போக்குவரத்து அமைச்சின் கீழ், முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்க உள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தற்போது முன்வைக்கப்படும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் விஷேட பயிற்சி ஒன்று அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், அவ்வாறு பயிற்சி பெற்றவர்களுக்கு “டுக் டுக்” இலட்சனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதுடன், அது தற்போதும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நேற்று அடைமழை பெய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் போது கடலில் சூறாவளி தன்மை ஒன்று ஏற்பட்டுள்ளதாக காலி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
காலி கோட்டை பிரதேசத்தின் கடல் பகுதியில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அது 5 நிமிடங்கள் வரை நீடித்ததாக கூறப்படுகின்றது.
பாரியளவிலான நீர் மலை போன்ற ஒன்று வானத்தை நோக்கி சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
காலி காடே வெல்ல மற்றும் ரத்கம வெல்ல பிரதேச மீனவர்கள் இதனை அவதானித்துள்ளனர். இது சூறாவளி அச்சுறுத்தல் என கருதிய மீனவர்கள், தமது நடவடிக்கைகளை நிறுத்தி, கரைக்கு திரும்பியதாக தெரிய வருகிறது.
அடைமழையின் போது இவ்வாறு மாற்றங்கள் நிகழ்வது குறைவு எனவும், இதுவொரு ஆபத்துக்கான அறிகுறியாக இருக்கலாம் என அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலியான செய்திகளையும் அவதூறு பிரச்சாரங்களையும் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்தித்த ஒர் சந்தர்ப்பத்தில் இது குறித்து ஜனாதிபதியிடம் கோரியதாக சுகாதார அமைச்சுர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அவதூறு பிரச்சாரம் மற்றும் போலி செய்திகளை வெளியிடும் ஒரு சிலரை தண்டித்தால், சீரிய ஒழுக்கமுடைய ஊடக கலாச்சாரத்தை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத் தளங்களில் வெளியாகும் ஆபாச வார்த்தைகளை பார்த்துவிட்டு சிறுவர்கள் அது குறித்து பெரியவர்களிடம் கேட்கும் போது, பெரியவர்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடுகளை கொள்ளையிட்ட குழுவினர் முச்சக்கர வண்டியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு அமிர்தகழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்பட்டு வந்த உயர் ரக ஆடுகள் இரண்டு நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.
இந்த சம்வம் தொடர்பில் சீ.சீ.ரி.வி கமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முச்சக்கர வண்டியும் ஆடுகளும் மீட்க்கப்பட்டது.
இது தொடர்பில் குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட சவளக்கடையை சேர்ந்த இருவரும், வெல்லாவெளியை சேர்ந்த ஒருவருமாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி டிஹகவத்துற தெரிவித்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு கூழாவடி பிரதான வீதியில் உள்ள கோழி விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 29 கோழிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாகவுள்ள மின்குமிழ்கள் கழட்டப்பட்டு நிலையத்தின் முன்கதவு உடைக்கப்பட்டு அதன் ஊடாக கோழிகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
தனது மனைவியை கொலை செய்து விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று மதவாச்சிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவன், மனைவியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த பின்னர் மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
43 வயதுடைய மனைவி மற்றும் 45 வயதுடைய கணவன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில். சம்பவம் தொடர்பில் மதவாச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தென் கொரிய நாடாளுமன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். எங்களை சீண்ட வேண்டாம் என்று கூறியதோடு, வடகொரியாவில் வாழ்க்கை என்பது `இருண்ட கற்பனை` என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வட கொரியா தலைவர் கிம்மை குறிப்பிட்டு பேசிய அவர், `நீங்கள் பெறும் ஆயுதங்கள் உங்களை வலுவாக்கவில்லை` என்றார். மேலும், வடகொரியாவை தடுக்க மற்ற நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆசியாவின் ஐந்து நாடுகள் பயணத்தின் ஒரு பகுதியாக, டிரம்ப் தென்கொரியா சென்றுள்ளார். அவர் இந்த பயணத்தில், சீனாவின் அதிபர் ஜின்பிங்கை சந்திப்பார் என்றும், பேச்சுவார்த்தையில் வணிகமும், வடகொரியா பிரச்சினையும் முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில், வடகொரியாவின் அணுஆயுத திட்டமே, டிரம்பின் முக்கிய விஷயமாக உள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக, ஐ.நாவின் தடைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து தனது ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம், தனது மிகப்பெரிய மற்றும் ஆறாவது அணுஆயுத சோதனையை அது நடத்தியது.
தென்கொரிய தலைவர்கள் மத்தியில் டிரம்ப் அளித்த உரை மிகவும் கவனிக்கப்பட்டது. அவரின் உரையில் அப்பட்டமான கோபம் இருந்தாலும், முன்பு போல வட கொரியாவை டிரம்ப் தொடர்ந்து தாக்கவில்லை. கிம் ஜாங்-உன் குறித்து பேசினார்.
எதிர்பாராத விதமாக, டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் குறித்து நேரடியாக பேசியதோடு, அந்நாடு தங்களின் அணுஆயுத திட்டங்களையும், ஆயுதங்களையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
அவை உங்கள் நாட்டை மிகவும் மோசமான ஆபத்தில் தள்ளுகிறது. இந்த பாதையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொறு அடியும், நீங்கள் ஆபத்தை சந்திக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தும்` என்று எச்சரித்தார்.
இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்து செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டதை வலியுறுத்தும் வகையில் பேசிய அவர், `நீங்கள் குற்றங்கள் செய்திருந்தாலும் கூட, நாங்கள் உங்களுக்கு மேம்பட்ட ஒரு வருங்காலத்திற்கான பாதையை வழங்குகிறோம் என்றார்.
எச்சரிக்கை: தவறான கணக்கீடு முன்பு கட்டுப்பாடுகளுடன் இருந்த அமெரிக்கா வலுவிழந்தது போல தெரிந்தது என்பதை வைத்து வடகொரியா தவறான கணக்கீடு செய்யக்கூடாது என்றும், தற்போது புதிய நிர்வாகம் அமெரிக்காவில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
வடகொரியாவிடம், எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள், எங்களை சீண்ட வேண்டாம் என்று கூறுவது, எங்கள் நாட்டிற்காக மட்டுமில்லாமல், அனைத்து நாகரிகமடைந்த நாடுகளுக்காகவும் பேசுகிறேன் என்று நம்புகிறேன் என்றார்.
மோசமான இந்த ஆட்சியை ஒதுக்கி வைக்க, அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கொரிய தீபகற்பத்தில் , வான்வழி படை மற்றும் ஜெட் விமானங்கள் ஆகிய அமெரிக்க படைகள் உள்ளதை குறிப்பிட்ட அவர், `நான் வலிமையின் மூலமாக அமைதியை வேண்டுகிறேன்` என்றார்.
மேலும், வடகொரியாவின் பொருளாதார ஆதரவாளர்களான ரஷ்யா மற்றும் சீனாவையும் குறிப்பிட்டு பேசிய டிரம்ப், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விதமான தொடர்புகளையும் வடகொரியாவுடன் அவர்கள் துண்டித்துக்கொள்ள அழைப்பு விடுத்தார்.
வடக்கின் திகில் வாழ்க்கையும் -தெற்கின் அதிசய வாழ்க்கையும் கொரிய போருக்கு பிறகான, தென் கொரியாவின் சாதனைகள் குறித்து தனது உரையில் அதிகமான அளவு பேசினார் டிரம்ப்.
தென்கொரியாவின் வாழ்க்கைக்கு எதிர்மாறாக, வடகொரியாவில் வாழ்க்கையை திகில் வாழ்க்கை என்று குறிப்பிட்ட அவர் அவர்கள் பிரிந்து சென்ற பாதை என்பது, வரலாற்றின் ஆய்வுக்கூடத்தில் நடந்த சோகமான சோதனையை` போன்றது என்று கூறினார்.
தென் கொரியா எவ்வளவு வெற்றிகரமாக வளர்ந்து வருகிறதோ, அந்த அளவிற்கு, கிம்மின் இதயத்தில் உள்ள இருண்ட கற்பனைகளை நீங்கள் உறுதியுடன் இழிவு செய்கிறீர்கள் என்று அர்த்தம் என்றார் டிரம்ப்.
இலங்கை வைத்தியர் ஒருவருக்கு மிக உயர்ந்த சர்வதேச விருது கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையின் முன்னாள் சுகாதார சேவை மருத்துவ இயக்குனர் ஜீ.ஜீ.சமல் சஞ்ஜீவ என்பவருக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.
Global Award For Academic Championship 2017 என்ற இந்த விருந்து, உலகின் சிறந்த விஞ்ஞான தகவல் தொடர்பு ஆராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபடும் International Agency For Standards and Rating (IASR) என்ற நிறுவனத்தினால் வழங்கப்படுகின்றது.
அத்துடன் வைத்தியர் ஜீ.ஜீ.சமல் சஞ்ஜீவ அந்த நிறுவனத்தில் (Fellow, Directorate of Health Service – IASR) வாழ்நாள் உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
இலங்கையின் நீண்ட கால வரலாற்றில் முதல் முறையாக இந்த விருது கிடைத்துள்ளமை குறிப்பிடக்க முக்கிய விடயமாகும்.
உலகம் முழுவதும் 56 நாடுகளின் 6000 அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையை சமர்ப்பித்தனர். இவர்களில் இலங்கை வைத்தியர் ஜீ.ஜீ.சமல் சஞ்ஜீவ பெற்றிருப்பது இலங்கை சுகாதார சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
அத்துடன் IASR நிறுவனத்தின் கௌரவிப்பிற்கமைய உலகின் மிக சிறந்த சுகாதார சேவையாளர் 500 பேருக்குள் வைத்தியர் ஜீ.ஜீ.சமல் சஞ்ஜீவ தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஈரட்டை பெரியகுளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப சென்ற முச்சக்கர வண்டியுடன் சொகுசு கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து, முச்சக்கர வண்டியில் சென்றவர்களுக்கும் காரில் சென்றவர்களுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்துள்ளது.
இச்சம்பவத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளம் பகுதியை சேர்ந்த இர்சாத் (26), சுல்கி (24) ஆகிய இரண்டு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் காயமடைந்தவர்கள், இது சம்பந்தமாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட காரில் பயணித்த இளைஞர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் தாக்குதலை மேற்கொண்ட இளைஞர்கள் வவுனியா நகரில் கந்தசுவாமி கோவில் வீதியில் பயணித்துக் கொண்டிருக்கையில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் நண்பர்களால் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, காரில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பித்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்குள் வாகனத்தை செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவுகள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு முரண்பட்டதால் பொலிஸ் நிலைய பகுதியில் சற்று பதற்றமான சூழ்நிலையில் காணப்பட்டது.
மேலும் தாக்குதலை மேற்கொண்ட காரில் பயணித்த இளைஞர்கள் மீது வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கார் மற்றும் முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே இருந்தால் இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2600 ஆம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும் என விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்.
பூமியில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையால் அதற்கு தக்கபடி எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே வருகிறது என இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.
இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2600 ஆம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பூமியில் உயிரினங்கள் மற்றும் தாவர வகையில் வாழமுடியாத சூழ்நிலை ஏற்படும். அனைத்தும் அழியும். ஆனால் மனிதர்கள் நினைத்தால் இன்னும் 10 இலட்சம் ஆண்டுகளுக்கு உயிர்வாழ முடியும் எனவும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
அதாவது மனிதர்கள் சூரிய மண்டலத்தில் மிக அருகேயுள்ள ஆல்பா சென்டாரி என்ற துணை கிரகத்தில் குடியேறலாம் அல்லது பூமிக்கு அருகேயுள்ள புளூட்டோவுக்கு சென்று தங்கலாம்.
இவற்றில் சூரிய மண்டலத்துக்கு அருகேயுள்ள ஆல்பா சென்டாரி துணை கிரகம்தான் சிறந்தது என தான் கருதுவதாகவும் இக்கிரகம் பூமியில் இருந்து 400 கோடி மைல் தொலைவில் உள்ளது எனவும் இது செவ்வாய் கிரகத்தை விட குறைந்த தொலைவில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்கிரகத்துக்கு சிறிய விமானத்தில் ஒரு வாரத்திற்குள் செல்ல முடியும். எனவே அதற்கான ஏற்பாட்டை இன்னும் 20 ஆண்டுகளில் செய்து முடித்துவிடுங்கள் என்று யற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது கூறியுள்ளார்.
இங்கிலாந்து போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக மாணவர் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல்லை கண்டுபிடித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் கிராண்ட் ஸ்மித், இவர் தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ‘டோர்செட்’’ கடற்கரையில் பாறைகளுக்கு இடையே கூர்மையான 2 பற்களை கண்டெடுத்துள்ளார்.
அவை எலி போன்று வலைக்குள் (பொந்துகளுக்குள்) வாழும் உயிரினத்திற்குரியது.
அந்த பல் மிகவும் கூர்மையானது அதே நேரத்தில் உணவு பொருட்களை துண்டாக்கி அதை மென்று சாப்பிடும் வகையில் உள்ளது, எலியின் பல்லுடன் ஒத்து போகிறது.
அந்த பற்களுக்குரிய உயிரினம் சுமார் 14½ கோடி (145 மில்லியன் ) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் ஸ்டீவ் சுவீட்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த உயிரினம் பாலூட்டி வகையைச் சேர்ந்தது, டய்னோசர் தொடக்க நிலைவகை மிருகமான டியூரிஸ்டோடான் என்சோமி மற்றும் டியூரிஸ்டோதெரியம் நியூமனி ஆகியவற்றில் ஏதாவது ஒருவகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான வரியைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் நெத்தலி மீதான வரி 11 ரூபாவில் இருந்து 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு மீதான 40 ரூபா வரி 39 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரிய வெங்காயம் மீதான 40 ரூபா வரியும் 39 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர பருப்பு, கருவாடு, ஃபாம் எண்ணெய், மரக்கறி எண்ணெய் ஆகியவற்றின்மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான வரிக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
டுவிட்டரில் பதிவிடக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கையை 140 லிருந்து 280 ஆக அதிகரித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்த எழுத்துக்களின் எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும்.
பயனாளிகள் டுவிட்டர் பக்கத்தில் தரவுகளை தெளிவாகவும் விரிவாகவும் பதிவிடக்கூடிய வகையில் தனது நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ள, நிலையில், பதிவிட்ட தரவுகளை மீள் திருத்தம் அதாவது எடிட் செய்யக்கூடிய வசதிகளை வழங்குமாறு டுவிட்டர் பயனாளிகள் பலர் டுவிட்டர் பங்கங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
வயது முதிர்ந்த ஆண்களைத் திட்டமிட்டுக் காதலித்து, அவர்களது காப்புறுதிப் பணத்துக்கு உரித்துப் பெற்றபின் அவர்களை சயனைட் கொடுத்துக் கொலை செய்து வந்த பெண்ணுக்கு ஜப்பானிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
சிஸாக்கோ காகேஹி (70) என்ற பெண்ணுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரை ‘விஷப் பெண்’ என்றும் ‘சூனியக்கார விதவை’ என்றும் ஜப்பானியர்கள் அழைக்கிறார்கள்.
முதல் திருமணம் உட்பட இதுவரை நான்கு முறை திருமணம் செய்தவர் காகேஹி. டேட்டிங் இணையதளங்களில், வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட, சொந்தமென்று சொல்லிக்கொள்ள யாருமேயில்லாத ஆண்களையே காகேஹி குறிவைத்துத் திருமணம் செய்துகொண்டார்.
சொல்லிவைத்தாற்போல், ஒவ்வொரு ஆணின் காப்புறுதிப் பணத்துக்கும் பொறுப்பாளராக காகேஹி நியமிக்கப்பட்ட ஓரிரு தினங்களில் அவர்கள் கொல்லப்பட்டு வந்தனர்.
கொல்லப்பட்டவர்களது உடற்கூற்று அறிக்கையில் சயனைட் மற்றும் அதற்கு நிகரான விஷப் பொருட்கள் காணப்பட்டதை பொலிஸார் அவதானித்தனர்.
காகேஹியின் நான்காவது கணவரும் மர்மமான முறையில் இறந்ததையடுத்து, 2013ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் காகேஹியைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
ஆரம்ப விசாரணையின்போது மௌனம் காத்த காகேஹி, நான்காவது கணவரைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். எனினும், தனது காதலிகளுக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுத்த அவர் தனக்கு ஒரு யென்னையேனும் தராததாலேயே கொலை செய்ததாகக் கூறியிருந்தார்.
எவ்வாறெனினும், காகேஹியின் வீட்டுக் குப்பைகளில் சயனைட் அடங்கிய சாடிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விரைவில் இத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காகேஹி முறைகேடாகச் சேர்த்த பணம் பல மில்லியன் டொலர்கள். என்றபோதும், அந்தப் பணத்தை நேர்த்தியாக வியாபாரத்தில் பயன்படுத்தத் தெரியாததால், தற்போது காகேஹி பணப் பற்றாக்குறையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு நூதன தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மலைவாழ் மாவட்டத்தில் உள்ள கேதி கிராமத்தை சேர்ந்த 32 வயது பிகில் மலைவாழ் இன பெண்ணுக்கு அதே ஊரை சேர்ந்த வேறு வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இந்த தகவல் அப்பெண்ணின் கணவரின் குடும்பத்துக்கு தெரியவந்தது. இதனால் பயந்துபோன கள்ளக்காதல் ஜோடி கடந்த மாதம் (அக்டோபர்) 28ம் திகதி வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தது. இருந்தும் கணவர் குடும்பத்தினர் அவர்களை தேடி கண்டுபிடித்து கிராமத்துக்கு அழைத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து கடந்த 4ம் திகதி பஞ்சாயத்து கூடியது. அதில் கள்ளக்காதலனுடன் ஓடிய மலைவாழ் பெண்ணுக்கு கடுமையான நூதன தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் தனது கணவரை 2 கி.மீட்டர் தூரம் தூக்கி சுமக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அப்பெண் தனது கணவரை தோளில் தூக்கி சுமந்து சென்றார்.
அத்துடன் அவரை விடவில்லை. தூக்கி சுமந்த அவரை கணவர் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அடித்து உதைத்தபடியே உடன் சென்றனர். இதனால் வேதனையில் துடித்தபடி ரத்த காயங்களுடன் கணவரை தூக்கி சுமந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
மேலும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பிடோல் பொலிஸ் நிலையத்தில் அப்பெண் புகார் செய்தார்.
அதையடுத்து கணவர், மாமனார், கொழுந்தனார் உள்ளிட்ட 6 பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 2 பேரை பொலிசார் தேடி வருகின்றனர். இத்தகவலை ஜாபுவா மாவட்ட பொலிஸ் அதிகாரி மகேஷ்சுந்தரி ஜெயின் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணிப் பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுசித்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை விஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்று இதுகுறித்து விளக்கம் அளித்தார். சைபர் க்ரைம் பொலிசில் பரபரப்பு புகாரையும் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
‘சிவா மனசுல சக்தி’, ‘நண்பன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படமும் பரவியது. இந்நிலையில் டிவிட்டரில் இருந்து ஆபாச படத்தை நீக்குமாறு சைபர் கிரைம் பொலிசில் புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து நடிகை அனுயா, பாந்திராவில் உள்ள சைபர் கிரைம் பொலிசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே அந்த ஆபாச படத்தை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிஉள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விசாரணையை தொடங்கிவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற கட்சிகள் முரண்பாடான நிலைப்பாட்டை கொண்டுள்ள போதும் கூட்டமைப்பை பிளவு படாமல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) செயலதிபர் அமரர் உமா மகேஸ்வரனின் நினைவாலயத்தில், “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” (டி.பி.எல்.எப்) மத்திய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர், கடந்த சனிக்கிழமை ரெலோ, தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஆகியன இணைந்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தோம்.
அதிலே அடிப்படையில் எல்லோரும் இணைந்தே பயணிக்கவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
அரசியலமைப்பு தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள நாங்கள் பலமாக இருக்க வேண்டும் என்பதனையும் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளை, உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக எதிர்வரும் 12 ஆம் திகதி கூடவிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டத்தில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும்.
அதேவேளை, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தேர்தலில் தனியாக போட்டியிடப் போவதாகவும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாது என்னும் தீர்மானத்தை எடுத்துள்ளார்கள்.
இருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கு சுரேஸ் பிரேமசந்திரனுடன் கலந்துரையாடுமாறு, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என்று குறிப்பிட்டார்.