இலங்கையில் 1000 பெண்கள் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமை!!

இலங்கையில் சுமார் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பேச்சாளர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார்

இவர்களில் சுமார் ஆயிரம் பேர் பெண்கள் எனவும், அது முழு எண்ணிக்கையில் 0.5 வீதம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்தும் பெண்களில் அதிகளவானோர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள். அவர்களை தவிர மேல் வகுப்பை சேர்ந்த சில பெண்களும் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்துவதாகவும் பிரதீப் குமார மேலும் தெரிவித்துள்ளார்.

முகநூல் காதல் : யுவதி தற்கொலை, இளைஞன் விபத்தில் மரணம்!!

முகநூல் ஊடாக காதலித்து வந்த யுவதியும், இளைஞனும் உயிரிழந்த சம்பவங்கள் கேகாலை மற்றும் வரக்காபொலை ஆகிய பிரதேசங்களில் நடந்துள்ளன.

முகநூல் ஊடாக அறிமுகமான காதலன் மீது அதிருப்தியடைந்த யுவதி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வரக்காபொலை, தொலங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த யுவதி முகநூல் மூலம் அறிமுகமான இளைஞனை இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் சம்பந்தப்பட்ட இளைஞன், யுவதியை நேரடியாக சந்தித்ததில்லை.

இதன் காரணமாக அதிருப்தியடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் 6 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அதேவேளை, முகநூல் மூலம் அறிமுகமான காதலியை சந்திக்க பூகொடை பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற 30 வயதான இளைஞனொருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இளைஞன் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வரக்காபொலை, மஹாஹேன பிரதேசத்தில் பேருந்துடன் மோதியதில் படுகாயமடைந்த இளைஞன், அண்மையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் கண்டி, நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

முகநூலில் அறிமுகமான பின்னர் யுவதியை கண்டிக்கு வருமாறு கூறிய இளைஞன், யுவதியை சந்திக்க மோட்டார் சைக்கிளில் கண்டிக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

இலங்கையிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 5.5 கிலோ தங்கம்!!

இலங்கையிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 5.5 கிலோ தங்கத்தை தமிழக பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய் (இந்திய பெறுமதி) என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் – மண்டபம் பகுதியில் வைத்து இந்த தங்கம் மீட்கப்பட்டுள்ள.  இவை இலங்கையிலிருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகராறின் போது பறிக்கப்பட்ட 18 வயது இளைஞனின் உயிர்!!

மட்டக்களப்பு – கற்சேனை, நீலண்டமடு பகுதியில் இளைஞன் ஒருவன் நேற்று மாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடொன்றில் ஏற்பட்ட தகராறின் போது குறித்த இளைஞன் கத்தியால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கொலை செய்யப்பட்டவர் 18 வயதினையுடைய அரசடித்தீவு கிராமத்தினைச் சேர்ந்த அழகுதுரை அதீஸ்காந்தன் என இனங்காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

4000 வருட பழமையான விவாகரத்து!!

துருக்கியில் 4000 ஆண்டுகளுக்கு முன் களிமண்ணில் எழுதப்பட்ட விவாகரத்து பட்டயத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

துருக்கி காரன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவும் பழமையான திருமண விவாகரத்துப் பட்டயத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

4,000 ஆண்டுகளுக்கு முன் அசிரியான் பகுதியில் வாழ்ந்த லாகிப்யூம் மற்றும் அவரது மனைவி காடலாவிற்கு திருமணமான பிறகு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.

கடாலாவிற்கு குழந்தை பிறக்காததால் அவர் தனது கணவருக்கு வேறோரு திருமணம் செய்து வைக்க சம்மதம் வழங்கியுள்ளார்.

அந்த ஒப்பந்தத்தின் படி, லகுபியும் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்ததால், அவர் கடலாவிற்கு வெள்ளி வழங்க வேண்டும். கடாலா விவாகரத்து வழங்கினால் அவர் லகுபியுமிற்கு வெள்ளி வழங்க வேண்டும். இந்த விடயம் அந்தப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டயம் தற்போதைய துருக்கியின் குல்தீப் கனேஷில் உள்ள ஆராய்ச்சித் தளத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கோண T20 தொடர் கொழும்பில்!!

இலங்­கையின் 70 ஆவது ஆண்டு சுதந்­திர தின கொண்­டாட்டத்தை முன்­னிட்டு இலங்கை கிரிக்கெட் சபை 3 நாடுகள் பங்­கேற்கும் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிட்­டுள்­ளது. இதில் இலங்­கை­யுடன் பங்­க­ளாதேஷ், இந்­தியா ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்தத் தொடர் எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி முதல் 20ம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரே­ம­தாச மைதா­னத்தில் நடை­பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. இறுதிப் போட்­டி­யையும் சேர்த்து மொத்தம் 7 போட்­டிகள் நடை­பெ­று­கின்­றன.

இதன்­படி ஒவ்­வொரு அணியும் மற்ற அணி­க­ளுடன் தலா இரு­முறை நேருக்கு நேர் மோதும். புள்­ளிகள் அடிப்­ப­டையில் முதல் இரு இடங்­களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா படுகோனேவை உயிருடன் எரித்துக் கொன்றால் 1 கோடி பரிசு!!

சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் மிக பழமையான இந்துத்வா இயக்கமான அகில பாரத சத்ரிய மகாசபை சார்பில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பரேலி நகரில் உள்ள ஸ்வருப் பார்க் பகுதியில் பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடைபெற்றது.

இந்த படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனேவின் நூற்றுக்கும் மேற்பட்ட உருவ பொம்மைகளை போராட்டக்காரர்கள் கொடும்பாவியாக கொளுத்தினர்.
பின்னர், பரேலி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் பத்மாவதி படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் மனு அளித்தனர்.

அப்போது நிருபர்களிடம் பேசிய அகில பாரத சத்ரிய மகாசபை இளைஞர் அணி தலைவர் புவனேஸ்வர் சிங், ‘ராணி பத்னினியின் தியாகத்தை பற்றி நடிகை தீபிகா படுகோனேவுக்கு தெரியாது. உயிருடன் எரிந்தால் அந்த வேதனை என்னவென்று தீபிகா படுகோனே தெரிந்துகொள்ள வேண்டும்.

அவரை உயிருடன் தீயிட்டு எரிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்படும்’ என்று கூறினார். புவனேஸ்வர் சிங்கின் இந்த அறிவிப்பு தொடர்பாக பரேலி மாவட்ட பொலிசாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, இன்றைய போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பொலிசாரிடம் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.

13ம் ஆண்டு நூற்றாண்டு காலகட்டத்தில் வட இந்தியாவில் முகமதியப் பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாகப் பரவியது. பத்மாவதி என்றும் அழைக்கப்படும் ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜி அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.

எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலையில் ராஜபுத்திரர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு இறந்தனர். அந்தப்புரப் பெண்கள் கூட்டாகத் தீக்குளித்து இறந்தனர்.
ஆண்கள் அனைவரும் இறந்த பின் நகரத்தினுள் நுழைந்த சுல்தான் தெருவில் இருந்து எழுந்த மாபெரும் நெருப்பைக் கண்டான்.

சித்தூர் ராணி பத்மினியின் தலைமையில் ஏராளமான பெண்கள் அந்த நெருப்பைச் சுற்றி வந்ததைக் கண்ட சுல்தான் அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தடுக்கச் சென்றான். அதற்கு ராணி, ’இதுதான் ராஜபுத்திரப் பெண் உனக்குக் கொடுக்கும் வரவேற்பு’ என்று கூறி கூட்டாக தீக்குளித்து உயிர் துறந்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த வரலாற்றை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போது பத்மாவதி இந்திப் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல்களை மையமாக வைத்து இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தவார் சந்த் கேலாட், பத்மாவதி படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என திரைப்பட தணிக்கை குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா இன்று அறிவித்துள்ளார்.

சிம்பாப்வேயில் தொடரும் அரசியல் குழப்பம்: பதவி விலக முகாபே மறுப்பு!!

சிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக ஜனாதிபதி பதவியில் இருந்து வரும் ரொபர்ட் முகாபே, இராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும்கட்சி 24 மணிநேர கெடு விதித்துள்ள நிலையில், அவர் பதவி விலக மறுத்துள்ளார்.

முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில், அண்மையில், அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை ஜனாதிபதி எம்மர்சன் நாங்காக்வா-வை முகாபே பதவி நீக்கம் செய்தார்.

இதனால், ஆளும் ஷானு – பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த 15-ம் திகதி ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது. முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் இராணுவத்தின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, முகாபேவை பதவி நீக்கம் செய்து, நாடு கடத்துவது குறித்து மாகாண ஆளுநர்கள் மற்றும் ஆளும்கட்சியின் அவசர கூட்டம் ஹராரே நகரில் நேற்று நடைபெற்றது. முகாபேவை ஆட்சியை விட்டு நீக்க வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டாக பிரசார இயக்கம் நடத்தி வந்த சிம்பாப்வே நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கிறிஸ் முட்ஸ்வாங்வா இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

முகாபேவை ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கியும் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் துணை ஜனாதிபதியை நியமித்தும் அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், 24 மணி நேரத்திற்குள் (திங்கள்கிழமை நண்பகலுக்குள்) கட்சித்தலைவர் மற்றும் ஜனாதிபதி பதவியிலிருந்து முகாபே இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எம்மர்சன் நாங்காக்வா விரைவில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகாபே தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்றியுள்ளார்.

தனக்கு எதிராக இராணுவம் கிளர்ந்துள்ளது குறித்தோ, கட்சித்தலைவர் மற்றும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது குறித்தோ அவர் பேசவில்லை.

அடுத்த மாதம் ஷானு – பி.எப் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளதாகவும், தலைவர் என்ற முறையில் தான் மாநாட்டில் உரையாற்ற இருப்பதாகவும் முகாபே பேசினார். நாட்டின் இயல்பு நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

வவுனியாவில் 12 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் பொலிஸாரால் கைது!!

வவுனியாவில் இரு வேறு பகுதிகளில் நேற்றிரவு (20.11.2017) 10.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் தனிமையாக நின்ற ஒருவரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் சோதனையிட்ட சமயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கொண்டு செல்லவிருந்த 10 கிலோகிராம் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளத்தை சேர்ந்த 30 வயது நபரை கைது செய்ததாகவும்,

இதேவேளை கொழும்பு செல்வதற்காக வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நின்ற முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 30 வயது நபருடைய பயணபொதியினை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்ட சமயத்தில் 2 கிலோ கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரு சந்தேக நபர்களிடம் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா மடுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!!

 
வவுனியா மடுக்குளம் மாதார் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோலிக்கிணங்க நேற்றையதினம் (20.11.2017) மாலை 4.30 மணியளவில் செங்கள்படை கிராமத்தை சேர்ந்த வறிய குடும்பங்களை சேரந்த 8 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள், பாதணிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலக உத்தியோகத்தர்கள், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள், கிராம மக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

எமது கோரிக்கையை ஏற்று செங்கள்படை கிராம மாணவர்களுக்கு உதவிபுரிந்த வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சுகாதார மேம்பாட்டு பரிசளிப்பு விழா – 2017!!

 
டெங்குக் கட்டுப்பாட்டு செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து வவுனியா நகர சபை , வவுனியா தெற்கு பிரதேச சபை என்பவற்றின் பங்களிப்புடன் பாடசாலை மட்டத்திலும் திணைக்களங்கள் மட்டத்திலும் கிராம மட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் செயற்பாடுகளை மேலும் வலுவுட்டுவதற்காக நடாத்தப்பட்ட டெங்கு தொடர்பான சித்திர மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான, டெங்கு அற்ற பாடசாலை, திணைக்களங்கள் என்பவற்றிக்கான பரிசளிப்பு நிகழ்வு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் இன்று (20.11.2017) காலை 10 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டத்தில் இடம்பெற்றது.

இராஜேந்திரகுளம் ஒமேகா லைன் ஆடைத்தொழிற்சாலை , ஓகன் அரசார்பற்ற நிறுவனம் , வவுனியா நகரசபை , வவுனியா தெற்கு பிரதேச சபை என்பவற்றின் அனுசரணையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் எம்.மகேந்திரன், வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் வி.சிறீஸ்கந்தராஜா, கௌரவ விருந்தினர்களாக வவுனியா தொற்று நோயியலாளர் வைத்தியர் யூட் பீரிஸ், வவுனியா நகரசபை செயலாளர் தயாபரன், வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் சுகந்தி கிசோர், விருந்தினராக பொதுச்சுகாதார பரிசோதகர் க.மேஜெயா, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.தியாகலிங்கம் , கிராம சேவையாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா சிதம்பரபுரத்தில் இலவச மருத்துவ முகாம்!!

 
வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையினரின் அனுசரணையில் வன்னி மாவட்ட சமூதாய பொலிஸ் பிரிவின் உதவியுடன் சிதம்பரபுரம் காவல் அரணில் இன்று (20.11.2017) காலை 10 மணியளவில் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஈஷி பூரண சுவிஷேச சபையின் பிரதான பிஷப் பி. என்.இராஜசிங்கம் (இ.பி.எம்) மற்றும் அவருடன் வருகை தந்த பிரதான போதகர்கள், வன்னி மாவட்ட சமூதாய பொலிஸ் பிரிவு நிலையத்தின் அதிகாரிகள், சிதம்பரபுரம் காவல் அரணின் பொறுப்பதிகாரி என பலரும் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

கண்ணாடி வழங்கல், பல் மருத்துவம், ஏனைய வியாதிகளுக்கு மருந்து வழங்கல் போன்ற சேவைகள் இன்றைய இலவச மருத்துவ முகாமின் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழரசு கட்சியினருக்கும் இடையே விஷேட சந்திப்பு!!

 
வவுனியாவில் நேற்று (19.11) மாலை 4.30 மணியளவில் பட்டாணிச்சூர், மன்னார் வீதியிலுள்ள வெங்கடேஸ்வரா மண்டபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கும் வவுனியா மாவட்ட முஸ்லிம்களுக்கும் இடையே விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் வவுனியா மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடமாகணசபை உறுப்பினருமாக மருத்துவர் ப.சத்தியலிங்கம், வவனியா மாவட்ட கட்சி உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுமூகமான ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் தமிழ்மக்கள் முஸ்லிம் மக்களிடையே ஒரு நல்லுறவைக்கட்டியெழுப்பும் முதற்திட்டமாகவும் இச்சந்திப்பு இடம்பெற்றது.

மாவீரர் தினத்தை அரசியலாக்க வேண்டாம் : ப.சத்தியலிங்கம் கோரிக்கை!!

இனவிடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தினத்தை அரசியலாக்க வேண்டாமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று வவுனியாவில் அமைந்துள்ள தமிழரக்கட்சியின் அலுவலகமான தாயகத்தில் நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போது தேர்தல் காலம் சூடுபிடித்துள்ளது. இம்மாதம் நினைவுகூறப்படவுள்ள மாவீரர் தினத்தை தமது அரசியல் பிரச்சாரத்திற்காக சிலர் அரசியலாக்க முனையலாம். மாவீரர் தினமென்பது கொண்டாட்டமல்ல. கனத்த மனதுடன் உணர்வுபூர்வமாக நினைவுகூறப்படும் நாள். இதனை அரசியலாக்கி கொச்சைப்படுத்துவது ஆரோக்கியமான விடயமல்ல.

மாவீரர் துயிலுமில்லங்கள் பல இன்றும் இராணுவ முகாம்களாக உள்ளன. தங்கள் பிள்ளைகளை விதைத்த அந்த மண்ணில் பெற்றோர்கள், உறவினர்கள் துயரங்களை சொல்லி அழுவதற்கே உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

தங்கள் பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களும் அவர்களின் உறவினர்களும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கும் புனிதமான நாள். இதை அரசியலாக்குவது அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடாதென்று தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!!

சம்பள முரண்பாடு, பதவியுயர்வு, மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தாதிய, நிறைவுகாண், துணை மருத்துவ சேவையை சேர்ந்தவர்கள் இணைந்து 22.11.2017 அன்று வேலை நிறுத்தத்தை செய்யத் தீர்மானித்துள்ளனர்.

வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினரும் இவ் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் இவ் ஒருநாள் வேலை நிறுத்தமானது 22.11.2017 காலை 7 மணி தொடக்கம் 23.11.2017 காலை 7 மணி வரை நடைபெறுமெனவும் நோயாளர்களினதும் பொதுமக்களினதும் நன்மை கருதி வேலை நிறுத்தத்தின் போது உயிர்காப்பு நடவடிக்கைகளுக்கான அவசரசிகிச்கைக்கு மாத்திரம் தாதிய உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் க.ஜனார்த்தனன் தெரிவித்தார்.

மன்னாரில் மின்னல் தாக்கி சிறுவன் பரிதாபமாகப் பலி!!

 
மன்னார் – முருங்கன் பகுதியில் நேற்று பிற்பகல் மின்னல் தாக்கி சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது தந்தைக்கு, வீட்டில் இருந்து மதிய உணவை எடுத்துச் சென்ற சிறுவனே வயலில் வைத்து மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தில், கட்டையடம்பன் கிராமத்தைச் சேர்ந்த நித்தியானந்தன் ரஸ்கின் எனும் 11 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மின்னல் தாக்கத்திற்கு உள்ளான சிறுவனின் சடலம் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.