வவுனியாவில் கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவி!!

 
நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக கண்ணி வெடியால் பாதிப்படைந்த குடும்பத் தலைவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் சேட் நிறுவனத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் இருவருக்கு வாழ்வாதாரத்திற்கான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவைச்சேர்ந்த ஆர்.எம்.சந்திரராசா வடக்கு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஆனந்தராசா பாலசரஸ்வதி ஆகியோருக்கு இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த 13.09.2017 அன்று வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சேட்நிறுவனத்தின் உளசமூகநிகழ்ச்சித்திட்டத்தினைச் செயற்படுத்தும் களப்பணியாளர்களும் மிதிவெடி அபாயக்கல்வி விழிப்புணர்வு செயற்திட்ட பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சேட் நிறுவன களப்பணியாளர்களான திருமதி அ.தயாளினி, திருமதி ஜெ.நிர்மலா திருமதி ச.சுஜாதா, திருமதி உ.மரியகொன்சி, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கரன், மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன், செல்வி கலைவாணி, திருமதி கோமளா மற்றும் ஜனார்த்தனன், நிப்ராஸ்,விஜய் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களை ஆபத்துக்களைத் தவிர்த்தல் தொடர்பிலும் சேட் நிறுவனம் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த வருடம் விபத்தால் பாதிப்படைந்த குடும்பத் தலைவர்களுகள் நால்வருக்கு இவ்வகை வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மைதானத்தில் கொலை : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

 
தென் ஆபிரிக்காவில் இரண்டு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 13ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் செஞ்சூரியனில் உள்ள லாடியம் கிரிக்கெட் மைதானத்தில் கே.எப்.சி மினி கிரிக்கெடின் ஒருங்கினைப்பாளர் ககிசோ மசுபெலேலி (27) மற்றும் லாடியம் மைதானத்தின் தலைமை பயிற்ச்சியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓபெட் ஹார்வி அக்போமட்சி (27) ஆகியோர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இருவரும் ஸ்டேடியத்தின் மைதானத்தில் உள்ள அறையில் தங்கியிருக்கும் போது கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களது உடல்கள் குளியலறையில் கிடத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைப்பற்றி தென்னாபிரிக்க கிரிக்கெட் தலைவர் ஹசன் லார்கட் கூறுகையில், இது மிகவும் கடினமான ஒன்று, இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அனைவரது மத்தியிலும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இது போன்ற சம்பவம் க்ளப் கிரிக்கெட்டில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. நமது இளைய தலைமுறைக்கு இது நல்ல ஒரு ஆரோக்யாமான விடயம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகிக்கு தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்த முன்னணி நடிகை!!

உலகப்புகழ் பெற்ற பாடகி செலினா கோம்ஸ்க்கு முன்னணி நடிகை பிரான்சியா ரைஸா தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார்.

செலினா கோம்ஸ் உலக புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார். லூபஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டிருந்த செலினாவுக்கு சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

செலினாவுக்கு அவரின் தோழியும், பிரபல அமெரிக்க நடிகையுமான பிரான்சியா ரைஸா தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள செலினா கூறுகையில், என் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

என் குடும்பத்திற்கு மற்றும் அறுவை சிகிச்சைக்கு உதவி புரிந்த மருத்துவர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்.
எனக்கு சிறுநீரகம் தானம் அளித்த என் அழகிய தோழி பிரான்சியா ரைஸாவுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என விவரிக்க வார்த்தைகள் இல்லை. எனக்காக மிகப்பெரிய தியாகத்தை அவர் செய்துள்ளார் என கூறியுள்ளார்.

தடைகளை தகர்ப்போம் : வடகொரிய தலைவர் கிம் ஜங்!!

அமெரிக்காவுக்கு இணையான மிகப்பெரிய சக்தியாக விளங்குவதே வடகொரியாவின் இறுதி நோக்கம் என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் வடகொரியா தலைவர் அளித்துள்ள பேட்டி விவரங்களை அந்நாட்டின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கிம் ஜாங் கூறுகையில், எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதை மீறி வடகொரியா அணு ஆயுத நாடாக மாறும்.

வெள்ளியன்று ஜப்பானை கடந்து செல்லும்படி செலுத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது மட்டுமின்றி வட கொரியாவின் அணு ஆயுத சக்தியினையும் அதிகரித்துள்ளது.

நாட்டின் இறுதி நோக்கம் அமெரிக்காவிற்கு இணையாகவுள்ள உண்மையான சக்தியாக விளங்குவதேயாகும் என கூறியுள்ளார்.

ஐநா பாதுகாப்பு சபை கடுமையான பொருளாதார தடையை வடகொரியா மீது விதித்துள்ள போதும் அதை அந்நாடு பொருட்படுத்தாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பம் தரித்த 3 அடி உயரம் கொண்ட பெண்!!

 
சீனாவை சேர்ந்த 3 அடி உயரமுள்ள பெண் கர்ப்பம் தரித்துள்ளார். இவரின் பெயர் Wei Chunlan, வயது 31, வளர்ச்சி குறைபாடு கொண்ட இவரின் உயரம் 3 அடி ஆகும்.

Nanning என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து இந்த தம்பதியர் கூறியதாவது,

குறுகிய உயரம் கொண்டுள்ள என்னால் குழந்தையை சுமப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என்பது எனக்கு தெரியும். இருப்பினும், குழந்தை பிறப்பு என்பது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று, எனவே குழந்தையை பெற்றெடுக்க காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

பறக்கும் விமானத்தில் இருந்து கழண்டு விழுந்த சக்கரம் : விமானி எடுத்த முடிவு!!

லண்டனில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று சக்கரம் கழண்டு விழுந்ததை அடுத்து வேறொரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகருக்கு புறப்பட்ட விமானத்தின் சக்கரம் கழண்டு விழுந்ததால் குறித்த விமானத்தின் விமானி டெர்பியில் அமைந்துள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

லண்டன் Stansted பகுதியில் இருந்து காலை 8 மணிக்கு கோபன்ஹேகன் நோக்கி புறப்பட்டு சென்றது Ryanair விமானம் ஒன்று.

இந்நிலையில் விமானத்தின் முன்பக்க சக்கரம் ஒன்று கழண்டு விழுந்துள்ளதை கவனித்த விமானி உடனடியாக டெர்பி பகுதியில் அமைந்துள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

அசம்பாவிதம் ஏதுமின்றி குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் புறப்பட்டுச்செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக புறப்பட்டு செல்லும் எனவும் குறித்த விமான சேவை நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெர்பி விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறங்கிருந்ததால் குறிப்பிட்ட சில விமானங்கள் அங்கிருந்து புறப்பட தாமதமானதாக தெரியவந்துள்ளது.

விமானத்தில் இருந்து சக்கரம் கழண்டு விழுந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் இதுபோன்று நிகழாமல் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்ப்பாலில் நகைகளை செய்து அசத்தும் பெண்!!

 
தமிழகத்தைச் சேர்ந்த பிரீத்தி விஜய் என்ற பெண் தாய்ப்பால் மூலம் நகைகளை செய்து வருகின்றார்.

சென்னையைச் சேர்ந்த பிரித்தி விஜய், தாய்மார்கள் பலர் அடங்கிய அமைப்பு ஒன்றில் இருந்துள்ளார். அப்போது அந்த அமைப்பில் இருந்த ஒருவர் தாய்ப்பால் மூலம் நகைகள் செய்பவர்கள் யாராவது இந்தியாவில் இருக்கிறார்களா என கேட்டுள்ளார்.

அப்போது இதை ஏன் நாம் முயற்சி செய்து பார்க்க கூடாது என்று பிரித்தி விஜய் அந்த முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் பின் அந்த முயற்சியில் வெற்றி கண்ட இவருக்கு தற்போது வாரத்திற்கு 12 ஓர்டர்களாவது நாடு முழுவதிலும் இருந்து வந்துவிடுகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், தாய்ப்பால் எளிதில் கெட்டுப்போகக் கூடிய திரவம். அதனை வைத்து நகைகள் செய்வது என்பது உண்மையில் சாதாரணமான விடயம் அல்ல, தாய்ப்பால் மூலம் ஆரம்பத்தில் நான் நகைகள் செய்த போது, எல்லாவிதமான தாய்ப்பால் கெட்டுப்போகாமல் இருக்க அனைத்து வகையான வேதிபொருட்களையும் உபயோகித்து பார்த்தேன்.

ஆனால் அவற்றை உபயோகித்தும் ஒரு மாத காலத்திலேயே தாய்ப்பால் நிறம் மாறிவிடும். அதன்பிறகு, இதற்கு தீர்வு காண நான் என் தோழிகளிடம் ஆலோசனைகளை கேட்டேன்.

இதையடுத்து நகைகள் செய்யும்போது தாய்ப்பால் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற யோசனை தனக்கு கிடைத்ததாகாவும், அதுமட்டுமின்றி குழந்தையின் முடி, தொப்புள் கொடி, குழந்தையின் முதல் பல் ஆகியவற்றை அப்படியே பாதுகாக்க அவற்றின் மூலமாகவும் நகைகள் செய்து அசத்தி வருகிறார்.

தாய்ப்பால், குழந்தையின் முடி, பல், தொப்புள் கொடியை காலம் முழுமைக்கும் பாதுகாப்பாக வைக்க நினைப்பவர்கள், தன்னை அனுகி நகைகள் செய்து வாங்கிக் கொண்டு செல்வதாகவும், விலை ரூபாய் 1,000 முதல் 4,000 ரூபாய் வரை இருக்கும் என்றும், பெரும்பாலான ஓர்டர்கள் சமூகவலைத்தளமான பேஸ்புக் மூலம் வருவதாக பிரித்தி விஜய் தெரிவித்துள்ளார்.

100 கோடி ரூபாய் சொத்தை உதறி தள்ளிவிட்டு துறவறம் செல்லும் கோடீஸ்வர தம்பதி : காரணம் இதுதான்!!

100 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், மூன்று வயது குழந்தையையும் கைவிட்டு துறவறம் மேற்கொள்ள தம்பதி ஒருவர் முடிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோர்கர் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க கட்சி பிரமுகரின் மகள் அனாமிகா (34). இவருக்கும் சுமித் ரத்தோர் (35) என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. தந்தையின் தொழிலை சுமித் கவனித்து வந்த நிலையில், அனாமிகா ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஐ.டி துறையில் பணியாற்றினார். கோடீஸ்வரர்களான இவர்களின் குடும்ப சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் ஆகும்.

இந்நிலையில், குழந்தை, குடும்பம் மற்றும் சொத்துக்களை துறந்து துறவறம் மேற்கொள்வதாக சுமித் ரத்தோர் மற்றும் அனாமிகா அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அனாமிகாவின் தந்தை கூறுகையில், மகள் மற்றும் மருமகனின் துறவறம் முடிவை தடுக்க முயன்றும் அதை அவர்கள் ஏற்கவில்லை. தங்களின் ஆத்ம திருப்தி மற்றும் உள்ளுணர்வு உந்துதலால் இதை செய்ய அவர்கள் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

வீதியில் பாடிய சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

கேரளாவை சேர்ந்த சிறுமி சிவகங்காவுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

உலகில் என்ன நடந்தாலும் நொடிப்பொழுதில் நாம் தெரிந்து கொள்கிறோம், முக்கியமான சம்பவங்கள், நிகழ்வுகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாகின்றன.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த சிவகங்கா என்ற சிறுமி பாடுவதில் வல்லமை படைத்தவர். சில நாட்களுக்கு முன்னர் வீட்டின் அருகே மைக் பிடித்து சிறுமி பாடும் வீடியோ வைரலானது.

இதனைப் பார்த்த மலையாள நடிகர் ஜெயசூர்யா, சிறுமி பற்றிய விபரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதன்மூலம் சிறுமியை கண்டுபிடித்த ஜெயசூர்யா, தன்னுடைய அடுத்தபடத்தில் பாடும் வாய்ப்பை வழங்குவதாக கூறியுள்ளாராம். அதுமட்டுமின்றி முக்கியமான கதாபாத்திரத்திலும் சிறுமி நடிக்கவுள்ளாராம்.

சலவை இயந்திரத்திற்குள் ஒளிந்திருந்த நிலையில் சிறுவன் மீட்பு!!

சிலாபத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுவனை சலவை இயந்திரத்திற்குள் ஒளிந்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிலாபம், முகுனுவட்டன புளியன்கடவர வெல்பொத்துவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

ஐந்து வயது சிறுவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைபாட்டில் பாலர் பாடசாலைக்கு செல்ல ஆயத்தமாகியிருந்த சிறுவனை யாரோ வாகனமொன்றில் கடத்திச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கிடைக்கப்பெற்ற உடனேயே பொலிஸார் சிறுவனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். தமது மகன் பாலர் பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகியிருந்த போது வீட்டிற்கு எதிரில் நிறுத்தப்பட்டிருந்த பட்டா வாகனம் மிக வேகமாக புறப்பட்டுச் சென்றதாகவும், இதனை அடுத்து மகனை காணவில்லை எனவும் பெற்றோர் இதன்போது பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் குறித்த லொறியை பின்தொடர்ந்து செல்ல நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பொலிஸார் வீட்டை சோதனையிட்டுள்ளனர். இதன் போது சிறுவன் சலவை இயந்திரத்தில் ஒளிந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

பாலர் பாடசாலைக்குச் செல்ல விருப்பமில்லாத காரணத்தினால் தான் சலவை இயந்திரத்தில் ஒளிந்து கொண்டதாக சிறுவன் கூறியுள்ளான்.

ஆபத்தான கட்டத்தில் லண்டன் நகரம் : ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் குவிப்பு!!

லண்டன் மாநகரம் அபாயகரமான கட்டத்தில் உள்ளதாக பிரித்தானிய பிரதமர் திரேசா மே தெரிவித்துள்ளார்.

மேற்கு லண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Parsons Green நிலையத்தில் ரயிலில் ஏற்பட்ட வெடிப்பானது பயங்கரவாத அச்சுறுத்தலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 29 பேர் எரிகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டதுஇவ்வாறான நிலையில்

லண்டன் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இராணுவத்தினரின் உதவி நாடப்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் அதிகமான ஆயுதமேந்திய பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையில் பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரோந்துப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதானமாக முக்கிய இடங்களிலும், மக்கள் நெரிசலான இடங்களிலும் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுதம் ஏந்திய அதிகமான பொலிஸ் அதிகாரிகளை போக்குவரத்து பகுதிகளில், பொது மக்கள் அவதானிக்க முடியும் எனவும் தற்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுவொரு முன்னேற்றகரமான மற்றும் விவேகமான நடவடிக்கை ஆகும், இது விசாரணைகளை அதிகரிக்கும் போது கூடுதலான உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கடலில் கிடைத்த அதிஷ்டம் : வியப்பில் மக்கள்!!

 
இலங்கையின் கடற்பரப்பில் விலை மதிக்க முடியாத பொருள் ஒன்று சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கற்பிட்டி மீனவர்கள் சிலருக்கு எதிர்பாராத விதமாக கடலில் இருந்து அதிஷ்டம் ஒன்று கிடைத்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஒழுங்கான முறையில் மீன் கிடைக்காமையினால் வருத்தத்துடன் கரைக்கு திரும்பியுள்ளனர். அவ்வாறு கரைக்கு திரும்பும் போது கடுமையான துர்நாற்றத்துடன் கடலில் மிதந்து வந்த பொருள் ஒன்றை இந்த மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

அதற்கு அருகில் சென்று பார்க்கும் போது அது “அம்பர்” (Amber) எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியாகும். அது பல கோடி பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது. அம்பர் ஒரு கிலோகிராம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியானதென குறிப்பிடப்படுகின்றது.

இந்த திமிங்கிலத்தின் வாந்தியை வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கு உட்பட பயன்படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

விலை மதிப்பில்லாத பொக்கிஷம் கிடைத்தமையால் அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் எம்பர் பேச்சு வழக்கில் ஆம்பல் என எலோராலும் சொல்லப்படும் ஒரு விலைமதிக்க முடியாத மிக துர்நாற்றம் கொண்ட ஒரு பொருளாகும்.

இவ்வாறு கடலில் கிடைக்கும் எம்பர் அரசு சொத்தாக கருதி அரசாங்கம் அதை அரசு சொத்தாக்கிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாயின் கவனக் குறைவால் சிறுமிக்கு நேர்ந்த கதி : குழந்தை வயிற்றுடன் கதறி அழும் தாய்!!

 
தாயின் வயிற்றை தடவி விளையாட தங்கச்சி வேண்டுமென்று கூறிய நான்கு வயது சிறுமியின் மரணம் திருகோணமலை மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட கட்டைப்பறிச்சான் கிராமத்தில் சிவகாந்தனுக்கு தலைப்பிள்ளையாக பிறந்த நான்கு வயதுடைய பிறெஸ்மி தடிமல் காரணமாக பெற்றதாயிடம் தமது நோயை போக்க பிரிடன் எனும் மருந்தை குடித்தார். அந்த நான்கு வயது சிறுமியின் விதியை மாற்றியது பிரிடன் பாணி.

தாய்ப் பாசத்திற்காக தனது பிள்ளைகளின் நலன் கருதி களஞ்சியப்படுத்தி வைத்த அந்த பிரிடன் பாணி சிறுமியின் தலைவிதியை மாற்றி நோவுக்கு பூசும் எண்ணையாக மாறியது.

அம்மா வழங்கிய பிரிடன் பாணி நான்கு வயது சிறுமியின் வயிற்றை கிள்ளி கிளைத்தது. அம்மா பாசத்திற்காக வழங்கிய மருந்து சிறுமிக்கு மாற்றத்தை ஏற்படுத்திய வேளை பாசம் மிக்க சிறுமிக்கு தாயாரான கிருஸ்ண வேனி வழங்கிய அம்மருந்தை தந்தை சிவகாந்தனும் குடித்துப்பார்த்தார்.

அப்போது தந்தைக்கு மாற்றம் தென்பட்ட போது உடனடியாக மூதூர் தள வைத்தியசாலைக்கு வேகமாக கொண்டு சென்றார்கள்.

இதேநேரம் சிறுமியும் மயங்கி விட்டது -தந்தைக்கும் மயக்க நிலை வருவதை அவதானித்த வைத்தியர் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பில் வைத்தியர்கள் இரவோடு இரவாக கண்விழித்து சிகிச்சை வழங்கியும் சிறுமியின் நேரம் மர்ம கனவாக மாறியது.

கிருஷ்ண வேணிக்கு தலைப் பெண்பிள்ளையாக பிறந்த இந்த சிறுமிக்காக வேண்டி தாயார் மீண்டும் பிள்ளையொன்றினை பெற்றெடுக்க ஆரம்பித்தார் .

சிறுமி தன்னுடன் விளையாட தனக்கு அவசரமாக தங்கையையோ அல்லது தம்பியையோ பெற்றுத்தாருங்கள் என நாளுக்கு நாள் சொல்லிச்சொல்லி அம்மாவின் வயிற்றை தடவிய சம்பவத்தை நேரில் காண்பதாகவும் தனக்கு இச்சிறுமியின் மரணத்தை நினைக்கவே முடியாது என கதறியழுததை நினைக்கும் போது இச்சிறுமியின் பாசம் மனதை உருக்கியது.

பிள்ளை பாசத்திற்காக தடிமல் எனக்கூறிய தன் பிள்ளைக்கு தாயாரான கிருஸ்ண வேணி பிரிடன் பாணி கொடுத்தது பிள்ளையை சாவடிப்பதற்காகயா? இல்லையே இல்லை!

ஆனாலும் பிள்ளைகளை பெற்றெடுத்த அனைத்து பெற்றோர்களுக்கும் இச்சிறுமி ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.

வீடுகளில் மருந்துகளை வைக்கும் போது நஞ்சு என தெரிந்த மருந்துகளை வைக்காமல் இருப்பது இச்சிறுமியின் மரணத்தின் மூலம் விளங்கப்டுத்துகின்றது.

கால் கடுப்புக்காகவும்- நோவுக்காகவும் வழங்கப்பட்ட இந்த மருந்தினை தாய் பிரிடன் போத்தலில் பக்குவப்படுத்தி வைத்திருந்த நேரம் தடிமலுக்காக வழங்கப்பட்ட பிரிடன் பாணியின் போத்தலும் அதே நிறமாக தென்பட்டுள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் ஒவ்வொரு பெற்றோர்களும் வீடுகளில் களஞ்சியப்படுத்தி வைக்கும் மருந்துகளை வழங்குவதை நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் சிரமதானப் பணியில் பங்கேற்குமாறு அழைப்பு!!

வவுனியா – தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவில் சிரமதானப் பணிகள் நாளை (16.09.2017) இடம்பெறவுள்ளன.

குறித்த வேலைத்திட்டம் சனிக்கிழமை (16.09.2017) காலை 8.30 மணியிலிருந்து 11.00 மணி வரையும் நடைபெறவுள்ளது.

அத்துடன் சிரமதானப் பணியில் இணைந்து கொள்வதற்கும், மாணவர்கள் நடமாடும் பகுதிகளில் புற்கள், பாத்தீனியச் செடிகள் குடிகொண்டுள்ளதால் அதனை அகற்றி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பினை வழங்குமாறும் பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் கோரியுள்ளார்.

சிரமதான வேலைக்குரிய உபகரணங்களான கத்தி, மண்வெட்டி, புல்லுவெட்டி, போன்ற உபகரணங்களுடன் சமூகமளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த சிரமதானப் பணியில் பெற்றோர்கள், பழையமாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட தகராற்றில் மனைவியைக் கொன்ற கணவன்!!

ஹம்பாந்தோட்டை – திமுத்துகல பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் ஏற்பட்ட தகராறு முற்றியத்தில் கணவன், தனது மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். 27 வயதான பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் கொலையை செய்த சந்தேகநபரை கைதுசெய்ய ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் பிணையில் விடுதலை!!

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் இன்று நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 31 ஆம் திகதி வியாழக்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இளைஞர் ஒருவர் கனடா செல்வதற்காக முகவர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். குறித்த முகவர் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கத்தின் வங்கிக் கணக்கிற்கு குறித்த இளைஞரின் வெளிநாடு செல்வதற்கான பணத்தினை வைப்புச் செய்யுமாறு கோரியுள்ளார்.

அந்த இளைஞனும் அவ்வாறே வைப்புச் செய்த நிலையில் முகவரால் வெளிநாட்டுக்கு அனுப்பப்படாது ஏமாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பணத்தை மீள பெறுவதற்கு இளைஞர் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது பயனளிக்காமையால் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா வர்த்தச சங்கத் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை அனுப்பியிருந்த நிலையில் அவர் ஆஜராகாமையால், இந்தியாவில் இருந்து இலங்கை வந்தபோது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று அவரது வழக்கு விசாரணைக்கு வந்த போதே இரண்டு பேரின் சரீரப் பிணையில் செல்வதற்கு நீர்கொழும்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதேவேளை எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.