சோகங்களை கடந்து வாழ்வில் முன்னேறிய நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை கதை!!

மதுரையை சேர்ந்த நடராசன், சரோஜினி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வடிவேலு தனது சிறுவயதில் இருந்தே பள்ளிக்கூடமே செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு நாடகங்களில் நகைச்சுவை நடிகர் வேடமிட்டு நடித்து அசத்துவாராம்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக வடிவேலுவின் அப்பா மரணம் அடைய, வடிவேலுவின் குடும்பம் மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டது. அதன் பின் மதுரையில் புகைப்படங்களுக்கு ஃபிரேம் மாட்டும் ஒரு சிறிய கடையில் வடிவேலு வேலை செய்து வந்தாராம்.

வடிவேலுவின் ஊருக்கு ஒருமுறை ராஜ்கிரண் சென்றிருந்த போது, நடிகர் ராஜ்கிரணுடன் வடிவேலுக்கு அறிமுகம் கிடைத்ததாம்.

அந்த உறவின் பலனாக சென்னையில் ராஜ்கிரண் வீடு மற்றும் அலுவலகத்தில் வடிவேலு பணிபுரிந்து வந்தாராம். பின் வடிவேலுவின் நடிப்பு திறனை கண்ட ராஜ்கிரண், என் ராசாவின் மனதிலே எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.

முதல் படத்திலேயே போடா, போடா புண்ணாக்கு என்ற பாடலையும் பாடினாராம் வடிவேலு. அதன் பின்பு செந்தில், கவுண்டமணியுடன் சேர்ந்து சிறுசிறு நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார்.

வடிவேலு தனது நகைச்சுவை மிக்க திறமையை நடித்து நிலைநாட்டிய படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் ஆகும். இதன் பிறகே தனி முதன்மை நகைச்சுவை நடிகராக வடிவேலு பிரபலமாக ஆரம்பித்தார்.

1990களின் இறுதிகளில் இருந்து, 2000 துவக்கத்தின் முதலாக அசைக்க முடியாத நகைச்சுவை நடிகராக வடிவேலு உருமாறினார்.

தனது ஆரம்பக் கால வாழ்க்கையின் ஏழ்மை நிலையை மறக்காத வடிவேலு, தனது மகனுக்கு சிவகங்கையில் கூரை வீட்டில் வசித்து வந்த ஒரு ஏழை பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளாராம்.

அவுஸ்திரேலிய வீரர்களின் பேருந்து மீது தாக்குதல்: பொறுப்பாக இருங்கள் என அஸ்வின் ஆவேசம்!!

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள பாரஸ்பரா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து விடுதிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் பேருந்தின் கண்ணாடியில் ஒன்று உடைந்து சிதறியுள்ளது. எதிர்பார்க்காத தாக்குதலை அடுத்து அவுஸ்திரேலிய வீரர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் தாக்குதலுக்கு உள்ளான பேருந்தின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளாரான அஸ்வின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நமது நாட்டிற்கு வரும் விருந்தினர்களை மதிப்பு, மரியாதையுடன் வரவேற்கும் பண்பு கொண்டவர்கள் நாம். அவுஸ்திரேலியா அணி பஸ் மீது கற்களை வீசியது மிகவும் மோசமான செயல். பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். நம் மக்களிடம் நிச்சயமாக இந்த பண்பு நிறைய உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெட்டவார்த்தையில் திட்டியதால் கொலைசெய்த நபர்கள்!!

அரியலூர் மாவட்டத்தில் லொறி ஓட்டுநர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் காவல் நிலையத்தில், எதற்காக இந்த கொலையை செய்துள்ளோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கிளாட்வின் என்ற லொறி உரிமையாளர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தியதில் தலைமறைவாக இருந்த லொறி ஓட்டுநர்களான சிவகுமார் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், லொறி உரிமையாளர் கிளாட்வின் திருட்டு மணல் எடுத்து விற்பனை செய்துவந்தார். எங்கள் இருவரால் அவருக்கு அதிக வருமானம் கிடைத்தது. நாங்கள் கடுமையாக உழைத்ததால் அவர் அதிக பணம் சம்பாதித்தார்.

நாங்கள் இருவரும் இரவு பகலாக உழைக்கிறோமே, எங்களுக்குச் சம்பளத்தை உயர்த்தித் தரக் கூடாதா என்று கேட்டோம். அதற்கு அவர், நீங்க பார்க்கிற வேலைக்கு உங்களுக்கு சம்பளத்தை ஏத்தி தரனுமானு கெட்டவார்த்தையில் திட்டினார்.

அந்த வார்த்தை எங்களைக் கோபப்படுத்தியது. கிளாட்வினுக்கு யாரும் கிடையாது, இதனால் அவரை கொலை செய்துவிட்டு, லொறியை நாங்கள் கைப்பற்றிவிடலாம் என முடிவு செய்தோம்.

நாங்கள் திட்டமிட்டபடியே கிளாட்வின்னை அழைத்துச் சென்றோம். ஜெயங்கொண்டத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தாண்டியதும் கிளாட்வினை கொன்றுவிட்டு முந்திரித் தோப்பில் புதைக்க லொறியை ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது லொறி பழுதாகி திருக்களப்பூர் என்ற இடத்தில் நின்றுவிட்டது.

எவ்வளவோ முயற்சி செய்தும் லாரியை எடுக்க முடியவில்லை. பொழுது விடிந்தால் நாங்கள் மாட்டிகொள்வோம் என்று பயந்துகொண்டு உடலை தார்பாயிலில் சுற்றி வைத்துவிட்டு ஓடிவிட்டோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

12 வயது சிறுமிக்கு நடந்த கட்டாய திருமணம் : பேஸ்புக் உதவியால் வெளிவந்த உண்மை!!

கடந்த 2010ல் 12 வயது சிறுமி ஒருவருக்கு கட்டாய திருமணம் நடந்த நிலையில், அந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுசீலா (19). இவரை கடந்த 2010-ல் 12 வயதில் அவரின் குடும்பத்தார் நரேஷ் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் சுசீலா தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடம் சுசீலாவுக்கு 18 வயதாகிய நிலையில் அவர் பள்ளிக்கு செல்வதை நிறுத்திய குடும்பத்தார் கணவர் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

சுசீலா குடும்பத்தாரிடம் தன்னை அனுப்பாதீர்கள் என கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து வீட்டிலிருந்து தப்பிசென்ற சுசீலா கிருதி பாரதி என்ற உளவியலாளரிடம் அடைக்கலம் தேடி சென்றுள்ளார்.

கிருதி, சுசீலாவை காப்பகம் ஒன்றில் தங்க வைத்த நிலையில் அவருக்கு நடந்த கட்டாய திருமணம் செல்லாது என அறிவிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம் சார்பில் சுசீலாவை திருமணம் செய்த நரேஷிடம் விசாரிக்கப்பட, அவர் தனக்கு திருமணமே ஆகவில்லை என முதலில் கூறியுள்ளார்.

பின்னர் நரேஷின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில் சுசீலாவை திருமணம் செய்தது குறித்த அவரின் பதிவு அதில் இருந்ததோடு, அவரின் நண்பர்கள் சிலர் திருமணத்துக்கு சென்றதும் தெரியவந்தது.

இந்த சாட்சிகளை வைத்து நீதிமன்றம் சுசீலாவுக்கு நடந்த கட்டாய திருமணம் செல்லாது என தற்போது தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து, தனது படிப்பை தொடர முடிவெடுத்துள்ள சுசீலா வருங்காலத்தில் பொலிஸ் அதிகாரி ஆவேன் என கூறியுள்ளார்.

ஆதரவற்ற நோயாளியை குப்பைத் தொட்டியில் வீசிய மருத்துவமனை!!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு மாதமாக சிகிச்சை பெற்று வந்த ஆதரவற்ற முதியவரை அந்த மருத்துவமனை ஊழியர்கள் குப்பை தொட்டியில் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் தெரியாத நபர் ஒருவர், ஆதரவற்ற நிலையில் இரண்டு மாதமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவரின் நிலை மிகவும் மோசமாக இருந்ததாலும், படுத்த படுக்கையிலேயே இயற்கை உபாதைகள் சென்றதாலும் அவரை பராமரிக்க யாரும் முன்வரவில்லை.

இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பை மேட்டில் இன்று காலை அவரை ஊழியர்கள் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து, குப்பை தொட்டி அருகே வீசப்பட்ட நபரை, மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையே நோயாளியை குப்பை மேட்டில் வீசி சென்ற சம்பவம் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழனை போற்றும் பிரித்தானிய நாளிதழ் : காரணம் என்ன தெரியுமா?

 
சவுத் வேல்ஸ் மற்றும் லிவர்பூல் ஆகிய பகுதிகளில், மருத்துவராக கடமையாற்றி வரும் குணசேகரன் குமார் எனும் மருத்துவரை, பிரித்தானிய நாளிதழொன்று சிறந்த ஒரு மனிதராக கெளரவித்துள்ளது.

குறித்த நாளிதழ் பல உயிர்களை காத்த கடவுள் என அவரை குறிப்பிட்டுள்ளதுடன், இதுவரை சுமார் 2,000 பேரது உயிரை காப்பாற்றியுள்ள மருத்துவர்கள் தர வரிசையில் அவரது பெயரும் இடம்பிடித்துள்ளது. இந்த விடயம் அனைத்து தமிழர்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேல்சில் நிறைமாத கர்பிணியாக இருந்த தாய் ஒருவர் காரில் செல்லும் போது பெரும் விபத்தில் சிக்கியுள்ளார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றவேளை அங்கே பணியில் இருந்த குணசேகரன் உடனே அறுவை சிகிச்சை செய்து பிள்ளையை வெளியே எடுத்துள்ளார்.

பிறந்து சில நிமிடங்களே ஆன அந்த சிசுவுக்கு, மார்பில் பிரச்சினை இருப்பதை உடனே கண்டுபிடித்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் சுமார் 7 மணி நேர அறுவை சிகிசை செய்து தாயாரையும் காப்பாறியுள்ளார்.

வெறோனிக்கா, ஜோன்ஸன் என்னும் குறித்த பெண் கூறுகையில், என் உயிரை எனக்கு திருப்பி தந்த நபர் குணசேகரன் என்றும், அவர் தலை சிறந்த ஒரு மருத்துவர் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நானும் எனது பிள்ளையும், எமது வாழ்க்கையையே அவருக்கு அர்ப்பணித்தாலும், அவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த ஒரு பெருமிதமும் இன்றி, குணசேகரன் மிகவும் சாதாரணமாக காணப்படும் ஒரு மருத்துவர் என்பதுடன், அவர் பல முதுகலைகளை கற்று, பிரித்தானியாவில் அதி உச்ச தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தபால் நிலைய ஊழியருக்கு ஜனாதிபதியின் கைகளால் கிடைத்த விருது!!

 
வடக்கு மாகாணத்தில் அதிக வருமானம் சேர்த்ததால் அஞ்சல் சேவையாளராக வவுனியா தபால் நிலைய ஊழியர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொலன்நறுவையில் கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய உலக அஞ்சல் தின நிகழ்வின் போது அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு ஜனாதிபதி விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

வவுனியா தபாலகத்தில் கடமையாற்றும் எஸ்.மனோகரன் என்ற தபால் உத்தியோகத்தரே வடக்கு மாகாண மட்டத்தில் சிறந்த அஞ்சல் சேவையாளராக தெரிவு செய்யப்பட்டு முதல் நிலை விருதை பெற்றுள்ளார்.

இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் : மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த ஆபத்து காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
காற்றழுத்தம், வளிமண்டலத்தில் குழப்ப நிலை போன்றவைகள் எதிர்வரும் நாட்களில் ஏற்பட கூடும் எனவும், அதன் ஊடாக எந்த ஒரு நாட்களிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மழை பெய்ய கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த மாதம் இலங்கையின் வெப்ப மண்டலத்தில் அழுத்தம் ஏற்பட கூடும் என்பதனால் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இலங்கையர்களின் 1.5 கிலோ தங்கம் பறிமுதல்!!

கோவை விமான நிலையத்தில் வைத்து இலங்கையர்கள் மூவரிடம் இருந்து 1.5 கிலோ கிராம் எடையுடைய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து கோவை சென்ற விமானத்தில், விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த மூவரும் அணிந்திருந்த மற்றும் துணிகளுக்கு இடையில் மறைத்து வைத்திருந்த 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க வரி செலுத்தாமையின் காரணமாக இந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உரிய சுங்க வரி மற்றும் அபராத தொகையை செலுத்தினால் மீளவும் நகைகள் கையளிக்கப்படும் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 2.3 வீதமாக அதிகரித்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா, கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, உக்ரைன், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 9 மாதத்தில் 15,51,000-இற்கும் அதிகமானோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஐந்து பேய்களை அடித்துக் கொன்ற மலாவி மக்கள்!!

ஆபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்திய நாடான மலாவியின் தென் பகுதியில் இரத்தக் காட்டேரிகள் போன்று தம்மை உருவகப்படுத்திக் கொண்டு மக்களை அச்சுறுத்தி வந்த ஐவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், மனித இரத்தத்தை குடிக்கும் பேய்களின் நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவல்களையடுத்து மலாவியின் தென்பகுதியில் நிலைகொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை தனது உத்தியோகத்தர்களை அவசரமாக வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்திய நாடுகளில் ஒன்றான மலாவியில் பேய்கள் தொடர்பான வதந்திகள் அண்மைக்காலமாக அதிகமாக பரப்பப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்த பேய் அச்சம், முலான்ஜே மற்றும் பலொம்பி ஆகிய நகர மக்களையே அதிகமாக பாதித்துள்ளன.

பேய், மந்திர ஜாலங்களினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் இறப்புக்களை தவிர்க்கும் பொருட்டு மலாவி அரசாங்கம் இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. இதன் படி அங்கு இரவு 7 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரை 10 மணித்தியால ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளது.

மனிதர்களில் இரத்தத்தை குடிக்கும் இரத்தக்காட்டேரிகள் என அழைக்கப்படும் பேய்களிடமிருந்து தம்மையும் தமது அயலவர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மலாவியின் தென்பிராந்திய மக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து இரவு நேரங்களில் காவல் கடமைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த மக்களிடம் இரத்தக்காட்டேரிகளை போல் வேடம் தரித்து மக்களை அச்சுறுத்தி வந்த ஐவர் வசமாக சிக்கிக்கொண்டுள்ளனர்.

அச்சம் பீதி காரணமாக கடும் ஆத்திரம் மற்றும் விரக்தியில் இருந்த மக்கள் தம்மிடம் சிக்கிய 5 பேய்களையும் நையப்புடைத்ததால் அவர்கள் உயிரிழந்தும் உள்ளனர்.

இதேவேளை கடந்த 2002 ஆம் ஆண்டும் இதேபோன்று திடீரென பரவிய பேய்கள் தொடர்பான வதந்திகளால் மலாவியில் தென்பகுதிகளில் கலவரங்களும் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இம் முறை பேய்கள் தொடர்பான அச்சங்கள் எவ்வாறு பரப்பப்பட்டன என்பது தொடர்பில் தெளிவான விபரங்கள் எவையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எனினும் பேய் பிசாசுகளின் அச்சம் காரணமாக மலாவியின் தென்பிராந்தியத்தில் கடமைகளில் ஈடுபடுத்தியிருந்த தமது அதிகாரிகளை அவசர அவசரமாக ஐக்கிய நாடுகள் சபையும் மீள அழைத்துக்கொண்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் வாகன விபத்தில் பலி!!

 
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலியின் சகோதரரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினருமான ஜப்பார் அலி (வயது 57) வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

நிந்தவூரிலிருந்து, திருமலை நோக்கிச் சென்ற இவரது காரும், எதிர்த்திசையில் வந்த பேருந்து ஒன்றும் கிண்ணியா பாலத்திற்கு அருகிலுள்ள உப்பாறு எனும் இடத்தில் நேற்றைய தினம் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில், வாகனத்தில் இவருடன் கூடச்சென்ற மூவரும் காயங்களுக்கு உள்ளானதுடன், படுகாயங்களுக்கு உள்ளான லாபீர் மற்றும் ஜப்பார் அலி ஆகியோர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஜப்பார் அலி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இந்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனவுகளுடன் தொழிலுக்காக சென்றிருந்த பெண் சடலமாக வந்த சோகம்!!

மத்திய கிழக்கு நாடொன்றில் தொழிலுக்குச் சென்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பணிப்பெண் ஒருவரின் சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பசறையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 36 வயதான பெண் ஒருவருடைய சடலமே நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவர் இரண்டாவது தடவையாக தொழிலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியிருந்ததாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.

ஆறு மாதங்களுக்கு முன்னதாக இவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் உளவளநாளில் முதியோர் விழிப்புணர்வு!!

 
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் நேற்று முன்தினம் (10.10.2017) காலை 7.30 மணிக்கு கல்லூரி அதிபர் திருமதி பா.கமலேஸ்வரி தலைமையில் மாவட்ட சமூகசேவை அலுவலகத்தால் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இளம் தலைமுறையினர் தாய் தந்தையரின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், மூத்தோர் விழுமியங்களை பாடசாலைகளில் கற்றுக்கொள்ளவேண்டும், நல் ஆசிரியர்களை மாதிரியாகப் பின்பற்றல் வேண்டும் என அதிபர் திருமதி பா.கமலேஸ்வரி தனது தலைமை உரையில் குறிப்பிட்டார் .

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் மூத்தோரை இளைய தலைமுறையினர் செவிமடுக்க வேண்டும், உற்றுக் கேட்க வேண்டும் என்ற வகையில் ‘கூரைஇல்லா வீடும் மூத்தோர் இல்லா வாழ்வும் ‘என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் வவுனியா நகர முதியோர் சங்க தலைவர் தா.சலசலோசன் பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர் க.உதயகுமார் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் பிரதி அதிபர்,  ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாலியல் வல்லுறவு : உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!

குழந்தைத் திருமணம் மற்றும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த மிக முக்கியமான தீர்ப்பொன்றை டெல்லி மீயுயர் நீதிமன்றம் நேற்று (11.10) வழங்கியுள்ளது.

பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பெண்பிள்ளைகளை, அவர்களின் சம்மதத்தின் பேரிலோ, பலவந்தமாகவோ பாலுறவுக்கு உட்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்று டெல்லி மீயுயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

“பதினெட்டு வயதுக்குக் குறைந்த பெண்ணை, அவர் மனைவியாகவே இருந்தாலும் பாலுறவுக்கு உட்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் ஒரு வருடத்துக்குள் பொலிஸில் புகார் அளிக்கலாம்” என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்பிள்ளைகள் திருமணமானவர்களாக இருப்பின் அவர்கள் உறவு கொள்ளலாம் என்ற சட்டம் இந்தியாவில் நடைமுறையில் இருந்துவந்தது. தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய தீர்ப்பானது அந்தச் சட்டத்தை இரத்துச் செய்வதாக அமைந்துள்ளது.

 

 

 

முட்டை வாங்கியதிலும் சாதனை படைத்த கோலி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில், இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதன் அடிப்படையில் அவர் புதிய சாதனை ஒன்றைப் படைத்தார்.

அதாவது, இதுவரை அதிக எண்ணிக்கையிலான T20 போட்டிகளில் விளையாடிய பின் முதன்முறையாக முட்டை வாங்கிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இதுவரை 46 T20 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, முதன்முறையாக நேற்று நடைபெற்ற 47வது போட்டியில் முதன்முறையாக ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார்.

இதற்கு முன் இந்தச் சாதனைக்கு பாகிஸ்தானின் சொஹைப் மாலிக்கே சொந்தக்காரராக இருந்தார். இவர், தான் விளையாடிய நாற்பதாவது போட்டியில்தான் முதன்முறையாக ஓட்டம் பெறாமலேயே ஆட்டமிழந்துள்ளார்.

மேலும், இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 85 T20 போட்டிகளில், முதன்முறையாக அணித் தலைவர் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பமும் இதுவே.