போர் விமானங்களை அனுப்பி வடகொரியாவை எச்சரித்த அமெரிக்கா!!

 

உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. வடகொரியா மீது மிகக் கடுமையான தடைகளை விதிக்கவேண்டும் எனவும் வற்புறுத்தியது. இதனால் வடகொரியா, அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடகொரியா மீது புதியதொரு தடையை விதித்தது. அந்த நாட்டின் 4 கப்பல்கள் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத வடகொரியா, போருக்கு தயாராகும் வகையில் பேசி வருகிறது.

அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு ஜப்பான் போருக்கு தயாரானால் அந்த நாட்டை தவிடுப்பொடியாக்கி விடுவோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

இதனால், வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று இரவு அமெரிக்க போர் விமானங்கள் கொரிய தீபகற்ப பகுதியில் வட்டமடித்து வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளன.

குவாம் தளத்திலிருந்து அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் ஜப்பான் மற்றும் தென்கொரிய வான்பகுதியில் பறந்தன.

தென் கொரியாவில் சென்றபோது அவற்றுடன் தென்கொரியாவின் 2 போர் விமானங்களும் சென்றன.

இதேபோல் ஜப்பான் பகுதியில் அமெரிக்க விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது ஜப்பான் நாட்டின் போர் விமானங்களும் இணைந்து கொண்டன.

மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு இடைக்கால தடை!!

மதுரை ஆதீன மடத்துக்கள் நித்யானந்தா நுழைவதற்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி ஜெகதலபிரதாபன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அவர் தனது மனுவில், நித்யானந்தா ஆதீன மடத்திற்கள் நுழைய தடை விதித்துள்ள நிலையில், மடத்திற்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நித்யானந்தா மடத்திற்குள் நுழைந்தால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படும், எனவே, மடத்திற்குள் நுழையவும், மடத்தின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், நித்யானந்தா ஆதீன மடத்திற்குள் நுழைவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மடத்தின் நிர்வாகத்தில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் தலையிடவும் தடை விதித்தது.

மேலும், இதுதொடர்பாக நித்யானந்தா மட்டுமின்றி தமிழக அரசின் தலைமை செயலாளர், இந்து அறநிலையத்துறை மற்றும் மதுரை கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ள

சினிமா வாய்ப்பு இல்லாததால் வீதியில் உணவு விற்க்கும் நடிகை!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் நடிகை கவிதாலட்சுமி. இவர் 1996ல் மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி மோகன்லால், மம்முட்டி உள்பட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழ்பெற்றவர்.

இவர் ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் என்பதால் சினிமா வாய்ப்பு கிடைத்த பிறகும் நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். மேலும் இவருக்கு பல டி.வி. தொடர்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. குடும்பபாங்கான வேடங்களில் நடித்ததால் டி.வி. தொடர்கள் மூலமும் இவர் பெண் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

நாளடைவில் இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் முழு நேர டி.வி. நடிகையாக மாறினார்.
பிறகு அவருக்கு திருமணமாகி ஆகாஷ் என்ற மகனும் உமாபாரதி என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு கணவர் வீடான நெய்யாற்றின்கரையில் கவிதாலட்சுமி வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவரது மகன் ஆகாஷ் வெளிநாட்டில் படிப்பதற்காக நடிகை கவிதாலட்சுமி முயற்சி எடுத்தார். அதற்காக ஒரு டிராவல்ஸ் நிறுவனம் மூலம் மகனை லண்டனுக்கு அனுப்பினார். இதற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.36 லட்சம் வரை அவர் கொடுத்தார். தொடர்ந்து மகனின் படிப்பு செலவுக்கு ரூ.50 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உருவானதால் அவர் கடன் வாங்கி அந்த தொகையை செலுத்தினார்.

கால ஓட்டத்தில் சினிமா, டி.வி. வாய்ப்புகள் அவரது கையைவிட்டு நழுவியது. அதே சமயம் கடன் தொல்லை அதிகரித்தது. கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கியதால் கடனை அடைக்க வழியின்றி தவித்தார்.

இதனால் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் கடனை அடைக்க வேறு வழி இல்லாததாலும் நடிகை கவிதாலட்சுமி நெய்யாற்றின் கரை பகுதியில் சாலையோரத்தில் உணவு விடுதி நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது அதன் மூலம் கிடைக்கும் சிறிய வருமானத்தில் தனது மகளை அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கவைத்து வருகிறார். அவரது மகனும் படிப்பு முடிந்து வேலை கிடைக்காமல் உள்ளார்.

வறுமையில் வாடும் நடிகை கவிதாலட்சுமிக்கு தற்போது வயதின் காரணமாக உடல் நலக்குறைவுகளும் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அவர் கூறும்போது எனக்கு சினிமா பட வாய்ப்புகள் குறைந்ததாலும் மகனின் படிப்பு காரணமாக கடன் ஏற்பட்டதாலும் தற்போது உணவு விடுதியில் கிடைக்கும் பணம் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறேன். எனது உடலில் சக்தி இருக்கும் வரை யாரையும் எதிர்பார்க்காமல் எனது குடும்பத்தை காப்பாற்றுவேன் என்றார்.

 

காதலியை பார்க்க சென்ற காதலன் : துடிதுடித்து இறந்த பரிதாபம்!!

இந்தியாவில் காதலியை பார்க்கச் சென்ற காதலன் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரனாய் மிஸ்ரா (28). பி.டெக் முடித்த இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை, பேகூரிலுள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் காலை 2.30 மணி அளவில் தனது காதலியை சந்திப்பதற்காக, தாவரகெரே பகுதிக்கு பிரனாய் மிஸ்ரா இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியே பைக்கில் வந்த மர்ம நபர்கள், சிலர் பிரனாய் மிஸ்ராவை வழி மறித்து, அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.

அவர்களிடமிருந்து பிரனாய் மிஸ்ரா தப்பிக்க முயன்ற போதும், அவர் சரிந்து விழும்வரை தொடர்ந்து அந்த நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்ட, அவ்வழியே வந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன ஓட்டி குடும்பத்துக்கு கையெடுத்து கும்பிடு போட்ட பொலிஸ் : வைரலாகும் புகைப்படம்!!

இந்திய மாநிலம் ஆந்திராவில் பலமுறை விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டியை பார்த்த பொலிஸ் காவலர் ஒருவர் அவருக்கு கும்பிடு போடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

ஐதராபாத் அருகில் உள்ள ஆனந்த்பூர் மாவட்டத்தில் மடகாசிரா பகுதியில் சுகுப் குமார் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று காவல் நிலையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹனுமந்த்ரையா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் 6 பேருடன் குடும்பத்துடன் சென்றுள்ளார். ஹனுமந்த்ரையா இப்படி பயணிப்பது வாடிக்கையாகும். அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி காவல் ஆய்வாளர் சுகுப் குமார் அபராதம் விதித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் மனைவி, 2 மகன், தாய் என பைக்கில் ஹனுமந்த்ரையா வருவதை கவனித்த காவல் ஆய்வாளர் மனம் நொந்து அவரை பார்த்து இரண்டு கைகளையும் கூப்பி கும்பிடு போட்டார்.

மீண்டும் மீண்டும் இது போன்று பயணிப்பது சாலை விதிமீறல் ஆகும் என வலியுறுத்தினார். காவல் ஆய்வாளர் இவ்வாறு கூறியது ஹனுமந்த்ரையாவுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

மேலும் இரு கை கூப்பி கும்பிடு போட்டதும் அவர் திகைத்து போய் சிரித்தார் என காவல் ஆய்வாளர் கூறியுள்ளார்.

காவல் ஆய்வாளர் ஒருவர் வாகன ஓட்டியிடம் கும்பிடு போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடும் வறுமைக்கு மத்தியில் வரலாற்று சாதனை படைத்த மாணவி : மைத்திரி கொடுத்த பரிசு!!

 
கடும் வறுமையான நிலையிலும் ஐந்தாம் தர புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி பி.டி.துலாஞ்சலி மதுமாலி பிரேமரத்னவை ஜனாதிபதி நேற்று சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மாணவிக்கு ஒரு வருடத்திற்குத் தேவையான பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கினார்.

மாணவியை சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதி நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்து பேசியிருந்தார்.

இதன் போது மாணவியின் திறமையைப் பாராட்டிய ஜனாதிபதி, அவரது உயர்கல்வி நடவடிக்கைகள் நிறைவடையும்வரை மாதாந்தம் 3000 ரூபாவை வழங்குவதாக உறுதியளித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச, மாணவிக்கு புதிய வீடொன்றை அமைத்துக்கொடுப்பதற்கு ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் குறித்த பாடசாலை மாணவி கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர், கலேவெல வலயக் கல்விப் பணிப்பாளர் நயோமி ஹெட்டியாரச்சி, துலாஞ்சலி மதுமாலி பிரேமரத்னவின் தாயார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கலேவல கல்வி வலயத்தின் பஹல திக்கல ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 45 வருடங்கள் ஆகின்றன. தற்போது பாடாசலையில் 96 மாணவர்கள் உள்ளனர்.

இப்பாடசாலை வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரேயொரு மாணவி பி.டி.துலாஞ்சலி மதுமாலி என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையை இழந்து உரிய வீட்டு வசதியுமின்றி மிகுந்த பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் துலாஞ்சலி மதுமாலி 168 புள்ளிகளைப்பெற்று இம்முறை 05ஆம் ஆண்டு தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

பாடசாலை வந்தால் நாளொன்றுக்கு 100 ரூபா : கல்வி அமைச்சின் புதிய திட்டம்!!

வறுமை மற்றும் பிர காரணங்களினால் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களுக்கு சிறப்பு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள குறித்த திட்டத்தின் ஊடாக, மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை தடுக்க முடியும் என கல்வி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு வருகைத்தரும் நாள் ஒன்றுக்கு 100 ரூபா வீதம் மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

இந்த திட்டம் தொடர்பிலான யோசனையை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இலவச கல்வி முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், 4,52,661 மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும், அவர்களில் 51,249 பேர் ஒரு நாள் கூட பாடசாலைக்கு செல்லாதவர்கள் எனவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கல்வி அமைச்சின் இந்த புதிய திட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், “மாணவர் வரவுக்கு ரூபாய் 100 என்ற இந்த யோசனை அவசியமற்றது. அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலை இலக்காக கொண்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “கல்வியில் சம வாயப்பு மற்றும் பாகுபாடு இன்றி பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுவது பற்றியே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இயந்திரம்!!

நுவரெலியாவில் புதிய வகை சோளக்காட்டு பொம்மை தயாரிக்கப்பட்டுள்ளது. காட்டு மிருகங்களிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் நோக்கில் மின்சார சோளக்காட்டு பொம்மை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவைல நுவரெலியா விவசாய சேவை அபிவிருத்தி அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீ டெக் சோளக்காட்டு பொம்மை என அடையாளப்படுத்தும் இந்த உபகரணத்தினால் ஒரு ஏக்கர் அளவு பயிர்ச்செய்கைகள் மிருகங்களிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

சூரிய சக்தியின் மூலம் பெறப்படும் மின்சாரத்தில் இந்த சோளக்காட்டு பொம்மை இயங்குகிறது.

பன்றி, முயல், மாடு, மான் போன்ற மிருகங்களிடம் இருந்து பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பினை இந்த இயந்திரத்தின் ஊடாக தடுதக்க முடியும்.

இந்த இயந்திரம் தற்போது வலப்பனை பிரதேசத்தில் விவசாயிகள் பயன்படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

மூன்றாம் உலக போர் அச்சம் : ஜப்பானுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!

அமெரிக்காவுடன் இணைந்துகொண்டு மூன்றாம் உலகப்போருக்கு ஜப்பான் தயாராகுமானால் அந்நாட்டை அடியோடு அழித்துவிடுவோம் என வடகொரியா நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் வடகொரியா 6வது முறையாகவும் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது.

அத்துடன் வடகொரியாவுடன் இனி அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்ததுடன், அந்நாட்டிற்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்துகொண்டு மூன்றாம் உலகப்போருக்கு ஜப்பான் தயாராகுமானால் அந்நாட்டை அடியோடு அழித்துவிடுவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரிய அரச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அமெரிக்காவின் யுத்த தரகு வேலைகளை ஜப்பான் சாதகப்படுத்திக் கொள்ள முயற்சித்தால் ஜப்பான் வெற்றிபெற முடியாது. வடகொரியா படைகளின் தாக்குதல்களை ஜப்பானால் எதிர்கொள்ள முடியாது.

கொரிய தீபகற்பத்தில் போர் வெடித்தால் ஜப்பானால் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது. போருக்காக அங்கு நிலைநிறுத்தப்படும் அனைத்தும் இல்லாமல் செய்யப்படும்.

அமெரிக்காவின் ஆதரவு என்ற பலத்துடன் போருக்கான ஆயத்தத்தில் ஜப்பான் இறங்கினால் மீளமுடியாத அழிவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையுடன் தெரிவிப்பதாக” அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் தமிழர் பரிதாபமாக மரணம்!!

குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் வழியில் இலங்கை வந்திருந்த ஒருவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

மூத்தன் முருகன் (52) என்ற இந்த நபர் குவைட்டில் பணிபுரிந்து வந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர், விசாக் காலம் முடிவடைவதையடுத்து தமிழகம் செல்லவிருந்தார்.

குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான யு.எல்.230 விமானத்தில் புறப்பட்ட இவரது உயிர், நேற்று (10.10) காலை சுமார் ஆறரை மணியளவில், கட்டுநாயக்கவில் தரையிறங்க முன்னரே பிரிந்தது.

விமான நிலைய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட இவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரத் தடை!!

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் தவசிக்குளம், யங்கன் குளம், தெற்கிலுப்பைக்குளம் கிராமம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் அச்சறுத்தலாக மாறியுள்ள பெண் மந்திரவாதி : காதலி செய்த மோசமான செயல்!!

காதலனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கொள்ளையில் ஈடுபட்ட யுவதி ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலகொல்ல பிரதேச வீடொன்றில் 670000 ரூபாய் பணம் திருடியமை தொடர்பில் அந்த வீட்டின் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய பண மோசடி செய்த தமிழ் மந்திரவாதி பெண் ஒருவரும் முஸ்லிம் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நினைப்பதெல்லாம் கிடைக்கும் மந்திரம் உண்டு என பெண் மந்திரவாதி ஒருவரின் விளம்பரம் தமிழ் பத்திரிகையொன்றில் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்த விளம்பரத்தை பார்த்த பலகொல்ல பிரதேசத்தை சேர்ந்த வீட்டு பணிப்பெண் தனது காதலனை பெற்றுத் தருமாறு விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார்.

மந்திரம் செய்யும் தமிழ் பெண் தனது கணக்கிற்கு 5000 ரூபாய் பணம் வைப்பிடுமாறு பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். பணம் வைப்பிட்ட பின்னர் காதலனை பெற்றுக் கொள்வதற்காக காளி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் என கூறி அதற்கு பணம் கோரியுள்ளார்.

இவ்வாறு மந்திரம் செய்வதற்கு பணம் பெற்றுக் கொள்வதற்காக பணிப்பெண் தங்க நகைகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மந்திரம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பெண் அக்குரனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவருக்கு உதவிய முஸ்லிம் இளைஞர் கட்டுகஸ்தொட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் தமிழ் மக்களின் பணத்தை இந்த மோசடி செய்துள்ளதாகவும், அவரது கணக்கில் தற்போது 4 லட்சம் ரூபாய் பணம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் மந்திரவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 5000 ரூபா ரொக்கப் பிணையிலும், 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விண்டோஸ் 10 கையடக்கத்தொலைபேசிக்கு ஆப்பு வைத்த மைக்ரோசொப்ட்!!

ஸ்மார்ட்போன் சந்தையில் தனது தயாரிப்பான விண்டோஸ் 10 கையடக்கத்தொலைபேசியானது பெரிதும் வரவேற்பைப் பெறாததால் அதனை மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மைக்ரோசொப்டின் இந்த அறிவிப்பையடுத்து, விண்டோஸ் கையடக்கத்தொலைபேசி பயனாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கடந்த ஒருவருடத்திற்கு மேலாக விண்டோஸ் கையடக்கத்தொலைபேசி குறித்து குறிப்பிடத்தக்க வகையில் எவ்வித மேம்பாட்டையும் அறிவிக்காத மைக்ரோசொப்ட் நிறுவனம், தனது நிலைப்பாடு தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாமல் அமைதி காத்து வந்தது.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளங்கள் மற்றும் சாதனங்கள் பிரிவின் துணைத்தலைவரான ஜோ பெல்ஃபியோர்,

பயனாளி ஒருவரின் விண்டோஸ் போனின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,

“நிச்சயமாக நாங்கள் இந்த தளத்தை ஆதரிப்போம். பிழை திருத்தங்கள், பாதுகாப்பு மேம்படுத்தல்கள், முதலியனவற்றை தொடர்ந்து அளிப்போம். ஆனால் புதிய அம்சங்களை உருவாக்குவதிலும் ஹார்ட்வேயர் என்னும் வன்பொருள் உருவாக்கத்திலும் கவனம் செலுத்தப்போவதில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரொய்ட் மற்றும் iOS இயங்குதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட தொடர் சிறப்பம்சங்களையும், மென்பொருள் மேம்பாடுகளையும் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களும் விரைவில் ஆண்ட்ரொய்ட் அல்லது iOS போன்ற வேறு இயங்குதளங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 கையடக்கத்தொலைபேசி, வாடிக்கையாளர்களின் கணினி மற்றும் கையடக்கத்தொலைபேசிகளில் ஒரே மாதிரியான செயலிகளை பயன்படுத்தும் வகையில் வசதிகளை அளித்து அவர்களை ஈர்க்க முயன்றது. ஆனால், அந்த முயற்சி எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை.

விண்டோஸின் இந்த முடிவு கடந்த சில காலமாகவே பேசப்பட்டு வந்ததாக சந்தை கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடம் மாறிய உறுப்பு : மருத்துவர்களின் வெற்றிகரமான சிகிச்சை!!

வேல்ஸ் நகரில், குடலை வெளிப்புறமாகக் கொண்டு பிறந்த குழந்தைக்கு வெற்றிகரமாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டு குடல் மீண்டும் உள்ளே பொருத்தப்பட்டது.

ஏவா ரோஸ் நைட்டிங்கேல் என்ற இந்தக் குழந்தையின் வயிற்றுச் சுவர்கள் போதுமான இடம் கொடுக்காததாலேயே குழந்தையின் குடல், பிறக்கும்போதே உடலுக்கு வெளிப்புறம் தள்ளப்பட்டிருந்தது.

இதனால் அந்தக் குழந்தைக்கு உணவூட்டவும் பராமரிக்கவும் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தக் குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்யத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, மூன்று மணி நேர சிகிச்சையின் பின் வெற்றிகரமாகக் குடல் அந்தக் குழந்தையின் வயிற்றினுள் வைத்துப் பொருத்தப்பட்டது.

மூன்று வார காலம் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த இந்தக் குழந்தை தற்போது பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளது.

பாகிஸ்தானுடன் தொடர் வெற்றி : டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை முன்னேற்றம்!!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியதையடுத்து, டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில், இரண்டு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியது இலங்கை அணி.

இதையடுத்து, ஏழாம் இடத்தில் இருந்த இலங்கை அணி, நான்கு புள்ளிகள் அதிகமாகப் பெற்று 94 புள்ளிகளுடன் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது.

மாறாக 93 புள்ளிகளுடன் ஆறாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி இந்தத் தொடர் தோல்வியையடுத்து 5 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு, முழுமையாக ஒரு டெஸ்ட் தொடரைப் பறிகொடுத்திருக்கிறது பாகிஸ்தான் அணி.

தற்போது, இலங்கை அணிக்கு முன்னதாக ஐந்தாம் இடத்தில் அவுஸ்திரேலியா 97 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்திய அணி 125 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய கப்பல் மாலுமி!!

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மணீஷ் குமார் கிரி. 25 வயதான இவர், கடந்த 2010-ம் ஆண்டு விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ். இக்ஸிலா கப்பற்படை தளத்தில் மாலுமியாக பணியில் சேர்ந்தார்.

கடந்த வருடம் விடுமுறையில் சென்ற மணீஷ் கிரி, மீண்டும் பணியில் சேர்ந்த போது அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிய துவங்கியுள்ளது. பணி நேரம் போக, மற்ற நேரங்களில் பெண்கள் போல உடையணிந்து அலங்காரம் செய்ய தொடங்கியுள்ளார்.

இதனால் கப்பலில் பணி செய்யும் நிர்வாகிகளுக்கு சந்தேகம் ஏற்பட, மணீஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மணீஷ் விடுமுறைக்காக மும்பை சென்ற போது அங்குள்ள ஒரு மருத்துமனையில், பெண்ணாக மாறுவதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் மணிஷை பணி நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பெண்ணாக மாறிய மணீஷ் குமார் கிரி கூறுகையில், தான் விருப்பபட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், பெண்ணாக மாறியது தவறா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், நான் திருடான? பயங்கரவாதியா அப்படி என்ன நான் குற்றம் செய்தேன். 7 வருடங்களாக நாட்டுக்காக பாடுபட்டேன். என்னை பணி நீக்கியதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்.எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என்று மணீஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.