மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த தாயும் உயிரை விட்ட பரிதாபம்!!

மகள் தற்கொலை செய்ததால் மனமுடைந்த தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூரை சேர்ந்தவர் சரஸ்வதி (58), இவரது மகள் சைலஜா (26) . இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே சும்மா இருந்த நிலையில் சரஸ்வதி கண்டித்துள்ளார். இதன் காரணமாக தாய்க்கும், மகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனது சித்தப்பா வீட்டுக்கு சென்று சைலஜா தங்கியுள்ளார்.

இந்நிலையில், மனமுடைந்த நிலையில் இருந்த சைலஜா நேற்று முன்தினம் சித்தப்பா வீட்டில் மின் விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவலை அறிந்த சரஸ்வதி அதிர்ச்சியடைந்தார், இதையடுத்து மகள் இறந்த துக்கத்தில் அவரும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

உயிரிழந்த அசோக்குமார் என்னுடைய நிழல் : இயக்குனர் சசிகுமார் உருக்கம்!!

இயக்குனர் சசிகுமாரின் மைத்துனரான அசோக்குமார் நேற்று சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், கம்பெனி புரோடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்தார்.

தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அசோக்குமார் கடிதத்தில் உருக்கமாக எழுதியிருந்தார். அதில் கந்துவட்டி கொடுமையால் சிக்கித் தவித்து வருவதாகவும், சசிகுமாரை இவர்கள் சித்ரவதை செய்வதை சகிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் என்னை போல் நீயும் கோழை ஆகிவிடாதே, நீ கண்டிப்பாக நல்லபடியாக வாழ வேண்டும், சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னை விட்டு போகிறேன் எனவும் எழுதியிருந்தார்.

இதுகுறித்து இயக்குனர் சசிகுமார் கூறுகையில், என்னுடைய அத்தை பையன் அசோக் குமார், எனது நிழலாக இருந்தவன், இணை தயாரிப்பாளராக இருந்தார். என் படம், தயாரிப்பு உள்ளிட்ட அனைத்தையுமே அவன் தான் நிர்வகித்து வந்தான்.

கொடி வீரன் வெளியீட்டு விஷயத்தில் ரெட் போட்டிருந்தார்கள், பணப்பிரச்சினையால் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான். கடிதம் எழுதி வைத்திருக்கிறான், இதற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்பில் அமெரிக்கா எடுத்த கடும் நடவடிக்கை!!

பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிற நாடுகளின் பட்டியலில் வட கொரியாவை இணைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடுமையான பொருளாதார தடைகள், உலகளாவிய எதிர்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் வடகொரியா, தனது அணு ஆயுத திட்டத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது.

வடகொரியா 6வது முறையாக அணுக்குண்டு சோதனை நடத்தி முடித்திருப்பதுடன், தற்போது அமெரிக்காவின் உள்பகுதியை தாக்கும் ஆற்றல் கொண்ட ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை யுத்தம் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிற நாடுகளின் பட்டியலில் வட கொரியாவை இணைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இதை நீண்ட காலத்துக்கு முன்பாக செய்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். இந்த பட்டியலில் வடகொரியா முன்பும் இடம் பெற்றிருந்தது.

ஆனால் 2008 ஆம் ஆண்டு, ஜார்ஜ் டபிள்யு புஷ் ஜனாதிபதியாக இருந்தபோது அந்தப் பட்டியலில் இருந்து வடகொரியா விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அந்த நாட்டை பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிற நாடுகளின் பட்டியலில் டிரம்ப் சேர்த்திருப்பது, உலக அரங்கை அதிரச்செய்துள்ளது.

இதன் காரணமாக வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். டிரம்பின் நடவடிக்கை காரணமாக வடகொரியா உலகளவில் பிற நாடுகளிடம் இருந்து தூதரக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் தனிமைப்படுத்தப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதேவேளை, அமெரிக்கா மீது வடகொரியா கடும் ஆத்திரம் கொள்ளவும் இந்த முடிவு வழிவகுக்கிறது என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

தத்ரூபமாக உருவங்களை வடிவமைக்கும் கிராமத்து இளைஞன்!!

 
மட்டக்களப்பு – களுமுந்தன்வெளி கிராமத்தில் இளைஞரொருவர் களி, வெண்கலம் போன்ற பொருட்களைக் கொண்டு உருவங்களை தத்ரூபமாக வடிவமைத்து வருகிறார்.

சிறப்பு நுண்கலைமானிப் பட்டதாரியான பாலசுந்தரம் ரகுநாதன் எனும் இளைஞரே குறித்த கலையில் கைதேர்ந்தவராக உள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு சிறப்பு நுண்கலைமானி பட்டப்படிப்பை நிறைவு செய்த குறித்த இளைஞர் வேவையில்லாப் பட்டதாரியாக இருந்து வருகின்றார்.

இந்த நிலையிலேயே அவர் தனது கற்றலுக்கு ஏற்றால்போல் இருக்கின்ற வளத்தைக் கொண்டு இயந்திரங்களையோ, இரசாயனங்களையோ பயன்படுத்தாமல் உருவங்களை தத்ரூபமாக வடிவமைத்து வருகின்றார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நான் யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலை துறையில் சிறப்பு பட்டம் பெற்றுள்ளதோடு, எனது சகோதரன் ஒருவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பயின்று வருகின்றார்.

சிறியதொரு கிராமமாக எமது ஊர் இருந்தலும், கலைத்துறையில் மிகவும் இன்னல்களுக்கு மத்தியில் ஓரளவேனும் மிளிர்கின்ற எமக்கு மூலம் பொருட்கள் உள்ளிட்ட சில உதவிகளே தேவைப்படுகின்றன.

தேவையான மூலப்பொருட்க்கள் கிடைக்கும் பட்சத்தில் உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் தேவைப்படுகின்ற சிற்பங்களையும், சித்திரங்களையும், எம்மால் தரமான முறையில் வடிவமைத்து வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

தீபிகாவை பாதுகாக்க வேண்டும் : கமல்ஹாசன்!!

பத்மாவதி பட பிரச்சனையில் நடிகை தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரையை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி திரைப்படத்தை அடுத்த மாதம் 1 ஆம் திகதி திரைக்கு கொண்டுவர முடிவு செய்து அதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பாரதிய ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபா பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து தீபிகா படுகோனேவுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது, அவரது வீட்டிலும் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பத்மாவதி படத்திற்கு கமல் ஆதரவு தெரிவித்திருக்கிறார், இதுகுறித்து அவரது சமூக வலைத்தளத்தில், பத்மாவதி பட பிரச்சனையில் தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும். என்னுடைய படங்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் எழுந்துள்ளன. உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ, அதுபோல் திரைப்படத்திற்கு கருத்து சுதந்திரம் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.

2018 ஆம் ஆண்டில் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

2018 ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை சர்வதேச சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூமி சுழலும் வேகத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டிருப்பது ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சுழல்வதில் காணப்படும் இந்த ஏற்றத்தாழ்வு என்பது மிக மிகச் சிறிய அளவுக்கே உள்ளது.

பூமி சுழற்சிக்கும் நிலநடுக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. பூமி சுழற்சி வேகம் குறையும்போது அது நாளின் நீளத்தில் ஒரு மில்லிசெகண்ட் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதனை அணுக்கடிகாரத்தைக் கொண்டே மிகத் துல்லியமாக அளவிட முடியும். ஆனால், பூமி சுழற்சியில் ஏற்படும் இந்த மிகச் சிறிய மாறுபாடுகள் நிலத்தடி ஆற்றல் அதிக அளவில் வெளிப்படுவதற்கு அடிப்படைக் காரணமாகிறது.

எனவே, பூமி சுழலும் வேகம் சிறிது குறைந்தாலும், அது அதிக எண்ணிக்கையில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

இது குறித்து அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் பில்ஹம் தெரிவித்துள்ளதாவது,

”கடந்த 1900 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கங்களை ஆய்வு செய்தோம். பூமி சுழற்சியில் மாறுதல் ஏற்படும்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், வரும் 2018 ஆம் ஆண்டில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் நிகழ வாய்ப்புள்ளது,” என கூறியுள்ளார்.

மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் இருந்த தங்க இலை 625,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனை!!

பாரிஸில் மாவீரன் நெப்போலியனின் கிரீடத்தில் இருந்த தங்க இலை ஏலத்தில் விடுப்பட்டுள்ளது.

மாவீரன், பேரரசர் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்திய வேலைப்பாடு மிகுந்த 400 பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

மாவீரன் நெப்போலியன் 1804 ஆம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். அப்போது அவருக்கு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்பட்டது. அதில் தங்க இலைகள் பொருத்தப்பட்டிருந்தன.

கிரீடத்தின் எடை அதிகமாக இருந்ததால் அதில் பொருத்தப்பட்ட 6 தங்க இலைகள் பிரித்து எடுக்கப்பட்டன. பின்னர் அவை பொற்கொல்லர் மார்டீன் ருல்லியம் பியன்னேசிடம் கொடுக்கப்பட்டது.

அதை அவர் தனது மகள்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதில் ஒரு தங்க இலை பாரிஸில் உள்ள ஓசினெட் மையத்தில் ஏலம் விடப்பட்டது.

இதன்போது 625,000 யூரோக்களுக்கு (550,000 பிரிட்டிஷ் பவுண்ட்ஸ்) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மதிப்பில் 1127,58,943 ரூபா.

எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட 6 மடங்கு அதிகமான தொகைக்கு இந்த தங்க இலை ஏலத்தில் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏலத்தில் விடப்பட்ட பொருட்களில் நெப்போலியனின் மனைவி ராணி ஜோஸப்பினுக்கு சொந்தமான தங்க பூக்கள் அலங்காரத்துடன் கூடிய நகைப்பெட்டியும் அடங்கும்.

செல்பி இனி கில்பி ஆகலாம் : புதிய பிரச்சாரம்!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் “உயிரை எடுக்கும் செல்ஃபிகள்” என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேலை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் செல்ஃபி எடுக்கும் போது நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளதையடுத்து, மக்களை எச்சரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எழுதுகிறார் பி.பி.சி செய்தியாளர் கீதா பாண்டே.

பெங்களூரில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் (19 மைல்கள்) தொலைவில் உள்ளது குண்டாஞ்சனேயர் கோவில். அதனை சுற்றிப் பார்க்க கடந்த செப்டம்பர் மாதம் ஞாயிற்றுகிழமை ஒன்றில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்றிருந்தனர்.

ராமகொண்டலு கிராமத்தில் 1932 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவில் பல பக்தர்கள் மட்டும் அல்லாது அருகில் உள்ள கல்லூரி மாணவர்களும் அதிகம் வரும் இடம்.

தேசிய மாணவர் படையை (என்.சி.சி) சேர்ந்த இளைஞர்கள், காலை முழுவதும் அந்த கோவில் வளாகத்தை சுத்தம் செய்து அழகு படுத்தினர். பின்பு மதிய வேலையில் வெயில் அதிகரிக்க, கோவில் குளத்தில் குளிக்க முடிவு செய்தனர்.

அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டும் கத்திக் கொண்டும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்ததாக கூறுகிறார் அங்கு கடை வைத்திருக்கும் மஞ்சுநாத்.

ஆனால், அந்த நாள் சோகத்தில் முடிந்தது. குளிக்க சென்ற மாணவர்களில் ஒருவரான ஜி. விஷ்வா 15 அடி ஆழமுள்ள அந்த குளத்தில் மூழ்கினார்.

மாணவர்கள் எடுத்துக் கொண்ட குறிப்பிட்ட ஒரு செல்ஃபியில், மூழ்கும் இளைஞரின் தலை மட்டும் தெளிவாக தெரிகிறது. ஆனால் அவர்கள் கேமராவின் மறுபக்கத்தை பார்க்கிறார்கள்.

மூழ்கிய இளைஞனை யாரும் கவனிக்காத நிலையில், ஒரு மணி நேரம் கழித்து அவன் காணாமல் போன விஷயம் தெரிய வந்தது. பின், காவல்துறை மற்றும் உள்ளூர் வாசிகள் உதவியுடன் மூன்று மணி நேரம் கழித்து இறந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் நடைபெற்ற ஒருசில வாரங்கள் கழித்து, கோவிலில் இருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்யும் தூரத்திலேயே மேலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்தது. செல்ஃபி எடுக்க முயன்ற போது ரயில் மோதி மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்.

“என் உறவினர் ஒருவரை பள்ளியில் கொண்டுவிட இந்த வழியாக காலை 8:15 மணிக்கு சென்ற போது எல்லாம் இங்கு அமைதியாக இருந்தது” எனக் கூறுகிறார் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பொறியியல் படிக்கும் மாணவன் சரத் கௌடா.

அரை மணி நேரம் கழித்து வரும்போது இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்ததைப் பார்த்து சம்பவ இடத்திற்கு தாம் வந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

“எல்லா இடங்களிலும் அவர்களின் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. செல்ஃபி எடுப்பதற்காக ரயில் பாலங்களில் அவர்கள் படுத்திருந்ததால், ரயில் வருவதை யாரும் பார்க்கவில்லை என்றும் அன்று ஓர் இளைஞரின் பிறந்தநாள்” என்றும் அவர் கூறினார்.

கர்நாடகாவில் நிகழ்ந்த இந்த இரு சம்பவங்களும் அதிர்ச்சியளிக்க, அம்மாநில அரசு செல்ஃபி எடுக்கும் சுழல்கள் குறித்து இளைஞர்கள் யோசிக்க வேண்டும் என்றும் சில நேரங்களில் அவை கில்ஃபிக்களாக (killfies) மாறிவிடும் அபாயம் உள்ளதென்றும் கூறியது.

11 மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தளங்களில் இதுகுறித்து விளம்பரப் பலகைகள் வைக்க பணியாற்றி வருவதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பிபிசியிடம் தெரிவித்தார்.

“அந்த விளம்பரங்களில், செல்ஃபிகள் உயிரைப் பறிக்கும் என்பது குறித்த விழிப்புணர்வு செய்திகள் இடம்பெறும். கில்ஃபிகள் குறித்து எச்சரிக்கும் விதமாக பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் இது குறித்த பிரச்சாரங்களை ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளதாக” அவர் கூறினார்.

இந்தியாவில் 1.1 பில்லியனுக்கு மேலான மக்கள் கைப்பேசி வைத்துள்ளனர். அதில் சுமார் 300 மில்லியினுக்கு மேலான மக்களிடம் ஸ்மார்ட்போன் உள்ளது.

சமூக ஊடகங்களின் மேல் அதீத மோகம் கொண்ட இளைஞர்கள், கச்சிதமான செல்ஃபிகள் எடுக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்கிறார்கள் மற்றும் இதற்காக தேவையற்ற இடர்ப்பாடுகளை எடுக்கிறார்கள் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல சந்தர்பங்களில் இளம் ஆண்களே இதில் ஈடுபடுகின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் மற்ற எந்த நாடுகளையும் விட இந்தியாவில் செல்ஃபி தொடர்பான இறப்புகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கார்னெகே மெல்லான் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியின் இந்திரபிரஸ்தா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு கூறுகிறது.

மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2016 வரை உலகம் முழுவதும் நிகழ்ந்த 127 செல்ஃபி தொடர்பான மரணங்களில் இந்தியாவில் மட்டும் 76 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரயிலில் அடிபட்டும், உயரங்களில் இருந்து தவறி விழுந்தும், குளங்கள் மற்றும் ஏரிகளில் மூழ்கியும் அல்லது யானைகளால் அடித்து செல்லப்பட்டும், கடற்கரை ஓரங்களிலும் செல்ஃபி எடுக்கும் போதும் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

ரயில்வே பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் அல்லது பேருந்துகளில் பயணம் செய்யும் போது செல்ஃபி எடுத்தால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என கடந்த ஜுன் மாதம் வடஇந்தியாவில் உள்ள மொரதாபாத்தில் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

கடந்த ஆண்டு மும்பையில் செல்ஃபி எடுக்கும் போது 18 வயது சிறுமி ஒருவர் கடலில் மூழ்கியதையடுத்து, புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் மேற்கு மும்பை காவல்துறையினர் “இது செல்ஃபி எடுக்கும் இடம் இல்லை” என்ற பதாகைகளை நிறுவத் தொடங்கினர்.

ஆனால் கர்நாடகா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கார்கே கூறுகையில் “இது செல்ஃபி எடுக்கும் இடம் இல்லை” என்ற பதாகைகளை ஆங்காங்கே நிறுவுவது கடினம் என்றும் இது மாதிரியான துயரச் சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடைபெறலாம் என்றும் கூறினார்.

ரசிகையை கரம்பிடிக்கும் ஆர்யா!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆர்யா. ஆனால் அவருக்கு சமீப காலமாக படங்கள் எதுவும் கை கொடுக்கவில்லை. தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் சந்தன தேவன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்ரா படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஆர்யாவுக்கு நடிகைகள் பலர் தோழியாக உள்ளனர். தமிழ் சினிமாவின் ரோமியோவாகவும் வலம் வருகிறார். ஆனால் அவர் இது வரை எந்த நடிகைகளுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்படவில்லை.

பிரியாணி செய்து கொடுத்தே ஆர்யா நடிகைகளை வளைத்து விடுவார் என்று அவரை சக நடிகர்கள் கிண்டல் அடிப்பதுண்டு.
இந்நிலையில், சமீபத்தில் ஆர்யா ஜிம்மில் பயிற்சி செய்யும்படியான வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் ஆர்யா தன் நண்பரிடம் தம்பியின் மாமனார் எப்போது திருமணம் என்று கிண்டல் செய்துவிட்டார். அதனால், நானும் ஏப்ரல், மேவில் திருமணம் செய்யலாம்னு இருக்கிறேன் என்று சொல்லிட்டேன்.

காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம்ல என்று நண்பர் ஆர்யாவிடம் கேட்க, சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல… நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்’ அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பேப்பரில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’ என்று ஆர்யா கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று ஆர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

`போன வாரம் தான் கல்யாணம் செய்வத குறித்து பேசிய வீடியோ ஒன்று லீக்காகிவிட்டது. அது எனக்கு தெரியாமல் என்னுடைய நண்பர்கள் விளையாட்டாக செய்தது. ஆனால் அதில் நான் பேசிய விஷயங்கள் உண்மை தான். நான் திருமணத்திற்காக பெண் தேடுகிறேன். பொதுவாக ஒருவரது வாழ்க்கைத் துணையை நண்பர்கள், குடும்பம், சொந்தக்காரர்கள் உள்ளிட்ட நெருக்கமானர்கள் மூலமாக தேடுவார்கள். அல்லது மேட்ரிமோனி மூலமாக பார்ப்பார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை. உங்களுக்கு என்னை பிடித்திருந்தால், உங்களுக்கு ஒரு வாழ்க்கைத் துணையாக இருப்பேன் என நீங்கள் நினைத்தால், 73301 73301 என்ற எண்ணிற்கு கோல் செய்யுங்கள். இது ஒன்று விளையாட்டோ, காமெடியோ இல்லை. இது தனது வாழ்க்கை தேடல். கால் பண்ணுங்க’. என்று முடித்துக் கொண்டார்.

இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆர்யாவை பிடித்த அவரது எந்த ரசிகை ஆர்யாவை கரம் பிடிக்கிறார் என்பதை பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

ஆவா குழுவின் முக்கிய நபருக்கு ஒன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனை!!

ஆவா குழுவின் முக்கிய நபர் என கூறப்படும் ஒருவருக்கு ஒன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜூட்சன் முன்னிலையில் சந்தேகநபர் நேற்று (21) ஆஜர்படுத்தப்பட்டார்.
வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இந்த சந்தேகநபர் கடந்த வௌ்ளிக்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் மீள கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கடுமையாக எச்சரித்த நீதவான் ஒன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.கோப்பாய் பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சக்திவேல்நாதன் நிசாந்தன் விக்டர் என்பவருக்கே கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவனை துஷ்பிரயோகம் செய்துவிட்டு வௌியே சொல்லாதிருக்க 20 ரூபாய் வழங்கியவர் கைது!!

சபுகஸ்தலாவ பகுதியில், பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தும் 37 வயதான ஒருவர், சிறுவர் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களை கற்பிக்கும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், சந்தேகநபரால், அவரது வகுப்பிலுள்ள சில மாணவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய அண்மையில் 6ம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் ஒருவனை அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டில், தன்னை துஷ்பிரயோகம் செய்த பின்னர், தனது அயல் வீட்டிலுள்ள பிரிதொரு மாணவனுக்கும் தான் இவ்வாறு செய்ததாகவும், ஆனால் அந்த மாணவன் அதனை யாரிடமும் கூறவில்லை எனவும், நீயும் அவ்வாறே யாரிடமும் இதனைக் கூறக்கூடாது எனவும் குறிப்பிட்ட ஆசிரியர், 20 ரூபாயை தனக்கு வழங்கியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலபிடி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியா வடக்கு வலயத்தில் இரண்டு பாடசாலைகளுக்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

 

வவுனியா வடக்கு வலயத்திற்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் வ.ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாதர் பணிக்கர் மகிழங்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயம்,

புதியசின்னக்குளம் அ.த.க. பாடசாலை ஆகியவற்றிற்கான அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பதவிகளுக்கு இலங்கை அதிபர் சேவை வகுப்பு -II மற்றும் வகுப்பு -III ஐச் சேர்ந்த உத்தியியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் சேவையாற்றும் இ.அ.சேவை தரம் II, III ஐ சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த விண்ணப்பப் படிவங்களை வவுனியா வடக்கு வலய கல்வி அலுவலக நிர்வாகப்பிரிவில் பெற்று கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 27.11.2017ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்க கூடியவாறு நேரிலோ

அல்லது

வலயக்கல்விப் பணிப்பாளர்

வலயக்கல்வி அலுவலகம் -வவுனியா வடக்கு

புளியங்குளம்

எனும் முகவரிக்கு பதிவுத்தாபாலிலோ  அனுப்பி வைக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் நான் அனுபவித்த கொடுமைகள் : இளம்பெண்ணின் கண்ணீர் பேட்டி!!

 
சவுதி அரேபியாவில் முதலாளியால் அடித்து துன்புறுத்தப்பட்ட இந்திய பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரீனா, ஏஜெண்டுகள் மூலமாக மலேசியாவுக்கு செல்ல விண்ணப்பித்திருந்த நிலையில் இவரை ஏமாற்றி சவுதி அரேபியாவின் ரியாத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு Dawadmi என்னும் நகரில் உள்ள ஷேக் ஒருவரின் வீட்டினுள் ரீனா அடைத்து வைக்கப்பட்டுள்ளார், உண்ண உணவின்றி, தினமும் அவரை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.

இவ்வாறான கடும் சித்ரவதைகளுக்கு உள்ளான ரீனா, ஒருமுறை அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அந்த பொலிசார் மீண்டும் அவரை ஷேக்கின் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் Bhagwant Maan -க்கு வீடியோ பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ரீனா கூறுகையில், ’நான் சவுதி அரேபியாவில், ஷேக் ஒருவரின் வீட்டில் ஓர் ஆண்டாக கொடூரமான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறேன். என்னை ஓர் அறையில் பூட்டி வைத்து, அடித்து துன்புறுத்துகின்றனர், உணவும் சரியாக கொடுப்பதில்லை, என்னால் இங்கு இருக்க முடியவில்லை. எனக்கு கணவரும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

இவர்கள் மிகவும் மோசமானவர்கள், தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள், இல்லையேல் நான் இங்கு இறந்து விடுவேன் அல்லது அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள். பல பெண்களை நீங்கள் இது போன்ற சூழ்நிலைகளில் காப்பாற்றியுள்ளீர்கள், என்னையும் உங்கள் மகள் போல நினைத்து காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

மேலும் இந்தியாவில் இருக்கும் எந்த சகோதர, சகோதரிகளும் சவுதி அரேபியாவிற்கு வர வேண்டாம் எனவும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ இணையதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ரீனா பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், இதே போன்ற இன்னொரு பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார்.

பறக்கும் விமானத்தில் சைவ உணவு கேட்டு அடம்பிடித்த பயணி : பரிமாறப்பட்ட விசித்திர உணவு!!

கொலம்பியா தேசிய விமான சேவை நிறுவன விமானம் ஒன்றில் சைவ உணவு கேட்டு அடம்பிடித்த பயணி ஒருவருக்கு அப்பிள் மற்றும் பேரிக்காயை உணவாக அளித்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள தேசிய விமான சேவை நிறுவனமான Avianca விமானத்தில் Steve Hogarty என்ற நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இறைச்சி உணவுகளை விரும்பாத அவர் அன்று தமக்கு சைவ உணவு வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் சைவ உணவுகள் அப்போது தீர்ந்துவிட்டதாக விமான ஊழியர்கள் பதிலளித்துள்ளனர்.

இருப்பினும் Hogarty நிர்பந்தம் பிடிப்பதால் இறுதியில் விமான ஊழியர்கள் அவருக்கு சைவ உணவு என்ற பெயரில் முழு அப்பிள் ஒன்றும் ஒரு பேரிக்காயும் உணவாக வழங்கியுள்ளனர்.
மட்டுமின்றி அதனுடன் பிளாஸ்டிக் கத்தியும் முள்கத்தியும் அளித்துள்ளனர்.

குறித்த நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதை புகைப்படமாக பதிவு செய்துள்ளார். குறித்த புகைப்படம் வைரலான நிலையில், Avianca விமான சேவை நிறுவனம் இவருக்கு மேலதிக தகவல் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது, மட்டுமின்றி விசாரணைக்கு உத்தரவிடவும் உறுதி அளித்துள்ளது.

தொல்லை தந்த குடிகார கணவனை கொடூரமாக சேர்ந்து கொன்ற இரண்டு மனைவிகள்!!

குடித்து விட்டு தொடர்ந்து தங்களை துன்புறுத்திய கணவரை அவரின் இரண்டு மனைவிகள் சேர்ந்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள ஜகத்கிரிகுட்டா பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

மஹேந்தர் யாதவ் என்ற நபர் தனது இரண்டு மனைவிகளான ஜோதி மற்றும் பத்மாவுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கம் கொண்ட யாதவ் தினமும் குடித்து விட்டு வந்து இருவரையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். இது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் முழு போதையில் வீட்டுக்கு வந்த யாதவ் தனது மூத்த மகன் உதய் கிரணை அடித்து உதைத்துள்ளார். அவரை ஜோதியும், பத்மாவும் தடுக்க முயன்றும் முடியவில்லை.

இப்படியே விட்டால் கணவர் கிரணை கொன்று விடுவார் என பயந்த இரண்டு மனைவிகளும் புடவையால் யாதவ் கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி கணவர் சடலத்தை தீயிட்டு எரித்தார்கள். சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் யாதவின் சடலத்தை கைப்பற்றியதோடு, ஜோதி மற்றும் பத்மாவை கைது செய்தார்கள். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மனைவிக்கு வேலை கிடைத்ததால் பொறாமையில் கண்ணை குருடாக்கி முகத்தை சிதைத்த கணவன்!!

 
மும்பையில் கணவர் ஒருவர் தனது மனைவிக்கு வேலை கிடைத்துவிட்டதால் கோபமடைந்து அவரது முகத்தில் அசிட் ஊற்றியதால் அவரது ஒரு கண் பார்வையிழந்ததோடு மட்டுமல்லாமல் முகம் சிதைவடைந்து போயுள்ளது.

ரூபாப்- ஜாகிரா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரூபாப் ஓட்டுநர் வேலை பார்த்து வருவதால் இவரது வருமானம் குழந்தைகளை கவனித்துக்கொள்ள போதவில்லை.

இதனால் வெளியில் வேலை தேடிய ஜாகிராவுக்கு, சோப்பு தயாரிக்கும் பகுதிநேர வேலை கிடைத்துள்ளது. இதனால் கோபமடைந்த ரூபாப், தனது மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று சண்டையிட்டுள்ளார்.

இதில், மனைவியை வீட்டுக்குள் அடைத்து அசிட்டை எடுத்து அவரது முகத்தில் ஊற்றியுள்ளார். வலியால் துடித்த ஜாகிராவை அருகில் வசிப்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு, அவரது கண்பறிபோயுள்ளது. முகம் சிதைவடைந்த நிலையில் அவரது தொண்டையில் குழாய் போட்டு அதன் வழியாகவே அவரால் சுவாசிக்க முடிகிறது.

உணவும் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டு அதன் வழியாக கொடுக்கப்படுகிறது. தற்போது இவருக்கான மருத்துவ செலவினை தொண்டு நிறுவனம் ஒன்று பார்த்துக்கொள்கிறது.

இவருக்கு பிளாஸ்டிக் சேர்ஜரி செய்வதற்கு £29,090 தேவைப்படுகிறது, ஆனால் £11,000 தற்போது எங்களிடம் உள்ளது, எஞ்சியுள்ள தொகையை சேகரிக்கவுள்ளோம் என தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.