வீதியில் உறங்கியவருக்கு நேர்ந்த அவலம்!!

 
நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை 4.30 அளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 50 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வீதியோரமாக உறங்கிக் கொண்டிருந்த குறித்த நபர் மீது கொழும்பிலிருந்து பயணம் செய்த கன்டெய்னர் வாகனம் மோதியுள்ளது.

சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விபத்தில் கொச்சிக்கடை நகரில் அமைந்திருந்த இரு கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் நண்பனுக்காக இளைஞர்கள் செய்த நல்ல காரியம்!!

ஐயனார் இளைஞர் கழகத்தின் முன்னாள் உறுப்பினரும், துடிப்புள்ள இளைஞருமான மறைந்த ப.கிசோக் ஞாபகார்த்த இரத்ததான முகாம் நேற்று இடம்பெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்வினை யாழ். சுன்னாகம் ஐயனார் இளைஞர் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

ஐயனார் இளைஞர் சனசமூக நிலைய மண்டபத்தில், ஐயனார் இளைஞர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் காமராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமைச் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.செல்வக்குமார் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், உடுவில் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ். அனுசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 28 வரையான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

இரத்த தானம் வழங்கிய இளைஞர்கள் அனைவருக்கும் பயன்தரு மரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சக நண்பனை நினைவு கூர்ந்து இளைஞர்கள் முன்வந்து இரத்ததானம் வழங்கியுள்ளமையைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய தேர்த்திருவிழா!!(படங்கள்,வீடியோ)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய மகோற்சவ பெருவிழா கடந்த 25.08.2017 ஆம் திகதி வெள்ளிகிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

9ம் நாளான இன்று சனிக்கிழமை  (02.09) காலை 7.30 மணிக்கு வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று 8.30 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கப் பெருமான் தேரில் வலம் வந்தார்.

இத் தேர்த் திருவிழாவில் நூற்றுக்கணக்கான  பக்தர்கள் கலந்து  கொண்டனர் .

 

தொடர்ந்து 10ம் நாளான நாளை (03.09)ஞாயிற்றுக்கிழமை  தீர்த்தோற்சவமும்1008 சங்காபிசேகமும் இடம்பெறவுள்ளது.

தேனீ தாடி வைப்பதில் புதிய கின்னஸ் சாதனை படைத்த கனடியர்!!

 
தேனீக்களை தாடியாக வைத்திருப்பதில் புதிய கின்னஸ் வரலாற்று சாதனையை கனடாவைச் சேர்ந்த ஜூவான் கார்லோஸ் நோகுஸ் ஆர்டிஸ் படைத்துள்ளார்.

தேனீக்களை தாடியாக வைத்திருந்த முந்தைய நேர பதிவைவிட 8 நிமிடங்கள் அதிகமாக தேனீக்களை தாடியாக வைத்திருந்து அவர் இந்த புதிய சாதனையை உருவாக்கியுள்ளார்.

ஒன்டாரியோ மாகாணத்தில் தேனீ பண்ணை ஒன்றில் வேலை செய்யும் ஜூவான் கார்லோஸ் நோகுஸ் ஆர்டிஸ், சரியாக 61 நிமிடங்கள் தன்னுடைய முகத்தில் தேனீக்களை தாடியாக வைத்திருந்தார்.

“மென்மையானவை” என்று விபரிக்கப்படும் ஒரு இலட்சம் தேனீக்களை இதற்காக அந்த தேனிப்பண்ணை வழங்கியிருந்தது.

தேனீக்கள் இரண்டு முறை கொட்டியபோதும் அமைதியாக இருந்த ஆர்டிஸ், முந்தைய சாதனையை முறியடித்த பின்னர் தேனீக்களை விரட்டிவிடும் வரை அசையாமல் அமர்ந்திருந்தார்.

இந்த சாதனை-முறியடிப்பு முயற்சியில் ஈடுபடும் முன் இருமுறை மட்டுமே இதில் பயிற்சி எடுத்திருக்கும் ஆர்டிஸ், தான் இந்த தேனீ தாடி வைத்துக்கொள்ளும் கலையில் இன்னும் ஒரு புதுமுகம் தான் என்று கூறியுள்ளார்.

பூமிக்கு அருகே வரும் ராட்சத விண்கல்!!

கடந்த நூற்றாண்டு காலத்தில் அடையாளங்காணப்பட்ட மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு வெகு அருகே ( சுமார் 44 இலட்சம் மைல் தொலைவில்) கடந்து செல்லும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா குறிப்பிட்டுள்ளது.

‘ப்ளாரன்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் சுமார் 2.7 மைல் அளவு கொண்டது. ஆனால், அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்காது.

மற்ற விண்கல்கள் பூமிக்கு மிக அருகே வந்து சென்றிருக்கின்றன. ஆனால், அவை எல்லாமே இந்த விண்கல்லை விட சிறியவை என்று கணிக்கப்பட்டுள்ளது.

சூரியனும் மற்ற கிரகங்களும் உருவானதற்குக் காரணமான சம்பவங்கள் பற்றிய தடயங்கள் இந்த விண்கற்களில் இருக்கின்றன.

பூமிக்கு வெகு அருகில் கடக்கும் நிலையில் கூட, ஃப்ளாரன்ஸ், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தைவிட சுமார் 18 மடங்கு அதிக தூரத்தில்தான் இருக்கும். இந்த விண்கல் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கலிபோர்னியாவிலும் போர்டோ ரிக்கோவிலும் உள்ள நிலத்தில் இருந்து இயங்கும் ராடார்களைப் பயன்படுத்தி இந்த விண்கல்லைக் கூர்ந்து ஆராய விஞ்ஞானிகள் திட்டமிடுகின்றனர்.

இந்த அளவுள்ள ஒரு பொருள் பூமியைத் தாக்கினால் அதன் விளைவுகள் உலகளாவிய அளவில் பெரிதாக இருக்கும்.

விண்வெளியில் பறந்து கொண்டிருக்கும் இது போன்ற ராட்சத அளவு கொண்ட பாறைகளில் சுமார் 90 வீதத்திற்கும் மேற்பட்ட பாறைகளைத் தாங்கள் இப்போது அடையாளம் கண்டுவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இணையத்தளத்தை பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இணையத்தளத்தை பயன்படுத்த இதுவரை அறவிடப்பட்டு வந்த 10 வீத தொலைத் தொடர்பு வரி இன்று முதல் நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இணையத்தள சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு இது குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இணையத்தள சேவைகளுக்கு மேலதிகமாக 10 வீத டேட்டாக்களை அதிகரித்து வழங்கவும் நிறுவனங்கள் இணங்கியுள்ளன.

இதன் மூலம் குறைந்த செலவில் இணையத்தளத்தை பயன்படுத்த முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

மீண்டும் சாதனை படைத்த யாழ். வீராங்கனை!!

 
தேசிய மட்டத்தில் கோல் ஊன்றி பாய்தலில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனை மீண்டும் சாதனை படைத்துள்ளார். அவரால் முதலில் ஏற்படுத்திய சாதனையை ஜே.அனித்தா இன்று மீண்டும் புதுப்பித்துள்ளார்.

தியகம மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற 95வது தேசிய தடகள போட்டியிலேயே அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42வது தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் அனித்தா சாதனை படைத்தார். இந்நிலையில் இன்று மீண்டும் அவர் தனது சாதனையை முறியடித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பெண்களுக்கான கோல் ஊன்றி பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனைகள் முதல் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றுள்ளனர்.

01.ஜே.அனித்தா – யாழ்ப்பாணம் – 3.47 m

02.எஸ்.பீ.ரணசிங்க – விமானப்படை – 3.20 m

03.சீ.ஹெரினா – யாழ்ப்பாணம் – 3.00 m

இந்தப் போட்டிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கோட்டையான அம்பாந்தோட்டையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மூன்றாம் உலகின் சிறந்த இளம் விஞ்ஞானியாக இலங்கையர் தெரிவு!!

 
மூன்றாம் உலகின் சிறந்த இளம் விஞ்ஞானியாக இலங்கையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் ரங்கிக உமேஷ் ஹல்வத்துர (Rangika Umesh Halvathura) என்பவருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சூழலுக்கு நெருக்கமான பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து ரங்கிக உமேஷ், இந்த வருடத்திற்கான “மிகச் சிறந்த இலங்கையர்” என்ற விருதை பெற்றுள்ளார்.

இத்தாலியை தலைமையகமாக கொண்ட உலக அறிவியல் அகாடமியினால் (TWAS – The World Academy of Science) இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் அறக்கட்டளையினாலேயே அவரது பெயர் The World Academy of Science இன் விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டது.

கடந்த வருடம் உயிரியல், வேதியியல், பொறியியல், இயற்பியல் மற்றும் பிற துறைகளில் இளம் விஞ்ஞானிகள் வழங்கியுள்ள பங்களிப்பு, அவற்றின் ஆராய்ச்சிகள் பிற துறைகளில் மேற்கொண்ட சாதனைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டே இந்த விருது வழங்கப்படுகின்றது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பேராசிரியர் ரங்கிக உமேஷ் ஹல்வத்துர, தனது கண்டுபிடிப்பினால் கிடைக்கும் சர்வதேச விருதை விடவும், தனது கல்விக்கான செலவுகளை வழங்கிய இலங்கையர்களுக்காக சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தமை மகிழச்சி ஆகும்.

உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிறிய இடம் ஒன்றில் இருந்த வந்த நபர் நான். நான் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்றவன் அல்ல.

களுத்துறையில் உள்ள சிறிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்று, மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு சென்று இவ்வாறான ஒரு இடத்திற்கு வந்தமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த விருதை விடவும், நான் இந்த இடத்திற்கு வருவதற்கு உதவிய ஏழை மக்களுக்கு ஏதாவது ஒன்றை செய்வதற்கு கிடைத்த சந்தர்ப்பம் குறித்தே நான் மகிழ்ச்சியடைகின்றேன். அந்த மக்களின் கடனை செலுத்த தற்போது எனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

விரக்தியின் உச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதா : போராட்ட களத்தில் மாணவர்கள்!!

தமிழகம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த அனிதா, மருத்துவ கல்வியை தொடர முடியாமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் முழு தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், சென்னை, திருச்சி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவி அனிதாவுக்கு ஆதரவாக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், மாணவி அனிதாவின் தற்கொலை துரதிஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல், மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது என்றும், இது தொடரக்கூடாது என்றும், அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாணவி அனிதாவுக்கு ஆதரவாக ஸ்டாலின், வைகோ, வேல்முருகன், சீமாம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் மத்திய மற்றும மாநில அரசுக்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் இப்படியொரு வைத்தியரா?

இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆயுர்வேத வைத்தியம் சர்வதேச ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆயுர்வேத மருத்துவத்தை திறம்பட மேற்கொள்ளும் இலங்கை வைத்தியர் ஒருவர், வெளிநாட்டவர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளார்.

நாட்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியரான தெதெதுரு ஷாந்த செனவிரத்ன என்பவரே இவ்வாறு பிரபலமடைந்துள்ளார்.

அவரது வீட்டில் தங்கியிருந்து பல்வேறு நாட்டு வெளிநாட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கை மருத்துகள் ஊடாக பல தொற்று நோய்களையும் இவர் குணப்படுத்துவதனாலேயே இவ்வாறு வெளிநாட்டவர்களிடம் இவர் பிரபலமடைந்துள்ளார்.

எலும்பு முறிவுகள், நரம்புகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர் மருந்து கண்டுபிடித்துள்ளார்.

9 மணிநேரம் உயிருடன் : வைத்தியர்கள் கைவிட்ட விசித்திர குழந்தையின் தற்போதைய நிலை!!

 
உலகில் பல குறைகளுடன் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி நாம் அறிந்திருப்போம், அவர்களை பற்றி படித்திருப்போம். ஆனால் அதன் பின் அவர்களின் நிலை குறித்து நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இதுபோன்று தான், பிரேசில் நாட்டில் அகோர முகத்துடன் ஒரு குழந்தை கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பிறந்தது. இந்த குழந்தையின் முகத்தில் கண், காது, வாய், மூக்கு என்பன இல்லாமல் ஒரு வித்தியாசமான தோற்றத்தை கொண்டு பிறந்தது.

இவ்வாறு பிறந்த குழந்தையின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா?

இந்த குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்களிடம், இந்த குழந்தை ஒன்பது மணி நேரம் மட்டுமே உயிர் வாழும், எனவே வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள் என்று மருத்துவர்கள் கூறி கைவிட்டனர்.

மிக மன வருத்தத்துடன் பெற்றோர்கள் வீட்டுக்கு குழந்தையை எடுத்து வந்தனர். ஆனால் விதிக்கு புறம்பாக குறித்த குழந்தை வெகு நாட்களாக நலத்துடன் வாழ ஆரம்பித்தது.

தொடர்ந்து குழந்தையை அன்புடன் வளர்த்த பெற்றோர்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் எட்டு சத்திரசிகிச்சைகள் செய்து தற்போது அந்த சிறுமிக்கு ஒருவழியாக ஒரு முகத்தை உருவாக்கியுள்ளனர்.

சமீபத்தில் இந்த குழந்தை தனது ஒன்பதாவது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மூன்று தினங்களுக்கு விமானப்படையின் கண்காட்சியும், சாகச நிகழ்வும்!!

 
இலங்கை விமானப்படையின் 66 ஆவது ஆண்டை முன்னிட்டும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாகவும் வவுனியா கூட்டுப் படைத் தலைமையகத்தில் விமானப்படையின் கண்காட்சியும், சாகச நிகழ்வும் நடைபெற்று வருகின்றது.

இந்த கண்காட்சியினை இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆரம்பித்து வைத்தார். இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் விமானப்படைத் தளபதி வரவேற்கப்பட்டதுடன், கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுகளையும், விமானப் படை வீரர்களின் சாகசங்களையும் பார்வையிட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை 3 தினங்கள் இக் கண்காட்சியும் சாகசமும் நடைபெறவுள்ளது. இதில் விமானப்படை வீரர்கள் பரசூட்டில் இருந்து குதித்தல், தீஅணைத்தல், விமானத்தின் பகுதிகளை காட்சிப்படுத்தல், விமான இயக்கம் பற்றி வெளிப்படுத்தல், விமானங்களின் சாகசப் பறப்புக்கள், விமானப்படை வீரர்களுடன் இணைந்து நாய்களின் சாகசங்கள் என விமானப்படையுடன் தொடர்புடைய பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் விமானப்படை உயர் அதிகாரிகள், பொலிசார், விமானப்படை வீரர்களின் குடும்பங்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் 37வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

 
தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 37வது நினைவு தினம் வவுனியாவில் நேற்று(01.09.2017) காலை 8.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவருமான செ.சந்திரகுமார் தலைமையில் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொது அமைப்புக்களோ, சமூக அமைப்புக்களோ, அரசியல்வாதிகளோ இச் சிலைகளை கண்டுகொள்ளாத இந் நிலையில் தனியொரு மனிதனாய் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 37 வது நினைவு தினம் அனுஸ்டித்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்-2017(படங்கள்)

குருமன்காடு ஸ்ரீ  காளியம்மன் தேவஸ்தானத்தின் அஷ்டபந்தன நவகுண்டபக்ச பிரதிஸ்ட  மகா கும்பாபிசேக  பெருவிழா  இன்று (31.08.2017) வியாழகிழமை  காலையில்   சிவா ஸ்ரீ சதா மகாலிங்க சிவகுருக்கள்  தலைமையில்  பெற்றது.

கும்பாபிசேக விழாவில் நல்லை ஆதீன  குறு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சர்யா சுவாமிகள் காலத்து கொண்டு  ஆசியுரை வழங்கினார்.

வவுனியா ஆலய நகைகள் அர்ச்சகரிடமிருந்து பெறப்பட்டு வங்கியில் வைப்பிலிடப்பட வேண்டும்!!

வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலய பரிபாலனசபையினருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆலய நிர்வாகத்தில் வேறு அமைப்புக்கள் குறிப்பாக கிராம அபிவிருத்திச்சங்கம், மகளிர் அபிவிருத்திச்சங்கம் போன்ற அமைப்புக்கள் தலையிட முடியாது. அதேநேரம் ஆலய நகைகள் ஆலய அர்ச்சகரிடமிருந்து பெறப்பட்டு வங்கியில் வைப்பிலிடுதல் வேண்டும்.

எந்த ஒரு முடிவுகளையும் ஆலய நிர்வாகசபையினர் எடுக்க முடியும். அதேபோல ஆலய யாப்பின்படி இரண்டு வருடத்திற்கு நிர்வாக சபை செயற்பட தவறின் ஆலய பதிவுகள் தொடர்பாக மீள் பரிசீலினை செய்யப்படும் என்று தனது கடிதத்தில் ஆலய பரிபாலனசபையினருக்கு இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.குகனேஸ்வரசர்மா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டமும், பேரணியும்!!

 
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன், பேரணி ஒன்றினையும் மேற்கொண்டனர்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக நேற்று (30.08.2017) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அதன் பின் ஏ9 வீதி வழியாகச் சென்ற பேரணி 188 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் மேற்கொள்ளப்படும் இடத்திற்குச் சென்று, அங்கிருந்து வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘எங்கே எங்கே எமது பிள்ளைகள் எங்கே, நல்லாட்சி அரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைத்தா, அரசே இனியும் காலத்தை கடத்தாதே’ உள்ளிட்ட கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், சி.ஆ.ஜோதிலிங்கம், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.