இலங்கையில் பிரித்தானிய ஊடகவியலாளரின் இறப்புக்கான காரணம் வெளியானது!!

அம்பாறை – பாணமை பொலிஸ் பிரிவில் முதலை குன்று பிரதேசத்தில் முதலை தாக்கி மரணமடைந்ததாக கூறப்பட்ட பிரித்தானியா ஊடகவிலாளரான போல் மெக்கலம், நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அம்பாறை வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி அலையில் வழுக்கிச் செல்லும் விளையாட்டின் பின்னர், போல் மெக்கலம் கடோலான பிரதேசத்தின் களப்பு பகுதிக்கு சென்ற போது முதலை இழுத்துச் சென்றதாக கூறப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் பொலிஸாரும், கடற்படை சுழியோடிகளும் இணைந்து சடலத்தை மீட்டனர். நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அம்பாறை வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரியான விசேட மருத்துவ நிபுணர் ஏ. இளங்கோவன் நேற்று பிரேதப் பரிசோதனைகளை நடத்தினார்.

போல் மெக்கலமின் வலதுகாலில் காயம் இருந்த போதிலும் நீரில் மூழ்கியதே மரணத்திற்கு காரணம் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பிரித்தானிய ஊடகவியலாளரின் இடதுகாலை கடித்தப்பின்னர் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது.

24 வயதான போல் மெக்லின் கடந்த வாரம் அருகம்பேயில் முதலையினால் இழுத்துச்செல்லப்பட்டு நீரில் மூழ்கி மரணமானார். இதனையடுத்து ஒருநாளின் பின்னர் அவரின் சடலம் மீட்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த ஊடகவியலாளரின் காலில் 6 பற்களின் அடையாளங்கள் காணப்பட்டன. எனினும் குறித்த ஊடகவியலாளரை முதலைதான் கடித்தது என்ற விடயத்தை பிரேத பரிசோதனையில் குறிப்பிடவில்லை. ஏனெனில் அவரின் காலை பல உயிரினங்கள் கடித்த காயங்களும் உள்ளன.

இலங்கையில் மூன்று மணித்தியாலங்களுக்கு ஒருவர் தற்கொலை : அதிர்ச்சி அறிக்கை!!

இலங்கையில் சராசரியாக 3 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற வகையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்கொலை செய்துக் கொள்பவர்களில் ஆண்களே முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸார் விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய இந்த வருடம் முதல் 6 மாத காலப்பகுதியில் 1,597 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கையில் 1,275 பேர் ஆண்கள் என்றும், 322 பேர் பெண்கள் என்றும் தெரியவருகின்றது. 2015ஆம் ஆண்டு 2,389 ஆண்கள் உள்ளிட்ட 3, 058 தற்கொலைகள் பதிவாகியுள்ளன,

தொடர்ந்து 2016ஆம் ஆண்டு 2,339 ஆண்களும் 668 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1995ஆம் ஆண்டு 8,500 பேர் என பதிவாகியிருந்த தற்கொலைகள் 2005 இல் அரைவாசிக்கும் மேலாகக் குறைந்து 2015ஆம் ஆண்டில் 3,025 என்ற எண்ணிக்கைக்கு கீழிறங்கியுள்ளது என சுகாதார அமைச்சின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்கொலை செய்து கொள்ளும் மனப்போக்கை மாற்றுவதற்கு இளைஞர்களை மையப்படுத்தி சுகாதார அமைச்சின் உளவள ஆற்றல் சேவைகள் பிரிவால் நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் உளவள ஆற்றல் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

7 வயதுச் சிறுமிக்கு சூடு வைத்த தாய்!!

நேற்று முன்தினம் மட்டக்களப்பு ஏறாவூரில் மாலை மத்ரசாவுக்கு சென்று வீடுதிரும்பிய ஏழு வயதுடைய சிறுமி சாஜஹான் இர்ரீபா, தனது விரலில் போடப்பட்டிருந்த தங்க மோதிரத்தை தொலைத்துவிட்டு வீடுவந்திருப்பதை அறிந்த தாய், அச் சிறுமிக்கு கரண்டியை நெருப்பில் சூடாக்கி வயிற்றிலும், கால் பாதத்திலும், கைப்பட்டையிலும் சூடு வைத்ததால் சிறுமி படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

சிறுமியின் மரண ஓலமான அழுகுரலை கேட்ட அப்பகுதி மக்கள் ஓன்று கூடி நடந்த விடயத்தை அறிந்து உடனடியாக ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவித்தன் பேரில், தாய் கைது செய்யப் பட்டதோடு குழந்தை , மேலதிக சிகிச்சைக்காக ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , இரவு 10.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தனது தாய்தான் எனக்கு சூடு வைத்தார் எனக் கூறிய அக் குழந்தை,எனது தாயை ஜெயிலுக்கு அனுப்பவேண்டாம் என பொலிஸாரிடம் மன்றாடியது மனதை உருக்கியது.

நாய்க்கு இரையாகிய பிறந்து ஏழு நாட்கள் நிரம்பிய சிசு!!

பிறந்து ஏழு நாட்களே நிரம்பிய சிசுவொன்று, நாய்க்கு இரையாகி உயிரிழந்த பரிதாப சம்பவம் ஹபரன – நாமல்புர பிரதேசத்தில் நேற்று (17.09) பதிவானது.

ஏழு நாட்களுக்கு முன்னர் பிறந்த கவிஷ்க சந்தருவன் இந்தக் குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. தமது ஜீவனோபாயத்திற்காக தினமும் கூலி வேலை செய்யும் சமன்குமார மற்றும் நிரோஷா குமாரி ஆகியோருக்கு பிறந்த கவிஷ்க குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளை.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆறு நாட்கள் வீட்டிலிருந்த குழந்தையின் தந்தை, தேன் எடுப்பதற்காக காட்டிற்கு சென்றுள்ளார்.

இதனிடையே வீட்டில் இருந்த மற்றைய இரண்டு பெண் பிள்ளைகளில் ஒரு பிள்ளை தனக்கு பசி என்று கூறி தாயிடம் உணவு கேட்ட போதிலும் அவளுக்கு கொடுக்க இந்த வீட்டில் எதுவும் இருக்கவில்லை.

இதனால் பாட்டியின் வீட்டுக்குச் சென்று ஒரு சுண்டு அரசி எடுத்துவருமாரு தாய் கூறிய பின்னர் இரண்டு பெண் பிள்ளைகளும் வீட்டை விட்டுப் புறப்பட்டுள்ளனர்.

ஏழு நாட்களேயான சிசுவை பாயில் வைத்துவிட்டு, அரசியை கழுவுவதற்கு நீரை எடுக்க 200 மீற்றர் தொலைவில் உள்ள கிணற்றுக்கு இந்த தாய் சென்றுள்ளார்.

கொண்டுவந்த அரிசியை பானையில் இட்டு சமைக்க ஆரம்பித்த போது சிசுவின் அழு குரல் கேட்டுள்ளது.

இதன்போது சிசு இருந்த இடத்திற்கு இந்த தாய் ஓடிய போது, தான் பெற்ற குழந்தையை நாய் ஒன்று கடித்துக் கொண்டிருக்கும் துயர் மிகு காட்சியை கண்டுள்ளார்.

நாயை விரட்டிய தாய் உடனே சிசுவை தூக்கி தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவ்வேளையில் கவிஷ்கவின் உயிர் பிரிந்திருந்தது.

தனது குழந்தையின் இறுதிக் கிரியையைக் கூட நிறைவேற்றுவதற்கு போதிய வசதி இல்லாத இந்தப் பெற்றோருக்கு தம்புள்ளை பிரதேச வைத்தியசாலையின் ஊழியர்கள் ஒன்றிணைந்து நிதியுதவி செய்தனர்.

 

வவுனியாவில் பேருந்தில் பெண்ணிடம் சேட்டை : இராணுவ சிப்பாய் கைது!!

வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (17.09.2017) பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் மாணவியிடம் சேட்டை புரிந்த இராணுவச்சிப்பாய் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குருநாகல் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் விடுமுறையில் வீடு சென்ற கலாபோகஸ்வவே இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவ சிப்பாய் ஒருவர் பேருந்தில் பயணித்த கொண்டிருந்த போது அதே பேருந்தில் அவருக்கு அருகில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த மாணவி மீது இராணுவச்சிப்பாய் திடிரேன சேட்டை புரிந்துள்ளார்

மாணவி போட்ட கூச்சல் சத்தத்தையடுத்து குறித்த இராணுவச்சிப்பாயை பேருந்தில் பயணம் மேற்கொண்டவர்களின் உதவியுடன் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

வவுனியாவில் மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தை கொடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!!

வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வவுனியா இறம்பைக்குளம் கல்லூரியில் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தினை வழங்கிய ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல பாடசாலைகளில் கா.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றன.

இதன் போது வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரீட்சையில் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு (தனியார் விண்ணப்பதாரி) கடமையிலிருந்த மேற்பார்வையாளர் பிரிதொரு ஆசிரியரிடம் அவரது தொலைபேசி இலக்கத்தினை வழங்கி குறித்த மாணவியிடம் வழங்குமாறு பணித்துள்ளார்.

குறித்த மேற்பார்வையாரின் வேண்டுகோளிக்கிணங்க ஆசிரியர் மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தினை வழங்கிய சமயத்தில் குறித்த மாணவி பரீட்சை முடிவடைந்ததுடன் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த ஆசிரியரை இடமாற்றியுள்ளதாக வலயக்கல்வி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். குறித்த ஆசிரியர் மீது இவ்வாறான பல முறைப்பாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில்  இலங்கையர் உட்பட 111 வெளிநாட்டவர்கள் கைது!!

மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 111 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜோஹர் பஹ்ரு நகரில் உள்ள செனாய் தொழில்துறை பகுதியில் உள்ள தங்குமிட விடுதியொன்றில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செல்லுபடியாகக்கூடிய பயண ஆவணங்கள் இல்லாத நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்கள பணிப்பாளர் டடுக் செரி முஷ்டபார் தெரிவித்துள்ளார்.

46 பேர் பங்களாதேஷ், 22 பேர் மியன்மார், 17 பேர் நேபாளம், 11 பேர் இந்தோனேஷியா, 4 பேர் வியட்னாம், 3 பேர் பிலிப்பைன்ஸ் முதலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர ஏனையவர்கள், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா முதலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விசா தொடர்பில் வெளியான செய்தியில் உண்மையில்லை!!

மியன்மாரில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான விசாக்களை இரத்துசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தியை குடிவரவு-குடியகழ்வு திணைக்களம் மறுத்துள்ளது.

குறித்த செய்தியானது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்றில் வெளியிடப்பட்டிருந்தது.

சுற்றுலாப்பயணிகள் என்ற போர்வையில் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் இலங்கைக்குள் வரலாம் என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொலிசாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 18 பேர் கைது!

பொலிசார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிஓயா ஜனகபுர பிரதேசத்தில் நேற்று இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் அப்பிரதேசத்தில் கேரள கஞ்சா விற்பனை செய்த நபரொருவரைக் கைது செய்வதற்காக சென்றிருந்த நேரத்தில் பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் காரணமாக பொலிஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ள அதேநேரம் இரண்டு பொலிசாரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிசாரைத் தாக்கிய சந்தேகத்தின் பேரில் 18 ​பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு பேர் பெண்களாவா். கைது செய்யப்பட்டவா்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

பாரிசில் இலங்கைப் பெண்ணின் கைப்பையை பறித்த திருடனின் நிலை கவலைக்கிடம்!

பரிஸில் இலங்கை பெண் பயணி ஒருவரின் பையை கொள்ளையடிக்க முயற்சித்த திருடன் உயிருக்கு போராடி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரம் பிரான்ஸ் வடக்கு பரிஸ் பகுதியில் இலங்கை தமிழ் பெண் ஒருவரின் பையை பறித்த நபரை அங்கிருந்த மக்கள் மடக்கி பிடித்து கடுமையாக தாக்கியதுடன், கத்தியால் இரண்டு முறை குத்தியுள்ளனர்.

இலங்கை சுற்றுலா பயணி ஒருவரினால் ஓட்டி சென்ற காரை இருவர் தாக்கியுள்ளதுடன், மற்றொருவர் கார் சக்கரத்தின் காற்றை பிடுங்கியுள்ளார். இதன் போது காருக்கு என்ன நடந்ததென பார்ப்பதற்கு காரில் இருந்து வெளியே வந்த சுற்றுலா பயணியின் பையை திருடி சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த சுற்றுலா பயணி உதவி கோரி கூச்சலிட்டுள்ளார். இலங்கையர்கள் அதிகமாக வாழும் பரிஸின் லாச்சப்பல் பகுதியில் இருந்த மக்கள் பையை திருடிய திருடனை மடக்கி பிடித்துள்ளனர்.

இரண்டு திருடர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மடக்கி பிடிக்கப்பட்ட திருடன் அங்கிருந்த தப்பி செல்ல முயற்சித்த போது மக்கள் கூட்டத்தினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளதுடன் இருமுறை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதன் போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் திருடனை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்த நிலையில் குறித்த திருடன் உயிருக்கு போராடி வருவதாகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

நாடளாவியரீதியில் செப்டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வாரம்!

நாட­ளா­விய ரீதியில் தேசிய விபத்து தடுப்பு வாரம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. செப்­டெம்பர் 18 – 22 வரை தேசிய விபத்து தடுப்பு வார நிகழ்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளன. இதற்­கான விரி­வான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

முதல் நாளான  நாளை 18ம் திகதி திங்­கட்­கி­ழமை வீதி விபத்­துக்­களை தடுப்­ப­தற்­கான வேலைத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இரண்டாம் நாளான  19ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை வேலைத் தளங்­களில் இடம்­பெறும் விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

வீடு­களில் இடம்­பெறும் விபத்­துக்­களைத் தடுப்­ப­தற்­கான வேலைத்­திட்டம் வாரத்தின் மூன்றாம் நாளான 20ம் திகதி புதன்­கி­ழமை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. வியா­ழக்­கி­ழமை 21ம் திகதி நான்காம் நாள் முன்­பள்ளிப் பாட­சா­லை­களில் இடம்­பெறும் விபத்­துக்­களைக் தடுப்­ப­தற்­கான பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இறுதி நாள் 22ம் திகதி பாட­சாலை விபத்­துக்­களைக் தடுப்­ப­தற்­கான வேலைத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இலங்­கையில் மணித்­தி­யா­லத்­திற்கு ஒருவர் என்ற ரீதியில், நாளொன்­றுக்கு 27 பேர் விபத்­துக்­களில் இறப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் நாட்டில் பல்­வேறு விபத்­துக்­களின் மூலம் வரு­ட­மொன்­றிற்கு மொத்தம் 10 ஆயிரம் பேர் உயி­ரி­ழப்­ப­தாக சுகா­தாரம், போஷாக்கு, சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் டாக்டர் திலக் சிறி­வர்த்­தன தெரி­வித்­துள்ளார்.

மணித்தியாலத்துக்கு  480 பேர் என்ற விகிதத்தில் நாளொன்றுக்கு 11 ஆயிரம் பேர் விபத்துக்களில் சிக்கி சிகிச்சை பெறுவதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சகல தேர்தல்களும் தொகுதிவாரி தேர்தல் முறையில்.ஜனாதிபதி!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை விருப்புவாக்கு முறைக்கு பதிலாக தொகுதிவாரி தேர்தல் முறையில் நடத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் வட மத்திய மாகாண சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் விருப்பு வாக்கு தேர்தல் முறையினால் அரசியல்வாதிகள் நாட்டைப் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் தமது தனிப்பட்ட அரசியல் வெற்றிக்காகவே செயற்படுகின்றனர் என்றும் அதனால் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வெற்றிகளை அவர்களுக்காக பெற்றுக்கொடுக்க முடியாது போயுள்ளது என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் காணப்படும், அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சில தரப்பினர் எதிர்ப்பினை முன்வைத்தபோதிலும் தனது தலைமையின் கீழ் விருப்புவாக்கு தேர்தல் முறைக்குப் பதிலாக தொகுதிவாரி தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை கட்சி பேதமின்றி சகல மக்களும் பெற்றுக்கொண்ட வெற்றியாகவே தான் கருதுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

நாட்டில் சகல தேர்தல்களும் ஒரே முறையில் நடைபெற வேண்டும் என்பதுடன், அதற்கேற்றவாறு அண்மையில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலை தொகுதிவாரி அடிப்படையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையும் விருப்புவாக்கு முறைக்கு பதிலாக தொகுதிவாரி தேர்தல் முறையில் நடத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தன்னால் மக்களுக்கு வழங்கப்பட்ட பிரதான வாக்குறுதிகளுள் ஒன்றான இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையை மாற்றியமைத்து அதற்குப் பதிலாக தொகுதிவாரி தேர்தல் முறையை இலங்கை அரசியலில் ஏற்படுத்துவதன் ஊடாக ஒட்டுமொத்த மக்களுக்கும் புதியதோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

மின்சாரசபை ஊழியர்களின் போராட்டம் தொடர்கின்றது!

இலங்கை மின்சாரசபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது.இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறி இந்த ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றது.

இதேவேளை, நாடு முழுவதும் மின் வினியோகம் சீரான முறையில் நடைபெற்று வருவதாகவும், மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தோல்வியடைந்திருப்பதையே இது காட்டுகிறது என்றும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

தமக்குக் கிடைத்திருக்கும் அறிக்கைகளின்படி, மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம் 100 சதவீதம் சீராக நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், நாடளாவிய ரீதியில் 65 சதவீத மின் வினியோகம் சீராக நடைபெறுவதாகவும், மிகச் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

“மருத்துவ அதிகாரிகளின் கோரிக்கைகளையும் பரிசீலிக்காது நோயாளிகளின் உயிருடன் விளையாடும் வகையில், தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களை மின்சார சபை தொழிற்சங்கம் விலக்கிக்கொண்டுள்ளதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற மனிதத்தன்மை இல்லாத வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத இலங்கை மின்சார சபை ஊழியர்களை எனது அமைச்சரவை சார்பில் பாராட்டுகிறேன்” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள ஊழியர்கள் சிலர் ட்ரான்ஸ்ஃபோர்மர்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாகவும், இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் இலங்கை மின்சார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வவுனியாவில் குளவிக்கொட்டிற்கு இலக்காகிய பாடசாலை மாணவர்கள்!

வவுனியாவில் இன்று (17.09.2017) பிற்பகல் 12.30 மணியளவில் குளவி கொட்டிற்கு இலக்காகிய நிலையில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஓமந்தை விளாத்திக்குளம் செல்லும் வீதியுள்ள மரத்தின் கீழ் ஒதுங்கியிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான சந்திரமோகன் மங்கயற்கரசி ( வயது – 32) , ஒமந்தை மத்திய கல்லூரி மாணவர்களான தமிழரசன் சுருதிகா ( வயது – 11) , காண்டீபன் சனோஜன் (வயது -11 ) ஆகிய மூவர் மீது மரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்து தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வவுனியாவில் வியாபார நிலையமொன்றில் வாங்கிய பாணுக்குள் நூல்!

வவுனியாவில் காலை உணவுக்காக பாண் வாங்கிய நபர் ஒருவர் குறித்த பாணை வெட்டிய போது அதனுள் நீளமான உரைப்பை தைக்கும் நூல் காணப்பட்டுள்ளது.

இன்று காலை வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்று சாப்பாட்டுக்காக நபர் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று அப் பாணை வெட்டிய போது அதில் உரைப் பை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் பச்சை நிற நீளமான நூல் ஒன்று காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த சம்பம் தொடர்பில் பாண் விற்பனை செய்த வர்த்தகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நடத்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மகிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடல்!!

 
வவுனியாவில் இன்று மாலை 2.30 மணியளவில் விருந்தினர் விடுதி ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் சுமதிபால, இடதுசாரி முன்னணி கட்சி, ஈ.பி.டி.பி கட்சி, இணைந்த வடக்கு கிழக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யசோதரன், போன்ற பிரமுகர்கள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டதுடன் வரவிருக்கும் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுவது தொடர்பாகவும் இன்றைய கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய கலந்துரையாடலில் கலந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.