மனித முகம் கொண்ட மிருக குட்டி : வைரலாக வீடியோ!!

 
மலேசியாவில் மனித முகம் கொண்ட மிருக குட்டி இருப்பதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகின.

பிறந்த குழந்தை போன்ற தோலுடன் தலையில் கறுப்பு நிற முடிகளுடன் விலங்கை போன்ற முக அமைப்பு கொண்ட புகைப்படம் வெளியானது.

மலேசியாவின் பகாங் பகுதியில் மிருக குட்டி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இது போலியான ஒன்று என மலேசிய பொலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.

விலங்கு முக அமைப்பு கொண்ட கூர்மையான பற்கள் உடைய சிலிக்கான் பொம்மை இது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எப்போதும் கண்களை மூடியிருக்கும் இந்த பொம்மை, யாராவது தொட்டாலோ கைகளில் வைத்திருக்கும் போதோ ஒலி எழுப்புமாம்.

 

வாகன விபத்தில் 18 வயது இளைஞர் பரிதாபமாகப் பலி!!

 
வாழைச்சேனை – பாசிக்குடா பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பாசிக்குடா பிரதேசத்தில் இருந்து, வாழைச்சேனை நோக்கி பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் வலப் பக்கமாக திரும்புவதற்கு முற்பட்ட வேளையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதில், கிண்ணையடி – நாகதம்பிரான் ஆலய வீதியைச் சேர்ந்த செல்வக்குமார் புவிதன் (வயது 18) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மரணமடைந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!!

மீற்றர் பொருத்தப்படாத அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எதிர்காலத்தில் மீற்றர்களை பொருத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரதியமைச்சர் அஷோக அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகனங்கள் சட்டத்தின் உத்தரவுகள் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்ற அமர்வின் போது கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒருநாள் இயங்கிய வவுனியா புதிய பேருந்து நிலையம்!!

 
ஜனாதிபதி மக்கள் சேவை நடமாடும் சேவைக்காக நேற்று ஒரு நாள், வவுனியா புதிய பேருந்து நிலையம் மீள இயங்கியிருந்தது.

அந்த வகையில், ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவைக்காக வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 78 வரையான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன.

இந்த சேவையானது நடமாடும் சேவைக்காக வரும் மக்கள் தமது தேவைகளை இலகுபடுத்துவதற்காக இப்புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்தன.

195 மில்லியன் ரூபா நிதியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் கடந்த பல மாதங்களாக இயங்காத நிலையில் ஜனாதிபதியின் நடமாடும் சேவைக்காக மட்டும் மீண்டும் இயங்கியுள்ளது.

இலங்கையில் குப்பை பொறுக்கும் அவுஸ்திரேலியர் : வியப்பில் மக்கள்!!

இலங்கையில் குப்பை பொறுக்கும் வெளிநாட்டு பிரஜை ஒருவர் தொடர்பில் கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலிய நாட்டவரான ஜோன் என்பவரே இந்த சேவையை செய்து வருகின்றார். அவர் கடந்த 29 வருடங்களுக்கு முன்னர் முதன் முறையாக இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வருகைத்தந்துள்ளார்.

அதன்போது பௌத்த மதம் தொடர்பில் சில விடயங்களை கற்றுக் கொண்டு மீண்டும் அவுஸ்திரேலியா நோக்கி சென்றுள்ளார்.

பல வருடங்களின் பின்னர், அதாவது கடந்த 6 வாரங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
தனது வாழ்க்கையின் மீதமுள்ள வருடங்களை இலங்கையிலுள்ள விகாரை ஒன்றில் செலவிடும் எண்ணத்தில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

தற்போது அவர் இலங்கையில் குப்பை பொறுக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேய நாட்டு பிரஜை ஒருவர் இலங்கையில் சுத்தம் செய்வது குறித்து நாட்டு மக்கள் வியப்படைந்துள்ளதுடன், அவரை பாராட்ட வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் வான்பரப்பில் இன்று ஏற்படவுள்ள அதிசயம்!!

இலங்கையின் வான்பரப்பில் இன்று வழமைக்கு மாறான நிகழ்வுகள் இடம்பெறக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்கல் மழையை பார்வையிடும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கும் கிடைத்துள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் இன்றிரவு முதல் நாளை அதிகாலை வரையான காலப்பகுதியில் விண்கல் மழை பெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான அரிய விடயம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இரவிலும் பொழியக்கூடிய இந்த விண்கல் மழை மிக அரிதானதொன்று எனவும், இந்த நிகழ்வை மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே, ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 20 முதல் 23ஆம் திகதி வரை ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் சுமார் இருபது விண்கல் வரை பூமியில் பொழிகின்றன. எனினும், அவை பூமியை அடைவதற்குள் எரிந்து சாம்பராகிவிடுவதால் பெரும்பாலான சமயங்களில் அவற்றைக் கண்களால் காண முடிவதில்லை.

இரவுப் பொழுதுகளும், விடியலுக்கு முன்னான பொழுதுகளும் அவற்றைக் காண்பதற்கு உகந்த நேரமாகும். இம்முறை பொழியவிருக்கும் விண்கல் மழையை இலங்கையின் வட மற்றும் தென் பகுதி மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இளைஞனின் அபார செயல் : குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக சாதனை!!

 
மாத்தளை – வில்கமுவ பிரதேசத்தில் இருமுறை உயர்தரத்தில் தோல்வியடைந்து கோடீஸ்வரராகிய இளைஞர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வில்கமுவ பிரதேசத்தில் பிறந்து தந்தையின் தொழில் காரணமாக கண்டி பிரதேசத்திற்கு சென்ற லசந்த விக்ரமசிங்க என்ற இளைஞரே இவ்வாறு கோடீஸ்வரராகியுள்ளார்.

மாத்தளை, பாடசாலைகள் சிலவற்றில் கற்றவர், கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் கல்வியை நிறைவு செய்தார். கண்டி தர்மராஜா வித்தியாலயத்தில் கணித பிரிவில் உயர்தரம் கற்றுள்ளார். இருமுறை உயர்தரம் பரீட்சை எழுதியும் அவரால் சித்திபெற முடியவில்லை.

இறுதியில் லசந்த முகாமையாளர் பட்டப்படிப்பை தெரிவு செய்துள்ளார். 2006ஆம் ஆண்டு அவர் முகாமைத்து பிரிவில் தொழில் பெற்றார். எனினும் அந்த தொழில் தனக்கு பொருத்தமானதாக இல்லை என எண்ணினார்.

தொழில் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பங்களில் அவர் இணையத்தில் சற்று நேரத்தை செலவிட்டுள்ளார்.
அப்போதைய காலப்பகுதியில் இணையத்தில் பணம் தேடுவதென்பது புதிய விடயமாக காணப்பட்டது. அதனை அனைவரும் வித்தியாசமாகவே பார்த்தனர்.

எனினும் இதனை திறம்பட செய்த லசந்த விக்ரமசிங்க இணையத்தில் ஓரளவு இலாபத்தை பெற்றார். பின்னர் தனியாகவே இணைய பயன்பாடுகள் தொடர்பில் அவர் பல விடயங்களை கற்றார்.

அதன் மூலம் கையடக்க செயலிகளை (apps) கண்டுபிடித்தவர், சர்வதேச அளவு தனது திறமையை கொண்டு சென்றார்.
ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் ஏற்படுத்தி கொண்டார்.

அவரது கண்பிடிப்பிலான செயலிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது 9000 யூரோ வரையில் அதனை அவர் விற்பனை செய்து வருகின்றார். இலங்கையில் தற்போது கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறும் அளவில் அவர் முன்னேற்றமடைந்துள்ளார்.

வவுனியா சுந்தரபுரம் அ.த.க பாடசாலை ஆரம்பப்பிரிவு மாணவிகள் மாகாண சித்திர போட்டியில் முதலிடம்!

வவுனியா சுந்தரபுரம் அதக பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவிகளான தரம் இரண்டைச் சேர்ந்த செல்வி.ந.பவிஷாலினி, தரம் மூன்றைச் சேர்ந்த செல்வி தி.ஜதுஷா ஆகிய இரு மாணவிகளும் 16.10.2017 கிளிநொச்சி பரந்தனில் நடைபெற்ற வடக்கு மாகாண சித்திரப் போட்டியில் முதலிடம் பெற்று வவுனியா மாவட்டத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் திரு.செ.யேசுநேசன், சித்திரப் பாட ஆசிரியர் பாலகுமார், வகுப்பாசிரியர்களான திருமதி.த.சுவேந்திரன் மற்றும் திருமதி ஜெ.இந்திரகுமார், பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வவுனியாவில் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

 
படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார்.

நடமாடும் சேவையில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தால் வவுனியாவில் வழங்கப்பட்ட வீட்டில் தற்போது வசித்து வரும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.

அண்மையில் வித்தியா கொலை தொடர்பான விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் ட்யல் அட்பார் முறையில் விசாரணைகள் நடைபெற்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதன்போது, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக விரைவாக வழக்கு விசாரணைகளை முடிவுறுத்தி தீர்ப்பு வழங்கியமைக்காக ஜனாதிபதிக்கு வித்தியாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோரும் ஜனாதிபதியுடன் வித்தியாவின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

நேற்று வவுனியாவில் இடம்பெற்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வின் போது ஜனாதிபதியின் காலில் வீழ்ந்து கதறி அழுது நன்றியை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நிலவிய பாகுபாடே யுத்தத்திற்கு வழிவகுத்தது : வவுனியாவில் ஜனாதிபதி!!

வடக்கு- கிழக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாமையே கடந்த கால யுத்தத்திற்கு வழிவகுத்தது என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டுவரும் நடமாடும் சேவையின் மூன்றாவது நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகார மகளிர் கல்லூரியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி, ”அதிகாரப் பகிர்வை எதிர்த்து போராடுபவர்கள் வடக்கு- கிழக்கிற்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிட வேண்டும்.

கடந்த 50 வருட காலமாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் அவற்றில் எவையும் வடக்கு- கிழக்கு மாகாணங்களை சென்றடையவில்லை. இந்த வேறுபாடே கடந்த கால யுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்கும், மாகாணங்களுக்கும் அபிவிருத்தி சமமான முறையில் பகிரப்படவில்லை. இப்பகுதியில் பல பாடசாலைகளிலும், அரசாங்க திணைக்களங்களிலும் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

எனவேதான் மேல் மாகாணத்தினை போன்று வட மாகாணத்தினையும் அபிவிருத்தி செய்யவேண்டும் என நாம் செயற்பட்டு வருகின்றோம்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை போன்று, அரசியல் அமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்துவதிலும் இந்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அதன்படி அதிகாரத்தினை பகிர்ந்தளிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இதனை தவறாக புரிந்துக் கொண்டுள்ள சிலர் யுத்தத்தினால் பிரிக்க முடியாத நாட்டை தற்போது நாம் பிரிக்கபோகின்றோம் என விமர்சிக்கின்றனர். அதனை நான் முற்றாக நிராகரிக்கிறேன்.

அதிகார பரவலாக்கலை எதிர்ப்பவர்கள் வடக்கு- கிழக்கு பகுதிகளுக்கு வரவேண்டும். தென் மாகாணத்தில் சப்பிரகமுவ மாகாணத்தில் உள்ள அபிவிருத்தி வேலைகள் இந்த மாகாணங்களில் உள்ளதா என்பதனை அவர்கள் தங்களது கண்களால் பார்த்து புரிந்துகொள்ளவேண்டும்” என்றார்.

வவுனியாவில் இரு பிரபல பாடசாலைகளுக்கு கேட்போர் கூடம் : ஜனாதிபதி உறுதி!!

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நேற்று (21.10.2017) நடைபெற்ற ஜனாதிபதியின் நில மெஹவர எனும் நடமாடும் சேவைக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையின் போது வவுனியாவில் இரு பாடசாலைகளுக்கு கேட்போர் கூடம் அமைத்து தருவதாக வாக்குறிதியளித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நான் இந்த பாடசாலைக்கு வந்ததன் பின்னர் இந்த பாடசாலையில் இருக்கக்கூடிய குறைபாடுகள் சம்பந்தமாக இந்த வித்தியாலயத்தின் அதிபர் எனக்கு தெரிவித்தார். இவற்றுள் பல்வேறு விதமான வேண்டுகோள்கள் இருக்கின்றன. ஆனால் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய ஒரு வேண்டுகொள் இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் அதிபர் பிரதமரிடம் வேண்டுகோளை விடுத்தமையை நான் கண்டேன். நானும் பிரதமரும் பேச்சுவார்தை நடத்தி அவரின் அந்த வேண்டுகோளில் முதலாவது வேண்டுகோளை இப்போதே வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். அந்த முதலாவது வேண்டுகோள் தான் இந்த பாடசாலைக்கு ஒரு கேட்போர் கூடம் வேண்டும் என்றார்கள் அதை நாங்கள் பெற்றுத்தருவோம்.

அதே போன்று முன்னாள் சுகாதார அமைச்சரும் வடமாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் என்னை சந்தித்துப் பேசினார். இதற்கு அப்பால் அமைந்துள்ள ஒரு பாடசாலை(வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) அது ஒரு ஆண்கள் பாடசாலை அங்கும் ஒரு கேட்போர் கூடம் இல்லை இங்கு 3000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என தெரிவித்தார். அந்த பாடசாலைக்கும் ஒரு கேட்போர் கூடத்தினை வெகு விரைவில் அமைத்துத்தருவேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

 

வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை புறக்கணித்த ஜனாதிபதி மைத்திரி!!

 
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நேற்று (21.10.2017) காலை 9.30 மணியளவில் நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , வடமாகாண சபை உறுப்பினர்கள் , அரச உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது இந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிசில்கள் வழங்கப்படவிருந்த நிலையில், கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறாமல் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினை பெற்ற மாணவர்களுக்கு மாத்திரம் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இதனையடுத்து மற்றைய மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த மனவேதனையுடன் சென்றதை காணக்கூடியதாகவிருந்தது. இவ் விடயம் தொடர்பாக பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதியின் கைகளினால் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது எனவே அனைவரும் உங்கள் பிள்ளைகளை வவுனியா சைவப்பிரகாச கல்லூரிக்கு அழைத்து வருமாறு பிரதேச செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனை நம்பி நாங்கள் எங்கள் பிள்ளைகளுடன் வந்தோம். ஆனால் பரிசில்கள் எவையும் வழங்கப்படாமையினால் மிகுந்த வேதனையளிக்கின்றது.

எனது மகன் இன்று காலை ஜனாதிபதியின் கையால் பரிசில் வாங்கவுள்ளேன் என்ற சந்தோசத்தில் வந்தான். ஆனால் தற்போது அழுது கொண்டு செல்கின்றான் என தெரிவித்தார்.

இது சம்பந்தமாக ஏற்பாட்டுக்குழுவுடன் தொடர்பு கொண்டு வினாவிய போது, ஜனாதிபதிக்கு நேரமின்மை காரணமாகவே இக் கௌரவிப்பு நிகழ்வு நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

வவுனியாவில் இடம்பெற்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி நடமாடும் சேவை!!

 
தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனாதிபதி நடமாடும் சேவை நேற்றைய தினம் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெறும் நடமாடும் சேவை பொலநறுவை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மூன்றாவதாக வவுனியாவில் நடைபெற்றது.

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரிக்கு காலை 10 மணியளவில் வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டதுடன் கல்லூரி வளாகத்தில் ஜனாதிபதியால் மரம் நாட்டப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் 5000 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன், திவிநெகும திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கும் சுயதொழில் உதவிகளும், இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் முயற்சிக்கான ஊக்குவிப்புக்களும் வழங்கப்பட்டது.

அத்துடன் காணிப்பிரச்சனை, ஆள்அடையாள அட்டை, பிறப்பு – இறப்பு பதிவுகள், கடவுச்சீட்டு, விவாகப் பதிவுகள் எனப் பல்வேறு சேவைகளும் இடம்பெற்றது.

நிகழ்வில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர குணவர்த்தன, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், மற்றும் அமைச்சர்களான சுவாமிநாதன், கஜந்த கருணாதிலக, விஜயகலா மகேஸ்வரன், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.கே.மஸ்தான், சாந்தி சிறிஸ்கந்தராஜா, சிவமோகன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாவட்ட அரசாங்க அதிபர்கள், வடக்கு ஆளுனர், அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியாவை வந்தடைந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர்!!

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு!!

 
வவுனியா மில் வீதியில் நேற்று (21.10.2017) இரவு 8.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பில் அரச வங்கி ஒன்றில் பணிபுரியும் வவுனியாவைச் சேர்ந்த கிருபராசா ஜெசுதாஸ் என்ற 33 இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

நேற்று மாலை நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் இரவு வீட்டில் அனைவரும் தேவாலயத்திற்கு சென்ற சமயத்தில் வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கியுள்ளதாவும், நாங்கள் வீடு திரும்பிய சமயத்தில் ஒர் அறையில் கடிதமும் மற்றுமொரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டார். அதனையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் வீட்டார் தெரிவித்தனர்

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவை வந்தடைந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர்!!

உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோகபூர்வ  ஜனாதிபதி மக்கள் சேவையின் பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமால் லான்சா மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இன்று (21.10.2017) காலை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதியினால் பாடசாலை வளாகத்தில் மரம் நாட்டல் வைபவத்துடன் ஆரம்பாகி மாணவர்களின் தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!!

 
உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோக பூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவையின் இறுதி நாள் நிகழ்வுகள் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமால் லான்சா மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (21.10.2017) காலை 9.00 மணிக்கு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரில் ஆரம்பமாகவுள்ளது.

அதனையடுத்து வவுனியா மத்திய பேரூந்து நிலையம் , மணிக்கூட்டுச்சந்தி, புகையிரத நிலைய வீதி, நூலக வீதி, பூங்கா வீதி, நகரசபை வீதி, ஏ9 வீதி போன்ற பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் , சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு செல்லும் பாதையனைத்தும் மூடப்பட்டதுடன் அதிகாரிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டடுள்ளது.