பாரிய விபத்தை தவிர்த்து தன் உயிரை விட்ட பேருந்து சாரதி : கண்ணீர்விட்ட பயணிகள்!!

பயணிகள் பேருந்து ஒன்றை ஓட்டி சென்ற சாரதி ஒருவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து ஓட்டி செல்லும் போது அவருக்கு ஏற்பட்ட இயலாமை காரணமாக பேருந்தை ஓரமாக நிறுத்திய பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

புறக்கோட்டை பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் சேவை செய்யும் சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் லஹிருகம பிரதேசத்தை சேரந்த 60 வயதான ஜயம்பதி பத்மசோம என்ற இரு பிள்ளைகளின் தந்தையாகும்.

நாளின் முதல் பயணித்தை ஆரம்பித்த போதும் அங்கொடை சந்திக்கு அருகில் சாரதி நோய்வாய்ப்பட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் பேருந்தில் அதிகளவான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

தனக்கு ஏற்பட்டுள்ள இயலாமையை அறிந்து கொண்ட சாரதி, பேருந்தை ஓரமாக நிறுத்தியமையினால் பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக பயணிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் வீதியோர மரங்களால் ஆபத்து!!

 
வவுனியாவில் கண்டி வீதியில் அமைந்துள்ள புதிய தனியார் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வீதியோரங்களில் பட்டுப்போன நிலையில் உள்ள மரங்கள் தற்போது வீதியோரங்களில் பயணம் செய்யும் மக்களுக்கு அபாயகரமானதாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டுப்போன மரங்களின் கிளைகள் அவ்வப்போது காற்றுக்கு உடைந்து விழுகின்றன. பலத்த காற்று வீசும் போது இம் மரங்களின் பெரிய கிளைகள் முறிந்து விழுமாயின் இவ் வீதியில் பயணம் செய்யும் மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

வவுனியாவில் தற்போது காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இவ்வாறான சூழலில் இம் மரங்கள் முறிந்து விழுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கும் மக்கள் இம் மரங்களை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

வவுனியா வளாக ஊழியர் சங்கம் யாழ் பல்கலைக்கழக ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு!!

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதுடன், அவர்களது நீதியான போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு எமது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என வவுனியா வளாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.பூங்கண்ணன், செயலாளர் எம்.முகுந்தகுமார் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ் பல்கலைக்கழகத்தில் அனேகமான முறையீடுகளை தவறாது சுட்டிக்காட்டி யாழ் பல்கலைக்கழகம் சீரிய முறையில் இயங்க வழிவகுப்பதுடன், ஊழியர் நலனில் அதீத அக்கறையுடனும் செயற்பட்டு வருவது மட்டுமல்லாது சமூக சீர்திருத்தம், சமூக மேம்பாடு மற்றும் இடர்கால உதவிகளைக் கூட புரிந்து வந்த யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது கடந்த சில நாட்களாக ஊழியர் நலன்சார்ந்ததும், சில விரும்பத்தகாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளினது செயற்பாடுகளைக் கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் தொடர்ச்சியாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதானது நல்லாட்சி அரசில் ஊழல், காடைத்தனமற்ற நல்லதொரு நிர்வாகமும் அதன்மூலம் நல்லதொரு சமூக மேம்பாடும், உயரிய பாதுகாப்பும் சாதாரண மக்கள் யாவருக்கும் கிட்டும். இது இலங்கை வாழ் சகல மக்களுக்கும் ஒரு முன்னுதாரணமான நிலையாகும்.

மேற்படி போராட்டத்தை யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தோழமை சங்கமாகிய வவுனியா வளாக ஊழியர் சங்கமானது முழுமனதுடன் ஆதரிப்பதுடன், அவர்களது நீதியும், நியாயமுமான போராட்டம் தொடரும் பட்சத்தில் எமது சங்கமும் அவர்களுடன் கைகோர்க்கும்.

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சில புல்லுருவிகள் செயற்படுவதனையிட்டு நாம் மிக மனவேதனையடைகின்றோம்.

இப்படியான புல்லுருவிகளின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன், இவர்களது செயற்பாடானது சமூகத்தில் மேலும் பல சமூக கலாசார சீர்கேடுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதடன் மேலும் பல போராட்டங்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று கூறிவைக்க விரும்புகின்றோம்.

எனவே உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பதே நன்மை பயக்கும். இதனை உணர்ந்து நீதியான போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் தமது சுயநலன் கருதியும் தம்மை சார்ந்தவர்களை திருப்திப்படுத்துவதுமே ஆகும் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா துவரங்குளத்திற்கு பேரூந்து சேவை மற்றும் முன்பள்ளி அமைத்துத்தருமாறு கோரிக்கை!!

வவுனியா நொச்சிமோட்டை கிராமசேவையாளர் பிரிவிலுள்ள துவரங்குளத்திற்கு பேருந்துச் சேவை , முன்பள்ளி என்பன அமைத்துத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் இப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்ட மக்கள் தமக்கு சீரான போக்குவரத்து இன்மை, தமது பிள்ளைகளுக்கான முன்பள்ளி தேவை என்பவற்றை வலியுறுத்தி வருகின்றனர்.

நொச்சிமோட்டை பகுதியிலிருந்து 3 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள துவரங்குளம் பகுதியில் 25 தொடக்கம் 30 வரையான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தமது ஜீவனோபயமாக கூலித் தொழிலினையே மேற்கொண்டு வருகின்றனர். வைத்தியசாலை, பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் போன்ற இதர தேவைகளினிமித்தம் வவுனியா நகருக்கே செல்லவேண்டிய தேவையும் ஏற்படுகின்றது.

பிரதான ஏ9 வீதியிலிருந்து 3கிலோ மீற்றர் நடந்தும் ஏனைய வாகனங்களிலும் தமது பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர். தமது இந்நிலை தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியவில்லை.

தமது பிள்ளைகளின் எதிர்கால கல்வி செயற்பாடுகளுக்கு தமது பகுதியில் ஒரு முன்பள்ளியினை அமைத்துத்தருமாறும் கோரியுள்ள துவரங்குளம் பொதுமக்கள் தமது கிராமத்திலிருந்து சின்னக்குளம் ஊடாக மாமடு பகுதிக்கான பேருந்து செவையினை மேற்கொண்டு தருமாறும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா நெளுக்குளத்தில் விபத்து : இருவர் படுகாயம்!!

 
வவுனியா நெளுக்குளம் பகுதியில் நேற்று (14.09.2017) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி நெளுக்குளம் வயல்வெளிக்கு அருகே முச்சக்கரவண்டியில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதியதுடன் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான யசோதன் (வயது 27) என்பவரும் முச்சக்கரவண்டியில் பயணித்த சன்ஜன் (வயது 27) என்பவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் வீதிக்கு வரும் யானைகளால் அச்சத்தில் மக்கள்!!

 
நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் அடிக்கடி யானைகள் வீதிக்கு வருவதால் அவ் வீதி வழியாக பயணிக்கும் மக்களை பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 4.30 மணிமுதல் மாலை 5.20 வரை அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதாக அவ் வீதி வழியாக பயணித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அச்சத்துடனேயே பலரும் பயணங்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளதுடன் தற்போது மாலை வேளைகளில் அப்பகுதியில் அடிக்கடி யானைகள் வந்து செல்வதாகவும் இதனால் தாம் அச்சத்துடனேயே அவ் வீதியில் பயணிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளை 10 செக்கன்களில் ஹேக் செய்யலாம்!!

Armis என்பது தொழில்நுட்ப ரீதியில் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு முறைமைகளை உருவாக்கும் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் தற்போது அதிர வைக்கும் உண்மை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதாவது மொபைல் சாதனங்களை தொடாமலே 10 செக்கன்களில் ஹேக் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

இந்த தொழில்நுட்பமானது BlueBorne என அழைக்கப்படுகின்றது. எனினும் விண்டோஸ் மற்றும் iOS கைப்பேசிகள் பாதுகாப்பானதாக இருப்பதுடன் அன்ரோயிட் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசிகளை வைத்திருப்பவர்களே இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் ஒரு வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

காலையில் எந்த திசையை நோக்கி எழுந்தால் யோகம் என்று தெரியுமா?

காலையில் நாம் உறங்கி எழும் ஒவ்வொரு திசைக்குமே ஒவ்வொரு பலன்கள் உள்ளது. அவ்வகையான எளிய சாஸ்திர பரிகாரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்து வந்தால், நம் வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் மறைந்து, நன்மைகள் நம்மை தேடி வரும்.

  • காலையில் கிழக்கு திசையை நோக்கி எழுந்தால் ஆயுள் விருத்தி அடையும்.
  • காலையில் தென்கிழக்கு திசையை நோக்கி எழுந்தால் துவேஷம்.
  • காலையில் தெற்கு திசையை நோக்கி எழுந்தால் அவர்களுக்கு மரண பயம் உண்டாகும்.
  • காலையில் தென்மேற்கு திசையை நோக்கி எழுந்தால் அவர்களுக்கு பாவங்கள் சேரும்.
  • காலையில் மேற்கு திசையை நோக்கி எழுந்தால் அவர்களுக்கு நல்ல விடயங்கள் நடக்கும்.
  • காலையில் வடமேற்கு திசையை நோக்கி எழுந்தால் புஷ்டி உண்டாகும்.
  • காலையில் வடகிழக்கு திசையை நோக்கி எழுந்தால் அவர்களின் உடல் மற்றும் மனதில் சக்தி கிடைப்பதுடன், சிந்தனை தெளிவாக இருக்கும்

சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மாணவியின் சடலம் : காதலனே கொலை செய்தது அம்பலம்!!

திருமணம் செய்து கொள்ள காதலி வற்புறுத்தியதால் அவரை கொடூரமாக கொன்ற காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் மியாபூரை சேர்ந்தவர் கிஷோர் ஜெயின், இவர் மகள் சாந்தினி (17). பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியான இவர் கடந்த இரு வருடங்களாக சாய் கிரண் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்து வெளியில் சென்ற சாந்தினி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர். பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மடினகுடா பகுதியில் இருக்கும் மலை அடிவாரத்தில் சாந்தினியின் சடலம் சிதைந்த நிலையில் கிடப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கமராவை ஆராய்ந்த போது சாந்தினியும், சாய் கிரணும் அங்குள்ள பற்றைக்குள் சென்றது பதிவாகியிருந்தது.

பின்னர் சாய் கிரணை பொலிசார் பிடித்து விசாரித்ததில் சாந்தினியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

சாந்தினியை காதலித்து வந்த சாய் கிரண் திடீரென அவரை விட்டு விலகிய நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள சாந்தினி வற்புறுத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாந்தினியை அடித்த சாய்கிரண் மலையிலிருந்து அவரை கீழே தள்ளி கொலை செய்துள்ளார்.

பொலிசார் சாய் கிரணை கைது செய்து விசாரித்து வரும் வேளையில், கொலையாளி தன்னுடன் வேறு நபர்களை கூட்டு சேர்த்து கொண்டு சாந்தினியை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக கிஷோர் ஜெயின் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இலங்கை முதலையிடம் சிக்கிய பிரித்தானிய பத்திரிக்கையாளருக்கு நேர்ந்த விபரீதம்!!

பிரித்தானியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், இலங்கைக்கு விடுமுறைக்காக சென்ற போது முதலை அவரை நீருக்கடியில் இழுத்துச் சென்றதால், அவரது உடலை பொலிசார் தேடிவருகின்றனர்.

பிரித்தானியாவின் Surrey பகுதியைச் சேர்ந்தவர் Paul McClean(25), ஒஸ்போர்ட் யூனிவர்சிட்டியில் பட்டப்படிப்பை முடித்த இவர், FINANCIAL Times பத்திரிக்கை நிறுவனத்தில் செய்தியாளராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் விடுமுறை கழிப்பதற்காக தனது நண்பர்களுடன் இலங்கை சென்றுள்ளார். இதையடுத்து நேற்று இலங்கையின் Arugam Bay கடற்கரைக்கு அருகே உள்ள Crocodile Rock பகுதியின் வழியே சென்ற போது, கழிப்பறைக்கு சென்று விட்டு வருவதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

அதன் பின் அருகே இருந்த நதி ஒன்றில் தனது கையை கழுவுவதற்காக வைத்த போது, நதியின் உள்ளே இருந்த முதலை அவரை தண்ணீரின் உள்ளே இழுத்துச் சென்றுவிட்டதாகவும், உயிருக்கு போராடிய அவர் உதவி கேட்டு தனது கையை உயர்த்தி காட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதை அறிந்த இலங்கை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அவரது உடலை தேடிவருகின்றனர்.

கண்ணாடிகளை கடித்து சாப்பிடும் 71 வயது முதியவர்!!

 
சீனாவை சேர்ந்த 71 வயது முதியவர் கண்ணாடிகளை கடித்து சாப்பிடுவதற்கு அடிமையாகியுள்ளார். இதனால் இவரது நண்பர்கள் இவரை Iron Teeth என்ற பெயரில் அழைக்கிறார்கள்.

இது குறித்து குறித்த முதியவர் தெரிவிக்கையில், எனக்கு இந்த பழக்கம் 32 வயதில் ஏற்பட்டது. விருந்தில் கலந்து கொண்டபோது தண்ணீர் அருந்திவிட்டு அப்படியே அந்த கண்ணாடி குவளை கடித்து சாப்பிட ஆரம்பித்தேன்.

அன்று தொடங்கிய இந்த பழக்கம் இன்று வரை நீடித்து கொண்டே இருக்கிறது, கண்ணாடியை கடித்து சாப்பிட்டுவிட்டு அப்படியே தண்ணீர் குடித்து விடுவேன் என கூறுகிறார்.

அதுவும் மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் கண்ணாடி குவளையை சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் மது அருந்தும் பழக்கம் எனக்கு கிடையாது. இந்த பழக்கவழக்கத்தால் இத்தனை ஆண்டுகளில் எனக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

விடியவிடிய கொட்டும் மழையில் மகனின் சடலத்துடன் நின்ற தாய்!!

டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை வீட்டுக்குள் வைக்க அனுமதிக்காத வீட்டு உரிமையாளர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரம்மா, இவருக்கு சுரேஷ் (10) மற்றும் இன்னொரு மகன் உள்ளனர்.

ஈஸ்வரம்மா அங்குள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளான்.

மகனின் சடலத்தை ஈஸ்வரம்மா வீட்டுக்கு கொண்டு வந்த நிலையில், வீட்டு உரிமையாளர் ஜகதீஷ் சடலத்தை வீட்டு உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

ஜகதீஷ் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ள நிலையில், அபசகுணம் காரணமாக இதை அவர் செய்துள்ளார். இதையடுத்து இரவு முழுவதும், சுரேஷ் சடலத்துடன் ஈஸ்வரம்மா மற்றும் அவரின் இளைய மகன் சாலையில் நின்றுள்ளனர்.

அப்போது மழை வேறு பெய்துள்ளது, இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கண்ணாடி சவப்பெட்டியை வரவழைத்து அதில் சடலத்தை வைக்க உதவியதோடு, இறுதி சடங்குக்கு தங்களால் முயன்ற பணத்தை கொடுத்துள்ளனர்.

வீட்டு உரிமையாளரின் இரக்கமற்ற செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

நண்பனை கொலை செய்த சிறுவன் : அதிர்ச்சிக் காரணம்!!

தனது செல்போனை உடைத்த காரணத்தால் நண்பனை கொலை செய்த சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்த மாஜித் முகமது என்ற மாணவனும், அபுல் கலாம் ஆசாத் என்ற மாணவனும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபுல் கலாம் ஆசாத்தின் செல்போனை மாஜித் முகமது உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனிடையே இருவரும் நாச்சிகுளம் ரயில்வே கேட் அருகே சந்தித்தபோது தகராறு ஏற்பட்டு மாஜித் முகமதை கழுத்தை நெறித்து அப்துல் கலாம் ஆசாத் கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சென்ற பொலிசார் மாஜித் முகமதின் உடலை கைப்பற்றி, அபுல் கலாம் ஆசாத்தை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஹாசினி : குற்றவாளி விடுவிப்பு : பெற்றோரின் கண்ணீர்ப் பேட்டி!!

என் மகனை வெளியே கொண்டு வருவேன் என குற்றவாளியின் தந்தை தன்னிடம் சாவல் விட்டதாக ஹாசினியின் தந்தை கூறியுள்ளார்.

சென்னை முகலிவாக்கத்தில் 7 வயது சிறுமியான ஹாசினி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என தெரியவந்தது, கடந்த ஆறு மாதங்களாக சிறையில் அடைப்பட்டுள்ள தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தஷ்வந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஹாசினியின் தந்தை, உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது, வேதனையளிக்கிறது.

என் மகனை வெளியே கொண்டு வருவேன் என தஷ்வந்தின் தந்தை சவால்விட்டார். நீதித்துறையை தான் நம்பி இருந்தோம், இதுபோன்ற தீர்ப்புகளால் நீதிமன்றத்தின் மேல் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்.

என் குழந்தையை போன்று மற்ற குழந்தைகளையும் தஷ்வந்த் கொல்ல வாய்ப்பிருக்கிறது, அவன் உயிர் வாழவே கூடாது, அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அரசியலில் கால்பதிக்கும் நடிகர் கமல்ஹாசன் : தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக அறிவிப்பு!!

சமீபகால தமிழக அரசியலில் பேசப்படும் நபராக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக The Quint ஊடகத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அண்மைய காலங்களில் வெளிவந்த சர்ச்சைகளுக்கு நடிகர் கமல்ஹாசம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், The Quint ஊடகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வழங்கியுள்ள செவ்வியில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,

அண்மையில் கேரள முதலமைச்சரை சந்தித்து பேசியிருந்தேன். அதற்காக, நான் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக கூறினர். நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து கொண்டுள்ளேன்.

எனினும், எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

தமிழ் நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏன் தமிழகம் என கேட்கலாம். ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன். முதலில் எனது வீட்டிலிருந்து அதை தொடங்குகலாம் என்று நினைக்கிறேன்.

மாற்றத்தை கொண்டு வர எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை. அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சிதான் தொடங்குவேன். இது எனது விருப்பத்தின் பேரில் நடக்கப்போவது கிடையாது. மாறாக கட்டாயத்தின்பேரில் நடக்கப்போகிறது.

ஏனெனில் எனது கொள்கைகளுடன் எந்த கட்சியின் சித்தாந்தங்களும் முழுமையாக பொருந்தவில்லை. சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நடிகர் கமல்ஹாசன் புதுக்கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த மாத இறுதிக்குள் வெளியிடுவார் என அவருக்கு நெருக்கமானவர்களின் தகவல்களை மேற்கோள்காட்டி தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.

அமெரிக்கா அழித்து சாம்பலாக்கப்படும் : ஜப்பான் மூழ்கடிக்கப்படும் : வடகொரியா எச்சரிக்கை!!

அமெரிக்கா, சுதந்திரத்தை எவரிடமும் பெறாமல், தானாக எடுத்துக்கொண்ட நாடு மட்டும் அல்ல பூமியின் மறுபக்கம் அமைந்துள்ள இன்றைய உலகின் ஒற்றை வல்லரசு. அத்தகைய வலிமை மிக்க அமெரிக்காவை வடகொரியா இன்று அஞ்சவைத்துள்ளது என்று கூறலாம்.

தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜப்பான் மூழ்கடிக்கப்படும், அமெரிக்கா சாம்பலாக்கப்படும் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

வடகொரியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இடையே நிகழும் உறவு முறையை மேற்பார்வையிடும் கொரியா ஆசியா – பசிபிக் சமாதான அமைப்பு, வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரத் தடைக்கு காரணமான அமெரிக்கா விரைவில் உடைக்கப்படும் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து இந்தக் குழு வெளியிட்ட அறிக்கை பற்றி வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “நான்கு புறங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ள ஜப்பான் எப்போதோ அணுகுண்டால் முழ்கியிருக்கக்கூடும். ஜப்பான் இனி எங்கள் அருகில் இருக்கத் தேவையில்லை.

வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபையில் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா சாம்பாலக்கப்படும். அமெரிக்காவும் அழிக்கப்படும். அமெரிக்காவுக்கு துணையிருக்கும் ஜப்பானும் மூழ்கடிக்கப்படும்” என்று கூறியுள்ளது.

ஜப்பான் கடலில் நடுத்தர ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட பிறகு ஜப்பானுக்கு மீண்டும் வடகொரியா நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஆணுஆயுத சோதனை நடந்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் அபாயம் ஏற்பட்டது. வடகொரியாவை மிரட்டும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் அமெரிக்காவும் தென்கொரியாவும் போர் பயிற்சியில் இறங்கினர்.

இதற்கு சற்றும் அஞ்சாத வடகொரியா கடந்த செம்டம்பர் மாதம் 3ஆம் திகதி 6ஆவது முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது.

இது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அமெரிக்கா ஐ. நா.பாதுகாப்பு சபையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடையை திங்கட்கிழமை கொண்டு வந்து அதனை ஒருமனதாக நிறைவேற்றியது.