மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய பகுதியில் உள்ள விஜயரட்னம் தர்மினி(26) என்னும் ஐந்து வயது பிள்ளையின் தாயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கட்டிலில் தூங்கியவாறே உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்துள்ளார். மேலும் வீட்டின் மோட்டு வளையில் கயிறு ஒன்று தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சகோதரியின் பாடசாலை நண்பன் ஒருவர் குறித்த வீட்டில் இருந்தபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, குறித்த இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவில் உடையில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கு நின்ற இளைஞர்களை தாக்கமுட்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் சந்தேகிக்கப்படும் இளைஞரை கைதுசெய்யாமல் அவரை காப்பாற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டதாகவும் பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.
சுவிஸ் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த சுப்ரமணியம் கரனின் குடும்பம் கதறியழும் காட்சிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான கரன் சுவிற்சர்லாந்தில் கடந்த ஏழாம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி உயிரிழந்தார்.
2015ஆம் ஆண்டு தஞ்சம் கோரி சுவிஸிற்கு சென்ற கரன் கடந்த இரண்டு வருடங்களாக டிசினோ மாகாணத்திலுள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சுவிஸ் நாட்டு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் தலத்திலேயே பலியாகியிருந்தார்.
இந்த சம்பவம் இலங்கையை சேர்ந்த பலரது மனதிலும் சோகத்தையும், பல்வேறு கேள்விகளையும் உருவாக்கியிருந்த சந்தர்ப்பத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியிருந்தது.
அதில், பொலிஸார் கரன் தங்கியிருந்த முகாமிற்கு வந்த போது பொலிஸாரின் கட்டளைக்கு குறித்த நபர் கீழ்ப்படியாத நிலையில் இவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், தமது தந்தை இங்கு இருக்கும் போதும் பாரதூரமான எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் எனவும், சுட்டுக்கொல்லும் அளவுக்கு தமது தந்தை எந்தவொரு பிழையும் செய்திருக்க மாட்டார் என பிள்ளைகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கரனின் குடும்பத்தால் அவரின் பிரிவைத் தாங்க முடியாமல் கதறியழும் காட்சி பதிவான காணொளியானது வெளியாகியுள்ள நிலையில் அனைவரது மனதையும் உருக வைத்துள்ளது.
மியன்மரில் இருந்து பங்களாதேஷுக்கு படகு மூலமாக தப்பிச் செல்ல முயன்ற லோஹிங்யா முஸ்லிம்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியன்மரில் ஏற்பட்டுள்ள வன்முறையையடுத்து இவ்வாறு ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் பங்களாதேஷுக்கு தப்பிச் செல்கின்றனர். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை நப் நதியில் பல ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுடன் பயணித்த படகே இவ்வாறு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் போது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் குறித்த படகில் குறைந்தது குழந்தைகள் உட்பட 100 பேர் பயணித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை குறித்த படகில் பயணித்தவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதியாக வெளிப்படுத்தப்படவில்லை.
பங்களாதேஷ் எல்லையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த படகில் 40 முதல் 100 பேர் வரை பயணித்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதுவரை பத்து குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத பெண்ணொருவர் நீண்ட நேரமாக கிணற்றுக்குள் பதுக்கியிருந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குடும்ப பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்துள்ளார்.
வடமராட்சி பகுதியில் ஒரு பெண் குடும்பத்தின் கஸ்ட நிலை காரணமாக 3 நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்றிருந்தார். பெற்ற கடனுக்காக வாராந்தம் பணத்தை செலுத்தி வந்துள்ளார்.
இறுதியில் அவரால் வாராந்தம் செலுத்த முடியாமல் போன போது, இரு வாரங்களின் பின்னர் 3 நிதி நிறுவனங்களின் ஊழியர்களும் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
பெண்ணின் வீட்டுக்கு சென்றவர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர். வீட்டை விட்டு செல்ல மாட்டோம் என கூறி அங்கேயே இருந்துள்ளனர்.
குறித்த பெண் அவர்களுக்கு பயந்து அருகிலுள்ள காணியில் இருந்த கிணற்றில் இறங்கி பதுங்கி இருந்துள்ளார். நான்கு மணி நேரமாகியும் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை விட்டு செல்லாத காரணத்தினால் அவர் நான்கு மணி நேரமும் கிணற்றுக்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னே அவர் வெளியே வந்துள்ளார்.
நுண்கடன் திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய மத்திய வங்கி ஆளுநர் குமாரசுவாமி இந்திரஜித், வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலின் போது பாதிக்கப்பட்ட பெண் இந்த தகவலை வெளியிட்டார். கடந்த ஆறாம் ஏழாம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நகரங்களுக்கு சென்ற மத்திய வங்கி ஆளுநர், நுண்கடன் குறித்து ஆராய்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2017ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா பாலமோட்டை அ.த.க பாடசாலையின் அதிபர் பொ.தெய்வேந்திரன் வழிகாட்டலுடன் சு.சுவேந்திரன், பொ.சிவபாதம் ஆகிய ஆசிரியர்களின் நெறிப்படுத்தலில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து முதல் முறையாக நான்கு மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி இருந்தனர்.
இவர்களில் ஈஸ்வரன் ரிதப்பிரியன் 162 புள்ளிகளையும், பிரபாகரன் பிரசாந்தன் 159 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன் அற்புதராசா சபிதா 115 புள்ளியும், தவகுலசிங்கம் லக்சிகா 105 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கட்டிடத்தில் நேற்று (09.10.2017) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போதே மேற்கண்டவாறு வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் தலைவி சிவகரன் சுகந்தி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் வடக்கு சுகாதாரத் தொண்டர்கள், எங்களுடைய நிரந்தர நியமனம் தொடர்பாக கடந்த பல மாதங்களாக வடக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். பல தடவைகள் எங்களுடன் தொடர்புபட்ட மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டதுடன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கும் சென்றிருந்தோம்.
கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வடக்கிலுள்ள சுகாதாரத் தொண்டர்களின் விபரங்களை ஆளுநர் தரப்பிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அவ்விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் இன்று வரையும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் எங்களுக்கு ஒரு உறுதிமொழி வழங்கியிருந்தார் ஒரு மாதத்திற்குள் எமது நியமனத்தை வழங்குமாறு தற்போது இரண்டரை மாதங்கள் கடந்த நிலையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், வீதியில் கடந்த 118நாட்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தோம். எனினும் ஆக்கபூர்வமான எவ்வித இறுதி முடிவும் கிடைக்காத பட்சத்தில் புதிய வடக்குமாகாண சுகாதார அமைச்சர் எங்களிடம் வந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட ஜந்து தீர்மானங்களுக்கும் அமைவாகவும் நாங்கள் எமது குடும்ப நிலைமைகள் காரணமாக எமது போராட்டத்தினை தொடரமுடியாத காரணத்தினால் எங்களுடைய கவனயீர்ப்புப் போராட்டத்தினை இடைநிறுத்தியிருந்தோம்.
இருந்தும் கடந்த 45 நாட்களாக அவரவர்கள் தத்தமது மாவட்டங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களையும் முதலமைச்சரையும் சந்தித்திருந்தோம். அதேபோல ஆளுநரையும் சந்தித்து எமது விடங்கள் தொடர்பாக மீண்டும் தெரியப்படுத்தியிருந்தோம். வடமாகாண சுகாதார அமைச்சரைச்சந்தித்திருந்தோம். அதேபோல வடக்கு மாகாணங்களில் திறந்துவைக்கப்பட்ட சுகாதாரத்திணைக்களங்களின் அலுவலகங்களைதிறந்து வைப்பதற்கு வந்த மத்திய சுகாதார அமைச்சரையும் சந்தித்து இது விடங்கள் தொடர்பாக தெரிவித்திருந்தோம்.
அவர் தெரிவிக்கும்போது அந்தந்த மாவட்டங்களிலுள்ள அதிகாரிகள் தான் இது தொடர்பாக கவனம் எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல ஆளுநரும் கடந்தவாரம் தெரிவித்துள்ளார் வடமாகாண அமைச்சரவையின் வாரியத்தினூடாகவே இவ்விடயங்களை கொண்டு செல்ல முடிவதுடன் அதற்கான தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது மத்திய அரசாங்கத்தினால் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் என்றபோர்வையில் வடக்கு மாகாணத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கூடாகவும் நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு 50 டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களை தற்போது நியமித்துள்ளார்.
தற்போது எங்களுடைய கேள்வி என்னவென்றால் வடக்கு மாகாணத்தில் யுத்த காலத்திலிருந்து 1992 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இன்று வரையும் சம்பளம் இன்றி வேலை செய்து வருகின்றோம். எங்களை உள்வாங்கவில்லை. அதேநேரம் அரசியல் செல்வாக்கினால் இந்த 50 பேரும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
இதைவிட இன்னும் பலரை இச்சேவைக்கு நியமிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் எங்களுக்குத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. நாங்கள் பல காலமாக போராடி வருகின்றோம்.
எங்களை விடுத்து நேரடியாக அவர்களைத் தொடர்புகொண்டு அலைபேசியூடாக அவரசமான ஒரு தீர்மானத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அவர்களை உட்சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இத்திட்டத்திற்கு எங்களை ஏன் உள்வாங்கவில்லை என்பதே எங்களுடைய கேள்வியாக இருக்கின்றது. இதற்கு எதிர்ப்புப் தெரிவித்து எதிர்வரும் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம்.
இதற்கும் எங்களுக்கு சரியான பதில் கிடையாவிட்டால் எமது போராட்டத்தினை வேறுமாதிரியான முறையில் மேற்கொள்வதற்கு நாங்கள் ஒன்றிணைந்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வவுனியா சின்னப்பூவரசன்குளம் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் நேற்று (09.10.2017) காலை 11 மணிக்கு வருடாந்த ஆசிரியர் தின விழா சிரேஷ்ட மாணவத் தலைவன் செல்வன்சி.மகிந்தன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களால் கௌரவிக்கப்பட்டார்கள். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிராம சேவையாளர் சி.சிவானந்தன் கலந்து சிறப்பித்தார்.
வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நேற்று (09.10.2017) காலை 7.30 மணிக்கு கல்லூரி அதிபர் அல்ஹாஜ் எம்.சீ.ரம்சீன் தலைமையில் மாவட்ட சமூகசேவை அலுவலகத்தால் முதியோர் விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இளம் தலைமுறையினர் மத்தியில் மூத்தோர் விழுமியங்களை கொண்டு செல்லும் வகையில் வவுனியா மாவட்டத்தில் சிறப்பான முறையில் பாடசாலை மட்டங்களில் இச்செயற்திட்டம் இடம்பெற்று வருகிறது.
மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் மூத்தோரை இளைய தலைமுறையினர் செவிமடுக்க வேண்டும், அவர்களின் விழுமியப்பண்புகளைப் பேண வேண்டும் என்ற வகையில் ‘கீரை இல்லாச்சோறும் கிழவி இல்லாவீடும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தேசிய மீலாது நபி விழாவில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசில்களும் நிகழ்வில் வழங்கப்பட்டன.
சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று (09.10.2017) காலை 11.30 மணிக்கு யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வின் கதாநாயகர்களாக பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர். அத்தோடு மாணவர்கள், பழையமானவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்களின் நடனம் நிகழ்வு இடம்பெற்றதுடன் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாகாண விவசாய திணைக்களமானது மிக இலகுவான முறையில் நான்கு சில்லு உழவு இயந்திரத்துடன் பொருத்தி சிறுதானியங்கள் விதையிடல் மேற்கொள்ளக்கூடிய இயந்திரத்தினை வவுனியா மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளதாக, மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த உபகரணம் மூலம் ஒரே நேரத்தில் விதைகளுடன் அடிக்கட்டு பசளை சேர்க்கப்பட்டு, ஒரு நாளைக்கு 6 ஏக்கர் பரப்பளவில் வரிசைகளில் விதையிடல் மேற்கொள்ள முடியும்.
இந்த நடவடிக்கையானது ஓமந்தை, உலுக்குளம், பம்பைமடு ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளிற்குரிய பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையிலும் இந்த சேவை இடம்பெற்று வருகின்றது. ஒரு ஏக்கர் பரப்பளவில் விதையிடுவதற்கு கட்டணமாக ரூபா இரண்டாயிரம் அறவிடப்படுகின்றது.
குறித்த உபகரணத்தினை பயன்படுத்துவதால் விவசாயிகளிற்கு கூலியாட்கள் செலவு குறைவு, பயிரிடைவெளி சரியான முறையில் பேணப்படல், களை கட்டுப்படுத்தும் இயந்திரம் மூலமான களை கட்டுப்பாடு மேற்கொள்ளல் இலகு, ஒப்பீட்டளவில் இந்த நிலப்பரப்பில் இருந்து கிடைக்கும் விளைச்சல் அதிகம், குறைந்தளவு விதைத்தேவை, நோய் பீடைகளின் தாக்கம் குறைவாக காணப்படும் எனவும் மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களை தங்களது பிரிவு விவசாய போதனாசிரியர்களிடம் பெற்றுக்கொள்ள முடியம் என வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் இன்று (09.10.2017) காலை 7.30 மணியளவில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் பாடசாலையின் சூழலில் மிதிவெடி போன்ற ஒரு பொருள் இருப்பதனை அவதானித்த பாடசாலை அதிபர் உடனடியாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து உடனடியாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பாடசாலைக்கு சென்ற பொலிஸார் சந்தேகத்திற்கிடமான பொருளை பார்வையிட்டதுடன் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கிடமான பொருளை சோதனையிட்ட சமயத்தில் அப்பொருள் மிதிவெடியென உறுதிப்படுத்தினார்கள்.
நாளையதினம் நீதிமன்றத்தின் உத்தரவுடன் மிதிவெடியினை செயலிழக்க வைக்கவுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்ப்பாட்டில் இன்று (09.10.2017) காலை 10.20 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தின் போது உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பதில்கூறு, பங்கரவாத தடைச்சட்டத்தை உடனே ரத்து செய், அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லையா? சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்ட்டவர்களுக்கு நீதிவேண்டும், நீதீ அமைச்சரே பதிரல் கூறு, தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பிரஜைகளா? காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் என்ன? , மக்களின் நிலங்களிலிருந்து இராணுவமே வெளியேறு, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வை, நாட்டில் நடப்பது நல்லாட்சியா? பேயாட்சியா? , வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலைசெய், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை முன்வை, போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், முன்னாள் அரசியல் கைதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
போராட்டத்திற்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வடக்குவலயத்துகுட்பட்டதும் நெடுங்கேணி கல்வி கோட்டத்தில் அமைந்துள்ளதுமான மிகவும் பின்தங்கிய கிராமப்புற சூழலில் அமைந்துள்ள பட்டடை பிரிந்தகுளம் அ.த.க ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதுடன் பாடசாலையையும் கிராமத்தையும் அடையாளப்படுத்தியுள்ளார்.
ஏனெனில் வவுனியா மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான பட்டடைபிரிந்தகுளம் அ.த.க ஆரம்ப பாடசாலையில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே 02 என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக மூன்று பேரை கொண்ட இந்த பாடசலையில் தரம் நான்கில் ஒரு மாணவனையும் தரம் ஐந்தில் ஒரு மாணவனையும் ஒரேயொரு கடமை நிறைவேற்றும் அதிபரான செல்லத்துரை செந்தில்நாதனையும் கொண்டதுதான் பட்டடைபிரிந்தகுளம் அ.த.க பாடசாலையின் ஆளணி நிலவரம்.
இதில் கெங்காதரன்.கென்றிக்சன் என்ற மாணவன் இந்த ஆண்டு நடைபெற்ற புலமை பரீட்சையில் 160 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.
மேற்படி மாணவன் இந்த கிராமத்திலும் குறித்த இந்த பாடசாலையிலும் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வரலாற்று அத்தியாயத்தை தொடக்கி வைத்தவராவார்.
மிகவும் பின்தங்கிய கிராமபுற சூழல் கொண்ட பிரதேசத்தில் தனது ஆசிரிய பணியையும் கடமைநிறைவேற்று அதிபர் பணியையும் செவ்வனே செய்து வெற்றிகண்டிருக்கிறார் செல்லத்துரை செந்தில்நாதன்.
குறித்த மாணவன் சித்தியடைந்ததன் மூலம் பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்த பாடசாலையை அனைவரும் திரும்பிப் பார்க்கும் நிலையை தோற்றுவித்துள்ளார்.பின்தங்கிய கிராமத்தில் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த குறித்த மாணவன் சாதனை படைத்துள்ளார்.
மாணவனுக்குகல்விகற்பித்துக்கொடுத்ததிரு.செந்தில்நாதன்ஆசிரியருக்குநன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். மற்றும் அவரின் பணி மென்மேலும் வளர மனமார வாழ்த்துகின்றோம் என அப்பகுதி மக்கள் வாழ்த்துகின்றனர்.
மாகாண மட்ட கோலப்போட்டியில் வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் தரம் 7 மாணவன் ச.கபிலன் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும், வவுனியா வடக்கு வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பயிற்சி வழங்கி வழிகாட்டிய பாடசாலையின் சித்திரப் பாட ஆசிரியர் கு.பாலகுமார் மற்றும் அதிபர் செ.யேசுநேசன் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வவுனியா மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் நேற்று (08.10.2017) இரவு இனந்தெரியாத நபர்களினால் பாடசாலை வகுப்பறைத் தொகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் இன்றையதினம் (09.10.2017) நடைபெறவுள்ள ஆசிரியர் தின நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள நிலையில் நேற்று இரவு பாடசாலையில் ஓலையினால் மேயப்பட்ட வகுப்பறை தொகுதியோன்றினை இனந்தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பாடசாலை வளாகத்தில் தீப்பற்றி எரிவதை அவதானித்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் ஈச்சங்குளம் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் இன்றைய தினம் எமது பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம்பெறும் என பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியை பார்த்தவுடன், டோனியின் ரசிகன் அந்த இடத்திலே அழுத சம்பவம் அங்கிருந்த ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே 4வது ஒருநாள் போட்டி கடந்த 28ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டியின் போது டோனியை சந்திக்க வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த காசிம் அடில்(16) என்ற ரசிகர் கடந்த 25ஆம் திகதியே அதாவது மூன்று தினங்களுக்கு முன்னர், டோனியை சந்தித்து விடலாம் என்ற எண்ணத்தில் பெங்களூருக்கு சென்றுள்ளார்.
இதற்காக அவர் டோனி தங்கியிருந்த ரிஜ் கார்ல்டன் ஹோட்டலில் தங்கி தினமும் 8 மணி நேரம் டோனியை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருந்துள்ளார்.
ஹோட்டலில் உள்ள லொபி, ஜிம், நீச்சல் குளம், சலூன் உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் தினமும் காத்திருந்துள்ளார்.
ஆனால் டோனியை அங்கு பார்க்க முடியவில்லை. இதனால் நொந்து போன அவர், டோனியை சந்தித்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் மைதானத்திற்கே நேரில் சென்று காத்துக்கிடந்துள்ளார். ஆனால் அங்கும் அவருக்கு பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.
இறுதியாக காசிம், ஹோட்டலில் எத்தனை மணிக்கு டோனி சிற்றூண்டி அருந்த வருவார் என கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் காலை 10 மணிக்கு வருவார் என தெரிவித்துள்ளார். எப்படியும் டோனியை பார்த்தே ஆக வேண்டும் என்ற நோக்கில், காலை 6 மணிக்கே காசிம் அங்கு சென்றுள்ளார். டோனி வந்தவுடன், உணர்ச்சியை அடக்கமுடியாமல் டோனியை பார்க்க ஆவலாக சென்றுள்ளார். ஆனால் டோனியை சுற்றி இருந்த பாதுகாப்பு வீரர்கள் அவரை தடுத்துள்ளனர்.
இதன் காரணமாக காசிம் டோனி சாப்பிட்டு கொண்டிருந்த டேபிளுக்கு அருகில் அமர்ந்துள்ளார். அப்போது டோனி சாப்பிட்டு முடித்தவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலரும் சென்றுள்ளனர். அப்போது மாணவன் காசிம்மும் சென்றுள்ளார்.
டோனியின் அருகில் சென்றவுடன் தன்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் டோனி என்னை பார்த்தவுடன் அருகில் வா ஏன் அழுகிறாய் என்று தன்னை கட்டி அணைத்துக் கொண்டதுடன், பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளாய், இவ்வளவு பெரிய ரசிகனாக இருக்கிறாயே என்று கேட்டதாகவும், அப்போது அவர் அருகில் இருந்த போது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை எனவும் காசிம் கூறியுள்ளார்.