க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுப்பேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் தமது அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சையில் இரண்டு இலட்சத்து 53 ஆயிரத்து 483 பரீட்சார்த்திகள் தோற்றினர். அவர்களில் ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வீட்டில் தனியாகவிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி வைத்து கப்பம் கோரியவர் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அச்சுவேலிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிறுப்பிட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் (27.12) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுப்பிட்டிப் பகுதியில் வீட்டில் இந்த பெண்ணின் தனியாக இருந்த வேளையில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க இந்த நபர் பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து 5 லட்சம் கப்பம் கோரியுள்ளார்.
பெண் அலறிய போது அயலவர்கள் அங்கு சென்றுள்ளனர். அதன்போது, இந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த பெண் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று வியாழக்கிழமை (28) சந்தேக நபர் அச்சுவேலிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயர் தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காமையின் காரணமாக மனமுடைந்த யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விசமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த மாணவன் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
நண்பர்களை விட அதிக பெறுபேறு கிடைக்காமையின் காரணமாக அவர் மிகுந்த மனவருத்தத்துடன் இருந்ததாகவும், மாலை நேரம் குறித்த மாணவனின் அறையில் அழுகுரல் கேட்டதையடுத்து அறைக்கு சென்று பார்த்த போது மாணவன் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததால் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் மாணவனின் தந்தை பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அவர் பருகியுள்ள விஷ மருந்து பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதல்ல என்பதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமராச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சத்திர சிகிச்சை நிபுணராக வந்து வவுனியா வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டும்என்பதே எனது விருப்பம் என வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் சுந்தர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அம் மாணவன் மேலும் தெரிவிக்கையில்,
நான் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை. 97 புள்ளிகள் மட்டுமே எடுத்திருந்தேன். அது போன்று கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையிலும் 9A எடுக்கவில்லை. 7A,B தான் எடுத்தேன். ஆனாலும் அதை வைத்து தான் நான் இந்தளவுக்கு படித்தேன்.
நான் படிப்பதற்கு எனது ஆசிரியர்கள் எனக்கு நன்றாக உதவி செய்தார்கள். வீட்டிலும் நல்ல உதவி கிடைத்தது. முயற்சி இருந்தால் எதையும் அடையலாம். முயற்சியால் தான் இந்த நிலையை அடைந்தேன்.
நான் இன்னும் படிக்கணும், நல்லதொரு சத்திர சிகிச்சை நிபுணராக வந்து எமது வவுனியா வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த மாணவனின் வீட்டிக்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அம் மாணவனை வாழ்த்தியதுடன் அம் மாணவனின் பல்கலைக்கழக படிப்புச் செலவையும் தான் பொறுப்பெடுத்துக் கொண்டார்.
அத்துடன் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் மாணவனின் வீட்டிற்குச் சென்று மாணவனை கௌரவித்ததுடன், கல்வி நடவடிக்கைக்கு ஏதாவது உதவிகள் தேவைப்படின் செய்து தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.
2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ள நிலையில் வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் 5 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர்.
உயிரியல் பிரிவில்..
அலஸ் ஜோயல் ஆசான் 3A, மாவட்ட நிலை 2
விசாகி சிவகுமார் 3A, மாவட்ட நிலை 6
வர்த்தகப் பிரிவில்..
தயாபரன் கஜன் 3A, மாவட்ட நிலை 6
விவேகானந்தன் கபிஷன் 3A, மாவட்ட நிலை 8
இராஜசேகரம் யசோதரன் 3A, மாவட்ட நிலை 10 ஆகியோர் 3A சித்திகளைப்பெற்று சித்தியடைந்துள்ளனர். மேலும்..
கணிதப்பிரிவில்..
கனகலிங்கம் கீதாஞ்சன் 2AB, மாவட்ட நிலை 1
தங்கராசா யதுசன் 2AB, மாவட்ட நிலை 3
சாம்பசிவம் தர்சிகன் 2AB, மாவட்ட நிலை 5
செல்வரட்ணம் கோபீசன் A2B, மாவட்ட நிலை 8
தொழில்நுட்பப்பிரிவில்..
ஸ்டீபன் பிரகாஷ் ஜோய் B,2C மாவட்ட நிலை 4
இராசலிங்கம் திசாகரன் 3C மாவட்ட நிலை 5
இராசலிங்கம் திவாகரன் 2BC மாவட்ட நிலை 6
சிவகுமார் அரவிந்தன் B2C மாவட்ட நிலை 8
J.A.F ஜெனிஸ்ரன் 3C மாவட்ட நிலை 9
ஜெயக்குமார் ரகுவர்மன் 3C மாவட்ட நிலை 10
ஆகியோர் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளகின்றோம்.
பிரித்தானியாவில் வாழும் பெண் ஒருவர் இலங்கையில் முன்னெடுக்கும் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இலங்கையிலுள்ள தெரு நாய்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள பிரித்தானியாவை சேர்ந்த Rachel Schofield என்ற பெண் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டதன் பின்னர் 3 மில்லியன் தெரு நாய்கள் உள்ளதை அவதானித்த அந்த பெண் அவற்றிற்காக சேவை செய்வதற்கு முன் வந்துள்ளார்.
நாய்களை பாதுகாப்பதற்காக அவர் தனது PHD ஆய்வுகளை கைவிட்டுள்ளார். தனது வீட்டை விற்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், Wigton பகுதியில் ஒரு சிறிய வீட்டில் குடியேறவுள்ளார். அத்துடன் அவரால் முன்னெடுக்கப்படுகின்ற தொண்டு நிறுவனம் தொடர்பில் ஆர்வம் செலுத்தவுள்ளதுடன், சிறிய கடை ஒன்றையும் நடத்தி வருகின்றார்.
ஹிக்கடுவ பகுதிக்கு அவர் விஜயம் மேற்கொண்டிருந்த போது கழு என்ற தெரு நாய் ஆபத்தான நிலையில் இருப்பதனை அவதானித்து அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
தெரு நாய் கழு ஆபத்தான நிலைமையில் இருந்து மீண்டு வந்துள்ளது. இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அது ஒரு கண்ணை இழந்துள்ளதுடன் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.
பிரித்தானியாவின் Workington பகுதியில் உள்ள கடையில் கிடைத்த வருமானத்தில் நாய்களை மீட்பதற்கு அவர் செயற்படுவதாக சர்வதேச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் இலங்கைக்கு வருகைத்தந்தவர் 10 நாட்களில் 273 நாய்களை அவர் காப்பாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இலங்கை முழுவதும் வாழும் தெரு நாய்களையும், காயமடைந்த, உடல் உறுப்புகள் சேதமடைந்த நாய்களை பாதுகாப்பதற்கும் அவர் தொடரந்து செயற்படவுள்ளார்.
நாய்கள் மீது கொண்டுள்ள பிரியம் காரணமாக தனது தொண்டு நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கவுள்ளார். யாராவது தன்னார்வமாக உதவ விரும்பினாலும் உதவ முடியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்ப ரீதியான பாடங்களை கற்க முன்வரவேண்டும் என கா.பொ.த உயர்தரத்தில் உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கணேசமூர்த்தி துதிசான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் இருந்து உயிர்முறை தொழில்நுட்பவியல் பாடத்தில் முதன்முறையாக மாவட்டத்தில் முதல் இடத்தினை துதிசான் பெற்றுக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்த புரத்தினை சேர்ந்த கணேசமூர்த்தி துதிசான் மூன்று பாடங்களில் பீ சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்ற இவர், பட்டிருப்பு தேசிய பாடசாலையில் சாதாரண தரம் கற்றதுடன் களுதாவளை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர் கல்வியை கற்று இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்து மிகவும் கஸ்டங்களின் மத்தியில் கல்வியை தொடர்ந்த அவர், எதிர் காலத்தில் தமது சமூகத்திற்கு சிறந்த கல்வியினையும் சேவையினையும் வழங்கும் வகையில் ஒரு விரிவுரையாளராக வருவதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
தான் எவ்வளவோ கஸ்டங்களின் மத்தியில் கல்வியை தொடர்ந்த போதும் எனது இலக்கு கல்வியின் உச்ச நிலையை அடைய வேண்டும் என்பதாகவே இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனுஷின் உண்மையான பெற்றோர் நாங்கள் தான் என்பது அவரின் மாமனாரான நடிகர் ரஜினிக்கு நன்றாகத் தெரியும்” என்று மேலூரைச் சேர்ந்த கதிரேசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் சிறு வயதில் காணாமல்போன தங்கள் மகன் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, தீர்ப்பு எதிராக வந்ததால் அமைதியாக இருந்த மேலூர் கதிரேசன், இன்று மதியம் மதுரைக் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
நடிகர் ரஜினிகாந்த், தன் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். அப்போது பேசிய ரஜினி, தாய் தந்தையே தெய்வம் அவர்களை மதிக்க வேண்டும் என்று பேசுகிறார். ஆனால், இதுவரை என் மகன் தனுஷ் எங்களை வந்து பார்க்கவில்லை.
என்னையும் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என் மனைவியையும் சந்திக்க தனுஷுக்கு நடிகர் ரஜினி அறிவுறுத்த வேண்டும்.
தனுஷ் எங்கள் மகன்தான் என்பது நடிகர் ரஜினிக்குத் தெரியும். எங்கள் ஏழ்மை நிலையைப் பார்த்து எங்களுடன் சேர தனுஷ் விரும்பவில்லை. அவருக்கு அறிவுரை கூற நடிகர் ரஜினிக்கு என் கோரிக்கையை ஊடகங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளார்கள்.
மட்டக்களப்பில் விஞ்ஞான பிரிவில் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் ராஜன் திபிகரன் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிலைபெற்று மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு நாவற்குடாவை சேர்ந்த ராஜன் – சாரதாதேவி தம்பதியரின் புதல்வராவார்.
மட்டக்களப்பில் கணிதப் பிரிவில் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி மாணவன் சிவா விதுசனன் கணிதப் பாடப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்பெற்று சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு – கிரான்குளம் 7ஆம் வட்டாரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிவா டேஸ்ரஜனி ஆகியோரின் புதல்வனே இவ்வாறு கணிதப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். சாதாரண கூலித் தொழிலாளியின் மகனான இவர் வறுமையிலும் சாதனை படைத்து பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் தொழில்நுட்பவியல் பிரிவில் மட்டக்களப்பு பட்/களுதாவளை மகா வித்தியாலய மாணவன் கணேசமூர்த்தி துதிசான் தொழில்நுட்பவியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு – திருப்பழுகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி இராசலெட்சுமி ஆகியோரின் புதல்வனே இவ்வாறு சாதனை புரிந்துள்ளார். விவசாயத்தை சீவனோபாயமாகக் கொண்ட சாதாரண விவசாயக் குடும்பத்தின் மகன் வறுமையிலும் சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பில் வணிகப் பிரிவில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி மாணவி சஜானி விஜயராசா வணிகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த விஜயராசா மதிமலர் அவர்களின் மகள் இவ்வாறு வணிகப் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். சாதாரண கூலித் தொழிலாளியின் மகள் வறுமையிலும் சாதனை புரிந்து பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.
மட்டக்களப்பு – முனைக்காடு கிராமத்தில்.. மட்டக்களப்பு – முனைக்காடு கிராமத்தில் பொறியியல், விஞ்ஞானம் மற்றும் கணிதப்பிரிவில் சாதித்த மாணவ மாணவிகளின் விபரங்கள் வெளியாகி உள்ளன.
முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் பொறியியல் தொழிநுட்ப துறையில் கல்வி கற்ற வில்வரெத்தினம் கதிஸ் என்ற மாணவன் 2C, 1B பெறுபேறு பெற்று மாவட்டத்தில் 13ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். முனைக்காடு கிராமத்தில் பொறியியல் தொழிநுட்ப துறையில் கல்வி கற்று மாவட்ட நிலையில் 13ஆவது இடத்தினைப் பெற்றுள்ளமை வரலாற்றில் முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – கல்லடி மகளிர் விவேகானந்தா பாடசாலையில் கல்வி பயின்ற குருகுலசிங்கம் பிரஸ்ணவி என்ற மாணவி விஞ்ஞான பிரிவில் 2A, B பெறுபேறுகளுடன் மாவட்ட ரீதியில் 11ஆம் நிலையை பெற்று வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில், கணித துறையில் கல்வி பயின்ற முனைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கனிஸ்ரன் என்ற மாணவன் 1A, 2B பெறுபேற்றினை பெற்று மாவட்டத்தில் 31ஆம் இடத்தினைப் பிடித்து பொறியியல் துறைக்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
விடா முயற்சியே தனது வெற்றிக்கு காரணம் என க.பொ.த உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி கிரிதா தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி கிரிதா வர்த்தகப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
தனது பெறுபேறுகள் தொடர்பாக ஊடகவியலாளர்களிம் கருத்து தெரிவித்த அவர்,
“ஆரம்பம் முதலே வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியிலேயே கல்வி கற்று வந்தேன். தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் சித்தியடையாவிட்டாலும் கணக்காளராக வரவேண்டும் என்ற விடாமுயற்சியின் காரணமாக இன்று வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று முதலிடம் பெற்றிருக்கிறேன். இதற்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் பெற்றோருமே காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின்படி வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம்..
கலைப்பிரிவு
றமீம் முகமது ஷவ்றான் 3A, மாவட்ட நிலை 7,
உதயகுமார் விக்கினேஸ்வரன் 2AC, மாவட்ட நிலை 15
வர்த்தகப் பிரிவு
றதீசா மகேஸ்வரன் 3A, மாவட்ட நிலை 21
கணிதப் பிரிவு
நிலாநேசன் கேதீஸ்ராம் A2B, மாவட்ட நிலை 2
கருணாகரன் கிருபாகரன் A2C, மாவட்ட நிலை 17
டானியல் தினேஷ்ராஜ் B2C, மாவட்ட நிலை 27
க.ரியந்தன் B2C, மாவட்ட நிலை 33
செல்வரட்ணம் கஜீவன் B2C, மாவட்ட நிலை 40
வவுனியா மண்ணில் முதன் முறையாக கர்நாடக சங்கீத மற்றும் இசைக்கலைஞர்களின் சங்கமிப்பில் ராகவ சங்கீர்த்தன சபா பெருமையுடன் வழங்கும் தியாகராஜ சங்கீர்த்தன விழா. நாளைய தினம் 29.12.2017 வெள்ளிகிழமை பிற்பகல் 3.00 மணியளவில் சாம்பல் தோட்டம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சாயி சரவண மண்டபத்தில் இடம்பெறுகின்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியாவின் பலபகுதிகளிலுமிருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளவுமை குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 205 மாணவர்களின் பெறுபேறுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ.சனத் புஜீத தெரிவித்துள்ளார். பல்வேறு முறைகேடுகள் காரணமாக பெறுபேறுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெறுபேறுகள் தொடர்பில் விசாரிக்க சிறப்பு தொலைபேசி இலக்கங்கள் சில வழங்கப்பட்டுள்ளன.
0112784201
0112784537
0113188350
0113140314
1911
குறித்த இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு பெறுபேறுகள் தொடர்பில் விளக்கங்களை பெற்று கொள்ள முடியும் என்றும் பரீட்சை ஆணையாளர் அறிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் இரவு வெளியாகியது. இந்நிலையில் இவர்களில் ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர்.
மேலும் 2017ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்த நிலையில், தனியார் பரீட்சார்த்திகள் 77 ஆயிரத்து 284 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் அ.திஷாந்தன் என்ற மாணவன் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதேவேளை, நுண்கலைப் பிரிவில் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எஸ்.பிரமிதா என்ற மாணவி நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் 52ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
இராகலை – ஹல்கரனோயா பகுதியை வசிப்பிடமாகவும், ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் அ.திஷாந்தன் என்ற மாணவன் 3A பெறுபேற்றை பெற்றுள்ளார்.குறித்த மாணவன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.
ஹட்டன் ரொதஸ் பகுதியை வசிப்பிடமாகவும், ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் எஸ்.பிரமிதா என்ற மாணவி நுண்கலைப் பிரிவில் 2A, B பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் 52ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதில் 20 மாணவர்களுக்கு 3A சித்தி பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.
கணிதப் பிரிவில் 10 மாணவர்கயும், உயிரியல் பிரிவில் 4 மாணவர்களும், வணிகப் பிரிவில் 6 மாணவர்களும் 3A சித்தி பெற்று சாதித்துள்ளனர்.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்த நிலையில், தனியார் பரீட்சார்த்திகள் 77 ஆயிரத்து 284 பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.