நான் மிகவும் அழகானவள் : மணமகன் தேடும் 4 குழந்தைகளின் தாய்!!

 
லண்டனை சேர்ந்த 44 பெண்மணி ஒருவர் தான் மிகவும் அழகாக இருப்பதால் தனக்கு ஏற்ற துணையை தேடிக்கொண்டிருப்பதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

Dawn Cousins என்ற பெண்மணி 4 குழந்தைகளுக்கு தாய் ஆவார். இவர் லண்டனில் ஒளிபரப்பாகும் ITV daytime show – இல் கலந்துகொண்டு பேசியதாவது, எனக்கு தற்போது 44 வயதாகிறது. ஆனால், நான் பார்ப்பதற்கு மிகவும் அழகானவள், எனது வயதில் பாதிதான் இருக்கிறேன். இதுவரை உண்மையான காதலனை நான் பார்க்கவில்லை.

அதனால் நான் யாரையும் திருமணமும் செய்துகொள்ளவில்லை. தற்போது என் வாழ்வில் உண்மையான காதலனை கண்டறிந்து அவருடன் கடைசிவரை வாழ வேண்டும் என நினைக்கிறேன்.

என்னை திருமணம் செய்துகொள்வதற்கான 3 காரணங்கள் இதோ, நான் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பேன், நான் மிகவும் இளமையானவள், மிகவும் மகிழ்ச்சியானவள் மட்டுமல்லாமல் 4 குழந்தைகள் இருப்பதால் அவர்களை வைத்துக்கொண்டு சிரமப்படமாட்டேன் என கூறியுள்ளார்.

என் வாழ்க்கையின் இரண்டாம் பகுதியை அனுபவிக்க வேண்டும், எனக்கு 44 வயதாகிவிட்டதால் நான் செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை. மிகுந்த அன்பு கொண்ட ஒரு நபரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் : இன்ஸ்டாகிராமில் போட்டிருந்த உருக்கமான பதிவு!!

இந்தியாவில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, இன்ஸ்டராகிராமில் போட்ட உருக்கமான பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் சாய் துர்கா மௌனிகா(20). பி.டெக் இறுதியாண்டு படித்து வந்த இவர், கடந்த புதன்கிழமை, தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அப்பெண் , தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் புரோபைலில் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மிக மோசமாகிக் கொண்டே போகிறது. ஒவ்வொன்றையும் கடந்து சென்று கொண்டிருக்கிறேன். எனது மோசமான வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டே வருகிறேன். விரைவில் இதில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று நம்புகிறேன் பதிவு செய்துள்ளார்.

சம்பவதினத்தன்று ஒழுங்காகப் படிக்காததால், மௌனிகாவுக்கும், அவரது தாய்க்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இலங்கையர் கண்டுபிடித்த புதியவகை ஹைபிரிட் வாகனம்!!

 
பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையர் ஒருவர் மோட்டார் வாகனம் ஒன்றை மீண்டும் தயாரித்துள்ளார்.

களுத்துறையில் பிறந்து மாத்தறையில் வாழும் ஆரியரத்ன என்ற பொறியியலாளரே இந்த வாகனத்தை கண்டுபிடித்துள்ளார்.

பயோ ஹைபிரிட் ரகத்திற்கு இணையான வாகனம் ஒன்றே அவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை சைக்கிள் போன்று மிதித்து ஓட்டவும் முடியும். மோட்டரையும் பயன்படுத்திய பயணிக்க முடியும்.

ஆரம்ப நிலையிலுள்ள வாகனத்தை மேலும் சீர்ப்படுத்தினால் சிறந்த முறையில் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

தனது தனிப்பட்ட தேவைக்காக இந்த வாகனத்தை பொறியியலாளர் தயாரித்துள்ளார். இதனை உடற்பயிற்சி இயந்திரமாகவும், சிறிய மற்றும் தூர பயணங்களுக்கும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இன்றை போக்குவரத்து நெரிசலில் மோட்டார் வாகனம் ஒன்றில் 30 நிமிடம் செலவிட்டு செலலும் தூரத்தை 15 நிமிடங்களில் இதன் வாகனம் மூலம் பயணிக்க முடியும்.

பயன்படுத்த முடியாத பொருட்களை கொண்டு இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. வசதிகள் கிடைத்தால் இதனை மேலும் சிறப்பாக வடிவமைக்க முடியும் என இதனை தயாரித்த பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தானியக்க கியர் அமைப்பு ஒன்றின் உதவியுடன் இந்த வாகனம் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பயன்படுத்தப்பட்ட பழைய சைக்கிளின் டயர்களே இதற்கு பொருத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மாத்திரமே இதற்கு முழுமையாக செலவிடப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 கிலோ மீற்றர் தூரம் வரை இந்த வாகனத்தில் பயணிக்க முடியும். தற்போது 25 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் இந்த வாகனத்தின் வேகத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாய்த் தர்க்கத்தினால் வந்த வினை : இளைஞர் பலி!!

கல்முனை, சாய்பு வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தினால் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் போது கத்தியால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரண்டு மோட்டார் வண்டிகளுக்கிடையில் ஏற்பட்ட விபத்தின் போது 33 வயது மதிக்கத்தக்க கல்முனைக்குடியைச் சேர்ந்த ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

வீதி விபத்து கல்முனை பொலிஸாரினால் சமாதானம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் காயமடைந்த நபர் விபத்துடன் தொடர்புடைய மற்றை நபரின் பிரதேசத்திற்கு சென்று விபத்தை ஏற்படுத்திய நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக 24 மதிக்கத்தக்க உதுமான் லெப்பை மொகமட் சாஹீர் என்பவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கத்தியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடரும் சீரற்ற காலநிலை: எச்சரிக்கையாக செயற்படுமாறு அறிவிப்பு!!

நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் மழைவீழ்ச்சி பதிவாகும் நிலை காணப்படுகிறது.இந்த நிலையில் குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டாவது வான் கதவும் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் தாழ் பகுதிகளான அகலவத்தை, பதுரலிய மற்றும் இங்கிரய ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிலவும் சீரற்ற காலநிலையானது நீடிக்கக் கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 முதல் 150 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவரைத் தேடும் கனடா பொலிசார் : கனடாவில் இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

ஸ்காபுரோ ஏஜின் கோர்ட் தரிப்பிடத்தில் இம்மாதம் இரு இளைஞர்களை எரிவாயுவை ஊற்றி கிட்டத்தட்ட தீ வைக்கும் நிலைக்கு வந்த சம்பவம் நடந்துள்ளது. இது சம்பந்தமாக மூன்று சந்தேக நபர்களை தேடும் பொலிசார் அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் இரவு 9.17 மணியளவில் நடந்திருக்கின்றது. 18வயது மனிதன் வாகன தரிப்பிடத்தினூடாக நடந்து சென்று கொண்டிருக்கையில் மூன்று சந்தேக நபர்களால் எதிர் கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள்-இரு ஆண்கள் ஒரு பெண்-அனைவரும் 20 வயதுகள். வாதம் ஆரம்பித்ததாகவும் ஒரு கட்டத்தில் சந்தேக நபர்களில் ஒருவர் வாகனத்திற்கு சென்று எரி வாயு கொண்ட தகரம் ஒன்றை வெளியே எடுத்தார்.

பாதிக்கப்பட்ட இருவர் மீதும் எரிவாயுவை ஊற்றி தீ வைக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முயற்சி வெற்றியளிக்கவில்லை.

மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் பிறவுன் நிற ஆண் 5.7அல்லது 5.10 உயரம் கறுப்பு முடி தாடி கொண்ட தோற்றம் உடையவர்.கடைசியாக காணப்பட்ட போது மரூன் நிற சுவெட்டர் இருண்ட நிற காற்சட்டை மற்றும் கிரே நிற சப்பாத்து அணிந்திருந்தார்.

இரண்டாவது சந்தேக நபர் பிறவுன் நிற ஆண் 5.7 முதல் 5.10ற்கு இடைப்பட்ட உயரம் கறுப்பு முடி மற்றும் தாடி வைத்தவர்.கிரே நிற கட்டை கை ஹ_டி இருண்ட நிற காற்சட்டை வெள்ளை சப்பாத்து அணிந்திருந்தார்.

மூன்றாவது சந்தேக நபர் ஒரு பெண். 5முதல்5.5அடி உயரம் கறுப்பு தோள்-நீள முடி கொண்டவர். கறுப்பு அடிடாஸ் டிரக்காற்சட்டை ஒரு செங்குத்தான கோடு கொண்ட நீண்ட கைகள் கொண்ட கிரே நிற சுவெட்டர் மற்றும் திறந்த சான்டில்ஸ் அணிந்திருந்தார்.

இவர்களது படங்கள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களை அணுக வேண்டாம் எனவும் கண்டால் 911ஐ அழைக்குமாறும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

இலங்கைக்கு கொண்டு வரப்படும் யாழ். இளைஞனின் சடலம்!!

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த யாழ். இளைஞனின் சடலம் நாளை காலை இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனுஸ் தீவில் தற்கொலை செய்து கொண்ட ரஜீவ் ராஜேந்திரனின் சடலம் நாளை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.

இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை பாப்புவா நியூ கினியா அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் நாளைக்கு உடலை பெற்றுக்கொள்ளுமாறு ரஜீவின் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 32 வயதுடைய ரஜீவ், கடந்த 2ஆம் திகதி மனுஸ் தீவில் வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உதவுமாறு அவரது குடும்பத்தினர் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரியிருந்தனர்.

மீசாலை தெற்கு, மீசாலை, சாவகச்சேரி பகுதியில் வாழும் ரஜீவின் தாயார் வளர்மதி, சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உதவுமாறு, யாழ்ப்பாணத்தில் உள்ள வெளியுறவு அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகத்தை அணுகியுள்ளார்.

ரஜிவின் 59 வயதுடைய தந்தை சின்னதுரை ராஜேந்திரன் என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவராகும். 56 வயதுடைய அவரது தாயார் வளர்மதி 4 பிள்ளைகளின் தாயாராகும் என தெரிவிக்கப்படுகின்றது.

2003ஆம் ஆண்டு வீட்டை விட்டு சென்ற ரஜீவ் 2014ஆம் ஆண்டே தனது பெற்றோர்களை தொடர்பு கொண்டுள்ளார். தான் படகு மூலம் அவுஸ்திரேியாவுக்கு செல்ல முயற்சித்ததாகவும்,, மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தொலைபேசியில் ரஜீவ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டாம் திகதி அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதென ரஜீவின் தாயார் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தாயை தேடும் பிரித்தானியாவின் பிரபல பெண்!!

 
பிரித்தானியாவை சேர்ந்த பிரபல பெண்ணொருவர் இலங்கையிலுள்ள தனது தாயை தேடி வருவதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நிரோஷிகா எசேசன் என்ற பெண்ணே தனது தாயை தேடி வருகிறார். 1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இலங்கையில் பிறந்த அவருக்கு வீர முதியன்சலாகே நிரோஷிகா என பெயரிடப்பட்டது.

அவர் குழந்தையாக இருக்கும் போது அயர்லாந்து தம்பதி ஒன்றுக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நிரோஷிகாவின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் தெரியாதென குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தாயாரின் பெயர் டிங்கிரி என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்தப் பெயர் உண்மையானதா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தாயின் பிறப்பிடமாக மாத்தளை, நாவுல பிரதேசம் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்டி வைத்தியசாலையில் நிரோஷிகா பிறந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தாயாரின் விலாசம் ஒன்று பதிவிடப்பட்டுள்ள போதிலும், அது போலியான விலாசம் என குறிப்பிடப்படுகின்றது. இதனால் தன்னை பெற்ற தாயை கண்டுபிடிப்பதென்பது அவருக்கு சிரமமாக உள்ளது.

நிரோஷிகா பிரித்தானிய தொழில்நுட்ப துறையில் பலமான 35 பெண்களில் ஒருவராக காணப்படுகிறார். அத்துடன் பிரித்தானியாவில் இணையம் ஊடாக வாக்களிக்கும் முறையை தயாரித்தமை உட்பட விசேட பல விடயங்களில் அவரது பங்களிப்பு உண்டு.

மேலும் பல முறை உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றியுள்ளார். தற்போது உலக இளைஞர் மாநாட்டில் இணைந்துள்ளார்.

தனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிரோஷிகா, தற்போது தனது தாயை தேடி வருகிறார். தாயை கண்டுபிடிக்கும் நோக்கில் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

1980 – 90 ஆண்டு காலப்பகுதியினுள் இலங்கை சேர்ந்த 11000 குழந்தைகள் ஐரோப்பா நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நெதர்லாந்து ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் கைது!!

போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை இந்தோனேஷியா பொலிஸார் கைது செய்துள்ளனர். நாதன் பார்தீபன் என்ற புகலிட கோரிக்கையாளரே இவ்வாறு நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

போராட்டத்திற்கு தூண்டியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கை தமிழர்கள் பலர் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட ஈழ புகலிட கோரிக்கையாளர்கள் இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தில், மெடானில் எனும் இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரும், மீளவும் இலங்கைக்கு செல்ல முடியாதவர்கள் என்பது உறுதிப்படுத்திய நிலையில், அகதி அந்தஸ்த்து பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதை ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், குறித்த அனைவருக்கும் அகதி அந்தஸ்த்து வழங்கி வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு இந்தோனேஷிய அரசாங்கம் மறுப்பு வெளியிட்டு வருவதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், தம்மை வேறு நாடுகளுக்கு அனுப்புமாறு கோரி அகதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பனிச்சரிவில் சிக்கி காதலி உயிரிழப்பு : உலகப் புகழ்பெற்ற மலையேறும் வீரர் தற்கொலை!!

மலையேறும் போது பனிச்சரிவில் சிக்கி காதலி உயிரிழந்ததால் உலகப் புகழ்பெற்ற மலையேறும் வீரர் ஹெய்டன் கென்னடி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

உலகப் புகழ்பெற்ற மலையேறும் வீரர் ஹெய்டன் கென்னடியும் (வயது 27) இவரது பெண் தோழியும் மலையேறும் வீராங்கனையுமான பெர்கின்ஸூம் (வயது 23) அமெரிக்காவின் மொன்டானா பனி மலையில் ஏறிக்கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கினர்.

இந்த பனிச்சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக ஹெய்டன் கென்னடி உயிர் தப்பிய போதும், சுமார் 150 அடி பள்ளத்தில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தார் பெர்கின்ஸ்.

இதனால், காதலி உயிரிழந்த துக்கம் தாளாது ஹெய்டன் கென்னடி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மனைவி வெளிநாட்டில் : 2 ஆவது மனைவியை கொலைசெய்து தானும் தற்கொலை செய்தமை இதற்காகவா?

அநுராதபுரம், விஹாரை -ஹல்மில்லகுளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், ஆண் மற்றும் பெண் ஆகியயோரின் சடலங்கள் இன்று அதிகாலை பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தன. தற்போது அவர்களின் மரணங்களுக்கான காரணம் வெளியாகியுள்ளது.

பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களுக்கு அமைய குறித்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

தற்கொலை செய்து கொண்ட நபர் ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை வெளிநாட்டிற்கு வேலைக்காக அனுப்பிவைத்துள்ளார். இதன் பின்னர் தம்புள்ளை நாயகும்புர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் இவருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்த குறித்த பெண்ணை அநுராதபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு அழைத்து இருவரும் ஒன்றாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். குறித்த நபருக்கு 13 வயதுடைய மகனொருவனும் இருக்கும் நிலையில் மகனும் அவர்களுடனேயே வசித்து வந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கும் நபருக்கும் இடையில் நீண்ட நாட்களாக முரண்பாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுவதுடன், அவர்களுடன் வசித்து வந்த மகன் வீட்டிலிருந்து வெளியேறி தந்தையின் அக்காவின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதேவேளை, தற்கொலை செய்துக்கொண்ட குறித்த நபர் தற்கொலை செய்வதற்கு முன்னர் தனது மூத்த சகோதரியை சந்தித்து தான் அதிக நாட்கள் உயிருடன் இருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளதாக சகோதரி தெரிவித்துள்ளார்.

தான் மரணித்தால் தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது மகனுக்கு வழங்குமாறு தன்னிடம் தெரிவித்ததாக சகோதரி தெரிவித்துள்ளார்.

தனக்கும் தனது மகனிற்கும் நேர்ந்த கொடுமையினாலேயே தன்னுடன் வாழந்த இரண்டாவது மனைவியை கொலை செய்ததாகவும், தனக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட சொத்துக்களை தனது மகனுக்கு உரிமையாக்குமாறும் உயிரிழந்த நபர் எழுதி வைத்திருந்த கடிதமொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் , தற்கொலை செய்துகொண்ட நபர் 42 வயதுடையவரெனவும் குறித்த பெண் கொலை செய்யப்பட்டதன் பின்னர் அவர் கழுத்தில் சுறுக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாமெனவும் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

ஏழு வயதுச் சிறுமிக்குக் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி!!

பதுளையைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்திக்கும் தனது ஆசையை நேற்று (13.10) பூர்த்தி செய்துகொண்டார்.

எம்.என்.அமானி ரைதா என்ற இந்தச் சிறுமி, ஜனாதிபதியைச் சந்திக்க விரும்பி பதுளையில் இருந்து கொழும்பு வந்தார்.
பாடசாலைச் சீருடையுடன் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்ற அமானி, வெளியே காத்திருக்குமாறு கேட்கப்பட்டார்.

சிறுமி வந்திருக்கும் விடயம் ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டதும், தனது வேலைகளைச் சற்றே இடைநிறுத்திவிட்டு, அமானியையும் அவளது பெற்றோரையும் உள்ளே அழைத்து கைகூப்பி வரவேற்றார்.

ஜனாதிபதியிடம், தான் கைப்பட வரைந்த ஓவியத்தையும் அமானி கையளித்தார்.

ஜனாதிபதிக்கும் அமானிக்கும் இடையில் நடந்த உரையாடல், அப்படியே கீழே:

ஜனாதிபதி: உங்களுக்கு அக்கா, தங்கை இருக்கிறார்களா?

அமானி: இல்லை. தம்பி மட்டும்தான்!

ஜனாதிபதி: அப்படியா? தம்பி எங்கே?

அமானி: தம்பி வீட்டில்

ஜனாதிபதி: ஏன் அவரை அழைத்துக்கொண்டு வரவில்லை? பாலர் பாடசாலை போகிறாரா?

அமானி: ஆமாம்

ஜனாதிபதி: தம்பியின் பெயர் என்ன?

அமானி: ஆர்த்திக்

ஜனாதிபதி: அப்படியா?

அமானி: நான் உங்களுக்கு ஒரு ஓவியம் வரைந்து தந்தேன்தானே? அது உங்களுக்குப் பிடித்திருந்தால், அதை இந்தச் சுவற்றில் மாட்டி வையுங்கள்.

ஜனாதிபதி: நிச்சயமாக அதைச் சுவற்றில் மாட்டுவேன்.

அமானி: யாரும் நம்பவில்லை, நான் உங்களைச் சந்திப்பேன் என்று!

ஜனாதிபதி: யாரும் நம்பவில்லையா? ஆனால் நீங்கள்தான் என்னைச் சந்தித்துவிட்டீர்களே?

அமானி: நானே நம்பவில்லை. இந்த வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி. மீண்டும் என்னை வரச் சொல்லுங்கள்.

ஜனாதிபதி: தாராளமாக வரலாம். எப்போது விரும்பினாலும் நீங்கள் என்னை வந்து சந்திக்கலாம். நீங்கள் வாருங்கள், என்னைச் சந்திக்க… சரியா? நானும் பதுளை வந்தால் உங்களை வந்து சந்திக்கிறேன்.

அமானி: பாடசாலைக்கு வரும்போது சொல்லுங்கள். எப்போது வருவீர்கள் என்று முன்கூட்டியே சொல்லுங்கள்…

இதையடுத்து அமானிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கிய ஜனாதிபதி, தன்னை ஞாபகப்படுத்திக்கொள்ளும் வகையில் அதை அவளது வீட்டில் வைத்துக்கொள்ளுமாறு கூறினார்.

நெகிழ்ச்சியான இந்தக் காணொளி சிங்கள தனியார் தொலைக்காட்சியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியது : 11 இந்தியர்கள் பலி?

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய சரக்கு கப்பலில் சென்ற 11 இந்தியர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் புயலில் சிக்கி மூழ்கிய சரக்கு கப்பலில் சென்ற 11 இந்தியர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஹாங்காங் பகுதியை சேர்ந்த 33,205 டன் எடையுள்ள அந்த சரக்கு கப்பல் பசிபிக் பெருங்கடல் பகுதி வழியாக சென்றபோது புயலில் சிக்கி, பிலிப்பைன்ஸ் எல்லையில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் தூரத்தில் இன்று நீரில் மூழ்கியது.

கப்பலில் இருந்த 26 இந்தியர்களில் 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல்போன 11 இந்தியர்களை தேடும் பணியில் ஜப்பான் நாட்டு கடலோரக் காவல் படையை சேர்ந்த இரு ரோந்துப் படகுகள் மற்றும் மூன்று விமானங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

லீக் ஆனது மெர்சல் திரைப்பட கதை!!(வீடியோ)

மெர்சல் திரைப்படம் வௌியாவதை எதிர்ப்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு அத்திரைப்படத்தின் கதை இப்போது லீக் ஆனது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி விசேட பூசை வழிபாடுகள்!!

 
அரசியல் கைதிகள் விடுதலையை வழியுறுத்தி இன்று (13.10.2017) நண்பகல் 1.30 மணிக்கு குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், தமிழ் விருட்சம், கருமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் கைதிகளின் விடுதலை வேண்டியும், அவர்களின் நல்வாழ்வுக்காகவும், அனைத்து உயிர்களின் நல்வாழ்விற்காகவும் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, மாவட்ட அந்தனர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , செயலாளர் மாணிக்கம் ஜெகன் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி உணவு தவிர்ப்பு போராட்டம்!!

 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அரசியல் கைதிகளின் உறவினர்களும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் இன்று (13.10.2017) காலை 9.30 மணி தொடக்கம் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி வடக்கு மாகாணம் முழுவதும் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.