வவுனியாவில் நண்பர்களுக்கு சிகரெட் கொண்டுவந்த இளைஞன் பொலிசாரால் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (13.10.2017) மதியம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இளைஞனிடமிருந்து வெளிநாட்டு சிகரட் பக்கற்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் கட்டார் சென்ற குறித்த இளைஞன் (வயது 24) சுகயீனம் காரணமாக நேற்றையதினம் இலங்கைக்கு மீண்டும் வந்துள்ளார்.

இன்று காலை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் கோண்டாவில் நோக்கி பயணிக்கவிருந்த சமயத்தில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கஞ்சா வைத்திருப்பதாக சந்தேகத்தில் குறித்த இளைஞனின் பயணப்பொதியினை சோதனையிட்ட சமயத்தில் வெளிநாட்டு சிகரட் 10 பெட்டியினை(200 சிகரட்) கைப்பற்றியுள்ளனர்.

அதனையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட சிகரட்டை எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு வெளிநாட்டு சிகரட் கொண்டுவருவது தடையேன தனக்கு தெரியாது எனவும், வியாபார நோக்கத்திற்காக இதனை கொண்டுவரவில்லை நண்பர்களுக்கு வழங்கவே கொண்டு வந்ததாகவும் பொலிஸாருக்கு குறித்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டையில் வாள்வெட்டுச் சம்பவம் : மூவர் வைத்தியசாலையில்!!

 
வவுனியா ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் இன்று (13.10.2017) மாலை 3 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே இன்று மதியம் புதியசின்னகுளம் மற்றும் நொச்சி மோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள்வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை பொலிஸார் வாள்வெட்டில் காயமடைந்த மயூரன் (வயது 29), நிதர்சன் (வயது 22), சங்கீதன் (வயது 38) ஆகியோரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காட்டுக்கத்தி, முள்ளுக்கம்பி, கத்திகள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சம்பவ இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

9 வயது சிறுமியின் உயிரைப் பறித்த தந்தையின் சமையல்!!

 
பிரித்தானியாவில் 9 வயது சிறுமி தமது தந்தை கையால் சமைத்து சாப்பிட்ட, தமக்கு விருப்பமான உணவால் உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள ஹாரோ பகுதியில் குடியிருந்து வரும் 9 வயதான நைனிகா என்பவர்தான் தந்தை சமையலால் நோய்வாய்ப்பட்டு கடந்த மே மாதம் 22 ஆம் திகதி உயிரிழந்தவர்.

பெற்றோருடன் குடியிருந்து வரும் இவர், தமது தந்தை வினோதிடம் தமக்கு விருப்பமான ப்ளாக்பெர்ரிகள் கலந்த pancake சமைத்துத் தர கேட்டுள்ளார். முதன் முறையாக மகள் விரும்பி கேட்டதால் தந்தை வினோத் மிகவும் பாசத்துடன் மகளுக்கு பரிமாறியுள்ளார்.

இதனிடையே அந்த உணவு ஒத்துக் கொள்ளாமல் போகவே உடனடியாக நைனிகாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் வினோத்(41) மற்றும் லட்சுமி(37) தம்பதியினர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பித்து ஒரு வாரம் கடந்த நிலையில், நைனிகாவின் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இனி சிகிச்சையினால் பலன் ஏதும் இல்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் கைவிரித்துள்ளது.

நைனிகா உயிரிழக்கும் முன்னர் மருத்துவர்கள் மேற்கொண்ட ஒரு சோதனையில், குறித்த சிறுமி நோய்வாய்ப்பட காரணமாக அமைந்தது pancake ல் கலந்திருந்த ப்ளாக்பெர்ரிகள் என தெரிய வந்தது.

ப்ளாக்பெர்ரிகள் மட்டுமல்ல pancake ல் பால் பொருட்கள் கலந்ததாலும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளனர்.

ஆனால் தங்கள் வீட்டில் பால் பொருட்களை அதிகமாக எவரும் விரும்பி உண்பதில்லை எனவும், pancake தயாரிக்க பயன்படுத்திய எஞ்சிய பொருட்களில் நச்சுத்தன்மை இருந்திருக்க வாய்ப்பு உண்டா என்பது தங்களுக்கு தெரியவில்லை எனவும் நைனிகாவின் தாயார் லட்சுமி தெரிவித்துள்ளார்.

தற்போது ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் லட்சுமி ஈடுபட்டு வருகிறார்.

வவுனியா காத்தர் சின்னகுளம் அ.த.க பாடசாலை வரலாற்றில் சித்தியடைந்த முதல் மாணவி!!

வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய கிராமப்புற சூழலில் அமைந்துள்ள காத்தர்சின்னகுளம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்ற மாணவி டட்லி சோபனா 154 புள்ளிகள் பெற்று புலமைபரிசில் பரீட்சையில் சித்தி அடைந்ததன் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடி கொடுத்துள்ளதுடன் பாடசாலையையும் கிராமத்தையும் அடயாளப்படுத்தியிருக்கிறார்.

இது பாடசாலையின் 58 வருட வரலாற்றில் மிக முக்கிய பதிவாகும். இவருக்கு கற்பித்த ஆசிரியர் திருமதி.ஐ.சாம்சன் மற்றும் அதிபர் திருமதி. சு.சிவஞானம் அவர்களின் பணி மேன்மேலும் சிறக்க அப்பகுதி மக்கள் வாழ்த்துகின்றனர்.

தமிழக கோவிலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர் மாயம் : தேடுதல் வேட்டையில் ரஷ்ய தூதரகம்!!

தமிழகத்தின் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுத்து வந்த ரஷ்ய இளைஞர் தற்போது மாயமான நிலையில் பொலிசார் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அமைந்துள்ள கோயில்கள் மீது ஈர்ப்பு கொண்ட ரஷ்ய இளைஞர் இவாஞ்செலின் பெர்ன்கோவ் கடந்த 8ம் திகதி ரஷ்யாவிலிருந்து இந்தியா சென்றுள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக 9ம் திகதி இரவு 8.15க்கு ரயில் மூலம் காஞ்சிபுரம் சென்றுள்ளார்.

இதனிடையே கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால், தனது டெபிட் கார்ட் மூலம் ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் ஏ.டி.எம் பாஸ்வேர்டை மாற்றிப் மாற்றி போட்டதால் ஏ.டி.எம் கார்டு லொக் ஆகிவிட்டது. இதனால் வெறுப்படைந்த அவர் அந்த ஏ.டி.எம் கார்டை உடைத்துப் போட்டுவிட்டார்.

கையில் பணம் இல்லாததால் காஞ்சிபுரத்தில் இரவு முழுக்க வலம் வந்தவர் கடைசியில் குமரகோட்டம் பகுதியில் உள்ள முருகன் கோயிலிலில் படுத்து உறங்கிவிட்டார்.

இதனிடையே கோயில் வாசலில் வயதானவர்கள் பிச்சை எடுப்பதை கண்ட அவரும் அங்கேயே உட்கார்ந்து பிச்சை எடுக்கத் தொடங்கினார். தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி காவல் நிலைய காவலர்கள் அவரை விசாரணை செய்து, சென்னையில் உள்ள தூதரத்துக்கு அனுப்பினார்கள்.

இந்த நிலையில் பிச்சை எடுத்த அந்த ரஷ்ய இளைஞர், ரஷ்ய தூதரகத்துக்குச் செல்லவில்லை என கூறப்படுகிறது. அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலும் இல்லை. இதனால் தூதரக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ரஷ்யத் தூதரகம் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அவரைப் பிடிப்பதற்காக காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை மற்றும் காஞ்சிபுரம் காவல்துறையினர் இணைந்து அவரை தேடிவருகின்றனர்.

பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் : நாடகமாடிய கணவர் கைது!!

தமிழக தலைநகர் சென்னை அருகே நடந்த பெண் கொலையில், நகைக்காக கணவரே குடிபோதையில் மனைவியை கொன்ற கொடூர செயலை பொலிசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த நிஷாராஜன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவரது மனைவி மோகனப்பிரியா, கடந்த 6ம் திகதி பட்டப்பகலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மட்டுமின்றி அவர் அணிந்திருந்த 6 பவுண் நகைகள் மட்டும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஆவடி காவல் உதவி ஆணையர், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மோகனப்பிரியாவின் கணவர் நிஷாராஜன் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குடி பழக்கத்திற்கு அடிமையான நிஷா ராஜனை, குடியை நிறுத்த சொல்லி மோகனப்பிரியா தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது தெரிய வந்தது.

குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என்றால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் மோகனப்பிரியா சம்பவத்தின் போது மிரட்டியுள்ளார்.

இதனிடையே மது போதையிலிருந்த கணவர் நிஷாராஜன், ஆத்திரத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்ததையும் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனிடையே காவல்துறை விசாரணையை திசை திருப்பும் வகையில், மனைவி அணிந்திருந்த நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடியதாகவும் நிஷாராஜன் ஒப்புகொண்டுள்ளார்.

இதனையடுத்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

வவுனியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்!!

மன்னார், யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியாவைப் பரப்பும் நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பவானி தெரிவித்துள்ளார்.

மலேரியா நுளம்புகளை முற்றாக ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைமன்னாரில் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவைப் பரப்பும் நுளம்புக் குடம்பிகள், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 19 கிணறுகளில் சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

தற்போது அவை வவுனியா நகரில் இரு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை மலேரியா நோய் அற்ற நாடு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததன் பின்னர் இந்த நுளம்புகள் மீண்டும் இங்கு பரவ ஆரம்பித்திருக்கின்றன.

எனினும் இவற்றால் யாருக்கும் மலேரியாக் காய்ச்சல் பரவியதாக இதுவரையில் மருத்துவ அறிக்கைகள் இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையில் வெற்றியளித்துள்ள பொலித்தீன் தடை : 95 வீதமான மக்கள் ஆதரவு!!

பொலித்தீன் தடைக்கு 95 வீதமான பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபை நடத்திய ஆய்வொன்றின் மூலம் இந்த விபரம் கிடைத்துள்ளதாக லால் மேர்வின் தர்மசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நாட்டில் பொலித்தீன் தடை செய்யப்பட்டதில் இருந்து, முதல் 6 வாரங்களாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த ஆய்வை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உலகநாடுகள் முன் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படும் : வடகொரியா எச்சரிக்கை!!

அமெரிக்கா நியாயமாக செயல்படவில்லை எனில், உலகநாடுகள் முன் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போருக்கான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் சபையில் வடகொரியாவுக்கு எதிரான கருத்துகள், பொருளாதார தடைகள் விதித்து போருக்கான சந்தர்ப்பத்தை டிரம்ப் தான் உருவாக்கினார். அதுமட்டுமின்றி தங்கள் நாட்டு ஜனாதிபதி கிம்முடன் போருக்கான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இதனால் கிம் அமெரிக்கா நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்றால் தங்கள் ஆயுத பலத்தால், அமெரிக்கா உலகநாடுகள் முன்னிலையில் தலைகுனியும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் என்பதை குறிப்பிட்டார்.

சமீபத்தில் டிரம்ப் வடகொரியா விவகாரத்தில் புயலுக்கு முன் அமைதி இருக்கும் என்றும் அந்நாட்டுடனான விவகாரத்தை இதற்கு முன்னர் இருந்த அமெரிக்க ஜனாதிபதிகள் முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போராட்டம் கைவிடப்பட்டாலும் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பவில்லை!!

ரயில் இயந்திர சாரதிகள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ள போதும், ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்தது.

அவர்களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காகவும், அதற்காக எட்டு பேர் கொண்ட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்ததாக ரயில்வே தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மாலை போராட்டத்தை இடைநிறுத்துவதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்தது. எனினும், ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை.

போராட்டத்தில் பங்கேற்றிருந்த பல பணியாளர்கள் இன்னும் சேவைக்கு திரும்பாமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், இன்று மதியத்துக்கும் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலேசிய கடவுச்சீட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை!!

கடந்த திங்கட்கிழமை மலேசிய கடவுச்சீட்டுக்களுடன் பிடிபட்ட ஐந்து இலங்கையர்கள் தொடர்பில் மலேசிய குடிவரவு திணைக்களம் இந்தோனேசியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக நியூ ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஊடாக ஐரோப்பியாவுக்கு செல்வதற்காக இந்த கடவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவு திணைக்கள பணிப்பாளர் டட்டுக் சேரி மஸ்டாபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தோனேசிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஐந்து பேரும் மலேசிய கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்த போதும் அவை அவர்களின் பெயர்களில் இருக்கவில்லை.

இதேவேளை, தாம் மலேசிய மற்றும் இந்தோனேசியாவுக்கு இலங்கையின் கடவுச்சீட்டுக்களுடன் வந்து பின்னர் அந்த கடவுச்சீட்டுக்களை கிழித்தெறிந்து விட்டதாக குறித்த இலங்கையர்கள் ஐந்து பேரும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

கனவுகளுடன் சவுதி சென்ற மகள் 6 மாதங்களின் பின் சடலமாக வந்த சோகம் : கண்ணீர் மல்கும் தந்தை!!

 
சவுதி அரேபியாவில் இரண்டு வருடங்கள் தொழில் புரிந்த தனது மகள் 6 மாதங்களின் பின்னர் சடலமாக நாடு திரும்பியதை நினைத்து குறித்த பெண்ணின் தந்தை மிகவும் மனவேதனையடைந்துள்ளார்.

பதுளை, பசறை பிரதேசத்தை சேர்ந்த ஷெல்டன் அல்விஸ் என்பவர் நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் குறித்த பெண்ணின் சடலத்தைக் கண்டு அழுதுள்ளார்.

மகள் தொழில் புரிந்து வந்த வீட்டின் உரிமையாளரான அரேபிய இனத்தவரான பொலிஸ் அதிகாரி, அவருடைய வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளமை தனது மகளின் மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கைவிரல்கள் காயம் ஏற்படும்படி வெட்டி, கைக்கு சூடு வைக்கப்பட்டிருந்த படத்தை மகள் தொலைபேசியின் ஊடக அனுப்பியிருந்தார். இது சம்பந்தமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது தனது மகளின் சடலத்தை நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக ஷெல்டன் அல்விஸ் கட்டுநாயக்க விமான பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பசறையைச் சேர்ந்த 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான தினுஷி பிரியங்கா மஹேஷி டி அல்விஸ் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது கணவன் தொந்தரவுகளை பொறுத்துக்கொள்ள முடியாது கணவனை பிரிந்து தனது தந்தையின் பாதுகாப்பில் குழுந்தைகளுடன் வாழ்ந்து வந்த இந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவின் தஹாம் நகரில் கதீப் என்ற பகுதியில் உள்ள வீடொன்றுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் நல்ல முறையில் தொழில் புரிந்து விட்டு ஒரு மாத விடுமுறையில் இலங்கை வந்து, மீண்டும் சவுதியில் உள்ள அந்த வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இரண்டு மாதங்கள் பிள்ளைகளின் செலவுக்கான பணத்தை அனுப்பிய பின்னர் தொலைபேசி அழைப்பை கூட எடுக்கவில்லை.

இதனையடுத்து ஷெல்டன் அல்விஸ், தனது மகளின் நிலைமை குறித்து தேடிய போது, அவரை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்த முகவர் மகள் இறந்து விட்டதாக கடந்த 8ஆம் திகதி அறிவித்துள்ளார்.

சவுதியில் உயிரிழந்த தினுஷி பிரியங்காவின் சடலம் நேற்று அதிகாலை 5.50 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளது. சடலத்தை பொறுப்பேற்ற உறவினர்கள் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தினுஷி தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் பல முறை தன்னை தாக்கி, துஷ்பிரயோகம் செய்து உணவு எதுவும் கொடுக்காது அறை ஒன்றில் மூடி வைத்ததாக மகள் கூறியதாகவும், மகளை இலங்கைக்கு வரவழைக்க தனது பணத்தில் விமான பயணச்சீட்டை அனுப்பிய போதிலும் மகள் சவப்பெட்டியிலேயே திரும்பி வந்ததாகவும் ஷெல்டன் அல்விஸ் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

கருப்பையை காலால் எட்டி உதைத்து வெளியே வந்த குழந்தை : ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்!!

 
சீனாவில் குழந்தை ஒன்று தனது தாயின் கருப்பையை கால்களால் எட்டி உதைத்து வெளியே வந்துள்ளதால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 35 வாரத்தில் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

ஷான் என்ற பெண்மணி கர்ப்பமாக இருந்துள்ளார், 35 வாரங்களே ஆகியுள்ள நிலையில் இவருக்கு திடீரென பயங்கரமாக வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 மணிநேரமாக வயிற்று வலி தொடர்ந்து கொண்டே இருந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஷானை செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், குழந்தையின் கால்கள் பெண்ணின் கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்து, அவளுடைய அடிவயிற்றில் ஊடுருவியபடி இருந்தன.

குழந்தை தனது கால்களால் எட்டி உதைத்தால் அப்பெண்ணுக்கு கடந்த 5 மணிநேரமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பட்டு செய்த மருத்துவர்கள் 10 நிமிடத்தில் பெண் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.

கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ : பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!!

 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ பரவியது.

இந்தப் பகுதிகளில் திராட்சைப் பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே, இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன.

இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவியது.

எனவே வனப்பகுதிகளை ஒட்டி தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தொடர்ந்து 14 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் என்று ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவியது. சாண்டா ரோசா நகரத்தில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிந்துள்ளன.

தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. காற்று வேகமாக வீசுவதால் தீ வேகமாகப் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

2000 கட்டிடங்கள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன. இந்த தீ விபத்தால் இதுவரை 1,75,000 பேர் கலிபோர்னியாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.மேலும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காட்டுத்தீ சம்பவத்தை தொடர்ந்து கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு பகலாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

4 வயதில் மாதவிடாய் : சிரமத்தின் மத்தியில் சிறுமி!!

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்சை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு உடல்ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார்.

பிறக்கும்போது நல்ல ஆரோக்கியமாக பிறந்த இந்த சிறுமிக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே மார்பகங்கள் வளர்ந்து முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்துள்ளன. 4 வயதில் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.

தற்போது குறித்த சிறுமிக்கு 5 வயது எனினும் பார்ப்பதற்கு மிகவும் முதிர்ச்சியடைந்து காணப்படுகிறார். இச் சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த சிறுமிக்கு Addison’s disease எனும் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந் நோய் குறிப்பாக இளம் வயது பெண்கள் அல்லது 30 வயது பெண்களுக்கு ஏற்படும். சில நேரங்களில் சிறு வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கும் காரணமாகவும் அமைகின்றன.

தற்போது இந்த சிறுமிக்கு எடை அதிகரித்துள்ளதுடன் இவரது உடம்பில் அதிகமாக முடி வளர்ந்து காணப்படுவதால் பாடசாலைக்கு செல்வதற்கு சிரமப்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவரது உடலில் துர்நாற்றம் வீசுவதால் சிறு குழந்தைக்கான பருவத்தினை எனது மகளால் அனுபவிக்க முடியவில்லை இந்த சிறுமியின் தாய் கவலை வெளியிட்டுள்ளார்.

பெண்ணின் அருவருக்க வைக்கும் விசித்திரப் பழக்கம்!!

தலைமுடியைத் தின்னும் விசித்திர பழக்கம் உடைய பெண்ணின் வயிற்றில் இருந்து, மயிர்ப் பந்துகளை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றினர்.

முப்பத்தேழு வயதுடைய இந்தப் பெண்ணுக்கு தலைமுடியைத் தின்னும் ‘ரெப்யூன்செல் சிண்ட்ரோம்’ (Rapunzel syndrome) என்ற வியாதி இருந்து வந்துள்ளது.

நீண்ட காலமாக தலைமுடியைத் தின்னும் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்த இவர், அண்மைக்காலமாக உணவு உண்ட உடனேயே வாந்தியெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இதையடுத்து இவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், இப்பெண் குறித்த வியாதிக்கு ஆளானவர் என்றும், அவர் இதுவரை தின்ற மயிர்க் கற்றைகள் ஒன்றாகத் திரண்டு வயிற்றில் சிக்கிக்கொண்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்தனர்.

இதையடுத்து குறித்த பெண்ணை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தி, அவரது வயிற்றில் இருந்து மயிர்ப் பந்துகள் சிலவற்றை அகற்றியுள்ளனர்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், முடியுடன் சேர்த்து, தலையில் மாட்டும் ‘க்ளிப்’ ஒன்றையும் இவர் உட்கொண்டிருந்ததுதான்!