வவுனியா நகரில் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் : சிவசேனா அமைப்பு மறுப்பு!!

வவுனியா நகரின் பலவிடங்களிலும் ஒட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளுக்கும் சிவசேனா அமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இலங்கை சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிவசேனை வெளியிட்டதாக கூறப்பட்ட சுவரொட்டிகளை இன, மத முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. எந்தத் தொழில் செய்பவருக்கும் எத்தகைய வாடிக்கையாளர், பயனாளி கிடைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நோக்கம் சிவ சேனாக்குக் கிடையாது.

ஒரு பொருள் வணிக நிறுவனத்துக்கு விற்பனைக்கு வரும்முன் உற்பத்தி / விளைச்சல் நிலையிலிருந்து நுகர்வோரை அடைய முன் பல கைகள் மாறியே வருகிறது. அந்தக் கைகளுள் எந்த இன பேதமும் இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. தரமான பொருளை, நியாயமான விலையில் வாங்க எண்ணும் நுகர்வோருக்கு சந்தைப் போட்டியே உதவும்.

இன, மத வேறுபாடுகள் சார் நிலை உதவாது. மத மாற்றத் திணிப்பை முடிந்தளவு தடுக்க வேண்டும், சைவத் தமிழ் வழிபாட்டிடங்களில் பிற சமய ஊடுருவல்களை முடிந்தளவு தடுக்க வேண்டும், சைவத்தமிழ் நலன்களைப் பேணும் கொள்கையை முன் வைக்கும் சைவத் தமிழ் வேட்பாளர்களுக்கே சைவத் தமிழர் வாக்களிக்க வேண்டும். இவையே சிவ சேனாவின் கொள்கைகள். நோக்கங்கள். வேறு நோக்கங்கள் சிவசேனாக்குக் கிடையாது.

வவுனியாவில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சிவ சேனாவினுடையதல்ல. விஷமத்தனமான இம் முயற்சியைச் சிவசேனா அமைப்பு கண்டிக்கிறது. இந்துக்கள் இத்தகைய முயற்சிகளுக்குக் கைகொடார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வவுனியாவின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் இந்துத் தமிழர்களே! தீபாவளியை நமது இந்துத் தமிழ்க் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டாடுங்கள். பிற மதக் கடைகளில் பொருட்களை பண்டிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டாடுவதைத் தவிருங்கள். இந்துத் தமிழ் வர்த்தகர்களே உஷாராகுங்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகளின் கீழ் ‘சிவசேனா’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 13 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!!

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து சிறுமியின் தந்தை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஈச்சங்குளம் பகுதியில் வசித்து வந்த இந்த சிறுமியின் நடத்தைத் தொடர்பில் அவரது தாயார் சந்தேகம் கொண்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் இது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், சிறுமிக்கு உடல் பலவீனமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் திருப்தியடையாத தாயார், வவுனியா மருத்துவ மனைக்கு கடந்த வியாழக்கிழமை சிறுமியை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தாய் கூலிவேலைக்கு செல்லும் நாட்களில் வேலை முடிந்து வீட்டில் நின்ற நேரங்களில் தந்தையால் இந்த சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுமியின் தாய் முறைப்பாடு செய்திருந்தார் இதனடிப்படையில், 39 வயதுடைய சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

சோமாலியாவில் லொறி குண்டுத் தாக்குதல் : 230 பேர் பலி!!

 
சோமாலியா தலைநகர் மொகாதிஷுவில் சற்று முன் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் சுமார் 230 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் ஒன்றின் முற்புறம், முழுவதும் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட லொறியொன்று வெடிக்கச் செய்யப்பட்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டது முதல் சிறிது நேரத்துக்கு அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கட்டடங்கள் என்பனவற்றில் தீ பரவியதாகவும், கடும் முயற்சியின் பின் அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, மதீனாவில் நடத்தப்பட்ட மற்றொரு குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதல்கள் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. எனினும், இங்கு அல் கைதா மற்றும் அல் ஷாபாப் ஆகிய இரண்டு இயக்கங்களின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதால், இவ்விரு இயக்கங்களில் ஒன்று இத்தாக்குதல்களை அரங்கேற்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

யாழில் 9 வயது சிறுமி பரிதாபமாக மரணம்!!

யாழ்ப்பாணத்தில் சுகவீனம் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது வயதான கே.சரா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ் புனித ஜோன் போஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகிறார். கடந்த சில நாட்களாக டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த சரா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து காணப்பட்டதால், தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மேலதிக சிகிச்சைக்கு அன்றைய தினமே உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறுமியின் உயிரிழப்பால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் பயங்கரம் : ஒருவர் படுகொலை!!

ஓடும் ரயிலில் நடந்த மோதல் சம்பவமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இருவருக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலின் போது ஒருவர் மற்றைய நபரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டுள்ளார். இவ்வாறு தள்ளிவிடப்பட்ட நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ராகம ரயில் நிலையத்திற்கும் ஹொரப்பே ரயில் நிலையத்திற்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸ்ஸ நோக்கிப் பயணித்த ரயிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் அடையாளம் காணப்படவில்லை எனவும், சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத் தக்கவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேதவறையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரை ரயிலிலிருந்து தள்ளிவிட்ட நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டெங்கு காய்ச்சல் காரணமாக 390 பேர் உயிரிழப்பு!!

மழையுடனான வானிலையை அடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு செயலனியின் ஆலோசனை பிரகாரம் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 158, 854 பேர் டெங்கு காய்யசளால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அதில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 390 பேர் உயிரிழந்துள்ளனர்.

தன் குழந்தைகளின் தாயை மணந்தார் பென் ஸ்டோக்ஸ்!!

இங்கிலாந்தின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் நேற்று முன்தினம் தனது நெடுநாள் காதலியும் தனது இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான க்ளேர் ரெட்க்ளிஃப்பை திருமணம் முடித்தார்.

இங்கிலாந்தின் சம்மர்செட் நகரில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் ஜோ ரூட், ஸ்டுவர்ட் ப்ரோட் மற்றும் அலிஸ்டேர் குக், இயொன் மோர்கன், க்ரஹெம் ஒனியன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

திருமண நிகழ்வின்போது ஸ்டோக்ஸின் வலது கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருபத்தாறு வயதான ஸ்டோக்ஸ், கடந்த மாதம் பிஸ்டலில் உள்ள இரவு விடுதி ஒன்றின் வெளிப்புறம் மற்றொருவரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அன்றைய தினம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

கைது செய்யப்பட்ட ஸ்டோக்ஸ், மறுநாள் (27) எந்தவித குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டார். எனினும், சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சம்பவம் குறித்த முழுமையான விளக்கத்தை நேரம் வரும்போது ஸ்டோக்ஸ் வெளிப்படையாக அறிவிப்பார் என்று அவரது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா செல்லவுள்ள குழுவுடன் புது மாப்பிள்ளை பென் ஸ்டோக்ஸ் பயணிக்கப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரது பெயர் இன்னும் ஆஷஸ் தொடருக்கான வீரர்களின் பட்டியலில் இருந்து விலக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட குடும்பம் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்பு!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2012ம் ஆண்டு பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்கா-கனடா நாட்டு குடும்பத்தினரை பாகிஸ்தான் ராணுவம் அதிரடியாக மீட்டது.

கனடாவை சேர்ந்த ஜோசுவா பாயல் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கெயித்லான் கோல்மேனை திருமணம் செய்திருந்தார். இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்தபோது தலீபான் ஆதரவு பெற்ற ஹக்கானி பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அப்போது கெயித்லான் கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த தம்பதி கடந்த 5 ஆண்டுகளாக பிணைக்கைதிகளாக சிறைவைக்கப்பட்டு இருந்தனர். இடையில் அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வந்த அமெரிக்க படைகளால், தம்பதியினர் சிறைவைக்கப்பட்டு இருந்த இடத்தை கண்டறிய முடியவில்லை.

இந்த நிலையில் ஜோசுவா -கெயித்லான் தம்பதியையும், அவர்களது 3 குழந்தைகளையும் பயங்கரவாதிகள் கடந்த 11ம் திகதி குர்ரம் பள்ளத்தாக்கு வழியாக பாகிஸ்தானுக்குள் கொண்டு சென்றதை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்தது. உடனே இது குறித்த விவரங்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து அதிரடியாக களத்தில் இறங்கிய பாகிஸ்தான் ராணுவத்தினர், பயங்கரவாதிகளுடன் தீவிர சண்டையிட்டு பாயல் குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தின் போது பாயலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக எங்கே மறைத்து வைக்கப்பட்டு இருந்தனர் என்பது தெரியவில்லை. எனினும் பாகிஸ்தானின் வடமேற்கே உள்ள ஹக்கானி குழுக்களின் தலைமையகம் அல்லது அதற்கு அருகே உள்ள பகுதிகளில் சிறைவைக்கப்பட்டு இருந்திருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் நாட்டு குடிமக்களை பாகிஸ்தான் ராணுவம் மீட்டு இருப்பது அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் ஹக்கானி குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாகிஸ்தானை கடுமையாக கண்டித்து இருந்த டிரம்ப், இது ஒரு ‘நேர்மறையான நடவடிக்கை’ என பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹக்கானி குழுக்களின் ஆதிக்கம் நிறைந்த பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தேவையான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் விருப்பத்துக்கு மரியாதை அளிக்கும் அறிகுறியாக பாகிஸ்தானின் இந்த ஒத்துழைப்பு அமைந்துள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை மூலம் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு இருந்த அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகள் விரைவில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவை திருப்திபடுத்தவே இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் ஆர்வம் காட்டியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சிசுவின் சடலத்தை கவ்விச் சென்ற நாய்!!

நுவரெலியா, சினிசிட்டா மைதானத்திலிருந்து நேற்று காலை 11 மணியளவில் சிசுவொன்றின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாயொன்று சிசுவின் சடலத்தை கவ்விக் கொண்டு செல்லும் போது அதனை முச்சக்கரவண்டி சாரதியொருவர் அவதானித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பம் தொடர்பில் அவர் நுவரெலியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

எனினும், சிசு யாருடையது என்பது தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பிரேத பரிசோதனைகளுக்கா சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா விநாயகபுரம் சிவம் அறநெறிப் பாடசாலையின் விசேட ஒன்றுகூடல்!!

 
வவுனியா விநாயகபுரம் சிவம் அறநெறிப் பாடசாலையின் விசேட ஒன்றுகூடல் நேற்று (15.10.2017) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அறநெறி மாணவர்களின் பஞ்ச புராண இசைத்தலுடன் ஒன்றுகூடல் நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது விசேட விருந்தினராக கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவரும் வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் இணைப்பாளருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் கலந்து சிறப்பித்தார்.

இங்கு சேவை அடிப்படையில் கற்பித்து வரும் ஆசிரியருக்கும் இதன்போது கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரால் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் விசேட விருந்தினராக வருகைதந்திருந்த பா.சிந்துஜன் தன் சார்பில் தனிப்பட்ட கொடுப்பனவொன்றினையும் வழங்கி வைத்தார்.

தொடந்து கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.செல்வம் மற்றும் அறநெறி ஆசிரியரால் அவர்களினால் அறநெறி கல்வி பற்றியும் சைவசமய சிறப்பு பற்றியும் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

லண்டன் பாலத்தில் வைத்து மூவர் மீது கத்தி குத்து தாக்குதல்!!

லண்டன் Bridge station பகுதியில் 3 இளைஞர்கள் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

லண்டன் நேரப்படி இன்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். மோதல் ஒன்றின் பின்னரே இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

20 வயதிற்கு உட்பட மூவரே இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடன் அட்டைகளை பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!!

கடன் அட்டைகளின் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியினால் கடன் அட்டைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த உச்ச அளவிலான கடன் வட்டி வீதம் நீக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இந்த கடன் வட்டி வீதம் 24 ஆக காணப்பட்டது. மத்திய வங்கி இந்த உச்ச வரம்பினை நீக்கியிருப்பதனால் நிதி நிறுவனங்கள் வங்கிகள் வட்டி வீதத்தை தங்களுக்கு நினைத்தவாறு அதிகரிக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு இடையில் போட்டி நிலவி வருவதனால் பாரியளவில் வட்டி வீதம் உயர்த்தப்படக்கூடிய சாத்தியமில்லை என நிதிச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

லொறி குடை சாய்ந்து விபத்து!!

 
எனுமிடத்தில் நேற்று மாலை லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். மழை பெய்து கொண்டிருந்தபோது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறி வீதியை விட்டுவிலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் லொறியைச் செலுத்திச் சென்ற சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் சிறு காயங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை லொறிக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

10 வருடங்களாக தனது கணவர் மற்றும் மகனை தேடி அலைந்த பெண் மரணம்!!

காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரையும், மகனையும் கடந்த 10 வருடங்களாக தேடி அலைந்து, ஏக்கத்துடன் காணப்பட்ட மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் நேற்று உரியிழந்துள்ளார்.

கொழும்பில் 2008 ஆம் ஆண்டு வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கச் செய்யப்பட்ட மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த ரொசான்லி லியோனின் தாயாரும் அமலன் லியோனின் மனைவியுமான ஜெசிந்தா பீரீஸ் (வயது-55) என்பவரே மாரடைப்பால் உயிரிழந்தார்.

கடந்த 10 வருடங்களுக்கு முன் கொழும்பில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர்அமலன் லியோன் மற்றும் மகன் ஆகியோரை குறித்த தாய் தேடி வந்தார்.

இந்த நிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பில் கடற்படையின் இரகசிய முகாமில் கண்டெடுக்கப்பட்ட 12 அடையாள அட்டைகள் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த சேர்ந்த அமலன் லியோன் மற்றும் அவரது மகனான ரொசான்லி லியோன் ஆகியோரது அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக குறித்த தாய் நீண்ட காலமாக கொழும்பு சென்று வந்துள்ளார். பல வருடங்களாக இடம் பெற்று வந்த குறித்த விசாரணைகளுக்கு சென்று வந்த குறித்த தாய் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

தனது கணவர் மற்றும் மகன் காணாமல் போனமை தொடர்பில் குறித்த தாய் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு, காணாமல் போன தமது உறவுகளை மீட்டு தருமாறு அரசிற்கு அழுத்தத்தை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் வியப்பில் ஆழ்த்திய அதிசயப் பெண்!!

 
மூளையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணொருவரின் பிந்திய செயற்பாடுகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

புற்றுநோயில் இருந்து முற்றாக குணமடைந்துள்ள இலங்கை பெண் ஒருவர், கழிவு பொருட்களை பயன்படுத்தி வாழ்க்கையை வெற்றிகரகமான முன்னெடுத்து செல்வதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிடடுள்ளது.</p><p>குண்டசாலை வராபிட்டிய பகுதியை சேர்ந்த ஜுட் ஹேவாகே வன்னிய என்ற பெண் தொடர்பிலேயே செய்தி வெளியாகியுள்ளது.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையின் தாயான ஜுட், மூளையில் மூன்றாவது சத்திரகிசிச்சைக்கு முகங்கொடுக்க நேரிட்டது. எனினும் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள மறுத்த ஜுட், மரணத்தை எதிர்கொள்ள தயாரானார்.

2014ஆம் ஆண்டு மஹரகம வைத்தியசாலையில் இரு முறை சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னரே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

புற்றுநோயினால் உடலில் ஏற்பட்ட மாற்றத்துடன் மகளை பார்க்க விரும்பாதவர் சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னரும் 7 மாதங்கள் கண்டி புற்றுநோய் பிரிவில் வாழ்ந்துள்ளார்.

“அந்த காலப்பகுதியில் தொலைவில் இருந்தே மகளை பார்த்தேன் என ஜுட் தெரிவித்துள்ளார்.”2016ஆம் ஆண்டு வைத்தியசாலையில் இருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறிய ஜீட் மற்றுமொரு சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளார். அது வாழ்வதற்கான சிக்கலாகும்.

‘நான் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு வரும் போது என்னால் ஒழுங்கான முறையில் நடக்க முடியாது. உதவியுடனே நடந்தேன். சற்று கண் தெரியாமலும் போனது. வீட்டருகில் இருந்தவர்களின் உதவி கிடைத்த போதிலும் தினமும் அவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என ஜீட் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கழிவுப் பொருட்கள் தொடர்பில் ஜுட் திடீரென அவதானம் செலுத்தியுள்ளார். வர்த்தகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நிதி இல்லாத நிலையில் உறவினர்கள் வீடுகளில் கிடைத்த கழிவு பொருட்களான பிலாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன்களை வீட்டிற்கு கொண்டு வந்து அதன்மூலம் கைப்பணிகளை ஆரம்பிக்க ஜுட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அவ்வாறு வடிவமைத்த பொருட்களை விற்பனை செய்வதற்கு ஆரம்பித்துள்ளார். அதற்கமைய அந்த பகுதியில் இடம்பெறும் நிகழ்வுகளின் போது அதனை விற்பனை செய்து வந்துள்ளார்.

மாநாகர சபையில் கழிவு பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு ஜுட் முயற்சித்துள்ளார். அதற்கமைய கண்டி நகர சபை குப்பைகள் அனைத்து ஜுட்டின் நிர்மாணிப்புகளாகியது. அதில் நல்ல பலனை அனுபவித்த ஜுட் தனது திறமையை மேலும் பலருக்கு கற்பிப்பதற்கு ஆரம்பித்தார். தற்போது அவரது வாழ்க்கை ஒரு முன்னேற்கரமான பாதையில் செல்வதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம் : பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிபாக நில்வளா கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி, பாலிந்தநுவர, புலத்சிங்கள, ஹொரனை, பத்தேகம மற்றும் தவலம பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அவதானம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பிரதேசங்கள் மற்றும் மத்திய மலைநாட்டு பகுதிகளில் பெய்யும் அதிக மழை காரணமாக களு, கிங் மற்றும் நில்வளா கங்கை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நெழுவ மற்றும் எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவின், மலை பகுதிகளில் வாழும் மக்களை அங்கியிருந்து வெளியேறுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று காலை 8.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் அதிக மழை இரத்தினபுரியில் பெய்துள்ளதாகவும், அது 123.8 மில்லிமீற்றராக பதிவாகியுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.