வவுனியா ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் கடந்த 13.10.2017 அன்று மதியம் புதிய சின்னகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கும் நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள் வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்தது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சின்னப் புதுக்குளம் பகுதியை சேர்ந்த 15 நபர்களையும் நொச்சிமோட்டையை சேர்ந்த 5 நபர்களையும் ஒமந்தை பொலிஸார் நேற்றையதினம் (15.10.2017) கைது செய்து இன்று (16.10.2017) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய சமயத்தில் குறித்த 20 நபர்களையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்று உயிரிழந்த யாழ். மீசாலை தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் ராஜிப் என்பவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவருடைய சடலம் நேற்று (15) இரவு சிங்கப்பூரிலிருந்து எஸ்.கிவ்.468 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இன்று பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், மரணமடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பிரேத பரிசோதனையில் இருந்து தெரிய வந்ததாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மரணமடைந்தவரின் உடற்பகுதி மேலதிக விசாரணைக்காக பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்றிருந்த ராஜேந்திரன் ராஜிப்(32 வயது) என்ற இளைஞர் கடந்த இரண்டாம் திகதி பப்புவா நியுகினியா தடுப்பு முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், பல தடைகளுக்கு மத்தியில் இவருடைய சடலம் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொலன்னாவை – சாலமுல்ல பிரதேசத்தில் உடை வாங்கச் சென்ற மூன்று இளம் பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் மாலிதி வத்சலா பெரேரா, யசாந்தி மதுசானி வயது – 15, மற்றும் சஜித்ரா வயது 14 என்போரே காணாமல் போயுள்ளனர்.
இவர்களில் மாலிதி வத்சலா பெரேரா திருமணமாகியவர் எனவும், அவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த சனிக்கிழமை (14ஆம் திகதி) உடை வாங்க கடைக்குச் சென்றதாகவும், இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பெண்களை காணாமல் குடும்பத்தினர் மிகவும் கவலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், காணாமல் போன பெண்களில் ஒருவரான யசாந்தி மதுசானியின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போதும், குறித்த அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்களை யாரேனும் கடத்தி இருக்கக்கூடும் என பெற்றோர் சந்தேகம் வெளியிட்டதுடன், வெல்லம்பிட்டி பொலிஸில் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்திவெளியில் குடும்பப் பெண்ணொருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்திவெளி சிவன் கோயில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான செல்வன் புவனேஸ்வரி (வயது 30) எனும் குடும்பப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஏறாவூர் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக தீபாவளியினை முன்னிட்டு இன்று (16.10.2017) காலை 9.00 மணி தொடக்கம் 5.00மணி வரை சமுர்த்தி வர்த்தக கண்காட்சி இடம்பெற்றது.
இவ் வர்த்தக கண்காட்சியினை வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா மற்றும் சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திருமதி ச. பத்மரஞ்சன் ஆரம்பித்து வைத்தனர்
வர்த்தக கண்காட்சியில் மரக்கறி , பழவகை , பலசரக்கு பொருட்கள், ஆடை , அணிகலன்கள், சிற்றுண்டிவகை , புதிய பழச்சாறு என பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெறும் நடமாடும் சேவையில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி நடமாடும் சேவையை இந்த ஆண்டு மூன்று இடங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் முதலாவது ஜனாதிபதி நடமாடும் சேவை பொலனறுவையிலும், இரண்டாவது நடமாடும் சேவை காலியிலும் நடைபெற்ற நிலையில் மூன்றாவதும், இவ்வாண்டின் இறுதியுமான நடமாடும் சேவை எதிர்வரும் 21ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து
அத்துடன், வன்னிப் பகுதியில் வசிக்கும் 5,000 மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், திவிநெகும திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கு வாழ்வாதார உதவியும், இளைஞர்களின் தொழில் முயற்சிக்காக ஆயிரம் பேருக்கான உதவித் திட்டங்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும், அடையாள அட்டை, கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், காணி உறுதிப்பத்திரம், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நகாப்பகுதிகளில் நேற்று முதல் ஒட்டப்பட்டுள்ள சுரரொட்டிகளை வவுனியா வர்த்தகர் சங்கம் வன்மையாகக்கண்டித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற வர்த்தகப்பிரமுகர்களுடனான சந்திப்பையடுத்தே இன்று (16.10) வவுனியா வர்த்தகர் சங்கம் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் அனைத்து இன மத மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் வவுனியா நகர்ப்பகுதிகள் எங்கும் சில விஷமிகளினால் சிவசேனா என்ற அமைப்பின் பெயரைப்பயன்படுத்தி அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன செயலானது மக்களிடையே இன முரன்பாடுகளையே தோற்றுவிக்கும் இச் செயற்பாட்டினை வவுனியா வர்த்தகர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளதாக அவர்களின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டமட்ட முதியோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட சமூகசேவை அலுவலகத்தால் நடாத்தப்பட்டுவரும் பொதுஅறிவு வினாடிவினாவின் இறுதிப்போட்டியில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியை எதிர்த்து பண்டாரிகுளம் விபுலானந்தாக்கல்லூரி போட்டியிடவுள்ளது.
வவுனியா பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதியோர் விழுமியப்பண்புகளை உணர்த்தவும் பொது அறிவுத்தேடலை அதிகப்படுத்தவும் மாவட்ட சமூகசேவை அலுவலகம் வருடாந்தம் முதியோர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் நடாத்துகின்ற பொது அறிவு வினாடி வினாப் போட்டி இன்று (16.10.2017) வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் இரண்டாம் சுற்றுப்பொட்டி நடைபெற்றது.
முதல் சுற்றுப் போட்டிகளில் பல பாடசாலைகள் பங்குபற்றி இரண்டாம் சுற்றுக்கு 8 அணிகள் தெரிவாகின.
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வவுனியா மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி , விபுலானந்தாக்கல்லூரி, நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம், பாவற்குளம் கனேஸ்வரா வித் தியாலயம் , பூவரசங்குளம் மகாவித்தியாலயம், புதுக்குளம் மகாவித்தியாலயம் ஆகியன இன்று கால் இறுதிப் போட்டிகளில் பங்குபற்றின.
இதில் விபுலானந்தாக்கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம் என்பன அரைஇறுதிக்கு தெரிவாகின.
அரை இறுதிப்போட்டியில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியுடன் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. பண்டாரிகுளம் விபுலூனந்தாக்கல்லூரி நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்துடன் போட்டியிட்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
மூன்றாம் இடத்தை சைவப்பிரகாச மகளிர் கல்லூரி கலைமகள் வித்தியாலத்துடன் போட்டியிட்டு பெற்றுள்ளது.
இறுதிப்போட்டி மாவட்டமட்ட முதியோர் விழா அன்று வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டிகளை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் நெறிப்படுத்த மத்தியஸ்தர்களாக எஸ்.கே.வசந்தரூபன், தி.கலைவாணி திரு. நிப்ராஸ் ஆகியோர் கடமையாற்றினர் .
வவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் புதிய அரசியலமைப்பு உருவாக்க குழுவின் ஏற்ப்பாட்டில் இன்று (16.10.2017) காலை 10 மணியளவில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு இடம்பெற்றது.
சட்டத்தரணி விரிவுரையாளர் திருமதி.கோசலை மதன் அவர்களின் இடம்பெற்ற இச் செயலமர்வில் ஆசிரியர்கள் , அக்கினி சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்கள், அஸ்திரம் அமைப்பின் உறுப்பினர்கள், ரெலோ அமைப்பின் உறுப்பினர்கள், சேக்கிழார் மன்றத்தின் உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள், சமுக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அரசியலமைப்பு தொடர்பான பல்வேறு வினாக்கள் எழுப்பப்பட்டதுடன் அதற்கு சட்டத்தரணி தீர்க்கமான பதில்களை வழங்கினார்.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (16.10.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட சுதந்திரக் கட்சியில் அமைப்பாளர் உபாலி கிரிபத் துடுவவிற்கு இலங்கை போக்குவரத்து சபையினரின் ஏற்ப்பாட்டில் வரவேற்பு நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
வவுனியா மத்திய பேரூந்து நிலையில் மாலை அணிவித்து கௌரவிப்பு செய்யப்பட்டதுடன் நடைபவணியாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் வவுனியா சாலையில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் விவசாய அமைச்சர் துமிந்த சில்வாவின் செயலாளர் அஜித் களுவராட்சி, வன்னி பிராந்திய இ.போ.ச ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
கடந்த 12.10.2017 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கை போக்குவரத்து சபை வட பிராந்திய பிரதான பிராந்திய முகாமையாளர் உபாலி கிரிபத்துடுவவை வவுனியா மாவட்ட சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வாழவைத்தகுளம் தாருல் ஈமான் குர் ஆன் மதரஸாவின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு நேற்று ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய கேட்போர்கூட மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மாணவர்களது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் மதாஸாவில் கற்றுக்கொண்ட குர் ஆன் மனனம், ஹதீஸ்கள், இஸ்லாமிய கலைச்சொற்கள் மனனம் என்பவற்றுடன் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலான நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் மதரஸாவினால் வைக்கப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் பணப்பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் குறித்த குர் ஆன் மதரஸாவை தனியொருவராக நடாத்தி மாணவர்களுக்கு மார்க்க கல்வியுடன்
பாடசாலை கல்வியையும் வழங்கும் மதரஸாவின் தலைவரும் செட்டிகுளம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தருமான மௌலவி டி.எஸ். சாஜித் (காசிமி)க்கு பெற்றோர்களால் கௌரவம் வழங்கப்பட்டது.
குர் ஆன் மதரஸாவின் தலைவர் டி.எஸ். சாஜித் (காசிமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட முஸ்லிம் விவாகப்பதிவாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான டி.எம். சாஜிதீன் கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினராக கிராமத்தின் முதலாவது சட்டத்தரணி நூர்தீன் சர்ஜூன் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக வாழவைத்தகுளம் மஸ்ஜிதுத் தௌஹீத் ஜும்மா பள்ளியின் தலைவர் உட்பட கிராமத்தின் ஆசிரிய ஆசிரியைகள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பிரபல பாடசாலை ஆசிரியரொருவர் மது போதையில் அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தி வந்துள்ளதுடன் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில் பொலிஸார் அவரை விரட்டிச் சென்று பிடித்துள்ளதுடன் குறித்த சம்பம் நேற்று நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியரை, பாடசாலையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் சோதனை செய்வதற்காக பொலிஸார் வழிமறித்துள்ளனர்.
இதன்போது அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ள நிலையில் பொலிஸார் அவரை விரட்டிச் சென்று பிடித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அவர் மதுபோதையில் காணப்பட்டுள்ளதுடன், சாரதி அனுமதிப்பத்திரம் அவரிடம் இருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நேற்று மாலை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
இதன்போது பதில் நீதவான் குறித்த ஆசிரியரை ஒரு நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும், இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது 5000 அடி பள்ளத்தில் விழுந்த பக்தரின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை நீலியாம்பட்டி கிராமத்தில் 4500 அடி உயரம் கொண்ட தலைமலையில் பிரசித்தி பெற்ற சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இங்கு வரும் பக்தர்கள் கரடு, முரடான மலைப்பாதையில் ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெருமாளை வேண்டிக்கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணத்தடை அகலும், குடும்பம் செழிப்படையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மலை உச்சியில் உள்ள கோயிலின் சுற்றுப்பிரகார விளிம்பில் 2 அடி அங்குலம் உடையச் சுவரை பிடித்துக் கொண்டு பக்தர்கள் கிரிவலம் செல்வதுண்டு.
இந்த நிலையில் நேற்று கிரிவலம் சென்ற இளைஞர் ஒருவர் 5000 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோயில் நிர்வாகத்துக்கும், காவல் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எருமைப்பட்டி காவல் துறையினர் நேற்று முதல் இளைஞரின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
இருப்பினும் அந்த இளைஞரை மீட்பதில் சிக்கல் நீடித்தது. இரவு நேரமானதாலும் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது.
இந்நிலையில், மலையடிவாரத்தில் இளைஞரின் உடல் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்திய விசாரணையில், அந்த நபர் பெரியார் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் என்றும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தையில்லாததால், குழந்தை வரம் வேண்டி கிரிவலம் வந்ததும் தெரியவந்தது.
நாய்கள் தங்கி ஓய்வெடுத்து சாப்பிடுவதற்காக மட்டும் ஜேர்மனியில் ஒரு ஹொட்டல் செயல்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் மேற்கு ஜேர்மனியில் அமைந்துள்ளது Paradiso என்ற பெயரிலான ஹொட்டல். இது மற்ற ஹொட்டல்களை போல மனிதர்களுக்கானது அல்ல.
நாய்கள் தங்குவதற்காக மட்டும் Paradiso ஹொட்டல் செயல்படுகிறது. நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் செல்லப்பிராணியை இங்கு விட்டு சென்றால் அவர்கள் திரும்பி வரும் வரை பாதுகாக்கப்படுகிறது.
வசதியான படுக்கைகள், சோபாக்கள் போன்றவைகளும் இங்கு போடப்பட்டுள்ளன. Paradiso ஹொட்டலின் உரிமையாளர் பெயர் Pino.
நாய்களோடு மிக அன்பாக பழகும் Pino தன் ஹொட்டலில் தங்கும் நாய்களை தினமும் நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் செல்லப்பிராணியுடன் தங்க அனுமதிக்கப்படுவதில்லை, அவர்கள் வேறு இடத்தில் தங்கி கொள்ள வேண்டும் என்பது Paradiso ஹொட்டலின் விதியாக உள்ளது.
இந்தியாவில் கோயில் கோயிலாக சென்று பிச்சை எடுத்து வாழப்போகிறேன் என்று ரஷ்ய சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ (24) என்ற இளைஞரது ATM Pin Lock ஆன காரணத்தால், தமிழக காஞ்சிபுர கோயிலில் பிச்சையெடுக்க ஆரம்பித்தார்.
இவரை அழைத்த பொலிசார் சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தபோதும், அங்கு செல்லாமல் பிச்சை எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தியாவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்குள்ள கோயிலில் கை நீட்டினால் எல்லோரும் பணம் கொடுக்கின்றனர். நான் ரஷ்யா செல்ல மாட்டேன்.
இந்தியாவிலேயே இருக்கப்போகிறேன். என்னிடம் நிறைய பேர் பேசுகின்றனர். பணம் கேட்டால் உடனே கொடுக்கின்றனர். என்னுடன் செல்பி எடுக்க 10 ரூபாய் கேட்டால், உடனே கொடுத்து விடுகின்றனர். என்னை பேட்டி எடுக்க நீங்களும் பணம் கொடுக்க வேண்டும். நான் இந்தியா வந்தபோது ரூ.4 ஆயிரம் மட்டுமே வைத்திருந்தேன். இப்போது அதைவிட அதிகமாக பணம் வைத்திருக்கிறேன். இந்தியாவில் பிச்சை எடுத்து வாழ முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப் பயணத்திற்கு சென்ற பிரித்தானியர் ஒருவர் அங்குள்ள கோவில் ஒன்றைப் படம் பிடிக்கும் போது கீழே தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.
பிரித்தானியரான Roger Stotesbury(58) அவரது மனைவியுடன் ஓராண்டு நீண்ட சர்வதேச சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் சில ஆசிய நாடுகளுக்கும் சென்று அங்குள்ள சுற்றுலா தலங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களது வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.
பயணத்தின் ஒருபகுதியாக இந்தியாவின் பழமையை தெரிந்து கொள்ளவும், இந்தியாவின் கட்டிடக் கலையை ரசிக்கவும் இந்தியாவிற்கு வந்துள்ளனர். முதல் கட்டமாக வட மாநிலங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ஒரு புகைப்படங்கள் எடுப்பதற்காக மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஆர்ச்சா என்ற நகரத்தில் அமைந்துள்ள லக்ஷ்மி நாராயனண் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலின் கட்டிடங்களை தான் எடுக்கும் ஆவணம் படம் ஒன்றிற்காக வீடியோ எடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் கோவிலின் மேல் பகுதியில் இருந்து, அந்த நகரம் எப்படி இருக்கிறது என்பதை வீடியோ எடுப்பதற்காக மேலே ஏறியுள்ளார்.
அப்போது அங்கிருந்து அவர் செல்பி எடுத்த போது கீழே பார்க்காமல் அப்படியே நடந்த அவர் கால் தவறி மாடியில் இருந்து 30 மீற்றர் கீழே விழுந்திருக்கிறார். இதில் காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அவரது மனைவி அந்த இடத்திலேயே மயக்கமுற்று சரிந்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் லண்டனுக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.