வவுனியாவில் கத்திக்குத்து : சம்பவ இடத்திலிலேயே ஒருவர் பலி!!(காணொளி)

 
வவுனியா குடியிருப்பு பூங்கா வீதியில் நேற்று (20.10.2017) இரவு 9.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வாரிக்குட்டியூரை சேர்ந்த கனகராசா (வயது 56) என்பவர் குடியிருப்பு பூங்கா வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் பணிபுரியும் வர்த்தகருக்கு கொடுத்த பணத்தினை மீள்ப்பெற சென்றுள்ளார். அச் சமயத்தில் குறித்த இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. குறித்த வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்திக்குத்தில் முடிவடைந்தது. இதன் போது பணத்தினை மீளப்பெறச் சென்ற கனகராசா சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது குடியிருப்பு பூங்கா வீதிக்கான பாதை முடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் நாளை ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை : நேரில் சென்று பார்வையிட்ட காதர் மஸ்தான்!!

 
நாளை (21.10) வவுனியாவில் நடைபெறவிருக்கும் “நிலமெஹவர” ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவையை முன்னிட்டும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் வருகையை வரவேற்குமுகமாகவும் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவரும் ஏற்பாட்டு வேலைகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஏற்பாட்டு வேலைகளைப் பார்வையிட்டார்.

பாடசாலையில் சத்தி எடுத்தால் கர்ப்பமா? மாணவிக்கு நேர்ந்த அவமானம்!!

கெக்கிராவையிலுள்ள மாணவி ஒருவர் சத்தி எடுத்த காரணத்தினால் அவர் கர்ப்பமாக உள்ளார் என தெரிவித்து வைத்திய பரிசோதனை நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கெக்கிராவையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவி இந்த சம்பவத்தால் உளவியல் ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த மாணவி பாடசாலை நேரத்தில் சத்தி எடுத்த காரணத்தினால் பாடசாலை அதிபர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவினால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி காலை உணவு சாப்பிடாமல் வந்த காரணத்தினால் பாடசாலையில் சத்தி எடுத்துள்ளார். ஆனால் இதை முதலில் தவறாக புரிந்து கொண்டு குறித்த மாணவி கர்ப்பமாக இருப்பதாக பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து குறித்த மாணவியின் பெற்றோரை அழைத்து வந்து குறித்த மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், இதனால் பாடசாலையில் இருந்து விலக்கப்படுவதாகவும் தெரிவித்து கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்கள்.

இதையடுத்து குறித்த பெற்றோர் பாதிக்கப்பட்ட மாணவியை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதித்து அவர் கர்ப்பமாக உள்ளாரா என பரிசோதனை நடத்தியுள்ளார்கள்.

இதன்போது, குறித்த மாணவி எவ்வித பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படவில்லை எனவும், அவர் நலமாக உள்ளார் எனவும், கர்ப்பமாக இல்லை எனவும் தம்புள்ளை வைத்தியசாலையில் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் டாக்டர் காமினி சேனநாயக்க பெற்றோருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

எனினும் இந்த சம்பவத்தில் உளவியல் ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவி தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எனினும் தமது மகள் கல்வியிலும், ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கியதாகவும், தற்போது உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை நினைத்து தாம் கவலையடைவதாகவும் குறித்த மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தாயை தேடிய பிரித்தானிய பெண்ணுக்கு கிடைத்த மகிழ்ச்சி!!

இலங்கையில் தனது தாயை தேடும் பிரித்தானிய யுவதியின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான ஷெரி எசேசன், தனது தாயை தேடி இலங்கை வந்துள்ளார். 1991ஆம் ஆண்டு பிறந்த ஷெரி எசேசன் எனப்படும் குறித்த பெண்ணின் தாய் என நம்பப்படும் பெண் ஒருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய கம்பஹா மாவட்டத்தின் ஆடை தொழிற்சாலை ஒன்றில் சேவை செய்யும் பெண் ஒருவர் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

பிரித்தானிய பெண்ணின் சிறு வயது புகைப்படத்திலுள்ள அவரது தாயாருக்கும் இந்த பெண்ணுக்கு இடையில் பொதுவாக ஒத்து போகும் விடயங்கள் பல உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் ஷெரி எசேசன் இரட்டை பிள்ளைகளில் ஒருவரும் எனவும் தெரியவந்துள்ளது. அவரது மற்றைய சகோதரி தற்போது திருமணம் செய்துள்ளதாகவும், ஷெரி தொடர்பில் அவரது சகோதரிக்கும் ஒன்றும் தெரியாதெனவும் நேற்று சந்தித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இவர் தான் தாய் என்பதை உறுதி செய்வதற்கு டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அனுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய காலத்து புதையல்!!

 
அனுராதபுரத்தில் பெறுமதிமிக்க தொல்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம், உச்சாவாலி விகாரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது பெறுமதியான சில தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிகப்பு நிறத்திலான களிமண் கோப்பையில் இருந்து பல்வேறு சின்னங்களை கொண்ட 325 நாணய குற்றிகள் மற்றும் ஆடைத் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்படுகின்றது.

மத்திய கலாச்சார நிதியிலான திட்டத்தின் மூலம் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில் தொல்பொருள் தொடர்பில் ஆய்வு நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விகாரையின் தாதுகோபுரம் மன்னர் ஒருவரின் உதவியால் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது.

சுவிஸ் பெண்ணை திருமணம் செய்யவிருந்த இலங்கை இளைஞனின் பரிதாபம்!!

இலங்கையின் தென்பகுதியான பேருவளையில் உயிரிழந்த இளைஞனின் உடற்பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் உயிரிழந்த 26 வயதுடைய இளைஞனின் கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகிய உடற் பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த இளைஞர் அடுத்த மாதம் சுவிஸ்ட்சர்லாந்து பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைய ஆயத்தமாகியுள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி இரவு அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

பேருவளை, மொரகல்ல பகுதியை சேர்ந்த சுரேஷ் அபேகுணவர்தன என்ற இளைஞன் வாகன விபத்துக்குள்ளான நிலையில் அவர் மூளைச் சாவடைந்துள்ளார்.

இதனால் அவரது உடற்பாகங்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற மரண விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் தந்தை வாக்குமூலம் வழங்கிய போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

“உயிரிழந்தவர் எனது மகன். எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்மார்கள் உள்ளனர். உயிரிழந்த மகன் மொரகல்லவில பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான விடுதியை நடத்தினார். 17ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் நான் உறங்கி கொண்டிருந்த போது, மனைவி மற்றும் கடைசி மகன் சத்தமாக மூத்த மகன் விபத்துக்குள்ளாகியதாக கூறினர்.

மகனை பார்க்க சென்ற போது அவர் மூளைச் சாவடைந்துள்ளதாகவும், அவர் உயிர் பிழைக்க முடியாதெனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் அவரது உடற்பாகங்களை தானம் வழங்க விருப்பம் என கூறினோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கில் புதிய திருப்பம் : கொலையாளிகளின் வழக்கறிஞரின் புதிய தகவல்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

படுகொலை வழக்கின் குற்றவாளிகளால் உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவு பெற குறைந்தது 5 ஆண்டுகள் வரை செல்லலாம் என குற்றவாளிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார்.

ஐந்து குற்றவாளிகள் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

வித்தியா படுகொலை வழக்கின் மூலப் பிரதிகள் (ஊர்காவற்றுறை நீதிவான் மன்ற வழக்குப் பதிவேடு மற்றும் தீர்ப்பாயத்தின் பதிவேடு) சிங்கள மொழிக்கு மாற்றப்பட வேண்டும். அவை சுமார் 4 ஆயிரம் பக்கங்களைக் கொண்டவை. அதற்காக குறைந்தது ஓராண்டு செல்லும். பிரதம நீதியரசர் 5 நீதியரசர்கள் அடங்கிய தீர்ப்பாய குழாமை நியமிக்க வேண்டும்.

அந்தக் குழாம் வழக்கை முழுமையாகப் படிக்க வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு விடயத்திலும் உள்ள தவறுகளை நாம் சுட்டிக்காட்ட முடியும்.

இவ்வாறான நிலையில் வித்தியா கொலை தொடர்பான இறுதி தீர்ப்பு ஐந்து வருடங்களின் பின்னரே கிடைக்கும் என சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன மேலும் தெரிவித்தார்.

மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய 7 குற்றவாளிகளுக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினால் ஒருமித்த மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மான் ஒன்று காயமுற்ற நிலையில் மீட்பு!!

தேயிலை மலையில் காயமுற்ற நிலையில் இருந்த மான் ஒன்றை பொகவந்தலாவை பொலிஸார் மீட்டுள்ளனர்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சென்மேரிஸ் தோட்ட பகுதியிலே நேற்று (19.10) குறித்த மான் மீட்கப்பட்டுள்ளது.

காயமுற்று தேயிலை மலையில் நடக்க முடியாத நிலையில் இருந்த மானை கண்ட தொழிலாளர்கள் உடனடியாக பொகாவந்தலாவை பொலிஸாருக்கு அறிவித்ததனர்.

மானை மீட்ட பொலிஸார் மிருக வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புகையிரத வீதிகளில் செல்பி எடுத்த 24 பேர் உயிரிழப்பு!!

இந்த ஆண்டின் கடந்த 09 மாத காலப்பகுதியில் புகையிரதம் மற்றும் புகையிரத பாதைகளில் செல்பி எடுக்க முயற்சித்து 24 இளைஞர் யுவதிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

புகையிரதங்களினால் இடம்பெறுகின்ற விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், 2016ம் ஆண்டில், புகையிரத வீதிகளின் ஊடாக பயணிப்பதன் காரணமாக புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட 436 விபத்துக்களில் 180 பேர் உயிரிழந்துள்ளதுடன், 256 பேர் காயமடைந்துள்ளதாக அந்த சபை கூறியுள்ளது.

அதேவேளை புகையிரத குறுக்கு வீதிகளில் புகையிரதங்களுடன் வாகனங்கள் மோதி 84 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன் கடந்த ஆண்டில் புகையிரதத்தில் பயணிக்கும் போது புகையிரதத்தில் இருந்து கீழே விழுந்து 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற புகையிரத விபத்துக்களை குறைப்பதற்காக புகையிரத வீதிகளுக்கு அருகில் வசிக்கின்ற மக்களை தௌிவூட்டுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா கனகராயன்குளத்தில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸ் கைது செய்துள்ளனர்.

கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலை மையில் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி அசேல வழிகாட்டலின் கீழ் பொலிஸ் கோஸ்தபர்களான வீரசிங்க (32535), விஜயசிறி (86791 )ஆகிய பொலிஸாரினால் யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்த சிறிய ரக காரை கனகராயன்குளம் பகுதியில் வைத்து சோதனையிட்ட சமயத்தில் வாகனத்திலிருந்து 9 கிலோ 732 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாகனத்தில் சாரதி உட்பட நால்வரை (வயதுடைய – 28,28,28,33) பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சமயத்தில் குறித்த நான்கு நபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்திரவிட்டார்.

வவுனியா கற்பகபுரம் பகுதியில் வாள்வெட்டு : பத்து வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயம்!!

வவுனியா கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாவெட்டுச் சம்பவத்தில் பத்து வயதுச் சிறுவன் உட்பட ஐவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

நேற்று(19.10.2017) வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம் கிராமத்தில் மரணவீட்டின் 45வது நாளிற்குரிய சடங்கின் போது திடீர் என அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று கண்மூடித்தனமாக வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர்.

இவ் வாள்வீச்சில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வவுனியா மதகுவைத்த குளம் மற்றும் பண்டாரிகுளம் பகுதியிலும் வாள்வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இளைஞர்கள் குழு வாள்வீச்சு : வியாபார நிலையம் சேதம்!!

 
வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வீச்சு சம்பவத்தில் வியாபார நிலையம் ஒன்று உட்பட மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது..

நேற்று (19.10) இரவு 7.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்றே குறித்த வாள் வீச்சினை மேற்கொண்டுள்ளதுடன் மைதானத்தில் நின்ற இளைஞர்கள் மீதும் கண்மூடிதனமான வாள்வீச்சு மேற்கொண்டதில் பலர் காயமடைந்துள்ளனர்

வாள்வீச்சை மேற்கொண்டவர்கள் வீதியில் பயணித்த பொதுமக்கள் மீதும் வாள் வீச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் இரண்டு முச்சக்கர வண்டிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி சாரதி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை வாள்வீச்சை மேற்கொண்டவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதில் குறித்த வியாபார நிலையம் மற்றும் வியாபார நிலையத்திற்கு வந்த நபர் ஒருவருடைய மோட்டார் சைக்கிள் மீதும் வாளால் வெட்டியதில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்துள்ளது

இதேவேளை நேற்று முன்தினம் மதகுவைத்த குளம் பகுதியில் ஏற்பட்ட வாள்வீச்சில் பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாடசாலைக்குள் சென்ற மனநோயாளியால் பதற்றம்!!

வவுனியாவிற்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள இந்நிலையில் ஜனாதிபதியின் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள சைவப்பிரகாச பாடசாலைக்குள் நேற்று காலை திடீரென உள்நுழைந்த மனநோயாளி ஒருவரினால் பாடசாலைக்குள் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிற்கு ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை வருகை தரவுள்ள நிலையில் வவுனியா சைவப்பிராகாச பாடசாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் வவுனியா நகர்ப்பகுதிகளில் உலாவரும் மனநோயாளி ஒருவர் திடீரென பாடசாலைக்குள் உட் சென்றுள்ளார்.

இதையடுத்து கடமையிலிருந்த பொலிசார் உடனடியாக குறித்த மனநோயாளியைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ரொக்கெற் விளையாட்டுக்கழகத்தின் தீபாவளி துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி!!

 
வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக்கழகம் தனது 41வது ஆண்டின் நிறைவை முன்னிட்டும், தீபாவளி தினத்தை முன்னிட்டும் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (18.10.2017) காலை 9.30 மணிக்கு கோவில்குளம் இந்துக் கல்லூரி மைதானத்தில், கோவில்குளம் ரொக்கெட் விளையாட்டுக்ககத்தின் தலைவர் வி.ஜோயல் நிரோஷன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), சிறப்பு அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர் திரு .வையாபுரிநாதன், கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு.வரதராஜா, உடற்கல்வி உதவி ஆசிரியர் திரு.நிரஞ்சன், உடற்கல்வி உதவி ஆலோசகர் திரு.ரவிச்சந்திரன், புளொட் உறுப்பினர் திரு.சங்கர்,
முன்னாள் போசகர் திரு.குமாரசாமி மற்றும் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள், கழகத்தின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இவ் இறுதிப் போட்டியில் லெவன் ஸ்டார் விளையாட்டு கழகம் எதிர் ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக் கழகங்கள் மோதின இதில் லெவன் ஸ்டார் அணியினர் வெற்றி பெற்றனர்.

இப்போட்டியின் இறுதி நிகழ்வில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) சிறு ஊக்குவிப்பு தொகையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதி மறுப்பு : மகளைப் பறிகொடுத்த தந்தை கதறல்!!

பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் தன் மகளை அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்று தந்தை ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவின் புறநகர் பகுதியில் இருந்து ஆறு நாட்களாக கடும் காச்சலால் அவதிப்பட்டுவரும் தமது மகளை அழைத்துக் கொண்டு தந்தை ஒருவர் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் குறித்த சிறுமியை சிகிச்சைக்காக அனுமதிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதால், சிறுமி உயிரிழந்துள்ளதாக அவரது தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திலேயே சிறுமி இறந்ததாகக் கூறப்படுவதால், இந்த விடயம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இறந்த சிறுமியின் தந்தை அம்புலன்ஸ் வசதி கேட்டும் மருத்துவமனை நிர்வாகத்தால் மறுக்கப்பட்டதால், தன் தோளிலேயே சடலத்தைத் தூக்கிச் சென்றுள்ளார்.

இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் பிரபாத் கே.சிங், என்ன விடயம் நடந்தது என்பதே சரியாகப் புரியவில்லை. சிறுமி குறித்து மருத்துவமனையில் யாரும் அறிந்திருக்கவில்லை.

பின்னர், எப்படி இந்தக் குற்றம் சுமத்தப்படுகிறது. எனக்கு அந்த சிறுமி இறந்தது குறித்து சந்தேகம் உள்ளது.

மருத்துவமனையில் மிக நீண்ட வரிசை இருப்பதைப் பார்த்து, அவர் தந்தை திரும்பச் சென்றதால், அந்த சிறுமி இறந்தாரா என்று எண்ணத் தோன்றுகிறது’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் இந்த மனிதாபிமானமற்ற பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வடகொரியா ஏவுகணையால் குறிவைத்திருக்கும் நாடுகள் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

வடகொரியா அதன் அண்டை நாடுகளின் முக்கிய நகரங்களையும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகளையும் குறிவைத்து தமது ஏவுகணை பலத்தை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிம் பரம்பரையில் சக்தி வாய்ந்த தலைவராக திகழும் கிம் ஜோங் வுன் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் வடகொரியாவை சக்தி வாய்ந்த ஏவுகணைகளாலும் அணு ஆயுதங்களாலும் பலப்படுத்தி வந்துள்ளார்.

கடந்த யூலை 4 ஆம் திகதி வடகொரியா முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது. அதன் பின்னர் தொடர்ந்து ஏவுகணை சோதனையை முன்னெடுத்து வரும் வடகொரியாவால் மூன்றாம் உலக யுத்தம் உருவாகலாம் என்ற நிலை உச்சத்தில் எட்டியது.

மட்டுமின்றி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதங்கள் உலக யுத்த சாத்தியத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இதனிடையே வடகொரியாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உலகின் முக்கிய நகரங்களை குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் போர் குறித்து ஆராயும் நிபுணர்களிடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் சோவித் அரசால் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்கட் ஏவுகணை தான் வடகொரியாவின் பலம் என தெரிய வந்துள்ளது. 1980களில் எகிப்தில் இருந்து இதன் சூட்சுமங்களை பெற்றுக் கொண்ட வடகொரியா, பின்னர் அதனை அடிப்படையாக கொண்டு Hwasong-5, Hwasong-6, Hwasong-7 மற்றும் Hwasong-9 போன்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நான்கு வகை ஏவுகணைகளை உருவாக்கி சாதித்தது.

குறித்த ஏவுகணைகளால் சர்வ சாதாரணமாக 1000 கி.மீ தூதம் கடந்து சென்று துல்லியமக தாக்க முடியும். இதனால் தென் கொரியாவின் பல முக்கிய நகரங்கள், ஜப்பானின் இரண்டாவது பெரிய நகரமான ஒசாகா ஆகியவை கடும் அச்சுறுத்தலின் பிடியில் உள்ளன.

மட்டுமின்றி அமெரிக்காவின் சர்வ வல்லமை பொருந்திய THAAD அமைப்பையே தவிடுபொடியாக்கக் கூடிய Scud–C MaRV மற்றும் Scud–B Marv ஆகிய ஏவுகணைகளும் வடகொரியா வசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் அடுத்த ஆயுதம் பாலிஸ்டிக் ஏவுகணைகள். இவர் துல்லியமாக 2000 கி.மீ தூரம் துல்லியமாக சென்று தாக்கக் கூடியவை.

இதனால் ஜப்பானின் மற்றும் தென் கொரியாவின் முக்கிய நகரங்கள், மங்கோலியாவின் கீழில் உள்ள பிரதேசங்கள் மட்டுமின்றி வடகொரியாவின் நட்பு நாடான சீனா மற்றும் ரஷ்யா வரை பாலிஸ்டிக் ஏவுகணைகளைலால் தாக்குதல் நடத்த முடியும்.