல் எடையுடன் கூடிய பருமனுடையவர்கள் வாழ்க்கை நிலை குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஜாயிஸ் மில்லர்ட் மற்றும் ஜார்ஜ் டேவி ஸ்மித் ஆகியோர் இங்கிலாந்தில் 50,000 ஆண் மற்றும் பெண்களிடம் இத்தகைய ஆய்வை நடத்தினர்.
அதில் 37 முதல் 73 வயதினர் வரை ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களது உயரம், உடல் எடை குறித்த ‘பி.எம்.ஐ.’ மற்றும் உடல்நலம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
அவர்களில் அளவுக்கு மீறிய உடல் எடையுடன் குண்டாக இருந்தவர்கள் அதிக இரத்த அழுத்தத்துடன் இருந்தனர். அதனால் அவர்கள் இளம் வயதிலேயே நீரிழிவு நோயால் அவதிப்படுவது கண்டறியப்பட்டது.
அதே நேரத்தில் அவர்கள் மனதில் மிக அதிகமான பொறுமை குடிகொண்டிருக்கும். அதனால் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாக அதிசயத்தக்க தகவலை தெரிவித்தனர்.
இதன்மூலம் பருமன் கூடியவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.