வவுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் இன்று (30.08.2017) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ஒடுகளை ஏற்றி வந்த வாகனம் கல்குண்ணாமடுவ பகுதியில் எவ்வித சமிச்சை விளக்குகளுமின்றி தரித்து நின்றது. அதே பாதையில் வவுனியா நோக்கி பயணித்த வீட்டின் மேல் கூரை அலங்கரிப்பு பொருட்களை ஏற்றி வந்த வாகனம் தரிந்து நின்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் தரிந்து நின்ற வாகனம் வீதியின் கீழ் தூக்கியெறியப்பட்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் தரித்து நின்ற வாகனத்தில் பயணித்த வன்னிமுத்து கிஸ்ணன் (வயது – 48) என்பவர் உயிரிழந்ததுடன் மூவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர்.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (29.08.2017) மாலை 5.30 மணியளவில் இ.போ.ச பேரூந்து – கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை 5.30 மணியளவில் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி புறப்பட்ட இ.போ.ச பேரூந்து வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து எ9 வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் முதலாம் குருக்குதெரு வீதியிலிருந்து A9 வீதிக்கு ஏற முற்பட்ட கார் இ.போ.ச பேரூந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா சுகாதார அதிகாரிகள் பணிமணைக்கு முன்பாக நிரந்தர நியமனம் கோரி கடந்த 04.05.2017ம் திகதி சுகாதார தொண்டர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்றுடன் (29.08.2017) 118வது நாள்.
அதனையடுத்து இன்று காலை 9.30 மணியளவில் போராட்ட இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் , வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்கள்.
இதன் போது ஒரு மாத காலத்திற்குள் உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வாக்குறுதி வழங்கியதையடுத்து சுகாதார தொண்டர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
ஒரு மாத காலத்திற்குள் தீர்வையினை பெற்றுத்தரவிட்டால் ஒரு மாதம் நிறைவடைந்தவுடன் மீண்டும் எமது போராட்டம் தொடருமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
போராட்டகாரர்களினால் இதன் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இருவரிடமும் கையளிக்கப்பட்டது.
வவுனியா பொது வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வரும்போது அவர்களை தள்ளுவண்டில்களில் அழைத்துச் செல்வதில் ஆளணிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினாலே நோயாளருடன் வரும் உறவினரை உதவிக்கு அழைக்க நேரிட்டுள்ளது. இதை தவறாக நினைக்கவேண்டாம்.
இதேபோல இரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது சில நேரங்களில் இரத்தம் உறைந்துவிடுவதன் காரணமாக பரிசோதனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே திரும்ப இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கு இரத்த மாதிரி பெறப்படுகின்றது. அவர்களின் பரிசோதனைகளை சரியான முறையில் மேற்கொள்ளவேண்டும் என்ற காரணத்தினாலே திரும்ப இரத்தப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சில குறைபாடுகள் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்ததையடுத்து வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகம் நடாத்திய கலை விருது விழா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய முன்றலில் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வு தொடர்பாக கழகத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
“இது கலைஞர்களுக்கான களம் இதன் கதவை நாங்கள் திறந்து விட்டிருக்கின்றோம் அதனை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் இது வெறுமனவே வாய்பேச்சு அல்ல கலைஞர்களின் உள்ளத்தில் உள்ளவை புரிந்து கொள்ளுங்கள் என்றார்”
இன் நிகழ்வு 20 வருடங்களின் பின்னர் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நிகழ்ச்சியின் பங்கு பற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்காக இரவு பகலாக பாடுபட்ட இளைஞர் கழக உறுப்பினர்களான பிரேம்குமார், நிரோஷன், தனுஷன், கஜன், கிருசாந், திலக்சன் ஆகியோருக்கு அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கவேண்டும் என தெரிவித்து நேற்று (28.08.2017) காலை 11.00 மணிக்கு குறித்த மரணதண்டனை கைதிகளின் குடும்பத்தினர் வவுனியா புளியங்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
2006 ஆம் ஆண்டு வவுனியா சுந்தரபுரத்தில் கத்தியால் குத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கே வவுனியா மேல் நீதிமன்றம் 01.06.2017 அன்று மரண தண்டணை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளபோதும் தங்களுக்கு சரியான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கும் மரணதண்டனை கைதிகளின் உறவுகள் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்து அடையாள உண்ணாவிரதத்தில் மேற்கொண்டனர்.
குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாக இருப்பதால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என உண்ணாவிரதத்தில் இருந்தவர்களுக்கு புளியங்குளம் பொலிசாரால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து உண்ணாவிரதமிருந்தவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
பொரளை நிலத்தடி சுரங்கபாதையில் தூக்கமின்றி கண்ணீருடன் வாழும் வயோதிப தாயோருவர் காணப்பட்டுள்ளார்.
82 வயதான தாய்க்கு 22 வயதில் திருமணம் நடந்துள்ளது. அவருக்கு பிறந்த முதல் பெண் குழந்தை உயிரிழந்தவுடன் அவரது கணவர் கைவிட்டுச் சென்றுள்ளார்.
ஹேரத் முதியன்செலாகே பாலமெனிக்கே என்ற இந்த தாய் கண்டி பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ள நிலையில், பின்னர் கூலி தொழில் செய்வதற்காக கொழும்பிற்கு சென்றுள்ளார்.
60 வருடம் தொழில் செய்தவர் நோய்வாய்ப்பட்டுள்ளமையால் ஒருவரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
தனது உறவினர்கள் மற்றும் சகோதரியின் பிள்ளைகள் அவரை புறக்கணித்துள்ளமையினால் அவர் இவ்வாறு குறித்த படியில் அமர்ந்து யாசகம் பெற்று வருகின்றார்.
அவரால் அங்கு உறங்க முடியவில்லை எனவும், அவர் உறங்கிய சந்தர்ப்பங்களில் அவரது 3 பைகளை திருடி சென்றுள்ளதாகவும் அந்த வயோதிப தாய் தெரிவித்துள்ளார்.
வடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை வெளிக்கொண்டுவர முடியாமல் பல இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.
அவ்வாறு கிரிக்கெட் மீது அதீத காதல் கொண்டு தனது திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமையால் இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாமல் தவிக்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் விஜயராஜ் பற்றி கடந்த மாதம் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து பெரும்பாலோரின் பார்வை இவ் இளைஞன் மீது திரும்ப ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இவ் இளைஞனை அழைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் தன்னால் முடிந்த உதவிகளை செய்து தருவதாகவும் விஜயராஜ் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கெட் அணியில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
இன் நிலையில் இவ் இளைஞனை இலங்கை கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சியின் ஒரு அங்கமாக கொழும்பில் இவ் இளைஞனுக்கு இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய மற்றும் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நுவான் சொய்ஸா ஆகியோர் முதற்கட்ட பயிற்சிகளை வழங்கினர்.
மேலும் இது தொடர்பில் தெரிவித்த சனத் ஜெயசூரிய, இவர் இலங்கை அணிக்காக விளையாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், அவ்வாறு விளையாடும் பட்சத்தில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தி விளையாடும் முதல் தமிழ் இளைஞன் இவராக இருப்பார் என்றும் தெரிவித்ததுடன் இவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
கிளிநொச்சி புலோப்பளை பகுதியில் வசித்துவரும் விஜயராஜ் கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வியைப் பயின்று பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்டத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
மாகாண மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழும் விஜயராஜின் இலட்சியம் இலங்கை கிரிக்கெட் குழுவில் இணையவேண்டும் என்பதே.
மகளை மொட்டை மாடியிலிருந்து இரண்டு முறை தூக்கி வீசி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் காஞ்சன், இவர் மனைவி சுவாதி, இவர்களுக்கு ஐசிகா சர்க்கார் என்ற 7 வயது மகள் உள்ளார்.
சுவாதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காஞ்சன் அவரை பிரிந்து சில மாதங்களாக தனியாக வாழ்ந்து வருகிறார், மாதம் ஒருமுறை மனைவியை சந்தித்து செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் ஐசிகாவை வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்ற சுவாதி அங்கிருந்து அவரை தூக்கி கீழே வீசியுள்ளார்.
பின்னர் கீழே வந்து ஐசிகா இன்னும் உயிருடன் இருப்பதை பார்த்து கோபமடைந்த சுவாதி, மீண்டும் அவரை மாடிக்கு தூக்கி சென்று அங்கிருந்து கீழே வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஐசிகா துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை பார்த்த அயலவர்கள்தெரிவிக்கையில், ஐசிகாவின் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோம். சுவாதி உடையில் ரத்த கறை இருந்த நிலையில், மீண்டும் ஐசிகாவை மாடியிலிருந்து தூக்கி கீழே வீசினார்.
இதையடுத்து சுவாதியை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தோம்.
கணவரை விட்டு பிரிந்ததிலிருந்தே சுவாதியின் மனநிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் ஐசிகாவின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, சுவாதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணக் கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுதீவு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் ஆறு மாணவர்கள் உயிரிழந்தனர்.
யாழ்ப்பாணம், பண்ணை, மண்டைதீவு கடலில் நேற்று பிறந்த நாள் கொண்டாடச் சென்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.
படகு கவிழ்ந்தமையில் மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய அனர்த்தத்தின் போது முதற்கட்டமாக ஐந்து மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. மற்றவர் ஒருவரின் சடலம் கடற்படையினரால் தேடப்பட்டது.
எனினும் மூன்று மணி நேர தீவிர தேடுதலின் போது ஆறாவது மாணவின் சடலமும் மீட்கப்பட்டது. நேற்றையதினம் பிறந்த நாளை கொண்டாடிய மாணவனின் சடலமே இறுதியாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதிய குறித்த மாணவர்கள் பிறந்த நாள் கொண்டாடச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். இந்த படகில் ஏழு மாணவர்கள் பயணித்துள்ளனர்.
எனினும் ஒரு மாணவன் நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பினார். இந்த மாணவர்கள் உரிய தரமற்ற படகில் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களான சின்னத்தம்பி நாகசுலோசன், லிங்கநாதன் ரஜீவ், ஜெய்சாந்த் தினேஸ், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவனான தேவகுமார் தனுரதன், யாழ். பெரியபுலம் மகா வித்தியாலய மாணவனான கோணேஸ்வரன் பிரவீன் மற்றும் யாழ். மத்திய கல்லூரி மாணவன் தனுசன் ஆகிய மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
ஏனைய மாணவர்களிடம் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவர்களின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுக்கு 18 மாணவர்கள் சென்றுள்ளதாக ஆபத்திலிருந்து தப்பி வந்த மாணவன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய அனர்த்தம் யாழ் குடா நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாலியல் பலாத்கார வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராம் ரஹீம் சிங் குறித்து மற்றொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தன்னுடைய வளர்ப்பு மகளான ஹனிப்ரீத் இன்சானுடன் தகாத உறவு கொண்டார் என அவரின் கணவரான விஷ்வாஸ் குப்தா புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..
நாம் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளராக இருந்தேன், 1999ம் ஆண்டு பிரியங்காவுக்கு ஹனிப்ரீத் இன்சான் என பெயர் வைத்தார். அந்த ஆண்டே எங்களுக்கு திருமணமும் நடைபெற்றது. 2011ம் ஆண்டு ராம் ரஹீம் சிங்கை சந்திக்கச் சென்றேன்.
அப்போது அவருடைய அறைக்கதவு திறந்திருந்தது, என் மனைவியுடன் தகாத உறவு கொண்டிருந்தார்.
என் மனைவியை என்னிடமிருந்து பிரித்துவிட்டார், நாங்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஹனிப்ரீத்தையே புகார் அளிக்க வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் காதலிக்காக 3 வயது மகனை கொடூரமாக கொலை செய்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் நியூ ஜேஸி மாகாணத்தில் வசித்துவரும் டேவிட் என்ற 23 வயது தந்தையே இவ்வாறு 3 வயது மகனை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
டேவிட்டிற்கு மனைவி இல்லாததால் 17 வயதான மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து வந்துள்ளார். காதலி வீட்டிற்கு வரும் ஒவ்வொரு முறையும் டேவிட்டின் மகன் அப்பெண்ணை சுற்றி வந்து விளையாடியுள்ளார்.
இது காதலிக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் மகன் இருந்தால் நான் வீட்டிற்கு வர மாட்டேன் என காதலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காதலியின் மீது மோகம் கொண்ட தந்தை தான் பெற்ற மகனை கொடூரமாக கொலை செய்து உடலை வெளியே கொண்டு சென்று மறைத்துள்ளார்.
பின்னர் பொலிசாரை தொடர்புக்கொண்டு எனது 3 வயது மகன் எனக்கு தெரியாமல் வெளியே ஓடிவிட்டான் என பொய் கூறியுள்ளார்.
தந்தையின் புகாரை பெற்ற பொலிசார் மறுநாள் சிறுவனின் உடலை கண்டுபிடித்துள்ளனர். உடலை பரிசோதனை செய்தபோது சிறுவன் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த கொலை தொடர்பான விசாரணையில் தந்தை தனது குற்றங்களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் செப்டம்பர் 29ம் திகதி தந்தைக்கு தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற சரஹா, பயனாளிகளின் அலைபேசியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைத் திருடி, தங்கள் நிறுவன சேர்வர்களில் சேகரிக்கும் விபரம் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் மிக அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட மொபைல் அப்ளிகேஷனான சரஹா பதிவாகியுள்ளது.
இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் உங்கள் அடையாளத்தினை மறைத்துக்கொண்டு, நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு செய்திகளை அனுப்பவோ அல்லது பெறவோ முடியும்.
இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட நபர் பற்றிய உண்மையான கருத்துக்களை நேர்மையாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், பலர் இதனை மற்றவர்களைக் கேலி செய்ய உதவும் ஒரு வாய்ப்பாக, கிண்டலாகப் பயன்படுத்தி வந்தனர்.
சிலர் இதனை ”மொட்டைக் கடிதம்” என்றும் கூட வர்ணித்தனர்.
இந்நிலையில், சரஹா மொபைல் அப்ளிகேஷனானது பயனாளிகளின் அலைபேசியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைத் திருடி, தங்கள் நிறுவன சேர்வர்களில் சேகரிக்கும் விபரம் தற்பொழுது வெளிவந்துள்ளது.
”சரஹா மொபைல் அப்ளிகேஷனில் நீங்கள் லாக் இன் செய்த உடனேயே உங்களது அலைபேசியின் ஆண்ட்ராய்ட் இயங்கு செயலியில் சேகரிக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட அனைத்தும் சரஹா நிறுவன சேர்வர்களுக்கு மாற்றப்படும். இதற்காக BURP Suit எனப்படும் கண்காணிப்பு மென்பொருளானது பயன்படுத்தப்படுகிறது. இந்த அப்ளிகேஷனை உங்கள் அலைபேசியில் நிறுவும் பொழுது இதற்கான அனுமதி கூறப்பட்டாலும், இதன் மூலமாக பயனாளர்களுக்கு என்ன அனுகூலம் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை,”
என அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் செயற்படும் பிஷப் பாக்ஸ் என்னும் இணையத்தள பாதுகாப்பு நிறுவனத்தில், பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றும் சக்கரி ஜூலியன், அங்கு வெளியாகும் ”சண்டே” செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
இந்நிலையில், சரஹா அப்ளிகேஷனை உருவாக்கியவரான ஜெயின் அல் அபிதீன் தவ்ஃபீக் தனது டிவிட்டர் பக்கத்தில், ”தொடர்பு எண்கள் சேகரிக்கப்படுவது என்பது இதே அப்பினை பயன்படுத்தும் மற்ற நண்பர்களை உங்களுக்கு அடையாளம் காட்டுவதற்குத்தான். அது விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அதே சமயம் இந்த நடைமுறையானது சரஹாவின் அடுத்த பதிப்புகளில் நீக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஹார்வே புயலால் வீட்டிற்குள் புகுந்த வெள்ளத்தில் ஒருவர் மீன் பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 13 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவை தாக்கிய ‘ஹார்வே’ புயல் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
புயல் காரணமாக டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன், விக்டோரியா, மற்றும் கார்பஸ் கிறிஸ்டி ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதில் ஹூஸ்டன் நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நிரம்பி வழிந்த தண்ணீர் நகருக்குள் புகுந்தது. அதனால் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்நிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் பகுதியில் விவியானா சால்டனா என்பவரின் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்தது.
வெள்ள நீரோடு மீன்களும் வீட்டிற்குள் புகுந்துள்ளன. அம்மீன்களை விவியானாவின் தந்தை பிடித்து விளையாடியுள்ளார்.
அவர் நீருக்குள் குதித்து மீன் பிடிக்கும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
நாட்டில் நிலவிவரும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தொகை 18 இலட்சத்திற்கு அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிிவத்துள்ளது.
மொரனாகலை மாவட்டமே வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாபவட்டத்தில் 3 91,468 பேர் பாதிக்க்பபட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
குருநாகலை மாவட்டத்தில் வறட்சி காரணமாக 2 ,56 000 அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோரின் தொகை 218006 ஆக காணப்படுகின்றது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.
பிரித்தானியாவில் கடந்த சனியன்று இடம்பெற்ற மோசமான வீதி விபத்தில் தமிழக தமிழர்கள் 7 பேர் உட்பட 8 பேர் பலியாகிய துன்பியல் இடம்பெற்றது.
இந்த விபத்துக்கு காரணமான இரண்டு கனரக வாகனங்களின் சாரதிகள் இருவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து விடுமுறைக்காக வந்த தமிழ் குடும்பங்கள் பரிஸ் ஈரோடிஸ்னி பூங்கா உட்பட்ட ஐரோப்பிய சுற்றுலா செல்வதற்காக வாகனம் ஒன்றை (மினி பஸ்) வாடகைக்கு எடுத்து பயணம் செய்தனர்.
நொட்டிங்காம் பகுதியை சேர்ந்த இந்த வாகனத்தின் சாரதியாகவும் கேரள பூர்வீகத்தை கொண்ட சிரியாக் ஜோசப் இருந்தார்
மேற்படி வாகனம் நியூபோர்ட் பேக்னெல் நகர அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த போது அது அதிவேக நெடுஞ்சாலையின் முதலாவது பாதையில் அபாயகரமாக நின்ற கனரக வாகனத்துடன் (கொன்டெய்னர் லொறி) மோதியது. அதன்பின்னர் பின்னால் வந்த இன்னொரு கனரக வாகனங்களும் இந்த வாகனத்தின் மீது மோதியது.
இதில் மினி பஸ்சில் பயணித்த பெண்கள் உள்பட மொத்தம் எட்டு பேர் பலியாகியுள்ளனர். ஐந்து வயது சிறுமி உட்பட் இன்னும் இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வருகின்றனர்.
மேற்படி ஐந்து வயது சிறுமி பரிஸ் ஈரோடிஸ்னி பூங்காவை பார்க்க ஆவலுடன் சென்றதாக கூறப்படுகிறது. பலியான தமிழர்கள் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோசின் ஊழியர்கள். விடுமுறையை கழிக்க பிரித்தானியாவுக்கு வந்தவர்கள்.
இந்த விபத்தில் கார்த்திகேயன் இராமசுப்ரமணியம், ரிஷி ராஜீவ் குமார், விவேக் பாஸ்கரன் ஆகிய மூவரும் பலியாகி;. மேலும் ஒரு ஊழியர் படுகாயம் அடைந்ததை விப்ரோ உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவத்தில் கைதான இரண்டு கனரக வாகன சாரதிகளில் ஒருவரான போலந்து சாரதி மது போதையில் இருந்தாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இவர் இன்று நீதிமன்றத்தில்; நிறுத்தப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுதார்.
இரண்டு சாரதிகள் மீதும் உயிரைப் பறிக்கும் வகையில் அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டியமை உட்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன