24 மணிநேரம் வீடியோ கேம் விளையாடியதால் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

சீனாவில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண்பார்வை பறிபோன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி கண் பார்வை பறிபோயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ச்சியாக இடைவெளியின்றி செல்போனை பார்த்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக வைத்தியர்கள் கூறி உள்ளனர்.
நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட குறித்த பெண் தொடர்ச்சியாக செல்போனில் கேம் விளையாடியுள்ளார்.

வார இறுதி நாட்களிலும் விடுமுறையின் போதும் தொடர்ச்சியாக கேம் விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

விடுமுறை நாட்களில் வேலை இல்லையென்றால் காலை 6 மணிக்கு எழுந்து கேம் விளையாட ஆரம்பிக்கும் குறித்த பெண் மாலை வரையில் கேம்தான் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

சில நேரம் இரவு ஒரு மணி வரையிலும் விளையாடுவதாகவும், பெற்றோர் சாப்பிட அழைத்தாலும் அதனை கேட்காமல் தொடர்ச்சியாக விளையாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குறித்த பெண்ணின் கண் பார்வையை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதியவர்கள் மத்தியில் அதிகமாகவும், இளைஞர்கள் மத்தியில் அரிதாகவும் காணப்படும் பிரச்சனை இளம்பெண்ணுக்கு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாடையில் குத்தி வாய் வழியாக வெளியில் வந்த கொங்கிரீட் கம்பி!!

கட்டடத் தொழிலாளி ஒருவரின் தாடையில் குத்தி வாய் வழியாக வெளியே வந்த இரும்பு கம்பி ஒன்றை மருத்துவர்கள் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

ஹோமகமை வைத்தியசாலையில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் தம்மிக்க விக்ரமசேகர தலைமையிலான மருத்துவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் தொழிலாளி ஒருவர் கொங்கிரீட் போட்டுக்கொண்டு இருந்த நிலையில் மாடியில் இருந்து கீழே இறங்க முயற்சித்த போது கால் தவறி விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் கொங்கிரீட் கம்பி தாடையில் குத்தி வாய் வழியாக வெளியில் வந்துள்ளது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கொங்கிரீட் கம்பியை வெட்டியுள்ளதுடன் மீதமிருந்த கம்பியுடன் அவரை ஹோமகமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஒன்றரை மணிநேர சத்திர சிகிச்சையின் பின் கம்பி அகற்றப்பட்டுள்ளது. விசேட மருத்துவ நிபுணர் தம்பிக்க விக்ரமசேகர தலைமையிலான சானக்க ராஜபக்ச, காவிந்த நாகொடவித்தான உள்ளிட்டோர் இந்த சிகிச்சையில் பங்கேற்றுள்ளனர்.

கம்பி அகற்றப்பட்ட நிலையில் விபத்துக்கு உள்ளானவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவர் விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.

கணவரை கொலை செய்து சடலத்தை வீட்டில் மறைத்து வைத்த மனைவி!!

குடித்து விட்டு தன்னையும் தனது பிள்ளைகளையும் தினமும் கொடுமைப்படுத்திய கணவரை மகளின் உதவியுடன் கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ். இவர் மனைவி காஜல். இவர்களுக்கு அனுப் என்ற மகனும், குஷி, சித்தி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

மதுவுக்கு அடிமையான முகேஷ் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் மனைவி நடத்தி வரும் அழகுநிலையத்துக்கு சென்ற முகேஷ் மனைவியின் வாடிக்கையாளர்கள் முன்னால் அவரை அவமானப்படுத்தியுள்ளார்.

முகேஷின் தொந்தரவு அதிகமாக தொடங்க அவரை கொலை செய்ய காஜல் முடிவெடுத்தார். இருதினங்களுக்கு முன்னர் குடிபோதையில் வீட்டுக்கு வந்த முகேஷை தனது மகளுடன் சேர்ந்து காஜல் அடித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை வெளியில் சென்று புதைக்க நினைத்த போது வீட்டிற்கு அருகாமையில் பூஜை நடைபெற்றதால் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்துள்ளது.

இதையடுத்து சடலத்தை இரவு முழுவதும் வீட்டிலேயே வைத்துள்ளார். இதை எப்படியோ பார்த்து விட்ட வினோத் என்ற நபர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு பொலிஸ் வந்து விசாரணை செய்த போது தனக்கு எதுவும் தெரியாது என முதலில் மறுத்த காஜல் பின்னர் கணவரை கொன்றதை ஒப்பு கொண்டுள்ளார். இதையடுத்து காஜலை கைது செய்த பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

வவுனியா வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவன்!!

வவுனியா வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் மஹ்பூப் யூஸசப் முப்தி சில வாரங்களுக்கு முன் வெளியாகிய புலமைப்பரிட்சையில் 170 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கே.பி.கணேஸ் தெரிவித்தார்.

இம் மாணவன் கல்வி, கலை, விளையாட்டுத்துறை என பல்வேறு துறைகளில் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் வகுப்பாசிரியரான டொல்றோசா குரூஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா புளியங்குளத்தில் சற்று முன் முச்சக்கர வண்டியை பந்தாடிய தனியார் பேருந்து !

சற்று முன்னர் புளியங்குளம் பகுதியில் வவுனியாவிலிருந்து  யாழ்ப்பாணம்  சென்ற  அரச பேருந்தை  முந்தி செல்ல   முற்பட்ட  (கொழும்பு -யாழ்ப்பாணம்)தனியார் பேருந்து  வவுனியா நோக்கி  வந்து கொண்டிருந்த   முச்சக்கர  வண்டியுடன்    நேருக்கு நேர் மோதி  விபத்துக்குள்ளானது .

மேற்படி விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி படுகாயங்களுடன்  வவுனியா வைத்தியசாலைக்கு  அம்புலன்ஸ்  வண்டி மூலம் அனுப்பி வைக்கபட்டுள்ளார். போக்குவரத்து போலீசார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர் .

 

கொத்தாக செத்து மிதக்கும் நீர்யானைகள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

 
நமீபியாவில் Bwabwata தேசிய பூங்காவில் கடந்த ஞாயிறு அன்று நூற்றுக்கணக்கான நீர்யானைகள் கொத்தாக செத்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bwabwata தேசிய பூங்காவில் திடீரென்று அந்த்ராக்ஸ் தாக்குதல் ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான நீர்யானைகள் கொத்தாக செத்து மிதப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் உரிய ஆய்வுக்கு பின்னரே இதன் காரணம் குறித்து உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இறந்து மிதக்கும் நீர்யானைகளை வல்லூறுகளும் முதலைகளும் பங்குபோட்டு உண்டு வருவதாகவும், உள்ளூர் மக்கள் கண்டிப்பாக அதன் இறைச்சிகளை உண்ண வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

நமீபியா முழுவதும் சுமார் 1300 நீர்யானைகள் உள்ளதாக கருதப்படும் நிலையில் அதில் பெரும்பாலான நீர்யானைகள் அந்த்ராக்ஸ் தொற்றில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

நடுத்தெருவில் சண்டை போட்டு ஒருவரின் மூக்கை உடைத்த நடிகர் சந்தானம்!!

கொடுக்கல் வாங்கல் தகராறில் வழக்கறிஞர் ஒருவரின் மூக்கை உடைத்ததாக நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இவர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கண்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் சேர்ந்து முன்றாம் கட்டளையில் திருமண மண்டபம் கட்டுவதற்காக 3 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்று கொண்ட நிறுவனத்தின் மேலாளர் சண்முக சுந்தரம் 3 வருடமாக மண்டபத்தை கட்டிக்கொடுக்காத நிலையில், சந்தானத்திடம் வாங்கிய 3 கோடியில் சில லட்சங்களை பாக்கி வைத்து பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மீதி பணத்தை கேட்க சண்முக சுந்தரத்தை பார்க்க சந்தானம் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த என்பவர் அங்கு வர அவருடனும் சந்தானம் தகராறு செய்துள்ளார்.

அப்போது நடுத்தெருவில் பிரேம் ஆனந்தை சந்தானம் அடிக்க அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சந்தானம் தனக்கும் காயம் உள்ளதாக கூறி வேறு மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தானத்திடம் அடிவாங்கிய பிரேம் ஆனந்த் பாரதீய ஜனாதாவை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கட்சியினர் திரண்டுள்ளனர்.

இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.

கழிப்பறையில் ஏற்பட்ட குழப்பம் : இலங்கையில் இப்படியொரு நிலை!!

ஹோமாகம பகுதியில் கழிப்பாறை ஒன்றில் மீதுள்ள பதாகையின் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பெண்கள் கழிப்பறை ஒன்றில் தமிழ் மொழியில் மாத்திரம் ஆண்கள் கழிப்பறை என எழுத்தப்பட்டமையே இந்த குழப்பத்திற்கு காரணமாகும்.

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் இந்த கழிப்பறை அமைந்துள்ளமையே விசேட அம்சமாக கருதப்படுகின்றது.
இதனால் ஏற்படும் பிரச்சினைகள் சாதரணமாக இருக்காதென பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் நீதிமன்ற வளாகம் ஒன்றில் இவ்வாறான தவறுகள் இடம்பெறுவதனை சாதாரணமாக எண்ணிவிட முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரியவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சொந்த நிலத்தை தானமாக வழங்கிவிட்டு : வீதியில் வசிக்கும் குடும்பம்!!

ஏழ்மையான நிலையிலும் தன்னுடைய நிலத்தை பள்ளிக்கூடம் கட்டிக்கொள்ள தானமாக வழங்கிய நபரின் செயல் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கிஷோர் சுவாமி (50) என்ற மனிதர் தான் இதை செய்துள்ளார். ஏழ்மையான மற்றும் படிப்பறிவு இல்லாத ராஜ்கிஷோருக்கு கால் ஊன பிரச்சனை உள்ளது. இவ்வளவு சிரமத்திலும் தான் வாழ்ந்து வரும் வீட்டு நிலத்தின் ஒரு பகுதியை பள்ளிக்கூடம் அமைக்க கொடுத்துள்ளார்.

அங்கு தற்போது பள்ளிக்கூடம் கட்டப்பட்டு 400 மாணவர்கள் படித்து வருகிறார்கள். பலநாட்கள் ராஜ்கிஷோர் இடப் பற்றாக்குறை உள்ளதால் நடைபாதையில் தங்கி கொள்கிறார்.

இவரின் இரண்டு மகன்களும் மாற்றுதிறனாளிகள் ஆவார்கள். இதன் காரணமாக தனது ஊனமான நிலையிலும் வீடுவீடாக சென்று பொட்டு, குங்குமம் போன்ற பொருட்களை விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து ராஜ்கிஷோர் குடும்ப செலவை கவனித்து வருகிறார்.

அவரது இரண்டு மருமகள்களும் இதற்கு உதவி வருகிறார்கள். ராஜ்கிஷோர் வாழும் பகுதியில் பள்ளிக்கூடம் கட்ட அங்கு வாழும் மக்களின் நிலங்களை கேட்கபோது யாரும் தரமுன்வரவில்லை.

ஆனால், ராஜ்கிஷோர் தனது நிலத்தை கொடுத்ததுடன், கிராமத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்வதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என நெகிழ்ந்தாராம்.

அமெரிக்காவில் தந்தை தண்டித்ததில் மாயமான 3 வயது சிறுமி : பொலிசார் நடவடிக்கை!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பால் அருந்தாததை அடுத்து தந்தை ஒருவர் தமது 3 வயது சிறுமியை தண்டித்ததில் சிறுமி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் புறநகர் பகுதியில் குடியிருந்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூஸ்(37). இவரது 3 வயது குழந்தை ஷெரின் தான் சனிக்கிழமை இரவு முதல் மாயமானதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று குறித்த சிறுமி பால் குடிக்காததை அடுத்து தங்கள் குடியிருப்பின் வெளியே தண்டனை என்ற பெயரில் அவரது தந்தையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கால் மணி நேரம் கடந்து சிறுமியை சென்று பார்த்த அவர் தந்தைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த சிறுமி அங்கிருந்து மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அப்பகுதி முழுவதும் தேடுதலில் இறங்கிய குடும்பத்தினர், சம்பவம் நடந்து 5 மணி நேரத்திற்கு பின்னர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் 3 வயது சிறுமியை நள்ளிரவில் ஆபத்தில் விடுவித்த குற்றத்திற்காக வெஸ்லியை கைது செய்துள்ளனர்.

வெஸ்லி குடும்பம் இந்தியாவில் பிறந்த ஷெரினை முறைப்படி தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அமெரிக்கா கொண்டு வரும் முன்னதாக சிறுமி ஷெரின் ஊட்டச்சத்துக் குறைவு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது சிறப்பு கவனம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாயமான சிறுமியை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் எஸ்.ஐயாக களமிறங்கிய திருநங்கை யாஷினி!!

தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தார் பிரித்திகா யாஷினி. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதனால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து யாஷினியை எழுத்துத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வில் யாஷின் வெற்றி பெற்றார். சென்னையில் உள்ள பொலிஸ் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த இவர், சில மாதங்கள் தீவிரப் பயிற்சி செய்தார்.

தற்போது பயிற்சி முடிவடைந்த நிலையில் சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணி பிரித்திகா யாஷினிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்று பெருமையை யாஷினி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலைக்குள் அமானுஷ்ய சக்தி : யுவதிகளின் வித்தியாசமான செயற்பாடு!!

 
நோர்வுட் தொழிற்சாலை பணி புரியும் யுவதிகள் சிலர் நேற்று மீண்டும் நோய்வாய்ப்பட்டு வித்தியாசமாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த தொழிற்சாலையில் அமானுஷ்யங்கள் உள்ளதாக யுவதிகள் அச்சமடைந்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 20 யுவதிகள் ஆவேசமாக நடந்து கொண்டுள்ளதுடன் கத்தி கூச்சலிட்டுள்ளனர். மேலும் ஒரு யுவதி கறுப்பு ஆடை அணிந்து இன்னொருவரின் கழுத்து பகுதியை பிடித்துள்ளார்.

ஏனைய யுவதிகள் கூச்சலிட்டவுடன் தொழிற்சாலையின் நிர்வாகத்தினரினால் இது தொடர்பில் பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.

பின்னர் டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் உட்பட குழுவினர் தொழிற்சாலைக்கு சென்று யுவதிகளை பரிசோதித்துளள்னர்.

குறித்த யுவதிகளின் உடலில் எந்தவொரு நோய் தன்மையும் இல்லை என குறிப்பிட்டு, மனநல வைத்தியரிடம் கொண்டு செல்லுமாறு அறிவித்துள்ளனர்.

தொழிற்சாலைக்கு நடத்தப்படவிருந்த பூஜை வழிப்பாடுகள் அதிகாரியினால் நிறுத்தப்பட்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அட்டைப்பெட்டியில் சுற்றி எடுத்து வரப்பட்ட ராணுவ வீரர்கள் உடல் : எழுந்த சர்ச்சை!!

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை சவப்பெட்டியில் வைக்காமல் அட்டைப்பெட்டியில் சுற்றி வைத்து எடுத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அருணாச்சல பிரதேச மாநிலத்தையொட்டிய தவாங்க் பகுதியில் இந்திய விமானப்படையினரின் ஹெலிக்ப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது.

இதில் விமானப்படை அதிகாரிகள் 2 விமானிகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை சவப்பெட்டியில் எடுத்துவராமல் சாக்குப்பையில் கட்டி, அட்டைப்பெட்டி வைத்து மூடி எடுத்து வந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது நாட்டுக்காக உயிர் விட்ட ராணுவ வீரர்களுக்கு செய்யும் அவமரியாதை என நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

இதனிடையே, ஓய்வு பெற்ற வடக்கு ராணுவ கமாண்டர் லெப்டினன் ஜெனரல், ராணுவ வீரர்களின் உடல் கொண்டு வந்திருந்த விதம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

தனது தாய் நாட்டிற்காக 7 ராணுவ வீரர்களும் தங்களது இன்னுயிரை துறந்துள்ளனர். ஆனால் அவர்களின் உடலை நல்ல முறையில் கொண்டு வந்து சேர்க்கக் கூட முடியவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், ராணுவ வீரர்களின் உடல்கள் அட்டைப்பெட்டியில் சுற்றப்பட்டிருக்கும் புகைப்படங்கள் உடலைக் கொண்டு வரும் போது எடுக்கப்பட்டவை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இறந்த ராணுவ வீரர்களின் உடலைக் கொண்டு வர பொடி பேக் என்று சொல்லப்படும் பைகள் கூடவா இல்லை என்று ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.

45 வருடங்களின் பின்னர் சாதனை படைத்த மாணவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி மைத்திரி!!

கடும் வறுமையான குடும்ப சூழ்நிலையிலும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி தொடர்பில் நேற்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த மாணவியை தன்னிடம் அழைத்து வருமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகம் ஊடாக கலேவெல கல்வி இயக்குனரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் துலஞ்சலி மதுமாலி பிரேமரத்ன என்ற மாணவி 168 புள்ளிகளை பெற்றுள்ளார். திக்கல ஆரம்ப பாடசாலை 1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எனினும் முதல் முறையாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் மாணவி இவராகும்.

இம் மாணவியின் தந்தை சிறுநீரக நோயினால் உயிரிழந்துள்ள நிலையில் அவரது தாயார் தற்போது கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவருகின்றார்.

அதற்கமைய உடனடியாக செயற்படும் வகையில் சிறுநீரக நோய் நிவாரண நிதியை மாணவியின் உயர்தரம் கல்வி வரை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவின் உள்ளுர் ஊடகங்களில் துலஞ்சலி மதுமாலி தொடர்பான செய்திகள் நேற்று வெளியாகி இருந்தன. இதனை அறிந்து கொண்ட ஜனாதிபதி, குறித்த மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி இல்லத்திற்கு குறித்த மாணவியை இன்றைய தினம் அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

 

தலைமுடியினால் இரத்தான திருமணம் : வினோத சம்பவம்!!

மணமகன் ஒருவரின் போலியான தலைமுடி வீழ்ந்தமை காரணமாக அண்மையில் திருமணம் ஒன்று இரத்தான சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் அம்பாறை மா ஓயா பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. மணமகன் இல்லத்தாரும், மணமகள் இல்லத்தாரும் இணைந்து திருமண பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது, மணமகன் அணிந்திருந்த போலியான தலைமுடி கீழே வீழ்ந்ததன் காரணமாக உடனடியாகவே மணமகள் வீட்டார் திருமண பேச்சுக்களை இடைநிறுத்தியுள்ளனர்.

திருமண பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் கலாச்சார முறைப்படி மணமகன் எதிர்கால மாமனாரின் காலில் வீழ்ந்து வணங்கியபோதே பொய்யான தலைமுடி கீழே வீழ்ந்துள்ளது.

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

மரக்கறிகளின் விலைகள் பத்து வீதத்தினால் திடீரென உயர்வடைந்துள்ளது. மரக்கறி வகைகள் கிடைப்பதில் காணப்படும் தாமதத்தினால் இவ்வாறு விலைகள் உயர்வடைந்துள்ளன.

தற்பொழுது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை போதியளவு மரக்கறி வகைகள் கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் இவ்வாறு திடீரென விலை உயர்வு பதிவாகியுள்ளது.