வவுனியா குறிசுட்டகுளம் அ.த.க. பாடசாலையில் புதிய கட்டிடத்துக்கு அடிக்கல்!

வவுனியா வடக்கு வலய குறிசுட்டகுளம் அ.த.க. பாடசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட இருக்கும் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது  கடந்த  11.09.2017   திங்கட்கிழமை  பாடசாலையின் அதிபர்  தலைமையில் இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வில்  வடமாகாண சபை உறுப்பினர்  மயில்வாகனம் தியாகராசா,  வவுனியா  வடக்கு  வலய அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஞா. அகிலன்  மற்றும் ஆசிரியர்கள்  பெற்றோர்  மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாத்தறையில் லஞ்சம் வாங்கிய அதிபர் கைது !

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மாத்தறை பிரதேச பாடசாலையொன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் மோசடித் தடுப்புப் பிரிவினரால் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் 3ஆம் தர மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக அதிபர் 10 ஆயிரம் ரூபாவை இலஞ்சம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிபர் மாத்தறை நீதவான் எதிரில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்

தன்னை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸாரை ஏமாற்றிய பாடசாலை மாணவி கைது!

போலியான முறைப்பாட்டை செய்து பொலிஸாரை ஏமாற்றிய பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்துகம பிரதேசத்தின் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தன்னை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், தன்னிடமிருந்த தங்கச் சங்கிலி மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக குறித்த மாணவியால் போலி முறைப்பாடு செய்யப்பட்டது.

எனினும் குறித்த மாணவியினால் திருடப்பட்டதாக கூறப்பட்ட தங்கச் சங்கலி, கையடக்க தொலைபேசி, மற்றும் இசைக் கருவியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பகுதி நேர வகுப்பிற்கு செல்லும் போது குறித்த மாணவி கடத்தப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டதாக கூறப்பட்டதில் இருந்து மூன்று நாட்களின் பின்னர் அந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் தன்னை கடத்தியவர்கள் யார் என தனக்கு தெரியாதெனவும் ஓரிடத்தில் வைத்து தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய செயற்பட்ட பொலிஸார் மாணவி கூறிய இடத்தில் உள்ள சீ.சீ.டீ.வி காணொளியை சோதனையிட்டுள்ளனர். எனினும் மாணவியால் கூறப்பட்ட விடயங்களை உறுதி செய்யப்படவில்லை.

இதன் காரணமாக மாணவியின் நண்பர்கள் சிலரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கமைய அங்கு எவ்வித கடத்தல் சம்பவம் அல்லது, வகுப்புகள் நடத்தப்படவில்லை எனவும், தனது காதலனுடன் பயாகல கடற்கரைக்கும் சில இடங்களுக்கு அவர் சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அதற்கமைய திருடப்பட்டதாக கூறப்பட்ட இசைக் கருவி மாணவியின் நண்பியின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காதலனின் அத்தையிடம் இருந்து தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், மாணவியின் தங்கச் சங்கிலி அலுமாரி ஆடைகளுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காதலனுடன் சென்ற பயணத்தை வீட்டில் மறைப்பதற்கே தான் இவ்வாறு போலி முறைப்பாடு செய்ததாக மாணவி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பொலிஸாரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் அந்த மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கு! வார இறுதியில் தீர்ப்பு?

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியா படுகொலை வழக்கு விசாரணை தொகுப்புரைக்காக யாழ்.மேல்நீதிமன்றம் இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறைமையில் கூடவுள்ளது.

குறித்த படுகொலை வழக்கு தொடர்பான சகல சாட்சியப் பதிவுகளும் கடந்த மாதத்தில் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இன்று இருதரப்புகளின் தொகுப்புரைக்காக மேல் நீதிமன்றம் கூடவுள்ளது.

அதன்பிரகாரம் இன்று செவ்வாயக்கிழமையும் நாளை புதன்கிழமையும் தொகுப்புரைகள் வழங்குவதற்காக ஏற்கனவே மன்றில் திகதியிடப்பட்டுள்ளது.

இரு தரப்புகளின் தொகுப்புரைகள் முடிவடைந்த பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கான திகதியை அறிவிப்பார்கள் எனவும், பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியா பிரதேச செயலக விளாத்தியடி ஸ்ரீ விநாயகர் பெருமான் மணவாள கோல விஞ்ஞாபனம்!(படங்கள்)

வவுனியா பிரதேச செயலக  வளாகத்தில் அமைந்துள்ள விளாத்தியடி ஸ்ரீ விநாயகர் பெருமான்  ஆலயத்தின் கும்பாபிசேக  தினமும்  மணவாளகோல நிகழ்வும் 09.09.2017 சனிக்கிழமை இடம்பெற்றது .

மேற்படி  உற்சவத்தில் வவுனியா பிரதேச செயலகர்  கலாசார  உத்தியோகத்தர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பிரதேச செயலக  அலுவலகர்கள்  ஆகியோர் பூஜை வழிபாடுகளில்  கலந்து கொண்டனர் .

 

வவுனியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தேவையென உரிமையாளரை ஏமாற்றி 15 ஆடுகள் திருட்டு !

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் ஆட்டுப்பட்டி ஒன்றினை வைத்திருக்கும் ஒருவரிடம் இருந்து மிகவும் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம்(06) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் ஆட்டுப் பட்டி ஒன்றினை வைத்திருக்கும் ஒருவரிடம் ஹயஸ்ரக வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், தான் படச் சூட்டிங் செய்ய 15 ஆடுகள் தேவை என்று கூறியுள்ளார்.

இதற்கு ஆட்டு உரிமையாளரும் சம்மதித்த நிலையில் பிறிதொரு இடத்தில் சூட்டிங் நடப்பதால் ஆடுகளை கொண்டு செல்ல வேண்டும் என 15 ஆடுகளை ஹயஸ் ரக வாகனத்தில் ஏற்றியுள்ளார்.

ஆடுகளை வழங்கியமைக்காக ஆட்டு உரிமையாளருக்கு 20ஆயிரம் ரூபாய் பணத்தை வாடகையாகக் கொடுத்துள்ளார்.

ஆடுகளை ஏற்றுக் கொண்டு ஆட்டு உரிமையாளரையும் அழைத்துக் கொண்டு வவுனியா நகரை நோக்கி வந்த குறித்த நபர் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு அருகில் உள்ள இராணுவ உணவுச் சாலை அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு சோடா ஒன்று வாங்கி வருமாறு 200 ரூபாய் பணத்தை கொடுத்து ஆட்டு உரிமையாளரை வாகனத்தில் இருந்து இறக்கியுள்ளார்.

சோடா வாங்கிக் கொண்டு வாகனம் நின்ற இடத்திற்கு ஆட்டு உரிமையாளர் வந்த போது வாகனம் அவ்விடத்தில் இல்லை.

இதனையடுத்து திட்டமிட்டு திருட்டு இடம்பெற்றதை உணர்ந்த ஆட்டு உரிமையாளர் வவுனியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வீட்டில் உறங்கியிருந்த பாடசாலை மாணவியை காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டில் உறங்கியிருந்த 14வயது பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் வவுனியா பொலிஸ்நிலையத்தில் நேற்று (07.09.2017) முறைப்பாடு செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மகாறம்பைக்குளம், லக்சபான வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் அன்ரன் அனிஸ்டலா (வயது – 14) என்ற பாடசாலை மாணவி நேற்று முன்தினம் (06.09.2017) அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிடதன் பின்னர் வீட்டின் அறையில் உறங்கியுள்ளார். நேற்றைய தினம் அதிகாலை அவரது பெற்றோர் பாடசாலைக்கு செல்வதற்கு எழும்புமாறு அறைக்கு சென்று போது குறித்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ தான்தோன்றி நாகம்மாள் ஆலய மகா கும்பாபிசேகம் !(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம்  அருள்மிகு ஸ்ரீ  தான்தோன்றி   நாகம்மாள் ஆலய  மகா  கும்பாபிசேகம்  கடந்த 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை   கும்பாபிசேக   குருமார்களான  சிவஸ்ரீ  வைத்திய நாத குருக்கள்  மற்றும் ஜெகதீஸ்வர  குருக்கள் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது .

சிதம்பரபுரம் வாழ் ஊர்  மக்களின் பங்களிப்புடன் புதுப் பொலிவு பெற்ற மேற்படி ஆலயத்தின் கும்பாபிசேக நிகழ்வில்  ஏராளமான  பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர் .

வவுனியா விமானப்படை முகாமில் இடம்பெற்ற வான்படையினரின் கண்காட்சி மற்றும் சாகச நிகழ்வுகள்!(படங்கள்,வீடியோ)

இலங்கை  வான்படையின் 60 ஆண்டு  நிறைவையொட்டி வவுனியா வான்படை தளத்தில் MINI TATOO-2017  என்னும்  கண்காட்சி  மற்றும் சாகச நிகழ்வுகள் கடந்த 01.9.2017  வெள்ளிகிழமை தொடக்கம்   மூன்று நாட்கள் இடம்பெற்று வந்தன .

இறுதி நாளான   நேற்றைய தினம் வவுனியாவின் பலபகுதிகளிலிருந்தும்  பல்லாயிரக்கணக்கான  பொதுமக்கள்  கலந்து கொண்ட  மேற்படி  நிகழ்வில்  வான் வெளியில் விமானபடியினரின் பிசி விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள்  மற்றும் பரசூட் வீரர்களின் சாகச  நிகழ்வுகளும்  அனர்த்தங்களின் போது மீட்பு  நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளபடுகின்றது போன்றவற்றையும் விமானபடையினர்   பொதுமக்களுக்கு செய்து செய்து காட்டிய நிகழ்வுகளும் இடம்பெற்றது .

மேலும்  வான்கலங்கள்    வான்ரா கண்காணிப்பு  ராடர்   போன்றவற்றின்   தொழில்நுட்ப  ரீதியான விளக்கங்களும் வீட்டு தோட்டம்  செய்யும் முறை  உட்பட பெருமளவான அறிவியல் சார் விடயங்களும்  வான்படையினரால்  காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

வவுனியாவில் 151வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு வறுமையான குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!!

 
வவுனியா பொலிஸார் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினரும் இணைந்து வவுனியா அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்தைச்சேர்ந்தவருக்கு புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு நேற்று (03.09) மாலை 4 மணியளவில் கையளிக்கப்பட்டது.

இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் அறிவுறுத்தலுக்கமைய வவுனியாவில் ஆறு கிராம சேவையாளர் பகுதியை ஒருங்கிணைத்து ”கிராமத்திற்கு பொலிஸ்” என்ற தொனிப்பொருளில் பொலிஸ் நடமாடும் சேவை ஒன்றினை கடந்த ஒரு மாத காலமாக வவுனியா பொலிஸார் நடாத்தி வந்தனர்.

இதனடிப்படையில் நேற்று (03.09) இறுதி நிகழ்வொன்றினை வவுனியா அண்ணாநகர் கிராமத்தின் மைதானத்தில் வவுனியா பொலிஸாரினால் ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது.

இந்நிகழ்வின் முதற்கட்டமாக அண்ணாநகர் கிராமத்தில் வசிக்கும் கந்தையா கமலநாதன் என்பவருக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினரும் வவுனியா மாவட்ட பொலிஸாரும் இணைந்து குடிவாழ்வதற்கான சிறந்த இல்லம் ஒன்றை கட்டிமுடித்து இன்றைய தினம் பயனாளியின் கையில் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விருந்தினர்களை வவுனியா அண்ணாநகர் பாடசாலையின் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்று விருந்தினர் மேடைக்கு அழைத்துச்சென்றனர். மேலும் இந்நிகழ்வில் மூக்குகண்ணாடி வழங்கி வைக்கப்பட்டதுடன், வறிய குடும்பத்தைச்சேர்ந்த 5மாணவ்ர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும், காத்தார்சின்னக்குளம் கிராம சேவையாளர் பகுதியைச் சேர்ந்த சிறந்த சமூகசேவையாளர்கள் சிலர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு கெளரவிப்பும் வழங்கப்பட்டதுடன், பூந்தோட்டம் பகுதியில் கல்வி கற்பிக்கும் பாலர் பாடசாலை ஆசிரியர்களையும் கெளரவித்திருந்தனர்.

இதேவேளை பொலிஸாரின் நடமாடும் சேவை காலத்தில் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்களில் வெற்றி பெற்ற அணியினருக்குரிய வெற்றிகிண்ணங்கள்,பதக்கங்கள், சான்றிதல்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இக்காலப் பகுதியில் மக்களுடன் மக்களாக நின்ற பொலிஸார் சிலரும் கெளரவிக்கப் பட்டிருந்தனர்.

அத்துடன் கிராமசேவையாளர்களான க.தர்சன் மற்றும் சி.ரவீந்திரன் ஆகியோரும் ஓய்வுநிலை அதிபர் தேசபந்து சிவஞானம் அவர்களையும் சிறந்த சமூகசேவையாளர்கள் என கெளரவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே ஆகியோருடன் முன்னாள் வடமாகணசபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா தலமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராச்சி, மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையளர் திருமதி .குரூஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பரிசில்களும் வழங்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியை சேர்ந்த நடன குழுவினரின் நடனங்களும் கலைநிகழ்வுகள் பலதும் இடம்பெற்றதுடன் நூற்றுக்கணக்கான கிராமவாசிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

அமெரிக்க சிறுமியின் நெகிழ்ச்சியான செயல்! : சோகத்தில் ஆழ்த்திய மரணம்!!

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தால் 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடாமல் தவிர்த்துள்ளார்.

ஏழை மாணவியான அனிதா மருத்துவ கல்வியை தொடர முடியாமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவி அனிதாவுக்கு ஆதரவு அளித்து தமிழகத்தில் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்க சிறுமியின் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த காணொளியில் சிறுமி கூறியுள்ளதாவது,

அனிதாவின் தந்தைப் பெயர் சண்முகம். என் தந்தைப் பெயரும் சண்முகம். அதனால், தந்தையின் பிறந்தநாளை கொண்டாடவில்லை.

மருத்துவப்படிப்புக்கு அமெரிக்காவில் இருப்பதைப் போலவே, இந்தியாவில் நீட் என்ற நுழைவுத் தேர்வு உள்ளது. ஆனால், அதற்கு நிறைய செலவு செய்து படிக்க வேண்டும்.

அனிதாவின் தந்தை மூட்டைத் தூக்கும் கூலித்தொழிலாளி. மிகவும் ஏழ்மையான குடும்பம். எனவே, அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடினார்கள். நீதிமன்றம் வரை சென்றனர்.

ஆனால், அவரின் இலட்சியம் நிறைவு பெறவில்லை. அனிதாவைப் பற்றி விமர்சிப்பவர்கள் அதை நிறுத்திவிட்டு, எதற்காக அவர் நீதிமன்றம் சென்றாரோ. அதற்காக நீங்களும் நீதிமன்றம் செல்லுங்கள். யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பசியால் சிறுவனின் அவலம் : பார்ப்பவர்களை கண் கலக்க வைக்கும் சம்பவம்!!

 
பசியின் கொடுமையினால் குப்பை தொட்டியில் கிடந்த பழுதடைந்த பப்பாசி பழத்தை சாப்பிடும் சிறுவனின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.

இலங்கையில் எந்தப் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதென தகவல்கள் ஒன்றும் வெளியாகவில்லை. பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படம் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.

இந்த காட்சியை புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவிட தெரிந்தவர்களுக்கு, அந்த சிறுவனுக்கு உணவு பெற்றுக் கொடுக்க தெரியவில்லை என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த சிறுவனை அடையாளம் காண முடிந்தால், முடியுமான உதவிகளை பெற்று கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புளூவேல் கேம் விளையாடிய பெண் வங்கி ஊழியர் மீட்பு!!

புளூவேல் கேம் விளையாடிய பெண் வங்கி ஊழியரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவையில் அடுத்தடுத்து நடந்து வரும் விபரீத சம்பவங்களால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவலாக கல்லூரி மாணவர்கள், பள்ளி சிறுவர்கள், இளைஞர்களின் உயிருக்கு உலை வைத்து வரும் புளூவேல் கேம் விளையாட்டால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை பல்கலைக் கழக மாணவரான அசாம் மாநிலத்தை சேர்ந்த சசிகாந்த் போரா (வயது 23) என்பவர் புளூவேல் விளையாட்டுக்கு பலியானார்.

இதையடுத்து செல்போனில் ஆன்-லைன் மூலம் புதுவையில் புளூவேல் கேம் விளையாடும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கண்காணிக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் கீர்த்திக்கு ஒரு பெண் போன் செய்து பேசினார்.

அப்போது அந்த பெண் தேசிய வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், அதே வங்கியில் பணிபுரியும் தனது தோழி உப்பளத்தை சேர்ந்த பிரியா (23) என்பவர் புளூவேல் கேம் விளையாடி வருவதாகவும், இதனை தடுத்து நிறுத்தி அவரை நல்வழிப்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் பிரியாவின் செல்போன் நம்பரையும் சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்தி பிரியாவின் செல்போனில் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தார்.

ஆனால், புளூவேல் கேம் விளையாடவில்லை என பிரியா மறுத்தார். எனினும் பிரியாவின் செல்போனை போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

பெரும்பாலும் புளூவேல் விளையாட்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறகுதான் தொடங்கும் என்பதால் பிரியாவின் செல்போனை போலீசார் கண்காணித்த போது நள்ளிரவு 1 மணிக்கு பிறகு பிரியாவின் செல்போன் பிசியாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இன்று காலை 5 மணிக்கு சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் பிரியாவின் வீட்டுக்கு சென்றனர். ஆனால், வீட்டில் பிரியா இல்லை. அவரது பெற்றோரிடம் விசாரித்த போது நள்ளிரவு முழுவதும் பிரியா விழித்து இருந்ததாகவும், காலை முதல் பிரியாவை காணவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் கடந்த சில நாட்களாக பிரியா எப்போதும் செல்போனில் மூழ்கியபடியே இருப்பதாகவும், எந்த நேரமும் டென்‌ஷனாகவே அவர் இருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பிரியாவின் செல்போன் டவரை வைத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போத பிரியா புதுவை கடற்கரையில் நின்றிருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் கடற்கரைக்கு சென்று பிரியாவை மீட்டனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து சோதனை நடத்திய போது, அதில் கொடூரமான ரத்தம் சொட்டும் படங்கள இருப்பதை கண்டு போலீசாரே திடுக்கிட்டனர்.

அப்போது புளூவேல் கேம் விளையாட்டில் ஈடுபட்டது குறித்து பிரியாவிடம் போலீசார் விசாரித்த போது, அப்போதும் பிரியா இதற்கு மறுத்து போலீசாரிடம் ஆவேசமாக பேசினார்.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு போலீசார் கவுன்சிலிங் நடத்தி பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் பிரியாவை ஒப்படைத்தனர்.

தற்போது புதுவையில் அடுத்தடுத்து புளூவேல் கேம் விளையாட்டால் நடந்து வரும் விபரீத சம்பவங்களால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர்.

வடகொரியா ஹைட்ரஜன் குண்டுப் பரிசோதனை : உலக நாடுகள் கடும் கண்டனம்!!

சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளையும் அந்த நாடு பரிசோதித்துள்ளது.

அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது.

இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் (உள்ளூர் நேரப்படி) இன்று பகல் 12.36 மணியளவில் சக்திவாய்ந்த அணு குண்டினை வடகொரியா பரிசோதித்ததாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.

சர்வதேச தடைகளைப் பற்றி பொருட்படுத்தாத வடகொரியா ஆறாவது முறையாக இன்று அணு குண்டு பரிசோதனை செய்ததற்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கண்டனம் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் இந்த அத்துமீறலை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை வண்மையாக கண்டித்தே ஆக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அணு குண்டைவிட கடுமையான பேரழிவை ஏற்படுத்த கூடிய ‘ஹைட்ரஜன்’ குண்டுகளை தயாரித்துள்ளதாக வடகொரியா சமீபத்தில் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய அணு குண்டு சோதனை தென்கொரியா மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்கா உள்ளிட்ட பிறநாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இன்று நடத்திய ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அணு குண்டு பரிசோதனை என்று குறிப்பிட்டதைதான் வட கொரியா தற்போது ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை என்று தெரிவித்துள்ளதா?, அல்லது, தனியாக ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை நடத்தியதா? என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

சொந்த மண்ணில் முதல் முறையாக இலங்கையை வெள்ளையடிப்பு செய்த இந்திய அணி!!

இலங்கைக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என வெற்றிபெற்று தொடரை வெள்ளையடிப்புச் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.

முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என வெள்ளையடிப்புச்செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்புச் செய்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரேயொரு இருபதுக்கு-20 போட்டியிலும் விளையாடி வருகின்றது.

டெஸ்ட் தொடரை 3-0 என வெள்ளையடிப்புச் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் தற்போது வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்ற இன்றைய 5 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் திரிமன்னே 67 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 55 ஓட்டங்களையும் உபுல் தரங்க 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 239 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் ஆட்டங்கண்ட போதிலும் அணித் தலைவர் கோலி உறுதியுடன் துடுப்பெடுத்தாடி 110 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 21 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் 5 ஆவது ஒருநாள் போட்டியை வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி இலங்கையை அதன் சொந்த மண்ணில் வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

இத் தொடரின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா தெரிவுசெய்யப்பட்டார்.

தனது சொந்தமண்ணில் இலங்கையை வேறு நாட்டு அணியொன்று ஒருநாள் போட்டித் தொடரை வெள்ளையடிப்புச் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒரேயொரு இருபதுக்கு-20 போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நடிகை!!

திருமணம், விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலாபால் தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார்.

கடைசியாக இவரது நடிப்பில் VIP2 படம் வெளியாகி பாக்ஸ் ஒபிஸில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நடிகை அமலாபால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அது என்ன புகைப்படம் என்றால் உலகில் அதிகம் இன்டர்நெட் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.

சீனாவை விட இந்தியாவில் அதிகமாக இருக்கிறதா, இது மிகவும் மோசமான விடயம் என டுவிட் செய்திருக்கின்றார்.