ஜப்பானுக்கு மேலாக பறந்த வடகொரியாவின் ஏவுகணை : மக்கள் அச்சத்தில்!!

ஜப்பான் பிராந்திய கடற்பரப்பிற்கு மேலாக வடகொரியா ஏவுகணையொன்றை செலுத்தியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நாவின் அச்சுறுத்தலையும் மீறி வடகொரியா அண்மைக்காலமாக ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இன்று (29.08) காலை அந்நாட்டு நேரப்படி 6 மணியளவில் ஜப்பான் பிராந்தியத்திற்கு மேலாக ஏவுகணை செலுத்தப்பட்டுள்ளது.

வட கொரியாவினால் தற்போது செலுத்தப்பட்டுள்ள ஏவுகணையானது, பாரிய அச்சுறுத்தல் எனவும், இதற்கு ஜப்பான் தகுந்த பதில் வழங்குமெனவும் ஜப்பானின் தலைமை அமைச்சு செயலாளர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு பின்னர், வடகொரியா ஜப்பான் பரப்பிற்கு மேலாக தற்போது ஏவுகணையை செலுத்தியுள்ளது.

இருப்பினும் தற்போது செலுத்தப்பட்ட ஏவுகணையால் ஜப்பானில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே கூறியுள்ளார்.

மீண்டும் ஓவியா : ரசிகர்கள் குதூகலத்தில்!!

தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஓவியா. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே, தனது சமூகவலைத்தளத்தில் கூட ட்வீட் எதுவுமே செய்யாமல் ஓய்வில் இருந்தார். கொச்சியிலிருந்தபடியே வீடியோ பதிவு ஒன்றை மட்டும் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

இந்நிலையில் ஓவியா மீண்டும் தனது ட்விட்டர் தளத்திற்கு திரும்பியுள்ளார். சமூகவலைத்தளத்தில் பலரும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். தனது முதல் டுவிட்டாக, ‘உங்கள் ஒவ்வொருவரிடமிருந்து பெறும் அன்புக்கும் அக்கறைக்கும் என்னிடம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

நான் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன், மிக்க நன்றி, உங்கள் அனைவரின் அன்பினாலும் எனக்கு மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு ஓவியா தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற படகு விபத்து : மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!!

 
யாழ்ப்பாணம் – மண்டைதீவு கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் பயணித்த படகு உரிய தரத்துடன் இல்லாமை மற்றும் மாணவர்கள் மதுபோதையில் இருந்தமையே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 7 மாணவர்கள், பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக மண்டைதீவு – சிறுதீவு கடற்கரைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் படகு பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

படகு பயணத்தின் போது, அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளதாகவும், அவர்கள் பயணித்த படகும் பயணத்துக்கு ஏற்ற வகையில் உரிய தரத்தை கொண்டிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடம்பெற்ற படகு விபத்தில் குறித்த படகில் பயணித்த 7 மாணவர்களுள் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மாத்திரமே உயிர் தப்பியுள்ளார்.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நந்தன் ரஜீவன் (உரும்பிராய் ) 18, நாகசிலோஜன் சின்னத்தம்பி (உரும்பிராய்) 17, தனுரதன் (கொக்குவில்) 20, பிரவீன் (நல்லூர்) 20, தினேஷ் (உரும்பிராய்) 17, தனுசன் (சண்டிலிப்பாய்) 18 ஆகியோரே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

 

யாழில் யானையை வேடிக்கை பார்க்கச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம்!!

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் மருதங்கேணி முதலாம் கட்டை சந்திப் பகுதியில் நேற்று காலை வேளையில் நடைபெற்றுள்ளது.
இதில் நான்கு பிள்ளைகளின் தந்தையான சிற்றம்பலம் சத்தியசீலன் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிற்றம்பலம் சத்தியசீலன் என்ற நபர் வழமை போன்று காலை வேளையில் மாடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது குடிமனை உள்ள பகுதியில் யானை ஒன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நபர் யானையை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

இதன்போதே யானை தாக்குதலுக்கு இலக்காகி இவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், இவருடன் சென்ற இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பளை பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி – மருதங்கேணியில் மக்கள் குடியிருப்புக்கள் காணப்படும் பகுதியை நோக்கி யானை வந்துள்ளதால் அப்பகுதியில் மக்கள் பயத்துடன் இருப்பதாகவும், ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சற்று பதற்றமான நிலை காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த யானையை விரட்டுவதற்காக, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வவுனியா ஓமந்தையில் கோர விபத்து : இரு சிறுவர்கள் உட்பட ஐவர் படுகாயம்!!

வவுனியா ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் இன்று (28.08.2017) அதிகாலை 12.25 மணியளவில் முச்சக்கரவண்டி – சொகுசு வான் விபத்தில் 5பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம் (27.08.2017) முல்லைத்தீவில் உறவினர் வீட்டில் இடம்பெற்ற நிகழ்விற்குச் சென்றுவிட்டு இரவு வவுனியாவிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஓமந்தை பறண்நட்டகல் பகுதியில் இன்று (28.08.2017) அதிகாலை 12.25 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்ததுடன் முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட மலையாண்டி செல்வகுமார் (43வயது), செல்வகுமார் லக்சன் (வயது 13), செல்வக்குமார் டிலக்சன் (வயது 11), ஜெயச்சந்திரன் றோசான் (வயது 16), லோகநாதன் டிலக்சன் (வயது 14) ஆகிய ஜந்து பேரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது விசாரணைகளுக்காக சொகுசு வாகனத்தின் சாரதி ஒமந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (28.08) காலை 9.30மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 230கிராம் கேரளா கஞ்சாவினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர் திருகோணமலையைச் சேர்ந்த 48 வயதுடையவர் என்றும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து!!

 
வவுனியா தாண்டிக்குளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் முன்னே சென்ற டிப்பர் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் டிப்பருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தின் போது மோட்டார் வாகனத்தில் பயனித்த ம.மதுசன் (வயது 23), நா.லோகேஸ்வரன் (வயது 23) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரனையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை வவுனியா ஒமந்தையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

வவுனியா மறவன்குளம் பகுதியில் இன்று (27.08.2017)  காலை 11.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பப்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மறவன்குளம் பகுதியில் இன்று (27.08.2017) காலை 11.30 மணியளவில் குடும்பப்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக  பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

குடும்ப பிணக்கு காரணமாக இவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

சடலமாக மீட்கப்பட்டவர் மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த த. சுகந்தினி (வயது – 24) திருமணமானவர் சடலம் தற்போது பிரேத பரிசோதணைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் இந்திய பிரஜை ஒருவர் பலி!!

மட்டக்களப்பு – ரிததென்னை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் விஜய் கே.நாகராஜ் என தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சிறிய ரக காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

நித்திரை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

உயிரிழந்த குழந்தை! வியக்க வைக்கும் தாயின் செயல் : உயிர் வாழும் இருவர்!!

காலியில் மகனின் இழப்பினை அடுத்து பெற்றோர் செய்த செயற்பாடு பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

கல்லீரல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட தனது குழந்தையின் சிகிச்சைக்காக 35 இலட்சம் ரூபாய் பணம் சேகரிக்கப்பட்டது. எனினும் சிகிச்சையின் பலனின்றி குழந்தை உயிரிழந்தள்ளது.

இந்நிலையில் அதே நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் சத்திர சிகிச்சைக்காக 35 இலட்சம் ரூபாய் பணத்தை குறித்த பெற்றோர் வழங்கியுள்ளனர்.

11 மாத குழந்தையான சந்தநெத் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரின் மருத்துவ செலவுக்காக 35 இலட்சம் ரூபாய் மக்களின் உதவியின் மூலம் பெறப்பட்டுள்ளது. எனினும் தனது மகனுக்கு பயன்பெறாத பணத்தை பிற குழந்தைகளுக்கு வழங்கி உதவியுள்ளனர்.

காலி, வெக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த W.A.தினேஷா ரங்கனி என்ற பெண்ணே இவ்வாறு உதவியுள்ளார்.

“எனது மகன் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை வைத்தியர் மூலம் அறிந்து கொண்டேன். அதற்காக 85 இலட்சம் ரூபாய் பணம் செலவாகும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லீரல் பொருத்துவதற்கான சத்திர சிகிச்சை இந்தியாவிலேயே மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் குடும்பத்தினர் சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தை சேகரித்தனர்.

பின்னர் இந்த சம்பவம் ஊடகங்களில் பிரச்சாரமாகியதனை தொடர்ந்து பணம் சேகரிக்க முடிந்தது. பின்னர் சத்திரசிகிச்சைக்கு தயாரான போது குழந்தை உயிரிழந்து விட்டது.

ராகம வைத்தியசாலையில் மகனுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் போது கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் தொடர்பில் தகவல் அறிந்து கொண்டேன்.

மகனின் சிகிச்சைக்கு 80 இலட்சம் தேவைப்பட்ட போதிலும், 35 லட்சம் ரூபாய் பணமே சேகரிக்க முடிந்தது. அதனை நாங்கள் அந்த குழந்தைகளுக்கு வழங்கிவிட்டோம். இவ்வாறான நோயினால் இனி யாரும் பாதிக்க கூடாதென்பதே எனது எதிர்பார்ப்பு என உயிரிழந்த குழந்தையின் தாயார் தெரிவித்துள்ளனர்.

கொரியா செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

சீரற்ற காலநிலை காரணமாக கொரிய பரீட்சை எழுத முடியாமல் போனவர்களுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று தினம் ஒன்றை வழங்குவதற்கு கொரிய மனித வளம் பிரிவு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் http://www.slbfe.lk/ என்ற இணையத்தளத்திற்கு சென்று பரீட்சை எழுத தவறியவர்கள் திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி கொரிய மொழி பரீட்சை கணினி மூலம் இடம்பெற்ற நிலையில் 22,882 பேர் அதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.

உற்பத்தி பிரிவிற்கு 16,431 பேரும், மீன்பிடித் துறைக்கு 6457 பேரும் பரீட்சை எழுதவுள்ளனர்.

 

க.பொ.த. உயர்தரத்தின் இரண்டு பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன!!

அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடைபெறவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டு வினாத்தாள்களுக்கான பரீட்சைகள் 4 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளன.

அன்றைய தினம் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளமையினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பொது அறிவு பரீட்சை 4 ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் 11 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பரீட்சையின் இரண்டாம் பகுதி 4 ஆம் திகதி பிற்பகல் 12.30 தொடக்கம் 3.30 வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

19 வயது மாணவி கொலை!!

இறக்குவானை படேயாய எந்தான பிரதேசத்தில் 19 வயதான யுவதியொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எந்தான பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் வைத்து குறித்த யுவதி கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கமல் பாணியில் ஸ்வேதா!!

இப்போதுள்ள முன்னணி நடிகைகளுக்கு கதை சொல்லும் போது உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று சொல்லிப் பாருங்கள். எனக்கொன்று அவ்வளவு வயசாகவில்லை என்று சொல்லிவிட்டு, அப்படத்தில் நடிக்கவே ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

ஒரு சில நடிகைகள் கம்பனி, பட்ஜட், ஊதியம் ஆகியவற்றைப் பார்த்து அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள். அப்போது கூட ஒரு காட்சியில் ஓல்ட் கெட்டப் என்று சொல்லிப் பாருங்கள். அவ்வளவு தான். நடிக்க முடியாது என்று மறுத்துவிடுவார்கள். ஆனால் மலையாளத்தில் ஒரு நடிகை ஓல்ட் கெட்டப் போட்டு அசத்தியிருக்கிறார். அதாவது கமல் பாணியை பின்பற்றி பெயர் வாங்கியிருக்கிறார்.

பாக்யராஜ் நடித்த துணை முதல்வர், இணையதளம் போன்ற படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா. இவர் ‘நவால் என்ன ஜ்வல் ’ என்ற படத்தில் வயதான ஆண் வேடத்தில் நடித்திருக்கிறார். அதிலும் அப்படத்தின் கதை களம் ஈரானிய சிறைச்சாலையை மையமாகக் கொண்டதாம். அவரின் கெட்டப் இணையத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

 

ஹரியாணா, பஞ்சாபில் கலவரம் : 32 பேர் பலி!!

 
பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 32 பேர் உயிரிழந்ததுடன், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முன்னதாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின், பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

பஞ்ச்குலா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தை சுற்றி ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.

பஞ்ச்குலா, தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்சா உள்ளிட்ட நகரங்களிலும், பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

எனினும், கடந்த 4 நாள்களாகவே குர்மீத்தின் ஆதரவாளர்கள், குறிப்பாக பெண்கள் பஞ்ச்குலாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.

வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியானதும், பஞ்ச்குலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குர்மீத்தின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர்.

அப்போது, ஊடகங்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிள்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்குத் தீவைத்த வன்முறையாளர்கள், பொலிஸார் மீது கற்களையும் கம்புகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, வானத்தை நோக்கி சுட்டும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் முயன்றனர். இதனால், பஞ்ச்குலா நகரமே போர்க்களமாக மாறியது.

ராணுவம் குவிப்பு: வன்முறை சம்பவங்களில் 32 பேர் உயிரிழந்ததாகவும், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மாநில அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஞ்ச்குலா மட்டுமின்றி சிர்சா உள்ளிட்ட இதர பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. சிர்சாவில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

2 ரயில் நிலையங்களுக்குத் தீ வைப்பு: பஞ்சாபின் மாலௌட்இ பல்லுவானா ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு குர்மீத்தின் ஆதரவாளர்கள் தீவைத்தனர்.

மான்ஸா பகுதியில் வருமான வரி அலுவலக கட்டடத்துக்கு தீவைக்கப்பட்டது. வன்முறையால் சுமார் 250 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தில்லிஇ ராஜஸ்தானில்…: தில்லியின் லோனி சௌக் பகுதியில் கம்பு, கற்களுடன் திரண்ட குர்மீத் ஆதரவாளர்கள் ஒரு பேருந்துக்கு தீவைத்தனர்.

இதேபோல, ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு ரயில் பெட்டிகளுக்குத் தீவைக்கப்பட்டது.

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர், ஹனுமான்கர் மாவட்டங்களில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதால், அங்கு செல்லிடப்பேசி இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல்வர்கள் வேண்டுகோள்: குர்மீத் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஹரியாணா மனோகர் லால் கட்டர், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டதாக தேரா சச்சா அமைப்பினர் 1000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் கொடூமான கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன்!!

பிரித்தானியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சுரேன் சிவனந்தத்தின் வழக்கு விசாரணையில் குற்றவாளி நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சுரேன் சிவனந்தத்தின் குடும்பத்தினர் வழக்கு விசாரணையின் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சிவனந்தன் குடும்பம் சார்பில் லண்டன் பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுரேன் மிகவும் நல்ல மனிதர். அவ்வளவு அநியாயமான கொடூர மரணத்திற்கு பொருத்தமானவர் அல்ல. இறக்கும் வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். 32 வயதில் சுரேன் கொலை செய்யப்பட்டார். சுரேனுக்கு என்ன நடந்தது? சுரேன் நீ கேட்டு கொண்டிருப்பாய் என்றால், உனது குடும்பத்தினரும், நண்பர்களும் உன்னை கொலை செய்தவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

நாங்கள் நீண்ட காலமாக அனுபவிக்கும் துன்பத்தை போல, இந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் தவறு செய்து விட்டார்கள் என நாங்கள் நினைக்கின்றோம். சுரேன் அனுபவித்த துயரத்தின் காலம் மிக நீண்டதாக இருந்தது. அவர்கள் அந்த 12 மணி நேரம் அவரை துன்புறுத்திய பின்னராவது விடுவித்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

சுரேன் நாம் என்றென்றும் உன் பிரிவை உணர்வோம். எப்போதும்! சுரேனை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவருடைய இரக்கம், அவரது உற்சாகம், உயிர்வாழும் தன்மை ஆகியவற்றை நாம் மறக்க மாட்டோம். என் அன்பான சகோதரர் என்னை எப்படி நடத்தினார். என்னுடன் எப்படி நடந்து கொண்டார். என்னுடன் எப்படி பேசினார். எப்போதுமே என்னை சிரிக்க வைத்தார், சில சமயங்களில் கோபமடைந்தார் என்பதையும் மறக்க மாட்டேன்.

அவர் எப்போது பெற்றோரின் நலன்களை முன் வைத்து பார்க்கும் ஒரு அற்புதமான மகன். அவர் பூமியின் முனைகளில் சென்று நட்சத்திரங்கள் அடைய வேண்டும். அவர் எப்போதும் நமது உள்ளத்தில் இருப்பார்.

நமது கண்ணீர் சுரேனை மீண்டும் கொண்டு வரும் என்றால், இந்நேரம் அவர் இங்கு இருப்பார்.. என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.