உயிரை பாதுகாக்க விழுந்தடித்து ஓடிய இளைஞன் : சாவகச்சேரி வாள் வெட்டு சிசிடிவி காணொளி!!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் சமூக விரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. குறிப்பாக வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரையும் கைது செய்திருந்தனர்.

அத்துடன், வடக்கில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள்கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் கூறப்பட்டு வந்தது. எனினும், வாள் வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள்கொண்டு வரப்பட்டுள்ளதாக? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏனெனில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ். மானிப்பாய் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்த நிலையில், நேற்று யாழ். சாவகச்சேரி பகுதியில் மற்றும் ஒரு வாள்வெட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று காலை வேளையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், இதில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் குறித்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இது குறித்து கொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், தற்போது சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவின் பதிவுகள் வெளியாகியுள்ளன.

இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த இளைஞர்கள், அந்த பகுதியில் இருந்த இளைஞர்களை துரத்தி துரத்தி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வடக்கில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் தாயார் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!!

அவுஸ்திரேலியாவின் மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 32 வயதான ரஜீவ் ராஜேந்திரன் என்ற இளைஞன் அண்மையில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் அவரின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 9000 அமெரிக்க டொலர் உறவினர்களிடம் கோரப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் இதற்க்கு கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் மறுப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரஜீவ் ராஜேந்திரனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் உயிருடன் தனது மகனை பார்க்க முடியாவிட்டாலும் உயிரிழந்த தனது மகனுடைய உடலையேனும் பார்க்க வேண்டும் என ரஜீவ் ராஜேந்திரனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிரிழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே தன்னுடன் தொலைபேசி வாயிலாக கதைத்தார். விரைவில் உங்களை பார்க்க வந்து விடுவேன் என்று தெரிவித்தார்.

இன்று அவர் உயிரிழந்து விட்டார் என்ற செய்தியே எங்கள் காதுகளுக்கு வந்து கிடைத்துள்ளது. உயிருடன் எனது மகனை பார்க்க முடியாவிட்டாலும், உயிரிழந்த தனது மகனுடைய உடலையேனும் பார்க்க வேண்டும் என ரஜீவ் ராஜேந்திரனின் தாயார் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் பூரண கர்த்தால் : இயல்பு நிலை முடங்கியது!!

 
தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும், அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து, அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,

முழுத் தமிழ் அரசியற் கைதிகளையும் ஓர் அரசியற் தீரமானத்தினூடாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும், எதிர்வரும் 14.10.2017, சனிக்கிழமை, யாழ்ப்பாணம் வருகை தரவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தாமதமற்ற தீர்வு காண வேண்டிய இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்குமாக இன்று (13.10.2017) வடக்கு மாகாணம் முழுவதும் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வவுனியாவிலும் இன்று (13.10.2017) கடையடைப்பு செய்து பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடியுள்ளதுடன், தினச்சந்தை, பஸ் நிலையம், பிரதான வீதிகள், வங்கிகள், அரச நிறுவனங்கள் பொது மக்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பொலிஸார் வீதிகளில் கடமைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் வெளியூர் சேவைகளின் மாத்திரம் ஈடுபட்டு வருகின்றன. வீதிகளில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றது.

வவுனியாவில் கைகுழந்தைகளை பயன்படுத்தி வியாபாரம் செய்த 5பேர் பொலிசாரால் கைது!!

 
வவுனியா நகர்ப்பகுதியில் ஊதுபத்தி பொருட்கள் விற்பனையில் பல மாதங்களாக சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 5பேரை இன்று (12.10) இரவு 7 மணியளவில் குடியிருப்பு பூங்கா வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த பல மாதங்களாக புத்தளம் பகுதியிலிருந்து வவுனியா நகர்ப்பகுதிகளில் ஊதுபத்திகளை வீதியோரங்களில் விற்பனை செய்து வருவதாக வவுனியா உதவிப்பிரதேச செயலாளருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவர்களை அவதானிப்பதற்குச் சென்ற வவுனியா உதவிப்பிரதேச செயலாளர் இன்று மாலை சிறுவர்களுடனும் இரண்டு மாத கைக்குழந்தையுடனும் குறிப்பிட்ட நபர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானித்து, உடனடியாக இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து குடியிருப்பு பூங்கா வீதியில் வைத்து இன்று இரவு பொலிசாரினால் ஒரு கைக்குழந்தை உட்பட 4 சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் பாவனைக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கில், முச்சக்கரவண்டி என்பவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர்கள் ஒரு கூட்டாக செயற்பட்டே இவ் வியாபரத்தை மேற்கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது. இவர்கள் மீது சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வழங்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசாருடன் இணைந்து சிறுவர் மற்றும் மகளீருக்கான பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பூரண கர்த்தாலுக்கு வவுனியா வெகுஜன போராட்ட ஒருங்கிணைப்புகுழு பூரண ஆதரவு!!

 
வவுனியாவில் நேற்று (11.10) மாலை 4 மணியளவில் இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் கலந்துரையாடலின்போது நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள பூரண கர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக நேற்று வவுனியாவில் உருவாக்கப்பட்ட வவுனியா வெகுஜன போராட்ட ஒருங்கிணைப்புகுழு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலின்போது வவுனியா மாவட்டத்திலுள்ள சமூக மட்ட அமைப்புக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், விளையாட்டு அமைப்புக்கள் என 20ற்கும் மேற்பட்ட அமைப்புக்களின் கலந்துரையாடலின்போது வடமாகாணத்தில் நாளை இடம்பெறவுள்ள பூரண கர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக அனைத்து அமைப்புக்களின் உறுப்பினர்களும் இணைந்து முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்!!

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரியும் வவுனியாவில் நடைபெற்ற அரசியல் கைதிகளுக்கு எதிரான நீதிமன்ற வழக்கை அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமையைக் கண்டித்து உண்ணாவிரமிருக்கும் உண்ணாவிரத கைதிகளின் கோரிக்கையை வலியுறுத்தியும் நாளை (13.10.2017) நடைபெறும் ஹர்த்தால் போராட்டத்திற்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆதரவைத் தெரிவிக்கின்றது என அவ் அமைப்பின் செயலாளர் சு.டென்பொஸ்கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளை அடைவதற்கு போராடியவர்களை பயங்கரவாத நடவடிக்கை என மீண்டும் மீண்டும் அரசு வலியுறுத்திக் கொண்டே செல்கின்றது. அக்கோரிக்கையை முன்வைத்துப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட போதிலும் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கானோர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அநீதியானதாகும்.

ஏற்கனவே பல தடவைகள் ஆயுதம் தாங்கிப் போராடியவர்களை அரசு விடுதலை செய்து தேசிய நீரோட்டத்தில் இணைத்துள்ளமை கடந்த கால மஹிந்த அரசாங்கம் போல நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதாக கூறி பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமும் இவ் அரசியற் கைதிகளை விடுதலை செய்வதை தொடர்ந்து மறுத்து வருகின்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகளின் வலியுறுத்தல்களை ஏற்றுக்கொண்ட போதும் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காது காலத்தைக் கடத்திவருவதை வன்மையாக கண்டிக்கின்றோம். அனைத்து அரசியற் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென கோருகின்றோம்.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக வவுனியா மேல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த சந்தேக நபர்களுக்கெதிரான விசாரணைகள் ஆனுராதபுரம் நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டமை நீதித்துறை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகும்.

கடந்த எட்டு வருடங்களாக வட பகுதியிலும் இயல்பு வாழ்கை பாதுகாப்பு பலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரசாங்கம் கூறிவருகிறது. எந்தவிதமான அச்சுறுத்தல்களோ, ஆயுதப் போராட்டஙங்களோ இல்லாத போதிலும் சட்டமா அதிபர் சாட்சிகளின் பாதுகாப்புக் கருதி அனுராதபுரம் நீதி மன்றத்துக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறுவதன் மூலம் வட பகுதி பாதுகாப்பான பிரதேசமாக இல்லை, சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பை சரியாக மேற்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள் எனக் கூறுகின்றாரா?

நாட்டின் பாதுகாப்புப் பற்றி ஏன் சந்தேகம் கொள்கிறார் என்பதை தெளிவு படுத்த வேண்டும் அல்லது அவர் நீதிபதிகள் சரியான தீர்மானம் எடுக்க முடியாதவர்கள் என சந்தேகம் கொண்டுள்ளாரா என தெரியப்படுத்த வேண்டும்.

சட்டமா அதிபரின் செயற்பாடு நீதித்துறையின் செயற்பாடுகளிலும் சந்தேகத்தை ஏற்படுபடுத்துவதுடன் இன நல்லிணக்கத்துக்கும் கேடுவிளைவிப்பதாக அமையும் ஆகவே மீண்டும் வவுனியா நீதி மன்றத்தில் விசாரணையை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

செயலாளர்,
சு.டொன்பொஸ்கோ
0775405609,

வவுனியாவில் நாளை பூரண கர்த்தாலுக்கு வர்த்தகர் சங்கம் ஆதரவு!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியறுத்தி வட மாகாணத்தில் நாளைய தினம் (13.10.2017) இடம்பெறவுள்ள பூரண கர்த்தாலுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது பூரண ஆதரவினை வழங்குவதாக வர்த்தகர் சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்தார்.

நாளை வட மாகாணத்தில் இடம்பெறவுள்ள பூரண கர்த்தால் தொடர்பான கலந்துரையாடல் இன்று (12.10.2017) காலை 11.30 மணியளவில் வவுனியா வர்த்தக சங்க அலுவலகத்தில் வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு நாளைய தினம் தாங்கள் இவ் கடையடைப்புக்கு பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் நாளைய தினம் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வவுனியா வர்த்தக சங்க தலைவர் தெரிவித்தார்.

வவுனியாவில் நாளை அரசியல் கைதிகள் விடுதலை வேண்டி விசேட பூசை வழிபாடுகள்

அரசியல் கைதிகள் விடுதலையை வழியுறுத்தி நாளைய தினம் (13.10.2017) நண்பகல் 1.30 மணிக்கு குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், தமிழ் விருட்சம், கருமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் கைதிகளின் விடுதலை வேண்டியும், அவர்களின் நல் வாழ்வுக்காகவும், அனைத்து உயிர்களின் சேமத்திற்காகவும் இடம்பெறவுள்ள இறை பிரார்த்தனையில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாளையதினம் அரசியல் கைதிகளின் விடுதலையினை வழியுறுத்தி வடக்கு மாகாணம் முழுவதும் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை புறக்கணித்த அரச திணைக்கள அதிகாரிகள்?

 
வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (12.10.2017) காலை 10 மணி தொடக்கம் வவுனியா பிரதேச செயலாளர் கா உதயராசா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

இக் கூட்டத்திற்கு பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர், விவசாய திணைக்களப் பணிப்பாளர், கல்வியற்கல்லூரி அதிகாரிகள், வனவிலங்கு பரிபாலசபை பொறுப்பதிகாரி, வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர், மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல அதிகாரிகள் பங்குபற்றாமையினால் கூட்டத்தில் பல கதிரைகள் அதிகாரிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உரிய தீர்மானங்களை எடுப்பதற்கு உயர் அதிகாரிகள் இன்மையினால் மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தகவல் அறியும் சட்டத்தினூடாக தகவல் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

வவுனியா பிரதேச செயலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினுடாக தகவல் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் அதில் கோரப்படும் தகவல்கள் அதிகளவானவை பொது நோக்கத்திற்குரியதாக காணப்படுவதில்லை. பொது நோக்கத்திற்குரிய தகவலைக் கோரினால் அவற்றை இலகுவாக வழங்கக்கூடியதாக இருக்கும் என பிரதேச செயலாளர் கா.உதயராசா பிரதேச ஒருங்கினைப்பு கூட்டத்தின் போது தெரிவித்தார்.

எனது செயலகத்தில் மிகப் பெரிய இரகசிய தகவல்களுடைய தகவல்கள் எவையும் இல்லை. எமது செயலகத்தில் வேலைப்பழு அதிகமாக காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் பொது நோக்கத்தின் தேவைகளைக் கோரினால் அதை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா புளியங்குளத்தில் மின்னல் தாக்குதல் : வீதியில் மின்சாரக் கம்பிகள்!!

 
வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக காணப்படும் மின்சார தூண் இன்று (12.10.2017) உடைந்து வீழ்ந்துள்ளமையினால் மக்கள் பாரிய அசோகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இன்று வவுனியா உட்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை காரணமாக புளியங்குளம் ஏ9 வீதி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள அதிஉயர் மின்சார கடத்தியின் கம்பி மீது மின்னல் தாக்கியதில் தூண் சரிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக வீதியில் அருகே மின்சார கம்பி நிலத்தில் காணப்படுவதனாலும் தற்போது மழை பெய்து வருகின்றமையாலும் பொதுமக்களுக்கு மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.

சம்பவ இடத்திற்கு தற்போது புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி விரைந்து பாதுகாப்பு பணியில் பொலிஸாரை ஈடுபடுத்தியுள்ளதுடன் இலங்கை மின்சார சபைக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

பல மணிநேரமாக இலங்கை மின்சார சபைக்கு தகவல் வழங்கியுள்ள போதிலும் இது வரை மின்சார சபையினர் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லையேனவும் மின்சாரம் தாக்கி மக்கள் பலியானால் யார் பொறுப்பு? என மக்கள் விசனம் தெரிவித்தனர்.

தற்போது அப்பகுதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பம்!!

 
வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (12.10.2017) காலை 10 மணியளவில் வவுனியா பிரதேச செயலாளர் கா உதயராசா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை செயலாளர் ஆர் தயாபரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர் , உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார, சமுதாய அடிப்படை வங்கி பிரதேச பணிப்பாளர், கிராம சேவையாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் வகுப்புக்குச் செல்ல மறுப்பு!!

 
வவுனியா முஸ்லிம் மகா வித்தியலாயத்தில் இன்று (12.10.2017) காலை 8.30 மணியளவில் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பாடசாலை தொடர்பாக சமுக வலைத்தளமான முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவுகள் மேற்கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (12.10.2017) காலை 8.30 மணிமுதல் தமது கடமைக்கு செல்லாது பாடசாலை ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பாடசாலைக்கு சமுகமளித்த வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ .இராதாகிருஷ்ணன் , வவுனியா மாவட்ட பிரதி தலமை பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரசிங்க, நெளுக்குளம் பொலிசார் சம்பவம் தொடர்பான விடயங்களை கேட்டறிந்ததுடன் பொலிஸ் தலைமையகத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு சைபர் பிரிவின் உதவியுடன் நபரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொலிசார் வாக்குறுதியளித்துள்ளனர்.

ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பிணை கைவிட்டு கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் இவ்விடயம் தொடர்பாக அதி கூடிய கவனமெடுத்து நடவடிக்கை மேற்கொள்வதாவும் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனையடுத்து பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

வாழைச்சேனை கடலில் சிக்கிய புலிச்சுறா!!

 
மட்டக்களப்பு – வாழைச்சேனையில் கரையோர காவற்படையினரால் அரியவகை மீன் ஒன்று பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீன் பிடிப்பதற்கு நேற்று கடலுக்குச் சென்று திரும்பிய படகு ஒன்றில் இருந்தே குறித்த மீன் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட 160 கிலோ கிராம் நிறையுடைய “புலிச்சுறா” எனும் மீன் ஒன்றே இவ்வாறு படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுக பகுதியில் வைத்து இந்த புலிச்சுறாவினை கரையோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

“இந்த வகை மீன் இனம் தடை செய்யப்பட்ட மீன் என்பது தாங்கள் அறிந்திருக்கவில்லை” என்று படகில் வந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீன் இனம் கடல்வாழ் பேரினத்தில் எஞ்சியிருக்கக்கூடிய ஒரே சுறா இனம் என்பதுடன் இதனை “கடல்புலி” என்றும், இதன் உடலில் காணப்படும் ஆழ்ந்த கோடுகள் புலியின் தோலினைப் போல ஒத்திருப்பதால் “புலிச்சுறா” என்றும் அழைக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!!

 
கிளிநொச்சியிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சொகுசு பேருந்தொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை கிளிநொச்சி, ஏ9 வீதி ஆனையிறவு, உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சொகுசு பேருந்தொன்று நேற்று சாரதியின் நித்திரை கலக்கத்தின் காரணமாக பாலத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியிருந்தது.

அந்த விபத்தில் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. இருப்பினும், அந்த இடத்திலிருந்து சொகுசு பேருந்து அகற்றப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை குறித்த சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார். வீதி போக்குவரத்து பொலிஸாரின் அசமந்த போக்கே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க புதிய அமைப்பு உதயம்!!

 
அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய அமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது.

வவுனியா இந்திரன் விருந்தினர் விடுதியில் நேற்று மாலை நடைபெற்ற பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலின் போதே குறித்த அமைப்பு உதயமாகியுள்ளது.

வவுனியா வெகுஜன போராட்ட ஒருக்கமைப்புக் குழு என்னும் பெயரில் இந்த அமைப்பு உதயமாகியுள்ளதுடன், தற்போது 17 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

மேலும் பல அமைப்புக்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர் ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் வகையிலே பொது அமைப்புக்கள் இணைந்து இப்புதிய அமைப்பினை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்களிடம் ஆண்கள் நகைச்சுவையாக கேட்க நினைக்கும் கேள்விகள்!!

ஆண்கள் , பெண்கள் தோழமை மற்றும் காதலில் பல கிண்டல் கேலியான விடயங்கள் என்று இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்களும் பெண்களிடம் நகைச்சுவையாக கேட்க நினைக்கும் கேள்விகள் இதோ

பெண்களிடம் ஆண்கள் கேட்கும் நகைச்சுவையான கேள்விகள்

1. காதலித்தாலும் அதை வெளிப்படுத்தாமல் ஏன் அலைய விடுகின்றீர்கள்?
2. நீங்கள் ஆடைகள் தேர்வு செய்வதற்கு மட்டும் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள்?
3. கண்டிஷ்னர் மற்றும் ஷம்பூவிற்கு என்ன வித்தியாசம்?
4. நீங்கள் பாட்டு பாடினால் அதை உங்களாலே கேட்க முடியுமா?
5. நீங்கள் எப்போதும் ஏதாவது கேள்வி கேட்டு கொண்டே இருப்பது ஏன்?
6. குழந்தையை பார்த்து விட்டால் So Sweet என்று சொல்லியே ஆகணுமா?
7. கரப்பான் பூச்சி என்றால் அவ்வளவு பயம் ஏன்?
8. ஒரு நாளைக்கு எத்தனை செல்ஃபி எடுப்பீர்கள்?
9. யாரிடமும் கூறக் கூடாத விடயத்தை மட்டும் எப்படி அனைவரிடமும் சொல்கிறீர்கள்?
10. மொக்கை நகைச்சுவைக்கு கூட விழுந்து விழுந்து சிரிக்கிறீர்களே அது எப்படி?