இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!!

கையடக்கத் தொலைபேசிகளை தாக்கக்கூடிய புதிய வைரஸ் (ரென்ஸம் வேயார்) ஒன்று தற்போது வேகமாக பரவி வருவதாக இலங்கை கணிணி அவசர பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணிணி அவசர பிரிவின் பிரதம பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசியின் ஊடாக இணையத்தளத்திற்கு பிரவேசிக்கும் போது, பிளேஸ் பிளேயர் புதுப்பிப்பதற்கான கோரிக்கையொன்று விடுக்கப்படுவதாக கூறிய அவர், அதனை புதுப்பிக்க முயற்சிக்கும் பட்சத்தில் கையடக்கத் தொலைபேசிக்குள் வைரஸ் தாக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் தாக்கத்தின் ஊடாக கையடக்கத் தொலைபேசியிலுள்ள தரவுகள் முடக்கப்படுவதாகவும், அதனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நிதி செலுத்த வேண்டியுள்ளதாகவும் ரொஷான் சந்திரகுப்த மேலும் கூறினார்.

கையடக்கத் தொலைபேசியின் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு மென்பொருள் ஆகியன புதுப்பிக்கப்படுவதன் ஊடாக இவ்வாறான வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளமுடியும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

வவுனியாவில் பாணிற்குள் துருப்பிடித்த ஆணி!!

 
வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் விற்பனை செய்த பாணிற்குள் துருப்பிடித்த ஆணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய (18.10) இடம்பெற்றுள்ளது.

வியாபார நிலையத்தில் பாணினை வாங்கி வீட்டில் சென்று அதனை வெட்டிய போதே துருப்பிடித்த நிலையில் ஆணி ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பாணை வாங்கிய நபர் வியாபார நிலையத்தில் அது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேக்கரி உரிமையாளருக்கு தெரியப்படுத்திய போது, உரிமையாளர் அது தொடர்பில் பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் குறித்த வியாபார நிலையத்தில் பெறப்பட்ட பாண் ஒன்றில் இருந்து நீளமான பச்சை நூல் கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு சென்ற மற்றுமொரு யாழ். இளைஞன் பரிதாபமாக பலி!!

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்ற தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இந்தோனேஷியா அகதிகள் தடுப்புமுகாமில் வாழ்ந்துவந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 36 வயதான ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் என்ற இளைஞனே வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து, தமிழகத்திலுள்ள அகதிமுகாமொன்றில் சில காலம் வாழ்ந்து வந்தார். படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலுள்ள தடுப்பு முகாமொன்றில், கடந்த சில வருடங்களாக தங்கவைக்கப்பட்டிருந்தார்.

ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் ஒரு உண்மையான அகதி என அகதிகளுக்கான அமைப்பு (UNHCR) அடையாளம் கண்டிருந்தது.

ஜோன்சனை மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த நிலையில், வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவின் குடும்பத்தினர் தமிழகத்தில் வாழ்ந்து வருவதால், அவரது உடலை அங்கு அனுப்புவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தோனேஷியாவிலேயே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கடலில் மிதந்து வந்த அதிசய பொருள் : இத்தனை கோடி ரூபா பெறுமதியா?

கற்பிட்டி கடற்பரப்பில் இறந்த நிலையில் மிகப்பெரிய திமிங்கிலத்தின் உடல் ஒன்று கரையொதுங்கியிருந்தது.

60 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட Spaem well என்ற பெயரில் அடையாளப்படுத்தும் திமிங்கிலத்தின் உடலே கரையொதுங்கி இருந்தது.

குறித்த திமிங்கலம் ஆழ்கடலில் இருந்த ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் மிதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

திமிங்கலத்தின் உடலை கரைக்கு கொண்டு வர சுமார் 300க்கும் அதிகமானோர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த திமிங்கிலத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக பெறுமதியுடனான அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தி இந்த திமிங்கிலத்திடமும் காணப்படும் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

60 அடி திமிங்கிலத்தில் அம்பர் எனப்படும் வாந்தி காணப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திமிங்கிலங்களின் செரிமான பகுதியில் அம்பர் உற்பத்தியாகின்றது. அது வாந்தியாக வெளியேறும்.

மிகவும் அரிய வகையில் கிடைக்கும் இந்த அம்பர் பல கோடி ரூபா பெறுமதி கொண்டதாகும். பிரபுக்கள் பயன்படுத்தும் வாசனை திரவியங்களுக்கு விசேட பொருளாக அம்பர் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது.

பிரேத பரிசோதனையின் பின்னர் அம்பர் தேடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இதே கடற்பரப்பில் பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கலத்தின் அம்பர் எனப்படும் வாந்தி மீட்கப்பட்டிருந்தது.

கோடிக்கணக்கான பெறுமதியான அம்பரை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் : சாதிக்க வேண்டியவர்கள் சடலமாக!! 

முல்லைத்தீவு பெருங்கடலில் நீச்சலில் ஈடுபட்ட ஏழு மாணவர்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏனைய ஐந்து மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

பெரும் அலையில் சிக்கிய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மீட்கப்பட்ட ஏனைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் 17 மற்றும் 18 வயதுடைய கிளாட்டஸ் வினோசன் மற்றும் அன்ரன் அமல்ராஜ் டினோசன் ஆகிய மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் அன்ரனி கிளாட்டஸ் வினோசன் (குரூஸ் வயது 18) என்பவரது சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றையவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அன்ரனி கிளாட்டஸ் வினோசன் குரூஸ் என்னும் மாணவன் 2018ஆம் ஆண்டு வர்த்தக பிரிவில் உயர்தர பரீடசைக்கு தோற்றவுள்ளார்.

முல்லைத்தீவு மணற்குடியிருப்பை சேர்ந்த கிளாட்டஸ் வினோசன், முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றார்.

படிப்பில் மிகவும் திறமையான மாணவனாக திகழ்ந்த இவர் உயர்தர பரீட்சையில் மிகவும் நல்ல பெறுபேறுகளை பெறக் கூடியவர் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அன்ரன் அமல்ராஜ் டினோசன் முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.

மட்டக்களப்பு இரட்டைக் கொலை : சந்தேகநபர்களை அடையாளம் காட்டிய மோப்ப நாய்கள்!!

மட்டக்களப்பு – ஏறாவூர், புன்னக்குடா பகுதியில் உள்ள வீடொன்றில் தாயும், மகனும் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் 27 வயதுடைய தாயும், 11 வயது மகனும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மோப்ப நாய்கள் இருவரை அடையாளம் காட்டிய நிலையில், குறித்த இருவரிடமும் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பெயரில் மூவரும் கைது செய்யபடுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த இரட்டை கொலை தொடர்பான தீவிர விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

என் சகோதரியைக் கொன்றது என் கணவனே : சகோதரி அதிரடி வாக்குமூலம்!!

இருபத்து இரண்டு வயது இளம் நாட்டுப்புறப் பாடகியான ஹர்ஷிதா தாஹியா நேற்று முந்தினம் (17.10) மாலை மர்ம நபர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹரியானாவைச் சேர்ந்த இவர், பானிபட் அருகே கிராமம் ஒன்றின் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் வீடு திரும்பியுள்ளார். அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஹர்ஷிதாவின் காரை வழிமறித்தனர். கார் சாரதி மற்றும் ஹர்ஷிதாவின் சக பாடகி உட்பட காரில் இருந்த மூவரையும் பலவந்தமாக இறக்கிய அவர்கள், ஹர்ஷிதாவைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர். அதில், சம்பவ இடத்திலேயே ஹர்ஷிதா உயிரிழந்தார்.

இந்நிலையில், ஹர்ஷிதாவின் சகோதரி லதா, தனது சகோதரியைக் கொன்றது தனது கணவனே என்று அதிரடி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

லதாவின் கணவரான தினேஷ், தற்போது திஹார் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஹர்ஷிதாவை வல்லுறவுக்கு உட்படுத்தியபின் அவரது தாயாரையும் கொலை செய்தார் தினேஷ்.

எமது தாயைக் கொலை செய்ததற்கு எனது சகோதரியே ஒரே சாட்சி. அதனால்தான் அவரை எனது கணவர் கொலை செய்திருக்கவேண்டும்” என்று லதா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் காணாமல் போன மூன்று இளம் யுவதிகள் : காதலன் உள்ளிட்ட நால்வர் கைது!!

கொழும்பு – கொலன்னாவ பகுதியில் ஆடை வாங்கச்சென்று காணாமல் போன இளம் தாய் உள்ளிட்ட மூன்று யுவதிகளும் பொலிஸில் சரணடைந்துள்ளார்கள்.

இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமியின் காதலர், மற்றும் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் தாய், சிறுமியை தங்க வைத்த குற்றச்சாட்டுக்காக இரு பெண்கள் என மொத்தம் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கடத்தப்பட்டதாக கூறப்படும் மூன்று யுவதிகளில் முற்பகல் இருவரும் பிற்பகல் வேளையில் ஒருவருமாக மூன்று யுவதிகள் பொலிஸில் சரணடைந்துள்ளார்கள்.

முதலில் 19 வயதுடைய இளம் தாய் மற்றும் அவரின் கணவருடைய 15 வயதுடைய சகோதரி ஆகியோர் முற்பகல் வேளையில் பொலிஸில் சரணடைந்திருந்தார்கள்.

இதில் 14 வயதுடைய சரித்ரா ஸ்வேதா என்ற தமிழ் சிறுமி திரும்பி வராத நிலையில், பிற்பகல் வேளையில் அவரும் கம்பஹா பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இவர்களில் இளம் தாய் மற்றும், அவருடன் சரணடைந்த 15 வயதுடைய சிறுமியின் காதலன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 19 வயதாகிய வத்சலா பெரேரா மற்றும் அவருடைய கணவனின் தங்கையின் காதலன் உள்ளிட்ட இருவரையும் முதலில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து தமிழ் சிறுமியான ஸவேதாவை வீட்டில் தங்க வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பொலிஸில் சரணடைந்த 15 வயதுடைய சிறுமி மற்றும் 14 வயதுடைய சிறுமி ஆகியோரை வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலன்னாவை பகுதியில் கடந்த 14 ஆம் திகதி ஆடை வாங்கச் சென்று மூன்று யுவதிகள் காணாமல் போயிருந்தார்கள். இவர்களை பொலிஸார் மற்றும் குடும்பத்தினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று மூவரும் பொலிஸில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் கழுத்தை அறுத்து பாடசாலை ஆசிரியர் படுகொலை!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று கழுத்தை அறுத்து பள்ளி ஆசிரியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கட்டிபோரா பகுதியை சேர்ந்தவர், அய்ஜாஸ் அஹமது லோனே.

பள்ளி ஆசிரியராக பணியாற்றிவந்த இவரது வீட்டில் கடந்த வாரம் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் அளித்ததாக சந்தேகித்த தீவிரவாதிகள் இன்று காலை அய்ஜாஸ் அஹமது லோனேவின் கழுத்தை அறுத்து தீவிரவாதிகள் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் மெர்சலுக்கு கிடைக்கும் பெருமை!!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு, ஜப்பானில் எந்த தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத பெருமை கிடைக்க இருக்கிறது.

விஜய்யின் மெர்சல் படம் உலக தமிழர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால் என மூன்று நாயகிகள், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா என படம் முழுவதும் நிறைய பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 18ம் திகதி வெளியாக இருக்கிறது.

ஜப்பானில் வரும் அக்டோபர் 20 ஆம் திகதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை ஜப்பானில் வெளியிடும் உரிமையை ‘ஸ்பேஸ்பாக்ஸ் ஜப்பான்’ (SPACEBOXJAPAN) எனும் நிறுவனம் பெற்றுள்ளது. அனைத்து தமிழ் படமும் ஜப்பானில் உள்ள யொகோயமா (Yokoyama) மற்றும் டோக்கியோ (Tokyo) ஆகிய இரண்டே ஏரியாக்களில் மட்டுமே வெளியிடுவார்கள்.

ஆனால் முதன் முறையாக ஸ்பேஸ்பாக்ஸ் ஜப்பான் நிறுவனம் நகோயா (Nagoya), ஒசாகா (Osaka), குன்மா (Gunma) போன்ற நகரங்களில் மெர்சல் திரைப்படத்தை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் ஜப்பானில் வெள்ளிக்கிழமையே வெளியாக போகும் முதல் தமிழ் படமும் இதுதானாம்.

வவுனியா “குண்டு தோசை” முதலிடம்: தேசிய மட்டத்திற்கு தெரிவு!!

உலக உணவு தினத்தினை முன்னிட்டு உள்நாட்டு உயிர்ப்பல்வகைமையின் ஊடாக போசணை மிக்க உணவுகள் எனும் தலைப்பின்கீழ் தேசிய உணவு கொண்டாட்டம் நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

கண்னொருவையில் அமைந்துள்ள தாவர கரு மூல வள நிலையத்தில் மத்திய விவசாய அமைச்சு ஊடாக குறித்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது உள்நாட்டு உணவு உற்பத்தியில் ஈடுபடும் உணவு உற்பத்தியாளர்களிடையே இரண்டு வகையாக மாவட்ட மட்ட போட்டிகள் நடைபெற்று இரண்டு போட்டியாளர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

வேர்க்கிழங்கு பயிர்கள் மற்றும் தானியப்பயிர்களிலான பெறுமதி சேர் உணவு தயாரிப்பில் கூமாங்குளம், அம்பாள் விவசாய பெண்கள் அமைப்பினைச் சேர்ந்த இராசலிங்கம் கலாநிதி என்பவர் குண்டு தோசை தயாரிப்பில் தேசிய மட்டத்திற்கு தேர்வாகியுள்ளார்.

பழங்கள், மரக்கறிகள் மற்றும் இலைமரக்கறிப் பயிர்களிலான பெறுமதி சேர் உணவு தயாரிப்பில் கூமாங்குளம், அம்பாள் விவசாய பெண்கள் அமைப்பினைச் சேர்ந்த சந்திரசேகரம் செந்தில்மணி என்பவர் வெள்ளரிப்பழத்தில் இருந்து தரமான பழக்கலவை பானம் தயாரிப்பில் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டத்திற்கு தேர்வாகியுள்ளார்.

குறித்த போட்டியாளர்களை வழிநடத்தி சென்ற வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்கள மகளிர் விரிவாக்க உத்தியோகத்தர் அல்ஜின் குருஸிற்கும், போட்டியாளர்களுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வறட்சி காரணமாக 17 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

18 மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் அதிகபடியாக 288,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியால் குருநாகல் மாவட்டத்தில் 252,000 பேரும் திருகோணமலையில் ஒரு இலட்சத்து 78 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் வறட்சி நிலவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்கள் கால்பந்து போட்டியின் முதல் பெண் நடுவர்!!

பிபா U-17 ஆண்கள் கால்பந்து போட்டியில் முதல் பெண் நடுவராக பணியாற்றி ஸ்விட்சர்லாந்தின் எஸ்தர் ஸ்டப்லி சாதனை படைத்துள்ளார்.

பிபா U-17 ஆண்கள் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் உள்ள விவேகானந்த யூபா பாரதி கரான்கன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இதில் ஜப்பான் மற்றும் நியூ கலிடோனியா அணிகள் மோதின.

இந்த விளையாட்டின் போது முதல் முறையாக எஸ்தர் ஸ்டப்லி நடுவராக இருந்தார். ஆண்கள் கால்பந்து போட்டியில் பெண் நடுவராக இருந்தது இதுவே முதல் முறையாகும்.

ஸ்டப்லி பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். அவர் நடுவராக களம் இறங்கிய இந்த ஆட்டமானது 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. இந்த தொடருக்கு 7 பெண் நடுவர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் 7 பேருக்கும், பிபாவில் பணியாற்றும் அனைவருக்கும் கால்பந்து குறித்து செய்முறை வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து எஸ்தர் பேசுகையில், ‘‘ஆண்கள் கால்பந்து போட்டியில் நடுவராக பணியாற்றியது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

ஆனால் சாதரணமான போட்டியாக நினைத்து நான் பணியாற்றினேன். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஆண்கள் போட்டியில் நடுவராக இருந்ததில் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை’’ என அவர் கூறினார்.

எஸ்தர் இதற்கு முன் பிபா பெண்கள் உலக கோப்பை-2015, பெண்கள் சாம்பியன்ஷிப் லீக் – 2015 மற்றும் ரியோ ஒலிம்பிக் – 2016 தொடர்களில் நடுவராக பணியாற்றி உள்ளார்.

இலங்கையில் தமிழ் மாணவனுக்கு கிடைத்த உயரிய அந்தஸ்து!!

 
சம்மாந்துறை – கோரக்கர் கோயில் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற மாணவருக்கு “இலங்கை கண்டுபிடிப்பாளர்” என்ற அரச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்தவினால் குறித்த விருது நேற்று (16.10) வழங்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்திலும் சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரியிலும் பயின்ற இவர் தற்போது யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இவருக்கு அனைத்து அரச ஆராய்ச்சி அலுவலகங்களிலும் இலவசமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், இலவச அரச போக்குவரத்து வசதிகள், இலவச மருத்துவ சேவை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விஞ்ஞான கண்காட்சி போட்டிகளில் பங்குகொள்வதற்கான வசதிகள் மற்றம் கண்டுபிடிப்புக்களை வர்த்தக மயப்படுத்துவதற்கான உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான மன்றத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகவும் தேசிய விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆணைக்குழுவினால் இளம் விஞ்ஞானி என்ற அரச அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா கிறீன் கார்ட் விசா தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி!!

அமெரிக்காவில் கிறீன் கார்ட்க்கு விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொழில்நுட்ப இடர்களால் தடைப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான பல்வகைப்பட்ட வீசா நிகழ்ச்சி, (DV – 2019 நிகழ்ச்சி) விண்ணப்ப காலம் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்ப படிவங்களை நேர்மையான முறையில் கையாள்வதற்கே DV – 2019 நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கிறீன் கார்ட் விண்ணப்பதாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2017.11.22ஆம் திகதி வரை இந்த திட்டத்திற்கான விண்ணப்பப்படிவங்கள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும், அதற்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுக்காலத்தில் மற்றும் ஒரு விண்ணப்பமே அனுப்பி வைக்கப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சி தொடர்பான அறிவுறுத்தல்களை ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்கள இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளமுடியும் என்று அமரிக்க தூதரகம் அறிவித்துள்ளது

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய கணவன் : இளம் மனைவி தற்கொலை!!

பல நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றுள்ள நிலையில் மீளச் செலுத்தும் தவணை நாளுக்கு முன்னைய தினம் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், இதில் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான செல்வம் யோகேஸ்வரி (26 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிராமங்களில் மக்களை தேடிச் சென்று நுண் கடன் நிதி வழங்கும் சில நிறுவனங்களிடம் இருந்து இவர் கடன் பெற்றுள்ளார்.

இதேவேளை, கட்டார் நாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றிருந்த அவரது கணவன் மாதாந்தம் குடும்பச் செலவுக்காக ஒரு தொகைப் பணமும் அனுப்பிக் கொண்டிருந்துள்ளார்.

கணவன் அனுப்பும் அந்தப் பணத்திலிருந்தே இதுவரை காலமும் பல நிறுவனங்களிடமிருந்தும் தான் பெற்ற கடனுக்கான தவணைப் பணத்தைச் செலுத்தி வந்துள்ளார்.

இதனிடையே கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற கணவன் அங்கிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் தவணைப் பணத்தைச் திருப்பிச் செலுத்த முடியாமல் மனைவி திண்டாடியுள்ளார்.

அவ்வேளையில், இப்பெண் உறவினர்கள் பலரிடம் கடன் தவணைப் பணத்தைச் திருப்பிச் செலுத்துவதற்காக கடன் கேட்டும் உறவினர்கள் எவரும் பணம் கொடுக்க முன்வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் இன்றைய தினம் சுமார் 25 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை கடன் தவணைப் பணமாகத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில், உடற் கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகைளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-தமிழ்வின்-