இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

பேச்சு சுதந்திரம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றானபோதும், அதனை சமூக நன்னடத்தை முறைகள் சிதையாது உபயோகிக்க வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பேச்சு சுதந்திரத்தினை சிறந்து தொடர்பாடலுக்காக மாத்திரமே உபயோகிப்பது மக்கள் அனைவரதும் பொறுப்பாகும். தனிப்பட்ட, முரண்பாடான, தனிநபரை அவமானப்படுத்தும் கருத்துக்களை முன்வைப்பதற்காக தொலைத்தொடர்பு அமைப்புக்களையோ, சமூக வலைத்தளங்களையோ (பேஸ்புக், டுவிட்டர்) குறுந்தகவல் அனுப்புதல் அல்லது தொலைபேசி உரையாடல் போன்றவற்றையோ மேற்கொள்ளக்கூடாது.

அநாகரீகமான, ஆபாசமான, வன்முறையை தூண்டும் விதத்திலான, பாலியல் முறைகேடான, அச்சுறுத்தும் விதமான மிகவும் எரிச்சலூட்டும், தொந்தரவூட்டும் தகவல்களை அனுப்புதல், தகுந்த காரணம் இன்றி தொலைபேசி அழைப்புகளை விடுத்தது எரிச்சலை அல்லது வேதனையை உருவாக்குவது குற்றங்களாகும்.

குற்றவாளி கண்டறியப்படும் பட்டசத்தில், இவற்றிற்கு தண்டப்பணம் செலுத்துவது, சிறைத்தண்டனை பெறுவது அல்லது இவ்விரு தண்டனைகளுக்கும் உள்ளாக நேரிடும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8வது தடவை மேற்கொண்ட தற்கொலை முயற்சியில் 88 வயது மூதாட்டி மரணம்!!

88 வயதான மூதாட்டி ஒருவர் எட்டாவது தடவையாக மேற்கொண்ட தற்கொலை முயற்சியினால் மரணமடைந்துள்ளார்.
இந்த வயோதிபப் பெண் இதற்கு முன்னதாக ரயிலில் பாய்ந்தும், தூக்கிட்டும் ஏழு தடவைகள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
கட்டுநாயக்க குரன பகுதியைச் சேர்ந்த வயோதிப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்ற மரண விசாரணையின் போது குறித்த மூதாட்டி ஏழு தடவைகள் முன்னதாக தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க குரன பகுதியைச் சேர்ந்த 88 வயதான எக்னஸ் என்ற பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த மூதாட்டி, பிள்ளைகளுடன் கோபித்துக் கொண்டு வீட்டின் ஓர் அறையில் தனித்து வாழ்ந்து வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இந்தப் பெண் வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெப்ரவரியில் 50 இலத்திரனியல் பஸ்களை இறக்குமதி செய்கிறது இலங்கை போக்குவரத்து சபை!!

வரவு செலவுத் திட்ட முன்மொழிவிற்கு அமைய 50 இலத்திரனியல் பஸ்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறக்குமதி செய்யவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவின் அத்தியட்சகர் T.H.R. சந்திரசிறி குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இறக்குமதி செய்யப்படும் பஸ்களை எந்தெந்த பகுதிகளில் சேவையில் அமர்த்துவது என்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் T.H.R. சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, விரைவாக பஸ்களை இறக்குமதி செய்து, அவற்றை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்குள் சேவையில் அமர்த்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

450 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை : உலக சாதனை படைத்தது லியனார்டோ டா வின்சியின் ஓவியம்!!

 
புகழ்பெற்ற ஓவியரான லியனார்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு, உலக சாதனை படைத்துள்ளது.

500 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற இத்தாலி ஓவியரான லியனார்டோ டா வின்சி வரைந்த இயேசுவின் ஓவியம் ஏலத்தில் விடப்பட்டது.

‘சல்வடோர் முந்தி’ என்று பெயரிடப்பட்ட இந்த ஓவியம் இயேசுவின் பாதி உருவத்தைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த ஓவியம் ஏலம் விடப்பட்ட 19 நிமிடங்களிலேயே 450.3 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் இந்த ஓவியம் அதிகப் பணத்திற்கு விற்பனையான ஓவியம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இதற்கு முன் 2015 ம் ஆண்டு 179.4 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்ட பிகாசோவின் ‘த வுமன் ஆஃப் அல்ஜேரிஸ்’ ஓவியத்தின் சாதனையை முறியடித்து இந்த ஓவியம் உலக சாதனை படைத்துள்ளது.

டா வின்சியின் ஓவியத்தில் இயேசு கையில் கிரிஸ்டல் பந்தை வைத்துள்ளார். மறு கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் உள்ளது. ஓவியத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த ஓவியம் அனைவரின் மனதையும் கவர்ந்தது.

கூட்டு பாலியல் வல்லுறவு : ரோஹிஞ்சா பெண்களின் துயரம்!!

மியான்மரின் ரகைன் மாகாணத்தில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பின் போது, ரோஹிஞ்சா பெண்கள் மற்றும் சிறுமிகள் பர்மிய காவல் படைகளால் பரவலாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“என் அங்கம் முழுவதும் வலி, பர்மிய ரோஹிஞ்சா பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை” என்று தலைப்பிடப்பட்டிருக்கும், அந்த 37 பக்க அறிக்கையில் பர்மிய இராணுவம் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதை மட்டுமல்லாமல், ரோஹிஞ்சா மக்கள் மீதான வன்முறை, கொடூரம் மற்றும் அவர்களை அவமானப்படுத்திய விதம் குறித்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

தங்கள் குழந்தைகள், கணவன் மற்றும் பெற்றோர் தங்கள் கண் முன்பு கொல்லப்பட்டதை பல பெண்கள் விவரித்துள்ளனர். தங்கள் பிறப்புறுப்பு சிதைந்த மற்றும் காயமடைந்த நிலையில் பங்களாதேஷ் தப்பி வந்ததை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் அதில் விவரித்துள்ளனர்.

“பர்மிய இராணுவத்தால், ரோஹிஞ்சா பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுவது இன சுத்திகரிப்பின்போது பிரதானமான மற்றும் அழிவை உண்டாக்கும் செயலாக இருந்தது,” என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் பெண்கள் உரிமைகளுக்கான அவசரநிலை குறித்த ஆய்வாளரும், அந்த அறிக்கையைத் தயாரித்தவருமான ஸ்கை வீலர் கூறியுள்ளார்.

பர்மிய காவல் படையினர் 11 பேர் கொல்லப்பட்ட, ஆகஸ்ட் 25, 2017 அன்று அரக்கன் ரோஹிஞ்சா சால்வேஷன் ஆர்மி (அர்சா) தாக்குதல் நடத்தியது முதல், ரகைன் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் பர்மிய இராணுவம் மேற்கொண்டுள்ள வன்முறை, கொலைகள், வன்புணர்வு, கைதுகள், கிராமங்கள் எரிப்பு ஆகியவற்றில் இருந்து தப்ப அண்டை நாடான பங்களாதேஷில் சுமார் 6 லட்சம் ரோஹிஞ்சாக்கள் தஞ்சமடைந்துள்ளனர். சர்வதேச சட்டங்களின்படி, இவை மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

பங்களாதேஷூக்கு தப்பி வந்த 52 பெண்களிடம் அந்த அமைப்பு பேசியது. அவர்களில், 18 வயதுக்கும் குறைவான 3 பெண்கள் உள்பட 29 பேர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டவர்கள்.

ரகைன் மாகாணத்தில் இருந்த ரோஹிஞ்சா பெண்கள் பர்மிய இராணுவத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதும், அதற்கு முன்னதாகவும் அச்சுறுத்தும் வகையிலும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்.

ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் அறிக்கையில் வன்புணர்வு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இராணுவ உடை அணிந்த பர்மிய காவல் படையினர் ஆவர் என்று கூறப்பட்டுள்ளது.

ரகைன் மாகாணத்தின் கிராமங்களில் வாழும் பூர்வ குடிகளும் இராணுவத்தினருடன் இணைந்து வல்லுறவு செய்தது மட்டுமல்லாமல், ரோஹிஞ்சாக்களின் உடைமைகளையும் சூறையாடியுள்ளனர்.

தன்னை நிர்வாணப்படுத்தி, வீட்டில் இருந்து இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டிவைத்து சுமார் 10 பேர் தன்னை வன்புணர்வு செய்ததாக, ஹாதி பாரா எனும் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதாகும் சிறுமி கூறியுள்ளார்.

“என்னை அந்த இடத்திலேயே அவர்கள் விட்டுச் சென்றனர். நான் அங்கு விழுந்து கிடந்ததைப் பார்த்த எனது சகோதரியும் சகோதரனும் நான் இறந்து விட்டதாகவே நினைத்தனர்,” என்று அவர் கூறியுள்ளார்.

ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பிடம் பேசிய ஒரு பெண்ணைத் தவிர அனைவருமே கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு பேர், தங்களை பர்மிய காவல் படையினர் ஒரு குழுவாக நிற்க வைத்து கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக கூறியுள்ளனர்.

பங்களாதேஷில் இருக்கும் தொண்டு நிறுவனங்கள் நூற்றுக் கணக்கான பாலியல் வல்லுறவு சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெரும்பாலான பெண்கள் கொல்லப்பட்டது, அவர்கள் வெளியில் சொல்லாதது உள்ளிட்ட காரணங்களால் உண்மையான எண்ணிக்கையை கணிக்க முடியவில்லை. வல்லுறவு செய்யப்பட்ட பெண்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தாங்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதை வெளியில் சொல்லவில்லை.

“உரிய மருத்துவ உதவிகள் இல்லாமல் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று கூறியுள்ள வீலர் “பங்களாதேஷ் அரசும், தொண்டு நிறுவனங்களும் ரோஹிஞ்சா பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை வெளிப்படுத்த ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

மியான்மர் அரசு ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை உடனடியாக நிறுத்துவதுடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு உள்ளிட்ட சர்வதேச விசாரணை அமைப்புகளுக்கு ரகைன் செல்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

பங்களாதேஷ் அரசும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் உடனடியாக ரோஹிஞ்சா அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டியதாகவும், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டவர்களுக்கு உதவி புரிந்ததாகவும், சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் பர்மிய இராணுவ அதிகாரிகளுக்கு பயந்த தடை விதிக்க வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரிக்கை விடுத்துள்ளது.

மியான்மருக்கு ஆயுத விற்பனை செய்ய ஐ.நா பாதுகாப்பு சபை தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

தமிழ் நடிகர்களின் போர்க் குணம் : மண்டியிடும் வட இந்திய நடிகர்கள்!!

எந்தக் கட்டுரையும் விளக்க முடியாத அளவிற்கு வட இந்தியா மற்றும் தென் இந்தியாவிற்கு இடையிலான கலாசார வேறுபாட்டை சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் நமக்கு திறம்பட வரையறுத்துக் காட்டியுள்ளன.

பத்மாவதி என்ற இந்தி படத்தை ராஜ்புத் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் எதிர்க்க, அவர்களை சமாதானப்படுத்தும் விதமாகப் பேசி அந்தப் படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

ஆனால், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “அதிகாரப் பசியால்” ஆளும் பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புகளை அடக்குவதாக குற்றஞ்சாட்டினார்.

இன்னும் வெளிவராத பத்மாவதி திரைப்படம் குறித்து எந்த உறுதியான ஆதாரமும் இல்லாத நிலையில், வன்முறை போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அவர்களை சமாதானப்படுத்த பன்சாலி மற்றும் அவரது குழுவினர் எடுத்த நடவடிக்கைக்கு முற்றிலும் மாறுபட்டது தென் இந்திய திரைத்துறையினர் பா.ஜ.க மீது வெளிப்படுத்தும் செயல்கள்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானிய நடிகர்கள் சிலர் நடித்து வெளிவந்த ´ஏ தில் ஹை முஷ்கில்´ படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹாராஷ்டிர நவ்நிர்மான் சேனா அமைப்பு போராட்டங்கள் நடத்த, அதற்கு பதிலளித்த இயக்குனர் கரன் ஜோஹரின் காணொளியைப் போல அவ்வளவு பரிதாபமாக இல்லை பன்சாலியின் பதில்.

இந்நிலையில், இந்து தீவிரவாதத்தின் வன்முறை வலுத்து வருவதை எதிர்த்து பத்திரிக்கை ஒன்றில் எழுதியிருந்தார் தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகரான கமல்ஹாசன்.

மேலும், பா.ஜ.கவின் திட்டமான ஜி.எஸ்.டி வரி குறித்து ´மெர்சல்´ படத்தில் கேலி செய்யப்பட்டதாக கூறி அந்தப் படத்தின் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க கேட்ட போது, பல தமிழ் நட்சத்திரங்கள் நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்ததில் கமலும் ஒருவர்.

மெர்சல் படத்தை எதிர்த்த வலதுசாரிகள், விஜயின் கிறிஸ்துவ அடையாளத்தை விமர்சித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, மெர்சல் படத்தை வெற்றிப் பெற செய்த அனைவருக்கும் நன்றி என கடிதம் எழுதி, அதில் சி. ஜோசஃப் விஜய் என்று தனது முழுப் பெயரையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய நடிகர்கள் பலர், அவர்களது செயல் மற்றும் கூற்றுகளுக்காக அரசியல் அமைப்புகளாலும் மத அடிப்படைவாதிகளாலும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

பா.ஜ.க ஆட்சி அமைத்த கடந்த மூன்று ஆண்டுகளில் கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டதாக இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சில விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஷாருக் கான் மற்றும் அமிர் கான் ஆகியோர் சகிப்புத்தன்மை குறித்து பேசியதற்காக மத்திய அரசால் வெளிப்படையாகவே பாதிக்கப்பட்டனர். இது போன்று பல இந்தி பிரபலங்கள் பா.ஜ.கவின் செயல்களுக்கு அமைதியாக மண்டியிடும் அதே வேளையில், தென் இந்திய நடிகர்களுக்கும் பா.ஜ.கவுக்கும் நடைபெறும் மோதல்கள் வட இந்திய நடிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

தென் இந்திய நடிகர்களுக்கு அரசியலில் நுழைய ஆசை இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

இந்த ஊகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்தது, தீவிர அரசியலுக்குத் தான் வர உள்ளதாக கமல் வெளியிட்ட அறிவிப்பு. தென் இந்தியாவில் சினிமா நட்சத்திரங்களாக இருந்த பலரும் அரசியலில் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராம ராவ், தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ராமசந்திரன் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் இதுவரை எந்த இந்தி திரைப்பட நடிகரும் அரசியலில் நுழைந்ததில்லை.

முதலில், தென்னிந்திய மற்றும் வட இந்திய நடிகர்களின் மனப்பான்மையும் அணுகுமுறையும் முற்றிலும் மாறுபட்டதாகும். தீவிர கலை பயிற்சியாளர்களின் சமூக அரசியல் சார்ந்த கருத்துகளை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளும் வட இந்தியா, வணிகப் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களின் பேச்சை பெரிதாக மதிப்பதில்லை.

கடந்த 2012ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அசாம் மாநிலம் குறித்து விவாதிக்கும்போது நடிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயா பச்சன் தலையிட, அதற்கு பதிலளித்த அப்போதைய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, “இது பட விவகாரம் அல்ல, முக்கியமான விஷயம்”என்று பச்சனிடம் கூறியது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியா சுதந்திரம் அடைந்த நாட்களிலிருந்து, வட இந்திய கலாசாரத்தை தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் திணிக்க முயற்சிக்கும் போதெல்லாம் அதனை கடுமையாக எதிர்க்கும் பாரம்பரியத்தை கொண்டது தமிழ்நாடு.

மேலும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல் இந்தி திணிப்பு முயற்சி எடுத்தது வடக்கின் கலாசார திணிப்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

அதற்காக தென் இந்திய நடிகர்கள் யாரும் அரசியல் அழுத்தங்களுக்கு கீழ்படிந்ததில்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் திரையிலோ அல்லது வெளியிலோ வாய் திறக்காமல் இருப்பதை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப் படங்களில் பல்வேறு சாதிகளைப் பற்றிய கதைகளும் வெளிப்படையாக பேசப்பட்டிருக்கும். ஆனால் பாலிவுட் படங்களில் இதைப் போல ஒடுக்கப்பட்ட சாதிகளைப் பற்றிய கதைகளைக் கொண்ட படங்கள் இல்லை.

வட இந்தியாவைப் போல தென் இந்தியாவிலும் மதம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றன. இப்படியான வகுப்புவாதத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளும், கேரளாவில் கம்யூனிஸ்டுகளும் மற்ற சில இயக்கங்களும் தொடர்ந்து வலுவாகக் குரல் கொடுத்து வருகின்றன.

மெர்சல் படத்தில் வந்த ஜி.எஸ்.டி குறித்த காட்சிகளை விமர்சிக்க, நடிகர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்ற நிலைப்பாட்டை எடுத்த பா.ஜ.கவின் செயல் அறிவற்ற செயல் என்று கருதப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், கமல்ஹாசன் மற்றும் விஜய்யின் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டன. பெரும்பாலும் அதிகாரத்திற்கு கீழ்படிந்து போகும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு, தென் இந்திய நடிகர்களின் இந்த நடவடிக்கைகள் சற்று விசித்திரமாகவே உள்ளன.

பாகிஸ்தான் வீரர் மொஹமட் ஹபீசுக்கு இனிமேல் பந்து வீச தடை!!

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பந்து வீச்சாளர் மொஹமட் ஹபீசுக்கு சர்வதேச போட்டிகளின் போது பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது பந்து வீச்சு முறை சட்ட விதிக்கு எதிரானது என்ற காரணத்தினால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மொஹமட் ஹபீசுக்கு எதிரான இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரியாலை சம்பவம் – சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை!!

யாழ்ப்பாண அரியாலை மணியம் தோட்ட பிரதேசத்தில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர்கள் நேற்று (16) அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சந்தேக நபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில், விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவினர் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் அடையாள அணிவகுப்பிற்கும் யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தர பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அந்த கட்டளையின் படி நேற்று (16) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டதுடன் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி பி.மோகனதாஸ் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது விஷேட அதிரடிப்படையினர் இருவர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். எனினும், அடையாள அணிவகுப்பில் இரு விஷேட அதிரடிப் படையினரையும் சாட்சியான நிஷாந்தன் அடையாளம் காட்டவில்லை.

இதேவேளை சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அவர்கள் சார்பில் பிணை விண்ணப்பம் செய்திருந்த போதும் அந்த பிணை விண்ணப்பமானது மன்றினால் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த இரு விஷேட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் அதுவரை வழக்கினை ஒத்திவைக்கவும் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ;தரன் உத்தரவிட்டார்

30 வருடங்களின் பின்னர் கொழும்பில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட ஹோட்டல்!!

 
30 வருடங்களின் பின்னர் கொழும்பில் பிரம்மாண்ட ஹோட்டல் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றைய தினம்(16.11) Shangri-La Hotels Colombo என்ற சுற்றுலா ஹோட்டல், திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் திறப்பு விழாவில் ஜனாதிபதியுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஹோட்டலின் பிரதான முகாமைத்துவ பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை பூர்வீகத்தை கொண்ட பிரபல பொலிவுட் நடிகை ஜெக்லின் பெர்ணான்டஸ் சிறப்பு விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

Shangri ஹோட்டல் குழுமத்தினால் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது ஹோட்டல் இதுவாகும்.

கொழும்பு நகரத்தில் புதிய அழகை கொடுத்துள்ள இந்த ஹோட்டலில் 500 அறைகள் மற்றும் 41 குடியிருப்புக்களை உள்ளடங்கியுள்ளது.

குறித்த குழுமத்தின் முதலாவது ஹோட்டல் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்கள் கைது : சிறுமி தற்கொலை முயற்சி!!

வவுனியாவில் நேற்று முன்தினம் (14.11.2017) கணேசபுரத்திலுள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை முச்சக்கரவண்டியில் கடத்திக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இரு இளைஞர்களை பொலிசார் இன்று (16.11.2017) கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு கணேசபுரம் மரக்காரம்பளையிலுள்ள தனது வீட்டிற்கு தனிமையில் சென்று கொண்டிருந்த போது முச்சக்கரவண்டியில் வந்த இரு இளைஞர்கள் அச்சிறுமியை முச்சக்கரவண்டியினுள் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு சென்று பாலியல் வல்லுறவிற்குஉட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து நேற்று (15.11.2017) வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் உறவினர்கள் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

இதையடுத்து நேற்றைய தினம் குறித்த சிறுமி அலரி விதையை அரைத்து உண்டு தற்கொலை செய்வதற்கு முயன்ற நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் இன்று அப்பகுதியைச் சேர்ந்த 19, 20 வயதுடைய இரு இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கணவனின் அனுமதியின்றி சுயதொழில் பெறச் சென்ற மனைவிக்கு நேர்ந்த கதி!!

வவுனியாவில் இன்று (16.11.2017) காலை 11 மணியளவில் கண்டி வீதியிலுள்ள சுயதொழில் வழங்கும் நிறுவனத்திற்குச் சென்ற குடும்பத் தலைவி ஒருவர் மீது அவரது கணவன் சுயதொழில் பெறும் அலுவலகத்திற்குள் வைத்துத் தாக்கியுள்ளதாக சுயதொழில் வழங்கும் நிறுவனத்தின முகாமையாளர் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கண்டி வீதியில் இயங்கிவரும் சுயதொழில் நிறுவனம் ஒன்றிற்கு உதவி பெறுவதற்காக மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள குடும்பப் பெண் ஒருவர் சென்று தனது சுயதொழில் திட்டத்திற்கு உதவி செய்யுமாறு தெரிவித்து 10 வீதமான பணத்தினை வைப்புச் செய்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை அந்நிறுவனத்திற்குச் சென்ற குறித்த பெண்ணின் கணவர் மனைவியை சுயதொழில் அலுவலகத்திற்குள் வைத்து தனது அனுமதியின்றி சுயதொழில் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாகத் தெரிவித்து தாக்கியதுடன் இதை தடுத்து நிறுத்தச் சென்ற அலுவலகர்கள் மீதும் தாக்க முற்பட்டுள்ளார்.

இதையடுத்து மனைவி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதாகவும் சுயதொழில் அலவலகத்தினரும் தமது அலுவலகத்திற்குள் வந்து அங்கு பணிபுரியும் அலுவலகர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள முயற்சித்துள்ளதாகவும் தெரிவித்து முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யவுள்ளதாகவும் சுயதொழில் நிறுவனத்தின் முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் தலைமறைவு!!

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்ட வர்த்தகர் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா மற்றும் மன்னார் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் விடயம் பற்றி தெரியவருவதாவது,

மன்னார் பிரதேசத்தில் நகை கடை வைத்து தொழில் புரிந்து வந்த ஜெயசீலன் என்பவர் அண்மை காலமாக பலரிடம் பல இலட்சங்களை பெற்றதுடன் வங்கிகளிலும் கடன்களை பெற்றுக்கொண்டு பணத்தை சேகரித்து குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் வவுனியா வர்த்தகர்கள் சிலரும் பல இலட்சங்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் பொலிஸ்நிலையத்திலும் குறித்த நபருக்கு எதிராக பலரும் நிதி மோசடி குற்றச்சாட்டை வைத்து முறைப்பாடு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களில் 5 கோடி ரூபாய்க்கு மேலாக நிதி மோசடியில் குறித்த நபர் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது.

வவுனியாவில் முன்னாள் போராளிகளுக்கு வீட்டுத்திட்டம் : பிரதேச செயலாளர் கா.உதயராசா!!

வவுனியாவில் அடுத்தவருடம் முன்னாள் போராளிகள், இந்தியாவிலிருந்து திரும்பி அழைக்கப்பட்வர்களுக்கு 100 வீட்டுத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நேற்று (16.11.2017) வவுனியா கள்ளிக்குளம், சிதம்பரபுரம் கிராமத்தில் இடம்பெற்ற கிராம சக்தி ஆரம்ப நிகழ்வில் பிருதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கிராம சக்தி வேலைத்திட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் இவ் வேலைத்திட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதியின் சிந்தனையில் இந்த நாட்டிலிருந்து வறுமையை முற்றுமுழுதாக ஒழிக்கவேண்டும் எனத் தெரிவித்து அதற்கு ஒரு திட்டத்தினை வகுத்து இது ஒரு நீண்டகாலத்திட்டத்திற்கு அமைவாக 2030ஆம் ஆண்டளவிலே இது முடிவுறும். அதன் ஆரம்ப நிகழ்வே இன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது.

துரதிஸ்டவசமாக இந்த 30 வருட யுத்தத்தில் ஒரு தேங்கிய நிலை வந்துவிட்டது. இல்லாவிட்டால் இலங்கை சிங்கப்பூர் போல வந்திருக்கும். அதேநேரம் சிங்கப்பூரில் அரச கரும மொழியாக தமிழ் காணப்படுகின்றது. சிங்கப்பூரை வளர்த்துவிட்டதே தமிழர்கள் தான். தற்போது ஜனாதிபதியாக கூட தமிழர் ஒருவரே இருக்கின்றார். அங்கு இருப்பவர்களைக் கேட்டாலே சொல்வார்கள் சிங்கப்பூரை வளர்த்துவிட்டது தமிழர்களே என்று அதேபோல சுவிஸ், லண்டன் எங்கு சென்று பார்த்தாலும் இன்று தமிழர்களே கோடீஸ்வரர்கள். இங்கு வாழுகின்ற நாங்கள் மட்டும் கஸ்ரப்படுகின்றோம்.

இதைவிடக் கேவலமான விடயம் இந்தியாவில் போய் இருக்கின்றார்கள். இந்தியாவில் போய் இருப்பவர்களுக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லை ஆகக்குறைந்தது 300 பட்டதாரிகளை உருவாக்கி இருக்கின்றார்களே தவிர இங்கிருந்து எவ்வாறு சென்றார்களே அவ்வாறே அங்கும் இருக்கின்றார்கள்.

இங்கு வாருங்கள் என்று கூப்பிட்டால் கூட வருகின்றார்கள் இல்லை. ஆகவே எங்களுடைய மனப்பாங்கில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். நாங்கள் இந்த நாட்டு மக்களுடன் இணைந்து அபிவிருத்தியில் பங்கெடுத்து இந்த அரசாங்கத்திற்கு எங்களுடைய பங்களிப்பினை வழங்கி வறுமை நிலையிலிருந்து எங்களை முன்னுக்கு வரவேண்டும் அதற்கான திட்டமே இது. இந்தக்கிராமத்தினை அபிவிருத்தி அடைந்த கிராமமான மாற்றவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

அடுத்த வருடமளவில் 100 வீட்டுத்திட்டம் அமைத்து முன்னாள் போராளிகளுக்கு அல்லது இந்தியாவிலிருந்து திரும்பியவர்களுக்கு திட்டம் ஒன்று போடப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபரிடம் கேட்டுள்ளோம், இப்பகுதியில் அவர்களையும் குடியேற்றவுள்ளோம். ஒரு ஏக்கர் காணி உள்ளவர்களின் 50 பயனாளிகளை தருமாறும் அவர்களுக்கு முருங்கை செயற்றிட்டத்தில் உள்வாங்கி முருங்கை விதை தருவார்கள். அதை வைத்து வளர்த்து அவர்களிடம் திருப்பி 25 ரூபாவிற்கு கொள்முதல் செய்வார்கள். இச் செயற்றிட்டத்தில் முயற்சியானவர்கள் கிராம அலுவலரிடம் பெயர் விபரங்களை வழங்குமாறும் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

முகாபே மனைவியின் அதிர வைக்கும் பின்னணி!!

 
சிம்பாப்வேயில் ரொபர்ட் முகாபேயின் 37 ஆண்டு கால ஆட்சிக்கு ராணுவத்தால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது 52 வயதாகும் க்ரேஸ் முகாபே சிம்பாப்வே அரசின் ஆட்சி அதிகாரத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் செல்வாக்கு மிக்க பெண்மணியாக இருந்து வந்தார்.

ஆளும் Zanu-PF கட்சியின் மகளிர் அணி தலைவியாகவும் இளைஞர் அணியின் முக்கிய தலைவராகவும் இருந்து வந்தார்
கட்சியில் செல்வாக்கு மிக்க பல தலைவர்களை வெளியேற்றியதும், க்ரேஸ் முகாபேயின் சூட்சிகள் என்றே கருதப்படுகிறது. மட்டுமின்றி நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடிவு செய்ஹ்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.

க்ரேஸ் முகாபேயின் முதல் கணவர் Stanley Goreraza விமானப்படை பைலட்டாக பணிபுரிந்து வந்தார். க்ரேஸ் அப்போது ஜனாதிபதியின் செயலராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முகாபேவுக்கும் க்ரேசுக்கும் இடையே உறவு மலர்ந்தது. அச்சமயத்தில் முகாபேயின் மனைவி சாலி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். க்ரேஸ் மற்றும் ஜனாதிபதி முகாபே தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளன. தற்போது ராணுவத்தின் பிடியில் உள்ள முகாபே பதவியை துறக்க ஒப்புக் கொண்டதாகவும், அதற்கு பதிலாக க்ரேஸ் முகாபேவை பாதுகாப்பான முறையில் நாட்டை விட்டு வெளியேற ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து க்ரேஸ் முகாபே தற்போது நமீபியாவில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் மொடல் சிறுமி விஷம் வைத்து கொலை : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

சீனாவில் மொடல் சிறுமி ஒருவர் வேலைப்பளு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரை விஷம் வைத்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் பிரபல மொடல் சிறுமி Vlada Dzyuba(14) 3 மாத கால ஒப்பந்த அடிப்படையில் சீனாவில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் திடீரென்று அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் அவரது உடற்கூறு சான்றில் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மருத்துவ காப்பீடு ஏதும் இன்றி குறித்த நிறுவனம் அவரை பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும், அதனாலையே அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் சிகிச்சை தாமதமானது எனவும் தற்போது தெரிய வந்துள்ளது.

குறித்த மொடலுக்கு வலுக்கட்டாயமாக விஷம் அளித்திருக்கலாம் எனவும், அல்லது அவரை கொடிய விஷ ஜீவிகள் ஏதும் தீண்டியிருக்கலாம் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நான் கொலை செய்யவில்லை.. பொலிஸ் தான் காரணம் : கைதான மாணவன் பரபரப்பு!!

டெல்லியில் மூன்றாம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் பிரத்தியுமான் தாகூரை, இவனை அதே பள்ளியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், சந்தேகத்தின் பேரில் முதலில் பள்ளியின் பேருந்து ஓட்டுனர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதால், அதே பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான்.

விசாரணையில், பேருந்து ஓட்டுனருக்கு கொலையில் எந்த சம்பந்தமும் இல்லை என சிபிஐ தெரிவித்தது. மேலும், சிறுவனிடம் நடத்திய விசாரணையில் அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் சிபிஐ கூறியது.

இந்நிலையில், மத்திய அரசின் குழந்தைகள் நல அமைப்பினர், சட்டப்படி சிறுவனின் வாக்குமூலத்தினை கேட்டுவிட்டு சான்று அளிக்க வேண்டியது அவசியம். எனவே, அவர்களின் முன்னிலையில் பேசிய சிறுவன் கூறுகையில், ‘நான் கொலை செய்யவில்லை. என்னை கட்டாயப்படுத்தி சிபிஐ ஒப்புக்கொள்ள சொல்லியது’ என கூறியிருக்கிறான். இதனால் இந்த வழக்கு அதிரடி திருப்பத்தினை சந்தித்துள்ளது.