குரங்குகளால் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை!!

 
ஓட்டமாவடி – கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், குரங்குகளின் விளையாட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவத்தமுனை, மீராவோடை போன்ற கிராமங்களில் இக்குரங்குகளின் தொல்லை நாட்களுக்கு நாள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குரங்குகள் கூட்டம் கூட்டமாக நுழைத்து பொது மக்களின் வீடு, தோட்டங்கள் மற்றும் சொத்துக்களுக்கும் பாரிய சேதத்தினை ஏற்படுத்தி வருவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால், அங்குள்ள பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குரங்குகள் தமக்குள் சண்டையிட்டு கொண்டு மரங்களிலும், பாடசாலை கூரைகளிலும் பாய்ந்து விளையாடியதன் காரணமாக முன்பு மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலத்தில் பாடசாலையின் ஓடுகள் மாணவர்களின் மேல் விழுந்துள்ளன.

இதனால் இரண்டு மாணவர்கள் பலத்த காயங்களுடனும் ஏனைய நான்கு மாணவர்கள் சாதாரண உட்காயங்களுடனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வந்துள்ளனர்.

குரங்குகளினால் ஏற்படும் தொல்லைகள் குறிந்து பிரதேசசெயலக அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் பல தடவைகள் வலியுறுத்தப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இருப்பினும் இந்நிலமையினை கட்டுபாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகளை ஓட்டமாவடி பிரதேச செயலகமும், பிரதேச சபையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காதலனுக்கு ஏற்பட்ட கோபத்தால் காதலி பரிதாபமாக உயிரிழப்பு!!

காதலி மீது அசிட் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். காதலியை கொலை செய்து விட்டு ஒன்றரை வருடங்களாக மறைந்திருந்த நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெட்டஹெத்த, நாபாவல பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலியினால் அடைந்த ஏமாற்றம் காரணமாக, கோபமடைந்த நிலையில் அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு்ளளது.

கடந்த வருடம் மே மாதம் 31ஆம் திகதி உயிரிழந்த பெண்ணின் அழகு கலை நிலையத்திற்கு சென்று அவர், தலையில் அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனால் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றித் திரிந்த 40 பேருக்கு அபராதம்!!

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த 40 சந்தேகநபர்களுக்கு தலா 1500 ரூபா வீதம் அபராதம் செலுத்துமாறு மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுநாயக்க பொலிஸாரினால் இந்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மினுவாங்கொட மாவட்ட நீதிபதி ஷிலனி சத்துரன்தி பெரேரா இந்த உத்தரவை விதித்துள்ளார்.

அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகாத 6 பேரை கைது செய்வதற்கு நீதிபதியால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு!!

யாழ். மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜீலை மாதம் மணல்காட்டு பிரதேசத்தை சேர்ந்த 16 வயதினை விட குறைந்த பெண் பிள்ளையை பாலியல் பலாத்காரம் செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்டர் அருந்தவராஜா (47) என்பவர் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்ற குறித்த பாலியல் வல்லுறவு வழக்கில் அரச சட்டவாதியான நாகரட்ணம் நிஷாந், குறித்த எதிரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் குறித்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமி கர்ப்பமாகியதில் நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
எனவே ஒரு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அப் பெண்ணின் வாழ்க்கையை வீணடித்து கர்ப்பவாதியாக்கிய குறித்த எதிரிக்கு சட்டப் புத்தகத்தில் உள்ள அதியூட்ச தண்டனை வழங்க வேண்டும் என மன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த நபருக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவறின் 18 மாத கடூழிய சிறையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 18 மாத கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

சவுதியிலிருந்து பாரிய காயங்களுடன் நாடு திரும்பிய பெண்!!

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அங்கிருந்து பாரிய காயங்களுடன் நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளார். கலேவளை – பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.
2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம், போலி ஆவணங்களை தயாரித்து, தனது விருப்பத்தின் பேரிலேயே சவுதிக்கு வேலை பெற்றுச் சென்றதாக அந்த பெண் கூறியுள்ளார்.
இந்நிலையில், முதல் மூன்று மாதங்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி பணி புரிந்த போதிலும், அதன் பின்னர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், உறவினர்களின் தலையீட்டுடன் குறித்த வீட்டில் இருந்து வெளியேறிய அந்த பெண்ணுக்கு சம்பளம் உள்ளிட்ட எந்தவொரு கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கறுப்பு நிற ஆடை ஒன்றுடன் மட்டும் விமான நிலையத்தில் தான் இறக்கிவிடப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்த இலங்கைப் பெண் ஒருவர் சில ஆடைகளை வழங்கியுள்ளார்.
இதனையடுத்தே, குறித்த பெண் நாடு திரும்பியுள்ளதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறியுள்ளார. மேலும், தனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு தீர்வு பெற்றுத்தர வேணடும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகில் வர்த்தக நிலையம் தீக்கிரையால் பதற்றநிலை : பொலிசார் தீவிர விசாரணை!!

 
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் வவுனியா நகரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொலிசார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பள்ளிவாசல் பகுதியில் 14 கடைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக இரு கடைகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதிளவு சேதமடைந்துள்ளது.

குறித்த வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், விசமிகளின் செயற்பாடே காரணம் எனவும் தெரிவித்து காலை அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்று கூடினர். இதனால் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதேவேளை, தீ விபத்து குறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்களது விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவ்வாறு நடைபெறாத நிலையில் எதிர்வரும் புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அப்பகுதி வர்த்தகர்களும், பள்ளிவாசல் நிர்வாகமும் தெரிவித்துள்ளனர்.

பதற்றநிலை நிலவிய இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், அயூப் அஸ்மின், வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் சென்று நிலமைகளை அவதானித்து இருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசேட குழு அமைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் பள்ளிவாசலுக்கு அருகே வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசம்!!

 
வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று (20.11.2017) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளன.

வவுனியா நகரபள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் 14 கடைகள் காணப்படுகின்றன. அந்த கடைத்தொகுதியில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து, தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த கடைப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே கடைகள் தீப்பித்து எரிந்ததாகவும் அப்பகுதியில் தங்கியிருந்தோர் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் வினவியபோது,

இக் கடைகளின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டிருந்தால் கடையில் முன் கதவுகள் முற்றாக சேதமடைந்திருக்கும் ஆனால் கதவுகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை மற்றும் கடையின் ஒரு பக்கத்திலிருந்தே தீப்பற்றியதற்கான அடையாளங்கள் காணப்படுவதாலும் மின்சார ஒழுக்கினால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக தெரிவித்தனர்.

வவுனியாவில் இப்படியும் வீதிகள் : கண்டுகொள்வார்களா உரியவர்கள்!!

வவுனியா ஈஸ்வரிபுரம் கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் காணப்படும் அனைத்து வீதிகளும் மிக மோசமாக சேதமடைந்துள்ளதுடன் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.

தற்போது பெய்துவரும் தொடர்மழையால் அனைத்து வீதிகளும் மக்கள் பயன்படுத்த முடியாத அளவு சேறும் சகதியுமாக காணப்படுகின்றது.

இவ் வீதியூடாக வேலைக்குச் செல்வோர், பாடசாலை மாணவர்கள் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு அரசியல்வாதிகளோ உரிய அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கயும் எடுக்க வில்லை எனவும் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு இக் கிராமத்தின் வீதியை புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வவுனியாவில் சுகாதார மேம்பாட்டு பரிசளிப்பு விழா – 2017!!

 
கிராம மட்டகுழுக்களை வலுவூட்டும் முகமாக அனைத்து கிராமமட்ட குழுக்களிலும் இருந்து டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை (20.11) திங்கள் கிழமை காலை 09.30 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற இருப்பதால் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் , மகளீர் அபிவிருத்தி உறுப்பினர்கள் (RDS, WRDS) மற்றும் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இவ்வருடம் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அவற்றில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக டெங்கு தொடர்பான சித்திர மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடாத்தப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் பாடசாலைகள், திணைக்களங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களும் கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற மென்பந்து சுற்றுபோட்டி!!

 
வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (18.11) நியூ பேர்ட்ஸ் கழகத்தினர் முதன் முறையாக நடாத்தும் அணிக்கு ஏழு பேர் கொண்ட 6 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கழக உறுப்பினர்களின் தலமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர் ரதீபன், செயலாளர் மிதுலன், வவுனியா மாவட்ட பாடசாலை மட்டத்திலான உதைபந்தாட்ட சம்மேளன தலைவரும் ஆசிரியருமான சுந்தராங்கன், ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்ப நிகழ்வை சிறப்பித்திருந்தனர்

இதேவேளை இச்சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26.11.2017)  சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (18.11.2017) காலை 9.30 மணியளவில் 2.கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவுடன் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவிலிருந்து புத்தளம் நோக்கி இ.போ.ச பேரூந்தில் 2 கிலோ 32 கிராம் கேரள கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து முல்லைத்தீவு, முள்ளியவலையைச் சேர்ந்த 42 வயதுப் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மகளுக்காக நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் உழைக்கும் தந்தை!!

இலங்கையில் நாளொன்றுக்கு 22 மணித்தியாலங்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் நபர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

மாவனல்ல, ஹெம்மாதகம பகுதியை சேர்ந்த குமாரசிங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கடும் உழைப்பில் ஈடுபட்டுள்ளார். குடும்பத்தில் காணப்படும் நெருக்கடிளை தீர்க்கும் வகையில் இவ்வாறு நீண்ட நேரம் உழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இரண்டு பிள்ளைகளுக்கும் இரு வீடுகளை நிர்மாணித்து அவர்களின் எதிர்காலத்திற்காக, ஒரு தந்தையாக கடமையை நிறைவேற்றுவதே அவரது ஒரே நோக்கமாகும். அத்துடன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை குணப்படுத்துவதே அவரது மற்றைய நோக்கமாகும்.

46 வயதான குமாரசிங்கவை பாந்தர (அதிகாலை) என்றே அந்தப் பகுதி மக்கள் அழைக்கின்றனர். தனது கடமையை அதிகாலையிலேயே ஆரம்பிக்கின்றமையினால் அவர் அந்த பெயரில் அழைக்கப்படுகின்றார்.

ஒப்பந்த அடிப்படையில் அவர் அனைத்து கூலி தொழிலையும் செய்து வருகின்றார். மணல் இழுத்தல், பல மாடி கட்டடங்களுக்கு கல் மற்றும் பொருட்களை கொண்டு செல்தல் உட்பட பல தொழில்களை அவர் செய்து வருகின்றார்.

எந்த வேலையாக இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் செய்வதனால் தனக்கு இலாபம் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்த அடிப்படையில் வேலையை பொறுப்பெடுத்தால், அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்து 22 மணித்தியாலங்கள் தொடர்ந்து அவர் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியாவாக மாறிய வவுனியா : நகரம் முழுவதும் ஏற்பட்ட மாற்றம்!!

 
வவுனியா மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் பனிமூட்டமான காலநிலை நிலவுகிறது. இதன் காரணமாக ஏ9 வீதியின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நுவரெலியாவை போன்று வீதிகள் பனிமூட்டத்தால் மூடப்பட்டுள்ளமையினால் சாரதிகள் மிகுந்த அவதானமாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வவுனியா, மாங்குளம், புளியங்குளம் மற்றும் இரட்டைபெரியகுளம் ஆகிய பிரதேசங்களில் இந்த பனி மூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக காணப்பட்ட வறட்சியான காலநிலையை தொடர்ந்து பனி மூட்டம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பனிமூட்டம் காரணமாக அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மகனைக் காப்பாற்ற தன்னுயிரைப் பறிகொடுத்த தாய்!!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

துறைநீலாவணை 8 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் ரோபாலன் கலைவாணி என்ற 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், குறித்த பெண்ணின் மகன் தொலைக்காட்சிப் பெட்டிக்கு மின்சார வயரை இணைத்த போது அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

இதன்போது மகனைக் காப்பாற்ற முயற்சித்த தாயாருக்கு மின்சாரம் தாக்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மகனுக்கு எவ்வித ஆபத்தும் இன்றி காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், தாயார் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சுனாமியா? பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

யாழில் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவரச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பெற்றுக்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவத்தின் உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் அண்மைய நாட்களாக சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுவதுடன் இடம்பெயர்கின்ற சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளன.
எனவே இவ்வாறான பொய்யான தகவல்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம். பொதுமக்கள் மத்தியில் ஏதாவது இயற்கை அனர்த்தம் தொடர்பான தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக இலவச அவசர தொலைபேசி இலக்கமான 117 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி, உங்கள் பிரதேசங்களில் இயற்கை அனர்த்த பதிப்புகள் ஏதாவது உள்ளனவா? அல்லது அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா? என உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கப்பூரை பின்தள்ளி விஸ்பரூபம் எடுக்கவுள்ள இலங்கை!!

இலங்கையில் முதலாவது தொழில்நுட்ப நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகளுக்காக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கொரிய அரசாங்க உதவியின் கீழ் ஹோமாகம பிரதேசத்திற்கு அருகில் இந்த தொழில்நுட்ப நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

தொழில்நுட்ப நகரத்தின் பிரதான திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நடவடிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

தொழில்நுட்ப நகரின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கையின் போது வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் இணைத்துக் கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான துறைகள் சம்பந்தமாக புதிய உற்பத்திகளை உருவாக்குவது தொழில்நுட்ப நகரின் பிரதான நோக்கமாகும்.

2030ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்ற திட்டமிட்டுள்ள நிலையில், அணுசக்தி கொண்ட நாடாக மாற்றிக் கொள்வதும் ஒரு நோக்கமாக காணப்படுகின்றது. அது சிவில் பொது மக்களின் பயன்பாட்டின் அவசியத்திற்கு மாத்திரம் பயன்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

தொழில்நுட்ப ஊடாக ஆசியாவின் பிரபலமான மற்றும் பலமான நாடாக இலங்கையை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஊடாக 37,000 தொழில்வாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் புவியியல் அமைப்பு இயற்கையாகவே அமைந்த கொடையாக உள்ளது. உலக வரைபடத்தில் இலங்கை சிறிய நாடாக இருந்த போதும், இங்கு சகல வளங்களும் கொண்ட நாடாக காணப்படுகிறது.

இலங்கையின் புவியியல் அமைப்பு காரணமாக அதன் நன்மைகளை பெற்றுக்கொள்ள அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் போட்டி போட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கை தற்போது அபிவிருத்தி பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப நகரின் ஊடாக ஆரம்பிக்கப்படும் வேலைத்திட்டம் இலங்கையின் அசுர வளர்ச்சிக்கு உறுதுணையாக மாறும்.

இவ்வாறான வளர்ச்சி ஆசிய கண்டத்தை தாண்டி உலக நாடுகளுக்கும் சவாலாக மாறும். இது சிங்கப்பூரின் எழுச்சியை தாண்டி பல மடங்கு விஸ்வரூபம் எடுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.