பம்பலப்பிட்டிய மற்றும் வெள்ளவத்தை எல்லையை பிரிக்கும் ஏரியில் மனிதர்களை உண்ணும் ஆபத்தான முதலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஏரிக்கு அருகில் சென். பீட்டர் பாடசாலையின் மைதானமும் உள்ளது. இதனால் இந்த ஏரியில் உள்ள முதலைகளினால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த எல்லையில் அதிகமான வீடுகள் உள்ளது. வீடுகளில் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் பொது மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
வடக்கு ரயில் மார்க்கத்தில் நாவற்குழி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நாவற்குழி பாலத்தை புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுவதால் குறித்த பகுதியில் மாத்திரம் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து நாவற்குழி வரையான ரயில் சேவைகள் வழமைபோல முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாவற்குழி ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் ரயில் நிலையம் வரையில் இலங்கை போக்குவரத்து சபையினூடாக விசேட பஸ் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறியுள்ளார்.
நாவற்குழி பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து நடந்த ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் நான்கு போட்டிகளையும் பாகிஸ்தான் அணி வென்று 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி இன்று 23ம் திகதி நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், இலங்கை அணி வயிட் வாஷ் செய்யப்படும்.
பாகிஸ்தான் தொடரை தொடர்ந்து இலங்கை அணி இந்த ஆண்டு தொடர்ந்து மூன்று முறை வயிட் வாஷ் செய்யப்பட்ட அணி என்ற நிலையை பெறும்.
இதற்கு முன் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணி 5-0 என்ற கணக்கிலும், இந்திய அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணி 5-0 என்ற கணக்கிலும் தொடரை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பள்ளிப்படிப்பை கூட முடிக்காத பெண் ஒருவர், தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என பொய் கூறி விமானப்படை அதிகாரியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் மோசடி செயல்கள் குறித்து வெளியில் தெரியவந்துள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் அகில் மனோகர். விமானப்படை அதிகாரியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஆஷிதா (24) என்ற பெண்ணுக்கும் 38 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
ஆஷிதா தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக தமிழ்நாட்டில் பணிபுரிவதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், மகிழ்ச்சியாக திருமண வாழ்வை தம்பதிகள் தொடங்கிய நிலையில், அகில் வீட்டுக்கு சாண்டி என்பவர் வந்துள்ளார்.
அங்கிருந்த ஆஷிதாவை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். காரணம் சாண்டியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆஷிதா பொய் வாக்குறுதி அளித்து 3 லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.
ஆனால், அதை ஆஷிதா வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து ஆஷிதா உண்மையிலேயே ஐபிஎஸ் தானா என சந்தேகமடைந்த கணவர் வீட்டார் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
ஆஷிதாவை பொலிசார் கைது செய்து விசாரித்ததில் அவர் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர் எனவும், ஐ.பி.எஸ் என பொய்யாக கூறியதும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக்கு ஆஷிதாவின் பெற்றோரும் துணையிருந்துள்ளனர். சில வருடங்களாக குமரல்லூரில் வசித்து வந்த ஆஷிதா அங்கிருந்த மக்களிடமும் ஐபிஎஸ் என கூறி பணத்தை கடன் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
தனக்கு மாதம் 57000 சம்பளம் எனவும் ஆஷிதா எல்லோரிடமும் கூறியுள்ளார்.
இந்தியாவில் ரிக்ஷா தொழிலாளி ஒருவர் வறுமையின் காரணமாக உணவு கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட மாநிலத்தின் தன்பாத் பகுதியைச் சேர்ந்தவர் பட்நாத் தாஸ். வறுமையால் வாடி வந்த இவரது குடும்பம் அரசின் நலத்திட்டங்கள் பெற வேண்டி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்துள்ளது. ஆனால் அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் பட்நாத் தாஸ்(40) உடல்நிலை கடுமையாக பாதிப்படைந்த நிலையில் மருத்துவ வசதி பெற முடியாமல் உயிரிழந்துள்ளார். சிம்தேகா மாவட்டத்தில் பசியால் 11 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், தன்பாத் பகுதியில் ரிக்சா தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வவுனியா, பேரூந்து நிலையத்தில் 2 கிலோ 136 கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வவுனியா மதுஒழிப்பு பிரிவுப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் பேரூந்தில் பயணித்த இளைஞன் ஒருவரின் செயற்பாட்டில் சந்தேகம் அடைந்த வவுனியா மது ஒழிப்பு பிரிவுப் பொலிசார் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனின் பையினை சோதனை செய்த போது அதில் 2 கிலோ 136 கிராம் கேரள கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் குறித்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த கஞ்சா இந்தியாவின் தெலுங்குப் பத்திரிகை ஒன்றில் பொதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டத்தில் பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (22.10) வடக்கு ஊடக கல்வி கல்லூரியின் நிறுவனர் அ.நபீஸ் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
மலையக கலைகலாசார சங்கம் வழங்கிவரும் சமூக சேவையாளருக்கான இரத்தின தீப தேசிய சமூக விருதுகள் ‘வடக்கு ஊடக கல்வி கல்லூரியின்’ ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்தில் சமூக நலன்கொண்டு ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களான பொ.மாணிக்கவாசகம், எம்.ஜி.ரெட்ணகாந்தன், ந.கபில்நாத், கே.வசந்தரூபன், க.வரதகுமார், எஸ்.கஜேந்திரகுமார் மற்றும் சிங்கள ஊடகங்களில் கடமையாற்றும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட 10 ஊடகவியலாளர்களுக்கும், சமூக சேவைகள் மற்றும் கல்வித்துறைகளில் பணியாற்றியவர்களுமாக 44 பேருக்கு இரத்தின தீப விருதுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்துகொண்டு இரத்தின தீப விருதுகளை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஊடகவியலாளர்கள் தனிப்பட்டவர்களை தாக்கி எழுதக்கூடாது எமது நாடு இன்று முப்பது வருடங்களாக யுத்த்தில் சிக்கி சீரழிந்துள்ளது மக்கள் இடம் பெயர்ந்துகொண்டுள்ளார்கள் நாங்கள் ஒருங்கிணைந்த இலங்கையை கட்டியெழுப்ப ஊடகவியலாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஊடகவியலாளர்கள் ஒரு கட்சி சார்ந்து செயற்படக்கூடாது, அதேபோல ஊடக கற்கை நெறி கல்லூரிகள் அரசியல் சார்ந்து செயற்படாமல் அனைத்து கட்சி மக்கள் பிரதிநிதிகளையும் அரவணைத்து செயற்பட முன்வரவேண்டும் என நேற்று வவுனியா விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற வடக்கு ஊடகவியலாளர்கள் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சிகளை முடித்து சான்றிதழ் வழங்கும், சமூகசேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
சமூக வலையத்தளங்களை தற்போது பார்க்கமுடியவில்லை யாரையோ ஒருவரைத்தாக்கவேண்டும் என்ற நோக்கத்துடனே செயற்படுவது. ஒரு இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்தியை வைத்து இவர் எந்தக்கட்சியைச் சார்ந்தவர் என்பதை தெரிந்துகொள்ளமுடியும் முடியுமானவரை இச் செயற்பாடுகளை நாங்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
வவுனியாவைப் பொறுத்தவரையில் ஒரு செய்தி வரமுன் அத்தகவல் சரியா என்பதை அக்கட்சியிடம் உறுதிப்படுத்தி வெளியிடுவது அவசியம். ஆனால் அவ்வாறு செய்படாமல் செய்திகளைப்பிரசுரித்த பின்னர் பார்த்தால் அது தவறான கருத்தாகவே காணப்படுகின்றது.
அவ்வாறான நிகழ்வுகள் இன்று வவுனியா மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அனேகமான ஊடகவியலாளர்களுக்குத் தெரியும் அது என்ன என்று.
சிலர் தங்களுடைய கட்சியை உயர்த்துவதற்கும் தங்களது கட்சி சார்ந்த செய்திகளைப்பிரசுரித்து வருவதும் தெரிந்ததே. தற்போது இந்த சமூக வலையத்தளங்கள் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு செயற்படும் ஊடகவியலாளர் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். தற்போது நல்லவிடயங்களுக்காக சமூகத்தில் சமூக வலைத்தளங்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சமூகப்பொறுப்புள்ள விடயங்களில் கல்வி, சமூகம் இவ்வாறான நல்ல விடயங்களை கையிலெடுத்து மக்களிடத்திற்கு கொண்டு சென்று மாற்றத்தை ஏற்படுத்தும் விதமான செய்திகளாக பிரசுரிக்க முன்வரவேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் தவறு செய்கின்றார்கள் என்றால் துணிந்து அவர் இவ்வாறான தவறுகள் செய்கின்றார் என்று நேரடியாக தொடர்புபட்ட மக்கள் பிரதிநிதியிடம் தொடர்புகொண்டு கேட்டு அவரைத் திருத்துவதற்காக ஊடகங்கள் செய்தால் அது தவறல்ல. நாங்கள் ஒருவரை அவமானப்படுத்தினால் அதன் பிரதிபலன் எமக்கு திரும்பவரும் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.
அதேபோல இன்றும் எனது மனதில் பட்டதை நான் கூறியாக வேண்டும். இன்று இடம்பெறும் குறித்த வடக்கு ஊடக கல்லூரி நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்கள் என்பவர்கள் வவுனியா மாவட்டத்தைத்தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள். அவர்கள் ஒரே கட்சியைச்சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
எங்கு அந்தத்தவறு இடம்பெற்றுள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. அனுராதபுரம், புத்தளம், திருகோணமலை மாவட்டங்களிலிருந்து இங்கு வந்துள்ள மக்கள் பிரதிநிதிகள் எந்தக்கட்சியைச்சார்ந்தவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் குறித்த மாவட்டங்களில் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியைச்சார்ந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் கேட்டு அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ஏனென்றால் என்னுடைய பார்வைக்கு அந்த அழைப்பிதழில் அழைக்கப்பட்ட விருந்தினரைப்பார்க்கும்போது இது ஒரு கட்சி சார்ந்த ஊடகமாகவும் ஊடக கல்லூரியாகவும் காணப்படுகின்றதா என்ற கேள்வி எனக்குள்ளும் எழுகின்றது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறான வேறுபாடுகள் காட்டப்படவில்லை. என்று மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இன்றைய நிகழ்வில் முதன்மை விருந்தினராக வணிகத்துறை அமைச்சர் ரிஸாட் பதியூதின் மற்றும் அவரது கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோரின் பெயரும் அழைப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஜூட் கஜன், சாந்தன் ஆகியோரின் 15 ஆவது நிறைவை முன்னிட்டும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (21.10) இரவு போட்டியாக 7.30 மணியளவில் வைரவர்புளியங்குளம் சிறுவர் பூங்காவில் இடம்பெற்றது.
இப்போட்டியில் வவுனியா யங்ஸ்ரார் அணியினரும், கோல்டன் பிரதர்ஸ் அணியினரும் பலப்பரீட்சை நடத்தினர். மேலும் இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணியினரும் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்தனர்.
இடைவேளையின் பின்னரான ஆட்டம் விறுவிறுப்பை பெற்றது. போட்டி முடிவடைவதற்கு 10 நிமிடங்கள் முன்பதாக யங்ஸ்ரார் அணி இன்னுமோர் கோலினை போட்டு அணியினை முன்னிலைப்படுத்தினர். கோல்டன் பிரதர்ஸ் அணியினர் கடுமையாக போராடியும் கோல்களை போட முடியவில்லை போட்டி நிறைவில் யங்ஸ்ரார் அணியினர் 2-1 என்ற கோல்கணக்கில் போட்டியை வென்று சம்பியன் பட்டத்தை தமதாக்கிக் கொண்டனர்.
இப்போட்டியிற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவரும் யங்ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபர்களில் ஒருவருமான சந்திரகுமார் கண்ணன், சிறீரெலொ கட்சியின் இளைஞரணி தலைவர் ப.கார்த்திக், வவுனியா துடுப்பாட்ட சம்மேளனத்தின் தலைவர் யோ.ரதீபன், துடுப்பாட்ட நடுவர் சங்கத்தின் செயலாளர் அ.ரவிநாத், மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ராஜன், மின்சாரசபை பொறியியலாளர் திலீபன், பொறியியலாளர் எஸ்.சிறீஸ்கந்தராசா, இறைபணி செம்மல் வை.செ.சேனாதிராசா, கடை உரிமையாளர்கள்,விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
மேலும் இந் நாளை நினைவு கூரும் முகமாக நடாத்தப்பட்ட ஆண் , பெண் இருபாலாருக்குமான பட்மின்ரன் மற்றும் கடினப்பந்து, சிறந்த பந்துக் காப்பாளர், சிறந்த வீரர்களுக்கான நினைவு பரிசில்களும் இறுதியில் வெற்றிபெற்றவர்களுக்கு காசோலையும் கேடயங்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் வருடந்தோறும் இடம்பெறும் கந்தசஸ்டி பெருவிழா இவ்வருடமும் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆலயகுரு பிரம்ஸ்ரீ வேத சரண்ய புரீஸ்வரக்குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆறு தினங்களும் காலை மாலை என இருவேளையும் சிறப்பாக நடைபெறுகின்றன.
ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் திரு.சுப்ரமணியம் செயலாளர் திரு.ஜெகதீஸன் பொருளாளர் திரு.பாஸ்கரன் உட்பட அதன் உறுப்பினர்கள் இணைந்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
தினமும் கந்த புராணப்படிப்பு, சிறப்பு தொடர் சொற்பொழிவு, பஜனை என்பன இடம்பெறுகின்றன. இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் முருகப் பெருமானின் சிறப்புகள் பற்றி ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றி வருகின்றார்.
25.10.2017 புதன்கிழமை மாலை 3 மணிக்கு சூரசம்ஹாரம் விமர்சையாக இடம்பெறவுள்ளது. நேரடி அஞ்சல், கரகாட்டம், பொம்மலாட்டம் என பல சிறப்புகளுடன் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
வடமாகாண விவசாயமும் கமநலசேவையும் நீற்பாசனம் கால்நடை அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் உபஅலுவலகம் வன்னி மாவட்டமக்களின் நலன்கருதி வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசனால் மாங்குளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இவ் அலுவலகத்தில் மக்களுக்கான சேவையை பெற்றுக்கொள்ளமுடியும். மேற்படி அலுவலகத் திறப்பு விழா வைபவத்தில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.
யாழ். அரியாலைப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார். இதனை வைத்தியசாலை பணிப்பாளர் பா.சத்திய மூர்த்தி உறுதி செய்துள்ளார்.
உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போது யாழ்.போதனா வைத்தியசாலை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.
இளைஞரின் உறவினர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுக் கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இன்று பிற்பகல் வேளையில் குளத்திற்கு குளிக்கச்சென்றவர் மாலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஈச்சங்குளம், மறவன்குளம் பகுதியிலுள்ள நடராசா சந்தனகுமார் என்ற 36 வயது இளைஞன் இன்று பிற்பகல் வேளையில் கல்மடு குளத்திற்கு குளிக்கச் செல்வதாக தெரிவித்து விட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து மாலை அக்குளத்திற்கு குளிக்கச் சென்ற வேறொருவர் குறித்த நபர் குளத்தில் சடலமாக இருப்பதை அவதானித்ததுடன் இது குறித்து ஈச்சங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் குறித்த நபருக்கு வலிப்பு வருவதாக அவரது உறவினர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போது சடலம் வவுனியா பொதுவைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
“பாத்தீனியம் அற்ற வவுனியாவை உருவாக்குவோம்” எனும் செயற்றிட்டத்தின் கீழ் இன்று (22.10.2017) காலை 8.30 மணி முதல் 12 மணி வரை “வவுனியா பசங்க” அமைப்பினரால் வவுனியா வைரவப்புளிங்குளம் சிறுவர் பூங்கா வீதி, நகரசபை ஊழியர் விடுதி வீதி என்பற்றில் வவுனியா நகரசபையின் அனுசரணையுடன் மாபெரும் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
தற்போது வவுனியா நகரில் பாத்தீனியம் அதிகரித்து காணப்படும் இந் நிலையில் வவுனியா மாவட்ட இளைஞர்களினால் உருவாக்கப்பட்ட ‘வவுனியா பசங்க ‘ அமைப்பினர் இவ்வாறான சமூக சேவைகளில் ஈடுபட்டடுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.
இவ் அமைப்பினரின் சிரமதான பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக த எவர் கிறீன் பரடைஸ் உணவகத்தினால் தேனீர் வழங்கப்பட்டதுடன் பொதுமகன் நந்தன் அவர்களினால் குளிர்பானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் நடிகர் விஜய்க்கு பணத்தினை செலவழித்து பாதாதைகள் வைக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் இப்படியும் இளைஞர்களா என அனைவரும் பார்வையும் ‘வவுனியா பசங்க’ அமைப்பினர் மீது திரும்பியுள்ளது.
பதுளையில் மிகவும் வறுமையான நிலையிலும் படித்து, ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளார்.
பதுளை எல்லலன்ந்த கிராமத்தில் மிகவும் வறுமைக்கும் மத்தியில் கல்வி கற்று புலமை பரீசில் பரீட்சையில் 173 புள்ளிகள் பெற்று மாணவர் ஒருவர் சித்தியடைந்துள்ளார்.
எல்லலன்ந்த வித்தியாலயத்தில் கற்கும் சுப்புன் பிரதிப் என்ற இந்த மாணவன் 57 வருட வரலாற்றில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரே மாணவனராகும்.
நிரந்தர வீடும் தந்தையும் இல்லாத நிலையில் தாயுடன் மாமாவின் வீட்டில் வாழும் அந்த சிறுவனின் கடுமையான முயற்சியினால் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூலி தொழில் செய்து அந்த மாணவனின் கற்கை நடவடிக்கைகளை தாயார் மேற்கொண்டுள்ளார்.
மேலதிக வகுப்புகளுக்கு செல்லாமல் பரீட்சையில் சித்தியடைந்ததாக குறித்த மாணவன் குறிப்பிட்டுள்ளார். பாடசாலைக்கு செல்வதற்கு பாதணியேனும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
57 வருடங்களின் கிடைத்த வெற்றி தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவனை பாராட்டியுள்ளனர்.
தலவாக்கலை நகரில் கடந்த 17ஆம் திகதி காணாமல்போன 18 வயதுடைய இளைஞன் இன்று மதியம் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் புத்தளம், கந்தகுடா பகுதியைச் சேர்ந்த முகமது நிலாம்தீன் முகமது அஸ்ஜட் (வயது 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதாக பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதிக்கு வருகை தந்து தலவாக்கலை நகரசபையின் கடையொன்றினை கூலிக்காக பெற்று ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயத்துக்கு முன்பாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த இளைஞன், கடந்த 17ஆம் திகதி இரவு சக வர்த்தகர்களிடம் கழிவறை செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
எனினும் மறுநாள் (18.10.2017) வரை அவர் திரும்ப வராதமையினால் கடை உரிமையாளரினாலும், சக வர்த்தகர்களாலும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையியே நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம் குறித்த இளைஞனுடையது என அடையாளம் காணப்படுள்ளது.
மரண விசாரணைகளின் பின் மீட்கப்பட்ட சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.